பரிசுத்த ஆவியானவர்
பரிசுத்த ஆவியானவர் – அவர் யார்?
பரிசுத்த ஆவியானவர் என்பவர் தேவனே தாம். திரித்துவ தேவனில் அவரும் ஒருவர். தேவன் என்பவர் ஒருவரே. ஆனால் எப்பொழுதுமே மூன்று விதங்களில் அல்லது வடிவங்களில் காணப்படுகிறார், அந்த மூன்றுமே முழுமையான தேவனின் வடிவங்கள் தாம் : பரமண்டலங்களில் உள்ள நமது பிதா; பூமியில் மனிதனாக அவதரித்த குமாரன்; விசுவாசிகளின் உள்ளங்களில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவர் என்பதை எல்லாம் அனைத்துக் கிறிஸ்தவர்களுமே விசுவாசிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் தேவனுடைய பாகங்கள் அல்ல; அவர்களே தேவன் தாம். இதைப் புரிந்து கொள்வது கடினம் என்றாலும், வேதம் அப்படித்தான் நமக்குக் கற்பிக்கிறது, உதாரணமாக, இயேசு ஞானஸ்நானம் பெற்றுத் தண்ணீரிலிருந்து கரையேறின உடனே பரிசுத்த ஆவியானவர் புறாவின் வடிவத்தில் வந்து அவர்மேல் இறங்கினார், பிதாவும் பரலோகத்திலிருந்து கூப்பிட்டு, “நீர் என்னுடைய நேசகுமாரன்” என்று சொன்னார் (மாற்கு 1:9-11). இயேசுவும், நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டார் (மத்தேயு 28:19). பவுல் அப்போஸ்தலன் இப்படியாக ஆசீர்வாதம் கூறுகின்றார் : கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக (2கொரிந்தியர் 13:14), தேவத்துவத்தின் மூன்று நபர்களும் எப்பொழுதும் ஒருங்கே குறிப்பிடப் படுகின்றனர் (எபேசியர் 2:18; 4:4-6; யூதா 20-21). பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் தனித்தனி நபர்கள் (யோவான் 14:16- 17,26; 16:7-15; 1 கொரிந்தியர் 12:4-6; 1 பேதுரு 1:2), ஆனால் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். அவர்கள் மூவருமே “தேவன்” என்றே அழைக்கப் படுகின்றனர் (யோவான் 6:27 எபிரெயர்1:8; அப்போஸ்தலர் 5:3-4). மூவருமே ஜீவன் தருபவர்கள் (யோவான் 5:21; ரோமர் 8:11). மூவருமே தெய்வீகத்துக்குரிய மகிமையை ஏற்றுக் கொள்பவர்கள் (யோவான் 5:23 : 2 கொரிந்தியர் 13:14). மூவருமே நித்தியமானவர்கள் (யோவான் 1:1; எபிரெயர் 9:14).
பரிசுத்த ஆவியானவரை அவித்துப் போட முடியும் (1 தெசலோனிக்கேயர் 5:19). ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒரு விதமான ஆற்றலோ, சக்தியோ அல்லர்; அவர் ஒரு நபர், திரித்துவத்தின் மற்ற இரு நபர்களையும் போலவே ஆவியானவரும் நம்மோடு தனிப்பட்ட உறவு கொள்பவர். அவர் பேசுவார் (அப்போஸ்தலர் 13:2), அவரைப் துக்கப் படுத்த முடியும் (ஏசாயா 63:10; எபேசியர் 4:30), அவரை நிந்திக்கவோ, அவமானப் படுத்தவோ முடியும் (எபிரெயர் 10:29). பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசுவது துஷணம் எனக் கருதப் படும், இந்தப் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாது (மாற்கு 3:28-29).
பரிசுத்த ஆவியானவர் பிதாவோடும் குமாரனோடும் ஒன்றாயிருக்கிறார். இதை நாம் ரோமர் 8:9-10 இல் காண முடியும். இங்கே “தேவனுடைய ஆவி”, “பரிசுத்த ஆவி” “கிறிஸ்துவின் ஆவி”, மற்றும் “கிறிஸ்து” என்ற பதங்கள் எல்லாமே ஒன்றுக்குப் பதிலாக ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளன, எல்லாமே “தேவன்” என்ற அர்த்தத்திலேயே வருகின்றன. இந்த ஒருமைப் பாடு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவரும் ஒருவரையொருவர் ஒத்தவர்கள் என்று பொருள்படாது. குமாரன் பிதா அல்லர், ஆனால் பிதாவினால் ஜெநிப்பிக்கப் பட்டவர்(யோவான் 3:16); பரிசுத்த ஆவியானவர் பிதாவோ, குமாரனோ அல்லர், ஆனால் பிதாவினாலும் குமாரனாலும் அனுப்பப் பட்டவர் (யோவான் 15:26). ஆனால் மூவரும் கருத்தொருமித்தவர்கள், ஒரே சிந்தையும், ஒரே சித்தமும், ஒரே நோக்கமும் கொண்டவர்கள், தன்மையிலும் ஒன்றுபட்டவர்கள்.
திரித்துவ தேவனை மேல் ஓடு, வெள்ளைக் கரு, மஞ்சள் கரு என்ற மூன்று பாகங்கள் கொண்ட முட்டைக்கு ஒப்பிடலாம். ஆனால் தேவன் ஒருவரே, மூன்று பாகங்களாலானவர் அல்லர்.
திரித்துவ தேவனை தண்ணீர், பனிக்கட்டி, நீராவி என்ற மூன்று வடிவங்களில் காணப்படும் நீருக்கும் ஒப்பிடலாம். இது முதலாவதைக் காட்டிலும் சற்றுப் பொருத்தமான உவமை, காரணம் இம்மூன்று நிலைகளிலும் காணப்படுவது ஒரே பொருளே. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் நீர் ஒரே சமயத்தில் இந்த மூன்று நிலைகளிலும் காணப்படுவது முடியாத காரியம், தேவனோ ஒரே நேரத்தில் மூவராகவும் இருக்கிறார் (மாற்கு 1:10-11).
பிதாவாகிய தேவனை ஒரு நாடகம் எழுதும் கதாசிரியருக்கு ஒப்பிடுவது இன்னும் நலமாக இருக்கும். நாடகம் நாம் வாழ்கின்ற உலகம். கதாசிரியர் முற்றிலும் தமக்கே ஒப்பான ஒரு கதாபாத்திரத்தை நாடகத்தில் படைக்கின்றார். அப்படி கதாசிரியருக்கு முழுக்க முழுக்க ஒத்த அந்தக் கதாபாத்திரம் இயேசு. கதாசிரியரின் ஆவியும் நாடகம் முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆட்டி வைக்கிறது, ஒரு கதாபாத்திரத்திடமிருந்து வல்லமையை எடுக்கிறது, வேறொரு கதாபாத்திரத்துக்கு வல்லமையை அளிக்கிறது. இது உலகில் செயல்படும் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் “உலகில் வசிக்கும் தேவன்.” தாம் உலகை விட்டுப் போவதாகவும் (யோவான் 14:2-3), ஆனால் நம்மோடிருக்கும் படியாக பரிசுத்த ஆவியானவரை அனுப்பப்போவதாகவும் (யோவான் 14:16-20, 26) இயேசு சொன்னார். பரிசுத்த ஆவியானவர் என்பவர் செயல்படும் தேவன், உலகில் கிரியை செய்யும் தேவனே தாம். சரி, அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் என்ன செய்கிறார்?
பரிசுத்த ஆவியானவர் – அவரது பணி
முதலாவதாக, பரிசுத்த ஆவியானவர் உலகத்தின் படைப்பில் பங்கெடுத்துக் கொண்டார் (ஆதியாகமம் 1:1-2). மனுஷனுக்கு ஜீவ சுவாசத்தைக் கொடுத்தவர் அவரே (ஆதியாகமம் 2:7; யோபு 33:4). இரண்டாவதாக, வேதாகமத்தின் நூல்களை எழுதிய ஆக்கியோன்கள் தேவன் என்ன சொல்ல விரும்பினாரோ அதைத் துல்லியமாக எழுதும்படி அவர்களை ஏவியெழுப்பி எழுதச் செய்தவர் பரிசுத்த ஆவியானவரே (அப்போஸ்தலர் 28:25; எபிரெயர் 9:8 10:15; 2 பேதுரு 1:21).
பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டிலும் செயல் பட்டார். அவர் போதித்தார் (நெகேமியா 9:20,30), தேவனுடைய மக்களுக்கு வல்லமையும் வரங்களும் அருளுவதற்காக அவர்கள் மீது வந்திறங்கினார் (எண்ணாகமம் 11:17; 27:18; 1 சாமுவேல் 19:20-24; 2 இராஜாக்கள் 2:9-14), எனினும் தாவீது, தேவன் எங்கே தமது பரிசுத்த ஆவியானவரைத் தன்னிடமிருந்து எடுத்து விடுவாரோ என்று பயந்தான் (சங்கீதம் 51:11). ஆகவே, ஒருவேளை பழைய ஏற்பாட்டுக் காலங்களில் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் உள்ளங்களில் வாசம் செய்யாமல் குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட ஊழியங்களை நிறைவேற்றுவதற்காகக் குறிப்பிட்ட நபர்கள் மீது வந்திறங்கி இருக்கலாம்.
இயேசு பரிசுத்த ஆவியானவராலே உற்பவித்தார் (மத்தேயு 1:20), ஆவியானவரால் வல்லமையாய் அபிஷேகிக்கப் பட்டார் (மாற்கு 1:10; லூக்கா 4:18; அப்போஸ்தலர் 10:38). நம்மைப் போலவே இயேசுவுக்கும் ஆவியானவரின் ஒத்தாசையும் வல்லமையும் தேவைப்பட்டது, ஏனெனில் அவர் முழுமையாக மனிதனாய் இருந்தார். இயேசு இப்பூவுலகில் இருந்த போது தெய்வீகத் தன்மை பொருந்தியவராகவே இருந்த போதிலும், தமது தெய்வீக வல்லமையையும் மகிமையையும் துறந்தே வாழ்ந்தார் (யோவான் 17:5; பிலிப்பியர் 2:7).
யோவான் 14-16 அதிகாரங்களில், இயேசு தாமும் பிதாவும் சேர்ந்து சீஷர்களிடம் பரிசுத்த ஆவியானவரை அனுப்பப் போகிற ஒரு புதிய ஆவியானவரின் யுகம் பற்றிப் பேசுகின்றார் (யோவான் 14:26; 15:26). ஆனால் சீஷர்கள் ஆவியானவரை ஏற்கனவே அறிந்திருந்தனர், காரணம் அவர் ஏற்கனவே அவர்களோடு வாழ்ந்திருந்தார் (யோவான் 14:16-17). இந்தப் புதிதாக “அனுப்புதல்” ஆவியானவர் அதற்கு முன் உலகத்தில் இருந்ததேயில்லை எனப் பொருள் படாது. ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சில புதிய காரியங்களைச் செய்யும் படியாக பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகிற்குள் ஒரு விசேஷித்த முறையில் வந்தார்.
உலகில் கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையை நிலைநாட்டுவதற்காகப் பரிசுத்த ஆவியானவர் ஒரு சிறப்பான முறையில் வந்தார் (எபேசியர் 1:22-23; 5:29-30). நமது ஒருமைப்பாட்டுக்கும் ஐக்கியத்திற்கும் ஆதாரம் பரிசுத்த ஆவியானவரே (1கொரிந்தியர் 12:13; எபேசியர் 4:3). பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவர் சபையைப் பெலனால் தரிப்பித்தார் (அப்போஸ்தலர் 2:1-4), இந்த நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டிலேயே முன்னுரைக்கப் பட்டிருந்தது (யோவேல் 2:28-29; அப்போஸ்தலர் 2:17-18), சபைக்கு உதவும் பொருட்டு ஆவியானவர் விசேஷித்த வரங்களைத் தந்தருள்கிறார் (ரோமர் 12:6-8; 1கொரிந்தியர் 12:8-10). ஊழியத்திற்கான மக்களைத் தெரிந்தெடுப்பதில் சபையை வழிநடத்துபவர் அவரே (அப்போஸ்தலர் 13:2), தீர்க்கதரிசனங்கள், சொப்பனங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலமாகத் தமது வார்த்தையைத் திருச்சபைக்கு அனுப்புகிறவரும் அவரே (அப்போஸ்தலர் 10:9-16; 21:9-10; 1கொரிந்தியர் 14:26-32; 1தீமோத்தேயு 4:14; வெளிப்படுத்தல் 1:1).
ஆனால் இந்த ஆவியானவரின் யுகம் கூட்டாகத் திருச்சபைக்கு மட்டுமானது அல்ல. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசிக்கும் நெருக்கமாகி விட்டார். மனிதர்களை அவர்களது பாவங்களைக் குறித்து கண்டித்து உணர்த்துபவர் இந்த ஆவியானவரே (யோவான் 16:8- 11). தேவன் தமது சொந்த ஆவியானவரை நமக்குள்ளே வைப்பார் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்தார் (எசேக்கியேல் 36:25-28). இயேசுவும் தமது சீஷர்களிடம், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடையே மட்டுமல்ல, வெகு விரைவிலேயே அவர்களுக்குள்ளேயும் வந்து வாசம் பண்ணுவார் என்று வாக்களித்திருந்தார் (யோவான் 14:17). தாம் பரத்திற்கு ஏறிச் செல்லும் முன் இயேசு தமது சீஷர்கள் மேல் ஊதிப் “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொன்னார் (யோவான் 20:22). பரிசுத்த ஆவியானவர் எல்லாக் கிறிஸ்தவர்களுக்குள்ளும் வசிக்கிறார் (ரோமர் 8:9; 1கொரிந்தியர் 6:19; கலாத்தியர் 4:6). நாம் விசுவாசிகளாகும் போது, ஆவியானவரால் பிறக்கிறோம் (யோவான் 3:3-6; 1யோவான் 5:1), நாம் தேவனுடைய பிள்ளைகளாகி விட்டோம் என்று நம்முடைய ஆவியுடனே கூட அந்தப் பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார் (ரோமர் 8:16; 1யோவான் 5:6-8), தேவனை “எங்கள் பிதாவே” என்று கூப்பிடக் கூடிய உரிமையைப் பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தருகின்றார் (ரோமர் 8:15; கலாத்தியர் 4:6). ஆவியானவர் நமக்குப் போதிப்பார் (யோவான் 14:26; 15:26; 16:13-14) என்றும், நம்மை வழிநடத்துவார் (மாற்கு 13:11) என்றும் இயேசு வாக்களித்தார். இதன் உதாரணங்களை அப்போஸ்தலர் 15:28 மற்றும் 16:6-7இல் காண்கிறோம். நாம் தேவ சித்தத்திற்கு ஏற்றபடி ஜெபிக்கவும் ஆவியானவர் நமக்கு உதவுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குள்ளும் வாழ்கின்றார் (ரோமர் 8:9); எனினும், வெவ்வேறு கிறிஸ்தவர்களிடமும் வெவ்வேறு விதமாகக் கிரியை செய்கின்றார். நாம் விசுவாசிகளாகும் போது ஆவியானவரால் முத்திரையிடப் படுகிறோம் என்று கூறும் பவுல் (எபேசியர் 1:13-14), நம்மை ஆவியானவரால் நிறைந்திருக்கவும் சொல்கிறார் (எபேசியர் 5:18). சீஷர்கள் யோவான் 20:22இல் ஆவியானவரைப் பெற்றுக் கொண்டனர், ஆனால் அப்போஸ்தலர் 2:4இல் தான் ஆவியானவரால் நிரப்பப் பட்டனர், பிறகு மீண்டும் அப்போஸ்தலர் 4:31இல் நிரப்பப் பட்டனர். சிறப்பான ஊழியத்திற்கென்று ஆவியானவர் சிறப்பான விதங்களிலும் வந்திறங்கக் கூடும் (அப்போஸ்தலர் 13:2- 4; 1 தீமோத்தேயு 4:14). நாம் ஆவியை அவித்துப் போடக் கூடாது என்று பவுல் சொல்கிறார் (1தெசலோனிக்கேயர் 5:19). பவுல் தீமோத்தேயுவின் மேல் தன் கைகளை வைத்ததினால் அவனுக்கு உண்டான தேவ வரத்தை அவன் அனல் மூட்டி எழுப்பி விடும் படி கூறப்படுகிறது (2தீமோத்தேயு 1:6). ஒன்று, நாம் நமது வாழ்வில் ஆவியானவர் இன்னும் அதிகம் அதிகமாகக் கிரியை செய்ய விடலாம், அல்லது அவர் கிரியை செய்யாதபடி தடுத்துப் போடலாம் என்பதைக் காண்கிறோம். ஒன்று நாம் ஆவியானவரால் நிறைந்திருக்கலாம், அல்லது ஆவியானவரை அவித்துப் போடலாம்.
இந்த “ஆவியானவரால் நிறைந்திருப்பது” என்பதன் பொருள் என்ன? எல்லாக் கிறிஸ்தவர்களின் வாழ்விலும் சம அளவில் காணப் படாத ஆவியானவரின் கிரியைகள் எவை? அவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம் : ஆவியானவரின் வரங்கள், இதன் உதாரணத்தை 1 கொரிந்தியர் 12:8-10இல் காணலாம்; ஆவியானவரின் கனிகள், இவற்றை கலாத்தியர் 5:22-23இல் பார்க்கலாம். ஆவியானவரின் வரங்கள் மற்றும் வல்லமை பற்றி மேலும் அறிய பொதுவான தலைப்பு : பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – பார்க்க. ஆவியானவரின் கனிகள் அல்லது “பரிசுத்தம்” பற்றிக் கீழே காண்போம்.
பரிசுத்தம் அல்லது பரிசுத்தமாக்கப் படுதல்
பரிசுத்தம் அல்லது பரிசுத்தமாக்கப் படுவது என்றால் என்ன? சுருங்கச் சொன்னால் அது கிறிஸ்துவுக்கு ஒத்திருப்பது. அதன் விளைவு அன்பும், பிற ஆவியின் கனிகளும் (1கொரிந்தியர் 13:1- 13; கலாத்தியர் 5:22-23), அது உலகிலிருந்தும் பாவத்திலிருந்தும் பிரித்தெடுக்கப் பட்ட வாழ்வு. அது தேவனுக்கென்று நாம் பிரித்தெடுக்கப் படுவதுமாகும். அதாவது நமது திறமைகள், தாலந்துகள், தருணங்கள் அனைத்தும் தேவனுக்குக் கையளிக்கப் படுவது.
தேவன் நம்மைப் பரிசுத்தமானவர்களாகவே ஏற்கனவே காண்கிறார் (எபிரெயர் 10:10). ஆனால் நாமோ நமது வாழ்வில் அசுத்தம் இருப்பதைக் காண்கிறோம். இதை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? வேதத்திலே பரிசுத்தம் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. முதலாவது அர்த்தத்தின் படி, நியாயாதிபதியாகிய தேவன் நம்மைப் பரிசுத்தமானவர்கள் அல்லது குற்றமற்றவர்கள் என்று தீர்க்கிறார். இயேசு கிறிஸ்துவே நமது பரிசுத்தமாய் இருக்கிறார் (1கொரிந்தியர் 1:30), நாம் “பரிசுத்தவான்கள்” என்று அழைக்கப் படுகிறோம் (எபேசியர் 1:1; பிலிப்பியர் 1:1). தேவனுடைய பார்வையில் கிறிஸ்துவுக்குள் நமது நிலை இதுவே.
ஆனால் வேதத்தில் காணப்படும் பரிசுத்தம் என்ற பதத்தின் இரண்டாவது அர்த்தம் நமது அனுபவத்தில், அன்றாட வாழ்வில் எந்த அளவுக்குப் பரிசுத்தம் காணப்படுகிறது என்பதாகும். நமது வாழ்க்கையைப் பார்க்கையில் பரிபூரண பரிசுத்தத்தைக் காண்கிறோமா? இல்லையே. கிறிஸ்தவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும் அந்த வேளையில் தானே நீதிமான்கள் என்று தீர்க்கப் படுகின்றனர், ஆனால் அவர்கள் இன்னும் பாவிகளே, இன்னும் பரிசுத்தமாக வேண்டியவர்களே. இது ஆவியானவரால் நடைபெறும் இடையறாத கிரியை, இதன் மூலமாகவே நமது அனுதின வாழ்வில் மெய்யான பரிசுத்தம் அடைகிறோம் (2 தெசலோனிக்கேயர் 2:13; 1 பேதுரு 1:2). பரிசுத்தமான வாழ்க்கை செய்யும் படியாக தேவன் நம்மை அழைக்கிறார் (எபேசியர் 1:4; 1தெசலோனிக்கேயர் 4:3-7; 1 பேதுரு 1:15-16), இயேசுவும் நம்மைப் பூரண சற்குணர்களாயிருக்கும்படி அழைக்கிறார் (மத்தேயு 5:48). ஆனால் உண்மையில் நம்மைப் பரிசுத்தமாக்குவது பரிசுத்த ஆவியானவரே.
பரிசுத்தமாக்கப் படுதல் என்பதும் நமது இரட்சிப்பில் உள்ளடக்கம் (2தெசலோனிக்கேயர் 2:13). பரிசுத்தமில்லாமல் நாம் தேவனைப் பார்க்க முடியாது (எபிரெயர் 12:14), பரிசுத்தம் என்பது நாம் இரட்சிக்கப் பட வேண்டுமானால் நம்மிடம் இருந்தாக வேண்டிய ஒன்றல்ல; அது, நாம் ஏற்கனவே இரட்சிக்கப் பட்டு விட்டதால் சாத்தியமாகின்ற ஒன்று (ரோமர் 6:22), நாம் நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே பரிசுத்தமாகி விடுவதில்லை. பரிசுத்த ஆவியானவரும் நமக்கு உதவுகிறார். ஆவியானவரால் மாத்திரமே நாம் நமது பாவ சுபாவத்தின் பாவங்களுக்கு மரிக்கிறோம் (ரோமர் 8:13). கலாத்தியர்கள் இரட்சிப்பை தேவனுடைய இலவச ஈவாகப் பெறுவதில் ஆரம்பித்தனர், ஆனால் பிள்னரோ தாங்கள் பரிசுத்தமாவதற்கு அல்லது பூரணமடைவதற்கு தங்கள் மானிட முயற்சிகளைச் சார்ந்திருக்கத் தொடங்கினர், இதைக் கண்டு பவுல் பெரிதும் வருந்தினார் (கலாத்தியர் 3:3; பொதுவான தலைப்பு : இரட்சிப்பின் வழி – பார்க்க).
பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே நாம் பரிசுத்தமாக முடியும். ஆனால் அதற்காக நாம் செய்ய வேண்டியது என்று எதுவுமே இல்லை என்றாகி விடாது. நாம் தேவனுடைய சிட்சையை ஏற்றுக் கொள்ள வேண்டும் (1கொரிந்தியர் 9:24-27; 1 தீமோத்தேயு 4:7). நம்மைத் தடை செய்யக் கூடிய ஆவிக்குரிய, சரீர பாவங்கள் அனைத்தையும் “தள்ளி விட” வேண்டும் (2கொரிந்தியர் 7:1; எபிரெயர் 12:1-2), நமது சரீரங்களையும் மனங்களையும் தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (ரோமர் 6:13,19; 12:1-2). நாம் வேதத்தைப் படிக்க வேண்டும் (2தீமோத்தேயு3:16), வசனங்களை மனனம் செய்ய வேண்டும் (சங்கீதம் 119:11; 2 பேதுரு 1:4), பிறகு அந்த வசனங்கள் நமது நடத்தையை மாற்ற அனுமதிக்க வேண்டும். நமக்கு மேலாக தேவன் வைத்திருக்கும் தலைவர்களிடமிருந்தும் நாம் உதவி பெறலாம் (எபேசியர் 4:11-13). இவை எல்லாவற்றுக்கும மேலாக நாம் ஜெபித்து தேவ ஒத்தாசைக்காசுக் கேட்க வேண்டும் (கொலோசெயர் 1:9-10; 1 தெசலோனிக்கேயர் 3:12-13;5:23) இல்லாவிடில் தவறி விழுவோம். சில கிறிஸ்தவர்கள் இதற்கு இன்னும் ஒரு படி உள்ளது, பரிசுத்தமாக்கப் படுதல் என்ற விசேஷித்த அனுபவம் ஒன்று இருக்கிறது என்று நம்புகின்றனர். அதிகமாக ஜெபித்து தேவனுடைய முகத்தைத் தேடும்பொழுது பரிசுத்தமாக்கப் படுதல் என்ற விசேஷித்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர் (கிருபையின் முதல் பணி நமது இரட்சிப்பு). இக்கிறிஸ்தவர்கள் முதலில் நாம் இரட்சிக்கப் படும்போது வேறு பிரிக்கப் படுகிறோம் (1யோவான் மறுபடியும் பிறக்கிறோம், உலகத்திலிருந்து 5:4), ஆவியானவரால் உள்வாசம் செய்யப் படுகிறோம் (ரோமர் 8:9) என்று போதிக்கின்றனர். நாம் கிறிஸ்துவுக்குள் குழந்தைகள் ஆகிறோம் (1கொரிந்தியர் 3:1). ஆனால் “இரண்டாம் ஆசீர்வாதம்” என்று சில சமயங்களில் அழைக்கப் படும் இந்தக் “கிருபையின் பணி” நம்மைப் பரிசுத்தமாக்குகிறது, சுயத்தை வேறு பிரிக்கிறது (கலாத்தியர் 2:20), நம்மை இரண்டாம் ஆவியானவரால் நிரப்புகிறது (எபேசியர் 5:18). அப்பொழுது நாம் பூரண புருஷராகிறோம் (எபேசியர் 4:11), தேவ அன்பு நமக்குள் பூரணப் படுகிறது (1யோவான் 4:12,17). இந்தக் கிறிஸ்தவர்கள் நாம் பரிபூரணமாகப் பரிசுத்தமாக்கப் படுவது சாத்தியம் என்றும், அதன்பிறகு தெரிந்தோ, விரும்பியோ பாவமே செய்ய மாட்டோம் என்றும் நம்புகின்றனர் (1யோவான் 3:9).ரோமர் 7ஆம் அதிகாரத்தின் பிற்பகுதி முதிர்ச்சியடையாத கிறிஸ்தவனைச் சித்தரிக்கிறது என்றும், ரோமர் 8 ஆம் அதிகாரம் இந்த “இரண்டாவது ஆசீர்வாதத்தைப்” பெற்றுக் கொண்ட ஒரு முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவனைச் சித்தரிக்கிறது என்றும் நம்புகின்றனர். இந்தப் பரிசுத்தமாக்குதலின் அனுபவத்துக்கு எடுத்துக் காட்டாக அப்போஸ்தலர் 2:4 மற்றும் 9:17இல் காணப்படும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும் அனுபவத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர், (பொதுவான தலைப்பு : பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – பார்க்க).
எனினும், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாக்கப் படுதல் என்பது நீண்ட காலம் பிடிக்கும் ஒரு மெதுவான முறைமை, நாம் மரிக்கும் வரை அது தொடரும் என்றே நம்புகின்றனர். பரிசுத்தமாவதற்கென்று தனியாக எந்த அனுபவமும் தேவையில்லை என்பது இவர்களது கருத்து. நாம் பரிசுத்தமாக்கப் படுகிறோம் (கலாத்தியர் 3:3; எபிரெயர் 10:14; 12:10-11), அல்லது நாம் தொடர்ந்து ஓட வேண்டும் அல்லது பாவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் (எபிரெயர் 12:1-4) என்றெல்லாம் கூறும் வேத வசனங்களை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். புதிய ஏற்பாட்டில் அநேக வசனங்கள் நாம் நமது சரீரங்களை அடக்கியொடுக்கிக் “கீழ்ப்படுத்த வேண்டும் என்றும், நம்மை ஜீவபலியாக “ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றும், ஓட்டப் பந்தயத்தில் “ஓட” வேண்டும் என்றும், “போராட” வேண்டும் என்றும் கூறுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கையில் நாம் முற்றிலும் பரிசுத்தமாகவில்லை என்றே தோன்றுகிறது. பவுல் தன்னைத் தேறினவர்கள் வரிசையில் சேர்த்துக் கொண்ட போதிலும் (பிலிப்பியர் 3:15), தான் இன்னும் முற்றும் தேறவில்லை என்றும், தேறும்படி தொடர்ந்து நாடுவதாகவுமே கூறுகின்றார் (பிலிப்பியர் 3:12-14). சிலர் 1 யோவான் 1:8 ஐயும் சுட்டிக் காட்டுகின்றனர். அங்கே யோவான் நமக்குப் பாவமில்லை என்று சொல்வோமானால் நாம் உண்மை சொல்லவில்லை என்கிறார். நாம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவில் தேர்ச்சி அல்லது முதிர்ச்சி அடைகிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக நமது பாவத்தையும் அசுத்தத்தையும் உணர்கின்றோம். பவுல் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தாமே பிரதான பாவி என்கிறார் (1தீமோத்தேயு 1:15). இந்தக் கருத்துடைய கிறிஸ்தவர்கள் ரோமர் 7இன் பிற்பகுதி, அன்றாட வாழ்வில் பாவத்துக்கு எதிராகப் போராடும் ஒரு கிறிஸ்தவனையே சித்தரிப்பதாக நம்புகின்றனர். ஒரு கிறிஸ்தவன் கொஞ்சம் பாவத்தை மேற்கொண்டு ரோமர் 8ல் வர்ணிக்கப்படுகின்ற வாழ்க்கையை அடையக் கொஞ்சமாகப் கூடும், எனினும் இவ்வுலகில் வாழும் பரியந்தம் தனது பாவ சுபாவத்துடன் போராடிக் கொண்டே தான் இருப்பான் என்பது இவர்களது கருத்து.
ஒவ்வொரு கிறிஸ்தவனின் அனுபவமும் வேறுபடும். அநேகக் கிறிஸ்தவர்கள் தாங்கள் இந்த “இரண்டாவது ஆசீர்வாதத்தை அதாவது ஆவியானவரின் நிறைவைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுகின்றனர். இன்னும் சில கிறிஸ்தவர்கள் மெல்லப் மெல்லப் பரிசுத்தமாக்கப் படுவதோடு கூடவே, அவ்வப்பொழுது திபார் திடீரென இன்னும் அதிகமாகப் பரிசுத்தத்தில் வளருகின்ற அனுபவங்களையும் பெறுவதாகக் கூறுகின்றனர். தேவன் ஒவ்வொருவரின் வாழ்விலும் வெவ்வேறு விதங்களில் கிரியை செய்கின்றார். பரிசுத்த ஆவியானவரின் இடைபடுதல்களை நமது சொந்த தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டு ஒரு வரையறைக்குள் திணிக்க முயலக் கூடாது.
பரிசுத்தமாக்கப் படுதலின் அனுபவத்தைப் பற்றி நமது நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரி, நமது பொறுப்பு தெள்ளத் தெளிவானது; நாம் பரிசுத்தமாய் இருக்க அழைக்கப் படுகிறோம், பேதுரு ” நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதுகிறார் (1பேதுரு 1:15). யாவரோடும் சமாதானமாய் இருக்கவும் பரிசுத்தம் உள்ளவர்களாய் இருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபிரெயர் 12:14).