பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்

பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்

முக்கிய வசனங்கள்

மாற்கு 1:8 . . . அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 

லூக்கா 24:49 …நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப் படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் …

யோவான் 14:16-17 நான் பிதாவை வேண்டிக் கொள்வேன், அப்பொழுது… சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார். 

யோவான் 20:22 (இயேசு) அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் .. . என்றார்.

அப்போஸ்தலர் 1:4 நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 

அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலன் அடைந்து சாட்சிகளாய் இருப்பீர்கள். 

அப்போஸ்தலர் 2:1-4 அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப் பட்டு வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். 

அப்போஸ்தலர் 2:38-39 பேதுரு அவர்களை நோக்கி : … அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் (என்று சொன்னான்) 

அப்போஸ்தலர் 8:14-17 பேதுருவும் யோவானும் அவர்கள் மேல் (சமாரியர்கள்) கைகளை வைத்தார்கள். அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்

அப்போஸ்தலர் 10:44-48 வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்…. பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப் பட்டது .. 

அப்போஸ்தலர் 19:1-6 பவுல் அவர்கள் மேல் (எபேசியர்) கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்.

1 கொரிந்தியர் 12:7-11 ஆவியினுடைய அனுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப் பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவையும் உணர்த்தும் வசனமும், . . . விசுவாசமும் . .. குணமாக்கும் வரங்களும் … … அற்புதங்களைச் செய்யும் சக்தியும் … தீர்க்க தரிசனம் உரைத்தலும் … ஆவிகளைப் பகுத்தறிதலும், பற்பல பாஷைகளைப் பேசுதலும் ….. பாஷைகளை வியாக்கியானம் … பண்ணுதலும் . . . அளிக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்றால் என்ன? பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்பது முதன்முதலில் யோவான்ஸ்நானனால் குறிப்பிடப் பட்டது (மத்தேயு 3:11; மாற்கு 1:8; லூக்கா 3:16). தன்னுடைய ஞானஸ்நானம் தண்ணீரினால்’ கொடுக்கப் படுவது, ஆனால் இயேசுவோ விசுவாசிகளுக்குப் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் உரைத்தான்.

 தண்ணீர் ஞானஸ்நானத்தில் விசுவாசியை ஒரு போதகர் தண்ணீரினால் ஞானஸ்நானம் செய்கிறார், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்திலோ, இயேசு தாமே விசுவாசியை பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் செய்கிறார், யோவான் கொடுத்த தண்ணீர் ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தையும் வேறுபடுத்திக் காட்டும் வண்ணமாக இயேசு அப்போஸ்தலர் 1:5இலும் இதே பதத்தைப் பயன்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்பதை பரிசுத்த ஆவியானவர் தமது சீஷர்கள் மேல் “வந்து இறங்கும்” நேரம் எனவும், அவர்கள் பெலன் அடையும் நேரம் எனவும் இயேசு விவரிக்கின்றார் (அப்போஸ்தலர் 1:8). 

அப்போஸ்தலர் 1:4 மற்றும் லூக்கா 24:49 இல், இயேசு இந்த வல்லமைக்காகத் தமது சீஷர்களைக் காத்திருக்கச் சொன்னார். அப்படியே சீஷர்கள் காத்திருந்தனர், பெந்தெகொஸ்தே நாளன்று இந்தப் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளவும் செய்தனர் (அப்போஸ்தலர் 2:1-4). ஆவியானவரின் வல்லமையால் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினர். பின்னர் ஆதித் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையும் வரங்களும் அப்போஸ்தலர்களாலும் உதவிக் காரர்களாலும் பயன்படுத்தப் பட்டதைக் காண்கிறோம் (அப்போஸ்தலர் 3-9 அதிகாரங்கள்). 

பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த வல்லமையையும் வரங்களையும் பெற்றுக் கொண்ட மக்களைப் பற்றிப் புதிய ஏற்பாடு முழுவதிலும் வாசிக்கிறோம் (1கொரிந்தியர் 12-14 அதிகாரங்கள்; 2 கொரிந்தியர் 12:12; 1 தீமோத்தேயு 4:14; 2 தீமோத்தேயு 1:6). கேள்வி என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையும், விசேஷித்த வரங்களும் இன்றும் நமக்குக் கிடைக்கக் கூடுமா என்பதே. அப்படிக் கிடைக்கக் கூடும் என்றால், நாம் அவற்றை எப்படி, எப்பொழுது பெற்றுக் கொள்ளலாம்?

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் அனுபவங்கள் ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்று வேத வசனம் திட்டவட்டமாகப் போதிக்கிறது (ரோமர் 8:9; 1கொரிந்தியர் 6:19; கலாத்தியர் 4:6), 

ஆனால் வெவ்வேறு விசுவாசிகளின் வாழ்விலும் அவர் வெவ்வேறு விதங்களில் செயல்படுகின்றார். யோவான் ஸ்நானன் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப் பட்டான் (லூக்கா 1:15, 41–44). இயேசு தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றுக் கரையேறின உடனே, ஆவியானவர் புறாவின் வடிவில் அவர் மீது வந்திறங்கினார் (மாற்கு 1:10; யோவான் 1:32-33). இயேசு இப்பூவுலகில் ஊழியம் செய்த நாட்களில் தமது பன்னிரு சீஷர்களுக்கும் அதன்பிறகு வேறு எழுபத்திரண்டு சீஷர்களுக்கும் வியாதிகளைக் குணமாக்கும், பிசாசுகளைத் துரத்தும் அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்தார் (லூக்கா 9:1-2; 10:1,9,17-19).

 பிற்பாடு பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் கூட இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு உள்ளேயும் வருவார் என்று வாக்கும் அருளினார்(யோவான் 14:16-17). பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்னரே இயேசு தமது சீஷர்கள் மேல் ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லியிருந்தார் (யோவான் 20:22). ஆனால் அதே சீஷர்களைப் பார்த்து பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது வல்லமையாய் வந்து இறங்குவதற்காக, அதாவது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்துக்காகக் காத்திருக்கும்படியும் சொன்னார் (லூக்கா 24:49; அப்போஸ்தவர் 1:4). அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் அவர்கள் ஆவியானவரின் வல்லமையையும் வரங்களையும் பெற்றுக் கொண்டது, திருச்சபை யுகத்தின் ஆரம்பமாக அமைந்தது. அவர்கள் எங்கும் திரிந்து பிரசங்கித்து, ஞானஸ்நானம் கொடுத்து, சீஷர்களாக்கி, வல்லமையையும் வரங்களையும் அடையும் படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி ஊக்குவித்தனர் (அப்போஸ்தலர் 8:14-17; 9:17; 19:1-6; 1 கொரிந்தியர் 12:8-10).

இந்தப் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் என்ற அனுபவத்தைக் குறிக்க அப்போஸ்தலர் நடபடிகளில் பயன்படுத்தப் படும் கிரேக்கப் பதங்கள் பல உண்டு. அவற்றுள் “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்” (அப்போஸ்தலர் 1:4; 11:15), “பெலனடைதல்” (அப்போஸ்தலர் 1:8), பரிசுத்த ஆவியானவர் “வரும்போது”, (அப்போஸ்தலர் 1:8; 8:16; 10:44; 11:15; 19:6) போன்ற சில பதங்களை ஏற்கனவே பார்த்து விட்டோம். இன்னும் “பரிசுத்த ஆவியினாலே நிரப்பப் படுதல்” (அப்போஸ்தலர் 2:4; 4:31; 9:17), பரிசுத்த ஆவி “பொழிந்தருளப் படுதல்” (அப்போஸ்தலர் 10:45), பரிசுத்த ஆவியைப் “பெறுதல்” (அப்போஸ்தலர் 8:15; 10:47; 19:2) ஆகிய வேறு சில பதங்களும் உண்டு. லூக்கா 9:1-2; 10:9, 17-19 இல் வல்லமையையும் வரங்களையும் பெற்ற அதே சீஷர்கள், யோவான் 20:22 இல் பரிசுத்த ஆவியைப் “பெற்றுக் கொண்ட” அதே சீஷர்கள் அப்போஸ்தலர் 2இல் மீண்டும் அவரைப் பெற்றுக் கொண்டதைக் கவனியுங்கள் (அப்போஸ்தலர் 10:47 பார்க்க), அப்போஸ்தலர் 2:4இல் பரிசுத்த ஆவியானவரால் “நிரப்பப் பட்ட அதே சீஷர்கள் அப்போஸ்தலர் 4:31இல் மீண்டும் “நிரப்பப் பட்டனர்” வெவ்வேறு விதமான அனுபவங்களுக்கு ஒரே பெயர் கொடுக்கப் படுவதையும், ஒரே வித அனுபவத்துக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப் படுவதையும் காணலாம்.

அது மட்டுமல்ல, அப்போஸ்தலர் நடபடிகளில் ஒரு அனுபவம் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதங்களில் இடம் பெறுகின்றது. இந்த அனுபவமானது சில சமயங்களில் இவ்வாறாக நிகழ்ந்தது :

1) மனந் திரும்புதலுக்குப் பிறகு, ஏதோ ஒரு விதத்தில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்ட பிறகு (யோவான் 20:22; அப்போஸ்தலர் 2:4; 4:31); 

2) மனந்திரும்புதலுக்குப் பிறகு, தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு (அப்போஸ்தலர் 8:9-17); 

3) மனந்திரும்பிய அதே வேளையில், தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு (அப்போஸ்தலர் 10:44-48); 

4) மனந்திரும்பிய பிறகு, தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்து சில மணித் துளிகளுக்குப் பிறகு (அப்போஸ்தலர் 19:1-5). சிலருக்கு, அவர்கள் மேல் கரங்கள் வைக்கப் பட்ட போது பரிசுத்த ஆவியானவர் வந்தார் (அப்போஸ்தலர் 8:17; 9:17; 19:6; 2 தீமோத்தேயு 1:6); வேறு சிலருக்கோ, அப்படி யாரும் விசேஷமாக கைகளை வைக்காமலேயே பரிசுத்த ஆவியானவர் வந்தார் (அப்போஸ்தலர் 2:4; 4:31; 10:44), ஆகவே, பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின் மீது எவ்விதத்திலும் வரலாம், பல்வேறு விதங்களில் கிரியை செய்யலாம் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்கிறோம். 

பரிசுத்த ஆவியானவர் சுயாதீனம் உள்ளவர்; நாம் அவருக்குச் சட்ட திட்டங்களை வகுக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நமது வாழ்வில் வெளிப்படுகிறதா என்பதே முக்கியம். அந்த வல்லமை வெளிப்பட வேண்டுமென நாம் ஜெபிப்பது அவசியம் (அப்போஸ்தலர் 8:14-17; 9:17). பரிசுத்த ஆவியானவர் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் எப்படி செயல்பட்டாலும் சரி, அந்தக் கிரியைக்காக நாம் தேவனைத் துதிக்கவும், அவருக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். திருச்சபையில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை

இயேசுவில் விசுவாசம் வைத்துள்ள ஒவ்வொருவருடனும் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களுமே விசுவாசிக்கின்றனர் (ரோமர் 8:9; எபேசியர் 4:30). தண்ணீர் ஞானஸ்நானத்திலும், கர்த்தருடைய பந்தியிலும் பரிசுத்த ஆவியானவரை ஒரு சிறப்பான முறையில் பெற்றுக் கொள்கிறோம் என்றும் அநேகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் (1கொரிந்தியர் 10:2-4; 12:13; தீத்து 3:5). இன்னும் வேறு பலரோ, ஒரு விசேஷித்த ஊழியத்திற்காக, அதாவது போதகர், டீக்கன் அல்லது மிஷனெரி போன்ற குறிப்பிட்ட ஊழியங்களுக்காகவோ அல்லது மீண்டும் மீண்டும் வல்லமை மற்றும் இடையறாத ஊக்கம் பெறவோ பரிசுத்த ஆவியானவரை ஒரு விசேஷித்த முறையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர் (அப்போஸ்தலர் 4:31),

ஆதித் திருச்சபையானது, அப்போஸ்தலர் 8:14-17இல் விவரிக்கப் பட்டுள்ளதைப் போல, சபைத் தலைவர்கள் கிறிஸ்தவர்களின் தலைகள் மீது கரங்கள் வைத்து ஜெபிப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் விசேஷித்த முறையில் அவர்கள் மீது இறங்கி அவர்களுக்கு வல்லமையும் வரங்களும் அருளுகிறார் என்று நம்பியது. இது மனந்திரும்புதலின் அனுபவத்திலும், தண்ணீர் ஞானஸ்நானத்திலும் இருந்து வேறுபட்ட ஒரு தனி அனுபவம் என்பது ஆதி சபையின் நம்பிக்கை. திருச்சபை வரலாற்றின் முதல் சில நூற்றாண்டுகள் வரை இதுவே பரவலான நம்பிக்கையாக இருந்து வந்தது.

எனினும், தொடர்ந்து வந்த சபை வரலாற்றில், பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் 1 கொரிந்தியர் 12:7-11 இல் விவரிக்கப் படும் வரங்களோ, விசேஷித்த ஆவியானவரின் வல்லமையோ காணப் படவில்லை. உதாரணமாக, பெரும்பான்மை மக்கள் தெய்வீக சுகத்தைக் கண்ணால் கண்டதேயில்லை. அநேகர், இவ்வித வரங்கள் தேவனால் ஆதித் திருச்சபைக்கு மட்டுமே அளிக்கப் பட்டவை என்று கருதத் தொடங்கி விட்டனர். இன்றும், சில கிறிஸ்தவர்கள் இவ்வரங்களில் பெரும்பாலானவை நமது யுகத்துக்கு அளிக்கப்படவில்லை என்றே நம்புகின்றனர். இவர்கள், நம்முடைய அறிவு, தீர்க்க தரிசனம் சொல்லுதல், அந்நிய பாஷைகள் இவையெல்லாம் குறைவுள்ளவை, நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும் என்று 1 கொரிந்தியர் 13:8-10 இல் பவுல் கூறுவதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தக் கிறிஸ்தவர்கள் “நிறைவு” என்பது எழுதி முடிக்கப் பட்ட புதிய ஏற்பாட்டைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். புதிய ஏற்பாடானது கிறிஸ்து மரித்ததிலிருந்து நூறு ஆண்டுகளுக்குள் முழுவதும் எழுதி முடிக்கப் பட்டு விட்டது.

பல கிறிஸ்தவர்களோ, இவ்வரங்கள் அனைத்தும் இன்றும் நமக்குக் கிட்டக் ஆனால் வேறு கூடியவையே என்றும், அதோடு, தங்களுக்கே இவ்வரங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இவர்கள் 1 கொரிந்தியர் 13:8-10இல் பவுல் குறிப்பிட்டது நாம் இயேசுவை முகமுகமாய்ச் சந்திக்கப் போகின்ற ஒரு எதிர்காலத்திற்கே உரியது என்கின்றனர் (1கொரிந்தியர் 13:12). திருச்சபை வரலாறு முழுவதிலுமே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையும் வரங்களும் ஆங்காங்கு அவ்வப்பொழுது காணப்பட்டதுண்டு என்று இவர்கள் கூறுகின்றனர். உண்மையாகவே, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஆவியானவரின் வல்லமையும் வரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கிறிஸ்தவர்கள் விசுவாசிகளுக்கு அளிக்கப் பட்டுள்ள வரங்கள் பற்றிய வாக்குத்தத்தங்கள் அடங்கிய வேத மாற்கு 16:17-18; யோவான் 14:12; அப்போஸ்தலர் 2:17-18′ ஆகியவற்றைக் கட்டிக் பகுதிகளான காட்டுகின்றனர்.

நாம் எப்படி, எப்பொழுது இந்த வல்லமையைப் பெற்றுக் கொள்கிறோம்? வல்லமையும் வரங்களும் இன்றைய திருச்சபைக்கும் கிட்டக் கூடியவை என்றும் நம்பும் கிறிஸ்தவர்களிடையே, அவை எப்படி எப்பொழுது கிடைக்கும் என்பது பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அநேகர் “பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்” என்பது அப்போஸ்தலர் 10:44இல் விவரிக்கப் பட்டுள்ளது போல, மனந்திரும்பும் போதே ஒவ்வொரு விசுவாசிக்கும் கிடைத்து விடுகிறது, 

ஆனால் அந்த வரங்கள் விசுவாசியின் வாழ்வில் தென்பட ஆண்டுகள் பல ஆகலாம் என்று நம்புகின்றனர். இன்னொரு கூட்டம் கிறிஸ்தவர்கள், “ஆவியானவரின் ஞானஸ்நானம்” தண்ணீர் ஞானஸ்நானத்தின் போதே பெறப்படுவதாகக் கருதுகின்றனர். இவர்கள் மத்தேயு 3:16-17இல் குறிப்பிடப் பட்டுள்ள இயேசுவின் தண்ணீர் ஞானஸ்நானத்தையும், அப்போஸ்தலர் 19:5-6இல், தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்த சற்று நேரத்துக்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் மீது இறங்கியதையும் சுட்டிக் காட்டுகின்றனர். 

இவ்விரண்டு கூட்டத்தாருமே, அப்போஸ்தலர் நடபடிகளில் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பற்றிப் பேசும் எஞ்சிய வசனங்கள் அனைத்தும், ஆவியானவரைப் பெற்றுக் கொள்வதில் வழக்கத்திற்கு மாறான விதிவிலக்குகளையே விவரிக்கின்றன என்றும், பொதுவாக ஆவியானவர், மனந் திரும்பும் வேளையிலோ அல்லது தண்ணீர் ஞானஸ்நாளத்தின் வேளையிலோ தான் பெற்றுக் கொள்ளப் படுகிறார் என்றும் நம்புகின்றனர். ஆனால் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பெறப்படும் ஆவியானவரின் வல்லமையோ வரங்களோ பல ஆண்டுகளுக்கு வெளியே புலப்படுவதில்லை என்பதால், தேவன் தாமே அவற்றை நம் வாழ்வில் வெளிப் படுத்திக் காட்ட வேண்டுமென நாம் ஜெபிப்பது அவசியம் என்று இவர்கள் நம்புகின்றனர். 

மூன்றாவதாக ஒரு கூட்டம் கிறிஸ்தவர்கள், ஆவியானவரின் வல்லமையும் வரங்களும் எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளப் படலாம், ஆனால் அவை பொதுவாக மனந்திரும்புதல் மற்றும் தண்ணீர் ஞானஸ்நானம் ஆகிய இந்த இரண்டும் அல்லாத வேறொரு சமயத்திலே தான் பெறப் படுகின்றன என்றே அப்போஸ்தலர் நடபடி வேத பகுதிகள் கூறுவதாக நம்புகின்றனர் (அப்போஸ்தலர் 2:4; 8:17; 1தீமோத்தேயு 4:14; 2 தீமோத்தேயு 1:6). 

ஒருவன் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை வேண்டி, ஜெபிக்கையில் அது அருளப் படும் என்பது இவர்கள் நம்பிக்கை. கேட்கின்ற யாருக்கும் அது கிடைக்கும் என்கின்றனர். இந்த வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்கு, சபைத் தலைவர்கள் தங்கள் கரங்களை நமது தலை மீது வைத்து ஜெபிப்பது உதவும் என்று இவர்கள் 8:17; 19:6). நம்புகின்றனர் (அப்போஸ்தலர் இங்கே மற்றொரு கேள்வி எழுகிறது : அந்நிய பாஷை அல்லது பல பாஷை வரம் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது? மேலே கூறப்பட்ட மூன்று கருத்துக்களை ஆதரிப்போரும், பல பாஷை வரம் என்பது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டதற்கான பல அடையாளங்களுள் ஒன்று என்பதை ஒத்துக் கொள்கின்றனர். 

பல பாஷை வரம் என்பது, முன்னொரு போதும் கற்றிராத ஒரு விசேஷித்த பாஷையில் பேச ஆவியானவர் தரும் திறமையாகும் (1கொரிந்தியர் 12:10; 14:1-5). புதிய ஏற்பாட்டில், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே தேவனை ஒரு அந்நிய மொழியில் துதித்துப் போற்றினர் எனலாம் (மாற்கு 16:17; அப்போஸ்தலர் 2:4; 10:46; 19:6; 1கொரிந்தியர் 14:18). ஆனால் இந்த வரம் அனைத்து விசுவாசிகளுக்குமானதா அல்லது ஒரு சிலருக்கே மட்டும் உரியதா என்பது பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

தேவன் ஒரு சிலர் மட்டுமே ஒரு விசேஷித்த பாஷையில் பேச விரும்புகிறார் என்று சில கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அநேக ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு இவ்வரம் இல்லை என்பது நாமறிந்த உண்மை. பவுலும் கூட எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? என்று கேட்கிறார் (1கொரிந்தியர் 12:30). அதாவது, எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசவில்லை என்பதே பவுல் கூற விரும்பும் கருத்து. இந்தக் கருத்துடைய கிறிஸ்தவர்கள் அந்நிய பாஷை வரத்துக்காக தேவனிடம் ஜெபிப்பது சரியெனக் கருதலாம், காரணம் இந்த வரத்தின் மூலமாக ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எல்லாரும் அந்நிய பாஷையில் பேசியே ஆக வேண்டும் என்று வேதத்தில் திட்டவட்டமாக எழுதப்படவில்லை என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனினும், வேறு அநேகக் கிறிஸ்தவர்கள், பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்துக்கு முக்கிய அடையாளம் அல்லது சான்று ஒரு விசேஷித்த பாஷையில் பேசுவதே என்று நம்புகின்றனர். கொரிந்து சபை மக்கள் அனைவரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி தான் விரும்புவதாகப் பவுல் எழுதியதை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் (1கொரிந்தியர் 14:5). ஆகவே இவர்கள் அந்நிய பாஷை வரம் என்பது இருவகைப் படும் என்று கருதுகின்றனர் : ஒன்று, தேவனுடைய செய்தியைப் பகிரங்கமாக மக்களுக்கு எடுத்துரைப்பது – இது ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படும் வரம், இவ்வரத்தை உடையவர்கள் அந்தப் பாஷையின் அர்த்தத்தையும் தெரிவிக்க வேண்டும் (1கொரிந்தியர் 14:1-5,13,26- 27); அடுத்தது தனியாக தேவனைத் துதிக்கும், தேவனிடம் ஜெபிக்கும் தனிப்பட்ட ஆராதனையின் வரம், இது அனைத்து விசுவாசிகளுக்கும் அருளப் படுவது (1கொரிந்தியர் 14:2, 15-17). இவர்களைப் பொறுத்தவரை, 1கொரிந்தியர் 12:30 முதல் வகையான அந்நிய பாஷையை, அதாவது “செய்தி உரைக்கும்” பாஷையைப் பற்றியே பேசுகிறது. வேறு விதமாகச் சொன்னால், ஒரு திருச்சபை ஆராதனையில் அந்நிய பாஷையில் பேசி சபையாருக்குச் செய்தியளிக்கும் அழைப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுவதில்லை. எனினும், இந்தக் கிறிஸ்தவர்களின் கருத்துப்படி யாரும் வியாக்கியானம் செய்யாமலே, அந்நிய பாஷையில் “தேவனிடம் பேசவும்,” அவரைப் போற்றிப் பாடவும் (1கொரிந்தியர் 14:2,28), அதன் மூலம் கிட்டும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் எல்லாரும் வரம் பெற்றிருக்க வேண்டும்.

வேறு சில கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தின் போது இந்தத் தனிப்பட்ட அந்நிய பாஷை வரத்தை தேவன் அருளுகின்றார் என்ற போதிலும், எல்லாருமே அதை உடனடியாகவே பயன்படுத்தத் தொடங்கி விடுவதில்லை என்று எண்ணுகின்றனர். சிலர் இவ்வரத்தைப் பற்றியே அறியாதிருக்கலாம், இன்னும் சிலர் வேறு ஏதாவது காரணங்களுக்காகப் பயன்படுத்தாமல் இருக்கலாம். பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்துக்கு ஒரே அடையாளம் பல பாஷை வரம் தான் என்று இக்கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை; ஆவியானவரின் வல்லமை நம் வாழ்விற்குள் வந்து விட்டது என்பதற்கு ஆவியானவரின் எந்தவொரு வரமும் சான்றாக அமையலாம். இந்த மூன்றாம் வகை கருத்துடையோர், எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசியாக வேண்டும் என்பதில்லை என்ற முதல் வகையினர் கருத்தையும், ஆனால் அதே வேளையில் எல்லாரும் தனிப்பட்ட ஜெபம் மற்றும் துதி தோத்திரத்துக்காக அந்நிய பாஷை வரம் பெற்றவர்களாய் இருக்க தேவன் விரும்புகிறார் என்ற இரண்டாம் வகையினரின் கருத்தையும் ஒத்துக் கொள்கின்றனர். 

சுருக்கம்

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் வரங்களையும் பற்றி நாம் எப்படி நினைத்தாலும் சரி, சில காரியங்களை மனதில் கொள்ள வேண்டும் :1) வல்லமையும் வரங்களும் பொதுவான நன்மைக்காகவும் (1கொரிந்தியர் 12:7; 14:3) மற்றவர்களுக்குச் சாட்சி சொல்வதற்கு பெலப்படுத்தவும் (அப்போஸ்தலர் 1:8) அளிக்கப் பட்டுள்ளன; 2) அவை அன்புடனும் ஒரு கட்டுப் பாட்டுடனும் பயன்படுத்தப்பட வேண்டும், இல்லாவிடில் அவற்றால் பயனொன்றும் இல்லை (1கொரிந்தியர் 13:1-3; 14:40); 3) அவற்றை விரும்ப வேண்டும், விலக்கவோ தடுக்கவோ கூடாது (1கொரிந்தியர் 12:31; 14:1,39); 4) அவை நமக்குள்ளே பிரிவினைகளை உண்டாக்கக் கூடாது (1கொரிந்தியர் 12:4-6). ஆவியானவரின் வரங்களைப் பற்றி நமது கருத்துக்கள் எப்படியிருப்பினும் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாய் இருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாரும் ஒன்றாய் இருக்கிறோம் (1கொரிந்தியர் 12:13; கலாத்தியர் 3:28).

பின்குறிப்புகள்

மத்தேயு 3:11; லூக்கா 3:16-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆல்’ (தண்ணீரினால்) என்ற பதம் ‘இல்’ (தண்ணீரில்) என்று உபயோகிக்கப்பட்டாலும் அர்த்தம் ஒன்றே. புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது.

1 கொரிந்தியர் 12:13 இக் கருத்து வேறுபாட்டுடன் தொடர்புடைய மற்றொரு வசனமாகும். இந்த வசனத்தின் அர்த்தம் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த வசனம் : நாம்… எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப் பட்டோம் என்று இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அது சரியென்றால், இவ்வசனம் தண்ணீர் ஞானஸ்நானத்தை அல்ல, பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தையே குறிக்க வேண்டும். ஆகவே, சில கிறிஸ்தவர்கள் எல்லா விசுவாசிகளுமே பரிசுத்த ஆவியானவரில் ஞானஸ்நானம் செய்யப் பட்டுள்ளனர், ஆனால் அது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையோ, வரங்களையோ பெற்றுக் கொள்ளும் ஓர் அனுபவம் அல்ல, மாறாக நாம் இயேசுவில் விசுவாசம் வைக்கும் போது நடைபெறும் நமது ஆவிக்குரிய பிறப்பைக் குறிக்கும் ஒரு பதம் மட்டுமே என்று போதிக்கின்றனர்.

எனினும், பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனம் நாம்… எல்லாரும் ஒரே ஆவி(யினாலே ) ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்தானம் பண்ணப்… பட்டோம் என்றே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இவ் வசனம் முக்கியமாகத் தண்ணீர் ஞானஸ்நானத்தைப் பற்றியே பேசுகிறது என்று நம்புகின்றனர். ஆகவே இக்கிறிஸ்தவர்களில் பலர், பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் செய்யப் படுவது என்பது, நமது ஆவிக்குரிய பிறப்பை மட்டும் குறிக்கவில்லை, அவரது வல்லமையையும் வரங்களையும் பெற்றுக் கொள்கின்ற ஓர் அனுபவத்தையே முக்கியமாகக் குறிக்கின்றது என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆக, இக் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வரங்களும் வல்லமையும் இன்றைய திருச்சபைக்கும் கிட்டக் கூடியவை என்கின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *