பாடுகளின் வார்த்தைகள்
“ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத். 27:46) காட்சி பின்வருமாறு அமைந்தது: கொல்கொதாவில் திகைப்பூட்டும் வகையில் திடீரென இருள் மூடிற்று, அது இயேசுவை, அவரது உருவத்தை எல்லாக் கண்களுக்கும் மறைத்தது. கூட்டத்தாரின் உதடுகளிலிருந்து கேலிச் சொற்கள் அகன்று போயின. பயமும், திகிலும் ஒவ்வொரு இதயத்தையும் ஆட்டிப் படைத்தன. சிலுவையில் அறையுண்டவர்களின் பெருமூச்சுகள் புலம்பல்கள் மட்டுமே அவ்வப்போது அந்த ஆழமான அமைதியைக் கிழித்துக்கொண்டு இருந்தன. இருளிலிருந்து திடீரென்று அவ்வார்த்தைகள் அமைதியை உடைத்துக்கொண்டு கிளம்பின: “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்த மிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46.அ). இயேசு தமது குழந்தைப் பருவம் முதலே பயன்படுத்திய இவ்வார்த்தைகள் சங்கீதம் 22ல்!” உள்ளன. மத்தேயு இவ்வார்த்தைகளை, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று பொருள் தருவதாக விளக்கப்படுத்துகிறார்.
எந்த ஒரு மொழியிலும், “கைவிடப்படுதல்” என்ற இவ் வார்த்தை மிகுந்த வருத்தத்திற்கு உரிதாய் உள்ளது. கிரேக்க மொழியில் இவ்வார்த்தை, “விட்டுவிடுதல்,” “கைவிடுதல்” மற்றும் “கீழே விடுதல்” என்ற வார்த்தைகளின் கூட்டுச் சொல்லாக உள்ளது. இது தோல்வியுற்று, உதவியற்று இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
இயேசு மனிதரால் மட்டுமல்ல, தேவனாலும் கைவிடப் பட்டார். இது மனிதரின் புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பால், மீட்பின் அற்புதங்களிடம் நம்மை அழைத்துச் செல்லுகிறது. ஏசாயா 59:1-2ல் பாவம் நம்மை தேவனைவிட்டுப் பிரிக்கிற தென்று காண்கிறோம். 2 கொரிந்தியர் 5:21ல் “பாவமறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” என்று படிக்கின்றோம். இயேசு “நமக்காகப் பாவமானபோது நமது பாவங்களுக் கான தண்டனையை அவர் பெற்றுக்கொண்டார். பாவத்தின் இறுதியான தண்டனை, தேவனால் கைவிடப்படும் ஒரு நிலையேயாகும் (2 தெசலோ. 1:9),
நம்மை இரட்சிக்க இயேசு எவ்வளவாய் சித்தங் கொண் டிருந்தார்? மத்தேயு 27:46 இத்தூரத்தை நமக்குச் சித்தரிக் கின்றது. இயேசு பரலோகத்தின் மாட்சிமையை விட்டு இறங்கினார். ஆனால் இன்னும் அதிக தூரம் அவர் சென்றார். அவர் இப்பூமியில் ஒரு மனிதனாக, அடிமையாகப் பிறந்தார், ஆனால் இன்னும் அதிக தூரம் சென்றார். வெட்கம் மற்றும் புறக்கணிக்கப்படுதல் ஆகியவற்றால் அவர் பாடுபட்டார். ஆனால் இன்னும் அதிகம் தூரம் அவர் சென்றார். அவர் சிலுவைவரை சென்றார், ஆனால் பயணம் இன்னும் முடிய வில்லை. நம்மை மீட்பதற்காக, அவர் தேவனால் கைவிடப் படும் நிலை வரைக்கும் செல்ல சித்தமானார்!
இதை என்னால் என்றுமே புரிந்துகொள்ள முடிவதில்லை, இயேசு இதை எப்படி நமக்காகச் செய்யக்கூடும்? இவ்வளவாய் அவர் உங்களையும் என்னையும் நேசிக்க முடிந்தது எப்படி? சிலுவையில் அவர் எல்லாப் பாவிகளின் பாவங்களுக்கான நித்திய தண்டனையை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் அவர் பெறமுடிந்தது எவ்விதம்? இதையெல்லாம் நான் புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும், இதை விசுவாசத்தால் நான் ஏற்றுக்கொள்ள முடியும். “தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக” அவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன் (2 கொரிந்தியர் 9:15),