You are currently viewing வேதாகம நாடுகள் : II . ஜோர்டான்

வேதாகம நாடுகள் : II . ஜோர்டான்

ஜோர்டான்

வேதாகம நாடுகள் : II . ஜோர்டான்

இஸ்ரவேல் நாட்டின் கிழக்கு எல்லையாக அமைந்திருப்பது யோர்தான் நதி, சவக்கடல். அதன் கிழக்கே அமைந்திருப்பதுதான் ஜோர்டான் நாடு. கி.பி.1946ல் இந்த நாடு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்று தனி நாடானது. அதற்கு முன்பு கி.பி.1918 வரை துருக்கிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. 1950ல் சமாரியா, யூதேயாவின் பகுதியாக விரிவாக்கப்பட்டது.

ஜோர்டான் நாட்டின் எல்லைகள் வடக்கே சிரியா, வட கிழக்கில் ஈராக், கிழக்கிலும் தெற்கிலும் சவூதி அரேபியா, மேற்கே இஸ்ரவேல் நாடு. இந்த சிறிய நாட்டின் மொத்த பரப்பளவு 85,000 சதுர கிலோ மீட்டர். 1967ல் நடந்த 6 நாள் யுத்தத்தில் யோர்தான் நதிக்கு மேற்கே இருந்த பகுதியை இஸ்ரவேல் பிடித்துக் கொண்டது. இந்த நாட்டின் தென்பகுதியில் அக்குபா என்ற துறைமுக பட்டணம் இருக்கிறது. இது அக்குபா வளைகுடாவிலிருக்கிறது. இந்த நாட்டின் ஒரே துறைமுகம் இதுதான்.

இந்த நாட்டின் ஜனத்தொகை 38,13,000 பேர். தலைநகர் அம்மான். இந்த நாட்டின் பணம் தினார். வேதாகம நாட்களில் கூறப்பட்டுள்ள ஏதோம், மோவாப், அம்மோன், கீலேயாத் என்ற பகுதிகள் இங்கேதான் இருந்தன. இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணம் செய்துவந்தபோது ஏதோம் மக்கள் தங்கள் நாட்டு வழியே இஸ்ரவேலர் செல்லக்கூடாது என தடுத்தனர் (எண்.20:14-21; 21:4). ஏதோமியர் ஏசாவின் சந்ததியினர். மோவாபியரும் இஸ்ரவேலரை தடுத்தனர். எனவே இஸ்ரவேலர் சுற்றி வளைந்து சென்றனர் (உபா.2:9-11; நியா.11:17,18)

மோவாப், அம்மோன், லோத்துவிற்கு அவன் பெண் பிள்ளைகள்மூலம் பிறந்த முறைகேடான மக்கள் (ஆதி.19:30-38) பஞ்சம் உண்டானபோது நகோமி தன் கணவனுடன் சென்ற இடம் இந்த மோவாப்தான் (ரூத் 1:1-4). யோசுவா, அம்மோன், பாசானின் அரசனான ஓக் போன்றவர்களை முறியடித்து இஸ்ரவேலரை நடத்திச் சென்றான் (எண்.21:21-35; உபா.2:2; 3-11; நியா.11:19-23). தேசம் பங்கிடப்பட்டபோது இந்தப் பகுதிகள் ரூபன், காத், மனாசேயின் பாதி கோத்திரம் ஆகிய 2 1/2 கோத்திரங்களுக்கு கொடுக்கப்பட்டது (உபா.3:12-20; யோசு.1:12-18; 22).

அம்மான்

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அம்மோன் புத்திரரின் தலைநகரமாக இருந்ததும் இதுவே. இங்கே அரசர் களாயிருந்த நாகாஸ், ஆனூன் என்பவர்களைப்பற்றி 2 சாமு.10ல் பார்க்கிறோம். இதன் மக்கள் தொகை 12,00,000.

அக்குபா

அக்குபா வளைகுடா பகுதியில் அமைந்துள்ள பட்டணம். செங்கடலின் ஒரு பகுதியே இந்த அக்குபா வளைகுடா. சேபாவின் ராணி இந்த துறைமுகம் வழி யாகவே சாலொமோனை சந்திக்க வந்தாள் என்று கூறப்படுகிறது (1 இரா.10ம் அதிகாரம்).

ஜெராஷ்

யோர்தான் நதிக்கு கிழக்கேயுள்ள பட்டணங்களில் ஒன்று ஜெராஷ். இதுவே புதிய ஏற்பாட்டு காலத்தில் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்ட பட்டணங்களில் ஒன்று. இயேசுவைப்பற்றி இப்பட்டணத்தார் நன்கு அறிந்திருந்தனர் (மத்.4:25; மாற்கு 7:31). இந்த ஊருக்கு சில மைல் தெற்கே யாப்போக்கு நதி இருக்கிறது. யாக்கோபு இரவு முழுவதும் போராடி ஜெபித்த இடம் இதுவே (ஆதி.32:22-31). எமோரியரின் வடக்கு எல்லையாக யாப்போக்கு நதி இருந்ததாக காண்கி றோம் (எண்.21:21-24).

நேபோ மலை

அம்மானுக்கு தென்மேற்கில் சுமார் 25 கி.மீ. தூரத்திலிருக்கிறது. சவக்கடலுக்கு கிழக்கே இருந்தது மோவாபிய நாடு. மோசே இந்த நேபோ மலையிலி ருந்துதான் கானான் நாட்டைப் பார்த்தான். பின்பு மரித்து இதன் பள்ளத்தாக்கில் கர்த்தரால் அடக்கம் பன்னப்பட்டான் (எண் 3:47: 2um.32:49-52: 34:1-8). பிஸ்கா மலையின் கொடுமுடிதான் நேபோ சிகரம். இந்த மலையிலிருந்து இஸ்ரவேல் நாட்டை தெளிவாக பார்க்க முடியும்.

பெனுவேல்

யோர்தான் நதிக்கு கிழக்கே, யாப்போக்கு நதிக்கு வடக்கே பெனியேல் இருந்தது. யாக்கோபு தேவனை முகமுகமாய் சந்தித்த இடம் (ஆதி.32:21-31). யெரோ பெயாம் இதே இடத்தில் பெனுவேல் என்ற அரணிப் பான ஊரைக் கட்டினான் (1 இரா.12:25).

பெட்ரா

அம்மானிலிருந்து தெற்கே சுமார் 270 கி.மீ. தூரத்தில் இந்த பட்டணம் இருக்கிறது. சவக்கடலின் தென் எல்லைக்கும் அக்குபா வளைகுடாவிற்கும் மத்தியில் இருப்பது பெட்ரா. பெட்ராவிற்கு சற்று வடக்கில் இருக்கும் இடத்திற்கு ‘அயின்முசா’ என்று பெயர். மோசே கன்மலையை அடித்தபோது தண்ணீர் புறப்பட்டு வந்த இடம் இது என கூறப்படுகிறது (எண்.20:8-13). இன்றும் இந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏதோமின் மலைகளால் சூழப்பட்ட ஊர் இந்த பெட்ரா. இந்த மலைகளில் ஒன்று ஓர் என்ற மலை. இதில்தான் ஆரோன் மரித்து அடக்கம் பண்ணப்பட் டான் (எண்.20:23-29). ஏசா இந்த வட்டாரத்தில் குடியிருந்து பட்டணங்களைக் கட்டினான். ஏசாயா 16:1ல் கூறப்பட்டுள்ள ஏதோமின் பட்டணம் சேலா என்பதுதான் பெட்ரா என்று கூறப்படுகிறது.

இந்த பட்டணத்தில் அழகிய பள்ளத்தாக்குகள் உள்ளன. இருபுறமும் 200 முதல் 300 அடி உயரமுள்ள சிவப்பு மலை வெடிப்புகளுக்கு மத்தியில் பாதைகள் செல்கின்றன. இந்த பாதை சில இடத்தில் 8 அடி அகலம் மட்டுமே உள்ளது. சுமார் 3 கி.மீ. நீளமுள்ள இந்த பள்ளத்தாக்கு மிக அழகானது.

கி.பி.106ல் ரோமர்கள் இந்த பட்டணத்தை பிடித்து பல கட்டிடங்களை கட்டினர். பல நூற்றாண்டு களாக இந்த பட்டணம் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது.கி.பி.1812ல் ஜாண் பர்கார்ட் என்பவர் இந்த இடத்திற்கு சென்று இதைக்குறித்து வெளி உலகிற்கு எழுதினார்.

சுக்கோத்

யோர்தான் நதிக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தூரத் திலும், யாப்போக்கு நதிக்கு வடக்கே சுமார் 2 கி.மீ. தூரத்திலும் ஒரு மேடான பகுதியில் அமைந்துள்ள ஊர் சுக்கோத். பதான் அராமிலிருந்து வந்து தன் சகோதரன் ஏசாவுடன் சமாதானமான பின்பு யாக்கோபு இங்கே ஒரு வீட்டைக் கட்டி குடியிருந்தான் (ஆதி. 33:17; யோசு.13:27). தன் மிருகங்களுக்கு கொட்டாரங் களைப் போட்டான். ‘சுக்கோத்’ என்றால் ‘கொட்டாரம்’ என்று பொருள். சங்.60:6; 108:7ல் கூறப்பட்டுள்ள இடம் இதுவே. ஆனால் இன்னொரு சுக்கோத் இருந்தது. இஸ்ரவேலர் (யாத்.12:37; 13:20; எண்.33:5). அந்த சுக்கோத் வேறு. இந்த சுக்கோத் வேறு. போதுமான அளவிற்கு உங்களை குழப்பிவிட்டேன் என எண்ணு கிறேன்.

ஜோர்டானைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்: 

கல்வி கற்றோர் : 80%,

தேசிய மொழி : அரபி,

முஸ்லீம் : 94%

கிறிஸ்தவர் : 4.67%,

வருட வருமானம் : சுமார் 1,300 டாலர் (ரூ.52,000).

Leave a Reply