தேவன் மனம் மாறுகிறவரா? எண்ணாகமம் 22:20,22 விளக்கம் என்ன?

 

தேவன் மனம் மாறுகிறவரா? எண்ணாகமம் 22:20,22 விளக்கம் என்ன?

எண்ணாகமம் 22:20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால்(, நீ எழுந்து அவர்களோடே கூடப்போ), ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 22:22 (அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது,); கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான், அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக, “ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் (எண் 22:19) என்று சொல்லுகிறான்

பிலேயாம் 1

தன்னுடைய சித்தத்திற்குக் கர்த்தரைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று பிலேயாம் நிச்சயத்தோடு இருக்கிறான். பாலாகின் பிரபுக்களோடு போவதில் தவறொன்றுமில்லை. கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே பேசவேண்டுமென்பது பிலேயாமின் எண்ணம். இது அவனுடைய உண்மையான சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. அவன் கர்த்தருக்கும் பயப்படுகிறான். அதேசமயத்தில் வெகுமதிகளைப் பெற்றுக்

கொள்ளவும் விரும்புகிறான். இதற்கு முன்பு, பிலேயாம் இவ்வளவு பெரிய தொகையைத் தன் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டான். பொருளாதார ஆசீர்வாதம் வந்தவுடன், பிலேயாம் நிலைதடுமாறி விடுகிறான்.

கர்த்தர் ஆரம்பத்திலேயே பிலேயாமிடம்,நீ அவர்களோடே போகவேண்டாம்” (எண் 22:12) என்று சொல்லிவிட்டார். ஆனாலும் கர்த்தருடைய மனதை தன்னால் மாற்ற முடியும் என்று பிலேயாம் நம்புகிறான்.

அவனுக்கு பாலாக் கொடுக்கப்போகும் வெகுமதிகள்மீது ஆசையிருக்கிறது. தான் கர்த்தரிடத்தில் மறுபடியும் கேட்டால். கர்த்தருடைய சித்தம் மாறும் என்றும், பாலாகின் ஊழியக்காரரோடே போவதற்கு கர்த்தர் தனக்கு அனுமதி கொடுப்பார் என்றும் பிலேயாம் நினைக்கிறான். அந்த ஆசையில், பாலாகின் ஊழியக்காரரை, இந்த இராத்திரியிலே தன்னோடு தங்கியிருக்குமாறு சொல்லுகிறான்.

கர்த்தர் மனம் மாறுகிறவரல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். கர்த்தருடைய மனதை தன்னால் மாற்ற முடியும் என்று பிலேயாம் நினைப்பது அவனுடைய மதியீனம். கர்த்தர் சர்வவல்லமையுள்ளவர். கர்த்தருடைய சித்தத்திற்கும், திட்டத்திற்கும் எதிர்த்து போராடி வெற்றிபெற, எந்த மனுஷனுக்கும் வல்லமையில்லை.

நம்முடைய இருதயத்தை பாவம் ஆளுகை செய்யும்போது, அங்கே கர்த்தருடைய வார்த்தைக்கு இடம் இல்லாமல் போகிறது. நாம் பாவத்திற்கு இடம் கொடுக்கும்போது. நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறோம். தேவனுடைய வார்த்பதைகளை மறந்துபோக முயற்சி பண்ணுகிறோம். கர்த்தருடைய வார்த்தை நம்முடைய மனச்சாட்சியிலே எச்சரித்து பேசினாலும், பாவம் செய்யவேண்டும் என்னும் ஆசை நமக்குள் வந்துவிடுகிறது. முடிவில், பாவத்தை விட்டு விலகி ஜீவிப்பதற்கு பதிலாக, அந்தப் பாவத்தை செய்வதற்கு அனுமதி கொடுக்குமாறு, கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறோம். பாவம் செய்யும்போது, சில சாக்குப்போக்கான காரணங்களைச் சொல்லி, நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்.

பிலேயாம் கர்த்தரிடத்தில் எப்படி ஜெபித்தான் என்று இந்த வசனப்பகுதியில் சொல்லப்படவில்லை. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தர் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். பிலேயாமின் இருதயத்தில் பேராசையான எண்ணம் இருப்பதை கர்த்தர் பார்க்கிறார். இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து, “அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்” (எண் 22:20) என்று சொல்லுகிறார்

பிலேயாம் 2

பிலேயாமின் உள்ளத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கர்த்தர் அறிகிறார். அவன் பொருளுக்கு ஆசைப்பட்டு விட்டான். எப்படியும் போய்விடுவான் என்று கர்த்தருக்குத் தெரிய வருகிறது. ஆகையினால் இரண்டு நிபந்தனைகளோடு கர்த்தர் பிலேயாமைப் பாலாகின் பிரபுக்களோடு போவதற்கு அனுமதிக்கிறார்.

1. அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ. (பாலாகின் பிரபுக்கள் இரவில் வந்து, பிலேயாமைக் கூப்பிட்டால் மட்டுமே அவன் அவர்களோடு போகவேண்டும். ஆனால் பிலேயாம் அவர்கள் கூப்பிட வருவதற்கு முன்பாகவே அதிகாலையில் எழுந்திருந்து, அவர்களைக் கூட்டிக் கொண்டு போய்விட்டான்)

2. ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்ய வேண்டும். கர்த்தருடைய சித்தம் என்ன என்பதை பிலேயாம் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், தன்னுடைய சுய சித்தத்திற்குக் கர்த்தரைச் சம்மதிக்க வைக்கிறான். பிலேயாமிடத்தில் கர்த்தர் நேரடியாகப் பேசினாரா அல்லது தம்முடைய தூதரில் ஒருவரை அனுப்பினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிலேயாம் விரும்பினதினால் அவன் பாலாகின் ஊழியக்காரரோடே போவதற்கு கர்த்தர் அனுமதி கொடுக்கிறார். கர்த்தர் பிலேயாமின் பேராசைக்கும், இருதயத்தின் இச்சைகளுக்கும் அவனை ஒப்புக்கொடுக்கிறார்.

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப்போகிறான் (எண் 22:21).

பெத்தூரிலிருந்து மோவாபிற்கு இடையேயுள்ள தூரம் சுமார் 500 மைல் முதல் 600 மைல் வரையிலும் உள்ளது. சுமார் 20 நாட்கள் பிரயாணம் செய்து இந்த இடத்தைக் கடந்து செல்லவேண்டும். பிலேயாமிற்கு நாற்பது நாட்கள் இடைவெளி கிடைக்கிறது. முதலாவது வந்த பிரபுக்கள் திரும்பிச் சென்று, இரண்டாவது பிரபுக்கள் வந்திருக்கிறார்கள். இந்த நாற்பது நாட்களில் பிலேயாம் நன்றாகச் சிந்தித்து. அவர்கள் தரும் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் பண்ணி இருந்திருக்கலாம்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் ஒரு ஆவிக்குரிய சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் சில சமயங்களில், நம்மீதுள்ள அன்பினால், நம்முடைய ஜெபவிண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்க மறுத்துவிடுகிறார். அதே வேளையில் கர்த்தர் தம்முடைய கோபத்தினால், நம்முடைய ஜெபவிண்ணப்பங்கள் பாவமானதாகவும், துன்மார்க்கமானதாகவும் இருந்தாலும், அதை செய்வதற்கு அனுமதி கொடுக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *