யூதா 1 : 11-13 விளக்கம்

யூதா 1 : 11-13 விளக்கம்

யூதா 1 : 11-13 விளக்கம்

யூதா 1:11. இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம்         கூ-க்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

யூதா 1:12. இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக்கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும்,

யூதா 1:13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. 

தொடர்பு வசனங்கள்

வசனம் 11

  • A ஆதி 4:3-14; 2 பேதுரு 2:15; 1 யோவான் 3:12; வெளி 2:14;
  • B எண் 16:1-35; 26:9-10; 31:16; உபா 23:4; யோசுவா 24:9-11; ஏசாயா 3:9; மீகா 6:5; மத்தேயு 11:21; எபிரேயர் 11:4;
  • C எண் 22:1-24; ஏசாயா 3:11; எரேமியா 13:27; எசேக்கியேல் 13:3; சகரியா 11:17; மத்தேயு 23:13-16; லூக்கா 11:42-47.

 வசனம் 12

  • A நீதி 25:14; எசேக்கியேல் 34:8; மத்தேயு 15:13; எபே 4:14; 2 பேதுரு 2:17-20;
  • B யோவான் 15:4-6; 1 கொரி 11:20-22; பிலி 3:19;
  • C 2 நாளா 7:20; சங் 1:3; 78:29-31; ஏசாயா 56:10-12; எசேக்கியேல் 17:9; 34:2, 10, 18; ஓசியா 6:4; மத்தேயு 13:6; 21:19-20; மாற்கு 4:6; 11:20-21; லூக்கா 8:6; 12:19-20, 45; 16:19; 21:34; 1 தெச 5:6-7; 1 தீமோ 5:6; எபிரேயர் 6:4-8; யாக்கோபு 5:5; 2 பேதுரு 2:13-14;
  • D சங் 37:2.

வசனம் 13

  • A ஏசாயா 57:20; பிலி 3:19; 2 பேதுரு 2:17;
  • B சங் 65:7; 93:3-4;
  • C எரேமியா 5:22-23; 2 தீமோ 3:13; வெளி 8:10-11; 14:10-11; 20:10.

முக்கிய வார்த்தைகள்

1:11 “ஐயோ”- ஏசாயா 3:11; மத்தேயு 18:7.

“காயீனுடைய”– காண்க: ஆதி 4:1-12. பலியைக் குறித்து தேவனுடைய அறிவுரைகளை அலட்சியம் செய்தான் காயீன். தேவன் யாரை அங்கீகரிப்பார் என்ற அவன் எண்ணவில்லை. மேலும் காண்க: எபிரேயர் 11:4; 1 யோவான் 3:12.

பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே”- காண்க: 2 பேதுரு 2:15.

கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி”- எண் 16. கோரா தேவனுக்கு எதிர்த்து நின்றது போல, இந்த தேவனற்ற மனிதரும் தங்கள் மேல் அழிவை வருவித்துக் கொள்ளுகிறார்கள். இவர்களது இருதயத்தில் மூன்று காரியங்களைப் பார்க்கிறோம். சத்தியத்தையும், அதை நடைமுறைப்படுத்துகிறவர்களையும் வெறுப்பது. தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைப்பற்றி பேராசை, தேவனுக்கு விரோதமாக நிற்பது.

1:12 “அன்பின் விருந்துகளில்”- காண்க: 1 கொரி 11:20-22.

பயமின்றிக்”- அவர்களது மனச்சாட்சி அவர்களை வருத்துவதில்லை. தேவனுடைய எச்சரிப்பையும் அவர்கள் நினைப்பதில்லை. ஒப்பிடுக: 1 தீமோ 4:2.

தங்களைத் தாங்களே மேய்த்துக் கொள்ளுகிறார்கள்”- அவர்கள் செய்வதெல்லாவற்றிலும் பேராசை, தன்னலாம், தங்கள் இருதயங்களில் பிறரைப்பற்றிய எண்ணமில்லாமை காணப்படுகின்றன. ஒப்பிடுக: எசேக்கியேல் 34:1-10; எரேமியா 10:21; 12:10; 23:1.

அடியுண்டோடுகிற”- 2 பேதுரு 2:17.

தண்ணீரற்ற”- மழையைக் கொடுப்பது போலக் காண்பித்து மழை தரா மேகங்கள் (நீதி 25:14).

கனியற்று”- நல்ல கனியை அல்ல, கெட்ட கனிகளை மிகுதியாய்த் தருகிறார்கள். ஒப்பிடுக: மத்தேயு 21:18-19; லூக்கா 13:6-7.

இரண்டுதரஞ்செத்து”- பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தல் (எபே 2:1. ), அவர்கள் வாழ்ந்த முறை அவர்கள் மரணத்துடன் உறுதிப்படுகிறது (1 தீமோ 5:6). அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் இரண்டாம் மரணத்துக்கு நேராய்ப் போகிறார்கள் (வெளி 20:14). தாங்களே அந்த அழிவுக்குக் காரணமாகிறார்கள். அவர்களது மனக்கடினம், அவிசுவாசம், எதிர்த்து நிற்பது இவற்றால் நித்திய ஜீவனை இழந்து விடுகிறார். தேவனால் நடப்படாத மரங்கள் இவர்கள். அவர்கள் நம்பிக்கையை அறவே இழந்து போகிறார்கள்.

வேரற்றுப்போன மரங்களும்”- காண்க: மத்தேயு 15:13. தேவன் இவர்களை நாட்டவில்லை. நல்ல கனிகளைத் தரும் எந்தவிதத் தொடர்பும் அவர்களுக்கு இல்லை. இவர்கள் உண்மையான விசுவாசிகளுக்கு எதிரானவர்கள் – எபே 3:17; கொலோ 2:7.

1:13 “அமளியான கடலலைகளும்”- அமைதியற்ற நிலை, தங்களில் பொங்கி எழும் ஆசையால் தூக்கி எறியப்படுபவர்கள் – ஒப்பிடுக: ஏசாயா 57:20-21. தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற’ – அவர்களது இருதயத்தில் உள்ள பாவமானது கெட்ட செயல்களாக வெளிப்படுகிறது.

மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்”- கிறிஸ்துவைச் சுற்றியுள்ள விட்டத்தில் அவர்களுக்கு உறுதியான பாதை இல்லை. கிறிஸ்தவர்களுக்கு உள்ள நோக்கமும் இவர்களிடமில்லை (பிலி 3:14).

காரிருளே”- 2 பேதுரு 2:17; . ஒப்பிடுக: பிலி 2:15; தானி 12:3.

விரிவான விளக்கம்

இவர்களுக்கு ஐயோ யூதா 1 : 11-13

பக்தியற்றவர்களையும், சொப்பனக்காரரையும்,கள்ளப்போதகர்களையும்  குறித்து அப்போஸ்தலர் யூதா எச்சரித்துச் சொல்லுகிறார்.  இவர்களை  காயீனுடைய வழியிலே  நடக்கிறவர்கள் என்று   கூறுகிறார். இவர்கள் பேராசைக்காரர்கள். தெய்வபக்தியற்றவர்கள். கர்த்தரைத் தூஷிக்கிறவர்கள். இவர்களுக்கு  இப்பிரபஞ்சத்தின் காரியங்களே  பிரதானமாயிருக்கும். உலகப்பிரகாரமான ஐசுவரியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதற்கு பின்பு வரப்போகிற உலகத்தைக் குறித்து  இவர்களுக்கு  எந்தவிதமான சிந்தனையும் இல்லை. பிலேயாம்  கூலிக்காக வஞ்சகம் செய்ய விரைந்தோடினான்.  சொப்பனக்காரரும் பிலேயாமைப்போலவே  வஞ்சகம்பண்ணுகிறார்கள்.

கோரா மோசேக்கு  எதிர்த்துப் பேசினான்.  பாவத்திற்குள்ளாகி  கெட்டுப்போனான்.  கோராவோடு மேலும் பலர்  மோசேக்கு விரோதமாக எதிர்த்துப் பேசினார்கள். கோராகின் புத்திரர் எல்லோருமே அழிந்துபோனார்கள்.  இவர்கள்  நம்முடைய அன்பின் விருந்துகளில் கறைகளாகயிருக்கிறார்கள்.  நம்மோடுகூட  பயமின்றி விருந்துண்கிறார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே  மேய்த்துக்கொள்கிறார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில்  இந்த உலகத்து ஜனங்கள்  பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார்கள்.  நீதியை எதிர்பார்க்கிறார்கள்.  நாம் புறஜாதியார் மத்தியிலே  கர்த்தருக்குச் சாட்சியாய் ஜீவிக்கவேண்டும். மற்ற விசுவாசிகள் மத்தியிலே நாம் கறைகளாயிருக்கக்கூடாது.  விசுவாசிகள் அன்பின் விருந்துகளில் ஐக்கியமாகயிருப்பது  மிகப்பெரிய சிலாக்கியம்.  இந்தச் சிலாக்கியத்தை  யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.  அன்பின் விருந்தை நாம் அலங்கரிக்கவேண்டும்.  அன்பின் விருந்துகளில் நாம் கறைகளாகயிருந்து அதை அசுத்தப்படுத்திவிடக்கூடாது.

பெருந்தீனி உண்பது பாவம்.  அன்பின் விருந்துகளில்  நாம் புசிப்பதுபோலவே மற்றவர்களும் புசிக்கவேண்டுமென்று  விரும்பவேண்டும்.  அதற்கேற்ற பிரகாரம்  விருந்துகளில்  புசிக்கவேண்டும்.  பெருந்தீனி உண்டு பிறரைப்பற்றிக் கவலையில்லாமல் இருக்கக்கூடாது. சொப்பனக்காரர்களோ அன்பின் விருந்துகளில்  கறைகளாகயிருக்கிறார்கள். மற்ற விசுவாசிகளோடு பயமின்றி விருந்துண்கிறார்கள். தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறார்கள்.  மற்றவர்கள் போஜனம் பண்ணினார்களா என்னும் கவலை இவர்களிடத்தில் இல்லை.

நாம் அன்பின் விருந்தில் பங்குபெறவேண்டும். பரிசுத்தமாய் பங்குபெறவேண்டும்.  கர்த்தருடைய நாமமகிமைக்காக அன்பின் விருந்துகளில் பங்குபெறவேண்டும்.  இந்த விருந்துகளில் பங்குபெறுகிற  விசுவாசிகள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்றும், எல்லோருக்கும் பிரயோஜனம் உண்டாகவேண்டுமென்றும் நாம் அன்பின் விருந்துகளில் பங்குபெறவேண்டும்.

இப்படிப்பட்டவர்கள்  காற்றுகளால் அடியுண்டு ஓடுகிற  தண்ணீரற்ற மேகங்களாயிருக்கிறார்கள். கோடைகாலத்திலே மேகம் வரும்போது மழைவருவதுபோல இருக்கும். ஆனால் அந்த மேகம் ஒரு மழையும் கொடுக்காது. வெளிப்பார்வைக்கு அந்த மேகத்தில் தண்ணீர் இருப்பதுபோல தெரியும். ஆனால் அந்த மேகங்களோ தண்ணீரற்ற மேகங்களாகவே இருக்கும்.

கள்ளப்போதகர்கள் இப்படிப்பட்ட மேகங்களைப்போல இருக்கிறார்கள். தங்களிடத்தில் தேவனைப்பற்றிய வெளிப்பாடு இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.  தேவனைப்பற்றிய சத்திய வசனத்தை  தாங்கள் போதிப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால்  இவர்களுடைய வார்த்தையில் உண்மையில்லை.  இவர்களுடைய வார்த்தைக்கும் கிரியைக்கும் முரண்பாடாய் நடக்கிறார்கள்.

தண்ணீரற்ற மேகங்களைப்போன்ற இவர்கள் காற்றுகளால்  அடியுண்டு ஓடுகிறார்கள். காற்று எந்த திசையில் அடிக்கிறதோ  அந்தத் திசையில்  ஓடுகிறார்கள்.  தண்ணீரில்லாத மேகங்களால் காற்றை எதிர்த்து நிற்கமுடியாது.  வெறும் மேகம் எல்லா இடங்களுக்கும் ஓடும்.

அதுபோலவே  வஞ்சகர்களிடத்தில் ஒரு சத்தியமுமில்லை.  இவர்கள் தண்ணீரற்ற மேகங்களைப்போல இருக்கிறார்கள். காற்றுகளால் அடியுண்டோடுகிற மேகங்களைப்போல அங்குமிங்கும் அலைந்து ஓடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்  தங்களை வஞ்சிக்கிறவர்களுக்கு  எளிதில் இடங்கொடுத்து வஞ்சிக்கப்படுவார்கள். தங்களுக்கு ஒன்றும் தெரியாதிருந்தும் தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று மாய்மாலம் பண்ணுகிறார்கள்.  காற்று வரும்போதுதான்  இவர்களிடத்தில்  ஒன்றுமில்லை என்பது தெரியவருகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நம்மைக் குறித்து தெளிவாய் அறிந்திருக்கவேண்டும். நம்மைக் குறித்து எண்ணுவதற்கு அதிகமாய்  எண்ணக்கூடாது.  நம்முடைய உண்மையான நிலமை என்ன என்பது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

விசுவாசத்தில் உறுதியில்லாதவர்கள்  இலையுதிர்ந்து, கனியற்று, இரண்டு தரம்  செத்து வேரற்றுப்போன மரங்களைப்போல இருக்கிறார்கள்.  இவர்கள் மரங்கள்தான். கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தில்தான்  இவர்கள் நாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால்  இவர்கள் கனியற்ற மரங்களாயிருக்கிறார்கள்.  இந்த மரங்கள் இரண்டுதரம் செத்துப்போயிற்று.  ஒரு மரம் ஒரு தரம் செத்துப்போனாலே  அது பட்டுப்போகும்.  ஒரு தரம் செத்துப்போன மரம் மறுபடியும் தழைப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால்  விசுவாசத்தில் பலவீனமாயிருக்கிற இவர்களோ  இரண்டு தரம் செத்துப்போன  மரங்களைப்போல இருக்கிறார்கள்.  இவர்கள் விசுவாசத்தைவிட்டு  விழுந்துபோய், மறுபடியும் எழும்பிவந்து, மறுபடியும் விழுந்துவிட்டார்கள். இவர்களிடத்தில் உண்மையில்லை.  உண்மை ஜீவனைக் கொடுக்கும்.  இவர்கள் மாய்மாலத்தை நம்பியிருந்தார்கள்.  மாய்மாலத்தில் மரித்துப்போனார்கள்.  தங்களிடத்தில் ஜீவன் உண்டு என்று  இவர்கள் நினைத்தார்கள். ஆனால்  இவர்களிடத்தில் ஜீவன் இல்லை.  வாய்ப்பு வரும்போதெல்லாம் செத்துப்போகிறார்கள்.

விசுவாசத்தில் விழுந்துபோன இவர்கள் வேரற்றுப்போன மரங்களைப்போல இருக்கிறார்கள்.  செத்துப்போன மரத்தை  வேரோடு பிடுங்கி விடுவது வழக்கம்.  கனியற்ற மரத்தினால்  ஒரு பிரயோஜனமுமில்லை.  ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷம் அந்த மரம் கனிதருமா என்று பார்ப்பார்கள்.  கனிதரவில்லையென்றால் அந்த மரத்தை  வேரோடு பிடுங்கி விடுவார்கள். அந்த மரம் இரண்டு தரம் செத்துப்போன மரமாகயிருந்தால், அந்த மரத்தை  வேரோடு  நிச்சயமாய்ப் பிடுங்கிவிடுவார்கள். வேரற்றுப்போன மரத்தினால் மறுபடியும் தழைக்க முடியாது. மறுபடியும் கனிதர முடியாது.  அதன் ஜீவன் முடிந்துபோயிற்று.  அதற்கு  நித்திய மரணமுண்டாயிற்று.

விசுவாசத்தைவிட்டுப் பின்வாங்கிப்போகிறவர்கள் தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற  அமளியான  கடல் அலைகளைப்போல இருக்கிறார்கள்.  இவர்களிடத்தில்  அமளிதான் இருக்கும். பேச்சுதான் அமளி. நன்றாகப் பேசுவார்கள். சாதுரியாமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.  இவர்களுடைய பேச்சில்  பக்தியும் இருக்காது. பரிசுத்தமும் இருக்காது.  தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற  அமளியான  கடல் அலைகளைப்போல பேசுகிறார்கள்.  தங்களிடத்திலுள்ள அவபக்தியையும், அசுத்தத்தையும், அவிசுவாசத்தையும் தங்கள் பேச்சினால் வெளிப்படுத்துகிறார்கள்.

கடல் அலைகளின் அமளிகளைப்பார்த்து ஜனங்கள் பயப்படுவார்கள்.  அதுபோலவே  இவர்களுடைய பேச்சைக் கேட்டு ஜனங்கள் ஆச்சரியப்படுவார்கள். இவர்களை அமைதிப்படுத்துவதும் சிரமமாகயிருக்கும். இவர்கள் சரளமாகப் பேசுவார்கள். இவர்களோடு எதிர்த்து நிற்பதற்கே கடினமாயிருக்கும்.  இவர்கள் அமளியான கடல் அலைகளைப் போன்றவர்கள்.

கடல் அலைகள் அமளியானவைகளாயிருந்தாலும், அவை முடிவில் தங்கள் அவமானங்களை  நுரை தள்ளுகிறது.  அது போலவே  விசுவாசத்தில் பின்வாங்கிப்போனவர்கள் ஆரம்பத்திலே  வார்த்தைகளை அலப்பினாலும், முடிவில் அவர்களுடைய  அவமானமும், வெட்கமும், அவிசுவாசமும், அவபக்தியும் வெளிப்படும். கடலில் பிரயாணம்பண்ணுகிறவர்களுக்கு  அமளியான கடல் அலைகள்  அச்சத்தைக் கொடுக்கும். ஆனால்  அவர்கள் கரைக்கு வந்தபின்போ அமளியான கடல் அலைகளை மறந்துவிடுவார்கள். அவற்றின் அமளியும் நின்றுபோகும். அவை பயமுறுத்துவதும் முடிந்துபோகும். விசுவாசத்தைவிட்டு விலகிப்போனவர்கள் பார்ப்பதற்கு  பக்தியுள்ளவர்களைப்போல இருப்பார்கள்.  இவர்களுடைய இருதயத்திலோ  பக்தியும் இருக்காது. விசுவாசமும் இருக்காது.

இவர்கள் மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரங்களைப்போல இருக்கிறார்கள். கள்ளப்போனதகர்கள் இந்த நட்சத்திரங்களைப்போல அங்குமிங்குமாக அலைகிறார்கள். இவர்கள் எங்கு   இருப்பார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.  இவர்களுக்கென்று  நிலையான ஸ்தலம் இல்லை.  எங்குவேண்டுமானாலும் போவார்கள்.  இவர்கள் மார்க்கம் தப்பி அலைகிறவர்கள். தாங்கள் எங்கு போகிறோம் என்பதும் இவர்களுக்குத் தெரியாது.

நிலையில்லாத இவர்களை பின்பற்றுகிறவர்களும் நிலையில்லாமல் போய்விடுவார்கள். கர்த்தரே நம்முடைய ஆத்துமாவுக்கு நங்கூரமாயிருக்கிறார். விசுவாசத்தினால் நாம் கர்த்தரைப்பற்றிக்கொள்ளும் போது நாம் அசைக்கப்படுவதில்லை.  கர்த்தரே நமக்கு  வழியாக இருக்கிறார். அவரே நம்முடைய வாசல்.  நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும்போது  நாம் ஒருபோதும் மார்க்கம் தப்பி அலைகிறவர்களாயிருக்கமாட்டோம்.    மார்க்கம் தப்பி அலைகிறவர்களுக்கு  காரிருளே என்றென்றைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது என்று யூதா சொல்லுகிறார்.

துன்மார்க்கருடைய முடிவு  இங்கு அறிவிக்கப்படுகிறது.  கள்ளப்போதர்களுக்கு   பூமிக்குரிய இந்த ராஜ்யத்திலும், வரப்போகிற தேவனுடைய ராஜ்யத்திலும் கடினமான தண்டனை நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய  முடிவை நாம் தியானித்துப் பார்த்து, நாம் மிகவும்  எச்சரிக்கையாய் ஜீவிக்கவேண்டும்.

நான்காம் நூற்றாண்டு வரையிலும் கிறிஸ்தவ விசுவாசிகள் அன்பின் விருந்துகளை ஆசரித்து வந்தார்கள். அதன்பின்பு, சபைகளில் இவற்றை நடத்தக்கூடாது என்று தடைபண்ணப் பட்டது.

சொப்பனக்காரர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் உவமைகள்

  1. கறை
  2. காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்கள்.         (உபா 32:2, 2பேதுரு 2:17)
  3. இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்கள். (மத் 7:15)
  4. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகள். (யூதா 1:13; ஏசா 57:20)
  5. மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்கள். (யூதா 1:13;             2பேதுரு 2:14-17)

தண்ணீரில் மூழ்கியிருக்கும் கற்பாறைகளைப் போன்றவர்கள். இவர்கள் விசுவாசம் என்னும் கப்பலைச் சேதப்படுத்தி விடுவார்கள்.

இரண்டுதரஞ் செத்துப் போனது என்னும் வாக்கியம் பின்மாற்றத்தையும், பாவத்தினாலும், மீறுதலினாலும் மறுபடியும் செத்துப்போனதையும் குறிக்கும்.  இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. சொப்பனக்காரருக்கு நித்திய நரகம்         ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *