வேதாகம நாடுகள் III . எகிப்து
இஸ்ரவேல் நாட்டின் தென் மேற்கின் எல்லை யாய் அமைந்திருப்பது எகிப்து. டெல்அவிவிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே எகிப்தின் தலை நகரான கெய்ரோவிற்கு விமானம்மூலம் வந்துவிடலாம். நமது பிளைட் எக்ளிசியா 777 ஆயத்தமாயிருக்கிறது. புறப்படுவோம்.
எகிப்தின் சரித்திரத்தைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோமா? உங்களில் சிலருக்கு சரித்திரம் என்ற உடனேயே எரிச்சல் வரலாம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். எகிப்தின் தலைநகரான கெய்ரோ போய் சேர அரை மணி நேரம் இருக்கிறது. அதற்குள் சரித்திர பாடத்தை முடித்துவிடுவோம். எகிப்து சுமார் 10 லட்சம் கி.மீ. பரப்பளவுள்ளது.96% பாலைவனமே. 3% நைல் நதி பகுதி இருக்கிறது. இதில்தான் மக்கள் வசிக்கின்றனர். மொத்த ஜனத் தொகை சுமார் 6,04,70,000. ஒரு லட்சம் மக்கள் தொகையுள்ள நகரங்கள் 13
கி.மு.3000-2700 – ஆதி ராஜ்யம் (Old Kingdom) முதல் இரண்டு ஆதி அரச பரம்பரையினரும் (Dynasty 1,2) மெம்பிஸ் என்ற பட்டணத்தை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். வேதாகம நாட் களில் இதற்கு நோப் என்று பெயர் (ஏசா.19:13; எரே.2:16; 46:14.19: எசே.30:13,16).
கி.மு.2700-2200 – பழைய ராஜ்ய ஆட்சிக்காலம் இந்த காலத்தில் 3-6 அரச வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இந்த காலத்தில்தான் உலகப் புகழ் வாய்ந்த பிரமிடுகள் கட்டப்பட்டன.
கி.மு.2200-2000 (7-10 அரச வம்சத்தினர் ஆட்சி)
கி.மு.2000-1800 மத்திய ராஜ்யம் (Middle Kingdom)
11.12 அரச வம்சத்தினரின் ஆட்சி. இந்தக் காலத்தில் தலைநகரம் ‘தேபீஸ்’க்கு மாற்றப்பட்டது. வேதாகம நாட்களில் இதற்கு ‘நோ’ என்று பெயர் (எரே. 46:25; எசேக்.30:14-16; நாகூம் 3:8). கல்லறைகளெல் லாம் சிற்ப வேலைகளால் அலங்கரிக்கப்பட்ட காலம் இதுவே.
கி.மு.1800-1600, 13-17 அரச பரம்பரையினரின் ஆட்சி காலம் (1674-1567)ல் ஹைக்சோஸ் ஆகிய அரசர்கள் ஆண்டனர்.
கி.மு.1600-1100 – புதிய ராஜ்யம் (New Kingdom) 18-20 அரச பரம்பரையினர் ஆட்சி செய்த காலம் எகிப்து மிக வல்லமையோடும், செழிப்போடும் இருந்த காலம் இதுதான். இந்த கால கட்டத்தில்தான் இஸ்ர வேலர் எகிப்திலிருந்ததும் எகிப்தைவிட்டு யாத்திரை செய்ததும்.
21-30 அரச பரம்பரையினரின் ஆட்சி 22ம் பரம்பரை ஆட்சி காலத்தில் சீஷாக் என்ற அரசன் ஆட்சி செய்தான் (1 இரா.11:40: 14:25-27; 2 நாளா.12:2-12; 26ம் பரம்பரை ஆட்சி காலத்தில் பார்வோன் நேகோ அரசாண்டான். 2 இரா. 23:28-30; 33-35; 2 நாளா.35:20-24; 36:4; எரே.46:2).
கி.மு.525-332 பெர்சியர் ஆட்சி. கி.மு.300-30 தாலமியர் ஆட்சி காலம்.
கி.மு.332-323 மகா அலக்ஸாண்டர் ஆட்சி.
கி.மு.304-51 1-12 பரம்பரை தாலமி ஆட்சி.
கி.மு.51-30 – கிளியோபட்ரா ஆட்சி.
கி.மு.30-கி.பி.392- ரோமர் (பைஸான்டைன் ஆட்சி)
கி.பி.600 – எகிப்தை அரேபியர் வெற்றி காணல்.
கி.பி.1250-1517 – மாமலூக் ஆட்சி காலம்.
கி.பி.1517-1800 – ஆட்டமென் – துருக்கியர் ஆட்சி.
கி.பி.1805 – முகமது அலி கவர்னராக
நியமிக்கப்படல்.
இதற்குப்பின்பு எகிப்து நவீன காலத்திற்குள் வருகிறது.
கி.பி.1882-1936 – பிரிட்டிஷார் எகிப்தை ஆட்சி செய்தல்.
கி.பி.1952 – பாரூக் அரசனின் ஆட்சி.
இத்துடன் அரச பரம்பரையினர் ஆட்சி முடிவிற்கு வந்தது.
கி.பி.1953 – எகிப்து சுதந்திரமடைதல்.
கி.பி.1954 – ஐக்கிய அரபு குடியரசின்
ஜனாபதியாக காமல் அப்துல் நாசர் பதவியேற்றல்.
கி.பி.1956 – சூயஸ் கால்வாய் தேசிய மயமாக்கப்பட்டது.
மிஸ்ராயீம்
பண்டைகால எகிப்து மிஸ்ராயீம் என்று அழைக்கப்பட்டது (ஆதி.10:6,13; 1 நாளா.1:8-11). ஆதி காலம் முதல், எகிப்து பல்வேறு தீர்க்கதரிசிகளாலும் குறிப்பிடப்பட்ட நாடு என்பது பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது நன்கு புரியும்.
ஆபிரகாம்
பஞ்சம் வந்தபோது ஆபிரகாம் எகிப்திற்கு சென்ற தாகப் பார்க்கிறோம். (ஆதி.12:10-20)
யோசேப்பு
ஆதி.37:36 – யோசேப்பு போத்திபார் வீட்டில் அடிமையாக விற்கப்பட்டான் (ஆதி.39:1-20). அவன் அங்கே சிறையில் அடைக்கப்பட்டதையும் பின்பு எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்தப்பட்டதையும் ஆதி.41-45 அதிகாரங்களில் காண்கிறோம்.
யாக்கோபும் அவன் குடும்பமும் எகிப்தில் போய் தங்கினர். 17 ஆண்டுகள் அவன் நைல் நதியின் டெல்டா பகுதியில் (கோசேன்) வாழ்ந்தான்.
மோசே
2ம் ராம்சே ஆட்சி காலத்தில் மோசே எகிப்தில் பிறந்தான். பின்பு இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி நடத்திச் சென்றான்.
இயேசு
தேவதூதனால் எச்சரிக்கப்பட்டு யோசேப்பும் மரியாளும் இயேசுவாகிய குழந்தையை எகிப்திற்கு எடுத்துச்சென்று பாதுகாத்தனர் (மத்.2:13-15; ஓசியா 11:1). இவர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இடம் பழைய கெய்ரோவிலிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு ஆலயம் 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கெய்ரோ வந்துவிட்டோம். சரித்திரம் முடிந்தது. இப்போது எகிப்து நாட்டை சுற்றிப் பார்க்கப் போகி றோம்.
மெம்பிஸ்
கெய்ரோவிற்கு தெற்கே 22கி.மீ. தூரத்திலிருக் கிறது. இதுதான் பண்டைகால எகிப்தின் தலைநகரம் இருந்த இடம் (ஏசா.19:13; எரே.2:16), இப்போது இது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்யும் இடமாக இருக்கிறது.
சக்காரா
ஜோசர் என்ற அரசனின் கல்லறை. கி.மு.2700க்கு முன் 37 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரமிட் கோபுரம். இதற்குள்ளே சுமார் 20 அரசர்கள், நூற்றுக் கணக்கான கனவான்களின் உடல்கள் புதைக்கப் பட்டுள்ளன. அநேக பிரமிட்டுகள் இந்த வட்டாரத்திலி ருந்தாலும், இந்த பிரமிட் கோபுரமே உலகிலேயே, வெட்டின கல்லால் கட்டப்பட்ட, பழைய கட்டிடம் என கூறப்படுகிறது.
கீசா, பிரமிட்டு
உலக அதிசயங்களில் ஒன்று என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது இது. எல்லா பிரமிட்டுகளிலும் பெரியது. இது 455 அடி உயரம். ஒவ்வொரு பக்கமும் 750 அடி நீளமுள்ளது. ஒவ்வொரு கல்லும் 3 முதல் 10 டன் எடையுள்ள 2,50,000 கற்களால் கட்டப் பட்டுள்ளது. இந்த பிரமிட்டின் அடிப்பகுதி 13 முதல் 14 ஏக்கர் பரப்பளவுள்ளது. இது சீயோப்ஸ் என்ற அரசனின் கல்லறை.
தேபீஸ் – ராஜாக்களின் பள்ளத்தாக்கு கெய்ரோவிலிருந்து சுமார் 700 கி.மீ. தூரத்தி லுள்ளது இந்த தேபீஸ். எகிப்தின் இரண்டாம் தலைநகர் இருந்த இடம் வேதத்தில் ‘நோ’ என்று அழைக்கப் பட்டுள்ளது (எரே.46:25; எசே.30:14-16) (நாம் ‘எஸ்’ ‘Yes’ என்று சொல்வோமா!) இது பள்ளத்தாக்காக இருக்கிறது. இந்த இடத்திற்கு தற்போதுள்ள பெயர் லக்ஸர். இங்கே ஆதிகால அரசர்களின் கல்லறைகள் 64 உண்டு. கோடிக்கணக்கான மதிப்புள்ள புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கெய்ரோ மியூசியத்தில் வைத்து உள்ளனர்.
கர்நாக்
ஆதிகால உலக அதிசயங்களில் மற்றொன்று இங்கே இருக்கிறது. மூன்று கோவில்கள், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்தன. இதில் ஒரு பெரிய மண்டபம் உண்டு. இதில் 134 தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 75 அடி உயரம், 12 அடி சுற்றளவு உள்ளது. இந்த ஒவ்வொரு தூணின் உச்சி யிலும் 100 பேர் தாராளமாக நிற்கக்கூடிய அளவிற்கு இடமுண்டு என்று கூறப்படுகிறது. (நீங்கள் யாரும் மேலே ஏற முயற்சிக்கவேண்டாம். உங்களை இந்தியா விற்கு பத்திரமாகக் கொண்டு போய் சேர்க்க வேண் டியது என் பொறுப்பு). இந்த தூண்கள் மிகச் சிறந்த சித்திர வேலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை பாருங்கள்.
கெய்ரோ
எகிப்தின் தலைநகரம் கெய்ரோ. மக்கள் தொகை சுமார் ஒரு கோடி. பழைய கெய்ரோவில் கட்டப் பட்டுள்ள ஆலயத்திற்குள்ளிருக்கும் இடத்தில்தான் யோசேப்பும், மரியாளும் இயேசுவாகிய குழந்தையைப் பாதுகாத்தனர்.
அலெக்ஸாண்ட்ரியா
கெய்ரோவிற்கு வடமேற்கிலுள்ளது. மக்கள் தொகை சுமார் 32,00,000. ஆதி நாட்களில் இங்கே புகழ் வாய்ந்த நூலகம் இருந்தது. எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ள பழைய ஏற்பாடு முதன்முதலில் இந்தப் பட்டணத்திலிருந்துதான் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நாட்டின் வளத்திற்கு பெரிதும் உதவுவது நைல் நதி தான். மக்கள் இந்த நதிப் பகுதியில்தான் வாழ்கின்றனர். இந்த நாட்டின் 96% பூமி வெறும் பாலைவனமே.
எகிப்தைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்:
கல்வி கற்றோர் : 45%,
தேசிய மொழி : அரபி,
முஸ்லீம்கள் : 85.4%,
கிறிஸ்தவர்கள் : 14.2%,
வருட வருமானம் : 630 டாலர் (சுமார் ரூ.25,200).