சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – VII
7. ஏழாவது உபதேசம்: ஒப்புக் கொடுத்தல்
வேதம் சொல்லுகிறது, லூக்கா 23:46 – இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். இந்த வசனம் நமக்கு என்ன சொல்லுகிறது என்றால் இத்தகைய வல்லமையான தேவன் தம்மை முழுவதுமாக பிதாவிடம் ஒப்புக் கொடுத்தார் ஆதாவது நாம் கடைசியாக செல்லப் போகிற இடம் எது என்பதை மிகவும் தெளிவாக தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்று அனேகர் தாங்கள் செல்லுகிற இடம் மற்றும் தங்களை யாரிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதை தெரியாமல் தங்களுடைய வாழ்க்கையை பல வழிகளில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள் – கொலோசேயர் 3:2 மேலும், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை – 1யோவான் 2:15 எனவே நம்முடைய ஆவி பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுமானால் நாம் இந்த உலகத்தை நேசிக்காமல் தேவன் நமக்காக ஆயத்தமாக வைத்திருக்கிற பரலோக வாழ்க்கை மேல் வாஞ்சையுள்ளவர்களாக இந்த உலகத்தில் ஒரு பரதேசியைப் போல் வாழ வேண்டும் அப்பொழுதுதான் சொர்க்கம் நம்முடைய சொந்த பூமியாய் மாறும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
ஆகவேதான் அப்.பவுல் அழகாக கொரிந்து சபைக்கு எழுதுகிறார் எப்படியென்றால்,
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் – 11 கொரி 5:1 எனவேதான் நம்முடைய பிதாக்கன்மார்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த போது ஒரு பரதேசியைப் போல் வாழ்ந்து தங்களுடைய வாழ்க்கையை முழுவதுமாக தேவனிடத்திலே ஒப்புக் கொடுத்திருந்தார்கள் என்று வேதத்தை வாசிக்கும் போது புரிகிறது.
இத்தகைய காரியம் எப்படி நடக்கும் என்றால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தோடு எந்தவொரு தொடர்பும் வைத்திராமல் எப்பொழுதும் பிதாவுடனே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல நாமும் வாழும் போது நம்முடைய வாழ்க்கையும் தேவனிடத்தில் செல்லும் என்பதற்கு சந்தேகமேயில்லை.
எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுகளின் வழியாக சொன்ன இத்தகைய உபதேசத்தை நாமும் அவரைப் போல நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்துவோம். அப்பொழுதுதான் இந்த சிலுவைப் பயணத்தில் ஜெயம் எடுக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Editor
சகோ. எட்வின் கார்டர் (சோஹார் – ஓமான்)