சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – I
1. முதல் உபதேசம்: மன்னிப்பு
வேதம் சொல்லுகிறது, லூக்கா 23:34 – அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இந்த வசனத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,
நமக்கு யாரையும் நியாயந்தீர்ப்பதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மற்றவர்கள் செய்கிற தவறுகளுக்கு தண்டனை கொடுக்கிற அதிகாரத்தைப் பெற்றிருந்த போதிலும் அவர் தனக்கு விரோதமாய் தவறு செய்த ஜனங்களைத் தண்டிக்காமல் அவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுவதை நாம் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் அனேக கிறிஸ்தவர்கள் அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நீதிமான்களாக மாற்றப்பட்டவர்கள் இன்றைய நாட்களில் செய்கிற காரியம் என்னவாக இருக்கிறது என்று பார்ப்பீர்களானால் அது ஆண்டவருக்கு விரோதமான பகையாக காணப்படுகிறது எப்படியென்றால் யாராவது பாவம் செய்தவர்களை இவர்கள் பார்த்து விட்டால் உடனே அவர்களுக்கு பாவி என்கிற பட்டத்தைச் சூட்டி அவர்களை அதிகமாக வெறுப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதனால் இவர்கள் கர்த்தருக்கு பிரியமில்லாதவர்களாய் மாறி போகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
இத்தகைய காரியத்தை வேதத்திலிருந்து உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மத்தேயு 9: 11-13 வரை வாசிக்கும் போது நமக்கு ஒரு காரியம் தெள்ளத்தெளிவாக வெளிப்படும்
எப்படியென்றால், இதோ அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில் அனேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து இயேசுவோடும் அவர் சீஷரோடும் கூடப் பந்திருந்தார்கள்.
பரிசேயர் அதைக் கண்டு அவருடைய சீஷர்களை நோக்கி உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார்.
இந்த வசனங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தராய் இருந்த போதிலும் பரிசுத்தத்திற்கு இம்மியளவும் தகுதியில்லாத ஜனங்களோடு தம்முடைய உறவை ஏற்படுத்திக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது எதற்காக அவர் அப்படி செய்தார் என்றால், ஒருவரையும் இழந்து போகக்கூடாது எல்லாரையும் தம்மோடு பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே.
ஆகவேதான் தாங்கள் செய்த கொடுமையான பாவத்தினிமித்தம் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனையும் மன்னித்து தமக்கு நிகராக அவனை மாற்றி சிலுவையில் அவனை ஆசீர்வதித்தை நம்மால் உணர முடிகிறது.
ஒரு காரியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் அதுஎன்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாருங்கள் பேதுரு ஆண்டவரிடம் வந்து ஆண்டவரே என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு தரமட்டுமா? என்று கேட்ட போது அதற்கு ஆண்டவர் தருகிற பதில் என்னவாக இருந்தது, ஏழுதரம் மாத்திரமல்ல ஏழெழுபதுதர மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் – மத்தேயு 18:21,22. சிலுவையில் சொல்லப்பட்ட வார்த்தைகளை தியானித்தால் மட்டும் போதாது அதின்படி நடக்கவும் வேண்டும் ஆகவே இன்னும் யாரையெல்லாம் மன்னிக்க வில்லையோ அவர்களையெல்லாம் இப்பொழுதே மன்னித்து விடுங்கள்.
Editor
சகோ. எட்வின் கார்டர் (சோஹார் – ஓமான்)