சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 07

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 07

சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 07

7. உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

கடைசியாக 7வது வார்த்தையாக இயேசு கிறிஸ்து பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாகக் கூப்பிட்டுச் சொல்லி ஜீவனை விட்டார்” – லூக்கா 23:46.

சிலுவையில் சொல்லப்பட்ட வார்த்தைகளின் கடைசி வார்த்தை 7வது வார்த்தையாகும். தேவன் ஆறு நாட்கள் உலகைப் படைத்து 7வது நாள் ஓய்வு நாளாக ஏற்படுத்தினார்.

முதல் வார்த்தையிலும் பிதாவை அழைத்து இவர்களை மன்னியும் என்ற இயேசு, கடைசி வார்த்தையிலும் பிதாவை அழைத்து தன் ஜீவனை ஒப்புக் கொடுக்கிறார். முடிந்தது என்ற வார்த்தை மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் இல்லாதிருந்தும், சிலுவை வார்த்தைகளே எழு என்று பூரணப்படுத்தும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. இந்த உலகத்தையும் உயிரையும் படைத்த தேவனை, தேவகுமாரனை, அவரால் படைக்கப்பட்ட மனிதர் கொல்ல முடியாது. இயேசு, பிதாவிடம் தன் ஜீவனை ஒப்புக் கொடுத்தார். தன்னை அனுப்பிய பிதாவிடம் தன்னை என் பணி முடிந்தது என்று திரும்ப ஒப்புக் கொடுத்தார். இந்த வார்த்தையிலும் இயேசு தாவீதின் தீர்க்கதரிசன வார்த்தையையே கூறி தன் ஜீவனை ஒப்புவித்தார் என்பதைக் காண்கிறோம்.

உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” “சத்திய பரனாகிய கர்த்தாவே நீர் என்னை மீட்டுக் கொண்டீர்” சங்கீதம் 31:5 என்ற வார்த்தையின்படி இயேசு ஆவியை ஒப்புக் கொடுத்தார். இந்த கடைசி வார்த்தையும் தாவீதின் தீர்க்கதரிசன வார்த்தையே என்பதைக் காண வேண்டும்.

தாவீது சங்கீதம் 31:5இல் கூறியபடி பிதாவாகிய தேவன் தன் குமரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி மனித இனத்தின் பாவங்களை மன்னிக்க ஜீவ பலியாய் அவரை ஒப்புக் கொடுத்து, மீண்டும் அவர் தம் ஆவியை பிதாவிடம் ஒப்புவிக்க தாவீது கூறியது போல சத்திய பரனாகிய கர்த்தாவே தேவரீர் என்னை மீட்டுக் கொண்டீர் என்கிறார். இயேசு கிறிஸ்து கூறிய கடைசி வார்த்தையும் தாவீதின் வார்த்தையே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தார். தன் ஆவியை ஒப்புக் கொடுத்தார் என்பது உண்மையே. ஆனாலும் அவருடைய ஜீவனை எடுக்க மனிதனால் முடியாது. யோவான் 10ஆம் அதிகாரத்தில் இயேசு தன் உயிர்த்தெழுதல் பற்றி மறைமுகமாகச் சொல்லுகிறார்.

நான் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள மாட்டான். நானே அதை கொடுக்கிறேன்; அதை கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவிடத்தில் பெற்றுக் கொண்டேன் என்றார்” – யோவான் 10:17,18.

மேலை நாட்டிற்கு ஒரு நாட்டின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர் தன் வேலையும் காலமும் முடிந்த பின் தன் பொறுப்பை ஒப்புவிப்பது போல், இந்த உலகத்திற்கு இயேசு எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்தப் பணியை செம்மையாய் செய்து முடித்தபின் முடிந்தது என்று வெற்றி முழக்கமிட்டு, சத்தத்தோடு தன் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்.

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்” யோவான் 6:38 என்ற இயேசு அதை நிறைவேற்றி தன் ஜீவனை மீண்டும் அவரிடம் ஒப்புக் கொடுத்தார். பரிசுத்த ஆவியினால் உயிர் பெற்ற இயேசு அதை அனுப்பினவரிடமே ஒப்புக் கொடுத்தார்.

சுயமாகப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான். தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை” – (யோவான் 7:18) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையின் பாடுகள் மத்தியிலும் தன் மகிமைக்காக பேசாமல் தேவன் பரிசுத்த ஆவியின்மூலம் தீர்க்க தரிசனமாகத் தெரிவித்ததையே பேசினார் என்பதை உறுதியாகச் சொல்லக் கூடும்.

இதைப் படிக்கும் உங்களுக்கு இதில் மாறுபட்ட கருத்து இருக்கக் கூடும். நான் 40 முறைக்கும் மேலாக வேதத்தைப் படித்திருந்தும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு கருத்துகளையே காண்கிறேன். உங்கள் கருத்துகளை நீங்கள் என்னிடம் கடிதம் மூலமாக அல்லது கைபேசி மூலமாகத் தெரிவிக்கலாம். இந்த சிறிய புத்தகத்தை நான் எழுத எடுத்துக் கொண்ட நாட்கள் மூன்றே. சில கருத்துகள் விட்டுப் போயிருக்கக் கூடும். நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். எனக்காக ஜெபியுங்கள். கிறிஸ்துவின் பணி தொடரட்டும்.

என் புத்தகங்கள் மீண்டும் உங்கள் கைகளில் தவழ காரணமாக இருந்த என் நட்புக்கும், அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சகோதரர் டாக்டர் தாயப்பன் அவர்களுக்காக, அவர் குடும்பத்திற்காக, அவருடைய ஊழியத்திற்காகவும் தயவு செய்து ஜெபியுங்கள். தேவனுடைய நாமம் மகிமைப்படட்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். உங்கள் ஜெப தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

என் எழுத்தை, என்னை பல வகையிலும் ஊக்குவித்த டாக்டர் கிளிப்போர்டு குமார் மகிழ்ச்சி காலங்கள் ஊழியம், சென்னை அவர்களுக்கும், என்றும் நானும் என் குடும்பமும் கடமைப்பட்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

ஆசிரியர்: உறையூர் வளவன்

One thought on “சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *