கர்த்தருடைய பந்தி
கர்த்தருடைய பந்தி என்றால் என்ன?
- கர்த்தருடைய பந்தி அல்லது திருவிருந்து முதல்முதலாக நமது ஆண்டவர் மரணமடைவதற்கு முந்திய நாள் ஆசரிக்கப் பட்டது. அது பஸ்கா பண்டிகையின் பஸ்கா விருந்து, அது இயேசுவின் வாழ்க்கையின் கடைசி வாரத்தில் இடம் பெற்றது. எகிப்திலிருந்து தாங்கள் மீட்கப் பட்டதை நினைவு கூரும், கொண்டாடும் வண்ணமாக ஒவ்வோராண்டும் பஸ்காவை ஆசரிக்கும் படி கட்டளையிட்டிருந்தார் (யாத்திராகமம் 12:1-20). பஸ்கா பண்டிகையின் போது தேவன் யூதர்களுக்குக் புளிப்பில்லா அப்பம் மட்டுமே புசிக்கப் பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். 1 கொரிந்தியர் 5:7இல், கிறிஸ்துவே நமக்குப் பஸ்கா பலியானார் என்று பவுல் எழுதுகின்றார். எனவே, கிறிஸ்தவர்கள் பஸ்காவுக்குப் பதிலாக கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கின்றனர்.
கர்த்தருடைய பந்தியை நாம் கைக்கொள்ள வேண்டுமென்று இயேசு கட்டளையிட்டார். இந்தக் கட்டளை லூக்கா 22:19 இல் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் பவுல் இந்தக் சுவிசேஷங்களில் கட்டளையை 1 கொரிந்தியர் 11:23-25 இல் வலியுறுத்தி எழுதுகின்றார். ஆதிக் கிறிஸ்தவர்கள்
கர்த்தருடைய பந்தியை அடிக்கடி ஆசரித்தனர் (அப்போஸ்தலர் 2:42, 20:7), மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் 1 கொரிந்தியர் ஆகிய நான்கு இடங்களிலும் உள்ள கர்த்தருடைய பந்தி பற்றிய வேத வசனங்களில், எந்த ஒரு இடத்திலும் இயேசுவின் வார்த்தைகள் அனைத்தையும் காண முடிவதில்லை. ஆனால் நான்கு பகுதிகளையும் சேர்த்து, கீழ்க்கண்டவாறு ஒரு தொகுப்பை நாம் உருவாக்கலாம்:
நீங்கள் வாங்கிப் புசியுங்கள்; இது உங்களுக்காகக் கொடுக்கப் படுகிற என்னுடைய சரீரமாய் இருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள். இந்தப் பாத்திரம் பாவ மன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது, (அல்லது) என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாய் இருக்கிறது.
நீங்கள் இதைப் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் (மத்தேயு 26:26-29; மாற்கு 14:22-25; லூக்கா 22:17-20; 1 கொரிந்தியர் 11: 23-25).
திருச்சபை வரலாறு நெடுகிலும் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்பதில் பல்வேறு வழிகள் கையாளப் பட்டுள்ளன. இன்று பல திருச்சபைகளில் ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய பந்தி ஆசரிக்கப் படுகிறது. வேறு பல சபைகள் ஓராண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறைகள் மட்டுமே அதை ஆசரிக்கின்றன. இயேசுவின் காலத்திய யூத பஸ்கா பண்டிகையின் வழக்கத்தைப் பின்பற்றி கர்த்தருடைய பந்தியில் புளிப்பில்லா அப்பத்தையும் உண்மையான திராட்சை ரசத்தையும் பல சபைகள் பயன்படுத்துகின்றன. ஆனால் வேறு பல சபைகளோ புளிப்பிடப் பட்ட அப்பத்தையும், புளிக்க விடப் படாத திராட்சைப் பழ ரசத்தையும் உபயோகிக்கின்றன. பொதுவாக இதில் பங்குபெறும்முன் பாவ அறிக்கைக்கென ஒரு நேரம் ஒதுக்கப் படுகின்றது. பல சபைகளில் கர்த்தருடைய பந்தி ஆலயத்தின் பிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. சில சபைகளிலோ சபையார் அமர்ந்திருக்கும் இடங்களிலேயே இவை அளிக்கப் படுகின்றன. பெரிய சபைகள். பல சிறு சிறு குவளைகளைப் பயன்படுத்துகின்றன, சில சபைகளோ முதல் கர்த்தருடைய பந்தியில் நடந்தது போல ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றன. வெகுசில சபைகள் கர்த்தருடைய பந்திக்கு முன் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவும் பழக்கத்தையும் பின்பற்றுகின்றன (யோவான் 13:1-17).
இயேசுவின் சரீரமும் இரத்தமும்
இயேசு “இது என் சரீரம் … இது என் இரத்தம்” என்றார். இதன் பொருள் என்ன என்பது குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அநேகக் கிறிஸ்தவர்கள் அப்பம் மற்றும் இரசத்தில், ஏதோ ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய விதத்தில் உண்மையான இயேசுவின் சரீரமும் இரத்தமும் பிரசன்னமாவதாக நம்புகின்றனர். இவர்கள், நாம் ஆசீர்வதிக்கிற பாத்திரமும், பிட்கிற அப்பமும் கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறது என்று பவுல் கூறுகின்ற 1 கொரிந்தியர் 10:16ஐச் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் 1 கொரிந்தியர் 11:27,29இல் பவுல் நாம் அபாத்திரமாய்க் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றால் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றம் உள்ளவர்களாய் இருப்போம் என்று சொல்வதையும் இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். “என் மாம்சம் மெய்யான போஜனமாய் இருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாய் இருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்”என்றார் இயேசு (யோவான் 6:55-56).
வேறு பல கிறிஸ்தவர்களோ கர்த்தருடைய பந்தியில் இயேசுவின் பெய்யான சரீரமும் இரத்தமும் பிரசன்னமாகிறது என்று நம்புவதில்லை. கர்த்தருடைய பந்தியை முதன்முதலாக ஆண்டவர் ஏற்படுத்திய பொழுது அவர் இன்னும் மரித்திருக்கவில்லை என்பதால், இயேசு “இது என் சரீரத்தைக் குறிக்கிறது” என்றும் “இது என் இரத்தத்தைக் குறிக்கிறது” என்றுமே சொன்னதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களது கருத்து, யோவான் 6:55-56, உண்மையாகவே இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைக் குடிப்பதாகாது, அது அவரில் விசுவாசம் வைப்பதையே குறிக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். யோவான் 6:35இல் இயேசு: “என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” என்று சொன்னார். ஆகவே இக்கிறிஸ்தவர்கள் இயேசுவின் சரீரம் மற்றும் இரத்தத்தில் பங்கு பெறுவதும் அவரை விசுவாசிப்பதும் ஒன்றே என்கின்றனர்.
கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிப்பது ஏன்?
கர்த்தருடைய பந்தியை நாம் ஆசரிக்கும்படி இயேசு கட்டளையிட்டார். ஆனால் ஒரு நபர் அதில் பங்கு பெறக் கூடாத நேரங்களும் உண்டு. 1 கொரிந்தியர் 11:27இல் நாம் அபாத்திரமாய் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறக் கூடாது என்று பவுல் கூறுகின்றார். நாம் யாருமே நம்மில் நாமே இயேசுவின் மரணத்துக்கும், மன்னிப்புக்கும் தகுதியானவர்கள் அல்லர், அப்படியானால் நாம் எப்படி ‘தகுதியான முறையில் பங்கு பெறுவது? இதற்கு விடை, நாம் முதலாவது நம்மை நாமே சோதித்தறிந்து, நமது பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்ப வேண்டும். அதன் பிறகு தான் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும் ( 1 கொரிந்தியர் 11:28-31; 1 யோவான் 1:9).
எனவே, அறிக்கை செய்யப் படாத பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறக் கூடாது. அப்படி பங்கு பெற்றால் அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாய் இருப்பான் (1கொரிந்தியர் 11:27), அப்படிப் பட்டவன் தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான், இது பலவினத்தையோ, வியாதியையோ, சில வேளைகளில் மரணத்தையோ கூட கொண்டு வரலாம் (1கொரிந்தியர் 11:29-30). இது ஒரு பயங்கரமான காரியம். பல சபைகள், பாவத்தை அறிக்கை செய்யாதபடி, அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கர்த்தருடைய பந்தியில் சோ அனுமதிப்பதில்லை. காரணம் அது அவர்கள் மேல் நியாயத் தீர்ப்பையே கொண்டு வரும்.
மனந்திரும்பாமல் கர்த்தருடைய பந்தியில் சேருவது ஆபத்தான காரியம் என்றாலும், மனந்திரும்பவே மறுப்பது அதைவிடப் பெரிய ஆபத்தாகும்! நாம் பாவம் செய்து விட்டால், அதை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, அதன் பின்பு கர்த்தருடைய பந்திக்கு வர வேண்டும்.
கர்த்தருடைய பந்தி என்பது நாம் பாவ அறிக்கையுடனும் மனந்திரும்புதலுடனும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூரும் வேளை என்று எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்புகின்றனர். ஏனெனில் அவருடைய பந்தியில் நாம் புசித்துக் குடிக்கும் போதெல்லாம் அவருடைய மரணத்தை நினைவு கூரும்படி இயேசு தாமே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (1கொரிந்தியர் 11:24-25). கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கையில் நாம் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூருவது மட்டுமல்ல, அவரது மரணத்தின் மூலம் வரும் கிருபையை மற்றவர்களுக்கும் கூறித் தெரியப் படுத்துகிறோம். பவுல் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் என்று எழுதுகின்றார் (1கொரிந்தியர் 11:26). கிறிஸ்துவின் மரணத்தினாலே நாம் மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்கிறோம்; கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதன் மூலம் இந்த ஆசீர்வாதங்களுக்கான நமது நன்றியறிதலைக் காட்டுகிறோம். அதோடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம், ஏனெனில் அவர் வருமளவும் நாம் கர்த்தருடைய பந்தியை ஆசரித்து கொண்டே இருப்போம் (1கொரிந்தியர் 1:26).
கர்த்தருடைய பந்தியை அநேகக் கிறிஸ்தவர்கள் “பரிசுத்த திருவிருந்து” என்றும் அழைக்கின்றனர். இது நாம் கிறிஸ்துவோடு கொண்டுள்ள ஐக்கியத்தைக் காட்டுகிறது. “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்” என்றார் இயேசு (யோவான் 6:56). எனினும், இது கிறிஸ்துவோடு மட்டும் உள்ள ஐக்கியமல்ல, நமது உடன் விசுவாசிகளோடும் உள்ள ஐக்கியமாகும். நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் பங்கு பெறுகிறோம்; ஆதலால், நாம் ஒருவரோடொருவரும் பங்கு பெறுகிறோம். ஒரேயொரு அப்பம் அதாவது, கிறிஸ்து இயேசு – உண்டு, நாம் அநேகராய் இருந்த போதிலும், அந்த ஒரே அப்பத்தில் நாம் எல்லாரும் பங்கு பெறுகிறபடியால், நாமும் ஒரே சரீரமாய் இருக்கிறோம் (1 கொரிந்தியர் 10:17).
மேலும், அநேகக் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய பந்தியும் “கிருபையின் எத்தனங்களுள்” ஒன்று, அதாவது தேவனுடைய கிருபை நமக்குக் கிடைக்கின்ற வழிவகைகளுள் ஒன்று என்று நம்புகின்றனர். கர்த்தருடைய பந்தியின் மூலமாக நாம் உண்மையான நியாயத் தீர்ப்பு அடைவது போலவே (1கொரிந்தியர் 11:27-32), உண்மையான ஆசீர்வாதங்களையும் பெறமுடியும். இந்தக் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய பந்தியில் நாம் ஒரு விசேஷித்த முறையில் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதாக எண்ணுகின்றனர். “இது பாவ மன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாய் இருக்கிறது” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 26:28), “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்றும் அவன் “என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்” என்றும் கூட. இயேசு சொன்னார் (யோவான் 6:54-55).
எனவே, இந்தக் கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய பந்தியில் தேவன் தமது கிருபையை ஒரு சிறப்பான விதத்தில் நமக்குத் தருகிறார், இந்தக் கிருபையில் பாவ மன்னிப்பு, கிறிஸ்துவோடு ஐக்கியம், நித்திய ஜீவன் இவை எல்லாமே அடங்கும் என்பதாக நம்புகின்றனர் இவர்கள் அப்பமும், இரசமும் உள்ளான, ஆவிக்குரிய ஒரு கிருபையின் வெளிப்படையான, கண்ணுக்குப் புலனாகும் அடையாளங்கள் என்கின்றனர். வெறுமனே அப்பத்தையும் இரசத்தையும் பெற்று உட்கொள்வதால் ஒன்றும் நடக்காது; விசுவாசத்துடன் அவற்றைப் பெற்றுக் கொள்கையில் தான் கர்த்தருடைய பந்தியின் உள்ளான கிருபையையும் பெற்றுக் கொள்வோம். விசுவாசம் இன்றி பெற்றுக் கொண்டால், கிருபையையும் பெற மாட்டோம்; பதிலாக ஆக்கினைத் தீர்ப்பையே அடைவோம் (1கொரிந்தியர் 11:27-32).
வேறு பல கிறிஸ்தவர்களோ, கர்த்தருடைய பந்தியில் விசேஷித்த கிருபை எதுவும் இருப்பதாக நம்புவதில்லை. இவர்கள் தேவனுடைய கிருபை தேவ வசனத்தின் மூலமாக, எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மூலமாக மட்டுமே நமக்குக் கிட்டுவதாகக் கருதுகின்றனர், சிறப்பான வழிகளிலோ, ஆசரிப்புகளிலோ தேவன் தமது கிருபையை அளிப்பதாக இவர்கள் நம்புவதில்லை. நாம் விசுவாசத்தினாலே இயேசுவில் நம்பிக்கை வைக்கும்பொழுது, சரீரப் பிரகாரமாக அல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக “அவருடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுகிறோம்”. கர்த்தருடைய பந்தி ஒரு விதத்தில் சிறப்பானது தான், அதில் தான் கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூரும் வகையில் நாம் சபையாகக் கூடி வருகிறோம், அது ஒரு கூட்டு ஆராதனை மற்றும் சாட்சியின் செயல்பாடு மட்டுமே என்பது இவர்களது கருத்து,
சுருக்கம்
சம்பந்தப் பட்ட வேத வசனங்களைப் படித்துப் பார்த்து விட்டு அதன்பிறகே கிறிஸ்தவர்கள் இக்கேள்விகளுக்குப் பதில்களைத் தீர்மானிக்க வேண்டும். முக்கியமான கேள்விகள் இரண்டு. முதலாவது, கர்த்தருடைய பந்தியில் நாம் இயேசுவின் உண்மையான சரீரத்தையும் இரத்தத்தையுமே பெற்றுக் கொள்கிறோமா, இல்லையா? இரண்டாவது, நாம் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறும் போது கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூருகிறோம். நமது பாவங்களை அறிக்கையிடுகிறோம், சரி – ஆனால் தேவன் அருளும் மன்னிப்பையும் ஒரு சிறப்பான விதத்தில் பெற்றுக் கொள்கிறோமா? இக்கேள்விகள் பற்றி நாம் என்ன தீர்மானம் செய்தாலும் சரி, நம்மிலிருந்து கருத்து வேறுபடக் கூடிய சகோதர சகோதரிகளைக் குற்றம் தீர்க்கக் கூடாது. நாம் எல்லாருமே கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம். அதன் அர்த்தத்தைப் பற்றிய நமது சொந்த நம்பிக்கைகள் நமது சகோதர சகோதரிகளிடமிருந்து நம்மைப் பிரிக்கக் கூடாது, ஏனெனில் கிறிஸ்து அவர்களுக்காகவும் மரித்தாரே. 1 கொரிந்தியர் 12:13இல் நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்தானம் பண்ணப் பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகம் தீர்க்கப் பட்டோம் என்று பவுல் எழுதிய போது தண்ணீர் ஞானஸ்நானத்தையும் கர்த்தருடைய பந்தியையுமே குறிப்பிட்டார் என்று பலர் நம்புகின்றனர். கர்த்தருடைய பந்தி நம்மைக் கூட்டிச் சேர்க்க வேண்டுமேயன்றி பிரித்து விடக் கூடாது.
கர்த்தருடைய பந்தியில் கிறிஸ்துவின் இரத்தம் உண்மையாகவே பிரசன்னமாய் இருந்தாலும், இராவிட்டாலும் தமது மரணத்தையும் அதனால் நமக்கு என்ன நடந்தது என்பதையும் நாம் நினைவு கூரும்படி இயேசு கட்டளையிட்டுள்ளார். இயேசுவின் நமக்காக என்னவெல்லாம் மரணம் அவரது இரத்தம் – செய்துள்ளது என்பதை நாம் எண்ணித் தீர்க்கவே முடியாது: நீதிமானாக்கப் படுதல் (ரோமர் 5:9), மீட்பு மற்றும் பாவ மன்னிப்பு (எபேசியர் 2:13; கொலோசெயர் 1:20), மனச்சாட்சியைச் சுத்திகரித்தல் (எபிரெயர் 9:14), இரக்கத்தைப் பெற்றுக் கொள்ள வழி திறத்தல் (எபிரெயர் 10:19), பாவத்திலிருந்து சுத்திகரிப்பு (1யோவான் 1:7), மாபெரும் வெற்றி (வெளிப்படுத்தல் 12:11). கிறிஸ்துவின் இரத்தம்-ஓ, அது எவ்வளவு விலையேறப் பெற்றது!
பின்குறிப்புகள்
1 இக்கிறிஸ்தவர்கள் சிலர் அப்பம் மற்றும் இரசத்தில் நமக்காக உண்மையிலேயே இயேசுவின் மாம்ச சரீரமும் இரத்தமும் “பிரசன்னமாயிருப்பதாக” நம்புகின்றனர். மற்றவர்களோ, திருவிருந்தில் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை பரலோகத்தில் உள்ள இயேகவின் சரீரம் மற்றும் இரத்தத்துக்குப் “பிரசன்னமாக்குவதாக” நம்புகின்றனர்.
இந்தக் கிறிஸ்தவர்கள் தண்ணீர் ஞானஸ்தானமும் கிருபையின் எத்தனங்களுள் ஒன்று என்று
நம்புகின்றனர். ஆனால் மற்றக் கிறிஸ்தவர்கள் வேறு விதமாக விசுவாசிக்கின்றனர் (பொதுவான
தலைப்பு : தண்ணீர் ஞானஸ்நானம் – பார்க்க).