வேதாகம நாடுகள் : இஸ்ரேல் பாகம் 2

வேதாகம நாடுகள் 2

வேதாகம நாடுகள் பாகம் 2

டெல் அவிவ் 

1909ல் தான் இந்த டெல் அவிவ் பட்டணம் உதயமாயிற்று. இன்று இஸ்ரவேல் நாட்டிலே ஒரு பெரிய பட்டணமாக வளர்ந்துள்ளது. இது ஒரு கடற்கரை பட்டணம். இதன் மேற்கு எல்லை மத்திய தரைக்கடல். தற்போது இதன் மக்கள் தொகை 14,70,000. டெல்அவிவிலிருந்து நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் புனித பட்டணமாகிய எருசலே முக்கு பஸ்ஸில் போகப்போகிறோம். இங்கிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தென்கிழக்கில் எருசலேம் அமைந்துள்ளது. டெல்அவிவிலிருந்து நாம் எருசலேமை நோக்கிப் போகும் போது சில மைல் தூரத்தில் வருவது யோப்பா.

யோப்பா

சாலொமோன் காலத்தில் தேவாலயம் கட்ட லீபனோனின் மரங்கள் கடல் வழியாய் இந்த யோப்பா விற்கு கொண்டுவரப்பட்டு எருசலேமுக்கு தரை மார்க்கமாய் எடுத்துச் செல்லப்பட்டன. யோனா தர்ஷீசுக்குப் போக கப்பல் ஏறினதும் இங்கே தான். தொற்காள் என்ற பெண் வாழ்ந்ததும் இந்த ஊரில் தான் (அப்.9:36-43). பேதுரு தங்கியிருந்த சீமோன் வீடும் இங்கேதான் இருக்கிறது. பேதுரு தரிசனம் கண்டதும் இங்கேதான் (அப்.10:5-16). சரி, புறப்படு வோம் எருசலேம் நோக்கி, இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் எருசலேம் போய் சேர்ந்துவிடலாம். வழி நெடுக பழத்தோட்டங்களை காணலாம். எருசேலம் வந்து விட்டோம்.

எருசலேம்

இஸ்ரவேல் நாட்டில் அதிகமாய் மதிக்கப்படும் பட்டணம் இது. கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரமுள்ளது. மத்திய தரைக்கடலுக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர். சவக்கடலுக்கு மேற்கே 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கி.மு.15ம் நூற்றாண் டில் எழுதப்பட்ட எகிப்திய, பாபிலோனிய ஏடுகளில் ‘உருசலிமு’ என்று இது அழைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமின் காலத்தில் ‘சாலேம்’ என்று அழைக்கப் பட்டது (ஆதி.14:18). ‘சாலேம்’ என்றால் ‘சமாதானம்’ என்று பொருள். எபூசியர் இதில் வாழ்ந்ததால் எபூசு என்றும் அழைக்கப்பட்டது.

கி.மு.1000ல் தாவீது தன் தலைநகரை எபிரோனி லிருந்து எருசலேமுக்கு மாற்றினான். பின்பு மோரியா மலைக்கு உடன்படிக்கைப் பெட்டியை கொண்டு வந்தான். சாலொமோன் இங்கே தேவாலயம் கட்டி னான். கி.பி.70ல் இது ரோம பேரரசன் மகன் தீத்துவால் அழிக்கப்பட்டது. இன்றுள்ள எருசலேமில் பழைய எருசலேம், புதிய எருசலேம் என்ற இரண்டு பகுதிகள் உள்ளன. ஜனத்தொகை சுமார் 5,44,000.

பழைய எருசலேம் முதலாவது பழைய எருசலேமுக்குள் போவோம். பழைய எருசலேமை சுற்றியுள்ள இந்த கோட்டை சுவர் 4018 மீட்டர் நீளம். இதன் உயரம் சுமார் 12 மீட்டர், கனம் 2.5 மீட்டர். தற்போதுள்ள இந்தக் கோட்டைச் சுவர் சுலைமான் என்ற முஸ்லீம் அரசனால் (Suleiman the Magnificient) கி.பி.1542ல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டைச் சுவற்றை சுற்றிலும் 34 கோபுரங் களும், 8 வாசல்களும் உள்ளன.

  1. தமஸ்கு வாசல் (தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் பாதை ஆரம் பமான இடம்).
  2. புது வாசல்
  3. யோப்பா வாசல்

(யோப்பா பட்டணத்திற்கு செல்லும் பாதை ஆரம் பமாகும் இடம்)

  1. சீயோன் வாசல்

(சீயோன் மலைக்குச் செல்லும் வழி)

  1. குப்பை மேட்டு வாசல்

(புலம்பல் சுவர் பக்கமுள்ளது)

  1. தங்க வாசல்

எசேக்கியேல் 44:1-4ல் இது கிழக்கு வாசல் என்றும், அதிபதிக்கே உரியது என்றும் கூறப்பட்டுள் ளது. இந்த வாசல் பல நூற்றாண்டுகளாக அடைக்கப் பட்டுள்ளது. மேசியா வரும்போது இந்த வாசல் வழியாகத்தான் தேவாலயத்திற்கு செல்வார் என நம்புகின்றனர்.

  1. சிங்க வாசல், ஆட்டு வாசல், ஸ்தேவான் வாசல் 

இந்த வாசல் முன்பு தான் ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டான். சிங்கங்களின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளதால் சிங்க வாசல் என்றும் அழைக்கப்படு கிறது. 1967ல் தேவாலய பகுதியை பிடிக்க இஸ்ரவேல் சேனை இந்த வாசல் வழியாகத் தான் நுழைந்தது. அதுவரையிலும் தேவாலய பகுதி முஸ்லீம்கள் வசம் இருந்தது.

  1. ஏரோது வாசல்

இந்த வாசல்களை கடந்து பழைய எருசலே முக்குள் போனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த சரித்திர காலத்திற்கு வந்துவிட்டதாக உணர்வோம். பாதைகளும், கட்டிடங்களும் மிக பழமையானவை. சில இடங்களில் புதுப்பித்து கட்டப் பட்ட கட்டடங்களையும் பார்க்கலாம்.

தேவாலயம்

ஸ்தேவான் வாசல் வழியாக பழைய எருசலே முக்குள் நுழைகிறோம். இடது புறம் இருப்பது தேவாலயம் இருந்த இடம். மோரியா மலை என்பதும் இதுவே. இந்த இடத்தில் இருப்பது Dome of the Rock என்ற பள்ளிவாசல். இதற்குள் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட்ட பாறை இருக்கிறது. இந்த மசூதி கி.பி.691ல் அப்துல்மாலிக் என்ற அரசனால் கட்டப் பட்டது. முகம்மது நபி இந்த பாறையிலிருந்து மேலே சென்றதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர்.

சற்று மேற்கே செல்வோம். இதுதான் புலம்பலின் சுவர் (Western or Wailing Wall). தேவாலய பகுதியின் மேற்கு சுவர் ஏரோது ராஜாவினால் கட்டப்பட்டது. கி.பி. 70ல் தேவாலயம் இடிக்கப்பட்டபோது இந்த சுவர் இடிக்கப்படவில்லை. யூதர்கள் இந்த இடத்தில் நின்று “மேசியாவே வாரும்” என்று தினமும் புலம்புகின் றனர். இந்த சுவர் 200 அடி நீளம், 60 அடி உயர முள்ளது. ஒவ்வொரு கல்லும் 16 1/2 அடி நீளம், 13 அடி அகலம் உள்ளது.

பெதஸ்தா குளம்

ஸ்தேவான் வாசலுக்குள் நுழைந்தவுடன் வலது புறத்தில் நாம் பார்ப்பது பெதஸ்தா குளம். இந்த இடத்தில்தான் இயேசு 38 வருடம் வியாதியாயிருந்த வனை குணமாக்கினார் (யோ.5:2-15), இன்று இது ஒரு கிணறு அளவிலேயே இருக்கிறதை பார்க்கிறீர்கள். 

பழைய எருசலேமை விட்டு வெளியே வருகி றோம். கிழக்கே காண்பது ஒலிவ மலை. பழைய எருசலேமுக்கும் ஒலிவ மலைக்கும் இடையில் கிதரோன் பள்ளத்தாக்கை பார்க்கிறோம். சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.

ஒலிவ மலை

இயேசு அநேக தடவை இந்த ஒலிவ மலையிலி ருந்து தமது சீஷருக்கு போதனை செய்தார். இந்த மலையின் அடிவாரத்தில் தான் கெத்சமனே தோட்டம் இருக்கிறது. இயேசுவும் சீஷரும் அடிக்கடி ஜெபிக்க சென்ற இடம். (நான் பல தடவை இந்த இடத்திற்கு சென்று ஜெபித்ததுண்டு). இன்றும் ஒலிவ மரங்களை இங்கு காண்கிறோம். ஒலிவ மலையிலிருந்துதான் இயேசு பரமேறிச் சென்றார். அதற்கான ஞாபக சின்னத்தின் பெயர்: Dome of the Ascension. இயேசு பரமண்டல ஜெபத்தைக் கற்றுக்கொடுத்த இடமும் இந்த மலையில் இருக்கிறது. அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் பெயர் Church of the Pater Noster.

இதில் பரமண்டல ஜெபம் 60 மொழிகளில் கல்வெட்டால் எழுதப்பட்டுள்ளது. ஒலிவ மலை அடிவாரத்தில் யூதர்களுடைய கல்லறை தோட்டம் இருக்கிறது. மேசியா ஒலிவ மலையில் இறங்கி ‘தங்க வாசல்’ வழியாக தேவாலயத்திற்கு போவார். அப்போது மரித்த பரிசுத்தவான்கள் உயிர்த்து அவருடன் செல்வார்கள். எனவே ஒலிவ மலையிலுள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டால் உயிர்த் தெழுதலில் முதல் பங்கு கிடைக்கும் என்று யூதர்கள் நம்புகின்றனர். ஒலிவ மலை அடிவாரத்தில் புதைக்க அதிக பணம் கொடுக்க வேண்டும்.

இப்போது ஒலிவ மலையிலிருந்து மேற்கே பார்க் கிறோம். தேவாலயம் இருந்த இடமும் பழைய எருசலேமும் எதிரே அழகாக தெரிகிறது. ஒலிவ மலையிலிருந்து இறங்கி பழைய எருசலேம் மதில் பக்கமாக தெற்கு நோக்கி நடக்கிறோம். இதோ இது குப்பை மேட்டு வாசல் (நம்ம ஊர் வழக்கப்படி குப்பைகளை இங்கே போட்டு விடாதீர்கள்). இதைக் கடந்து மதில் ஓரமாகவே மேற்கு நோக்கி நடக்கி றோம். இதோ எதிரே தெரிவதுதான் சீயோன் வாசல், பழைய எருசலேமிலிருந்து இந்த வாசல் வழியாக வெளியே வந்தால் சீயோனுக்கு போகலாம். எதிரே தெரியும் உயரமான பகுதிதான் சீயோன்.

சீயோன்

நாங்கள் மட்டும்தான் சீயோனுக்கு போவோம் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உங்கள் எல்லோரையும் சீயோனுக்கு அழைத்துச் செல்கிறேன். மகிழ்ச்சி தானே! இந்த சீயோனில் தான் தாவீதின் கல்லறை இருக்கிறது. இயேசு தம் சீஷரோடு பஸ்கா ஆசரித்த மேல்மாடி இங்கேதான் இருக்கிறது. பெந்தெகொஸ்தே என்னும் நாளில் சீஷர்கள் கூடி ஜெபித்தபோது பரிசுத்தாவி ஊற்றப்பட்ட மேல்மாடியும் இதுதான் என்று கூறப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டு சுமார் 2000 வருடம் ஆகிவிட்டதே! நீங்கள் இன்னும் அபிஷேகம் பெறாமலே இஸ்ரவேல் நாட்டை பார்க்க வந்துவிட்டீர் களே! இந்த இடத்தில் கொஞ்சம் ஜெபிப்பீர்களா! ஆவியானவர் உங்கள் மேல் இறங்கட்டும். மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று கர்த்தர் முன்னுரைத்தாரே! இந்த அனுபவம் ஒரு குறிப்பிட்ட சபைக்கோ, சபைப் பிரிவுக்கோ மட்டும் உரியதல்ல. விசுவாசிகள் எல்லோருக்கும் உரியது. இப்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

சீலோவாம் குளம் சீயோனிலிருந்து தென்கிழக்கில் தெரிகிறதே அதுதான் சீலோவாம் குளம். இயேசு குருடனைப் பார்த்து சீலோவாம் குளத்தில் கழுவு என்றார். கீழ்ப்படிந்து சென்ற அவன் பார்வையடைந்தவனாய் திரும்பி வந்தான். மெய் தேவன் யார் என்று தெரியாமல் ஆவிக்குரிய குருடராயிருக்கிற மக்கள் கண்களை இயேசு திறக்க ஜெபிப்போம்.

கல்வாரி

தமஸ்கு வாசலிலிருந்து வடக்கு நோக்கி நடக்கி றோம். எதிரே எருசலேம் பஸ் நிலையம் இருக்கிறது. பஸ் நிலையத்திற்கு மேலே பாருங்கள். ஒரு சிறிய குன்று தெரிகிறது. மண்டை ஓடு போல தோற்ற மளிக்கும் இது தான் கொல்கதா அல்லது கல்வாரி என்று அழைக்கப்படுவது. நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது இந்த இடம்தான் என்று கூறப்படுகிறது. இதற்கு அருகாமை யிலுள்ள இந்த குகை போன்ற கல்லறை தான் இயேசு கிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப் படுகிறது.

இந்த கல்லறைக்குள்ளே எழுதியிருப்பது “He is not here, he is risen” “அவர் இங்கே இல்லை, உயிர்த்தெழுந்தார்”. புகழ்பெற்ற அநேகருடைய கல்லறைகளை உாடுகளில் பார்த்திருக் கிறேன். ஆனால் இயேசுகிறிஸ்துவின் கல்லறை ஒன்றே திறந்த கல்லறையாக தனிச்சிறப்புடன் விளங்கு கிறது. இந்தக் கல்லறைக்குள் போய் பல தடவை இயேசுவே நீர் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறீர் என்பதை எங்கள் மக்களுக்கு நிரூபிக்க உதவி செய்யும் என்று ஜெபித்திருக்கிறேன்

எருசலேமையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் பார்த்தோம். இப்போது எருசலேமிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்வோம். வேதாகம நாட்களில் இஸ்ரவேல் நாடு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டி ருந்தது. எருசலேமை சுற்றியுள்ள தென்பகுதி யூதேயா, மத்திய பகுதி சமாரியா, வட பகுதி கலிலேயா என்று அழைக்கப்பட்டது. இன்றும் இதே பிரிவுகளை காணலாம்.

பெத்லகேம்

எருசலேமிலிருந்து தெற்கே 6 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இயேசு பிறந்த ஊர். ஆதி.35:19ல் முதன் முதலாக இந்த ஊர் குறிக்கப்பட்டுள்ளது. எருசேலமி லிருந்து பெத்லகேமுக்கு போகும் வழியில், பெத்லகே முக்கு சற்று முன்னால் ராகேலின் கல்லறை இருக்கிறது. யாக்கோபின் மனைவியாகிய ராகேல் இந்த இடத்தில் வந்தபோது பென்யமீனைப் பெற்று மரித்தாள். யாக்கோபு இந்த இடத்தில் ஒரு தூணை நிறுத்தினான். இன்றும் அந்த கல்லறையை காணலாம் (ஆதி.35 16-20).

‘பெத்லகேம்’ என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்று பொருள். நகோமி, ரூத், போவாஸ் வாழ்ந்த ஊர் (ரூத் 1:19-22). தாவீதின் மூதாதையர் வாழ்ந்த ஊர். இங்கே தான் சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினான் (1 சாமு.16:4, 11-13). இயேசு பிறந்த இடத்தில் ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் கி.பி. 330ல் ஒரு ஆலயத்தைக் கட்டினான். உலகத்திலேயே மிகப்பழமையான ஆலயம் இதுவே. இந்த ஆலயத் திற்கு பெயர்: The Church of the Nativity. பெத்ல கேமுக்கு சற்று கிழக்கே இருப்பது மேய்ப்பரின் வயல். இங்கேதான் தேவதூதன் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பருக்கு அறிவித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *