You are currently viewing ஏசாயா – தானியேல் சுருக்கம் 

ஏசாயா – தானியேல் சுருக்கம் 

ஏசாயா – தானியேல் சுருக்கம் 

ஏசாயா ISAIAH

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் பெரிய தீர்க்கர் புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏசாயா என்பதற்கு “தேவன் இரட்சிக்கிறார்” (அ) “தேவனின் இரட்சிப்பு என்பது பொருள். இவருடைய தந்தை பெயர் ஆமோத்ஸ் என்பதாகும் (ஏசாயா 1:1). இவர் திருமணமானவர் (8:3). இவருக்கு சேயார் யாசூபும் (7:3) மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (8:3) என்ற இரு குமாரர் இருந்தனர். ஏசாயா இராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்பது பாரம்பரியக் கருத்தாகும். அவர் அமத்சியா ராஜாவின் சகோதரனும் உசியா ராஜாவின் ஒன்று விட்ட சகோதரனுமாவார். இவர் எருசலேம் நகரத்தை சேர்ந்தவர். யூதாவின் ராஜாவாகிய உசியாவின் வாழ்க்கை கால இறுதியில் ஏசாயா தன்னுடைய ஊழியத்தை தொடங்கினார்.(ஏசாயா 6:1-9) 60 வருடம் (கி.மு 740-680) ஊழியம் செய்தார். இவர் காலத்தில் யூதேயா அரசர்களாக உசியா (கி. மு. 790-739), யோதாம் (கி. மு. 739-731), ஆகாஸ் (கி.மு. 731-715), எசேக்கியா (கி. மு. 715-686) ஆட்சிசெய்தனர். தல்மாத் என்னும் யூத பாரம்பரியத்தின் அடிப்படையில் ஏசாயா மனாசே ராஜாவால் ரம்பத்தால் அறுக்கப்பட்டு மரித்தார்.(2 இராஜ 21:16)

ஆசிரியர்

கி.மு. 150 முதல் கடந்த நூற்றாண்டுவரை ஏசாயா புத்தகம் ஒரு பகுதியாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்புத்தகத்தின் பின்னணி வரலாறு, இறையியல் கருத்து, எழுத்து வடிவம் இவற்றைப் பார்க்கும் போது 1-39 அதிகாரங்கள் ஒரு பகுதியாகவும் 40-66 வேறுபகுதியாகவும் காணப்படுகிறது. முதல் பகுதி ஏசாயா தீர்க்கதரிசியால் எழுதப்பட்டிருக்கக் கூடும். இரண்டாவது பகுதியில் பாபிலோனிய சிறைப்பிடிப்பைக் குறித்த கருத்து அதிகமாகக் காணப்படுகிறது. இது ஏசாயா வாழ்ந்த காலத்திலிருந்து சுமார் 150 ஆண்டுகள் பின் நடத்த நிகழ்ச்சியாகும். எனவே இதை எழுதியிருப்பவர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த ஒருவர் எனவும் இவர் மற்றொரு ஏசாயா அல்லது இரண்டாது ஏசாயா எனவும் வேத ஆராச்சியாளர் கருதுகின்றனர்.

வரலாற்று பின்னணி,காலம்

  1. ஏசாயாவின் வாழ்க்கை காலத்தில்(கி.மு. 760-695) அசீரிய பேரரசின் ராஜா இஸ்ரவேலலையும், யூதா தேசத்தையும் மேற்க்கொள்ளவும் முற்றுகையிடவும் ஆயத்தமாக இருந்து பின் மேற்கொண்டார். கி.மு. 722 ல் இஸ்ரவேல் அசீரியரால் மேற்கொள்ளப்பட்டு மக்கள் சிதறடிக்கப்பட்டும். அசீரியாவுக்கு கைதிகளாகவும் கொண்டு செல்லப்பட்டனர். 
  2. பிற பேரரசுகளும் தேவ ஜனமாகிய இஸ்ரவேலை ஆட்சிசெய்ய நெருக்கிக்கொண்டிருந்தனர் பாபிலோன் (609-539 கி.மு), பெர்சியா (539-333) கிரீஸ் (கி.மு. 333-169).
  3. ஏசாயாவின் தன் வாழ்க்கைக் காலத்தில் இஸ்ரவேல் மற்றும் யூதா மக்கள் தங்களுடைய அரசனையும், படைபலத்தையும், பிற அரசுகளின் உதவியையுமே நாடியது. தேவனுடைய கிருபையையும் வல்லமையையும் நம்ப மறந்தது. இச்சூழலில் இஸ்ரவேலரின் விசுவாசம் நிலைத்திருக்கவும். இக்காலகட்டத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையின் நெருக்க நிலையை சந்திக்கவும் ஏசாயா மக்களை ஆயத்தப்படுத்துகிறார்.
  4. ஏசாயா தனது செய்தியில் ஜீவனுள்ள தேவன் எல்லா பேரரசுகளுக்கும். அரசர்களுக்கும் மேலானவர் என. வெளிப்படுத்தினார். அரசர்களும், இராஜ்யங்களும் தேவனின் கட்டமைப்பில் வந்து செல்லும் ஆனால் முடிவில் உலகம் அதிகாரத்தால் ஆளப்படாமல். விசுவாசத்தாலும், சுத்தமுள்ள தேவ ஜனத்தாலும், மேசியாவாலும் ஆளப்படும் என்பதே இவரின் முக்கிய செய்தியாகும். 
  5. ஏசாயா இந்நூலை கி.மு.740-700ல் எழுதியிருக்கக் கூடும்.

உள்ளடக்கம்

ஏசாயா புத்தகம் ஒரு இறையியல் நூலாகும் “ஊழியம் செய்தல்” என்பது இதன் பொதுவான கருத்தாகும்.

  1. அதிகாரம் 1-5 மக்களின் பிரச்சனை: இஸ்ரவேலரின் பாவ வாழ்க்கை, தேவனின் வாக்குதத்தங்களை பெறமுடியாத இஸ்ரவேலரின் அநீதியான வாழ்க்கை (2:1-4,4:2-6)
  2. அதிகாரம் 6 பிரச்சனையின் பதில் அசுத்தமான இஸ்ரவேலரின் உதடுகள் ஏசாயா தீர்க்கதரிசியை போல் சுத்திகரிக்கப்படுமானால் இவர்கள் உலகிற்கு ஒளியாக பிரகாசிக்க முடியும்.
  3. அதிகாரம் 7-66: அதிகாரம் 6ன் விரிவான விளக்கம்: தேவனுடைய ஊழியர்களுக்கு தேவனின் வல்லமையை குறித்த தரிசனம் தேவை. மேலும் எச்சூழலிலும் தேவனை நம்பவேண்டும். காரணம் தேவன் நம்பப்படத்தக்கவர்.

தேவஜனத்தினுடைய பாவத்தின் விளைவால் அடிமைகளாக கைவிடுவதில்லை தேவன் சர்வ உலகத்திலும் உயர்ந்தவர் உறுதிப்படுத்துவார்.(அதிகாரங்கள் 40-48 

தேவன் இவர்களின் பாவங்களை மறந்துவிடுவாரா? இல்லை. தேவன் தம்முடைய ஊழியக்காரரை அனுப்பி (அதி 49-55) தன்னையே மக்களின் பாவங்களுக்கு பலியாக ஏற்படுத்துவார்.

நாம் எப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும்? நம்முடைய திறமை மற்றும் நல்ல வாழ்க்கை மூலமாகவா? இல்லை. ஊழியருடைய அச்சடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது. (அதி 56-66)

எரேமியா JEREMIAH

எரேமியா என்பதற்க்கான பொருள் மிகத் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் ‘தேவன் உயர்த்துகறார்’ என்றும் ‘தேவன் கட்டுகிறார்’ என்றும் ‘தேவன் எறிகிறார்’ என்றும் பல பொருள்களைக் கொள்ளலாம். எரேமியாவைக் குறித்து அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைப் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம்.

வாழ்க்கைக் குறிப்பு

  1. எரேமியாவின் தகப்பன் பெயர் இல்கியா. இவர் ஒரு ஆசாரியன் (1:1) ஆனதோத் என்ற ஊரில் இவர் கி.மு. 640 ல் பிறந்தார். அதாவது மனாசே ராஜாவின் ஆட்சிகால கடைசியில் பிறந்து, வாழ்ந்திருக்க கூடும்.
  2. இவர் தன்னுடைய ஊழியத்தை கி.மு. 627ல் இவரது 16-21வது வயதில் ஆரம்பித்திருக்கிறார். எரேமியா கூறும்பொழுது தன்னை சிறுபிள்ளை கூறுகிறதை கருத்தில் கொள்ளவேண்டும் (1:6) என
  3. இஸ்ரவேலரின் கலாச்சாரப்படி இவர் திருமணம் முடித்திருக்க வேண்டும். ஆனால் தேனுடைய கட்டளைப்படி திருமணமாகாதிருந்தார். இது ஒரு அடையாளமாக யூதாவுக்கு கொடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் கணவன் மனைவியைப்பிரிந்தும், பிள்ளைகள் பெற்றோர்களை பிரிந்தும் இருக்கும் காலம் வரும் என்ற முன்னறிவிப்பின் அடையாளமாக இது செய்யப்பட்டது. இவ்வடையாளம் பின்பு கி. மு. 586ல் பாபிலோனியர் எருசலேமைப் பிடித்து அழித்தபொழுது நிறைவேறியது.
  4. எரேமியா கிராமத்தில் உள்ள எந்த சந்தோஷமான நிகழ்வுகளிலும், துக்கமான காரியங்களிலும் கலந்துகொள்ளவில்லை (16:5-9) இதுவும் அடையாளமாக கொடுக்கப்பட்டது. வரப்போகிற இருளின் நாட்களில் எந்த சந்தோஷமான காரியங்களும் நடைபெறாது என்பதைக் குறிப்பிடுகிறார்.
  5. எரேமியா மற்ற தீர்க்கதரிசிகளைகாட்டிலும் அதிகமாக மனரீதியாகவும், சரீரப்பிரகாரமாகவும் துன்பம் அனுபவித்தார். ஒரு நாள் முழுவதும் காவலறையில் பூட்டப்பட்டிருந்தார் (20:2-3, 29:26) உளையிலே போடப்பட்டிருந்தார்(38:6-13) பலமுறை அடித்து சிறையில் அடைக்கப்பட்டார்(37:14-16) தன் சொந்த ஜனங்களால் கொலைசெய்ய திட்டமிடப்பட்டான்(11:18-23)இவர் ஆசாரியராலும்,தீர்க்கராலும், அதிகாரிகளாலும், மக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவராவார்.

பின்னணி

  1. யோசியாவின் ஆட்சிகாலத்தின் பாதியில் (கி.மு.640-609) தன் ஊழியத்தை ஆரம்பித்து யோவாகாஸ் (609), யோயாக்கீம் (609-598) யோயாக்கீன் (598-597) மற்றும் சிதேக்கியா (597-586) ஆகியோர் காலத்தில் தொடர்ந்து நிறைவேற்றினர். இக்காலத்தில் யூதா பல்வேறு நெருக்கங்களின் வழியாக கடந்துவந்தது. எகிப்து. அசீரியா, பாபிலோன் பேரரசுகள் வலுத்து வந்த சமயம் அது. அசூர்பனிபால் கடைசி அசீரிய ராஜா கி. மு. 627ல் மரித்தார். பின்பு பாபிலோனிய சாம்ராஜ்யத்தில் நெபோபோலசார் வலிமை வாய்ந்தவனாக விளங்கினான். இவர் எரேமியா அழைப்புப்பெற்ற கி.மு. 626ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பு ஏற்றான். அசீரிய தலைநகரம் நினிவே வீழ்ந்தபின் பாபிலோனை எதிர்த்து எகிப்து வடக்குநோக்கி வந்தது. இவர்களை நிறுத்த சென்ற இராஜா பார்வோன் நேகோ ஐபிராத்து நதி ஓரமான கர்கேமிஸ் என்ற இடத்தில் போரிட்டான் (2 இராஜா 23:29 2நாளா 35:20- 24) எகிப்துக்காக பார்வோன்நேகோவோடு போரிட்ட யூதாவின் ராஜா யோசியா கி. மு. 605ல் அப்போரில் கொல்லப்பட்டான். இதை பார்த்து ஆவியில் தூண்டப்பட்ட எரேமியா கூறிய வார்த்தைகள் 11:1-8, 17:19-27)
  2. யோசியாவின் மகனாகிய யோவாகாஸ் (சல்லும்) (எரேமியா 22:20-21) நேகோவால் சிறைபிடிக்கப்பட்டு போனான். அவனுடைய சகோதரனாகிய எலியாகீமை யோயாக்கீம் பெயர் மாற்றி இராஜாவாக நியமித்தான். என யோவாகாஸ் மூன்று மாதம் ஆட்சிசெய்தார் (2 நாளா 36:2) இவர் ஆட்சியில் எரேமியா துன்பப்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான் (20:1-2, 26:8-9, 32:2-3, 33:1, 36:26, 37:12-21, 38:6-13,28)
  3. யோயாக்கீம் எரேமியாவை பகைத்தான். எரேமியாவின் வார்த்தைகள் இவருக்கு அனுப்பப்ட்டபொழுது அதை கிழித்து நெருப்பில் சுட்டெரித்தான் (36:21-23) ஆனாலும் எரேமியா இவ்வார்த்தைகளை மறுமுறை அனுப்பினார்.
  4. 4.கி.மு. 605ம் ஆண்டு ஐபிராத்து நதிக்கரையிலுள்ள கார்கேமிஸ் என்ற இடத்தில் எகிப்து மன்னன் பார்வோன் நேகோவை பாபிலோனிய ராஜா நேபோபோலசார் மகன் மூலமாய் தோற்க்கடித்தான் (46:2) எகிப்து அரசன் நேகோ தோல்விமுகமாக திரும்பினான். பின்பு 70 ஆண்டுகளுக்கு இவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
  5. 5.நேபுகாத்நேச்சார் கி.மு. 605ம் ஆண்டு எருசலேமை முற்றுகையிட்டான். யோயாக்கீம் (தானியேல் 1:1-2) காலத்தில் தானியேல் மற்றும் இவரின் நண்பர்களை சிறைபிடித்து தேவாலயத்தின் பொருட்களை எடுத்துச் சென்றான். (1:3-6)
  6. 6.பின்பு கி.மு. 598-597ல் நேபுகாத்நேச்சார் எருசலேமைத் தாக்கி யோயாகி. மு. மை தள்ளிவிட்டு யோயாகீனை ராஜாவாக ஏற்படுத்தினான். யோயாகீன் 3 மாதம் ஆட்சிசெய்தான் யோயாகீனின் சிறைபிடிப்பைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசனமாக கூறியது (22:24-30) நிறைவேறியது (24:1, 29:1-2)
  7. 7.கி.மு.597ல் யோசியாவின் மகனும் யோயாகீனின் சிறிய தகப்பன் மகனாகிய சிதேக்கியா ராஜாவானான் (37:1, 2நாளா 35:11-14) சிதேக்கியா சிலவேளைகளில் எரேமியாவின் நண்பனாக அவர் ஆலோசனைகளை கேட்டு நடந்தார். ஆனால் சில வேளையில் எரேமியாவின் எதிரிகள் அவரை சிறைபிடிக்கவும் செய்தனர்.
  8. இந்நாளில் எரேமியா சிதேக்கியா ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்தார். தேவனுடைய திட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தன் ஜீவனை காக்க இவ்வாறு செய்தார் (38:15-27) இருப்பினும் கி. மு. 586 வரை எரேமியா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் (38:28)
  9. 9.சிதேக்கியா நாட்டைவிட்டு தப்பி ஓடும்பொழுது பிடிபட்டு அவருடைய பிள்ளைகள் கொலை செய்யப்பட்டார்கள். பின்பு அவர் குருடாக்கப்பட்டார்.(39:1-7) பின்பு நெபுசாராதான் யூதேயாவில் காவற்சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். (40:1-6) கெதலியா ஆளுனராயிருந்தபொழுது எதிரிமூலமாக கொலை செய்யப்பட்டான். பாபிலோனியருக்கு பயந்த யூதர்கள் பார்வோன் ஒப்பிரா காலத்தில் (கி.மு.589- 570) எகிப்த்திற்கு தப்பி ஓடினார்கள் அப்பொழுது எரேமியாவையும் (வயது 70) பாரூக்கையும் அழைத்துச் சென்றனர்.(44:24-30) எரேமியாவின் கடைசிவார்த்தைகள் 44:24-30ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் எகிப்த்து சென்றபொழுது பார்வோன் ஒப்பிரா(கி.மு.589-570) ராஜாவாக இருந்தார்.

நோக்கமும் செய்தியும்

  1. எரேமியா ஒரு தீர்க்கதரிசி என இப்புத்தகத்தில் பல இடங்களிலும் (20:2, 25:2, 28:5:10-12,15, 29:1,29, 32:2, 34:6, 36:8, 37:2,3-6, 38:9-10, 14, 42:2,4, 43:6, 45:1, 46:1, 13:47, 49:34, 50:1) பழைய ஏற்பாட்டிலும் (2நாளா 36:12, தானியேல் 9:2) புதிய ஏற்பாட்டிலும் (மத் 2:17, 27:9) குறிப்பிடப்படுகிறது.
  2. எரேமியா தன் அழைப்பை நன்கு உணர்ந்தவராக காணப்படுகிறார் (1:5, 15:19). தீர்க்கதரிசியான இவரிடம் தேவன் முதலில் பேசியதை 19:1,2ல் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் 28:9, 32:24ல் நிறைவேறுகிறதையும் காணமுடிகிறது.
  3. எரேமியா கள்ளத் தீர்க்கதரிசிகளை அல்லது பொய்யான தீர்க்கதரிசிகளைக் கடிந்து கொள்கிறார் (14:13-18, 23:13-48, 27:14-18). குறிப்பாக அன்னியா, செமாயாவை (அதி28,29:24-32) கடிந்துகொள்ளுகிறார்.
  4. எரேமியாவின் எதிர்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் குறுகியகாலத்தில் நிறைவேறியிருக்கிறது (16:15, 204, 25:11-14, 27:19-22, 29:10, 34:9-5, 45:10-11, 44:30, 46:13). இன்னும் ஒருசில தீர்க்கதரிசனம் ஏற்ற காலத்தில் நிறைவேறக்கூடியதாக இருக்கிறது (23:5-6, 30:8-9, 31:31-34, 33:15-16).
  5. எரேமியா தன் மக்களின் பாவவாழ்க்கையை பார்த்து துக்கிக்கிறார் (44:23). குறிப்பாக விக்கிரக ஆராதனையையும் (16:10-13,20,22:9, 32:29, 44:2-3, 8,17-19,25) சில சமயங்களில் தன் பிள்ளைகளை நரபலி கொடுத்த கொடுமையையும் (7:30- 34) கண்டிக்கிறார்.
  6. 6.இவ்வளவு பாவத்தில் மக்கள் இருந்தபொழுதும் எரேமியா இவர்களை அதிகமாக நேசிக்கிறார். தேவன் இவர்களுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம் என் சொன்னபோதிலும் (7:6,11:14,14:11) இவர்களுக்காக உருக்கமாக விண்ணப்பம் செய்கிறார்.(14:7,20)
  7. மக்கள் மனம்திரும்பவேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறிய எரேமியா, உண்மையாக மக்கள் மனம்திரும்பினால் வரவிருக்கும் பேராபத்து தள்ளிப்போடப்படும் எனவும் தெளிவாக்கினார். கடவுளின் திட்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
  8. எரேமியாவிற்கு தேவன் எல்லாவற்றிற்கும் மேலானவர். தேவனே இவ்வுலகில் காணப்படும் அனைத்திற்கும் காரணர் அல்லது உருவாக்கியவர் என்றும் (10:12-16, 15:15-19) சர்வ வல்லவர் (32:27, 48:15, 51:57) சர்வ வியாபி (எங்குமிருப்பவர்) (23:24) பெரிய காரியங்களைச் செய்கிறார் (32:17-25) சர்வ உலகிற்கு ஆண்டவர் (5:15, 18:7-10,25:17-28 அதி. 46-51) என்பதையும் உறுதிப்படுத்துகிறார். மேலாக தேவன் தனிநபர் மீது கரிசணை உள்ளவர் என்பதையும் (31:29-30) விளக்குகிறது.
  9. பாவத்திற்கும், தண்டனைக்கும் உள்ள தொடர்பை எரேமியா படம்பிடித்துக் காண்பிக்கிறர். இவர் தைரியமும் உத்தமமுள்ள தீர்க்கதரிசியாவார். இவருடைய வார்த்தைகள் வல்லமையுள்ளதாகவும் உள்ளது (5:14, 20:9, 23:29).
  10. 10.தேவனின் நியாயத்தீர்ப்பு மக்கள் மீது கூறப்பட்டாலும் இது முடிவு அல்ல. தேவனின் இரக்கம் இதை மேற்கொள்ளும். தண்டனைக்கு பின் விடியல் உண்டு. தேவன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவார் (31:31-34). இதன் மூலம் மக்கள் தங்களை பிரத்யோகப்படுத்தப்படுவார்கள். தாவீதின் வம்சத்தில் நீதியோடு ஆட்சிசெய்வார். உண்மையுள்ள ஆசாரியராக பணிசெய்வார் (அதி.33).
  11. எசேக்கியல் புத்தகத்தைப்போல் கால அடிப்படையில் தீர்க்கதரிசனம் வரிசைப்படுத்தப்படவில்லை. உத்தேசமான வரிசையானது 1:1-7:15, அதி. 26, 7:16- 2:18, அதி. 25, அதி. 46-51, 36:1-8, அதி. 45, 36:9-32, அதி. 35, அதி. 21-24, அதி. 27-31, 34:1-7, 37:1-10, 34:8-22, 37:11-38:13, 39:15-18, . 32-33, 38:14-39:14, 52:1- 10, அதி. 40-44, 52:31-34.

புலம்பல் Lamentations

எபிரேய பழைய ஏற்பாட்டில் இப்புத்தகத்தின் தலைப்பு ‘ஐயோ’ (இக்கா) என்பதாகும். இது இப்புத்தகத்தின் முதல் வார்த்தை மட்டுமல்ல (1:1, 2:1, 4:1) பிற இடங்களிலும் வாசிக்கிறோம். இப்புத்தகத்தின் உள்கருத்தை மையமாகவைத்து யூத பாரம்பரியத்தில் புலம்பல் எனவும் அழைப்பதுண்டு. இதுவே கிரேக்க, லத்தீன், தமிழ் இன்னும் பிறமொழிகளின் பெயராக அமைந்திருக்கிறது.

எழுதியவர்

புலம்பல் புத்தகத்தை எழுதியது யாரென தெளிவாக தெரியாவிடினும் யூத மற்றும் கிறிஸ்து பாரம்பரியங்கள் எரேமியா என குறிப்பிடுகிறது. இதற்கான அடிப்படை

  1. 2 நாளாகமம் 35:25 எரேமியா யோசியாவிற்காக பாடிய புலம்பல் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்ற குறிப்பு உள்ளது. 
  2. எரேமியாவில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் (எரேமியா 7:29, 8:21, 9:1, 10,20) புலம்பலிலும் பிரதிபலிக்கிறது. 
  3. எரேமியா புத்தகத்தின் வார்த்தைகள் மொழி, நடை புலம்பல் புத்தகத்தின் வார்த்தைகள், மொழி, நடைக்கு இணையாக காணப்படுகிறது 
  4. எரேமியா தீர்க்கதரிசி எருசலேம் வீழ்ந்த காலத்தில் அதைக் கண்டவர். இதற்கு இணையாக இப்புத்தகத்தில் எருசலேமின் வீழ்ச்சி தெளிவாக குறிக்கப்பட்டிருக்கிறது.

இப்புத்தகம் எருசலேமின் வீழ்சியையும், அழிவையும் பற்றி குறிப்பிட்டிருப்பதால், இது கி.மு. 586க்கு பின்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். இப்புத்தகத்தில் எருசலேம் நகரமும், ஆலயமும் திரும்ப கட்டப்பட்ட குறிப்புகள் காணப்படாததால் கி. மு. 516க்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பெரும்பாலான கூற்றுப்படியும், எழுதப்பட்டிருக்கும் சம்பவங்கள் அடிப்படையில் கி. மு. 575க்கு முன் எழுதப்பட்டிருக்கலாம்.

நோக்கமும், பொருளும்

கி.மு.586ல் அழிக்கப்பட்ட எருசலேமைக்குறித்த புலம்பல் இதில் அடுக்கப்பட்டிருக்கிறது. 

  1. 1.இராஜாக்கள் கொலை செய்யப்பட்டதும் (2:6,9, 4:20) பிரபுக்கள் (1:6, 2:2,9, 4:7-8, 5:12) முதியவர் (1:19, 2:10, 4:16, 5:12) ஆசாரியர்கள் (1:4,19, 2:6,20, 4:16)தீர்க்கதிரிசிகள் (2:9,20) மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட நிலமையை விளக்குகிறது.
  2. பட்டினியால் வாடும் தாய் காட்டுமிரான்டியாக மாறி தங்கள் பிள்ளைகளை தின்னும் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது.(2:20, 4:10)
  3. விரிவான பண்டிகையும், ஆராதனையும் முடிவுக்கு வந்திருக்கிறது.(1:4,10)
  4. எருசலேம் நகரமும், ஆலயமும் அழிக்கப்படுவதற்கு பாபிலோனியர்கள் ஒருகருவியாக பயன்பட்டார்கள். ஆனால் அழித்தவர் தேவன் என்பது உணர்த்தப்படுகிறது.(1:12-15, 2:1-8, 17,22, 4:11)
  5. புலம்பலோடு ஆரம்பிக்கும் இப்புத்தகம் (1:1-2) மன்னிப்பு கோரி மனம் திரும்புவதோடு முடிகிறது.(5:21-22)
  6. 6.தேவனின் அன்பு (3:22), உண்மை (3:23),நம்பிக்கை (3:21, 24-25), மற்றும் இரட்சிப்பு (3:26), ஆகிய கருத்துக்கள் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. தேவனின் கிருபை பெரியது எனவும் முடிவற்றது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது (3:22- 23).

எசேக்கியேல் Ezekiel

எசேக்கியேல் என்பதற்கு “தேவன் பெலப்படுத்துகிறார்” பொருள்.3:8-9ல் தேவன் என் எசேக்கியேல் தீர்க்கதரிசியை தேவனுக்கு எதிரானவர்கள் மற்றும் யூதா முரட்டாட்டமுள்ளவர்களிடமிருந்து பாதுகாத்து பெலப்படுத்துகிறார். தேசத்தில்

எழுதியவர்

இப்புத்தகத்தை எழுதியவர் எசேக்கியேல் என்பது பொதுவாக அணைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும்.

வரலாற்றுப் பின்னணி

  1. 1.கி.மு.7ம் நூற்றாண்டின் பின்பகுதியில் நடைபெற்ற காரியங்களை நாம் எசேக்கியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். வடதேசம் என அழைக்கப்பட்ட இஸ்ரவேல் தேசம் அசீரியரால் கிமு.722ல் சிறைபிடிக்கப்பட்டுப்போனது. தற்போது பாபிலோன் பேரரசு அசீரிய பேரரசை மேற்கொண்டு தென் தேசமாகிய யூதாதேசத்தை கிழக்கிலிருந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது. தெற்கே எகிப்தும் பலமுள்ளதாக காணப்பட்டது.
  2. எசேக்கியேல் கி. மு. 623ல் பிறந்திருக்கலாம் 1:2ன் படி யோயாகீன் ராஜாவின் சிறையிருப்பின் 5ம் வருடம் என குறிப்பிட்டிருக்கிறது. ஏசேக்கியல் சிறைபிடிக்கப்பட்டது கிமு.597 எனவே 1:2ல் குறிப்பிட்ட வருடம் 593 1:1ன் படி 30ம் வருடம் எசேக்கியேல் அழைப்புபெற்ற வருடமாகும்.
  3. எசேக்கியேல் யோசியா ராஜாவின் ஆட்சிகாலத்தில், சட்ட புத்தகம் குறிப்பாக உபாகமம் கண்டெடுக்கப்பட்ட கி.மு.621 வருடம் எசேக்கியேல் சிறுபிள்ளையாக இருந்திருக்ககூடும்.
  4. எசேக்கியேல் தன் 18 வது வயதில் முதலாவது பாபிலோனிய படையெடுப்பை கண்டிருக்கிறார். இப்படையெடுப்பின்போது தானியேல் போன்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போயினர். 
  5. 5.தனது 25ம் வயதில் (கிமு.597) யூதாவின் ராஜா யோயாக்கீனோடு இவரும் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோன் கொண்டுச் செல்லப்பட்டார். (2 இராஜா 24:10- 17)பொதுவாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் சிறையிலும் அடிமைகளாகவும் அனுமதிக்கப்பட்டார். அவர் தெலாப்பிலே தங்கியிருந்தார் (1:1, 3:15) யூதா மூப்பர்கள் கர்த்தருடைய வார்த்தைக்காக இவருடைய வீட்டுக்கு கடந்து வந்தனர் (8:1,14:1, 20:1)

காலம்

எசேக்கியேல் புத்தகத்தில் பல தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள வேத ஆராய்ச்சியின் படி இதனுடைய காலத்தை எளிதாக கணிக்க முடிகிறது.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13 தேதிகளில் 12 எரேமியா தேவனிடமிருந்து செய்திப் பெற்ற தேதிகளாகும். 13 வது தேதி எருசலேம் வீழ்ந்ததை ஒருவன் வந்து தெரிவித்த தேதியாகும்.(33:21)

ஜூலை 593(கி.மு.) தன் அழைப்பபைபெற்று 22 வருடங்கள் செயல்பட்டு தன் கடைசி தரிசனத்தை ஏப்ரல் 571 (29:17)ல் பெற்றார். 1:1ல் வாசிக்கும் 30 வருடம் இவர் பிறந்த வருடத்தை குறிக்கும் ஏனெனில் ஆசாரியர் தன் பணியை மேற்கொள்ளும் வயதும் 30 (எண் 4:3).

நோக்கம்

இஸ்ரவேலருக்கு தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்ட இவர் தோல் சாப்பிடுவதாக உறுவாக்கப்பட்டிருப்பது (அதி 1-3) வார்த்தையை சுருளை எற்றுக்கொள்ளுவதாகும். பின்பு மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதை போதிப்பது இவர் நோக்கமாக இருந்தது.(2:8-3:11)

இவர் இஸ்ரவேலின் காவல்காரராக நியமிக்கப்பட்டார் (3:16-21)இவரின் கடமை தவறான வாழ்க்கை வாழுகின்ற மக்களை கண்டித்து உணர்த்துவதாகும். அவ்வாறு கண்டிக்கத் தவறினால் இந்த பழி காவல்காரர் மீது அமரும். எனவே மக்களை உணர்த்துவதற்காக அவர் செயல்பட்டார்.

செய்தியும் கருத்தும்

எசேக்கியேல் தன்னுடைய செயதியில் மூன்று காரியங்களை வலியுறுத்துகிறார்.

  1. யூதா தேசத்து மக்கள் பாவம் செய்தனர். இதன் விளைவாக தேவன் இவர்களை நியாயந்தீர்த்து பாபிலோனுக்கு அடிமைகளாக அனுப்பினார்.(22:1-31) மக்கள் மனம்திரும்பி தேவனைச் சேரவேண்டும்.
  2. பாபிலோனின் அடிமைத்தனம் தொடரும் (4:6, 6:8-10, 12:10-16,14:22,22:15). கள்ள தீர்க்கதரிசிகள் எருசலேம் மறுபடியும் திரும்புவது விரைவாக இருக்கும் என கூறிவந்தனர். இச்சூழலில் மக்கள் தேவனிடம் திரும்ப வேண்டுமென உரைத்தார்.
  3. எதிர்காலத்தில் இஸ்ரவேல் மறுபடியும் கட்டப்படும் (11:16-21, 20:33-44, 28:25-26, 36:8-37:28). இது விசுவாசிப்பவர்களுக்கு மாத்திரமே நடக்கும். எசேக்கியேல் வார்த்தையை பங்குபெறமாட்டார்கள். கேட்கும் அநேகர் இக்கூட்டத்தில்

சிறப்புக் குறிப்புகள்

எசேக்கியேல் ஒரு தரிசன தீர்க்கதரிசி என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது எடுத்துக்காட்டோடு ஒலி மூலமாகவும் தேவன் தம்முடைய வார்த்தைகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்துகிறார்.

எசேக்கியேலின் தரிசனங்கள்

  1. சேராபீன் தரிசனம். எசேக்கியேலின் அழைப்பு (1:4-28)
  2. புத்தகச்சுருள் தரிசனம்
  3. 3. பள்ளத்தாக்கு தரிசனம்
  4. எருசலேமின் தரிசனம்
  5. தேவாலயத்தில் நான்கு அருவருப்புகள் (8:1-18)
  6. 6.மனுஷர் கொலைசெய்யப்படுதல் (9:1-11)
  7. 7.ஊர் அக்கினியால் அழிக்கப்படுதல் (10:1-22) 
  8. தேவன் நகரத்தை விட்டுசெல்லுதல் (11:1-25)
  9. 9.உலர்ந்த எலும்பு தரிசனம்
  10. 10.புதிய ஆலயமும் மற்ற காட்சிகளும் (40:148:35)

தானியேல் DANIEL

தானியேல் என்பதற்கு “தேவன் நியாயாதிபதி” அல்லது “தேவன் என் நியாயாதிபதி” எனப்பொருள். இப்புத்தகத்தின் தலைமை பாத்திரத்தின் பெயரையே இப்புத்தகம் தலைப்பாக கொண்டுள்ளது.

எழுதியவர்

தானியேல் புத்தகத்தை எழுதியவர் தானியேலாவார். இதை தானியேல் புத்தகத்தின் மூலம் அறியலாம் (9:2, 10:2).மேலும் கிறிஸ்து கூறும்பொழுது இக்கூற்றை உறுதிப்படுத்துகிறார் (மத்தேயு 24:15)

காலம்

இஸ்ரவேலர் பாபிலோனியரின் சிறையிருப்பில் இருந்தபொழுது எழுதப்பட்ட நூல் இதுவாகும். இது பெர்சிய ராஜா கோரேஸ் பாபிலோனை மேற்கொண்ட நாட்களிற்கு (கி.மு.539) பின்பு சுமார் 530ல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பின்னணி

  1. 1.வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும்போது நான்கு வல்லமையுள்ள அரசர்கள் பாபிலோனை ஆண்டார்கள்.1. பாபிலோனிய ராஜா (கி. மு. 607- 560) நேபுகாத் நேச்சர் 2. பாபிலோன் ராஜா பெல்சாத்சார் (கி. மு. 560-550) 3. மேதிய ராஜா தரியு (கி. மு. 520-487) 4. பெர்சியா ராஜா கோரேஸ் (கி. மு. 486-466)
  2. 2.கி. மு. 621ம் வருடம் மோசேயின் நியாயப்பிரமாணம் எருசலேம் தேவாலயத்தில் கண்டுபிடித்த நாட்களில் யூதா நாட்டின் இராஜா வம்சத்தில் தானியேல் பிறந்திருக்கக் கூடும்.
  3. தானியேல் எசேக்கியா ராஜாவின் வம்சத்தில் வந்தவர் என ஒரு கூற்று உண்டு (2 இராஜா 20:17-18. ஏசாயா 39:7, தானியேல் 1:3)
  4. கி.மு. 605ல் முதலாவதாக சிறைப்பிடிக்கப்பட்ட கூட்டத்தில் தானியேலும் ஒருவராக காணப்பட்டார். அப்போழுது இவர் ஒரு வாலிபராக இருந்தார். இக் கூட்டத்தில் சாத்ராக் என பெயர்மாற்றப்பட்ட அனனியா, மேஷாக் என பெயர் மாற்றப்பட்ட மிஷாவேல், ஆபேத்நேகே என பெயர் மாற்றப்பட்ட அசரியா (1:7) ஆகியோரும் இருந்தனர். பாபிலோனிய அரண்மனையில் தானியேலுக்கும் கல்தேயருடைய கல்வி கொடுக்கப்பட்டது.(1:4)தேவன் இவருக்கு புதிரை புரியவைக்கும் தாலந்தும், கனவை விளக்கும் தாலந்தும் கொடுத்தார். (1:7 அதி 2,4) தானியேல் பிரதானியாக பாபிலோனின் மாகாணத்தை ஆள அதிகாரம் கொடுக்கப்பட்டது. மேதிய மன்னன் தரியு மூலமாக தேசாதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மேலான பிரதானியாக தானியேல் நியமிக்கப்பட்டான்.
  5. தானியேல் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டது குறிப்பிடப்படாவிட்டாலும் கி. மு. 536 வரை அதாவது முதலாவது யூதர்கள் எருசலேமுக்கு திரும்பிய பின் 2 ஆண்டுகளில் தன் ஊழியத்தை நிறைவேற்றினார். இவர் சுமார் 70 ஆண்டுகள் சிறையிருப்பின் காலத்தில் (கி. மு. 605-536 நடைபெற்ற காரியத்தை இக்காலத்திற்கு பின் எழுதியிருக்கக் கூடும்.
  6. தானியேல் தைரியமும், விசுவாசமும் சிங்கத்தின் கெபியில் விளங்குகிறது (6:16-24) தானியேலின் மரணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

நோக்கமும், கருத்தும்

  1. தேவன் உலகத்திற்குப் பொதுவானவர் என்பது இப்புத்தகத்தில் புதைந்து கிடக்கும் கருத்தாயிருக்கிறது.
  2. இராஜ்ஜியத்தை ஆளுகிறவர் தேவன் என்று மக்களும், ஆளுகிறவர்களும் உணர்ந்து கொள்ள இப்புத்தகம் எழுதப்பட்டது.
  3. தானியேலின் தரிசனம் தேவனை வெற்றிசிறந்தவராக காண்பிக்கிறது (7:11, 26-27, 8:25, 9:27, 11:45, 12:13) 4. தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாக ஏற்படுத்தப்போகும் அழிவில்லாத நிலையான அரசைக் குறித்து விளக்குகிறதாக இப்புத்தகம் காணப்படுகிறது.(2:44, 7:27 வெளி 11:15)
  4. தானியேல் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்: முதலாவது வரலாற்றுப் பகுதி (அதி 1-6) இரண்டாவது தீர்க்கதரிசனப் பகுதி (அதி 7- 12)

Leave a Reply