1யோவா 1:1-2 விளக்கம்
1யோவா 1:1. ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1யோவா 1:2. அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தி–ருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
தொடர்பு வசனங்கள்
வசனம்:1
- A லூக்கா 24:39; யோவான் 1:1-18; 5:26; 8:58; 20:27; அப் 4:20; 2 பேதுரு 1:16-18; 1 யோவான் 1:2-3; 4:14; வெளி 1:8, 17-18;
- B லூக்கா 1:2; அப் 1:3; 1 யோவான் 2:13-14; 5:7; வெளி 1:11; 2:8; 19:13;
- C நீதி 8:22-31; ஏசாயா 41:4; மீகா 5:2; யோவான் 19:35.
வசனம்:2
- A யோவான் 1:4; 17:3; 1 தீமோ 3:16; 1 யோவான் 3:8; 5:20;
- B நீதி 8:22-30; யோவான் 14:6; 15:27; கலா 4:4; தீத்து 1:2; 1 யோவான் 3:5; 5:11;
- C யோவான் 1:1-2; 11:25-26; அப் 3:15; ரோமர் 8:3; 16:25-26; 2 தீமோ 1:10; 1 யோவான் 1:1;
- D யோவான் 1:18; 3:13; 7:29; 8:38; 16:28; 17:5; 21:14; அப் 1:22; 2:32; 5:32; 10:41; 1 பேதுரு 5:1.
சில முக்கிய வார்த்தைகள்
வசனம்:1
“ஆதிமுதல்”– ஆதி 1:1; யோவான் 1:1.
“நாங்கள்”– கிறிஸ்துவுடனிருந்த எல்லா சீடர்களையும் குறித்து யோவான் பேசுகிறார். இயேசு பூமியிலிருந்தபோது, அவர்கள் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார்கள், அவரது போதகத்தைக் கேட்டார்கள், அவருடைய செயல்களைக் கண்டார்கள்.
“ஜீவவார்த்தையைக்குறித்து”– கிறிஸ்துவே வார்த்தையானவர், மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்ட முழுமையான தேவனின் வெளிப்பாடு. அவரே நித்திய ஜீவன் (5:20; யோவான் 1:4; 5:26; 14:6). ஜனங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவே அவர் வந்தார் (யோவான் 10:10; 6:51). அவர் பேசின வார்த்தைகள் ‘ஜீவன்’ (யோவான் 6:63). அவருடைய நற்செய்தி ஆவிக்கு ஜீவனைத் தருகிறது (ரோமர் 5:21; 6:23).
வசனம்:2
“பிதாவினிடத்திலிருந்ததும்”– யோவான் 1:2; 17:5. கிறிஸ்து பிதா அல்ல; தேவத்துவத்தில் பிதாவுடன் ஒன்றாக இருக்கிறார். யோவான் 17:1, 5; 1 கொரி 8:5-6; 2 யோவான் 3.
“எங்களுக்கு வெளிப்பட்டதுமான”– கிறிஸ்து தோன்றியபோதே நித்திய ஜீவன் வெளிப்பட்டது (யோவான் 1:14; 2 தீமோ 1:10).
“நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை”– 5:11-12; யோவான் 3:16.
விரிவான விளக்கம்
ஜீவவார்த்தை 1யோவா 1:1,2
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கும் நமக்கும் நடுவே மத்தியஸ்தராகயிருக்கிறார். அவர் ஜீவவார்த்தையாகயிருக்கிறவர். சாதாரணமாக வாயினால் பேசப்படுவது வெறும் சத்தம். இயேசுகிறிஸ்து வெறும் சத்தமல்ல. அவர் ஜீவவார்த்தை.
இயேசுகிறிஸ்து நித்திய ஜீவன் உள்ளவர். அவர் நித்தியகாலமாகயிருக்கிறவர். அவருடைய வார்த்தையும் நித்திய வார்த்தையாகயிருக்கிறது. ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்து பிதாவினுடைய நித்திய வார்த்தையாகயிருக்கிறார்.
ஜீவவார்த்தையிலுள்ள அந்த ஜீவன் வெளிப்பட்டது. அந்த ஜீவன் மாம்சத்தில் வெளிப்பட்டது. தேவனோ நித்தியகாலமாக ஜீவிக்கிறவர். கிறிஸ்துவானவர் சாதாரண மனுஷராகிய நம்மை சந்திப்பதற்காக, அவரும் மனுஷரானார். தமக்கு மாம்ச சரீரத்தை ஏற்றுக்கொண்டார். நமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக இயேசுகிறிஸ்துவின் ஜீவன் மாம்சத்தில் வெளிப்பட்டது.
அப்போஸ்தலர் யோவானும், மற்ற அப்போஸ்தலர்களும் இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்துவை கண்ணாரக்கண்ட சாட்சிகளாகயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து ஜீவனாகயிருக்கிறார். அவர் ஜீவவார்த்தையாகயிருக்கிறார். அவரே ஆதிமுதல் இருந்தவர். அவர் நித்திய ஜீவனுள்ளவர். நித்தியமாகயிருக்கிறவரை யாராலும் காணமுடியாது. ஆனால் ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டதினால், அவருடைய காலத்தில் வாழ்ந்த அப்போஸ்தலர்கள், இயேசுகிறிஸ்துவைத் தங்கள் கண்களினால் கண்டார்கள். அவரை நோக்கிப் பார்த்தார்கள். அவரைத் தங்கள் கைகளினால் தொட்டார்கள். இயேசுகிறிஸ்து தம்மை மாம்சத்தில் வெளிப்படுத்தியதினாலேயே, மனுஷனால் அவரைப் பார்க்க முடிந்தது.
அப்போஸ்தலர்கள் ஜீவவார்த்தையை கண்டார்கள். தங்கள் காதுகளால் கேட்டார்கள். ஜீவவார்த்தைக்கு நாவும், வாயும் இருந்தது. ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்து ஜீவவார்த்தைகளைப் பேசினார். தேவனுடைய தெய்வீக வார்த்தைகளைப் பேசினார். அவருடைய ஜீவவார்த்தைகளை அப்போஸ்தலர்கள் தங்கள் காதுகளால் கேட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவைத் தங்கள் கண்களால் கண்டார்கள். வார்த்தையை காதுகளால் கேட்கத்தான் முடியும். ஆனால் அப்போஸ்தலர்களோ ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவைத் தங்கள் கண்களாலும் கண்டார்கள். தங்களுடைய சரீரப்பிரகாரமான கண்களால் அவர்கள் ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவைப் பிரத்தியட்சமாகக் கண்டார்கள். ஜீவவார்த்தையானவரின் ஜீவன் மாம்சத்தில் வெளிப்பட்டதினால், அப்போஸ்தலரால் அவரை காணமுடிந்தது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அப்போஸ்தலர்கள் கண்ணாரக் கண்ட சாட்சிகளாகவும், தங்கள் காதாரக்கேட்ட சாட்சிகளாகவும் இருக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் ஜீவவார்த்தையை நோக்கிப் பார்த்தார்கள். தங்கள் கண்களால் கண்டது மாத்திரமல்ல தங்களுடைய மனக்கண்களால் அவரை நோக்கிப் பார்க்கவும் செய்தார்கள். ஜீவவார்த்தையை நம்முடைய சரீரப்பிரகாரமான கண்களினால் கண்டால் மாத்திரம் போதாது. அவரை நம்முடைய மனக்கண்களாலும் நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய மனதும் இருதயமும் ஜீவவார்த்தையை நோக்கிப் பார்க்கவேண்டும்.
அப்போஸ்தலர்கள் ஜீவவார்த்தையை தங்கள் கைகளினால் தொட்டார்கள். அவரைத் தொட்டு தழுவினார்கள். தங்கள் கைகளினால் தொட்டு அந்த ஸ்பரிசத்தை அவர்கள் உணர்ந்தார்கள். ஜீவனும் வார்த்தையும் பிரத்தியட்சமாய்க் காணமுடியாதது. ஆனால் அப்போஸ்தலர்களோ ஜீவவார்த்தையை தங்கள் கண்களால் கண்டு, தங்கள் மனக்கண்களால் நோக்கிப்பார்த்து, தங்கள் கைகளால் தொட்டும் இருக்கிறார்கள்.
ஜீவவார்த்தையாகிய இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். தம்மை அப்போஸ்தலருக்கு பிரத்தியட்சமாக வெளிப்படுத்திக் காண்பித்தார். இயேசுகிறிஸ்து நித்தியமானவர். அவர் பிதாவினிடத்தில் இருந்தவர். அப்போஸ்தலருக்கு வெளிப்பட்டவர். அந்த ஜீவனை அப்போஸ்தலர்கள் கண்டார்கள். அதைக் குறித்து சாட்சி கொடுத்தார்கள். அதை இப்போது இந்த நிருபத்தின் மூலமாய் அறிவிக்கிறார்கள். கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போது, பரிபூரணமாக வெளிப்படுத்துகிறார். நமக்கு பூரண திருப்தி உண்டாகும்படியாக தம்மை வெளிப்படுத்துகிறார்.
அப்போஸ்தலருக்கு ஜீவவார்த்தையைக் குறித்து முழுநிச்சயம் உண்டாயிற்று. ஜீவவார்த்தையை அப்போஸ்தலர்கள் கண்டார்கள். கேட்டார்கள். தாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை, எவ்வித சந்தேகமுமில்லாமல், முழுநிச்சயத்தோடு சாட்சியாய் அறிவித்தார்கள். கர்த்தரைத் தேடுகிறவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
இந்த உலகத்திற்கு அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவைக் கண்ணாரக் கண்ட சாட்சிகளாகயிருக்கிறார்கள். இவர்களுடைய சாட்சி உறுதியுள்ளதாகயிருக்கவேண்டும். இவர்களும் ஏமாற்றப்படக்கூடாது. இவர்கள் மற்றவர்களையும் ஏமாற்றிவிடக்கூடாது. ஆகையினால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மை இவர்களுக்கு பூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜீவவார்த்தையை இவர்கள் தங்கள் காதுகளால் கேட்கவும், தங்கள் கண்களால் காணவும், தங்கள் மனக்கண்களால் நோக்கிப் பார்க்கவும், தங்கள் கைகளினால் தொடவும் அனுமதி கொடுத்தார். ஜீவவார்த்தையானவர் தம்முடைய ஜீவனை மாம்சத்திலே பிரத்தியட்சமாக வெளிப்படுத்தினார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் நன்றாய் அறிந்திருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து நல்லவர் என்பதை நாம் ருசித்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் நம்மால் முழுநிச்சயத்தோடு இயேசுகிறிஸ்துவைப்பற்றி பிறருக்கு சாட்சியாக அறிவிக்கமுடியும். கிறிஸ்துவின் சுவிசேஷம் நம்மை இரட்சித்திருக்கவேண்டும். சுவிசேஷத்தின் மூலமாய் நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் சுவிசேஷத்தை முழுநிச்சயத்தோடு பிரசங்கம்பண்ணமுடியும்.
அப்போஸ்தலர்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றி நமக்கு சாட்சி கொடுத்து அறிவிக்கிறார்கள். கிறிஸ்துவைப்பற்றி அறிவிப்தற்கு முன்பாக, கிறிஸ்துவானவர் தம்மை அவர்களுக்கு பூரணமாக வெளிப்படுத்தினார். தாங்கள் கேட்டும், கண்டும், தொட்டும், உணர்ந்தும் இருக்கிற கிறிஸ்துவானவரை அப்போஸ்தலர்கள் அறிவிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய நம்பிக்கை இவர்களிடத்தில் உறுதியாகயிருக்கிறது. தாங்கள் உறுதியாக நம்புவதையே அப்போஸ்தலர்கள் நமக்கு சாட்சி கொடுத்து அறிவிக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள்
1. ஆதிமுதல் இருந்தவர். (1யோவான் 1:1; யோவான் 1:12); நித்திய காலத்திலிருந்து இருக்கிறவர். (மீகா 5:12; எபி 1:8)
2. எங்கள் காதுகளால் நாங்கள் அவர் பேசியதைக் கேட்டோம். (1யோவான் 1:1).
3. எங்கள் கண்களினாலே நாங்கள் அவரைக் கண்டோம். (1யோவான் 1:1).
4. எங்கள் கைகளினாலே நாங்கள் அவரைத் தொட்டோம். (1யோவான் 1:1).
5. அவர் ஜீவவார்த்தையாக இருக்கிறார். (1யோவான் 1:1; யோவான் 14:6).
6. அந்த ஜீவனைக் குறித்து நாங்கள் சாட்சி கொடுக்கிறோம். (1யோவான் 1:2).
7. அவர் நித்திய ஜீவனாக இருக்கிறார். (1யோவான் 1:2).
8. அவர் பிதாவல்ல. பிதாவோடு நித்திய காலமாக இருக்கிறவர். (1யோவான் 1:2; யோவான் 1:12).
9. அவர் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். (1யோவான் 1:2).
அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்குக் காரணம்
1. நீங்கள் எங்களோடும், பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாய் இருக்கும்படி. (1யோவான் 1:3)
2. உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் படி. (1யோவான் 1:4)
நாங்கள் அறிவிப்பதைக் குறித்து மிகவும் நிச்சயத்தோடு இருக்கிறோம். நாங்கள் இயேசு கிறிஸ்து பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறோம். அவரை எங்கள் சொந்தக் கண்களால் நோக்கிப் பார்த்திருக்கிறோம். எங்கள் சொந்தக் கைகளினாலே இயேசு கிறிஸ்துவை நாங்கள் தொட்டிருக்கிறோம். நாங்கள் அவரோடுகூட பல வருஷங்களாக ஜீவித்தோம். இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை எங்கள் காதுகளாலே நாங்கள் கேட்டிருக்கிறோம். அவருடைய தெய்வீகக் கிரியைகளை நாங்கள் எங்கள் கண்களாலே கண்டிருக்கிறோம்.
நோக்கிப் பார் என்பதற்கு “”தியோமால்”, “”தியோரியோ” ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்விரு கிரேக்க வார்த்தைகளும் ஒரு பொருளை உன்னிப்பாகக் கவனிப்பதைக் குறிப்பிடும். இல்லாத பொருளை நோக்கிப் பார்ப்பதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப் படாமல், உண்மையாகவே இருக்கும் பொருளைப் பார்ப்பதற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும்.
இயேசு கிறிஸ்துவே ஜீவவார்த்தை. அந்த வார்த்தை மாம்சமாகி, மனுஷருக்குள்ளே வாசம் பண்ணினார். அப்போஸ்தலர்களுடைய காலத்தில் ஏராளமானோர் ஜீவித்தார்கள். அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. மெய்யாகவே ஜீவித்தவர்கள். அதுபோலவே இயேசு கிறிஸ்துவும் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவர் மெய்யாகவே ஜீவவார்த்தையாக ஜீவித்தவர்.
நித்திய ஜீவனைப் பற்றி யோவான் கூறியுள்ள சத்தியங்கள்
1. ஜனங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளலாம். (யோவான் 3:1516,36)
2. இயேசு கிறிஸ்து மனுஷருக்குக் கொடுக்கும் ஜீவத்தண்ணீர் அவர்களுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாய் இருக்கும். (யோவான் 4:14).
3. நித்திய ஜீவனுக்காக ஜனங்கள் பலனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். (யோவான் 4:36).
4. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்ப்பதினால் ஜனங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 5:39).
5. நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக ஜனங்கள் கிரியை நடப்பிக்க வேண்டும். (யோவான் 6:27)
6. இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 6:54).
7. இயேசு கிறிஸ்துவிடம் நித்திய ஜீவவசனங்கள் உண்டு. (யோவான் 6:68).
8. தம்முடைய நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படியும் ஜனங்களுக்கு இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். (யோவான் 6:27)
9. ஜனங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். (யோவான் 12:50).
10. இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தேவனிடத்தில் வருகிறவர்கள் அனைவருக்கும் நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காகத் தேவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். (யோவான் 17:2).
11. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவான் 17:23).
12. இயேசு கிறிஸ்து அந்த நித்திய ஜீவன். (1யோவான் 1:13).
13. அந்த நித்திய ஜீவனை அப்போஸ்தலர்கள் நோக்கிப்பார்த்தார்கள், கேட்டார்கள், தொட்டுப்பார்த்தார்கள். (1யோவான் 1:13).
14. நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்ட பின்பு, விசுவாசிகளிடத்தில் அந்த ஜீவன் நிலைத்திருக்க வேண்டும். (யோவான் 6:27, 1யோவான் 2:24).
15. ஜனங்களிடத்தில் நித்திய ஜீவன் நிலைத்திருந்தால், அவர்கள் குமாரனிலும், பிதாவிலும் நிலைத்திருப்பார்கள். (1யோவான் 2:24).
16. எல்லா ஜனங்களுக்கும் நித்திய ஜீவனை அளிப்பதாக தேவன் வாக்கு பண்ணியிருக்கிறார். (1யோவான் 2:25) ஆயினும் இதைப் பெற்றுக் கொள்வதற்கு தேவன் நியமித்திருக்கும் நிபந்தனைகளைக் கைக் கொள்கிறவர்களுக்கு மட்டுமே நித்திய ஜீவன் அளிக்கப்படும். (யோவான் 6:27)
17. தன் சகோதரனைப் பகைக்கிறவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது. (1யோவான் 3:15).
18. தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். (1யோவான் 5:11).
19. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவன் இருக்கிறது. (1யோவான் 5:11).
20. நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறவர்கள் தங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்பதை அறிந்து கொள்ளலாம். (1யோவான் 5:13,20)