இரட்சிப்பு – தேவனின் தெரிந்தெடுப்பா, மனிதனின் தெரிந்தெடுப்பா?

இரட்சிப்பு – தேவனின் தெரிந்தெடுப்பா, மனிதனின் தெரிந்தெடுப்பா?

முக்கிய வசனங்கள் 

 • யோசுவா 24:15 … யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
 • மத்தேயு 23:37 … நான் (கிறிஸ்து) மனதாயிருந்தேன் … உங்களுக்கோ மனதில்லாமல் போயிற்று.
 • யோவான் 7:17 . அவருடைய (தேவனுடைய) சித்தத்தின் படி செய்ய மனதுள்ளவன் எவனோ … அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்து கொள்ளுவான். 
 • யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை,’ நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். 
 • அப்போஸ்தலர் 7:51 நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். 
 • அப்போஸ்தலர் 13:45… நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
 • ரோமர் 8:29-30 தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை முன்குறித்திருக்கிறார் அவர்களை அழைத்தும் இருக்கிறார்;… அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்: —அவர்களை மகிமைப் படுத்தியும் இருக்கிறார். 
 • ரோமர் 9:10-24 தேவன் எவன் மேல் இரக்கமாய் இருக்கச் சித்தமாய் இருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாய் இருக்கிறார்; எவனைக் கடினப்படுத்தச் சித்தமாய் இருக்கிறாரோ அவனைக் கடினப் படுத்துகிறார்.
 • ரோமர் 11:32 எல்லார் மேலும் இரக்கமாய் இருக்கத் தக்கதாக தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப் போட்டார்.
 • எபேசியர் 1:4-5. அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்.
 • 1 தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் (தேவன்) சித்தமுள்ளவராய் இருக்கிறார். 
 • 1 பேதுரு 1:2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின் படியே…. தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எழுதுகிறதாவது.
 •  2 பேதுரு 1:10 … உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்குங்கள். 

பிரச்சனை

யோவான் 8:34இல் இயேசுவும், ரோமர் 6:14-18 இல் பவுலும் அவிசுவாசிகள் அனைவரும் பாவத்துக்கு அடிமைகள் என்று திட்டவட்டமாகக் கூறி விட்டனர். யாருடைய ஒத்தாசையும் இல்லாத படி அவிசுவாசிகள் தேவனுடைய காரியங்களைப் புரிந்து கொள்வது கூட இயலாது ( 1கொரிந்தியர் 2:14). தங்கள் சொந்தப் பெலத்தினாலே அவர்கள் நீதியைத் தெரிந்து கொள்ள முடியாது. பிதாவானவர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிடில் அவன் இயேசுவண்டை வரமாட்டான் (யோவான் 6:44). குமாரன் வெளிப் படுத்தினாலொழிய யாரும் பிதாவை அறிந்து கொள்ள முடியாது (மத்தேயு 11:27-28). காணும் படியாகவும், விளங்கிக் கொள்ளும் படியாகவும் மனிதரின் இருதயங்களைத் தேவன் திறந்தருள்வது பற்றி லூக்கா 24:45 மற்றும் அப்போஸ்தலர் 16:14 இல் படிக்கிறோம்.

இயேசு, பவுல் இருவருமே அவிசுவாசிகள் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப் பட முடியும் என்றனர் (ரோமர் 8:36; ரோமர் 6:17-18), விசுவாசிகள் நீதிக்கு அடிமைகளாக முடியும் என்றும் பவுல் கூறினார். இந்த இரட்சிப்பு மனிதனுடைய முயற்சியின் விளைவு அல்ல, இது தேவனுடைய இலவசமான ஈவு (ரோமர் 6:23; எபேசியர் 2:8-9 மற்றும் குறிப்புரைகள் பார்க்க).

இயேசு சீஷர்கள் தம்மைத் தெரிந்து கொள்ளவில்லை என்றும், அவர்கள் போய்க் கனி படிக்குத் தாமே அவர்களைத் தெரிந்து கொண்டதாகவும் சொன்னார் (யோவான் 15:16), தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார் என்றும் (எபேசியர் 1:4), நாம் தமக்குச் சுவிகார புத்திரராகும் படி முன்குறித்திருக்கிறார் என்றும் (எபேசியர் 1:5,11) பவுல் கூறுகிறார். நமது தெரிந்தெடுப்பு தேவனின் முன்னறிவின் படியானது (ரோமர் 8:29-30; பேதுரு 1:2), தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் மனுஷனுடைய விருப்பத்தையோ, முயற்சியையோ பொறுத்ததல்ல, அது தேவனுடைய இரக்கத்தையே பொறுத்தது என்று பவுல் ரோமர் 9:16 இல் திட்ட வட்டமாக எழுதுகிறார்.

இரட்சிப்பு தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தினால் மட்டுமே வருகிறது, அதைச் சம்பாதிக்க நாம் செய்யக் கூடியது ஒன்றுமேயில்லை என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் இங்கே ஒரு பிரச்சனை எழுகிறது. அதாவது, நமது இரட்சிப்பில் நாம் நிறைவேற்ற வேண்டிய பங்கு என்று எதுவுமே கிடையாதா? பாவத்துக்காக மனம் வருந்துவதும், விசுவாசம் வைப்பதும் நாமாகச் செய்கின்ற காரியங்களா, அல்லது தேவனே அவற்றை நம்மில் உருவாக்குகின்றாரா? தேவனுடைய கிருபையை எதிர்க்கும், தேவனுக்கு “மாட்டேன் ” என்று சொல்லும் சக்தி, வல்லமை மனிதனுக்கு உண்டா?

தனது இரட்சிப்பில் மனிதனின் தெரிந்தெடுப்புக்கு இடமுண்டா? வெவ்வேறு கிறிஸ்தவர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் பதிலளிக்கின்றனர். யார் இரட்சிக்கப் படுவார்கள் என்பதைத் தேவனே தீர்மானிக்கின்றார்; மனிதன் பாவி ஆதலால் அவனால் இதைத் தீர்மானிக்க முடியாது என்று சில கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். தேவன் இரட்சிக்கப் படும் படியாக எல்லாரையும் தெரிந்து கொள்ளாமல் ஒரு சிலரை மட்டுமே தெரிந்து கொள்கிறார், மற்றவர்களை அழிவுக்கென்று தெரிந்து கொள்கிறார் என்பது இவர்களது எண்ணம். இந்தக் கிறிஸ்தவர்கள், அழைக்கப் பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர் (மத்தேயு 22:14) என்ற இயேசுவின் கூற்றையும், சில பாத்திரங்கள் மகிமைக்காகவும் சில அழிவுக்காகவும் ஆயத்தமாக்கப் பட்டவை (ரோமர் 9:22-23) என்று பவுல் கூறியதையும் – சுட்டிக் காட்டுகின்றனர். ரோமர் 9:18 இல் பவுல், தேவன் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாய் இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாய் இருக்கிறார், எவனைக் கடினப் படுத்தச் சித்தமாய் இருக்கிறாரோ அவனைக் கடினப் படுத்துகிறார் என்று எழுதுகின்றார். வேறொரு இடத்தில், நித்திய ஜீவனுக்கு நியமிக்கப் பட்டவர்கள் எவர்களோ அவர்கள் (அப்போஸ்தலர் 13:48) என்றும், சிலர் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாமல் இடறுவதற்கு நியமிக்கப் பட்டவர்கள் (1பேதுரு 2:8) என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. தேவனே யார் யார் இரட்சிக்கப் பட வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார், பிறகு அவர்களுக்கு மட்டும் மனந்திரும்பும் திறனையும் (2 தீமோத்தேயு 2:25) விசுவாசிக்கும் திறனையும் (பிலிப்பியர் 1:29) தாமே வழங்குகின்றார் என்று இக்கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் எதையும் தெரிந்தெடுப்பதில்லை, அவர்களால் இரட்சிப்புக்கு “வேண்டாம்” என்று சொல்ல முடியாது.

வேறு பல கிறிஸ்தவர்களோ நமது இரட்சிப்பில் தேவனின் தெரிந்தெடுப்பு மட்டுமல்ல, நமது பங்கும் அடங்கியிருக்கிறது என்று நம்புகின்றனர். பழைய ஏற்பாட்டின் யூத மக்கள், தங்களுடைய எந்தப் புண்ணியத்தினாலும் அன்றி தேவனால் தெரிந்து கொள்ளப் பட்ட போதிலும், அவரைப் பின்பற்றுவதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமையும் வாய்ப்பும் பெற்றதாகவே தோன்றுகிறது. (உபாகமம் 30:19, யோசுவா 24:15). புதிய ஏற்பாட்டில் இயேசுவும் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவன் எவனோ அவன் தேவனுடைய உபதேசத்தை அடையாளம் கண்டு கொள்வான் என்று சொன்னார் (யோவான் 7:17). நாம் இரட்சிப்பு அடையும் படியாக மனந்திரும்பவும் (அப்போஸ்தலர் 2:38). விசுவாசிக்கும் படியும் (ரோமர் 10:9-10) கட்டளையிடப் படுகிறோம். இந்தக் கிறிஸ்தவர்கள் தேவன் நம்மை முதலில் அழைக்கிறார், ஆனால் நாம் தேவ அழைப்பையும் இரட்சிப்பையும் எதிர்த்து நிற்கவும் கூடும் என்று நம்புகின்றனர்.

இந்த இரண்டாம் வகைக் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர், தேவன் பாவத்துக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு அவிசுவாசியை எடுத்து அவன் மீண்டும் சுயாதீனமாக ஒரு தெரிந்தெடுப்பு செய்யக் கூடிய அளவிற்கு மட்டும் அவனை விடுதலையாக்குவதாக நம்புகின்றனர். அப்படி விடுதலையாக்கப் பட்ட ஒருவன் தேவனைத் தெரிந்து கொள்வானானால் இரட்சிக்கப் படுகிறான்; சாத்தானைத் தெரிந்து கொள்வானானால் மீண்டும் பாவ அடிமைத்தனத்தில் அகப்பட்டு அழிந்து போகிறான். மற்றவர்களோ மனிதர்கள் தேவனைத் தெரிந்து கொள்ளவே முடியாத படி அவ்வளவாகப் பாவக் கட்டில் சிக்கியுள்ளனர் என்று எண்ணுகின்றனர். ஆகவே, இரட்சிக்கப் படுவதில் தேவனே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார், ஆனால் கெட்டுப் போவதிலோ மனிதனே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்பது இவர்களது நம்பிக்கை. அதாவது தேவன் இரட்சிப்பிற்காக ஒருவனைத் தெரிந்து கொள்ளும்போது, அவன் தேவனை எதிர்க்கவில்லை என்றால் அவன் இரட்சிக்கப் படுகிறான். ஆனால் அவன் எதிர்ப்பான் என்றால் தேவன் அவனை இரட்சிக்கப் படும்படி கட்டாயப் படுத்துவதில்லை, ஆக அவன் தனது சொந்தத் தெரிந்தெடுப்பினால் கெட்டழிந்து போகிறான். ஆனால் இப்படி நாம் தேவனை எதிர்த்து நிற்பது சாத்தியமா? தேவன் சர்வ வல்லமை படைத்தவர் என்பதை அநேசுக் கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். படைத்தவரை எதிர்க்க நாம் யார்? (ரோமர் 9:19-21). ஆனாலும் கூட, வேறு பல கிறிஸ்தவர்கள் தேவன் நமக்கு தெரிந்தெடுக்கும் சுயாதீனத்தை, தீர்மானிக்கும் உரிமையைக் கொடுத்திருப்பதாகவே நம்புகின்றனர். அவர்கள் தேவன் தங்களுக்காக வைத்திருந்த திட்டங்களை எதிர்த்து நின்ற மக்களைப் பற்றிய வேதபகுதிகளையும் (மத்தேயு 23:37; அப்போஸ்தலர் 7:51, 13:45), தேவனை எதிர்த்து நிற்கக் கூடாது என நம்மை எச்சரிக்கும் வேத பகுதிகளையும் (2 கொரிந்தியர் 6:1; எபிரெயர் 3:8,13; 12:25) சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆக, நமது கேள்விக்கு கிறிஸ்தவர்கள் மூன்று முக்கிய பதில்கள் அளிப்பதைக் காண்கிறோம் : 1) மனிதன் தனது இரட்சிப்பையோ அழிவையோ தெரிந்தெடுக்கும் உரிமையற்றவன்; 2) மனிதன் இரண்டில் எதையும் தெரிந்தெடுக்கக் கூடியவன்; 3) மனிதன் தானாக இரட்சிப்பைத் தெரிந்து கொள்ள முடியாது, ஆனால் தேவன் அவனை அழைத்தபிறகு அவன் அவருக்கு எதிர்த்து நிற்பானானால் அழிவைத் தெரிந்தெடுப்பவனாவான்.

நமது இரட்சிப்பை நாம் தெரிந்தெடுக்க முடியும் என்ற கேள்விக்குப் பதிலான இந்த மூன்று முக்கியக் கருத்துக்களையும் ஒரு கருத்துப் படத்தின் மூலம் விளக்கலாம். ஒரு சிறுவன் சாலையோரமாகக் கை கால் கட்டி வைக்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அவன் பாவத்தில் சுட்டப் பட்டுள்ள அவிசுவாசியைக் குறிப்பவன். அங்கே ஒரு மனிதன் ஒரு மாட்டு வண்டியில் வருகிறான். அவன், நம்மை இரட்சிக்க விரும்பும் தேவனுக்கு அடையாளம். மாட்டு வண்டியில் வந்தவன் கீழ்க்கண்ட மூன்று காரியங்களுள் ஒன்றைச் செய்யலாம். 1) அவன் கட்டி வைக்கப் பட்ட சிறுவனின் கட்டுகளை அவிழ்க்காமலேயே அவனை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு போகலாம். இது, நமது இரட்சிப்பில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை, நாம் தேவனை எதிர்த்து நிற்கவும் முடியாது என்று நம்புவோரின் கண்ணோட்டத்தைக் குறிக்கும். 2) அந்த மனிதன் சிறுவனின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, அவன் தன்னோடு வர விரும்புகிறானா என்று கேட்கலாம். சிறுவன் அவனோடு போவதைத் தெரிந்து கொண்டால் அவனை அம்மனிதன் தனது மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு போவான். இது, தேவன் நாம் இரட்சிப்பா அழிவா என்ற இரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுமளவிற்கு நம்மை விடுதலையாக்குகிறார் என்று நம்புவோரின் நிலையைக் குறிப்பது. 3) மாட்டு வண்டியில் வந்தவன் சிறுவனை வண்டியில் ஏற்றிய பின் அவனது கட்டுகளை அவிழ்த்து விடலாம். இப்பொழுது சிறுவன் விருப்பப் பட்டால் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாம். அவன் ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்தால் அவன் வண்டியின் போக்கிலேயே சுமந்து செல்லப் படுவான். இது தேவனே நம்மைத் தெரிந்து கொள்கிறார், நமது இரட்சிப்புக்கான அனைத்தையும் செய்கிறார், ஆனால் நாம் அவரை எதிர்க்கவும் அவரது கிரியையை ஏற்க மறுக்கவும் கூடும் என்ற சுருத்தைக் காண்பிக்கிறது.

சுருக்கமாக, முதலாவது கண்ணோட்டத்தின் படி, இரட்சிப்போ அழிவோ தேவளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார். இரண்டாவது கருத்தின் படி, இரட்சிப்போ அழிவோ இரண்டில் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள மனிதனுக்கு தேவன் சுயாதீனம் தருகின்றார். மூன்றாவது அபிப்பிராயத்தின் படி, இரட்சிப்புக்காக தேவனே தெரிந்தெடுக்கிறார், ஆனால் மனிதன் அவரை எதிர்த்து நின்று கேட்டை, அழிவைத் தெரிந்து கொள்ளக் கூடும்.

தேவன் எல்லாரையும் அழைக்கிறாரா?

தேவன் ஒவ்வொரு தனி மனிதனும் இரட்சிக்கப்படும் படி விரும்புகிறாரா அல்லது ஒரு சிலர் மட்டும் இரட்சிக்கப் பட விரும்புகிறாரா? மத்தேயு 22:14 இல் இயேசு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப் பட்டவர்களோ சிலர் என்றார். இயேசுவே உலக ரட்சகர் என்பதும் (யோவான் 4:42; 1 யோவான் 4:14) உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவே அவர் மரித்தார் என்பதும் (யோவான் 1:29; 1 யோவான் 2:2) தெளிவு. அதோடு, பவுலும் எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவே தேவன் சித்தம் கொண்டிருக்கிறார் என்று எழுதுகிறார் (ரோமர் 11:32; 1 தீமோத்தேயு 2:4-6; 2 பேதுரு 3:9). “எல்லா மனுஷரும்” என்பதன் பொருள் என்ன?

“எல்லா மனுஷரும்” என்பது “எல்லா இன மனிதர்கள்” என்று சில கிறிஸ்தவர்கள் எண்ணுகின்றனர். அதாவது, எல்லா மக்கள் கூட்டத்திலிருந்தும் ஒரு சில தனி நபர்களையாவது தேவன் அழைக்கிறார் அல்லது தெரிந்து கொள்கிறார். முழு உலகிற்கும் கிறிஸ்துவின் நற்செய்தி எடுத்துச் செல்லப்படும் படி தேவன் விரும்புகிறார், எனினும் விசுவாசம் என்ற வரத்தை ஒவ்வொரு மக்கள் இனத்தையும் சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே வழங்குகிறார் என்பது இவர்கள் நம்பிக்கை, வேறு சில கிறிஸ்தவர்களோ “எல்லா மனுஷரும்” என்பது “ஒருவர் விடாமல் அத்தனை மனிதர்களையும் குறிப்பதாகக் கருதுகின்றனர், தேவன் எல்லா மனிதர்களையும் அழைக்கிறார் என்ற போதிலும் விசுவாசிகள் மட்டுமே “தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்” என்று கூறப்பட முடியும். (கிரேக்க’ மொழிப் பதம் இந்த இரு அர்த்தங்களையுமே தரக் கூடியது.)

இயேசுவைக் குறித்துக் கேள்வியே படாதவர்களைப் பற்றி என்ன? அவர்கள் இரட்சிக்கப் பட முடியுமா? முடியாது என்றே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். எல்லா மனிதர்களும் சுபாவப்படி பாவிகளே. எல்லாரும் மரணத்திற்குப் பாத்திரவான்கள் (ரோமர் 3:10-12; 6:23). கிறிஸ்துவினாலே அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12). எனவே ரோமர் 10:13-14இல் பவுல் எழுதுகின்றார்: ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப் படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுது கொள்வார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப் படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப் படுவார்கள்? இயேசுவைப் பற்றிக் கேள்வியே படாதவர்கள் மீது தேவன் இரக்கம் காட்டலாம் (லூக்கா 12:47-48; ரோமர் 2:12), ஆனால் அது அவரது சொந்த தீர்மானம். இயேசுவைப் பற்றிக் கேள்வியே படாதவர்களை தேவன் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி வேதம் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. எனினும், பிறருக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்ல வேண்டியது நமது பொறுப்பு என்பதை மட்டும் திட்டமாகக் கூறுகிறது.

சுருக்கம்

இக்கட்டுரையில் எழுப்பப் பட்டுள்ள கேள்விகள் கடினமானவை. வேதம் இவற்றுக்குத் திட்டவட்டமான பதில்களைத் தரவில்லை. தேவனுடைய சித்தம் ஒரு புரியாத புதிர்! ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது! (ரோமர் 11:33-36). ஒருவேளை நாம் பார்த்த கருத்துக்கள் எல்லாமே ஓரளவுக்கு உண்மை எனலாம். யோவான் அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்த படியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம் (1யோவான் 4:19) என்று எழுதுகிறார். அதை நாம் இப்படிச் சொல்லலாம்: அவர் முந்தி நம்மைத் தெரிந்து கொண்ட படியால் நாமும் அவரைத் தெரிந்து கொள்ளுகிறோம். இரட்சிப்பு என்பது தேவனுடைய கிரியை, ஆனால் அதில் நமக்கும் ஒரு பங்கிருப்பது போல் தான் தோன்றுகிறது. இதைத் தான் பவுல் இவ்வாறு கூறுகின்றார்: … அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப் படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின் படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார் (பிலிப்பியர் 2:12-23).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *