வேதாகம நாடுகள் V . லெபனோன்
லெபனோன் வேதத்தில் லீபனோன் என்று அழைக்கப்படுகிறது. கி.பி.1981க்கு பின்புதான் தற்போதுள்ள நாடு லெபனோன் என்று அழைக்கப் பட்டது. முதலாவது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்தது. கி.பி.1941ல் சுதந்திரம் பெற்றது.
லெபனோனைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்: கிழக்கேயும் வடக்கேயும் சிரியா, மேற்கே மத்திய தரைக்கடல், தெற்கே இஸ்ரேல் இதன் எல்லையாக அமைந்துள்ளன.
பரப்பளவு : சுமார் 10,400 ச.கி.மீட்டர்.
மக்கள் தொகை சுமார் 32 லட்சம் பேர்.
அரேபியர் : 86%
முஸ்லீம் : 53%
கிறிஸ்தவர் : 38.7%
தேசிய மொழி : அரபி
கல்வி கற்றோர் : 70%
வருட வருமானம் : 800 டாலர் (சுமார் ரூ.32,000)
தலைநகரம் : பெய்ரூட்
மக்கள் தொகை : 14,18,000.
இரண்டு மலைத்தொடர்களுக்கும் மத்தியிலுள்ள அழகான பள்ளத்தாக்கு நாடு லெபனோன். சுமார் 120 கி.மீ. நீளமும் 16 கி.மீ அகலமும் உள்ளது. இந்த பள்ளத்தாக்கு பெக்கா என்று அழைக்கப்படுகிறது.
உபா.1:7; 11:24ல் லீபனோன் என்று முதலாவதாக வேதத்தில் வருகிறது. லீபனோன் ஆசீர்வாதத்திற்கு அடையாளமாக பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது (சங். 72:16; 104:16-18; உன்.4:15; ஏசா.2:13; 35:2, 60:13; ஓசியா 14:5).எருசலேமின் தேவாலயத்திற்கு தேவை யான கேதுரு மரங்கள் இங்கிருந்து கொண்டுவரப் பட்டது (1 இரா.5:8-11). இந்த கேதுரு மரங்களை இன்றும் லெபனோன் மலைகளில் காண முடியும். புதிய ஏற்பாட்டு காலத்தில் லெபனோன், பெனிக்கே (பொனீ சியா) என்று அழைக்கப்பட்டது (அப்.11:19; 15:3, 21:2).
கேபால் பைப்லோஸ்
தற்போதுள்ள இதன் பெயர் பைப்லோஸ். இது லெபனோனின் தலைநகரமான பெய்ரூட்டிற்கு வடக்கே 40 கி.மீ தூரத்தில் மத்திய தரைக்கடல் கரை ஓரத்தில் அமைந்துள்ளது. வேதாகம நாட்களில் இது கேபால் என்று அழைக்கப்பட்டது. சங்.83:6, யோசுவா 13:5ல் கிப்லியர் என்று இந்த ஊரார் என்று அழைக்கப் பட்டனர். 1 இரா.5:18ல் கிபலி ஊரார் என்று வருகிறது. இவர்கள் எருசலேம் தேவாலய வேலைக்குத் தேவை யான மரங்களை சேகரிப்பதில் உதவி செய்தனர். இந்த பட்டணத்தின் மதில்கள் கி.மு.2900ல் கட்டப்பட்டவை.
ஆதிகாலத்தில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட பப்பாய்ரஸ் (PAPYRUS) என்ற நாணற்செடியிலிருந்து ஆயத்தமாக்கப்பட்ட ஓலை இந்த ஊரில்தான் தயாரிக்கப்பட்டது. இந்த ஊரின் பெயர் பைப்லோஸ் (BYBLOS) என்று பார்த்தோம்.
எனவே இந்த ஊரிலிருந்து தயாரிக்கப்பட்ட பப்பாய்ரஸ் ஓலையில் எழுதப்பட்ட நூல்களை, இந்த ஊரின் பெயரைக் கொண்டு ‘பிப்லியா’ (BIBLIA) என்று கிரேக்கர் அழைத்தனர். வேதாகமமும் இந்த முறையில் எழுதப்பட்ட போது அதற்கு ‘பிப்லியா’ (BIBLIA) என்று பெயர் சூட்டினர். இந்த வார்த்தையிலிருந்துதான் ஆங்கில வார்த்தையான ‘பைபிள்’ (BIBLE) என்பது வந்தது. இதன் பொருள் “புத்தகங்களின் புத்தகம்’ (BOOK OF BOOKS) என்பதாகும். “எல்லா புத்தகங் களுக்கும் மேலானது” என்பது பொருள். ஆரம்ப நாட்களில் அநேக வேதாகம பிரதிகள் இந்த ஊரில் கையினால் எழுதப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டது. எனவே இந்த ஊர் “புத்தகத்தின் ஊர்” என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று ரூ.50 கொடுத்து பைபிள் வாங்க ஆயிரம் யோசனை செய்கிறீர்கள். 66 புத்தகங்கள் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தை ஏராளமாய் வாங்கி தாராள மாய் வாசியுங்கள், பிறருக்குக் கொடுங்கள். என்ன அசந்து போய் நின்றுவிட்டீர்கள்! நாம் போக வேண்டிய தூரம் வெகுதூரம், புறப்படுங்கள்.
சீதோன்
பெய்ரூட்டிலிருந்து தெற்கே சுமார் 48 கி.மீ தூரத்தி லிருப்பது சீதோன். கானானியரின் வடக்கு எல்லை யாய் சீதோன் இருந்தது (ஆதி.10:19). யோசுவா இதை பெரிய சீதோன் என்று அழைக்கிறார் (யோசு.11:8). சீதோனியர் இஸ்ரவேலரை ஒடுக்கினர் (நியா.10:12).
சீயோனின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலை, ஆகாப் விவாகம் செய்ததினிமித்தம் விக்கிர ஆராதனை இஸ்ரவேலுக்குள் நுழைந்தது (1 இரா.16:31-33). இந்த பட்டணத்தின் பாவத்தை இயேசு கண்டித்துப் பேசினார் (மத்.11:21-24). கி.மு.351ல் பெர்சியர் இந்த பட்டணத்தை முற்றுகையிட்டனர். இந்த பட்டண மக்கள் சரணடைவதற்குப் பதில், பட்டணத் திற்கு தாங்களே தீ வைத்து 40,000 பேர் மாண்டனர். இயேசுகிறிஸ்துவும் தம் பயணத்தில் இதன் எல்லை வரை வந்தார் (மத்.15:21; மாற்.7:24). சீரோபேனிக்கியா பெண்ணின் மகளை அசுத்த ஆவியிலிருந்து விடுவித் தார். ஏரோதுவிடம் இந்த பட்டணத்தார் வந்தனர் (அப். 12:20). பவுல் ரோமாபுரிக்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டபோது சீதோனிலிருந்து தன் நண்பர் களை சந்தித்தான் (அப்.27:3).
தீரு
சீதோனுக்கு தெற்கே சுமார் 48 கி.மீ. தூரத்தில் உகுதி கடற்கரை பட்டணமாக அமைந்திருந்தது இந்த தீரு (யோசு.19:29). இந்தப் பட்டணத்தின் ஒரு பகுதி கடலுக்குள்ளும் தீவாக கட்டப்பட்டிருந்தது. நேபுகாத் நேச்சார் என்ற பாபிலோன் அரசன் இதைப் பிடிக்க 13 ஆண்டுகாலம் முற்றுகையிட்டான். கடற்கரையிலி ருந்த பகுதியை பிடித்தான். கடலுக்குள்ளிலிருந்த பகுதியை அவனால் பிடிக்க முடியவில்லை. இதற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் பல உண்டு (எசேக். 26:1: 28:19; ஏசாயா அதிகாரம் 23: எசே.26:4). இந்த பட்டணத்திலிருந்த ராஜா எருசலேம் தேவாலய பணிக்கு ஏராளமான மரங்களைக் கொடுத்தான் (1இரா.5:1-12). வெண்கல வேலைக்கு இந்த பட்டணத்து நிபுணர்கள் சாலமோன் அரசனுக்கு உதவினர் (1 இரா.7:13,14). இயேசுகிறிஸ்துவின் போதனைகளைக் கேட்க இந்த வட்டார மக்கள் வந்தனர் (மாற்கு 3:8; லூக்.6:17), பவுலின் நண்பர்கள் பலர் இந்தப் பட்டணத்திலிருந்தனர் (அப்.21:2-6).
சாரிபாத்
(சரப்தா) இன்று இதன் பெயர் சாரபெண்ட். தீருவுக்கும் சீதோனுக்கும் மத்தியில், மத்திய தரைக்கடல் கரையில் இருந்தது இந்த ஊர். பஞ்ச காலத்தில் போஷிக்கப்படும்படி கர்த்தர் எலியாவை இந்த ஊரிலிருந்த விதவையின் வீட்டிற்கு அனுப்பினார் (1 இரா.17:8-16; லூக்.4:25,26). மாவும், எண்ணெயும் குறையாத அற்புதம் இங்கே நடந்தது. விதவையின் மகன் மரித்துப் போனபோது எலியா அவனை உயிருடன் எழுப்பினதும் இந்த ஊரில்தான் (1 இரா. 17:17-24). ஒபதியா 20ம் வசனத்தில் இந்த ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.
லெபனோன் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து எக்ளிசியா பிளைட் 777மூலம் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு போவோமா? பக்கமான நாடுதான். ஆனாலும் உங்களை சில நாட்களாய் பஸ்ஸிலேயே பயணம் செய்ய வைத்துவிட்டோம். எனவே இப்போது விமான பயணத்தின்மூலம் ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திற்கு வருகிறோம். பாக்தாத்திற்கு பார்த்துதான் போக வேண்டியிருக்கிறது. காரணம் சதாம் உசேன் இருக்கிறாரே.