You are currently viewing வேதாகம நாடுகள் : இஸ்ரேல் பாகம் 3

வேதாகம நாடுகள் : இஸ்ரேல் பாகம் 3

வேதாகம நாடுகள் 3

வேதாகம நாடுகள் பாகம் 3

எபிரோன்

பெத்லகேமை கடந்து தெற்கே பயணம் செய் வோம். எருசலேமிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் எபிரோன் இருக்கிறது (பெத்லகேமி லிருந்து 24 கி.மீ). இதற்கு கீரியாத் அர்பா என்ற பெயரும் இருந்தது. காலேபுக்கு எபிரோன் சுதந்தர மாக கொடுக்கப்பட்டது (யோசுவா 14:12-15). மம்ரேயின் சமபூமி என்பதும் இதுதான் (ஆதி.13:18). ஆபிரகாம் காலத்திற்கு பின்தான் இது ஒரு பெரிய ஊராயிற்று. இது கி.மு.1700ல் கட்டப்பட்டது (எண்.13:22).

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் வாழ்ந்த ஊர் இதுதான். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. யோசேப்பு மற்றும் இவர்களுடைய மனைவிகளின் கல்லறையாகிய மக்பேலா குகை இங்கேதான் இருக்கிறது (ஆதி.23:1-20). தாவீது எபிரோனை தலைநகராகக் கொண்டு 7 1/2 ஆண்டுகள் ஆட்சி செய்தான் (2 சாமு.2:11; 1 இராஜா.2:11). இன்றுள்ள மக்கள் தொகை 40,000 பேர். அரேபியர் அதிகம் குடியிருக்கின்றனர்.

பெயெர்செபா

எபிரோனிலிருந்து தென் மேற்கில் சுமார் 30 கி.மீ. தூரத்தில் இந்த இடம் இருக்கிறது. இது அன்று போல் இன்றும் வனாந்தரமாகவேயிருக்கிறது. ‘பெயெர் செபா’ என்ற வார்த்தையின் பொருள் ‘பிரமாணத்தின் ஊற்று’ (ஆதி.21:31). இஸ்ரவேல் நாட்டின் தெற்கு எல்லை என்று இதைக் கூறலாம். மறுபடியும் நாம் எருசலேமுக்குத் திரும்புவோம்.

பெத்தானியா

எருசலேமின் கிழக்குப் பகுதியில் ஒலிவ மலை இருக்கிறது. ஒலிவ மலையின் அடிவாரத்தில் எருசலே மிலிருந்து எரிகோவுக்கு போகும் பாதை இருக்கிறது. எருசேலமிலிருந்து இந்த பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் பெத்தானியா வந்து சேருவோம். மார்த் தாள், மரியாள், லாசரு வாழ்ந்த ஊர் இது. இந்த ஊருக்கு இப்போது ‘எல் அசரியா’ என்று பெயர். இங்கே லாசருவை இயேசு உயிரோடு எழுப்பின கல்லறை இருக்கிறது.

எரிகோ

பெத்தானியாவை கடந்து கிழக்கு நோக்கிச் செல்லும்போது யூதேயாவின் வனாந்தரத்திற்கு வருகி றோம். வழியில் நல்ல சமாரியன் சத்திரம் என்ற ஓர் இடம் வருகிறது. அதைக் கடந்து எரிகோ வந்து சேரு கிறோம். எருசலேமிலிருந்து கிழக்கில் சுமார் 27 கி.மீ. தூரத்தில் எரிகோ இருக்கிறது. எரிகோ உலகத்தி லேயே மிக பழமையான ஊர்களில் ஒன்று. ராகாப் வாழ்ந்த ஊர். யோசுவாவின் தலைமையில் இஸ்ர வேலர் யோர்தானைக் கடந்துவந்து இந்த பட்டணத்தை 7 நாட்களில் 13 தடவை சுற்றி வந்தபோது இதன் அலங்கங்கள் இடிந்து விழுந்தன (யோசுவா 6:10-21) இங்கே அரேபியர் அதிகம் குடியிருக்கின்றனர்.

எரிகோவிற்கு மேற்கே இயேசு சோதிக்கப்பட்ட மலை இருக்கிறது. இதன் பெயர் Mount of Tempta- tion. எரிகோவிற்கு அருகில்தான் இயேசு ஞானஸ் நானம் பெற்ற இடம் இருக்கிறது. யோர்தான் நதி சவக்கடலில் கலக்கும் இடமும் இதன் அருகில்தான் இருக்கிறது.

பெத்தேல்

எரிகோவிலிருந்து வட மேற்கில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் பெத்தேல் இருக்கிறது (எருசலேமிலிருந்து வடக்கே 18 கி.மீ. தூரம்) இந்த இடத்தில்தான் யாக்கோபு தேவ தரிசனம் கண்டான் (ஆதி.28:11-22). ‘பெத்தேல் ‘ என்றால் தேவனுடைய வீடு’ என்று பொருள். ஆபிரகாம் இங்கே பலிபீடம் கட்டி கர்த்தரை தொழுது கொண்டான் (ஆதி.12:8).

சீகேம்

பெத்தேலிலிருந்து வடக்கே சுமார் 30 கி.மீ. தூரம் சென்றால் சீகேம் வந்து சேருவோம் (எருசலேமிலி ருந்து வடக்கே சுமார் 40 கி.மீ. தூரம்) ஆபிரகாம் முதல் பலிபீடத்தைக் கட்டின இடம் (12:6,7). யோசேப்பு தன் சகோதரரைத் தேடிச் சென்ற இடம் (ஆதி.37:13,14). தற்போது இங்கே அதிகமாக அரேபியர் குடியிருக் கின்றனர். இந்த ஊருக்கு தற்கால பெயர் நெப்லஸ்.

சீகார்

சீகேமிற்கு கிழக்கே சீகார் இருக்கிறது. இதன் நவீன கால பெயர் அஸ்கார். யாக்கோபின் கிணறு இங்கேதான் இருக்கிறது. இயேசு சமாரிய பெண்ணை சந்தித்த இடம் இதுதான் (யோ.4:3-42). சீகார் ஏபால் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

ஏபால், கெரிசீம் மலைகள் இந்த பகுதியில்தான் இருக்கின்றன (உபா.11:29).

நாயீன்

சமாரியாவைக் கடந்து வடக்கு நோக்கி பிரயாணம் செய்யும்போது மெகிதோ சமபூமிக்கு வருகிறோம். அதைக் கடந்து செல்லும்போது நாயீன் என்ற ஊருக்கு வருகிறோம். இயேசு மரித்த வாலிபனை உயிரோடு எழுப்பின ஊர் இதுதான் (லூக்.7:11-18). இதற்கு நாயிம் என்பது நவீன கால பெயர்.

நாசரேத்து

நாயீன் ஊரைக் கடந்தவுடன் நாசரேத் வருகிறது. நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தனது 30 வயது வரையிலும் வாழ்ந்த ஊர் (மத்.2:19-23; லூக்.2:51,52).

கானாவூர்

நாசரேத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 6 கி.மீ. தூரத்தில் இருப்பது கானாவூர். இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய தமது முதலாம் அற்புதத்தை செய்த ஊர் (யோ 2:1-11). இப்போது இந்த ஊர் பெயர் கபர்கன்னா.

கலிலேயா கடல்

கானாவூரிலிருந்து கீழ்திசை நோக்கி சென்றால் சுமார் 15 கி.மீ. தூரத்திலிருப்பது கலிலேயா கடல். இது 22 கி.மீ. நீளம், 11 கி.மீ. அகலமுடையது. சுற்றளவு சுமார் 50 கி.மீ. கடல் மட்டத்திற்கு கீழே 700 அடி தாழ்ந்துள்ளது. ஆழம் சுமார் 200 அடி. கடல் என்று அழைக்கப்பட்டாலும் நல்ல குடிதண்ணீர் நிரம்பியது. இயேசுகிறிஸ்துவின் ஊழியம் இந்த வட்டாரத்தில் அதிகம் நடைபெற்றது இதற்கு பல பெயர்கள் உண்டு.

1.கின்னரேத் கடல் (எண்.34:1)

  1. கெனேசரேத்து கடல் (லூக்.5:1)
  2. திபேரியாக் கடல் (யோ.6:1) 
  3. கலிலேயா கடல் (மத்.4:18)

5.தற்போதைய பெயர் கின்னரெட் ஏரி.

ஏரோது அந்திபாஸ் கி.பி.21ல் கலிலேயாக் கடலில் மேற்குக் கரையில் திபேரியா என்ற பட்ட ணத்தைக் கட்டினான். அதனால் திபேரியாக் கடல் என்ற பெயர் வந்தது. டைபீரியஸ் என்ற இந்த பட்டணத்திற்கு வடக்கே மூன்று மைல் தூரத்தில் இருந்தது மக்தலா (மத்.15:39). மகதலேனா மரியாளின் சொந்த ஊர் இதுவே (லூக்.8:2). கடலை ஒட்டி வடக்கே சென்றால் மேற்கே தெரியும் சிறிய குன்றுதான் இயேசு மலைப்பிரசங்கம் செய்த இடம்.

கப்பர்நகூம்

கலிலேயாக் கடலில் வடக்கு எல்லையில் அமைந் திருப்பது கப்பர்நகூம். இயேசு இந்த பட்டணத்திற்கு அடிக்கடி வந்து தங்கினார். அநேக அற்புதங்கள் செய்தார். இது இயேசுவின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது (மத்.9:1).

ஆனாலும் இந்த பட்டணத்தார் மனந்திரும்பாத படியினால், “வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர் நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்” என்று இயேசு கூறினார் (மத்.11: 23,24). அதன்படியே இன்று வரை இங்கு யாருமே குடியிருக்கவில்லை. சிதைந்த நிலையிலுள்ள பல வீடுகளையும், ஜெப ஆலயத் தையும் காணலாம். ஐந்து அப்பம் இரண்டு மீனைக் கொண்டு இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இடம் இதன் அருகில் இருக்கிறது. பேதுருவின் வீடு இங்கே இருந்தது.

யோர்தான் நதி எர்மோன் மலையடிவாரத்திலிருந்து உற்பத்தி யாகி கலிலேயாக் கடலில் கலந்து, கலிலேயாக் கடலி லிருந்து தெற்கு நோக்கி பாய்ந்து சவக்கடலில் சேர் கிறது. கலிலேயாக் கடலிலிருந்து சவக்கடல் வரை நேர்கோடு போட்டால் 104 கி.மீ. தான் வரும். ஆனால் வளைந்து வளைந்து செல்வதால் இதன் நீளம் 320 கி.மீ. கடல் மட்டத்திற்கு கீழே 1300 அடி தாழ்வாக ஓடுகிறது. 100 முதல் 200 அடி அகலமுள்ள சிறிய நதி தான். ஆனாலும் அதிகமாக அறியப்பட்ட நதி, அநேக அற்புதங்களை, சரித்திர நிகழ்ச்சிகளை கண்ட நதி. இயேசு ஞானஸ்நானம் பெற்ற நதி. இஸ்ரவேல் நாட்டின் கீழ் எல்லையாக இது அமைந்துள்ளது. இந்த நதிக்கு கிழக்கே ஜோர்டான் நாடு இருக்கிறது.

சவக் கடல் யோர்தான் நதியைத் தொடர்ந்து தெற்கு நோக்கி சென்றால் சவக்கடலுக்கு வந்து சேர்கிறோம். இது சுமார் 80 கி.மீ.நீளம், 16 கி.மீ. அகலமுள்ளது. யோர்தான் நதி இதில் பாய்ந்தாலும் தண்ணீர் எங்கும் வெளியே போவதில்லை. எனவே சவக்கடல் என அழைக்கப் படுகிறது. கடல் மட்டத்திற்கு கீழே 1300 அடி தாழ்வாக உள்ளது. உலகத்திலேயே தாழ்வான பகுதி இதுதான்.

வெப்பத்தினால் நீர் ஆவியாகிறதை தவிர வேறு தண்ணீர் போக்கு இல்லாததால் கடல் தண்ணீரைப் போல பத்து மடங்கு உப்புச் சத்துள்ளது. இந்த சவக் கடலின் தண்ணீர் கடலின் தண்ணீரைப் போல ஐந்து மடங்கு அடர்த்தியுள்ளது. யாரும் இதில் மூழ்க முடியாது. சோடியம், குளோரின், சல்பர், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாது உப்புகள் இதில் அதிகம் கிடைப்பதால் இஸ்ரவேல் நாட்டிற்கு மிகுந்த லாபகரமான கடலாக இருக்கிறது.

தற்போதுள்ள இஸ்ரவேல் நாட்டைப் பற்றிய சில புள்ளி விபரங்கள் 2009 :

மொத்த பரப்பளவு : 28251 ச.கிலோ மீட்டர்

மக்கள் தொகை : 54,38,000

யூதர்கள் : 81.8%

(சுமார் 102 தேசங்களிலிருந்து குடியேறியுள்ளனர். 1990-92 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4,50,000 யூதர்கள் குடியேறினர். இவர்களில் பெரும்பான்மை யோர் ரஷ்யாவிலிருந்து வந்தனர்).

முஸ்லீம்கள் : 14.5%

கிறிஸ்தவர்கள் : 2.34%

கல்வி கற்றவர்கள் : 92%

தேசிய மொழி : எபிரேயம், அரபி

தலைநகர் : எருசலேம் 

மக்கள் தொகை : 5,44,000

வருட வருமானம் : சுமார் 10,000 டாலர் (4,00,000 ரூபாய்).

இஸ்ரவேல் நாட்டை ஓரளவு சுற்றிப் பார்த்து விட்டோம். இப்போது சவக்கடல் பக்கம் வந்துவிட் டோம். எனவே இதோ கிழக்கே தெரிகிறதே இந்த ஜோர்டான் நாடு. அதையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.

Leave a Reply