அகாயா – ACHAIA
“அகாயா” என்னும் பெயர் கிரேக்க மொழியில் – Axaia Achaia – 882 என்று அழைக்கப்படுகிறது.
ரோமாபுரியாரின் ஆட்சிக்காலத்தில் கிரேக்க தேசம் முழுவதும் அகாயா என்று அழைக்கப்பட்டது. ஆயினும் இதில் தெசலி (Thessaly) சேர்க்கப்படவில்லை. ரோமாபுரியார் கி.மு 146 ஆம் வருஷத்தில் அகாயா பட்டாளத்தை அழித்து, கொரிந்துவைக் கைப்பற்றினார்கள். அந்தச் சமயத்தில் ரோமாபுரியார் இந்தப் பிரதேசத்திற்கு ஆகாயா என்று பெயரிட்டார்கள். அதன் பின்பு அத்தேனே போன்ற கிரேக்கருடைய பல பட்டணங்கள் அகாயா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது.
அப்போஸ்தலர் பவுல் எருசலேமிற்குப் போகிற வழியில் அகாயா வழியாகப் பிரயாணம் பண்ணினார். (அப் 19:21) கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானான். அப்போது யூதர்கள் ஒருமனப்பட்டு பவுலுக்கு விரோதமாக எழும்பி அவரை நியாயாசனத்திற்கு முன்பாகக் கொண்டுபோனார்கள். அப்போஸ்தலர் பவுல் வேதப்பிரமாணத்திற்கு விகற்பமாய் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிப்பதாக அவர்மீது குற்றம் சுமத்தினார்கள். (அப் 18.13) ஆனால் கல்லியோனோ இப்படிப்பட்ட வழக்கை விசாரணை செய்ய தனக்கு மனதில்லையென்று கூறி பவுலை விடுவித்து விட்டான். (அப் 18.12-17)