இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து – அவர் யார்?

இயேசுவுக்கு அநேகப் பெயர்களும் பட்டப் பெயர்களும் உண்டு. “இயேசு” என்றால் “இரட்சிப்பவர்” என்று பொருள். பொதுவாக “கிறிஸ்து” என்ற பெயரையும் சேர்த்தே வழங்குகிறோம். “கிறிஸ்து” என்பது ஒரு கிரேக்கச் சொல், “மேசியா” என்ற எபிரேயப் பதத்திற்கு இணையானது. “கிறிஸ்து”, “மேசியா” என்னும் இரண்டு பெயர்களுமே “அபிஷேகிக்கப் பட்டவர்” அல்லது “ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேவனால் அபிஷேகிக்கப் பட்ட ஒருவர்” என்று பொருள் படும்.

இயேசு இவ்வுலகத்திற்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பாகவே யூதர்கள் “மேசியாவின்” வருகைக்காகக் காத்திருந்தனர். ஏசாயா தீர்க்கதரிசி தமது மக்களின் பாவங்களையும் துக்கங்களையும் சுமந்து தீர்க்கப் போகின்றவர் என்று வாக்களிக்கப் பட்ட மேசியாவைப் பற்றி எழுதியிருந்தார் (ஏசாயா 53:1-12). இந்த மேசியா வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்றெல்லாம் அழைக்கப் படுவார் (ஏசாயா 9:6) என்றும் கூட அவர் சொன்னார், ஆயினும் யூதர்களோ ரோமாபுரியின் அடிமைத் தனத்திலிருந்து தங்களை விடுவிக்கக் கூடிய ஒரு இராஜாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்; மேசியா, தேவனே மனிதனாக பூமிக்கு வருபவராக இருப்பார் என்றோ, அல்லது சிலுவை மீது மரிப்பார் என்றோ அவர்கள் நம்பவில்லை.

“தேவ குமாரன்” மற்றும் “மனுஷ குமாரன்” என்னும் பதங்கள் இயேசுவைக் குறிக்கும் வேறு சில பெயர்கள் (மாற்கு 2:10; யோவான் 1:14,18,34; 5:25-27 மற்றும் குறிப்புரைகள் பார்க்க). “தேவ குமாரன்” என்பது பொதுவாக இயேசுவின் தெய்வீகத்தை வலியுறுத்துவது, “மனுஷகுமாரன் என்பது பொதுவாக அவர் மேசியா என்பதைக் குறிப்பது. பழைய ஏற்பாட்டிலே மேசியா “மனுஷ குமாரன்” என்றே அழைக்கப் பட்டார் (தானியேல் 7:13-14). மேசியாவான இந்த “மனுஷ குமாரன்” பரத்திலிருந்து வந்திருந்த போதும், தம்மை தேவனாக ஆராதித்ததை ஏற்றுக் கொண்ட போதும், தமது மனுஷத் தன்மையை வலியுறுத்த எண்ணிய போதெல்லாம் “மனுஷ குமாரன்” என்ற பதத்தையே பயன் படுத்தினார் (மத்தேயு 8:20; 11:19; 17:22-23). இந்தப் பதங்கள் மத்தேயு 26:63-65 இல் இடம் மாற்றியும் பயன்படுத்தப் படுகின்றன. 

இயேசு கிறிஸ்துவைப் பற்றி இரு காரியங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும் :

  1. முதலாவது, இயேசு முழுக்க முழுக்க மனிதர்; 
  2. இரண்டாவது, இயேசு முழுக்க முழுக்க தேவனும் ஆவார்.

இயேசு மனிதனும் தேவனுமானவர் (ரோமர் 1:3-4).

இயேசு தேவனே

இயேசுவிடம் தெய்வீகப் பண்புகள் உள்ளன. அவர் நித்தியமானவர், என்றென்றுமாய் தேவனோடு இருந்தவர் (யோவான் 1:1-2; 17:1-5), இயேசு சிருஷ்டிப்பில் பங்கு கொண்டார் (யோவான் 1:3; கொலோசெயர் 1:15-17; எபிரெயர் 1:2). தேவன் இயேசுவில் இருந்தார், இயேசு தேவனில் இருந்தார் (யோவான் 14:10; 17:21,23). இயேசு தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்றும் முதற்பேறானவர் என்றும் அழைக்கப் படுகின்றார் (யோவான் 3:16,18; கொலோசெயர் 1:15,18; எபிரெயர் 1:6).

இன்னும் குறிப்பாக, இயேசு பிதாவை வெளிப்படுத்தினார் (யோவான் 1:18; 14:9) என்றும், அவர் “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமானவர் “(கொலோசெயர் 1:15) என்றும், “அவருடைய தன்மையின் சொரூபமானவர்” (எபிரெயர் 1:3) என்றும் வேதம் கூறுகிறது. இயேசுவும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்றும் (யோவான் 10:30; 17:11,12) அதாவது அவர் தேவனுக்குச் சமமானவர் என்றும் (பிலிப்பியர் 2:6) வேதம் தெரிவிக்கிறது. இயேசுவே தேவன் என்று உரைக்கப் பட்டுள்ளது (யோவான் 1:1; ரோமர் 9:5; எபிரெயர் 1:8). இயேசு ஓரளவுக்கு தேவன் என்பதல்ல, அவர் தேவத்துவத்தின் பரிபூரணம் (கொலோசெயர் 1:19; 2:9), முழுமையானவர். இயேசு முழுக்க முழுக்க தேவனே.

இயேசு மனிதனே

ஆனால் இயேசு முழுமையான மனிதரும் கூட. அவர் பரிசுத்த ஆவியானவராலே உற்பவித்திருந்த போதிலும் அவருக்கு உலகப் பிரகாரமான தாய் இருந்தாள், இவ்வுலகிலே அவர் ஒரு குழந்தையாகவே வந்து பிறந்தார் (மத்தேயு 1:20; லூக்கா 1:34-35). இயேசு தேவனாய் இருந்த போதிலும் அவர் “மனுஷ சாயலானார்” (பிலிப்பியர் 2:7). அவர் மனிதரால் காணப் பட்டார், மனிதரால் தொடப் பட்டார் (யோவான் 1:1-2), மற்ற மனிதர்களைப் போலவே அவரும் பசியும் தாகமும் அடைந்தார், களைப்புற்றார்; மனிதர்களைப் போலவே அழுதார். எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப் பட்டார் (எபிரெயர் 4:15). நம்மைப் போலவே, தேவன் தமக்கு எதையும் வெளிப்படுத்தாத பட்சத்தில் இயேசுவும் எதிர்காலத்தைக் குறித்து அறியாதவராகவே இருந்தார் (மாற்கு 13:32)

இயேசு முழுமையான மனிதனானார் என்று நம்ப வேண்டியது மிக அவசியம். உண்மையாகவே தேவ ஆவிதானா என்பதைப் பரீட்சித்து அறியும் சோதனையே இதுதான் என்கிறார் யோவான். மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவர்கள் வஞ்சக ஆவி உடையவர்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள் (1யோவான் 4:1-2), 

இயேசுவைப் பற்றிய வேதப் புரட்டுக்கள்

ஆதியிலிருந்தே இயேசுவைப் பற்றிக் கள்ளப் போதனைகளைக் கற்பித்த மக்களால் திருச்சபை மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளது. இன்றும் கூட இயேசுவைக் குறித்த தவறான போதனைகளால் வழி தப்பிப் போகிறவர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்தக் கள்ளப் போதனைகளை மூன்று பெரும் கருத்துகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது தவறான கருத்து, இயேசு தேவனே அல்லர், வெறும் மனிதனே என்பதாகும். இந்தக் கருத்துடையவர்கள் இயேசு ஒரு தலைசிறந்த அறநெறிப் போதகர் என்றும், அவர் தேவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர் என்றும் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர், இயேசு தேவன் என்பதை ஏற்க மறுக்கின்றனர்.

இரண்டாவது தவறான கருத்து இதற்கு நேர் எதிரிடையானது; அதாவது, இயேசு தேவனே மனிதரே அல்லர் என்பது. சிலர் இயேசு ஓர் ஆவி மட்டுமே, மற்ற மக்களுக்கு இருப்பது போன்ற சரீரம் எதுவும் அவருக்குக் கிடையாது என்கின்றனர். சிலர் இயேசுவின் ஆவி மானிட ஆவியல்ல, அது மானிட உருவில் காணப்பட்ட தேவனுடைய சொந்த ஆவியே என்று கூறுகின்றனர். ஆனால் இதுவும் உண்மையல்ல, ஏனெனில் இயேசு மானிட சரீரத்தில் மானிட ஆவி கொண்டு வாழ்ந்த ஒரு முழுமையான மனிதரே (எபிரெயர் 2:17-18).

மூன்றாவது தவறான கருத்து, இயேசு தெய்வம் தான், ஆனால் பிதாவாகிய தேவனை விடச் சற்று குறைவு பட்டவர் என்பது. இக்கருத்து படைத்தவர்கள் சரீரம் அசுத்தமானது, பாவமுள்ளது, மெய்யான தேவன் மானிட சரீரத்தில் வாசம் பண்ணவே முடியாது என்று கூறுகின்றனர். எனவே இயேசு பிதாவினால் அனுப்பப் பட்ட ஒரு குட்டிக் கடவுள், அவரே தேவன் என்பது சரியல்ல என்கின்றனர். இவ்வகை மக்கள் (இவர்கள் மெய்க் கிறிஸ்தவர்கள் அல்லர்) பிதா என்னிலும் பெரியவராய் இருக்கிறார் (யோவான் 14:28) என்று இயேசு சொன்ன வசனங்களைத் தங்கள் கருத்துக்கு ஆதரவாகச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் அங்கே இயேசு தாம் குமாரனாக இப்பூவில் அவதரித்ததைப் பற்றிப் பேசிய பொழுது மட்டுமே பிதா தம்மிலும் பெரியவர் என்று குறிப்பிட்டார். வேறொரு இடத்தில் “நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார் (யோவான் 10:30). “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்றும் சொன்னார் (யோவான் 14:9). இயேசு ஆதியிலே தேவனோடிருந்தார் என்றும் அவர் தேவனாயிருந்தார் என்றும் யோவான் திட்டவட்டமாக உரைக்கிறார் (யோவான் 1:1), ஆகவே நாம் மேலே கண்ட வண்ணமாக, இயேசு முழுமையான தேவளாகவும், முழுமையான மனிதனாகவும் இருக்கின்றார். 

இயேசு கிறிஸ்துவின் கிரியை

இயேசு உலகத்தைப் படைத்தவரும் பாதுகாப்பவரும் ஆவார் (யோவான் 1:3,10; கொலோசெயர் 1:16,17; எபிரெயர் 1:2-3). இயேசு பரலோகத்திலே தங்கியிராமல், தமக்கிருந்த மகிமையை விட்டு விட்டு (யோவான் 17:1-5) மனிதனாக வந்தார். இயேசு மனிதனாக அவதரித்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு.

முதல் காரணம், இயேசுவைப் பார்ப்பதில் நாம் தேவன் எப்படிப் பட்டவர் என்பதைப் பார்க்க முடியும் என்பதே. பிதாவாகிய தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 6:46).

ஆனால் இயேசு பிதாவை நமக்கு வெளிப் படுத்தினார் (யோவான் 12:45; 14:7-9). உதாரணமாக, இயேசுவைப் பார்ப்பதன் மூலம், பிதாவானவர் நல்லவர், அன்பு மிக்கவர், நமது பாவங்களை மன்னிப்பவர் என்பதோடு கூட அவர் நமது தேவைகளையும் பிரச்சனைகளையும் குறித்து அக்கறையுள்ளவர் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

இயேசு மனிதனாக அவதரிக்க இரண்டாவது காரணம், நமது இரட்சிப்புக்காக அவரது மரணமும் உயிர்த்தெழுதலுமாகும். இயேசு நமது “மீட்பர்” என்று வேதம் கூறுகிறது, அதாவது நமது பாவம் மற்றும் நியாயப் பிரமாணத்தின் சாபத்தினின்று நம்மை மீட்டுக் கொள்பவர் (மாற்கு 10:45; கலாத்தியர் 3:13 மற்றும் குறிப்புரைகள் பார்க்க). இயேசு நமது விடுதலைக்கான விலைக் கிரயத்தைப் பொன்னினாலோ, வெள்ளியினாலோ செலுத்தவில்லை. விலையேறப் பெற்ற தமது சொந்த இரத்சுத்தினாலே செலுத்தினார் (1பேதுரு 1:18-19). இந்தக் கிரயம் இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்திற்று

(கொலோசெயர் 1:13-14). பரிசுத்தமான தேவன் பாவத்தை நிராகரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும். ஆனால் இயேசு தமது சிலுவை மரணத்தினாலே நமது பாவத்தையும் அதற்கான தண்டனையையும் தாமே ஏற்றுக் கொண்டார். ஆகவே, இயேசு நமது பாவ நிவாரணபலி என்று அழைக்கப் படுகிறார், அதாவது பரிசுத்தமான தேவனின் நியாயமான கோரிக்கைகளை இயேசு திருப்திப்படுத்திவிட்டார் (ரோமர் 3:25; 1 யோவான் 2:2). இயேசுவின் பாவ நிவாரண பலி அல்லது கிருபாதார பலி, தேவன் பாவிகளை மன்னிக்கவும் அதே வேளையில் பரிசுத்தராய் இருக்கவும் வகை செய்கிறது. ஏனெனில் அவர் பாவத்தைக் கண்டும் காணாதவர் போலிராமல் அதைத் தண்டித்து விட்டார். நமது பாவத்தின் நிமித்தமாக நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டோம், ஆனால் தேவனோ இயேசு கிறிஸ்துவைக் கொண்டும் (2கொரிந்தியர் 5:18) அவரது இரத்தத்தைக் கொண்டும் (ரோமர் 5:1, 9- 11; கொலோசெயர் 1:20-22) நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கிக் கொண்டார்.

இயேசுவின் சிலுவை மரணத்தினாலும், அவர் சிந்திய இரத்தத்தினாலும் நாம் பாவமன்னிப்பை அடைகிறோம், அதாவது, தேவன் நம் பாவங்களைக் கண்டும் காணாதது போல் விடுவதில்லை, அவற்றை அகற்றிப் போடுகிறார் (கொலோசெயர் 2:13-14; எபிரெயர் 10:17), நம்மைச் சுத்திகரிக்கிறார் (எபிரெயர் 9:14,22; 1 யோவான் 1:7-9). இயேசு தமது சிலுவை மரணத்தின் மூலமாகப் பிசாசைத் துரத்தியடித்துப் போட்டார் (யோவான் 12:31; எபிரெயர் 2:14-15). இயேசு சிலுவையிலே நமது வியாதிகளையும் சுமந்து தீர்த்தார், அதன் மூலமாக நாம் சரீர சுகத்தையும், பிசாசுகளின் பிடியிலிருந்து அற்புதமான விடுதலையையும் பெற்றுக் கொள்கிறோம் என அநேகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் (ஏசாயா 53:4-5; மத்தேயு 8:16-17; மாற்கு 1:27; பொதுவான தலைப்பு : சரீர சுகமும் விடுதலையும் – பார்க்க). தமது உயிர்த்தெழுதலின் மூலமாக இயேசு நமக்கும் சரீர உயிர்த்தெழுதலையும் நித்திய ஜீவனையும் அருளுகின்றார் (யோவான் 6:54-58; 11:25-26; 1 கொரிந்தியர் 15:20-22).

மேற்கண்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் இயேசு தமது சிலுவை மரணத்தினாலே நமக்குப் பெற்றுத் தந்தார். இயேசு இன்றும் செய்து கொண்டேயிருக்கும் கிரியை ஒன்றும் உண்டு, பெந்தெகொஸ்தே நாளன்று திருச்சபையைப் பெலனால் தரிப்பிக்கும் படி பரிசுத்த ஆவியானவரை உன்னதத்திலிருந்து அனுப்பினார் (யோவான் 14:16-17; 15:26-27; அப்போஸ்தலர் 2,1-4), இன்றும் தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார் (மாற்கு 1:7-8; பொதுவான தலைப்பு: பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – பார்க்க). பரிசுத்த ஆவியானவர் மூலமாகத் தாம் என்றென்றுமாய் நம்மோடு இருப்போம் என்று வாக்கும் கொடுத்திருக்கிறார் (மத்தேயு 18:20; 28; 20; யோவான் 14: 16-18). இயேசு பரத்திலேயிருந்து நமக்காக ஜெபிக்கிறார், அவர் நமக்காகப் பரிந்து மன்றாடுபவர், நமக்கு ஒத்தாசை செய்பவர் (ரோமர் 8:34; 1 யோவான் 2:1). திருச்சபைக்குத் “தலை ”யும் (எபேசியர் 5:23; கொலோசெயர் 1:18), எல்லாவற்றையும் ஆளுகை செய்பவரும் இயேசுவே (மத்தேயு 28:18; எபேசியர் 1:20-22; பிலிப்பியர் 2:9-11).

கிறிஸ்துவின் ஒப்பற்ற தன்மை

இயேசு மற்ற மதத் தலைவர்களையோ, பிற மதங்களைத் தோற்றுவித்தவர்களையோ போன்றவர் அல்லர். பெரும்பாலான பிற மதத் தலைவர்கள் ஒன்று மனிதராகவோ, அல்லது தெய்வங்களாகவோ கருதப் பட்டுள்ளனர், ஆனால் இவை இரண்டும் ஒருங்கே அமைந்தவர்களாகக் கருதப்பட்டதில்லை. மனிதர்களாகக் கருதப்பட்ட இப்படிப்பட்ட தலைவர்கள் மரித்து மண்ணாகி விட்டனர், அவர்கள் மீண்டும் உயிரோடு வந்ததாக எங்கும் கூறப்படவில்லை.

இயேசு தேவனின் மெய்யான அவதாரம் ஆவார். சிலர் இயேசு ஏதோ பல அவதாரங்களில் ஒரு அவதாரம் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. மெய்யான ஜீவனுள்ள தேவனுக்கு ஒரேயொரு அவதாரம் மட்டுமே உண்டு, இது இயேசு கிறிஸ்துவே. ஒரு மெய்யான அவதாரம், முழுமையான மனித வாழ்க்கை வாழவும், அதே வேளையில் தனது வாழ்க்கையினாலே தான் முழுமையான கடவுள் என்பதை வெளிப்படுத்திக் காட்டவும் வேண்டும் (ரோமர் 1:3-4). மெய்யான அவதாரம் பாவமே அற்றதொரு வாழ்க்கை செய்ய வேண்டும். இயேசு ஒருவரே முழுமையான மனித வாழ்க்கை செய்தார், எனினும் பாவயற்றவராய் இருந்தார்(எபிரெயர் 4:15; 1 பேதுரு 2:22), மற்றபடி அவதாரங்கள் என்று அழைக்கப் படுகிறவர்களோ, முழுமையான மனிதனாகவோ முழுமையான கடவுளாகவோ இராதபடி இது கொஞ்சம், அது கொஞ்சமாகக் கலந்து காணப் பட்டவர்களாவர்.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான மெய்யான மத்தியஸ்தர் இயேசுவே, ஏனெனில் அவர் தேவனும் மனிதனுமானவர் (எபிரெயர் 9:15). மனிதருக்காகப் பாவ நிவிர்த்தி செய்யும் படியாக இயேசு மெய்யான மனிதனாக இருக்க வேண்டியது அவசியம் (எபிரெயர் 4:14-15), பாவ நிவாரண பலியை தேவன் அங்கீகரிக்கும் படியாக, அவர் ஒரு பாவமற்ற பரிபூரண வாழ்க்கை செய்வதற்கு மெய்யான தேவனாக இருக்க வேண்டியதும் அவசியம் (எபிரெயர் 9:14). மனிதர்களுக்காக சாத்தானை முறியடிப்பதற்கும் (எபிரெயர் 2:14-17), சாத்தானையும் அவனது தீய ஆவிகளையும் மேற்கொள்ளும் வல்லமை படைத்தவராய் இருப்பதற்கும் (கொலோசெயர் 2:5; வெளிப்படுத்தல் 19:11-21) இயேசு உண்மையாகவே தேவனாக இருந்தாக வேண்டும். இயேசு இரட்சிப்பின் வழியைக் காட்டும் வழிகாட்டி மட்டுமல்ல, அவரே அந்த இரட்சிப்பின் வழியுமானவர்(யோவான் 14:6), நம்மைச் சரியானபடி வாழச் சொல்லிப் போதிக்கும் ஒரு பிரசங்கியார் மட்டுமல்ல; இயேசு நம்மைச் சரியானபடி வாழ வைக்கும் வல்லமையும் தருபவர். நாம் நீதியுள்ளவர்களாய் இருக்க வல்லமை தருகின்றார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நமக்கு விடுதலை அருளுகின்றார். இயேசு நமக்கு நல்ல போதனைகளை மட்டுமல்ல, சகல விசுவாசிகளுக்கும் நித்திய ஜீவனையும் தருகின்றார்.

தேவனிடம் செல்ல ஒரே மெய்யான வழி இயேசு மட்டுமே. இயேசு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகின்றார் : “அவராலே அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப் படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப் படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12).

This Post Has One Comment

Leave a Reply