You are currently viewing வேதாகம நாடுகள் : X . இத்தாலி

வேதாகம நாடுகள் : X . இத்தாலி

இத்தாலி

வேதாகம நாடுகள் : X . இத்தாலி

இத்தாலி தேசம் வேதாகம நிகழ்ச்சிகளுடன் மிக நெருக்கமான நாடு என கூறலாம். குறிப்பாக புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ரோமை தலைநகரமாகக் கொண்டு விளங்கிய இத்தாலி நாடு அரசியலோடும் பின்பு கிறிஸ்து மார்க்கத்தோடும் அதிக தொடர்புடை யதாயிருந்தது. “சகல பாதைகளும் ரோமுக்கு நேராய் போகின்றன” என்ற பழமொழிக்கேற்ப ரோமாபுரி முக்கிய நகரமாக திகழ்ந்தது. ரோமாபுரி உலகை ஆட்சி செய்தது என்று கூறலாம்.

இத்தாலி நாட்டைப் பற்றி சில குறிப்புகள் மத்திய தரைக்கடலை அடுத்துள்ள ஒரு தீபகற்ப நாடு இது. வடக்கே இதன் எல்லையாய் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

  • இதன் பரப்பளவு : 3,01,000 ச.கி.மீ.
  • மக்கள் தொகை : சுமார் 5.7 கோடி
  • கல்வி கற்றோர் : 97%
  • அரசாங்க மொழி : இத்தாலி 
  • தலைநகர் : ரோம் 
  • மக்கள் தொகை : சுமார் 33 லட்சம் 
  • முக்கிய நகரங்கள்: 
  • மிலான், நேப்பிள்ஸ், டுரின், ஜெனோவா, பிளாரன்ஸ்.
  • மார்க்கம்:  1984 வரை ரோமன் கத்தோலிக்க மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிருந்தது. தற்போது எல்லா மார்க்கங்களும் வளர சட்டம் அனுமதிக்கிறது.
  • கிறிஸ்தவம் :  80% (இதில் ரோமன் கத்தோலிக்கர் 78.4%)

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பாலஸ்தீனா ரோமர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. பிலாத்து ரோமப் பேரரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்தான். ‘ராயன்’ என்பது ரோம பேரரசனைக் குறிக்கும் பட்டம் (இது போலவே எகிப்தின் ராஜாக்கள் ‘பார்வோன்’ என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்டனர்).

அகஸ்துராயன் காலத்தில்தான் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்ற கட்டளை ரோமாபுரியிலி ருந்து வெளிப்பட்டது. இதன்படி யோசேப்பும். மரியாளும் பெத்லகேமுக்குப் போனார்கள் (லூக். 2:1-5). திபேரியு ராயன் காலத்தில் யோவான் ஸ்நானனுக்கு கர்த்தருடைய வார்த்தை வெளிப்பட்டது. இந்த நாட்களில்தான் இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தார் (லூக்.3:1,2,23).

பவுல் ஊழியம் செய்த அநேக இடங்கள் ரோமர் ஆட்சிக்கு கீழ்ப்பட்டிருந்த இடங்களே என்பது குறிப் பிடத்தக்கது.

ரோம்

இந்த நகரம் கி.மு.75ல் உருவாக ஆரம்பித்தது என்பது பாரம்பரிய நம்பிக்கை. இதன் முதல் அரசன் ரோமுலஸ். மத்திய தரைக்கடலிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் ரோமாபுரி அமைந்துள்ளது. டைபர் என்ற நதிக்கரையில் ரோம் கட்டப்பட்டுள்ளது. இது சிறிய குன்றுகளின்மேல் கட்டப்பட்ட நகரம். ஆரம்ப நாட்களில் பாலடின் என்ற சிறிய குன்றின்மேல் கட்டப் பட்ட சிற்றூராக இருந்தது. பின்பு அருகிலுள்ள குன்று களிலும் மக்கள் குடியேறினர். பிந்திய நாட்களில் மிகப்பெரிய நகரமாயிற்று. இந்த ஏழுகுன்றுகளின் பெயர்களும் பின்வருமாறு:

1.பாலடின், 2.கேபிடலின், 3.குரினல், 4.கேலியன், 5.அவண்டியர், 6.எஸ்குலின், 7.விமினல்.

பவுலின் நாட்களில் ரோமபுரி உலகின் சிறந்த நகரமாக விளங்கிற்று. அந்நாட்களிலேயே இதன் மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் அதிகமாயிருந்தது. இங்கே இருந்த சபைக்கு ரோமருக்கு எழுதின நிருபம் அனுப்பப்பட்டது. பவுல் ராயனிடம் அனுப்பப்பட்ட பின் இங்கே கொண்டு வரப்பட்டு ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அப்போஸ்தல நடபடிகளின் கடைசி பகுதியில் வாசிக்கின்றோம். பவுல் இரத்தச் சாட்சியாய் மரித்ததும் இந்த பட்டணத்தில் தான்.

ரோமப் பேரரசனாக வந்த நீரோ, ரோமாபுரியை தீ வைத்து கொளுத்திவிட்டு அந்தப் பழியை கிறிஸ்த வர்கள் மேலே சுமத்தினான். இதனால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவனாக இருப்பது சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட காலத் திற்குப்பின் கான்ஸ்டான்டைன் என்ற ரோமப் பேரரசன் கிறிஸ்தவனான பின்பு கி.பி.313ல் இயற்றிய சட்டத் தின்படி இந்த உபத்திரவம் முடிவுக்கு வந்தது.

அப்பியுரம்

பவுல் கப்பலை விட்டிறங்கி ரோமாபுரிக்குள் வந்த பாதையில் இந்த அப்பியுபுரம் என்ற இடம் இருக்கிறது (அப்.28:15).

மார்ட்டின் சிறைச்சாலை ரோமாபுரியிலுள்ள இந்த இடத்தில் பவுல் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

திரு. பவுலின் ஆலயம்

இந்த இடத்தில்தான் பவுல் தலை வெட்டப்பட்டு மரித்ததாக நம்பப்படுகிறது. அந்த நாட்களில் இது ரோமாபுரிக்கு வெளியே இருந்தது.

பரிசுத்த படிகள்

எருசலேமில் இயேசு நின்று நியாயம் விசாரிக்கப் பட்ட படிகளை இங்கே கொண்டுவந்து வைத்துள்ளனர். இந்தப் படிகளில் முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தபோதுதான் “விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்” என்ற சத்தியத்தைப் பற்றிய வெளிப் பாட்டை மார்ட்டின் லூத்தர் பெற்றார்.

கலோசியம்

கிறிஸ்தவர்களை உயிரோடு பசியுள்ள மிருகங்களுக்கு இரையாக்கிய இடம் இது. திறந்த வெளி அரங்கமாக சுமார் 50,000 பேர் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வசதியுடையதாக கட்டப்பட்டிருந்தது. இதன் சிதைந்த பகுதிகளை இன்றும் காணலாம்.

வத்திக்கான் நகரம் ரோமர் கத்தோலிக்க சபையின் தலைமை ஸ்தானம். இதன் பரப்பளவு : 0.43 ச.கி.மீட்டர். சுமார் 110 ஏக்கர். இது ரோமாபுரியின் மையத்திலுள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகை 755 பேர்.

இந்த நகரம் மிகச் சிறியதாக இருந்தாலும் தனி நாடு அந்தஸ்துள்ளது. உலகிலுள்ள சுமார் 90 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக உள்ள போப் இதில் வாசம் பண்ணுகிறார். உலகிலேயே மிகச் சிறிய நாடு இது. இதற்கென்று தனி தபால் தலை, தபால் ஆபீஸ் உண்டு. தனியான ரயில்வே ஸ்டேஷன், செய்தித்தாள், வானொலி நிலையம், சிறைச்சாலை உண்டு. இதற்கென தனி பாஸ்போர்ட் உண்டு.

Leave a Reply