You are currently viewing வேதாகம நாடுகள் VI . ஈராக்

வேதாகம நாடுகள் VI . ஈராக்

ஈராக்

வேதாகம நாடுகள் VI . ஈராக்

முதலாம் உலக மகாயுத்தத்திற்குப்பின் அதுவரை துருக்கியிடமிருந்த ஈராக், பிரிட்டிஷ் ஆட்சிக்குள் வந்தது. கி.பி.1932ல் சுதந்திரமடைந்தது. டைக்ரீஸ், ஐப்பிராத்து ஆகிய இரண்டு நதிகளுக்கும் இடைப் பட்ட பூமிதான் பண்டைய நாட்களில் மெசப்பத்தோ மியா என்று அழைக்கப்பட்டது. ‘மெசப்பத்தோமியா’ என்ற வார்த்தையின் பொருளே ‘நதிகளுக்கு இடையே யுள்ளது’ என்பதுதான் (ஆதி.24:10; அப்.7:2). இதுவே இப்போது ஈராக் என்று அழைக்கப்படுகிறது.

ஈராக்கைப் பற்றிய சில புள்ளி விபரங்கள்: வடக்கே துருக்கி நாடு, கிழக்கே ஈரான். தெற்கே குவைத், பெர்சியன் வளைகுடா, தென்மேற்கே சவுதி அரேபியா, மேற்கே சிரியா.

மக்கள் தொகை : 2,24,11,000

அரேபியர் : 74.4%

கல்வி கற்றோர் : 60%

 தேசிய மொழி : அரபி, குர்டிஷ்

முஸ்லீம் : 95.4%

கிறிஸ்தவர் : 3.3%

வருட வருமானம் : 10,000 டாலர்

(சுமார் ரூபாய் 4 லட்சம்).

பரப்பளவு : 4,35,000 ச.கி.மீ.

தலைநகர் : பாக்தாத்

மக்கள்தொகை:  சுமார் 47 லட்சம்.

இந்த நகரம் சுமார் 1,200 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய கலிபாக்கள்மூலம் கட்டப்பட்டது. எனவே வேதாகம நாட்களில் இந்த பட்டணம் உருவாக வில்லை. மற்ற முக்கிய பட்டணங்கள் பாஸ்ரா, மோசுல், சுலைமானியா.

டைகிரீஸ்

இந்த நதி சுமார் 1,500 மைல் நீளமுள்ளது. இந்த நதி அர்மோனியாவில் உற்பத்தியாகி துருக்கி வழியாக தென்மேற்கில் ஓடி பெர்சிய வளைகுடாவிற்கு 100 மைல் தூரத்தில் ஐப்பிராத்து நதியுடன் இணைகிறது. இந்த டைக்ரீஸ் நதிதான், வேதத்தில் இதக்கெல் என்று அழைக்கப்படுகிறது (ஆதி.2:14; தானி.10:4).

ஐபிராத்து நதி

துருக்கியின் கிழக்குப் பகுதியிலே, கருங்கடலுக்கு அருகில் உற்பத்தியாகி, சிரியா வழியாக மெசப்பத் தோமியா சமவெளி வழியாக ஓடி, டைக்ரீஸுடன் இணைந்து பெர்சிய வளைகுடாவில் கடலில் கலக் கிறது. ஐபிராத்து நதியின் நீளம் சுமார் 2800 மைல். இதில் 1600 கி.மீ. தூரத்திற்கு கப்பல் போகும் அளவிற்கு ஆளமுள்ளது. ஐபிராத்து நதி வேதத்தில் முதன் முதலாக ஆதி.2:14ல் கூறப்பட்டுள்ளது. யாத்.23:31; உபா.11:24ல் நதி என்றும், ஆதி.15:18; உபா.1:7ல் பெரிய நதி என்றும் அழைக்கப்படுகிறது. ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் கர்த்தர் வாக்குப்பண்ணின தேசத்தின் வடகிழக்கு எல்லையாக இது கூறப் பட்டுள்ளது. தாவீது, சாலொமோன் நாட்களில் கொஞ்ச காலம் இந்தப் பகுதி இஸ்ரவேலின் ஆளுகைக்குள் இருந்தது (2 சாமு.8:3; 10:14; 1 இரா.4:24). யோயாக்கீன் யூதாவை ஆண்டபோது பாபிலோன், எகிப்து ஆகிய ராஜ்யங்களைப் பிரிக்கும் எல்லையாக ஐபிராத்து குறிக்கப்பட்டுள்ளது.

ஊர்

ஆபிரகாம் வாழ்ந்த ஊர் என்ற கல்தேயர் பட்டணம் தற்போதுள்ள ஈராக்கில் இருந்தது. இப்போதுள்ள பாக்தாத்திலிருந்து தென்கிழக்கில் சுமார் 400 கி.மீ. தூரத்திலிருந்தது. ஐபிராத்து நதிக் கரையில் இது கட்டப்பட்டிருந்தது (ஆதி.11:28,31; 15:17; நெகே.9:7; அப்.7:4). பண்டைய நாட்களில் சுமேர் என்ற நாட்டின் தலைநகராக ஊர் இருந்தது. வேதத்தில் சிநெயார் தேசம் என்று அழைக்கப்படுவது சரித்தி ரத்தில் சுமேர் என்று கூறப்படுகிறது (ஆதி. 11:2) பெர்சிய வளைகுடாவிற்கும் பாக்தாத் பட்டணத்திற்கும் இடைப்பட்ட பூமி சுமேர் என்று அழைக்கப்பட்டது.

ஊர் என்ற பட்டணம் இருந்த இடத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அநேக கல்வெட்டு களை கண்டுபிடித்துள்ளனர். மனித சரித்திரத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மக்களின் தலைநகராய் இது விளங்கிற்று. கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே ரதங்கள் இருந்திருக்கின்றன. 60 என்ற எண்ணை மையமாக கொண்ட கணக்கீடு இங்கேதான் ஆரம்பமாயிற்று. உதாரணமாக 60 வினாடி ஒரு நிமிடம் 60 நிமிடம் ஒரு மணி. ஒரு வட்டத்தை 360 டிகிரியாக பிரிப்பது என்பதெல்லாம் இந்த ஊரில்தான் ஆரம்ப மாயிற்று. ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ‘ஊர் நாமு’ என்பவன் தான் 4000 ஆண்டு களுக்கு முன்பே உலகத்திலேயே மிகப் பழமையான வாழ்க்கை முறை சட்டத்திட்டங்களை ஏற்படுத்தினான் என கல்வெட்டுகள் கூறுகின்றன. ஹம்முரபி சட்ட திட்ட முறைகள் இதிலிருந்து கடன் வாங்கப்பட்டவை கள்தான்.சுமார் கி.மு.1750ல் ஹம்முரபி சுமேர் நாட்டை தன் வசப்படுத்தினான். பாபேல் கோபுரத்திற்கு சமமான கோபுரம் ஒன்று ஊர் பட்டணத்திலும் இருந்தது. இந்த ஹம்முரபி என்பவன் ஊருக்கு வடக்கே இருந்த பாபிலோனிலிருந்து வந்தவன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாபிலோன்

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திற்கு தெற்கே சுமார் 80 கி.மீ. தூரத்திலிருக்கிறது. முதன்முதலாக பாபிலோன் ஆதி.11:1-6 வசனங்களில் வருகிறது. இங்கேதான் பாபேல் கோபுரம் கட்டப்பட்டது. சூரிய வெளிச்சத்தில் உலர வைத்த செங்கலால் பாபேல் கோபுரம் கட்டப்பட்டது. மரமோ கல்லோ பயன்படுத்தப் படவில்லை. ஏராளமான படிக்கட்டுகளுடைய கட்டிட மாயிருந்தது. கோபுர வடிவிலுள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களின் சிதைவுகள் பல இன்னும் இந்தப் பகுதிகளில் காணக்கூடியதாயிருக்கின்றன. படிக்கட்டு களடங்கிய கட்டிடங்களாயிருக்கின்றன. பொதுவாக இந்தக் கட்டிடங்களில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. இதன் உச்சியில் பாபிலோனிய தேவர்களின் சிலையும் கோயிலும் இருக்கின்றன. சில கட்டிடங்களின் உயரத்தில் 8 பகுதிகளும் இருக்கின்றன. முதன் முதலாக நிம்ரோத் என்பவன் பாபிலோனை கட்டி னான் (ஆதி.10:8-10). கி.மு.1830 முதல் பாபிலோன் பிரபல்யமடைய ஆரம்பித்தது. ஆனால் நேபுகாத் நேச்சார் அரசாண்ட காலத்தில் தான் இதன் புகழ் உலகமெங்கும் பரவிற்று. நேபுகாத் நேச்சார் அரசாண்ட காலம் கி.மு.605-562. நேபுகாத் நேச்சார் காலத்தில் பாபிலோன் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக் கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கு தோட்டம் கட்டப்பட்டது.

பாபிலோன் பட்டணத்தைச் சுற்றி ஒவ்வொரு பக்கமும் சுமார் 15 மைல் நீளத்திற்கு கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. கோட்டைச் சுவர்களின் உயரம் 250 முதல் 300 அடி உயரமாயும், சுமார் 80 அடி அகலமுள்ளதுமாயிருந்தன. உள்மதில் வெளிமதில் என்று இரண்டு கோட்டைச் சுவர்கள் பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருந்தன. ஐபிராத்து நதி பட்டணத்தின் மத்தியில் ஓடிற்று. கோட்டைச் சுவரில் ஒவ்வொரு திசையிலும் பிரம்மாண்டமான வாசல்கள் 25 இருந்தது. மேற்கில் 25, கிழக்கில் 25, தெற்கில் 25, வடக்கில் 25 ஆக மொத்தம் 100 வாசல்கள் இருந்தது.

நேபுகாத்நேச்சாரைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். இவன்தான் சாலொமோன் கட்டின எருசலேம் தேவாலயத்தை இடித்தான். கி.பி.539ல் மேதிய பெர்சிய அரசர்கள் பாபிலோனை மேற்கொண் டார்கள் (தானி. 5:30,31). பாபிலோனின் அழிவைக் குறித்து பல தீர்க்கத்தரிசனங்கள் உள்ளன (ஏசா.13: 19-22,47; எரே.50:51). வியாதியாயிருந்த மகா அலெக் சாண்டர் கி.மு.323ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி பாபிலோனில் மரித்தார்.

நினிவே

பாபிலோனுக்கு வடக்கே சுமார் 320 கி.மீ. தூரத்தில் டைக்ரீஸ் (இதெக்கல்) நதியின் கரையில் நினிவே கட்டப்பட்டிருந்தது. அசீரியாவின் தலைநகராக இருந்தது நினிவே. யோனா தீர்க்கதரிசி இந்தப் பட்டணத்திற்கு அனுப்பப்பட்டான். மகா நகரம் என்று இது குறிப்பிடப்பட்டுள்ளது (யோனா 1:2; 3:2,3; 4:11). அந்நாட்களிலேயே இந்தப் பட்டணத்தில் 1,20,000 பேர் இருந்தனர் (யோனா 4:11).

கி.மு.612ல் நினிவே மேதிய பாபிலோனிய சேனை களால் அழிக்கப்பட்டது. நினிவேயின் அழிவைக் குறித்து நாகூம் தீர்க்கதரிசனம் உரைத்தான் (நாகூம் 1:8; 2:8). அசீரிய ராஜாக்கள் சமாரியா, எருசலேமுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள் (2இராஜா. 17:3-6; 23; 18:13-19; 37; 2 நாளா.32:1-21; ஏசா.36:37).

Leave a Reply