You are currently viewing பஞ்சாகமம் சுருக்கம்

பஞ்சாகமம் சுருக்கம்

ஆதியாகமம் Genesis

பெயர் விளக்கம்

எபிரேய மொழியில் ஆதியாகமம் 1:1 பெரேசித் (ஆதியிலே) என துவங்குகிறது. இதனுடைய பொருள் தொடக்கம். துவக்கமும் முடிவுமில்லாத இறைவனைத்தவிர மற்ற படைப்புகள் அனைத்தின் தொடக்கம் அல்லது ஆரம்பத்தை இப்புத்தகம் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. இதன் ஆங்கில பெயர் ஜெனிசிஸ் (Genesis) கிரேக்க வார்த்தையான ஜெனசாஸ் மூலம் உருப்பெற்றது.

ஆசிரியர்

இப்புத்தகத்தின் குறிப்புகளிலிருந்து நான்கு விதமான பகுதிகள் அல்லது பிரிவுகள் (யெகோவா, ஏலோகிம், ஆசாரியர், உபபந்தம்) இணைத்திருப்பதை காணமுடிகிறது அதாவது நான்குவிதமான மூலங்கள் (Source) இப்புத்தகத்தை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சற்று ஒன்றுக்கொன்று வேறுபாடானவை. இதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலின் ஆசிரியர் யார் என்பதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் பொதுவாக மோசே இந்நூலை தொகுத்தவர் அல்லது எழுதியவர் என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

காலம்

உலகம் உருவான நாள்முதல் சுமார் கி.மு. 1800 ஆண்டுவரையுள்ள சம்பவங்களை ஆதியாகமம் தெரிவிக்கின்றது. வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் மோசேயின் காலம் ஏறத்தாழ சரியாக கூறமுடியும். 1இராஜாக்களின் புத்தகத்தில் (6:1) சாலமோன் அரசாண்ட 4ம் வருடம், அதாவது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுச் 480 வது வருடம் எருசலேம் தேவாலயக் கட்டடப்பணி ஆரம்பமானது. சாலமோன் நாலாவது ஆட்சி ஆண்டு சுமார் கிமு. 966. எனவே 1446 வது ஆண்டு மோசே வழிநடத்துதல் பணியை மேற்கொண்டார். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

பின்னணி

ஆதியாகமம் 1-38 அதிகாரங்களில் காணப்படும் நாகரீகம், படைப்பு, வம்சவரலாறு, ஜலப்பிரளயம், புவியியல், மக்களின் – யாத்திரை, ஆடுமேய்த்தல். நிலம் சம்மந்தமான காரியங்கள் அகியவை மெசபட்டோமிய வாழ்க்கைக்கு மிக ஒத்துக் காணப்படுகிறது. இவற்றில் நடைபெற்ற பெரும்பான்மையான சம்பவங்கள் மெசபட்டோமியாவில் நடைபெற்றதாகவே காணப்படுகிறது. ஆசிரியர் மனிதனின் முதல்வீடான ஏதேன் தோட்டத்தை இப்பகுதியாகவே காண்பிக்கிறார். பாபேல் கோபுரம் கட்டப்பட்டதும், ஆபிரகாம் பிறந்த இடம், ஈசாக்குக் பெண்கொண்டது, யாக்கோபு 20 வருடங்களாக வாழ்ந்தது ஆகியவை இப்பகுதியை மையமாகக் கொண்டது.39-50 அதிகாரங்கள் எகிப்திய பாரம்பரியத்தை விளக்கக்கூடியதாக அமைகிறது.

நோக்கமும் செய்தியும்

ஆதியாகமம் படைப்பின் முழுவிபரத்தையும் தெளிவாக்குகிறது. தேவன் படைப்பின் காரணராகவும், படைப்பின் சிகரமாக மனிதனை தன்னுடைய சாயலின்படி படைத்ததையும், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உலகை ஆசீர்வதித்ததையும் தெரிவிக்கிறது. முதல் படைப்பான ஆதாம், ஏவாள் என்பவர்கள் கீழ்படியாமல் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து அதற்கு தன்டனையாக சாபத்தை பெற்றுக்கொண்டதையும் விளக்குகிறது. எனினும் இறைவனை செய்லாற்றுகிறவராகவே சித்தரிக்கிறது. இரட்சிப்பின் ஆரம்பமாக இறைவன் ஒரு நபரை, குடும்பத்தை வம்சத்தை தெரிந்து கொண்டு, உலகத்திற்கு ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்புவதை தெரிவிக்கிறது. பல கடவுள் வணக்கதிற்கு வழிதவறிய மக்களை ஒரு கடவுள் வணக்கத்திற்கு நேராக வழிநடத்தியதை விவரிக்கிறது.

ஆதியாகமத்தில் தொடக்கங்கள்

 1. ஆதியாகமம் 1:1-25 உலகத்தின் தொடக்கம்
 2. ஆதியாகமம் 1:26-2:25 மனித குலத்தின் தொடக்கம்
 3. ஆதியாகமம் 3:1-7 பாவத்தின் தொடக்கம்
 4. ஆதியாகமம் 3:8-24. இரட்சிப்பு உறுதிமொழியின் தொடக்கம்
 5. ஆதியாகமம் 4:1-15 குடும்ப வாழ்வின் தொடக்கம்
 6. ஆதியாகமம் 4:16-9:29 மனிதன் உண்டாக்கிய நாகரீகத்தின் தொடக்கம்
 7. ஆதியாகமம் 10-11 உலக நாடுகளின் தொடக்கம்
 8. ஆதியாகமம் 12-50எபிரேய மக்களின் தொடக்கம்

யாத்திராகமம் Exodus

பெயர் விளக்கம்

யாத்திராகமம் என்ற கிரேக்க சொல்லுக்கு ‘புறப்பாடு’ அல்லது வெளிவழி எனப்பொருள் (எபிரேயர் 11:22) ஆதியாகமத்தில் காணப்படும் எல்லா தோல்விகளுக்கும் விடுதலையாக. எழுச்சிமிக்கதாக, இறைவன் மனிதனை காப்பதற்கு செயலாற்றுபவராக, மீட்பின் பணியைக் கூறுகிறது.

ஆசிரியர்

யாத்திராகம புத்தகத்தின் ஆசிரியர் குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும் யாத்திராகமத்தில் உள்ள பல பகுதிகள் மோசே எழுதியதாக உறுதிப்படுகிறது. (17:14 24:4 34:27). மேலும் யோசுவா 8:30ல் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம். புதிய என ஏற்பாட்டிலும் இதற்கான குறிப்புகளைக் காணலாம். (உதா. மாற்கு 7:10, 12:26, T&T 2:22-23).

காலம்

உலக வரலாறு, எகிப்து சாம்ராஜ்யத்தின் மன்னன் பார்வோன் மூன்றாவது துத்மஸ் மற்றும் அவனது மகன் இரண்டாவது அமுன்ஹோதேப் காலத்தில் யூத மக்கள் அடிமைப்படுத்தப்பட்டதாக கூறுகிறது. இதைத்தொடர்ந்து வேத குறிப்பின்படி யாத் 1:11 ல் ராமசேஸ் என்னும் பெயர்கொண்ட பார்வோன் முதலாம் சேத்தி மற்றும் அவனுடைய மகன் இரண்டாம் ராமசேஸ் காலத்தில் இஸ்ர வேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர். வருடமாகும். பாரம்பரிய குறிப்பின் அடிப்படையில் கி.மு. 1446 ஆகும். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

நோக்கமும் செய்தியும்

யாத்திராகமம் பழைய ஏற்பாட்டில் இரட்சிப்பின் மேன்மையைக் கூறுகிற முன் நூலாக இருக்கிறது. இந்நூல் இருளும் துக்கமும் நிறைந்த நிலையில் தொடங்குகிறது. இருந்தாலும் மகிமையில் முடிகிறது. இந்நூல் இறைவன் அடிமையாக்கிய தம் மக்களைத் தம் அன்பினால் மீட்பதற்கு எவ்வாறு இறங்கி வந்தார் என்று தொடங்கி விடுதலையாக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர் எவ்வாறு இறங்கிவந்தார் என்று கூறி முடிகிறது.

யாத்திராகமத்தில் இறைவன், தன் பெயர் (யாத்திராகமம் 3:14) குணாதிசயங்கள், இரட்சிப்பு, சட்டம் (நியாயப்பிரமாணம்) தான் வழிபடப்படவேண்டிய முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். முதல் உடன்படிக்கையின் நடுவரான மோசே தெரிந்தெடுக்கப்படுதல், ஆசாரியத்துவத்தின் ஆரம்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைவன் வரலாற்றிற்கும் ஆண்டவராயிருந்து அற்புதங்களை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலருடைய துன்பங்கள் அல்லது எகிப்தியர் மீது வந்த வாதைகள் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டதே. பார்வோன், எகிப்தியர், இஸ்ரவேலர் அனைவரும் அவருடைய வல்லமையை கண்டனர். இறைவன் எகிப்திய தேவர்களுக்கெல்லாம் தேவன் என்பதை விளக்கும் புத்தகமாக இது அமைந்துள்ளது.

லேவியராகமம் Leviticus

லேவியராகமம் எபிரேய பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து இப்பெயரைப் பெற்றது. யூத கோத்திரத்தில் தேவனுடைய பணிக்காக பிரித்தெடுக்கப்பட்ட லேவியர் கடைபிடிக்க வேண்டிய மற்றும் செயல்படவேண்டிய முறைகளைப்பற்றி இப்புத்தகம் கூறுவதால் இப்பெயர் பெற்றது.

ஆசிரியர்

ஆதியாகமம், யாத்திராகமம் போலவே இப்புத்தகமும் மோசே எழுதினார் என பெரும்பான்மையோரால் நம்பப்படுகிறது.

காலம்

சுமார் கி.மு.1446 முதல் 1406 கி.மு. வரை இஸ்ரவேலர் சீன் வனாத்திரத்தில் ஆண்டவரோடு ஆராதனை செய்ய சொல்லப்பட்ட முறைகளையே இப்புத்தகத்தில் நாம் காண்கிறோம். இக்கால கடைசியில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கக்கூடும். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

நோக்கமும் செய்தியும்

லேவியராகமத்தின் மையக்கருத்து பரிசுத்தமாகும் (11:44) இறைவன் பரிசுத்தமானவர், எனவே மக்களும் பரிசுத்தத்தோடு தொழுதுகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. கர்த்தரின் உறவிலிருந்து பிரிந்து வாழும் மனிதனின் வாழ்க்கையை சீர்படுத்தி, கர்த்தரோடு சமாதானம் செய்து குற்றத்தை நிவர்த்தி செய்து அவரை ஆராதிக்கவும், சமுதாய ஒற்றுமையை ஏர்படுத்தவும், கர்த்தர் தந்த ஆசிர்வாதங்களை நினைவுகூர்ந்து ஸ்தோத்திரம் செலுத்தவும் இஸ்ரவேலருக்கு வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பலி என்பது மனிதனால் பயன்படுத்தப்பட்டது. பலி செலுத்தப்பட வேண்டிய விலங்கும் நேர்த்தியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராதனை அதனுடைய காரியங்களும், பலிகளும் செலுத்தவேண்டியவர்களாக ஏற்படுத்தப்பட்ட ஆசாரியர்களின் கடமைகளும் பணிகளும் விளக்கப்பட்டுள்ளது இஸ்ரவேலர் தங்களை தூய்மையாக காத்துக்கொள்ள செய்யவேண்டிய காரியங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களுக்கு கீழ்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்களும், இல்லாவிட்டால் கிடைக்கும் சாபங்களும் எழுதப்பட்டுள்ளன.

எண்ணாகமம் Numbers

எபிரேய வேதம் வனாந்தரத்தில்’ (பீமிட்பார்) என்ற தலைப்புக் கொண்டிருந்தாலும், கிரேக்க மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாட்டில் (செப்டோஜென்ட்) இது மாற்று பெயர் கொண்டுள்ளது. எண்ணாகமம் 1:26ல் இஸ்ரவேலர் கணக்கு எடுக்கப்பட்டதின் அடிப்படையில் அரித்மாய் எனவும் தமிழில் எண்ணாகமம் எனவும் பெயர் பெற்றது. இருபது வயதுமுதல் சேனையில் சேரத்தகுந்த யாவரையும் கணக்கெடுக்கும்படி இறைவன் கட்டளையிட்டார். எனவே மோசே மக்களை 4 பிரிவாக பிரித்தார்(எண் 1:2,3, 26:2)

ஆசிரியர்

கால காலமாக இப்புத்தகம் மோசே எழுதியதாக கருதப்படுகிறது. இதற்கான காரணங்கள் 1.மோசே எழுதிய காரியம் குறிப்பிடப்பட்டுள்ளதால் (எண்ணாகமம் 33:12 யாத்தராகமம் 24:4) 2. சட்ட புத்தகங்கள் (பஞ்சாகமம்) ஐந்தும் ஒரே புத்தகமாகவும், ஒரே ஆசிரியர் என கருதப்படுவதாலும். இருப்பினும் எண்ணாகமம் 12:3 போன்ற வசனங்கள் பின் வந்த எழுத்தர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

காலம்

சுமார் கி.மு.1446ல் இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கானான் தேசத்தை நோக்கி புறப்பட்டிருந்தால் (1இராஜாக்கள் 6:1) சுமார் கி.மு.1444 முதல் (எண்ணாகமம் 1:1) சுமார் கி.மு. 1046ம் வருடம் வரை நடந்த சம்பவங்களை (உபாகமம் 1:1) இப்புத்தகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கணக்கெடுப்பு நடந்த காலம் கி.மு. 1446-1444 இக்காலத்தின் இறுதியில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம்.

நோக்கமும் செய்தியும்

இறைவனுடைய கட்டளைப்படி ஜனங்களை தொகைப்பார்த்து மோசே முன்னேறிச்சென்ற வனாந்திர அனுபவத்தைக் கூறுவதே இந்நூலின் நோக்கம் சீனாய் வனாந்தரத்தில் கர்த்தரேராடு உடன்படிக்கை செய்தபின் 38 ஆண்டுகள் வனாந்திர வாழ்க்கையில் கர்த்தர் வழிநடத்திய விதத்தையும், மக்களின் அவிசுவாசத்தையும் (கர்த்தருக்கு விரோதமாக செயல்படுதல், அவருடைய ஊழியருக்கு விரோதமாக செயல்படுதல்.) (எண்ணாகமம் 14:32-34) அவற்றின் விளைவையும் விளக்குகிறது. கீழ்ப்படியாமைத் தன்னையுடைய மக்களை தூய்மையான கடவுள் ஒழுங்கில் கொண்டுவர எண்ணாகமம் எழுதப்பட்டது. நாற்பது நாட்கள் செல்லவேண்டிய பயணம் 40 வருடங்களாக மாற்றப்பட்டதை இப்புத்தகத்தில் வாசிக்கின்றோம். லேவி கோத்திரங்களின் குடும்ப ஊழியம், அறிவுரை, ஆரோன் கர்த்தரின் ஆசாரியன் என உறுதி செய்யப்படுதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. மோசேக்குப் பதிலாக யோசுவா தெரிந்துகொள்ளப்படுதல் (எண்ணாகமம் 27) மற்றும் தேசத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உபாகமம் Deuteronomy

உபாகமத்திக்கு எபிரேய மொழியின் தலைப்பு ‘இலா ஹடேபாரிம்’. இது இந்த வார்த்தைகள்’ அல்லது ‘வசனங்கள்’ என்னும் பொருளுடன் அமைந்துள்ளது. கிரேக்க மொழியில் ‘டியூட்ரானமி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் ‘சட்டம் சொல்லப்படுதல்’ என்பதாகும். இது உபாகமம் 17:20 யை அடிப்படையாக கொண்டுள்ளது. இதன் விளக்கம் ‘சட்டத்தின் பிரதி’ என்பதாகும்.

ஆசிரியர்

இப்புத்தகத்தில் காணப்படும் குறிப்புகளின்படி மோசே எழுதியிருக்கிறார் (1:5, 31:9, இதற்கான 22,24)  உறுதிப்பாட்டை பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளிலும் (1இராஜாக்கள் 2:3, 8:53 2இராஜாக்கள் 14:6, 18:12), புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளும் (மத்தேயு 19:78, அப்போஸ்தலர். 3:22,23 ரோமர் 10:19) காணலாம். இருப்பினும் முடிவுரையான உபாகமம் 1:1-5, மோசேயின் மரணம் 34ம் அதிகாரம் வேறொருவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

காலம்

இந்நூல் இஸ்ரவேலரின் பிரயாணத்தின் இறுதிக்கட்டத்தை குறிப்பிடுகிறதாகவும் சுமார் 2 மாத நிகழ்ச்சிகளை விளக்குகிறதாகவும் உள்ளது. இப்புத்தகம் சுமார் கி.மு. 1406ம் ஆண்டு எழுதியிருக்கக்கூடும்.

பின்னணியம்

இஸ்ரவேலரை வழிநடத்திவந்த மோசே, மோவாப் தேசத்தின் எல்லைக்கு வந்தபோது யோர்தானுக்கு எதிர்பட்டு, தன்னுடைய இறுதி செயலாக தலைமைத்துவத்தை யோசுவாவுக்கு கொடுத்தான். கானானுக்குள் செல்லும் முன்பதாக இஸ்ரவேலரை ஆயத்தப்படுத்தும்படிகளாக பிரிவுச் செய்தியை கொடுக்கின்றார். கர்த்தரோடு உள்ள உடன்படிக்கையை புதுப்பிக்கும்படியாக இறைவனின் சட்டதிட்டங்களை உறுதிப்படுத்துகின்றார்.

நோக்கமும் செய்தியும்

இறைவன் மக்களுக்கு கொடுத்த சட்டதிட்டங்களின் அல்லது நியாயப்பிரமாணத்தின் பிரதியை மக்களுக்கு கொடுத்து இதற்கு கீழ்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதத்தையும், கீழ்படியாமற்போனால் உண்டாகும் சாபத்தையும் இப்புத்தகம் விளக்குகிறது. இறைவன் தன்னுடைய மக்கள் தன்னை சிநேகிக்க வேண்டும் என்றும் இல்லையேல் துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பதையும் உறுதிசெய்கிறது. மோசே ஆற்றிய அருளுரைகளின் தொகுப்பை இப்புத்தகம் கொண்டுள்ளது.

This Post Has One Comment

 1. Paulraj Kirubakaran P

  Very Good

Leave a Reply