வேதாகம நாடுகள் : XI . சைப்ரஸ்
சைப்ரஸ் குடியரசு
அப்போஸ்தலனாகிய பவுல் அந்தியோகியா சபையிலிருந்து தனது முதலாம் மிஷனரி பயணத்தை ஆரம்பித்தபோது சந்தித்த முதல் நாடு சீப்புரு தீவு (அப்.13:4).
சைப்ரஸ் தீவு பற்றிய சில குறிப்புகள்
சிரியா நாட்டிற்கு மேற்கே சுமார் 100 கி.மீ. தூரத்தில் மத்திய தரைக்கடலின் கிழக்கு ஓரத்தில் இந்தத் தீவு இருக்கிறது. மத்திய தரைக்கடலில் இருக்கும் மூன்றாவது பெரிய தீவு இது.
- பரப்பளவு : 5896 ச.கி.மீட்டர்
- மக்கள் தொகை : 5,94,200 (இவர்களில் 97.1% கிரேக்கர்கள்).
- கல்வி கற்றோர் : 94.5%
- அரசாங்க மொழி : கிரேக்கம்
- தலைநகர் : நிகோசியா
- மக்கள் தொகை : 2.36,000.
வடக்கு சைப்ரஸ் குடியரசு (துருக்கியர் பகுதி)
- பரப்பளவு :3355 ச.கி.மீ.
- மக்கள் தொகை : 1,77,000 (இவர்களில் 98.7% துருக்கியர்).
- கல்வி கற்றோர் : 94%
- அரசாங்க மொழி : துருக்கி
- தலைநகர் : லெப்ட்கோசா (நிகோசியா பட்டணத்தின் ஒரு பகுதி)
- மக்கள் தொகை : 77000.
- கிறிஸ்தவர் : 78%
- முஸ்லீம் :22% (வடக்கு சைப்ரஸர்)
பர்னபாவின் பிறப்பிடம் இந்தத் தீவு என்பது கவனத்திற்குரியது. எருசலேமில் ஸ்தேவான் இரத்தச் சாட்சியாய் மரித்தபோது ஏற்பட்ட உபத்திரவத்தினால் கிறிஸ்தவர்கள் பல இடங்களுக்கும் சிதறிப்போன போது, சீப்புரு தீவிற்கும் வந்து அவர்கள் நற்செய்தி அறிவித்ததாகக் காண்கிறோம் (அப்.11:19-21).
பவுலும் பர்னபாவும் தங்கள் முதல் மிஷனரிப் பயணத்தில் முதலாவது வந்தது இந்த சீப்புரு தீவிற்கே (அப்.13:1-4). கி.பி.45ல் சாலமி என்ற பட்டணத்தில் இது நடந்தது. அக்காலத்தில் சாலமி பெரிய பட்டணமா யிருந்திருக்க வேண்டும். பவுலும் பர்னபாவும் இங்கே வந்து இறங்கினர். தற்போதுள்ள பேமகஸ்டா என்ற ஊருக்கு தெற்கே சுமார் 5 கி.மீ தூரத்தில் இது இருந்தது. இன்று சாலமி என்ற பட்டணம் இல்லை. அக்காலத்தி லிருந்த அழகிய கடற்கரைப்பகுதி இப்போது மண் மேடாகி விட்டது.
சாலமியில் பல யூத ஜெப ஆலயங்களிருந்தன. இவைகளில் பவுலும், பர்னபாவும் பிரசங்கித்தனர். (அப்.13:5). பிந்திய நாட்களில் பர்னபா இந்த சாலமியில் இரத்த சாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. பர்னபாவின் ஞாபகர்த்தமாக இங்கே ஒரு ஆலயம் கட்டப்பட்டது.
சாலமி பட்டணத்தைவிட்டு பவுலும் பர்னபாவும் பாப்போ என்ற தீவிற்கு வந்தனர். இந்த பாப்போவிற்கு தற்காலப் பெயர் பேப்போ. இது சைப்ரஸ் தீவிற்கு தலைநகராக இருந்தது. இந்த பாப்போவில் கிரேக் கர்கள் ஆராதித்த ‘அப்ரோடைட்’ என்ற தேவதையின் கோவில் இருந்தது. இங்கே ரோம அதிபதியாக இருந்த செர்கியு பவுலுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தான்.
மாயவித்தைக்காரனும், கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒருவன் இருந்தான். அவன் பர்யேசு என்றும் எலிமா அழைக்கப்பட்டான். கிறிஸ்துவின் நற்செய் திக்கு எதிராயிருந்த அவனை பவுல் கடிந்துகொண்ட போது, அவன் மேல் தேவ கோபாக்கினை வந்து அவன் குருடனானான். இந்த அற்புதத்தைக் கண்ட செர்கியு பவுல் என்ற அதிபதி இயேசுகிறிஸ்துவை விசுவாசித் தான் (அப்.13:6-11).
பர்னபா பவுலை விட்டு பிரிந்த பின்பு மாற்குவைக் கூட்டிக்கொண்டு மறுபடியும் சீப்புரு தீவிற்குச் சென்றான் (அப்.15:39). சீப்புரு தீவில் நல்ல சபை உருவாயிற்று. பிந்திய நாட்களில் நைசியாவில் கி.பி.325ல் நடந்த முக்கிய கிறிஸ்தவ மாநாட்டில் கலந்துகொள்ள மூன்று பிஷப்புகள் இங்கிருந்து வந்ததாக சபை சரித்திரம் கூறுகின்றது.
ஆசிரியர் P.S.ராஜமணி – தொடர்பு முகவரி:
P.S.ராஜமணி 100, நாவலர் நகர் மதுரை 625 010.