ரோமர் – கொலோசெயர் சுருக்கம் 

ரோமர் – கொலோசெயர் சுருக்கம் 

ரோமர் ROMANS

ரோமக்குடிமகனாகிய பவுல் இக்கடிதத்தை எழுதும் வரை ரோமாபுரிக்கு சென்றதில்லை. இதுவரை மூன்று பெரிய மிஷனரி பயணத்தை பவுல் மேற்கொண்டிருந்தாலும் அவர் சிறிய ஆசியாவில் மட்டுமே சபைகளை ஸ்தாபித்திருந்தார். பவுல் ரோமாபுரிக்கு கடிதத்தை எழுதிய காலத்தில் அது ரோமப்பேரரசின் தலை நகரமாக விளங்கியது. உலகின் மிகப்பெரிய பேரரசின் தலைநகரமான இந்நகரம் வாணிபத்திற்கும் அரசியலுக்கும் பெயர்பெற்ற நகரமாக விளங்கியது. பெந்தேகோஸ்தே நாளின் போது ரோமாபுரியிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் (அப்போஸ்தலர் 2:10:11) பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு மனந்திரும்பி, ரோமாபுரியிலே சபையை உருவாக்கினார்கள் அங்கு இச்சமயத்தில் யூதரும் புற ஜாதியினரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஆதிதிருச்சபைத்தலைவர்களில் ஒருவரான கிளமென்ட் தன்னுடைய குறிப்பில் பவுலும், பேதுருவும் நீரோ மன்னரால் கொல்லப்பட்டதாக எழுதியுள்ளார்.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதியுள்ளார் என இக்கடிதத்தில் தெளிவாக உள்ளது. (ரோம 1:1,2). இக்கடிதத்தை பவுல் கொரிந்து பட்டணத்திலிருந்து கி.பி.57ல் எழுதியுள்ளார். (அப்போஸ்தலர் 20:2,3)

எழுதப்பட்ட சூழ்நிலை

எருசலலேமிலே பஞ்சம் உண்டானதின் நிமித்தம் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யும் படியாக பவுல் மக்கத்தோனியா அகாயாவிலுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து பொருட்களை சேகரித்து அதை எருசலேமிற்கு கொண்டுசெல்ல ஆயத்தமாயிருக்கிறார். (ரோமர் 15:25:27). மேலும் ரோமாபுரியில் சபை உண்டென்று அறிந்து, அவர்களையும் சந்தித்து விட்டு ஸ்பானியா செல்ல விருப்பமுள்ளவராய் இக்கடிதத்தை எழுதுகிறார். திருச்சபையில் யூதர், புறஜாதியார் பிரிவினை உள்ளதை அறிந்திருந்தார். இங்கு புறஜாதியார் அதிகமாயும், யூதர்கள் குறைவாயும் இருந்ததன் காரணமாக யூதர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர் இவ்வாறு ஒதுக்கப்பட்டதன் முக்கிய காரணம் யூதர்கள் தங்களுடைய உணவு வகைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பினர். மேலும் பரிசுத்த நாட்களை கடைப்பிடிப்பதில் அதிக அக்கறை காட்டினர். (ரோமர் 14:1-6)

பவுல் நான்காவது மிஷனரி பயணமாக, ரோமாபுரிக்கும் ஸ்பானியாவிற்கும் செல்ல திட்டமிட்டவராய் எருசலேம் கடந்து சென்றார். ஆனால் அங்கு அவர் கைது செய்யப்பட்டு கைதியாக தலைமை நீதிமன்றமான ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

பிற நிருபத்திற்கும் ரோமர் நிருபத்திற்குமுள்ள வேறுபாடு

பவுல் எழுதிய மற்ற கடிதங்களுக்கும் இக்கடிதத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற ஊர்களையும் சபைகளையும் நன்கு அறிந்து, அவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்கும்படியாகவும் அவர்களுக்கு ஆவிக்குரிய அறிவுரைகளை கொடுக்கும்படியாகவும் எழுதியுள்ளார். ஆனால் ரோமாபுரி திருச்சபையைப்பற்றிய முழு விபரம் அவருக்கு தெரியாது எனவே இது முன்பின் அறியாத ஒரு திருச்சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் எழுதிய ஒரு கடிதமாகும் இருப்பினும் யூதர், புறசாதியார் திருச்சபையில் இருந்ததை பவுல் அறிந்திருந்தார்.

கடிதத்தின் நோக்கங்கள்

1.தன்னுடைய வருகையைப்பற்றி முன்னறிவிப்பதற்காகவும் அதற்கான ஆயத்தங்களையும் செய்யக்கோரியும் (1:10-15, 15:22-29) இக்கடிதத்தை எழுதினார்.

  1. அப்போஸ்தலர்களின் போதகத்தை கேட்டிராத சபைக்கு இரட்சிப்பின் அடிப்படை முறையைப்பற்றி கூறும்படியாக எழுகினார்.
  2. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் யூதருக்கும் புறஜாதியாருக்கும் உள்ள உறவை எடுத்துக்கூறவும் இக்கடிதத்தை எழுதினார்.

முக்கிய கருத்துக்கள்

ரோமர் 1:16,17 ல் குறிப்பிட்டுள்ளது போல விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். யூதரானரலும் கிரேக்கரானாலும் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் பாரபட்சம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்கூறுகிறார். மேலும் மனிதனுடைய பாவம், தேவ நீதி, தேவனுடைய கிருபை, கிறிஸ்தவ வாழ்க்கையின் நன்னெறி ஆகிய கருத்துக்கள் ஆராயப்பட்டிருக்கின்றன.

சிறப்பு குணாதிசயங்கள்

இது ஒரு கடிதம் என்பதை விட இறையியல் கட்டுரை என்பதே சரியாகப்பொருந்தும். ஏனெனில், இறையியல் கருத்துக்களை வரிசைக்கிரமமாக எழுதியுள்ளார்.

  1. இறையியல் கருத்துக்களை மற்ற கடிதங்களை விட சிறப்பாக எழுதியுள்ளார். குறிப்பாக பாவம், இரட்சிப்பு, கிருபை விசுவாசம், நீதி, பரிசுத்தமாகுதல், இறப்பு மற்றம் உயிர்த்தெழுதல் ஆகியவற்றைப்பற்றி சிறப்பாக எழுதியுள்ளார்.
  2. பழைய ஏற்பாட்டு வசனங்களை வெகுவாக பயன்படுத்தியுள்ளார்.

அதிகாரம் 9-11ல் இதை நாம் தெளிவாகக்காணலாம்.

  1. இஸ்ரவேலைப்பற்றிய பாரம் இக்கடிதத்தில் பிரிதிபலிக்கிறது. அதனுடைய தற்போதைய நிலை. புறஜாதியரோடு உள்ள உறவு மற்றும் இறுதி இரட்சிப்பு பற்றிய கருத்துக்களை எழுதியுள்ளார்.

1 கொரிந்தியர் 1 Corinthians

கொரிந்து பட்டணம் வடக்கு அகாயா (கிரீஸ்) வையும், தெற்கு அகாயாவையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளதால் வாணிப வளர்ச்சியடைந்த நகரமாகக் காணப்பட்டது. இவ்வாறு வளர்ந்து வந்த பட்டணம் ரோமப்பேரரசால் கி.மு.146ல் அழிக்கப்பட்டு, பின்பு கி.மு.46ல் மறுபடியும் கட்டப்பட்டது. கொரிந்தியர் நிருபம் எழுதப்பட்ட காலத்தில் இப்பட்டணம் புதியதாய் உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இருந்தது. ரோமர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பாக இது கிரேக்கர்கள் நிறைந்த சமுதாயமாக இருந்தது. பின்பு இது பல இனத்தவர் கலந்த ஒரு சமுதாயமாக மாறியது. (கிரேக்கர். யூதர் மற்றும் ரோமர்). பவுலின் காலத்தில் சுமார் 6.5 இலட்சம் மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும்.

இப்பட்டணத்து மக்கள் வாணிபத்தில் ஈடுபட்டு இருந்ததால் செல்வந்தர்களாக இருந்து வந்தனர். கிரேக்க தத்துவங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. குறைந்தது ஆறு பிற கடவுளை வழிபடும் கோயில்கள் இருந்தன. இது ஒரு வாணிப நகரமாதலால் ஒழுக்கமற்ற செயல்கள் நிறைந்து காணப்பட்டது.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

1 கொரிந்தியர் 1:1, 2 கொரிந்தியர் 1:1ஐ வாசிக்கும்பொழுது அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா பிரந்திய பரிசுத்தவான்களுக்கும் எழுதிய கடிதம் என்பது தெளிவாகிறது. பவுல் தன்னுடைய இரண்டாம் மிஷினரி பயணத்தின் போது கொரிந்து பட்டணத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து திருச்சபையை ஸ்தாபித்தார். அவர் தன்னுடைய மூன்றாவது மிஷினரி பயணத்தின் போது கி.பி.55ல் எபேசு பட்டணத்தில் இருந்து கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது கடிதத்தையும் (1 கொரிந்தியர் 16:5-8) அதே வருடத்தில் மக்கத்தோனியாவிலிருந்து (2கொரிந்தியர் 2:13, 7:5) இரண்டாவது கடிதத்தையும் எழுதினார்.

எழுதப்பட்ட சூழ்நிலை

1.பவுல் இரண்டாது மிஷினரி பயணத்தின் போது சபையை உருவாக்கினார்.(அப்போஸ்தலர் 18:1-18) 

  1. பவுல் ஒரு கடிதத்தை கொரிந்து சபைக்கு, (1 கொரிந்தியர் 5:9) கிறிஸ்தவர்களை, ஒழுக்கமற்ற மற்ற மக்களிடமிருந்து விலகி இருக்கக்கோரி எழுதினார்.

3.சபையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு விளக்கமளித்து 1. கொரிந்தியர் கடிதத்தை எழுதினார்.

4.பவுல் கொரிந்து திருச்சபை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க எபேசுவிலிருந்து கொரிந்துவுக்கு சென்று மக்கள் ஏற்றுக்கொள்ளாதபடினால் வருத்தத்தோடு திருப்பினார். (2 கொரிந்தியர் 13:1 பிபி)

5.பவுல் எபேசுவை விட்டு தீத்துவை சந்திக்கும்படி மக்கத்தோனியா செல்கிறார்.(11 கொரிந்தியர் 2:13,7:1)

6.பவுல் இரண்டாம் கடிதத்தை மக்கத்தோனியாவிலிருந்து எழுதினார்.

7.பவுல் மூன்றாம் முறையாக கொரிந்து சென்றார். (அப்போஸ்தலர் 20:2)

எழுதிய நோக்கம்

  1. குலோவேயாள் வீட்டாரின் அறிக்கை மூலம் கொரிந்து சபையின் பிரச்சனைகளை அறிந்து கொண்டு (1 கொரிந்தியர் 1:11) அவற்றை தீர்க்க. 
  2. ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயு ஆகியோர் மூலமாக கொரிந்து திருச்சபை மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும் (1 கொரிந்தியர் 16:17,7:1) பவுல் இந்த கடிதத்தை எழுதினார்.

முக்கிய கருத்துக்கள்

சபைப்பிரிவினையை நீக்கி ஒற்றுமையை வளர்க்க வேண்டுகோள், ஒழுக்கமில்லாத வாழ்க்கையைக் குறித்த எச்சரிக்கை, கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள வழக்கு பிரச்சினையை தீர்க்க ஆலோசனை, வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஊக்கமளித்தல். திருமணத்தைப் பற்றிய குழப்பம், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைப்பற்றிய விளக்கம். ஆராதனைக்கூட்டத்திலே பெண்களின் ஈடுபாடு, இராப்போஜனத்தைப் பற்றிய அடிப்படைத்தத்துவம் மற்றும் ஆவிக்குரிய வரங்களை குறித்த தெளிவான கருத்து ஆகியவை முக்கிய கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

2 கொரிந்தியர் 2 Corinthians

கொரிந்து பட்டணம் வடக்கு அகாயா (கிரீஸ்) வையும், தெற்கு அகாயாவையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளதால் வாணிப வளர்ச்சியடைந்த நகரமாகக் காணப்பட்டது. இவ்வாறு வளர்ந்து வந்த பட்டணம் ரோமப்பேரரசால் கி.மு.146ல் அழிக்கப்பட்டு, பின்பு கி.மு.46ல் மறுபடியும் கட்டப்பட்டது. கொரிந்தியர் நிருபம் எழுதப்பட்ட காலத்தில் இப்பட்டணம் புதியதாய் உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இருந்தது. ரோமர்களால் அழிக்கப்படுவதற்கு முன்பாக இது கிரேக்கர்கள் நிறைந்த சமுதாயமாக இருந்தது. பின்பு இது பல இனத்தவர் கலந்த ஒரு சமுதாயமாக மாறியது. (கிரேக்கர், யூதர் மற்றும் ரோமர்). பவுலின் காலத்தில் சுமார் 6.5 இலட்சம் மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும்.

இப்பட்டணத்து மக்கள் வாணிபத்தில் ஈடுபட்டு இருந்ததால் செல்வந்தர்களாக இருந்து வந்தனர். கிரேக்க தத்துவங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

குறைந்தது ஆறு பிற கடவுளை வழிபடும் கோயில்கள் இருந்தன. இது ஒரு வாணிய நகரமாதலால் ஒழுக்கமற்ற செயல்கள் நிறைந்து காணப்பட்டது.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

1 கொரிந்தியர் 1:1, 2 கொரிந்தியர் 1:1ஐ வாசிக்கும்பொழுது அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா பிரந்திய பரிசுத்தவான்களுக்கும் எழுதிய கடிதம் என்பது தெளிவாகிறது. பவுல் தன்னுடைய இரண்டாம் மிஷினரி பயணத்தின் போது கொரிந்து பட்டணத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து திருச்சபையை ஸ்தாபித்தார். அவர் தன்னுடைய மூன்றாவது மிஷினரி பயணத்தின் போது கி.பி.55ல் எபேசு பட்டணத்தில் இருந்து கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது கடிதத்தையும் (1 கொரிந்தியர் 16:5-8) அதே வருடத்தில் மக்கத்தோனியாவிலிருந்து (2கொரிந்தியர் 2:13, 7:5) இரண்டாவது கடிதத்தையும் எழுதினார்.

எழுதப்பட்ட சூழ்நிலை

  1. பவுல் இரண்டாது மிஷினரி பயணத்தின் போது சபையை உருவாக்கினார்.(அப்போஸ்தலர் 18:1-18)
  2. பவுல் ஒரு கடிதத்தை கொரிந்து சபைக்கு, (1 கொரிந்தியர் 5:9) கிறிஸ்தவர்களை, ஒழுக்கமற்ற மற்ற மக்களிடமிருந்து விலகி இருக்கக்கோரி எழுதினார்.
  3. சபையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு விளக்கமளித்து 1. கொரிந்தியர் கடிதத்தை எழுதினார்.

4.பவுல் கொரிந்து திருச்சபை மக்களின் பிரச்சனைகளை தீர்க்க எபேசுவிலிருந்து கொரிந்துவுக்கு சென்று மக்கள் ஏற்றுக்கொள்ளாதபடினால் வருத்தத்தோடு திருப்பினார். (2 கொரிந்தியர் 13:1 பிபி)

5.பவுல் எபேசுவை விட்டு தீத்துவை சந்திக்கும்படி மக்கத்தோனியா செல்கிறார்.(11கொரிந்தியர் 2:13,7:1)

6.பவுல் இரண்டாம் கடிதத்தை மக்கத்தோனியாவிலிருந்து எழுதினார்.

7.பவுல் மூன்றாம் முறையாக கொரிந்து சென்றார். (அப்போஸ்தலர் 20:2)

எழுதிய நோக்கம்

  1. தீத்து மூலம் பவுல் தெரிந்து கொண்ட கொரிந்தியரின் மனமாற்றத்தை குறித்த சந்தோஷத்தை வெளிப்படுத்தவும்
  2. எருசலேம் திருச்சபைக்காக காணிக்கை கொடுக்கக் வேண்டியும்.
  3. மனந்திரும்பாத திருக்சபை மக்களுக்கு தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை உறுதிப்படுத்தவும் இக்கடிதத்தை எழுதினார்.

அப்போஸ்தல முக்கிய கருத்துக்கள்

பவுலுக்கும் கொரிந்து சபைக்கும் பழைய புதிய உறவுகளை குறித்த ஆய்வு, நற்செய்தி ஊழியம். பாவத்திலிருந்து விடுதலை, காணிக்கை மற்றும் அபோஸ்தலத்துவ உறுதி ஆகியவை இரண்டு கொரிந்தியரின் முக்கிய கருத்துக்களாகும்.

கலாத்தியர் Galatians (கிறிஸ்தவ விடுதலை)

“கலாத்தியருக்கு எழுதின நிருபம் – நான் என்னை இதற்காக விவாக நிச்சயம் செய்திருக்கிறேன். இது என்னுடைய மனைவி” என மார்ட்டின் லூதர் கிங் கூறிகிறார். இக்கருத்து இக்கடிதத்தின் மீதுள்ள அவருடைய பற்றை வெளிப்படுத்துகிறது.

யார், யாருக்காக, எப்பொழுது எழுதினது?

அப்போஸ்தலனாகிய பவுல் இந்தகடிதத்தை எழுதினார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர் யாருக்கு எழுதினார் என்பதில் இருவித கருத்துக்கள் நிலவினாலும். தெற்கு கலாத்திய பகுதியில் உள்ள இக்கோனியா, லிஸ்திரா, தெர்பை ஆகிய ஊர்களில் உள்ள திருச்சபைகளுக்கு எழுதினார் என்பது மிக தெளிவான கருத்தாகும். (கலாத்தியர். 2:1,9, 13, 4:14). அப்போஸ்தலர் 13,14 அதிகாரங்களில் பவுல் தன் உடன் ஊழியனாகிய பர்னபாவுடன் தங்களுடைய முதல் மிஷனரி பயணத்தின் போது இப்பகுதியில் ஊழியம் செய்ததாக நாம் வாசிக்கின்றோம். பவுல் இக்கடிதத்தை தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தின் முடிவில் அதாவது கி.பி. 49ம் ஆண்டு அந்தியோகியாவிலிருந்து எழுதியிருக்கவேண்டும்.

எழுதப்பட்ட சூழ்நிலை

பவுல் கி.பி. 47 ஆம் ஆண்டு பர்னபா மற்றும் மாற்குவை அழைத்துக்கொண்டு தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தை அந்தியோகியாவிலிருந்து ஆரம்பித்து சீப்புரு தீவு, பெர்கே, பித்தினியாவிலுள்ள அந்தியோகியா வழியாக காலத்திய பிராந்தியத்தை அடைந்தார். இப்பகுதியில் உள்ள இக்கோனியா, லிஸ்திரா. தெர்பை ஆகிய ஊர்களில் தேவனுடைய ஊழியத்தை சில மாதங்கள் செய்து சபைகளை உருவாக்கினார். இவர்கள் வளரும் பருவத்தில் உள்ள சூழ்நிலைகளில் பவுலும் பர்னபாவும் அந்தியோகியா சென்றடைந்தனர். அப்பொழுது, பவுலின் கலாத்தியா ஊழியத்திற்கு பின்பு யூதமார்க்கத்தினர் (துரனயணைநச) அங்கு சென்று வளரும் இள விசுவாசிகள் மத்தியில் தவறான போதனைகளை (கள்ளப்போதகம்) பரப்பபிவிட்டனர். இச்செய்தி பவுலின் செவிகளில் சென்று எட்டியது. அந்த கள்ளபோதனை என்னவென்றால் புற ஜாதியர் கிறிஸ்தவராக மாற முதலாவது யூதனாக வேண்டும் என்பதே. இதுமட்டுமல்லாமல் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அப்போஸ்தலரின் ஒருவன் பவுல் இல்லை, எனவே அவன் அப்போஸ்தலன் இல்லை எனவும் போதித்து வந்தனர். இச்சூழ்நிலையில் அவர்களை நல்வழிப்படுத்த எழுதப்பட்ட கடிதமே கலாத்தயருக்கு எழுதிய கடிதமாகும்.

எழுதிய நோக்கம்

இச்சூழலில் எழுதப்பட்ட இக்கடிதத்தின் நோக்கம் என்னவென்றால்

  1. தான் தேவனால் நேரடியாக அழைக்கப்பட்ட அப்போஸ்தலன் என்பதை நிருபிக்கவும்
  2. யூத மார்க்கத்தினர் போதித்துள்ள தவறான கருத்துக்களை மக்கள் தவறு எனபுரிந்து கொள்ளவும், சரியான போதனைகளைக் கொடுத்து மக்களை நல்வழிப்படுத்தவும் இக்கடிதத்தை எழுதினார்.

முக்கிய கருத்துக்கள்

யூத மார்க்கத்தினர் ஒருவன் நியாயப்பிரமாணத்தின் மூலமாகவே நீதிமானாக மாற்றப்படுகிறான் என போதித்து வந்தனர். அதற்கு பவுல் ஒருவன் நீதிமானாக மாறுவது அவன் தேவன் மீது கொண்டுள்ள நம்பிக்கை அல்லது விசுவாசத்தினால் மட்டுமே எனக்கூறுகிறார்.

இக்கடிதத்தின் முக்கிய வசனம் (Key verse) கலா 2:15.

புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.”

எபேசியர் Ephesians

துருக்கி தற்பொழுது அழைக்கப்படுகிற, அக்கால சிறிய ஆசியாவின் என முக்கியமான நகரம் எபேசு பட்டணமாகும். பரி. யோவான் இப்பகுதியில் ஊழியம் செய்து, தன்னுடைய தீர்க்கதரிசன புத்தகத்தில் (வெளி 2:1-7) ஏழு சபைகளில் ஒன்றாக எபேசு சபையை குறிப்பிட்டுள்ளார். இது ஒரு துறைமுகப்பட்டணம். மேலும் வாணிப வழிகளுக்கு முக்கிய இணைப்பாகவும் காணப்படுவதால் வாணிப வளர்ச்சி பெற்ற நகரமாகவும் காணப்பட்டது. தியானாள் எனப்பட்ட ரோம தேவதையின் கோயில் இங்கு கட்டப்பட்டிருந்தது. (அப்போஸ்தலர் 19:23-31) பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது சுமார் மூன்று ஆண்டுகள் இப்பகுதியை ஊழிய மையமாக வைத்து ஊழியம் செய்ததை நாம் அப்போஸ்தலர். 19:10ல் வாசிக்கலாம்.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

இக்கடிதத்தை எழுதியவர், தான் பவுல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அடையாளம் காட்டியுள்ளார். (1:1, 3:1, 4:1, 6:19,20). எபேசு பட்டணத்தில் உள்ள சபை மக்களுக்கு இக்கடிதம் எழுதப்பட்டிருப்பினும் (1:1,2) அருகில் உள்ள மற்ற சபைகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இக்கடிதத்தை பவுல் ரோமாபுரி சிறைச்சாலையிலிருந்து கி.பி.60 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

எழுதப்பட்ட சூழ்நிலையும் நோக்கமும்

பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தை முடித்து விட்டு ரோமாபுரிக்கு செல்லவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எருசலேமிற்கு செல்கிறார். ஆனால் அங்கு அவரை சிறை பிடிக்கின்றனர் (அப் 21:3பிபி) நியாய விசாரிப்பின் போது பவுல் இராயருக்கு அபயமிட்டபடியினால் (அப்போஸ்தலர் 25:11-12) இராயனிடம் (ரோமபுரிக்கு) நியாய விசாரிப்புக்காக அனுப்பிவிடப்பட்டு கி.பி.59 முதல் 62 வரை காவலில் வைக்கப்பட்டார். அவ்வாறு காவலில் வைக்கப்பட்டபோது, சிறைச்சாலைக் கடிதங்களான எபேசியர், கொலோசேயர், பிலிப்பியர் மற்றும் பிலேமோன் ஆகிய கடிதங்களை எழுதினார்.

பவுல் எபேசு பட்டிணத்தில் மூன்றாண்டு ஊழியத்தின்போது சபையை உருவாக்கி அதை வளர்த்து வந்தார். எனவே தன்னுடைய கடிதத்தை வாசிப்பவர்களைப்பற்றி நன்கு அறிந்திருந்தார். இருப்பினும் மற்ற (கொரிந்து, கலாத்தியர், ரோமர்) கடிதங்களைப்போல எந்தவொரு குறிப்பான நோக்கங்களுக்காகவும் இக்கடிதத்தை அவர் எழுதவில்லை. பொதுவாகக்கூறின் சபை பக்திவிருத்திபற்றியும் சபை மக்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றியும் எழுதியுள்ளார், இருப்பினும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை என்னவென்றால் எபேசு மற்றும் அதை சுற்றியுள்ள பட்டணங்களில் புறஜாதியார் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதன் நிமித்தமாக அவர்கள் யூதர்களை தாழ்வாக எண்ணினார்கள். இச்சூழலில் இக்கடிதத்ததை எழுதினார்.

முக்கிய கருத்து

நாம் இரட்சிக்கப்பட்டதன் நோக்கம் நம்முடைய நன்மைக்காக மட்டுமல்லாமல் தேவனுக்கு மகிமையை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே.

தேவனுடைய பிரதான நோக்கம் காலங்கள் நிறைவேறும்போது……. சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும் (1:9).இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான படிகளாவன

1.கிருபையினால் தேவன் மனிதனோடு ஒப்புரவாகினார் (2:1-10), தேவன் ஒருவரோடொருவர் ஒப்புரவாகும்படி செய்தார். (2:11-22).

  1. பவுல் இக்கடிதத்தை இரண்டாக பிரித்து முதல் பாகத்தில் உபதேசத்தையும் இரண்டாவது பாகத்தில் இயேசுவின் அடியவர்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிலிப்பியர் Philippians

மகா அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் பிலிப்புவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த பட்டணம் கி.பி.46ல் ரோமரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாலிய மக்கள் இங்கு வெகுவாக குடிபெயர்ந்து வந்ததன் காரணமாக இத்தாலியா நாட்டு பட்டணத்திற்கு இணையான இந்நகரத்திற்கு வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அந்தஸ்து

பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது (அப்போஸ்தலர்16:13பிபி) சபையை உருவாக்கியிருக்கிறார். லீதியாள் மனந்திரும்பியது இப்பட்டணத்திலே (16:14). பவுலும் சீலாவும் காவலில் இருந்து அற்புதமாக விடுதலை பெற்றதும் (16:25,26) இப்பட்டிணத்திலேயே.

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

பிலிப்பியர் 1:1ஜ வாசிக்கம்போது பவுல் பிலிப்பிபட்டணத்து கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் என்பது தெளிவாக தெரிகிறது. இதை முதலாம் நூற்றாண்டு திருச்சபைக் குறிப்புகளும் உறுதிசெய்கிறது. கி.பி. 61ம் ஆண்டு பவுல் ரோமாபுரி சிறையிலிருந்தபொழுது எழுதிய மடலாகும்.

எழுதப்பட்ட சூழ்நிலை

பவுல் ரோமாபுரி சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த பிலிப்பி பட்டணத்து திருச்சபை மக்கள் பவுலின் நலன் விசாரிக்கப்பட்டதற்காகவும், அவருக்கு பொருளுதவி செய்யவும் (2:25) எப்பாப்பிரோதீத்துவை (கொலோசெ மற்றும் எபேசியரில் பவுல் குறிப்பிட்டுள்ள எப்பாபிராத்து அல்ல) தூதுவராக அனுப்பினார். தூதுவனாகிய எப்பாப்பிரோதீத்து பிலிப்பு திருச்சபையைப்பற்றிய செய்திகளை பவுலுக்கு தெரிவித்தான். எப்பாப்பிரோதீத்து ரோமாபுரியில் வியாதிப்பட்டு மரணத்திற்கு சமீபமாய் இருந்து தேவனுடைய கிருபையால் சுகமடைந்து (2:27) பிலிப்பு செல்ல தயாராய் இருந்த சூழ்நிலையில் பவுல் இக்கடிதத்தை எழுதினார்.

எழுதியதன் நோக்கம்

எழுதப்பட்ட சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது எழுதியதன் நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. பிலிப்பு பட்டணத்து திருச்சபை மக்கள் அனுப்பிய உதவித்தொகைக்கு நன்றி செலுத்தவும், எப்பாப்பிரோதீத்து கூறிய சபை பிரச்சினைகளுக்கு தீர்வும் விளக்கமும் கொடுக்கவும் (2:2-4,14,4:2), யூதமார்க்கத்து கள்ளப்போதகங்களைக்குறித்து எச்சரிக்கவும் (3:1பிபி), தீமோத்தேயு. எப்பாப்பிரோதீத்து வருகையைக் குறித்து தெரிவிக்கவும் (2:23,28பி)அவர்களை ஏற்றுக்கொண்டு கனம்பண்ண கோரியும் இக்கடிதத்தை எழுதினார்.

முக்கிய கருத்துக்கள்

பவுல் பிலிப்பு பட்டணத்து மக்களை 

  • 1) சுவிசேஷத்திற்கு பாத்திரமாக நடந்து கொள்ள வலியுறுத்துதல் (1:27-30) 
  • 2) தாழ்மையாய் நடந்துகொள்ள வேண்டுதல் (2:1-18). 
  • 3) யூதமார்க்கத்தாரையும், கிறிஸ்தவ நடத்தைக்கு எதிரானவர்களையும் குறித்து மக்களை எச்சரித்தல் (3:1-16,17-4:1)

இக்கடிதத்தின் அம்சங்கள்

1.பழைய ஏற்பாட்டு வசனங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

  1. இது ஒரு மிஷனரியின் நன்றி மற்றும் தன் ஊழியத்தைப்பற்றிய அறிக்கை 
  2. பலமான கிறிஸ்தவ வாழ்க்கையை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது.
  • 1) தாழ்மை (2:1-4)
  • 2) இலக்கை நோக்கி தொடர்தல் (3:13,14)
  • 3) கவலையின்மை (4:6)
  • 4) எல்லாவற்றையும் செய்ய பெலன் (4:13)
  1. இதை புதிய ஏற்பாட்டு சந்தோஷக் கடிதம் என குறிப்பிடலாம். ஏனெனில் சந்தோஷம் என்னும் வார்த்தை சுமார் 16 முறை வருகிறது. 
  2. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய முக்கியமான கருத்தை (2:5-11) இக்கடிதம் கொண்டுள்ளது.

கொலோசெயர் Colossians

பவுலின் நாட்களுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொலோசே பட்டணம் சிறிய ஆசியாவிலேயே தலைசிறந்த பட்டணமாக காணப்பட்டது. ஆனால் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அது ஒரு இரண்டாம் தர நகரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும் புதிய ஏற்பாட்டில் இந்நகரம் இடம் பெற்று விட்டது.

இப்பகுதியில் திருச்சபை உருவாக்கப்பட்டு அதிகமாக வளர்ந்து வந்தது. இத்திருச்சபையும் ரோமத்திருச்சபை போல பவுலால் உருவாக்கப்படாத திருச்சபையாகும். எனினும் பவுல் அத்திருச்சபைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பவுலின் மூன்று மிஷனரி பிரயாணங்களிலும் அவர் இவ்வூருக்கு சென்றதாக அப்போஸ்தலரின் நடபடிகளில் எழுதப்படவில்லை. அப்படியென்றால் இத்திருச்சபை யாரால் உருவாக்கப்பட்டது? பவுல் தன் மூன்றாவது மிஷனரி பயணத்தின் போது எபேசு பட்டணத்தில் மூன்று வருடம் தங்கியிருந்த நாட்களில், பவுலால் இயேசுவை ஏற்றுக்கொண்ட எப்பாபிரா எனப்பட்ட பவுலின் உடன் வேலையாள் (1:7-8) கொலோசே லவோதிக்கேயா பட்டணத்திலும், ஒராப்போலி பட்டணத்திலும் திருச்சபைகளை உருவாக்கியிருக்கலாம் (4:13). இத்திருச்சபை மக்கள் பெரும்பாலும் புறஜாதியார்கள். எப்பாபிரா, பிலேமோன் ஆகியோர் தங்களுடைய ஊழியங்களை பல பகுதிகளில் செய்து திருச்சபையைக் கட்டினார்கள். இவற்றில் பெரும்பாலானவை வீடுகளில் கூடிய திருச்சபைகளாகும். (4:15, பிலோமோன் 2).

யார் யாருக்கு எப்பொழுது எழுதியது?

மற்ற கடிதங்களைப்போலவே எழுதியவர் தன்னை பவல் எனத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் இக்கடிதம் இருவர் எழுதியதாக கூறப்படுகிறது (1:1). இந்த இரண்டாம் நபர் திமோத்தேயு. இதற்கான விளக்கங்களை பார்க்கும் போது இன்றைய சூழ்நிலையில் இருவர் இணைந்து ஒரு கடிதத்தை எழுதுவது வியப்பான காரியமல்ல. ஒரு கடிதத்தை எழுதுபவர் தன்னுடைய நண்பர் வாசிப்பவர்களுக்கு தெரிந்தவராக இருப்பின் அவரின் பெயரையும் இணைத்து எழுதுவது மரபு. இதன் அடிப்படையில் பவுல் தன் உடன் ஊழியனாகிய தீமோத்தேயுவின் பெயரை இணைத்திருக்கிறார். இக்கடிதத்தை பவுல் தன்னுடைய நண்பர் மூலமாக உருவாக்கப்பட்ட கொலோசே பட்டணத்து சபை விசுவாசிகளுக்கு எழுதுகிறார் (1:2). 1:2ல் பவுல் கொலோசே பட்டணத்திற்கு இதை எழுதுவதாக குறிப்பிட்டிருந்தாலும் கடிதம் முழுமையும் இது கொலோசே. லவோதிக்கேயா மற்றும் அதை சுற்றியுள்ள சபைகளும் இதை வாசிக்கவேண்டும் என பவுல் விரும்புவது புலனாகிறது (2:1, 4:16). பவுல் இக்கடிதத்தை எபேசியருக்கு எழுதிய அதே நாட்களில் அதாவது கி.பி.60ல் எழுதியிருக்கிறார். இதற்கான காரணத்தை நாம் ஆராயும் பொழுது, இரண்டு கடிதமும் (எபேசியர். கொலோசெயர்) தீகி எனப்பட்டவர் மூலமாக கொடுத்தனுப்பட்டது. (எபே 6:21) (கொலே 4:70). மட்டுமல்லாமல் கீழ்க்கண்ட வசனங்களில் பவுலின் வார்த்தைகளும், மொழி நடைகளும் பொருந்துவதை தெளிவாகக்காணலாம்.

எழுதப்பட்ட சூழ்நிலை

பவுல் இக்கடிதத்தை எழுதும்பொழுது இருந்த சூழ்நிலைக்கும் எபேசியருக்கு கடிதத்தை எழுதிய சூழ்நிலைக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால் கொலோசே இருந்த சூழ்நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கொலோசே சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 3-4 வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கவேண்டும் (கி.பி.56 57). சபை வளர்ந்து வரும் காலத்தில் எழுந்த பிரச்சனைகள், சந்தேகங்கள் இவைகளை எடுத்துக்கொண்டு எப்பாபிரா பவுலை சந்திக்க ரோமாபுரி சிறைக்கு செல்கிறார். அச்சந்தேகங்கள், பிரச்சினைகள், கள்ளப்போதனைகளுக்கு பதிலளிக்கும் வண்ணமாக இக்கடிதத்தை பவுல் எழுதுகின்றார்.

எழுதியதன் நோக்கம்

கொலோசே திருச்சபை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அல்லது கொண்டுள்ள தவறான போதகங்களுக்கு பதிலுரை எழுத வேண்டுமென எண்ணி இக்கடிதத்தை எழுதினார்.

கொலோசெ திருச்சபையின் தவறான போதனைகள்:

1.ஆவிகளுக்கும், தேவ தூதர்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து ஆராதனை செய்து வந்தனர். (1:16,20,2-15,19)

2.வெளிப்படையான சடங்காச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். குறிப்பாக யூதர்கள் பழைய ஏற்பாட்டு முறைகளை கடைபிடிக்கத் தூண்டினர். (2:16பி. 2:20பிபி)

3.மறைவான ஞானத்திற்கும் (2:2-5) மனித ஞானத்திற்கும் அல்லது தத்துவத்திற்கும் (2:4,8) முக்கியத்துவம் கொடுத்தனர்.

  1. துறவறம் மட்டுமே ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரதான வழியாக கருதப்பட்டது.(2:21)
  2. இவற்றினால் இயேசுவிற்கு தரப்படவேண்டிய முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது.

இப்படிப்பட்ட தவறான கருத்துக்களிலிருந்து திருச்சபையை சீர்படுத்த பவுல் இக்கடிதத்தை வரைந்தார்.

முக்கிய கருத்துக்கள்

எபேசியருக்கு எழுதிய கடிதத்தைப்போலவே முதல் பகுதியில் (3:1-4:6) உபதேசத்தையும், இரண்டாம் பகுதியில் (1:15-2:23) நடைமுறையில் செயல்படுத்தப்படவேண்டிய காரியங்களையும் எடுத்துரைக்கிறார். மேலே கூறப்பட்டுள்ள தவறான போதனைகளை சீர்படுத்தும் கருத்துக்கள் இக்கடிதத்தில் முக்கிய கருத்துக்களாகும்.

  1. தேவதூதர்களுக்கும், ஆவிகளுக்கும் ஆராதனை செய்வதை விட்டு விட்டு, இவ்வுலகத்தைப் படைத்த, ஆண்டுகொண்டிருக்கிற, கிறிஸ்துவிற்கு ஆராதனை செய்யுங்கள். கிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் தலையானவர் (1:15, 2:9)

2.பரிசுத்த வாழ்விற்கு, ஆவிக்குரிய பெருமையை தூண்டும் துறவமல்ல. இச்சையடக்கமே சிறந்த வழி. மேலும் கிறிஸ்துவை தரித்துக்கொண்டு அவருடைய கட்டளையின் படி நடக்கவேண்டும் (2:20பிபி. 3:1பிபி)

  1. உண்மையான ஞானம், லௌகிக ஞானத்தினாலும் மனிதனுடைய தத்துவத்தினாலும் கிடைப்பதல்ல (2:8). தேவனாயிருக்கிற கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் மூலம் வெளிப்படுகிறது (1:27,2:1பிபி). இதில் எந்த வித்தியாசமும் கிடையாது (3:10பி).

இதோடு கூட சபை அங்கத்தினரின் நடைமுறை விதிகளை எடுத்துரைக்கிறார். (அதாவது கணவன், மனைவி, பிள்ளைகள், அடிமை, எஜமான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *