இரட்சிப்பின் வழி

இரட்சிப்பின் வழி

மனிதனின் நிலைமை

மனிதர்கள் அனைவரும் சுபாவத்தின் படி பாவிகளே (ரோமர் 3:10-12). முதல் மனுஷனும் முதல் மனுஷியும் பாவம் செய்தனர் (ஆதியாகமம் 3:1-6), அன்றிலிருந்து ஒவ்வொரு மனுஷனும், மனுஷியும், குழந்தையும் பாவம் செய்து வருகின்றனர் (ரோமர் 3:23). அதன் விளைவு ஒவ்வொருவருக்கும் சரீர மரணம் (ரோமர் 5:12) மற்றும் ஆவிக்குரிய மரணம் (ரோமர் 7:11; எபேசியர் 2:1). இரட்சிக்கப் படாத மக்கள் பாவத்துக்கு அடிமைகள், தீமைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்பவர்கள் (ரோமர் 6:17-21), தேவனுக்குச் சத்துருக்கள் (ரோமர் 8:7), அநேகர் நற்கிரியைகள் செய்வதன் மூலம் நீதிமான்களாகப் பார்க்கின்றனர். ஆனால் நமது நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது (ஏசாயா 64:6), நமது இரட்சிப்புக்கு அவற்றால் பயனில்லை என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகின்றார். வேறு சிலர் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ள தேவனுடைய நியாயப் பிரமாணத்தின் சட்டதிட்டங்களைக் கைக் கொள்வதன் மூலம் நீதிமான்களாக முயல்கின்றனர், ஆனால்

இதுவும் பிரயோஜனப் படாது (கலாத்தியர் 2:15-16; 3:11 மற்றும் குறிப்புரைகள் பார்க்க). மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களாலோ அல்லது கிரியைகளாலோ இரட்சிக்கப் பட முடியாது (ரோமர் 9:16); அவர்கள் தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் மட்டுமே இரட்சிக்கப் பட முடியும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:4-7 மற்றும் குறிப்புரைகள் பார்க்க). 

தேவனின் கிரியை

நமது இரட்சிப்புக்கு அவசியமான அனைத்தையும் தேவன் செய்து விட்டார். ரோமர் 8:29- 30இல், அப்போஸ்தலனாகிய பவுல் இரட்சிப்பில் தேவன் நமக்காகச் செய்து முடித்தவற்றை வரிசைக் கிரமமாகப் பட்டியலிடுகின்றார். உலகம் படைக்கப்படுமுன்னரே. தேவன் தமது முன்னறிவினாலே நாம் தமது குமாரனுக்கு ஒப்பானவர்களாகும் படி முன் குறித்து விட்டார் (ரோமர் 8:29; 1 பேதுரு 1:2). அவர் நம்மை அழைத்தும் இருக்கிறார், நீதிமான்களாக்கியும் இருக்கிறார், மகிமைப்படுத்தியும் இருக்கிறார் (ரோமர் 8:30). தேவன் செய்த இத்தனையும், இன்னும் எத்தனை எத்தனையோ நன்மைகளும் “இரட்சிப்பு” என்ற ஒரே பதத்தில் அடங்கி விடுகின்றன.

தேவன் நம்மை “அழைத்திருக்கிறார்.” பிதாவானவர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிடில் அவன் இயேசுவிடம் வரவே முடியாது என்று வேதம் கூறுகின்றது (யோவான் 6:44). குமாரன் பிதாவை நமக்கு வெளிப்படுத்தாத பட்சத்தில் நாம் பிதாவை அறிந்து கொள்வது சாத்தியமல்ல (மத்தேயு 11:27). பாவ நிலைமையில் உள்ள ஒரு மனிதனால், தேவ ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களைப் புரிந்து கொள்ளக்கூட இயலாது (1கொரிந்தியர் 2:14). தேவனுடைய அழைப்பு மிக அவசியம், அது இல்லாமல் யாரும் அவரண்டை திரும்பவே முடியாது 

தேவன் நம்மை “நீதிமான்களாக்கியும்” இருக்கிறார். இதன் பொருள், தேவன் நம்மையே நீதிமான்களாக்கி விடுகிறார் என்பதல்ல, நம்மை “நீதிமான்கள்” என்று தீர்க்கிறார் என்பதே. இது தேவனுடைய சட்டப் பூர்வமான செயல், இதிலே அவர் இயேசு கிறிஸ்து சிலுவையிலே சம்பாதித்த மீட்பின் அடிப்படையில் நமது பாவங்களைத் தமது கிருபையினாலே இலவசமாக மன்னிக்கின்றார். (ரோமர் 3:24). தேவன் பாவத்தைக் கண்டும் காணாமல் விட, அசட்டை செய்ய முடியாது. அவர் பாவத்தைத் தண்டித்தேயாக வேண்டும். கிறிஸ்துவிலே தேவன் தாமே மனிதனின் பாவத்துக்குப் பாவநிவிர்த்தி செய்தார். இதன் மூலமாக அவர் நம்மை மன்னிக்கவும், நாம் “நீதிமான்கள் என்று தீர்க்கவும்” முடிகிறது (ரோமர் 3:25-26 மற்றும் குறிப்புரை; பொதுவான தலைப்பு இயேசு கிறிஸ்து

பார்க்க). தேவன் நம்மை நீதிமான்களாகத் தீர்ப்பதோடு மட்டுமின்றி, நீதியாய் நடக்கக் கூடிய ஒரு புதிய சுபாவத்தையும் தருகிறார். இதைப் “புதுப் பிறப்பு” அல்லது மறு பிறப்பு என்ற பதத்தில் பார்க்கிறோம். நாம் பாவத்தில் மரித்துக் கிடக்கிறோம், ஆனால் இயேசு கிறிஸ்துவில் “உயிர்ப்பிக்கப்” படுகிறோம் (ரோமர் 8:10-11; எபேசியர் 2:1,5). நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று இயேசு சொன்னார் (யோவான் 3:3,5-7 மற்றும் குறிப்புரை பார்க்க). நாம் என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறோம் (1 பேதுரு 1:23). நாம் இரட்சிக்கப் படுகையில் நமது பழைய சுபாவம் ஏதோ சீர்திருத்தப்படுகிறது என்பதல்ல; தேவனுக்குக் கீழ்ப்படியக் கூடிய ஒரு புது ஆவிக்குரிய சுபாவத்தையே பெற்றுக் கொள்கிறோம் (எபேசியர் 4:22-24), “புதுப் படைப்பாக”, புதிய சிருஷ்டியாக மாறுகிறோம் (2கொரிந்தியர் 5:17). சில கிறிஸ்தவர்கள் இப் “புதிய பிறப்பு” தண்ணீர் ஞானஸ்நானத்தோடு சம்பந்தப் பட்டது என்று நம்புகின்றனர் (தீத்து 3:5; பொதுவான தலைப்பு : தண்ணீர் ஞானஸ்நானம் – பார்க்க).

ஆனால், தேவன் நம்மை நீதிமான்கள் என்று தீர்த்து, நீதியாய் நடக்கக் கூடிய ஒரு புது சுபாவத்தைத் தருவதோடு நில்லாமல், நாம் உண்மையாகவே நீதிமான்கள் ஆகவும் உதவுகிறார். அவர் நம்மைப் “பரிசுத்தப் படுத்துகிறார்”; அதாவது, அவர் தமது பரிசுத்தத்தை நமக்கு அருளுகிறார். இயேசு மனிதனை அவனது பாவத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனைக்கு விலக்கி மீட்டுக் கொள்வதோடு மட்டுமின்றி, தமது மக்களை அவர்களது பாவங்களிலிருந்து சுத்திகரிக்கவும் செய்கின்றார் (மத்தேயு 1:21; ரோமர் 6:22). ஒரு விதத்தில் தரமாக சிலுவையில் செலுத்தி முடித்த பார்த்தால், இயேசு கிறிஸ்து ஒரேயொரு பலியின் நிமித்தமாக நாம் ஏற்கனவே பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டோம் (எபிரெயர் 10:10); நாம் ஏற்கனவே “பரிசுத்தவான்கள்” என்று அழைக்கப் படுகிறோம் (எபேசியர் 1:1; பிலிப்பியர் 1:1). ஆனால் வேறொரு விதத்தில் பார்ப்போமானால், நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பரிசுத்தத்தை இழந்துபோகிறோம். ஆகவே தான் நம்மைப் பரிசுத்தமாக்குகின்ற, தொடர்ந்தேச்சையான பரிசுத்த ஆவியானவரின் கிரியை பற்றி வேதம் கூறுகின்றது (ரோமர் 7:24-25; 8:10-11; கலாத்தியர் 3:3; பொதுவான தலைப்பு: பரிசுத்த ஆவியானவர் – பார்க்க).

தேவன் நம்மை “மகிமைப் படுத்தியும்” இருக்கின்றார் (ரோமர் 8:30). மகிமை என்ற பதம் நமது சரீரங்கள் உயிர்த்தெழுவதையும், நமது நித்திய ஜீவனையும் குறிப்பது. இயேசு பிதா தமக்குத் தந்த மகிமையை நாம் காண வேண்டுமென்று ஜெபித்தார் (யோவான் 17:24), பவுல் அந்த மகிமையிலே நாமும் பங்கடைவோம் என்றார் (ரோமர் 8:17) இம்மைக்குரிய நமது சரீரங்கள் மகிமையான சரீரங்களாக மாறிப் போகும் (1 கொரிந்தியர் 15:42-44), மரணம் ஜெயமாக விழுங்கப் படும் (1 கொரிந்தியர் 15:54- 57). நமது இரட்சிப்பு இம்மைக்கு மட்டுமல்ல மறுமைக்கும் உரியது என்பதைப் பவுல் சுட்டிக் காட்டினார். நமது நம்பிக்கைக்கு நடு மையமாக விளங்குவது சரீர உயிர்த்தெழுதல் ஆகும் (1கொரிந்தியர் 15:12- 20). நித்திய ஜீவன் நமக்கு வாக்களிக்கப் பட்டிருக்கிறது (யோவான் 3:16; 10:28 பார்க்க).

வேதத்திலே நமது இரட்சிப்பை விவரிக்கின்ற வேறு சில சொற்களும் உண்டு. உதாரணமாக நாம் கிறிஸ்துவுக்குள் “மீட்கப்” பட்டிருக்கிறோம் (எபேசியர் 1:7). மீட்பு என்றால் “ஒரு விலை கொடுத்து விடுதலையாக்குவது” என்று பொருள். இயேசு கிறிஸ்து தேவனுக்கென்று நம்மை விலைக் கிரயமாகக் கொண்டு (அப்போஸ்தலர் 20:28; வெளிப்படுத்தல் 5:9), பாவத்திலிருந்தும் (தீத்து (கலாத்தியர் 3:13) நம்மை மீட்டுக் கொண்டார். 2:14), நியாயப் பிரமாணத்தின் சாபத்திலிருந்தும் நாம் கிரயத்துக்குக் கொள்ளப் பட்டோம் (1கொரிந்தியர் 6:20), அவரது சொந்த இரத்தத்தினாலே மீட்கப் பட்டோம் (1பேதுரு 118-19).

நமது இரட்சிப்பை விவரிக்கப் பயன்படும் இன்னொரு பதம் தேவனுடைய பிள்ளைகளாக நமது “புத்திர சுவிகாரம்” ஆகும். பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவின் கிரியையினாலும் (எபேசியர் 1:5), நம்மைப் பிள்ளைகளாக்குகிற பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக் கொள்வதனாலும் (ரோமர் 8:14-17; கலாத்தியர் 4:5-7) நாம் தமது பிள்ளைகளாக புத்திர சுவிகாரம் அடையும் படி நம்மை முன்குறித்திருக்கிறார். இப்போதைக்கு, நமது வாரிசுரிமைக்கு உத்தரவாதமாக ஒரு அச்சாரத்தை மட்டுமே பெற்றிருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் நமது சரீரங்கள் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, நாம் குமாரர்களாக, குமாரத்திகளாக நமக்குரிய பூரண உரிமையை அடைந்து அனுபவிக்கப் போகின்ற அந்த பூரண புத்திர சுவிகாரத்தைப் பற்றியும் பவுல் எழுதுகின்றார் (ரோமர் 8:18-25; எபேசியர் 13-14).

ஆக, இரட்சிப்பு என்ற பதம் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் பயன்படுத்தப் படுவதைக் காண்கிறோம். நாம் இரட்சிக்கப் பட்டோம் (எபேசியர் 2:5,8, 2 தீமோத்தேயு 1:9), நாம் இரட்சிக்கப் படுகிறோம் (1கொரிந்தியர் 1:18; 2கொரிந்தியர் 2:15; பிலிப்பியர் 2:12-13), நாம் இரட்சிக்கப் படுவோம் (ரோமர் 13:11; 1 தெசலோனிக்கேயர் 5:9; 1பேதுரு 1:5). மேலே பயன்படுத்திய பதங்களைக் கொண்டு சொல்வோமானால் : முற்காலத்திலே நாம் “நீதிமான்களாக்கப் பட்டோம்”, “மீட்சுப் பட்டோம்”, “புதிய சுபாவம்” கிடைக்கப் பெற்றோம்; இக்காலத்திலே நாம் “பரிசுத்தமாக்கப் படுகிறோம்”; இனிவரும் காலத்திலே நாம் முழுமையான “புத்திர சுவிகாரத்தை” அடைந்து கொள்வோம், நமது சரீரங்கள் “மகிமையடையும்.”

மனிதனின் மறுமொழி 

மனிதர்கள் தங்களைத் தாங்களே இரட்சித்துக் கொள்ள முடியாதவர்கள். அவர்கள் தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும். ஆனால் அதற்காக இரட்சிப்பில் மனிதனின் பங்கு எதுவுமே இல்லை என்றாகி விடாது. சிலுவையிலே இயேசு உலகத்தின் பாவங்களை எல்லாம் சுமந்து தீர்த்து விட்ட போதிலும் (யோவான் 1:29), உலக மக்கள் அனைவரும் இரட்சிக்கப் படவில்லை. தேவன் அருளும் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் : அது கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது (யோவான் 3:16-18; அப்போஸ்தலர் 16:31).

கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது என்றால், இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்புவதாகும் (யோவான் 8:24); அது கிறிஸ்துவை ஒருவன் தன் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்வதும் (மத்தேயு 10:40;யோவான் 1:12; வெளிப்படுத்தல் 3:20), அவரில் முழுமையான நம்பிக்கை வைப்பதுமாகும் (2தீமோத்தேயு 1:12). விசுவாசம் என்பது இயேசுவை அறிந்திருப்பது மட்டுமல்ல; நமது உள்ளங்களை அவருக்கென அர்ப்பணித்திருப்பதும் கூட. உண்மையான விசுவாசம் இருக்குமென்றால், நாம் நமது பாவங்களை அறிக்கையிடுவோம் (1யோவான் 1:9), நமது பாவங்களுக்காக மனம் வருந்தி அவற்றை விட்டுத் திரும்புவோம் (லூக்கா 13:3,5; அப்போஸ்தலர் 2:38). நமக்கு மெய்யாகவே விசுவாசம் இருக்குமெனில், மனிதர்கள் முன்பாக பகிரங்கமாக நமது வாய்களைத் திறந்து கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்வோம், நாம் கிறிஸ்தவர்கள் என்ற உண்மையை மறைக்க வகை பார்க்க மாட்டோம் (மத்தேயு 10:32-33; ரோமர் 10:9-10). ஞானஸ்நானம் பெற வேண்டுமென்ற இயேசுவின் கட்டளைக்கும் கீழ்ப்படிவோம் (மத்தேயு 28:19-20; மாற்கு 16:15-16; அப்போஸ்தலர் 2:38; பொதுவான தலைப்பு : தண்ணீர் ஞானஸ்நானம் பார்க்க).

இரட்சிப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாக தேவன் நமக்காகச் செய்யும் கிரியை எனினும், நாம் அந்த இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும். ஆனால் அந்த இரட்சிப்பு நம்மிடமிருந்து வருவதல்ல; அது தேவனிடமிருந்தே வருவது, அவரே தமது கிருபையினால் நமக்கு அதை இலவசமாகத் தருகிறார். நாம் நமது சொந்த பெலத்தினாலோ, முயற்சியினாலோ இரட்சிப்பைப் பெறுவதோ அல்லது நமது நற்கிரியைகளினாலே அதைச் சம்பாதிப்பதோ இல்லை (ரோமர் 9:15). ஆனால் நமது விசுவாசத்தினால் கூட நாம் அதைச் சம்பாதிக்க முடியாது, விசுவாசம் என்பது நமது சொந்த இரட்சிப்பை உண்டாக்கிக் கொள்வதற்காக நாம் செய்கின்ற ஏதோ ஒரு வேலையோ அல்லது வேறு எதுவுமோ அல்ல; அது வெறுமனே தேவனிலும் அவரது கிருபையின் ஈவிலும் வைக்கப் படும் நம்பிக்கை மட்டுமே (ரோமர் 4:5).

ஆகவே தான், இரட்சிப்பும் அதன் ஆசீர்வாதங்கள் அனைத்தும் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டே கிடைக்கிறது (எபேசியர் 2:8) என்று பவுல் எழுதுகின்றார். வேறு பல இடங்களில் “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு’ என்பதைச் சுருக்கமாக ‘விசுவாசத்தினாலே” என்று குறிப்பிடுகின்றார். விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களாக்கப் படுகிறோம் (ரோமர் 3:27-28; கலாத்தியர் 2:15-16). விசுவாசத்தினாலே பரிசுத்தமாக்கப் படுகிறோம் (அப்போஸ்தலர் 26:18; கலாத்தியர் 3:1-5). விசுவாசத்தினாலே நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம் (யோவான் 1:12-13). ஆனால் அந்த விசுவாசமும் கூட தேவனுடைய ஈவே; அதைக் குறித்து மேன்மை பாராட்ட நமக்கு இடமில்லை (அப்போஸ்தலர் 3:16; எபேசியர் 2:9; பிலிப்பியர் 1:29; 2 தீமோத்தேயு 2:25), நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும், அதைப் பாதுகாப்பவரும், அதைப் பூரணப் படுத்தி முடித்து வைப்பவரும் இயேசுவே (எபிரெயர் 12:2).

கிருபைக்கும் விசுவாசத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை ஜன்னல் என்ற உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம். ஒரு ஜன்னல் வழியே நமது அறைக்குள் சூரியவொளி வருகின்றது, ஆனால் அதற்காக ஜன்னலே சூரியவொளியை உற்பத்தி செய்வதாகி விடாது! கிருபை என்பது சூரியவொளி போன்றது, விசுவாசமோ ஜன்னல் போன்றது. நாம் தேவ கிருபையை விசுவாசத்தினாலே பெற்றுக் கொள்கிறோம், ஆனால் நமது விசுவாசம் தேவ கிருபையை உருவாக்குவதோ சம்பாதித்துத் தருவதோ இல்லை. தேவ கிருபை உள்ளே நுழைய முடியாதபடி நமது ஜன்னல்களை நாம் மூடியும் வைக்கலாம். தேவனில் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பது நமது இரட்சிப்புக்கு அவசியமான நிபந்தனையாகும். ஆனால் அதுவே நமது இரட்சிப்பின் ஆதாரமாகி விடாது.

விசுவாசமும் கிரியைகளும்

உலகத்தின் மற்ற மதங்கள் எல்லாம் மனிதன் நற்செயல்களைச் செய்வதன் மூலம் புண்ணியத்தை, இரட்சிப்பைச் சம்பாதிக்கிறான் என்பதாகப் போதிக்கின்றன. மற்ற மதங்களைச் சேர்ந்தோர் கிறிஸ்தவர்களும் இரட்சிப்பை அடையவே நன்மைகள் புரிகின்றனர் என்று எண்ணுகின்றனர், காரணம் கிறிஸ்தவர்கள் எண்ணற்ற நற்செயல்கள் செய்வதைக் காண்கின்றனர். ஆகவே அவர்கள் கிறிஸ்தவத்திற்கும் மற்ற மதங்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று முடிவு கட்டுகின்றனர்.

ஆனால் இம்மக்களின் கருத்து தவறானது. கிறிஸ்தவத்துக்கும் மற்ற மதங்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. கிறிஸ்தவர்கள் முதலில் இரட்சிப்பை அடைகின்றனர், அதன் பிறகே நற்கிரியைகள் செய்யத் திறன் பெறுகின்றனர். நாம் இரட்சிப்பைப் பெறுவதற்காக நற்செயல்கள் செய்வதில்லை; நாம் ஏற்கனவே இரட்சிக்கப் பட்டு விட்டதால் நற்கிரியைகள் செய்கிறோம் ஆனால் இந்த இடத்தில் சில கிறிஸ்தவர்களும் கூட ஒரு பெரிய தவறு செய்கின்றனர். அவர்கள், இரட்சிக்கப் பட்டு விட்டோம், இனி இரட்சிப்பைக் காத்துக் கொள்வதற்காக நன்மைகள் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணுகின்றனர். ஆனால் எப்படி மக்கள் தங்கள் சொந்த முயற்சியினாலோ, கிரியையினாலோ இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாதோ அப்படியே தங்கள் முயற்சியினாலோ, கிரியையினாலோ அதைக் காத்துக் கொள்ளவும் முடியாது (கலாத்தியர் 3:3). ஆரம்பம் முதல் முடிவு மட்டும் நமது இரட்சிப்பு தேவ கிருபையினால் மட்டுமே ஆனது, அது விசுவாசத்தினாலே மட்டுமே பெற்றுக் கொள்ளப் படுவது.

இது உண்மை தான் எனினும், கிறிஸ்தவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரைப் பிரியப் படுத்தக் கூடிய காரியங்களைச் செய்ய வேண்டும். நமது வாழ்வில் நற்கிரியைகளோ, நன்னடத்தையோ வெளிப்படவில்லை என்றால் நமது விசுவாசம் பொய்யானது, போலியானது. நற்கிரியைகள் எப்பொழுதும் மெய் விசுவாசத்துடன் இணைந்தே செல்லும் (யாக்கோபு 2:17 மற்றும் குறிப்புரை பார்க்க).

ஒரு மரத்தின் உவமையைக் கொண்டு விசுவாசத்துக்கும் கிரியைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்கலாம். கனி கொடுக்க வேண்டும் என்றால் (அதாவது, நற்கிரியைகள் செய்ய) நாம் முதலாவது உயிரோடிருக்க வேண்டும். ஆனால் விசுவாசியாதவர்கள், இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் இன்னும் மரித்தே கிடக்கின்றனர்! தேவனைப் பிரியப் படுத்தக் கூடிய நற்செயல்கள் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. எப்படி ஒரு பட்டுப் போன, செத்துப் போன மரம் கனி கொடுக்க முடியாதோ அப்படியே இரட்சிக்கப் படாமல் பாவத்தில் மரித்துக் கிடக்கும் மக்களும் உண்மையிலேயே நற்செயல்களைச் செய்ய முடியாது. அதாவது, தேவன் பேரிலும், பிற மானிடர் பேரிலும் கொள்ளும் சுயநலமற்ற அன்பினால் ஏவப்பட்டு நன்மை புரிய முடியாது. தங்களை இரட்சிக்கும் படியாக இவர்கள் தேவன் செய்து முடித்த கிரியையில் அல்ல, தங்கள் சொந்தக் கிரியைகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளனர் (ரோமர் 4:4-5), மெய்யான நற்செயல்கள் என்பவை நமது சொந்த நன்மைக்காக அன்றி, மற்ற மனிதர்களின் நலனுக்காகவும், தேவன் பாலுள்ள நமது அன்பைக் காட்டுவதற்காகவும் செய்யப் படுபவை (யோவான் 14:21).

மறுபுறத்தில், உயிருள்ள பழமரம் என்றால் அது கனி கொடுத்தேயாக வேண்டும். ஒரு கனிமரம் கனியே தரவில்லை என்றால் அது பட்டுப் போன மரத்துக்குச் சமானம், அல்லது ஒருவேளை விரைவில் பட்டுப் போகும். நாம் விசுவாசிக்கிறோம் என்று சொல்லியும் நற்செயல்கள் செய்யவில்லை என்றால் நமது விசுவாசம் போலியானது (மத்தேயு 7:21; யோவான் 2:4). நற்கிரியைகளே நமது விசுவாசத்திற்குச் சான்று. மெய்யான விசுவாசம் எப்பொழுதும் நன்மையான செயல்களைப் பிறப்பிக்கும்.

அப்படியானால், பிற மதங்களின் படி, மக்கள் கனி கொடுப்பதன் மூலம் உயிர் பெற விரும்பும் செத்த மரங்களுக்கு ஒப்பானவர்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தின் படியோ நாம் முதலாவது ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின்பு தான் கனி கொடுக்கக் கூடியவர்களாவோம்.

ஆகவே, நமது பாவங்களை விட்டு விட்டு தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் நமது விகவாசத்தைப் “பயன் படுத்த” வேண்டும். மெய்யான விசுவாசம் நமக்கிருந்தால் நமது நடத்தை முற்றிலும் மாற்றம் பெறும் (ரோமர் 8:13: 1கொரிந்தியர் 6:9-11; கலாத்தியர் 5:19-26). ஆனால் இவையெல்லாம் சாத்தியமாக ஒரே காரணம் இவற்றைச் செய்யக் கூடிய வல்லமையை தேவன் ஏற்கனவே நமக்கு அருளியிருப்பது தான். அவர் நமக்குப் புது ஜீவனையும், புது சிந்தையையும், புது சுபாவத்தையும் தருகின்றார்; இதன் காரணமாக நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை செய்யக் கூடியவர்களாகிறோம். “ஆதலால் எனக்குப் பிரியமானவர்களே . . . அதிக … பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப் படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (பிலிப்பியர் 2:12-13).

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page