சிலுவை – CROSS
இயேசுகிறிஸ்து அறையப்பட்ட மரம். சிலுவை மரத்தில் ஒரு மரம் செங்குத்தாகவும் மற்றொன்று அதில் படுக்கை வசத்திலும் இணைக்கப்பட்டிருக்கும். கிரேக்க மொழியில் சிலுவை என்று பொருள்படும் வார்த்தையானது சுவர்களில் வரிசையாக பதிக்கப்பட்டிருக்கும் கூர்மையான கம்புகள் என்று பொருள்படும். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சிலுவை என்பது ஒரு மேன்மையான அடையாளமாக இருக்கிறது.
வேதாகம காலங்களில் குற்றவாளிகளை எல்லா ஜனங்களுக்கு முன்பாக சுவற்றில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த கூர்மையான கம்புகளில் கட்டித் தூக்கி விடுவார்கள். இதைப் பார்க்கிறவர்களுக்கு மனதில் பயம் உண்டாகும். தப்பு செய்தால் இது போல தண்டனை கிடைக்கும் என்று நினைத்து தப்பு செய்வதற்கு பயப்படுவார்கள். இராஜாக்களுக்கு விரோதமாக தவறு செய்தால் இது போன்ற தண்டனை கிடைக்கும். யுத்தத்தில் தோல்வியடைந்த போர்வீரர்களை இது போல தூக்கி பொது ஜனங்கள் மத்தியில் கொன்று போடுவார்கள் (ஆதி 4019; 1சாமு 31:8-13). பல வருஷங்களாக குற்றவாளிகளுக்கு இதுபோல மரத்தில் தூக்கி கொன்று போடும் தண்டனை கொடுக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இந்த மரமே சிலுவை வடிவில் செய்யப்பட்டது. சிலுவை என்பது சித்திரவதை செய்யப்படும் இடம். இது அவமானத்திற்கு அடையாளம். பொதுவாக அந்நிய தேசத்திலிருந்து பிடித்து வரப்பட்ட கைதிகளையும், தங்கள் சொந்த தேசத்தில் கலகம் பண்ணிய தேசத்துரோகிகளையும் சிலுவை மரங்களில் தூக்கி கொன்று போட்டார்கள்.
“சிலுவை” என்பதற்கான கிரேக்க வார்த்தை . stauros – 4716 என்பதாகும்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் யாரையும் மரத்தில் தூக்கி கொன்று போட்டதற்கு சான்று எதுவுமில்லை. மோசேயின் பிரமாணத்தில் குற்றம் செய்தவனை கல்லால் அடித்து கொன்று போடலாம் (லேவி 20:2; உபா 22:24). மரத்தில் தூக்கிப் போட்டும் குற்றவாளிகளை கொன்று போடலாம் (உபா 21:22). ஆனால் அந்த மனுஷனை இரவு வேளைக்குள் அடக்கம் பண்ணிவிட வேண்டும் (யோவா 19:31). “இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக” (உபா 21:23),
பழங்காலத்தில் குற்றவாளிகளை மரத்தில் தூக்கிப் போட்டு அவர்களுடைய சரீரம் அழுகிப்போகுமாறு விட்டு விடுவார்கள். மோசேயின் பிரமாணத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்ட குற்றவாளி சபிக்கப்பட்டவன் என்று அழைக்கப்படுகிறான். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் (அப் 5:30; 10:39). அவர் சபிக்கப்பட்டவராக கருதப்பட்டார் (கலா 3:13). இயேசுகிறிஸ்துவை கல்லெறிந்து கொல்லாமல் சிலுவையில் அறைந்து கொன்ற போதிலும், அவர் குற்றவாளிகளில் ஒருவராகவும், தேசத்தின் விரோதியாகவும் கருதப்பட்டார்.
பழங்காலத்து ஆசிரியர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படும் சம்பவங்களை விரிவாக எழுதவில்லை. தொல்பொருள் ஆய்வுகள் மூலமாக சிலுவை மரணத்தைப் பற்றிய செய்தி தெரிய வருகிறது. அசீரியர்கள் யுத்தம் பண்ணி அந்நிய தேசத்திலிருந்து சிறைபிடித்து வரும் கைதிகளை கூர்மையான மரங்களில் குத்திக் கொன்று போட்டார்கள். இது சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது போல் அல்ல. ஆயினும் இவ்விரண்டுமே கொடூரமான மரணமாகும்.
பழங்காலத்தில் ஒரே மரத்தினால் குற்றவாளிகளை குத்திக் கொன்று போட்டார்கள். பிற்காலத்தில் அந்த மரத்தோடு படுக்கை வசத்தில் மற்றொரு மரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இது எந்தக் காலத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை. பாபிலோனியர்கள் பிரபுக்களின் கைகளை கட்டி ஏறத் தூக்கினார்கள் என்று எரேமியா கூறியிருக்கிறார் (புல 5.12). ஆனால் இவ்வாறு தூக்குவது மரணதண்டனை கொடுப்பது போன்றதா என்று எரேமியா விளக்கவில்லை.
கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஏரோதோதஸ் என்பவர் சிலுவையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பெர்சியருடைய காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இவர் குறிப்பிட்டிருக்கிறார். சிலுவை மரத்தில் குற்றவாளிகளை கட்டினார்களா அல்லது ஆணிகளால் அறைந்தார்களா என்னும் விவரத்தை ஏரோதோதஸ் குறிப்பிடவில்லை.
மரத்தில் தூக்கிப்போட்டு கொல்லும் வழக்கத்தை பெர்சியர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள் (எஸ்றா 6:11). எஸ்தர் புஸ்தகத்தில் இவ்வாறு மரத்தில் தூக்கிப்போட்டு கொன்று தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது (எஸ் 2:23; 514).
சிலுவையில் அறைந்து கொல்லும் பழக்கத்தை கிரேக்கர்கள் கடைபிடித்து வந்தார்கள். அலெக்சாண்டர் தீரு பட்டணத்தை அழித்த போது அந்தப் பட்டணத்தின் 2000 பேரை சிலுவையில் அறைந்து கொன்று போட்டார். பாலஸ்தீன தேசத்தை கிரேக்கரும், ரோமபேரரசாரும் ஆளுகை செய்தார்கள். இக்காலத்தில் யூதர்களை ஆட்சிபுரிந்த அலெக்சந்தர் யந்நேயு என்பவன் 800 பரிசேயர்களை சிலுவையில் அறைந்து கொன்று போட்டான்.
ரோமபேரரசில் மிகப்பெரிய குற்றவாளிகளையும் கலகம் பண்ணும் அடிமைகளையும் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ரோமபேரரசின் குடிமக்களை அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லவில்லை. புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குப் பின்பும் குற்றவாளிகளையும், தேசத்துரோகிகளையும் இதுபோல சிலுவையில் அறைந்து கொல்லும் பழக்கம் தொடர்ந்து வந்திருக்கிறது.
கான்ஸ்டான்டைன் என்னும் பேரரசர் கிறிஸ்தவராக மாறிய பின்பு சிலுவையானது புனித சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின்பு ரோமபேரரசார் சிலுவையில் அறைந்து குற்றவாளிகளை தண்டிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள்.
அந்த ரோமபேரரசின் காலத்தில் ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைவதற்கு முன்பாக நபரை வாரினால் அடிப்பார்கள். இதனால் அந்தக் குற்றவாளியினுடைய சரீரத்திலிருந்து இரத்தம் கசிந்து வெளியேறும். சிலுவை மரத்தில் படுக்கையாக இருக்கும் மரத்தை குற்றவாளியே சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு சுமந்து செல்ல வேண்டும். அந்த இடத்தில் செங்குத்து வசத்தில் இருக்கும் சிலுவை மரம் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
படுக்கை மரத்தில் குற்றவாளிகளை கயிற்றினால் கட்டுவார்கள். சில சமயங்களில் ஆணிகளாலும் அவர்களை அந்த மரத்தில் அறைந்து விடுவார்கள். பின்பு படுக்கை வசத்தில் இருக்கும் மரத்தை குற்றவாளியோடு சேர்த்து செங்குத்து வசத்தில் இருக்கும் மரத்தோடு கட்டிவிடுவார்கள். கால்களை கயிற்றினால் கட்டி வைத்திருப்பார்கள். சிலசமயங்களில் கால்களை ஆணிகளாலும் அறைவார்கள்.
எருசலேமில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு சிலருடைய எலும்புகள் கிடைத்துள்ளன. அவர்களுடைய முழங்கால்களில் ஆணிகள் பாய்ந்ததற்கான தழும்புகள் உள்ளன. சிலுவையில் அறையப்பட்ட நபர் வேதனை தாங்கமுடியாமல் சிறிது சிறிதாக தன்னுடைய ஜீவனை விடுவார். மரணம் உடனே நேரிடாது. மரிப்பதற்கு சற்றுக்காலமாகும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்திற்கு முன்பாகவே சிலுவையைப் பற்றி கூறியிருக்கிறார் (மத் 10:38; மாற் 10:21; லூக் 14:27). இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய சிலுவையை சுமப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். நம்முடைய பாவங்களுக்காக இயேசுகிறிஸ்து பாடுகளை அநுபவிப்பதற்கு ஆயத்தமாக இருந்தார் (பிலி 2:8; எபி 12:2). சிலுவை இயேசுகிறிஸ்துவின் பாடுகளுக்கு அடையாளம். நாம் தேவனோடு ஒப்புரவாகி (2கொரி 5:19; கொலோ 1:20). தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
கிறிஸ்தவ சுவிசேஷத்தின் மகிமைக்கு சிலுவை ஓர் அடையாளமாக இருக்கிறது (1கொரி 1:17). இயேசுகிறிஸ்து சிலுவை மரணத்தின் மூலமாக (1கொரி 1:23; கலா 5:11). நமக்கு எதிராக இருக்கும் பாவ சுமைகளை சிலுவையில் அறைந்து விட்டார் (Gles 660m 2.34). நாம் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோம் (கலா 2:20) ஆகையினால் நம்முடைய பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு தேவனுக்காக பிழைத்திருக்கிறோம் (ரோம 6.6-11).
இயேசுகிறிஸ்துவின் அன்பு, தேவனுடைய இரட்சிக்கும் வல்லமை ஆகியவற்றிற்கு சிலுவை ஓர் அடையாளமாகும். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து மனுக்குலத்திற்கு மீட்பை உண்டுபண்ணியிருக்கிறார்.’