யூதா 1:4 விளக்கம்

 யூதா 1:4  விளக்கம்

பக்தியற்றவர்கள் யூதா 1:4

யூதா 1:4. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுத-க்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.

Easy to Read Version

சிலர் உங்கள் கூட்டத்தில் இரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனையை வெகு காலத்திற்கு முன்பே வேதவாக்கியங்கள் கூறியுள்ளன. வெகு காலத்திற்கு முன் தீர்க்கதரிசிகள் இம்மக்களைக் குறித்து எழுதினார்கள். இம்மக்கள் தேவனுக்கு எதிரானவர்கள். அவர்கள் தேவனுடைய கருணையை பாலியல் அநீதிகளுக்கு ஒரு அனுமதியாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். நமது ஒரே ஆண்டவரும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற இம்மக்கள் மறுக்கிறார்கள். யூதா 1.4

தொடர்பு வசனங்கள்

  • A கலா 2:4; 2 தீமோ 3:6; தீத்து 1:15-16; 1 பேதுரு 2:8; 2 பேதுரு 2:1-3, 10, 18-22; 1 யோவான் 2:22;
  • B ரோமர் 6:1-2; கலா 5:13; தீத்து 2:11-12; எபிரேயர் 12:15-16; 1 பேதுரு 2:16; 2 பேதுரு 2:5-6; 3:7;
  • C 2 சாமு 22:5; சங் 1:1; 62:2; மத்தேயு 13:25; யோவான் 17:3; அப் 11:23; 15:24; ரோமர் 9:21-22; எபே 4:14; 1 தீமோ 6:15-16; 1 பேதுரு 4:18; யூதா 15;
  • D வெளி 15:4.

முக்கிய வார்த்தைகள்

1:4 இங்கு யூதா ஒரு ஆபத்தைக் காண்கிறார். கிறிஸ்தவர்களுக்குள்ளே ஒரு தீயப் போதனை புகுத்தப்பட்டிருக்கிறது. அந்த தவறான போதனை என்னவென்றால்: இரட்சிப்பு கிருபையின் மூலம் வருவதாலும் அது நற்கிரியைகளைச் சாராதிருப்பதாலும் கிறிஸ்தவர்கள் எப்படியும் வாழலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் தேவன் மன்னித்து விடுவார் என்பதே. ஒப்பிடுக: ரோமர் 6:1. இந்தக் கள்ள உபதேசம் இன்றும் உள்ளது.

காமவிகாரத்துக்கேதுவாகப்”- அவர்கள் கிறிஸ்தவர்களென்று தங்களைக் கூறிக் கொண்டாலும், அவர்களது நடைமுறை தவறாக இருக்கும்.

கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப்”- கொரிந்து சபையினர் சிலர் இந்த எண்ணமுள்ளவர்கள் (1 கொரி 5:1-2; 6:9, 12). தீத்து 2:11-14-. ல் தேவ கிருபை என்ன போதிக்கிறது என்பதைப் பார்க்கவும். மேலும் காண்க: எபே 4:19-24.

ஒன்றான ஆண்டவராகிய”- கிரேக்க பதம் ‘டெஸ்போட்’ என்பது. அதாவது முழுமையான அதிகாரம் கொண்டவர். லூக்கா 2:28-29; அப் 4:24. ல் இது தேவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெயர். கிறிஸ்துவே, அதிகாரம் படைத்தவர், கிறிஸ்துவே தேவன். இந்த மொழிபெயர்ப்பு இதைச் சரியாக கூறுகிறது.

ஆண்டவராகிய தேவனையும்”- ஒப்பிடுக: 2 பேதுரு 1:1.

மறுதலிக்கிற 2 பேதுரு 2:1. செயலிலும், சொல்லிலும் மறுதலிப்பது. கிறிஸ்துவை இவர்கள் ஆண்டவராக ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் ஆண்டவர் என்பதைக் கூறினதாக விசுவாசிக்கிறர்கள்.

ஒழுக்கத்துக்கு அனுமதியாக”- 2 பேதுரு 2:1. இந்தக் கள்ள உபதேசிகள் வெளிப்படையாவோ, உண்மையாகவோ வெளியே வரமாட்டார்கள். அவர்கள் திருடர்களைப் போல உள்ளே நுழைவார்கள். அவர்கள் அதை உண்மையுடன் கலந்து, அதிகமாக ஏமாற்றுவார்கள்.

விரிவான விளக்கம்

அப்போஸ்தலர் யூதா இந்த நிருபத்தை எழுதும்போது கர்த்தருடைய சபைகளில் கள்ளப்போதகர்கள் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் தேவனுடைய கிருபையை காமவிகாரத்திற்கேதுவாகப் புரட்டுகிறார்கள். இவர்கள் ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிறார்கள். இவர்கள் பக்தியற்றவர்கள். இவர்கள் சபைக்குள்ளே நேர் வழியாய் நுழையாமல் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மெய்யான சத்தியத்தை விசுவாசிகளுக்கு விளக்கிக் கூறவேண்டியது அவசியம் என்பதை யூதா காண்கிறார்.

பக்தியற்றவர்கள் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்திற்கு பெரிய சத்துருக்களாகயிருக்கிறார்கள். இவர்கள் சபையினுடைய சமாதானத்திற்கும் சத்துருக்கள். இவர்கள் சத்தியத்தை மறுதலிக்கிறார்கள். சத்தியத்தைப் புரட்டுகிறார்கள். மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குழப்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களை யூதா “”பக்தியற்றவர்கள்” என்று பொதுவாகச் சொல்லுகிறார்.

பக்தியற்றவர்கள் சபையிலே பிரயோஜனமில்லாத விவாதங்களை எழுப்புவார்கள். தேவையில்லாத கேள்விகளைக் கேட்பார்கள். விசுவாசிகளுக்குள் சண்டைகளையும் பிரிவினைகளையும் உருவாக்கிவிடுவார்கள். இவர்களுடைய வஞ்சகமான பேச்சுக்களினாலும், கிரியைகளினாலும் சபையிலுள்ள பிரிவினைகள் பெரிதாகிவிடும்.

பக்தியற்றவர்கள் விசுவாசிகளை இயேசுகிறிஸ்துவிடமிருந்து பிரித்துவிடுவார்கள். விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவைப் பற்றிக்கொண்டால்தான் அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. இயேசுகிறிஸ்துவைவிட்டு விலகிப்போய்விட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பக்தியற்றவர்கள் விசுவாசிகள் மத்தியிலே அவபக்தியை தந்திரமாய்ப் பரப்புகிறார்கள். பக்தியற்றவர்கள் இந்த உலகத்தில் தேவனற்றவர்கள். இவர்களுடைய ஜீவியத்தில் தேவனும் இல்லை. சுத்தமனச்சாட்சியும் இல்லை. கர்த்தருக்குப் பயப்படுகிற பயமும் இவர்களிடத்தில் இல்லை.

இப்படிப்பட்ட பக்தியற்றவர்கள் நமது தேவனுடைய கிருபையை காமவிகாரத்திற்கேதுவாக புரட்டுகிறார்கள். விசுவாசிகளை பாவம் செய்யுமாறு உற்சாகப்படுத்துகிறார்கள். தேவனுடைய கிருபை பெருகியிருப்பதினால், நாம் எவ்வளவு துணிகரமாகப் பாவம் செய்தாலும் அவர் மன்னிப்பார் என்று சொல்லி, விசுவாசிகளை பாவத்தின் பாதையில் வழிநடத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களே தேவனுடைய கிருபையை காமவிகாரத்திற்கேதுவாகப் புரட்டுகிறவர்கள்.

இவர்கள் ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிறார்கள். இவர்கள் கர்த்தத்துவத்தை நம்புவதில்லை. இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதையும், அவர் இந்த உலகத்தில் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதையும் இவர்கள் நம்பாமல் மறுதலிக்கிறார்கள். கிறிஸ்தவ மார்க்கத்தின் அஸ்திபாரமே ஒன்றான ஆண்டவராகிய தேவன் தான். இவர்களோ அந்த ஒன்றான ஆண்டவராகிய தேவனையே மறுதலித்துவிடுகிறார்கள்.

இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் தம்மை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பக்தியற்ற இவர்களோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள். தேவனையும் இயேசுகிறிஸ்துவையும் மறுதலிப்பதினால் இவர்கள் வேறு யாரை நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை. தேவனுடைய கிருபை இவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் இவர்களோ தேவகிருபையை அவமரியாதை செய்கிறார்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையை காமவிகாரத்திற்கேதுவாக புரட்டுகிறார்கள்.

பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்தினால் காயப்பட்டவர்கள், அந்தக் காயத்தின் விளைவினால் மரித்துப்போவார்கள். பாவமானது சாபத்தையும், சாபமானது வியாதியையும், வியாதியானது சரீரமரணத்தையும் கொடுக்கும். விசுவாசமில்லையென்றால் அங்கு பாவம் இருக்கும். கர்த்தரை மறுதலிக்கிறவர்களுக்கு இரட்சிப்பு இல்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள். சாத்தானின் கருவியாக செயல்படுகிறவர்கள் சத்தியத்திற்கு விரோதமாக ஊழியம் செய்வார்கள். விசுவாசிகள் கூடியிருக்கிற சபைக்கு இவர்கள் நேர்வழியாய் வராமல், பக்கவழியாய் சபைக்குள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

மாயமான தோற்றத்தோடு ஒருசிலர் சபைக்குள் நுழைந்து இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.

பக்தியில்லாதவர்கள் தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் தங்களுடைய பாவங்களை மூடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். மார்க்கத்தின் சடங்குகளுக்குள் புகுந்து கொண்டு தங்களுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்றுகிறார்கள்.

பக்தியற்றவர்களின் பாவங்கள்

1. தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுதல்.
2. ஒன்றான ஆண்டவராகிய தேவனை மறுதலிப்பது. (யூதா 1:4).
3. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுத-ப்பது (யூதா 1:4)

கூடுதல் தொடர்பு வசனங்கள்

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 2 சாமுவேல் 22:5 (TAM)

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், சங்கீதம் 1:1 (TAM)

அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 62:2 (TAM)

மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். மத்தேயு 13:25 (TAM)

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3 (TAM)

அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 (TAM)

எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24 (TAM)

ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. ரோமர் 6:1 (TAM)

மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? ரோமர் 9:21 (TAM)

கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று. கலாத்தியர் 2:4 (TAM)

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13 (TAM)

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், எபேசியர் 4:14 (TAM)

அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 1 தீமோத்தேயு 6:15 (TAM)

பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 2 தீமோத்தேயு 3:6 (TAM)

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். தீத்து 1:15 (TAM)

ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, தீத்து 2:11 (TAM)

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எபிரெயர் 12:15 (TAM)

அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 1 பேதுரு 2:8 (TAM)

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 1 பேதுரு 2:16 (TAM)

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 1 பேதுரு 4:18 (TAM)

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1 (TAM)

பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; 2 பேதுரு 2:5 (TAM)

விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். 2 பேதுரு 2:10 (TAM)

வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். 2 பேதுரு 2:18 (TAM)

இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 3:7 (TAM)

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22 (TAM)

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெள்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். யூதா 1:15 (TAM)

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 15:4 (TAM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *