நாம் நமது இரட்சிப்பை இழந்து போக முடியுமா?

நாம் நமது இரட்சிப்பை இழந்து போக முடியுமா?

முக்கிய வசனங்கள்

 1. யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல்… சித்தமாய் இருக்கிறது.
 2. யோவான் 10:28 … ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.
 3. ரோமர் 8:38-39 மரணமானாலும் ஜீவனானாலும்.. நிகழ் காரியங்களானாலும் வருங் காரியங்களானாலும் … தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்க மாட்டாது.
 4. எபேசியர் 1:13-14 நீங்களும் … விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப் பட்டீர்கள் . . . ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாய் இருக்கிறார்.
 5. பிலிப்பியர் 1:5 … உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்தி வருவார்.
 6. 2 தீமோத்தேயு 1:12 . . . நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார்.
 7. 1யோவான் 2:19 … நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே.
 8. லூக்கா 8:11-15.. கொஞ்சக் கால மாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கி போகிறார்கள்.
 9. யோவான் 15:2 என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார்
 10. ரோபர் 11:22 ஆகையால் தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டு போவாய்.
 11. கலாத்தியர் 5:1-4 . . நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
 12. 1 தீமோத்தேயு t 4… ஆகிலும் ஆவியானவர்… சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே… சிலர்… விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்.
 13. எபிரெயர் 6:4-6 ஏனெனில் ஒரு தரம் பரிசுத்த ஆவியைப் பெற்றும் . . . ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.
 14. எபிரெயர் 10:26-27 மனந்திரும்புவதற்கு ஏதுவாய் அவர்களை மறுபடியும் சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்கிறவர்களாய் இருந்தால் பாவங்களின் நிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனி இராமல், நியாயத் தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும் கோபாக்கினையுமே இருக்கும்.
 15. எபிரெயர் 10:29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று எண்ணி,… நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாய் இருப்பான் .
 16. 1யோவான் 2:24 ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப் பட்டது உங்களில் நிலைத்திருக்கக் கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப் பட்டது உங்களில் நிலைத்திருந்தால் நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

பிரச்சனை

நாம் இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கு முன் பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாய் இருந்தோம் (ரோமர் 6:17). நாம் விசுவாசிகளான பின்பு நீதிக்கு அடிமைகளானோம் (ரோமர் 6:18). தேவனின் கிருபையை நிராகரிப்பதும் நமது இரட்சிப்பை இழந்து போவதும் முடியவே முடியாது என்பது இதன் பொருளா?

விசுவாசிகள் இரட்சிப்பை இழந்து போகவே முடியாது என்று அநேகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். விசுவாசிகள் பாவம் செய்யலாம், விழுந்து போவது போல் காணப் படலாம், ஆனால் தேவன் அவர்களை எப்படியாவது தமது கிருபையில் மீண்டும் நிலை நிறுத்துவார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இதை “நித்தியப் பாதுகாப்பு” என்று அழைக்கின்றனர். “ஒரு முறை இரட்சிக்கப் பட்டால் இரட்சிக்கப் பட்டதுதான்” என்கின்றனர்.

வேறு சில கிறிஸ்தவர்களோ விசுவாசிகள் தேவனைப் புறக்கணிப்பதும் தங்கள் இரட்சிப்பை இழந்து போவதும் சாத்தியம் எனக் கருதுகின்றனர். தேவன் அவர்களைத் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்வார், ஆனால் அவர்கள் தொடர்ந்து அவரை நிராகரிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது இரட்சிப்பை மீண்டும் திணிக்க மாட்டார்.

வேதத்தில் நித்தியப் பாதுகாப்பு

நித்தியப் பாதுகாப்பு என்ற கேள்விக்கு வேதாகமம் தெளிவான பதிலேதும் கொடுப்பதில்லை. சில வசனங்கள் நாம் இரட்சிப்பை இழக்க முடியாது என்றும், வேறு சில வசனங்களோ நாம் அதை இழக்கக் கூடும் என்றும் கூறுவது போல் தோன்றுகிறது. விகவாசிகள் தேவனை நிராகரிக்கவோ அல்லது இரட்சிப்பை இழக்கவோ முடியாது என்று நம்பும் கிறிஸ்தவர்கள் தேவன் நித்திய ஜீவனைத் தருகிறார் என்று கூறும் வேத வசனங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர் (யோவான் 3:16; 6:54; 11:26 பார்க்க).

 1. இயேசு தமது ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதாகவும் “அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை; ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை ” (யோவான் 10:28) என்றும் சொன்னார்.
 2. அவர் தம்மிடத்தில் வருகின்ற எவரையும் தாம் புறம்பே தள்ளுவதில்லை என்றும், பிதாவானவர் தமக்குத் தந்தவைகளில் ஒன்றையும் தாம் இழந்து போகப் போவதில்லை என்றும் சொன்னார் (யோவான் 6:37,39).
 3. தேவனுடைய அன்பை விட்டு நம்மை எதுவும் பிரிக்க மாட்டாது என்றும் (ரோமர் 8:38-39),
 4. நாம் பரிசுத்த ஆவியானவரால் கிறிஸ்துவுக்குள் முத்திரை போடப் பட்டிருக்கிறோம், அவர் நமது சுதந்திரத்தின் அச்சாரமாய் இருக்கிறார் என்றும் (எபேசியர் 1:13-14)
 5. பவுல் எழுதுகின்றார். உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்தி வருவார் (பிலிப்பியர் 1:5).
 6. தேவன் நாம் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததைக் காத்துக் கொள்ளவும் (1 தீமோத்தேயு 1:12),
 7. தேவ பக்தி உள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும் (2பேதுரு 2:9),
 8. வழுவாதபடி நம்மைக் காக்கவும் வல்லவராய் இருக்கிறார் (யூதா 24).

இந்த வசனங்கள் ஒரு விசுவாசி நித்தியமாய்ப் பத்திரமாக இருப்பதைக் காட்டுகின்றன.

ஆனால் விசுவாசிகளும் தங்கள் இரட்சிப்பை இழக்க முடியும் என்று நம்பும் கிறிஸ்தவர்களோ சில எச்சரிப்பின் வேத பகுதிகளைச் சுட்டிக் காட்டுகின்றனர் :

 1. முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப் படுவான் (மாற்கு 13:13). மேலும் சில வேத பகுதிகள் : 1 கொரிந்தியர் 15:1-2; கொலோசெயர் 1:21-23; எபிரெயர் 3:6,12; 10:35-36.
 2. யோவான் 15:1-6 இல் இயேசு, ஒருவன் என்னில் நிலைத்திரா விட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப் பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள் என்று கூறியதையும் இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
 3. பவுல் ரோமர் 11:22 இல், தேவனுடைய தயவிலும் கிருபையிலும் நிலைத்திராத புற ஜாதியினர் வெட்டுண்டு போவார்கள் என்று சொல்கிறார்.
 4. நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டு நீதியைச் சம்பாதிக்க விரும்பிய கலாத்திய விசுவாசிகள் கிருபையினின்று விழுந்தார்கள் (கலாத்தியர் 5:1-4) என்றும் பவுல் கூறுகிறார்.
 5. விதைக்கிறவன் உவமைக்கு விளக்கம் அளிக்கையில் இயேசு தாமே கூட, சிலர் ‘கொஞ்சக் கால மாத்திரம் விசுவாசித்து சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்” (லூக்கா 8:13) என்று சொன்னார்.
 6. சிலர் விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள் என்று பவுல் குறிப்பிட்டார் (1தீமோத்தேயு 4:1).
 7. எபிரெயர் நிருப ஆக்கியோன் ஒருதரம் பரிசுத்த ஆவியைப் பெற்றும், பிறகு கிறிஸ்துவை மறுதலித்து விடும், தன்னைப் பரிசுத்தம் செய்த தேவனுடைய குமாரனின் இரத்தத்தை அசுத்தம் என்று எண்ணி, கிருபையின் ஆவியை நிந்தித்து விடக் கூடிய அபாயம் குறித்து எழுதுகிறார் (எபிரெயர் 6:4-6; 10:28- 29,39).
 8. புதிய ஏற்பாடு இதே போன்ற வேறு சில எச்சரிப்புகளையும் தருகிறது (2பேதுரு 2:20-21; வெளிப்படுத்தல் 3:5; 22:19).

நமது இரட்சிப்பை இழப்பது சாத்தியமல்ல என்றால், இந்த எச்சரிப்புகளின் அவசியம் என்ன என்பது இக் கிறிஸ்தவர்களின் கேள்வி.

அந்திக் கிறிஸ்துகள் சபையிலிருந்து நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாய் இருக்கவில்லை; நம்முடையவர்களாய் இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்கள் அல்ல என்று வெளியாகும் படிக்கே பிரிந்து போளார்கள் என்று யோவான் எழுதுகிறார் (1யோவான் 2:19). அதாவது, அவர்கள் உண்மையில் விசுவாசிகளாகவே இருக்கவில்லை. விசுவாசிகள் இரட்சிப்பை இழக்க முடியாது என்று கூறும் கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் விசுவாசத்திலிருந்து விழுந்து போகிறவர்கள் முதலிலேயே உண்மை விசுவாசிகளாக இருந்திருக்க மாட்டார்கள் என்கின்றனர். ஆனால் விசுவாசிகளும் இரட்சிப்பை இழக்க முடியும் என்ற கருத்து கொண்டோரோ அப்படி விழுந்து போகிறவர்களில் சிலர் மெய்யான விசுவாசிகள், சிலர் மட்டுமே போலி விசுவாசிகள் என்றும், மெய்யான விசுவாசிகளும் பின்னர் கிறிஸ்துவை நிராகரித்ததால் நம்முடையவர்களாய் இராமற் போனார்கள் என்றும் கருதுகின்றனர். யார் மெய்க் கிறிஸ்தவன் யார் போலிக் கிறிஸ்தவன் என்று பிறரை நியாயம் தீர்ப்பதில் நாம் கவனமாய் இருக்க வேண்டும் (மத்தேயு 7:1-2). நாம் பெருமை கொண்டு, நாம் ஒரு நாளும் விழ மாட்டோம் என்று எண்ணவும் கூடாது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக் கடவன் (1கொரிந்தியர் 10:12) என்று பவுல் எழுதுகிறார். யோவானும் கூட, ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப் பட்டது உங்களில் நிலைத்திருக்கக் கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப் பட்டது உங்களில் நிலைத்திருந்தால் நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள் (1யோவான் 2:24) என்று எழுதுகிறார்.

ஆக, புதிய ஏற்பாட்டின் சில வசனங்கள் ஒரு விசுவாசி தனது இரட்சிப்பை இழக்க முடியாது என்பதற்கு ஆதரவாகவும், வேறு சில வசனங்களோ விசுவாசி இரட்சிப்பை இழக்கக் கூடும் என்பதற்கு ஆதரவாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். நமது மானிட மனங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு அரும்பெரும் சத்தியத்தின் இரு பக்கங்களைப் பார்த்து கொண்டிருக்கிறோம் என்பது நிச்சயம், தேவனுடைய ஞானம் நம்முடைய ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது.

விசுவாசிகள் இந்த இரு சத்தியங்களையுமே ஒரு சமச்சீரான நிலையிலிருந்து பார்க்க வேண்டுமென யாரோ ஒருவர் சொல்லிச் சென்றுள்ளார். ஆனால் தனது இரட்சிப்பை இழந்து விடுவேனோ என்று பயந்து நடுங்கும் விசுவாசிக்கு, அவனது இரட்சிப்பு நித்தியமானது என்று வலியுறுத்திக் கூறலாம். தான் விழவே மாட்டோம் என்று அளவுக்கு மீறித் தைரியம் கொண்டிருப்பவனுக்கோ, அவனும் விழக் கூடியவன் தான் என்ற சத்தியத்தை வலியுறுத்திக் கூற வேண்டும். இங்கும் வேத புத்தகத்தின் ஆழமும், செறிவும் நமக்கு வியப்பளிக்கின்றன. வேதம் ஒவ்வொரு நபரின் தேவைகளையும் சந்திக்கிறது.

மரணத்துக்கு ஏதுவான பாவம்எது?

1 யோவான் 5:16-17இல், மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்த ஒரு சகோதரனுக்காக (விசுவாசிக்காக) நாம் ஜெபிக்கக் கூடாது என்று வாசிக்கிறோம். யோவான் ஒருவேளை ஆவிக்குரிய மரணம் பற்றிப் பேசலாம். அல்லது ஒருவேளை பாவத்திலேயே தொடர்ந்து வாழ்கின்ற ஒரு கிறிஸ்தவ சகோதரனின் மரணம் பற்றிப் பேசலாம்; அவன் சரீரம் மரிக்கும், அவன் ஆவியோ கெட்டழியாமல் மீட்கப் படும் (1கொரிந்தியர் 5:5 பார்க்க). இங்கே யோவான் ஆவிக்குரிய மரணம் பற்றிக் குறிப்பிடுவாரானால், இந்த வசனம் விசுவாசிகள் இரட்சிப்பை இழக்கக் கூடும் என்ற கருத்தை ஆதரிப்பதாக அமையும். ஆனால் அது எந்தப் பாவம் என்பதை யோவான் திட்டவட்டமாகக் கூறவில்லை.

இந்த “மரணத்துக்கு ஏதுவான பாவம்’ என்பது ஒரு வேளை பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணமாக இருக்கலாம். அது மன்னிக்கவே படாது என்று இயேசுவும் சொன்னார் (மாற்கு 3:28-29). ஒரு கிறிஸ்தவன் இந்தப் பாவத்தைச் செய்ய முடியுமா இல்லையா என்பது குறித்து இயேசு எதுவுமே சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். எனினும் எபிரெய நிருப ஆக்கியோன் ஒரு விசுவாசி ஒருதரம் பரிசுத்த ஆவியைப் பெற்றும் – அதாவது ஒரு மெய் விசுவாசி, தேவனைப் புறக்கணித்து, கர்த்தரை நிந்திக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசுகிறார். மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் (எபிரெயர் 6:4- 6). பிற்பாடு, எபிரெயர் 10ல் ஆசிரியர் கூறுவதாவது: சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்கிறவர்களாய் இருந்தால், பாவங்களின் நிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியிராது (எபிரெயர் 10:26). தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று எண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவர்கள் பற்றியும் அவர் எழுதுகிறார் (எபிரெயர் 10:29). அப்படியானால் தேவனுடைய ஆவியானவரை அசட்டை செய்து, துணிகரமாய் பாவத்தில் வாழும் ஒருவன் முடிவிலே தேவனுடைய குரலையே கேட்க முடியாதவனாகி, தனது இரட்சிப்பின் தருணத்தை என்றென்றுமாய் இழந்து விடுவான் எனத் தோன்றுகிறது. பாவம் செய்யக் கூடாது என அறிந்த பின்னரும் மக்கள் தொடர்ந்து பாவம் செய்வார்கள் எனில், அவர்களது இருதயங்கள் கடினப் படும். அவர்கள் தேவனுடைய குரலைக் கேட்க முடியாதது மட்டுமல்ல; தேவன் அவர்களை அழைப்பதையே கூட நிறுத்தி விட நேரிடலாம்.

ஒரு விசுவாசியும் விசுவாசத்திலிருந்து விழுந்து போகவும், கிறிஸ்துவின் அழைப்பைத் தொடர்ந்து அசட்டை செய்வதன் மூலம் மேற்கண்ட நிலைமையை அடையவும் கூடும் என்பது அநேகக் கிறிஸ்தவர்களின் கருத்து; மேலும், சில வசனங்கள் (எபிரெயர் 6:4-6; 10:26-31) இந்த சாத்தியக் கூற்றைப் பற்றியே குறிப்பிடுவதாக இவர்கள் நம்புகின்றனர். ஆனால் சில கிறிஸ்தவர்களோ, ஒரு மெய்யான விசுவாசி ஒரு நாளும் அந்த நிலையை அடைய மாட்டான்; எப்படியும் தான் மரிக்கும் முன் ஒரு நாளிலே மனந்திரும்பி மீண்டும் விசுவாசத்திற்குள் வந்தே தீருவான் என்று நம்புகின்றனர்.

சுருக்கம்

எல்லாக் கிறிஸ்தவர்களுமே, நாம் தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாகவே இரட்சிக்கப் படுகிறோம் என்று நம்புகின்றனர் (எபேசியர் 2:8-9). எல்லாக் கிறிஸ்தவர்களுமே பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையினால் மட்டுமே அந்த விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோம் என்றும் நம்புகின்றனர் (கலாத்தியர் 3:3). எனினும் புதிய ஏற்பாட்டுக் காலத்திலிருந்து இன்று வரை, ஒரு உண்மையான விசுவாசி தனது இரட்சிப்பை இழப்பது சாத்தியமா என்பது குறித்து கிறிஸ்தவர்களிடையே வேறுபட்ட கருத்துக்களே நிலவி வருகின்றன. வேதம் இக்கருத்து பற்றி திட்டவட்டமாக எதையும் போதிக்கவில்லை. ஆகவே, நமது கருத்து எதுவாயினும், நம்மிடமிருந்து வேறுபட்ட கருத்து கொண்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு பிரிவினைகள். பேதங்கள் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. யூதா நிருபத்தில் இந்த இரண்டு கருத்துகளுமே அடுத்தடுத்து குறிப்பிடப் படுவதைக் காணலாம். வசனம் 21இல், தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொண்டு, நித்திய ஜீவனுக்கு ஏதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் என்றும், வசனம் 24இல், வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ள தேவன் என்றும் யூதா எழுதுகின்றார்.

 

Leave a Reply