தண்ணீர் ஞானஸ்நானம்

தண்ணீர் ஞானஸ்நானம்

முக்கிய வசனங்கள் 

மத்தேயு 28:19-20 சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து உபதேசம் பண்ணுங்கள் ..

 மாற்கு 16:16 விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான். யோவான் 3:5 . . . ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் . –

அப்போஸ்தலர் 2:38 நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் .–

 அப்போஸ்தலர் 22:16… நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப் படு… 

ரோமர் 6:3-4 நாமும் . அவருடைய மரணத்திற்கு உள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே … கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப் பட்டோம்.

 கலாத்தியர் 3:27 உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே.

எபேசியர் 5:25-26 கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்கும் ஒப்புக் கொடுத்தார்.

தீத்து 3:5 . அவர் (கிறிஸ்து) . மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

எபிரெயர் 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப் பட்ட இருதயம் உள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாயும் (தேவனிடத்தில்) சேரக் கடவோம். 1 பேதுரு 3:21 அதற்கு (நோவாவின் காலத்து வெள்ளத்துக்கு) ஒப்பனையான ஞானஸ்நானமானது இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.

தண்ணீர் ஞானஸ்நானம் என்பது என்ன?

தண்ணீர் ஞானஸ்நானம் என்றால், மத்தேயு 28:19இல் கர்த்தராகிய இயேசு கட்டளையிட்ட வண்ணமாக, பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஒரு நபரின் மீது தெளிப்பதன் மூலமோ, ஊற்றுவதன் மூலமோ, அல்லது மூழ்கச் செய்வதன் மூலமோ தண்ணீர் இடுவதாகும்.

ஞானஸ்நானத்துக்கு ஒப்பான ஒரு சடங்கை பழைய ஏற்பாட்டு யூதர்கள் கைக்கொண்டனர். அது, பிறந்த எட்டாம் நாளில் ஆண் குழந்தைகளின் நுனித்தோல் விருத்தசேதனம் செய்யப் படுவதாகும் (ஆதியாகமம் 17:10-14). கிறிஸ்துவில் விகவாசிகளானவர்கள் சரீரப்பிரகாரமான விருத்த சேதனத்தைச் செய்ய வேண்டியதில்லை என்று பவுல் கூறினார் (அப்போஸ்தலர் 15:1-29; கலாத்தியர் 5:2). கொலோசெயர் 2:11-12, சரீரப் பிரகாரமான விருத்த சேதனத்தின் இடத்தை ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டதையும், கிறிஸ்துவைப் பற்றும் “ஆவிக்குரிய விருத்தசேதனத்தினாலே” நமது பழைய பாவ சுபாவம் “வெட்டப் பட்டு” அகற்றப் பட்டதையும் குறிப்பதாக வேத பண்டிதர்கள் நம்புகின்றனர்.

யோவான் ஸ்நானன் பாவ மன்னிப்புக்கு என்று மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான் (மாற்கு 1:4), இது கிறிஸ்தவ ஞானஸ்நானமல்ல. இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு யோவானின் ஞானஸ்நானம் கிறிஸ்தவர்களுக்குப் போதுமானதல்ல என்று கருதப் பட்டது (அப்போஸ்தலர் 18:25), யோவானின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்த எபேசு விசுவாசிகள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டியது அவசியமாயிற்று (அப்போஸ்தலர் 19:1-7), எனினும் ஒரே கிறிஸ்தவ ஞானஸ்நானம் மட்டுமே உண்டு (எபேசியர் 4:5), இயேசு தாமே யோவான் ஸ்நானனால் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார்

(மத்தேயு 3:13-17). பாவமோ, பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டிய அவசியமோ இல்லாத இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றும் படியாக ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:15). அவர் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்று, கரையேறினதும் பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வந்தார், ஊழியத்திற்காக அவரைப் பெலப் படுத்தினார் (மாற்கு 1:10). இயேசு சிலுவையில் தமது மரணத்தையும் ஒரு “ஸ்நானம்” என்றே குறிப்பிட்டார் (லூக்கா 12:50). இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற ஸ்நானமே, நமது ஞானஸ்நானத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறது, அதன் காரணமாகவே நாம் ஞானஸ்நானம் பெறுகின்றோம் (ரோமர் 6:3-4; கொலோசெயர் 2:12; 1 பேதுரு 3:21).

ஆதிமுதற் கொண்டே திருச்சபையானது இயேசுவின் கட்டளைக்கு அடிபணிந்து, புதிய விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வந்துள்ளது. கிறிஸ்தவ ஞானஸ்நானத்திற்கு புதிய ஏற்பாட்டில் காணப்படும் சில நல்ல உதாரணங்கள் : அப்போஸ்தலர் 2:41;8:12; 8:38; 10:48; 16:15; 15:33; 19-15. இவ்வசனங்களில் பொதுவாக, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் அறிக்கையிடப் பட்டவுடனே தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டது. பல வேளைகளில் முழுக் குடும்பங்களும் ஒரே சமயத்தில் ஞாளஸ்நானம் பெற்றுக் கொண்டனர் (அப்போஸ்தலர் 10:48; 16:31-33).

ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல. கிறிஸ்துவுக்கு முன், யூதரல்லாதோர் யூத மார்க்கத்திற்கு வரும்போது தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டனர். கிறிஸ்துவின் காலத்தில் வழக்கத்தில் இருந்த கிரேக்க “மர்ம” மதங்களில் சேர ஞானஸ்நானம் அவசியமாயிருந்தது. அவை சில வேளைகளில் ஞானஸ்நானம் எடுப்பவனின் தலை மீது தண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தைச் சொட்டு சொட்டாக விட்டன.

நாம் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பது ஏன்? புதிய விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கட்டளையிட்டார் (மத்தேயு 28:19). எல்லா நாடுகளிலும் பண்பாடுகளிலுமே தண்ணீர் ஞானஸ்நானமானது, ஒருவர் தனது பழைய மதத்தை விட்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் வருவதைக் காட்டும் செயலாக அமைகின்றது. இது இரட்சிப்பின் ஆரம்பப் படிகளுள் ஒன்று (அப்போஸ்தலர் 2:38). இயேகவும் இரட்சிப்பின் வாக்குத்தத்தத்தை ஞானஸ்நானத்தோடு இணைத்துப் பேசினார் (மாற்கு 16:15). திருச்சபை வரலாற்றிலே, இரட்சிப்புக்கும் ஞானஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு என்பது குறித்துப் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன.

ஞானஸ்நானமானது “இரட்சிப்பின் எத்தனங்களுள் ” ஒன்று, தேவனுடைய கிருபை நமக்கு வழங்கப்படும் வழிகளுள் ஒன்று என்பதாக அநேக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இரட்சிப்பின் மிக முக்கியமான ஏதுகரம் வேத வசனம் ஆகும் (ரோமர் 10:17; 1 பேதுரு 1:23). இந்தக் கிறிஸ்தவர்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாகவும் தேவ கிருபை நமக்கு வருகிறது என்று கருதுகின்றனர். தண்ணீர் ஞானஸ்நானத்திலும் கூட முக்கியமான காரியம் தேவனுடைய எழுதப்பட்ட வசனமே (எபேசியர் 5:26). இவ்வகைக் கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானத்திற்கு வெளிப்படையான, கண்ணுக்குப் புலனாகும் அடையாளமும் (தண்ணீர்), உள்ளான ஆவிக்குரிய ஈவும் (கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலில் பங்கடைதல், பாவ மன்னிப்பு, ஆவியானவர் மூலமாக சபையில் அங்கமாகுதல்) உண்டு என்று நம்புகின்றனர். 

விசுவாசத்தினால் பெறப்படும் ஞானஸ்நானத்தின் மூலமாக நமது ஜீவன் உண்மையிலேயே கிறிஸ்துவுடன் மரிக்கவும் உயிர்த்தெழவும் செய்கிறது என்றும் (ரோமர் 6:3-4; கொலோசெயர் 2:12), கிறிஸ்துவைத் தரித்துக் கொள்கிறது என்றும் (கலாத்தியர் 3:27) இவர்கள் விசுவாசிக்கின்றனர். அப்போஸ்தலர் 2:38இல் பேதுரு பாவ பன்னிப்புக்கென்று (நாம்) ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று கூறுவதால் இவர்கள், தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலம் ஒரு விசேஷித்த விதத்தில் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்கிறோம் என்று நம்புகின்றனர். 1 பேதுரு 3:21 இல் பேதுரு ஞானஸ்நானமானது. இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது என்று எழுதுகிறார். இது வெறுமனே மாம்ச அழுக்கை நீக்குதலாய் இராமல், தேவனைப் பற்றும் நல்மனச் சாட்சியை உண்டாக்கும் ஆவிக்குரிய கழுவுதலாய் இருக்கிறது என்றும் பேதுரு கூறுகின்றார். 

எனவே இக்கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானத்தில் நமது பாவங்கள் உண்மையாகவே “கழுவப்படுகின்றன”. நமது மனச் சாட்சிகள் மெய்யாகவே “சுத்திகரிக்கப் படுகின்றன” என்று கூறுகின்றனர் (அப்போஸ்தலர் 22:15; எபேசியர் 5:26; தீத்து 3:5; எபிரெயர் 10:22). அவர்கள் கண்ணோட்டத்தில், ஞானஸ்நானம் என்பது உண்மையில் நமது ஆவிக்குரிய விருத்தசேதனம், “மாம்சத்துக்குரிய பாவ சரீரத்தைக் களைந்து போடுதல்” ஆகும் (கொலோசெயர் 2:11-12), “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்று இயேசு சொன்னார் (யோவான் 3:5). இந்தக் கிறிஸ்தவர்கள் இவ்வசனத்தில் வரும் “ஜலம்” என்ற சொல் ஞானஸ்நானத்தையே குறிப்பதாகக் கருதுகின்றனர். 

வெறும் தண்ணீரினால் ஒரு பயனுமில்லை, ஆனால் ஞானஸ்நானம் என்பது தேவன் தமது வாக்கினால் கட்டளையிட்டபடி பயன்படுத்தப் படும் தண்ணீர் ஆகையால் (மாற்கு 16:15; எபேசியர் 5:26), அது வலிமையுள்ளதாகிறது.’ஞானஸ்நானத்தில் தேவன் தமது கிருபையை அருளிச் செய்கின்றார், ஆனால் அது விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். தேவனுடைய வாக்கின் பேரில் விசுவாசம் இல்லாத பட்சத்தில் நமக்கு எந்த நன்மையும் கிட்டாது. தண்ணீர் ஞானஸ்நானமானது தேவனது வாக்கின்’ மேல் உள்ள நமது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது வேறு பல கிறிஸ்தவர்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தில் அப்படி எந்த விசேஷித்த கிருபையும் இருப்பதாக நம்புவதில்லை. 

தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் வழியாக இயேசுவில் விசுவாசம் வைப்பதையும் (யோவான் 1:12; 3:16; ரோமர் 10:9-10), தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பதையும் (ரோமர் 1:16; 10:17; 1 பேதுரு 1:23) மட்டுமே பல வேத வசனங்கள் குறிப்பிடுவதால், தேவ வசனம் ஒன்றே “கிருபையின் எத்தனம்” என்று இக்கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கின்றனர். இரட்சிப்பைப் பெற நாம் செய்ய வேண்டியதெல்லாம் தேவ வசனத்தைக் கேட்பதும் இயேசுவில் விசுவாசம் வைப்பதுமே.

 தண்ணீர் ஞானஸ்நானம் என்பது, விசுவாசிக்கையில் நமக்குள்ளாக என்ன நடைபெறுகிறது என்பதன் வெளிப்படையான அடையாளம் மட்டுமே என்பது இவர்கள் கருத்து. இவர்கள் கண்ணோட்டத்தில், ஞானஸ்நானம் என்பது நம்மை எந்தவொரு விசேஷித்த முறையிலும் சுத்திகரிப்பதோ, அல்லது நமக்குப் பாவ மன்னிப்பைக் கொணருவதோ அல்ல. அது கிறிஸ்துவில் நமது மரணத்தின், கிறிஸ்துவை நாம் தரித்து கொண்டதன், கிறிஸ்துவினால் நாம் விருத்தசேதனம் அடைவதன் வெறும் அடையாளம் மட்டுமே (ரோமர் 6:3-5; கலாத்தியர் 3:27; கொலோசெயர் 2:11-12). நாம் விசுவாசிக்கையில் என்ன நடைபெறுகிறது என்பதன் வெளிப்புற அடையாளம் மட்டுமே, யோவான் 3:5 ஜலத்தினால் பிறப்பது என்று கூறுவது நமது சரீரப் பிரகாரமான பிறப்பையே குறிப்பதாகச் சிலர் கருதுகின்றனர்; வேறு சிலர் இங்கே ஜலம் என்பது தேவனுடைய வசனம் என்றும் எண்ணுகின்றனர். 

இந்தக் கிறிஸ்தவர்களில் சிலர், ஞானஸ்நானமானது ஒருவர் தான் கிறிஸ்துவில் வைத்துள்ள விசுவாசத்தை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு சாட்சியின் செயல் என்றும் கூறுகின்றனர்; எனவே ஞானஸ்நானம் அந்தரங்கமாக அல்ல, பகிரங்கமாக எடுக்கப் பட வேண்டும். இக்கிறிஸ்தவர்களில் சிலர் எப்படி பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனமானது யூதர்களுடனான தேவனது உடன்படிக்கைக்கு அடையாளமாக அமைந்திருந்ததோ, அப்படியே ஞானஸ்நானமானது கிறிஸ்தவர்கள் என்னும் தேவ மக்களுடன் தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளமாகும் என்று நம்புகின்றனர். தங்கள் கருத்துக்கு ஆதரவாக கொலோசெயர் 2:11-13ஐ சுட்டிக் காட்டுகின்றனர்.

ஞானஸ்நானத்தின் அர்த்தம் என்னும் விஷயத்தில், உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவர்களில் சிலர் ஒரு கருத்தையும், மற்றவர்கள் வேறொரு கருத்தையும் கொண்டுள்ளனர். எல்லாருமே தாங்கள் வேதாகமத்தின் உபதேசத்தைத்தான் கைக்கொண்டிருப்பதாக நம்புகின்றனர். நமது சொந்தக் கருத்து எதுவாயினும், மற்றவர்களை நாம் நியாயம் தீர்க்கவோ குறை சொல்லவோ கூடாது.

இது சம்பந்தமாக, ஞானஸ்நானத்தின் அவசியம் மற்றும் நீடிப்பு பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி : விசுவாசி ஒருவன் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே மரித்து விட்டால் என்ன நடக்கும்? வேதம் குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை. எனினும் அந்த விசுவாசி இரட்சிக்கப் படுவான் என்றே ஏறத்தாழ எல்லாக் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். 

மாற்கு 16:16 இன் படி, ஞானஸ்நானம் எடுக்காதது அல்ல, அவிசுவாசம் கொள்வதே ஒருவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறது. லூக்கா 23:40-43 இல் காணப்படும் கள்ளன் ஞானஸ்நானம் எடுக்க வாய்ப்பு பெறாவிடிலும், பரதீசு செல்வான் என வாக்கு பெறுகிறான். எனினும், ஞானஸ்நானம் எடுக்க மறுப்பவன் ஒரு பெரிய அபாய நிலையில் இருக்கிறான் என்றே சபை நம்புகிறது. அவனது விசுவாசம் உண்மை தானா? அறிந்தே கிறிஸ்துவின் கட்டளைக்கு அடிபணிய மறுப்போம் என்றால் நாம் பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது (மத்தேயு 7:21). ஆகவே, ஒருவனுக்கு சபைத் தலைவர்கள் ஞானஸ்நானம் கொடுக்க முன்வருகையில், அவன் எவ்விதத்திலும் தாமதிக்காமல், முதல் வாய்ப்பையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது கேள்வி இதுதான் : ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட விசுவாசி ஒருவன் தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் பண்ணி, பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு, பின்னர் மனந் திரும்பி மீண்டும் கிறிஸ்துவண்டை வருவான் என்றால், அவன் மீண்டும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா? இதற்குத் திருச்சபையின் பதில் எப்பொழுதுமே “இல்லை” என்பதே. ஒரேயொரு ஞானஸ்நானம் மட்டுமே உண்டு (எபேசியர் 4:5). 

தேவன் நம்மைத் தமது பிள்ளைகளாக்கிக் கொண்டபிறகு நாம் கவகம் பண்ணி, தேவனுடைய பிள்ளைகளாய் இருப்பதால் வரக் கூடிய நன்மைகளை இழந்து போகலாம். பின்னொரு நாளில் நாம் மனந்திரும்புவோம் என்றால், நாம் மீண்டும் புத்திர சுவிகாரம் செய்யப் பட வேண்டியதில்லை, மன்னிக்கப் பட மட்டுமே வேண்டும் (லூக்கா 15:11-24). நாம் உண்மை அற்றவர்களாய் இருந்த போதிலும் தேவன் உண்மை உள்ளவராய் இருக்கிறாரே (ரோமர் 3:3; 1129; 2 கொரிந்தியர் 1:20).

இதன் தொடர்பாக வரும் இன்னொரு கேள்வி : நாம் ஒருசபையில் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, வேறொரு சபையில் சேரும் போது மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா? இதற்கு விடை “இல்லை” என்பதே, ஒரேயொரு கிறிஸ்தவ ஞானஸ்நானம் மட்டுமே உண்டு (எபேசியர் 4:5). பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்ற எந்த விசுவாசியும் (மத்தேயு 28:19) மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியதில்லை குழந்தைகளின் ஞானஸ்நானம்

குழந்தைகளின் ஞானஸ்நானத்தைப் பொறுத்த வரை திருச்சபையில் பல்வேறுபட்ட வழக்கங்கள் கடைபிடிக்கப் படுகின்றன. திருச்சபை வரலாற்றில், ஞானஸ்நானத்தைப் பற்றிய ஆதிகால விவாதங்கள் குழந்தை ஞானஸ்நானம் பற்றிக் குறிப்பிடுவதுடன், அது அப்போஸ்தவர்களின் வழிவந்த பாரம்பரியம் என்று கூறுகின்றன. 

எனினும் 1500ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்துக்குப் பின்பு சில புராட்டஸ்டன்ட் திருச்சபைகள் வயது வந்தோருக்கும், சற்று பெரிய பிள்ளைகளுக்கும் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப் பட வேண்டும் என்று நம்ப ஆரம்பித்தன. இன்றைக்கு பல சபைகள் இந்த ஒழுங்கையே கடைபிடிக்கின்றன. இவ்வித சபைகளிலுள்ள கிறிஸ்தவர்கள் வேதாகமத்தில் குழந்தை ஞானஸ்நானத்திற்கு தெளிவான எடுத்துக் காட்டுகள் இல்லையென வாதிடுகின்றனர். இவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கும் இயேசுவே கர்த்தர் எனத் தங்கள் வாயினால் அறிக்கை செய்யக் கூடியவர்களுக்கும் மட்டுமே ஞானஸ்நானம் என்று நம்புகின்றனர்(ரோமர் 10:9-10). முதலில் மனந்திரும்புதல், பிறகு தான் ஞானஸ்நானம் என்கின்றனர் (அப்போஸ்தலர் 2:38). 

இதை இவர்கள் “விசுவாசியின் ஞானஸ்நானம்” என்று அழைக்கின்றனர் (அப்போஸ்தலர் 8:37). இவர்கள், குழந்தைகள் மனந்திரும்பவோ, விசுவாசம் கொள்ளவோ முடியாது என்று கருதுகின்றனர்; ஆகவே சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் பெறும் தகுதியில்லை. பெரும்பாலான இவ்வகைச் சபைகளில் ஞானஸ்நானம் பெறக் குறைந்த பட்ச வயது 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். ஒருவேளை, ஒரு பிள்ளை தனது விசுவாசத்தை வாய் விட்டுத் தெளிவாகக் கூறும் என்றால் ஐந்து அல்லது ஆறு வயதில் ஞானஸ்நானம் கொடுக்கப் படும். இப்படி குழந்தைகள் ஞானஸ்நானத்தைக் கடைபிடிக்காத சபைகள் ஞானஸ்நானத்துக்குப் பதிலாக குழந்தை பிரதிஷ்டை வைபவம் என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளன.

ஆயினும், பல புராட்டஸ்டன்ட் திருச்சபைகள் விசுவாசிகளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே ஞானஸ்நானம் கொடுக்கின்றன. இந்தக் கிறிஸ்தவர்கள் ஆதித்திருச்சபையில் குழந்தை பிரதிஷ்டை வைபவம் என்று எதுவும் இருந்ததாக வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். 

அதுபோலவே கிறிஸ்தவப் பெற்றோரின் குழந்தைகள் யாரும் பின்னர் தனியே வந்து ஞானஸ்நானம் பெற்றதாகவும் காண்பதில்லை. முழுக் குடும்பங்களும் ஞானஸ்நானம் பெற்றதாகவே வாசிக்கிறோம். குழந்தைகளே இல்லாத வீடுகள் அபூர்வமாகவே இருந்திருக்கும் (அப்போஸ்தலர் 16:15; 16:33; 1 கொரிந்தியர் 1:15). இவர்கள் ஞானஸ்நானமானது பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஆண்களின் விருத்தசேதளத்திற்கு ஒத்தது என்று நம்புகின்றனர். அதாவது யூதக் குழந்தைகளுக்கும் வயது வந்த பின் யூத மதத்தில் சேர விரும்பியவர்களுக்கும் அது செய்யப் பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் இயேசுவிடம் கொண்டு வந்த போது அவர், “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; அவைகளைத் தடை பண்ணாதிருங்கள். 

தேவனுடைய இராஜ்யம் அப்படிப் பட்டவர்களுடையது” என்றார் (மாற்கு 10:13-16; லூக்கா 18:16-17). எனவே இச்சபைகள், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்ற இயேசுவின் கட்டளையில் வயது வந்தோருக்கு ஞானஸ்நானம் கொடுப்பது மட்டுமல்ல, குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதும் அடங்கும் என்று நம்புகின்றனர் (மத்தேயு 28:19; அப்போஸ்தலர் 2:39).

இந்தக் கேள்வி ஞானஸ்நானத்தின் அர்த்தத்தை மையமாகக் கொண்டது. குழந்தை ஞானஸ்நானமானது ஞானஸ்நானத்தின் அர்த்தத்துக்குப் பொருந்துவதா? ஞானஸ்நானம் என்பது தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு வழி என்று நம்பும் கிறிஸ்தவர்கள் பொதுவாக குழந்தை ஞானஸ்நானத்தைக் கடைபிடிக்கின்றனர். இவர்களில் சிலர் சிறு குழந்தைகளும் விசுவாசிக்க முடியும் (விசுவாசிக்கவும் செய்கின்றனர்) என்று நம்புகின்றனர் (பொதுவான தலைப்பு : குழந்தைகளும் என்கின்றனர் தேவனுடைய இராஜ்யமும் – பார்க்க). இன்னும் சிலரோ பெற்றோரின் விசுவாசமே போதும் (பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் செய்யப் படுகையில் யூதப் பெற்றோர் செய்வது போல). எனினும், ஞானஸ்நானம் பெற்ற குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளக் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தாக வேண்டும். ஞானஸ்நானம் ஒரு வெளிப்புற அடையாளம் மட்டுமே என்று நம்பும் சபைகள் குழந்தை ஞானஸ்நானம் கொடுக்கவும் செய்யலாம், கொடாமலும் இருக்கலாம். 

புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானமானது, பழைய ஏற்பாட்டு விருத்தசேதனத்தைப் போல தேவன் ஒரு கூட்டம் மக்களுடன் செய்யும் ஓர் உடன்படிக்கைக்கு அடையாளமாகும் என்று நம்புகின்ற சபைகள் பொதுவாக குழந்தை ஞானஸ்நானத்தையே கடைபிடிக்கின்றன. ஆனால், ஞானஸ்நானமானது ஒருவர் தனது தனிப்பட்ட விசுவாசத்தை உலகுக்கு அறிவிக்கும் பகிரங்கமான சாட்சி என்றோ ஒருவர் கிறிஸ்துவில் தனது விசுவாசத்தைத் தனது வாயினால் அறிக்கையிட வேண்டும் என்றோ நம்பும் சபைகள் அப்படி விசுவாசத்தை வாயினால் அறிக்கையிடக் கூடிய பருவம் வரும் வரை ஞானஸ்நானம் கொடுப்பதில்லை.

எந்த விதமான ஞானஸ்நானம் சரி? ஞானஸ்நானம் மூன்று முக்கிய விதங்களில் கொடுக்கப் படுகிறது : மூழ்குதல், தெளித்தல் மற்றும் ஊற்றுதல். பெரும்பாலான சபைகளில் ஞானஸ்நானம் பெறுபவரின் தலை மீது தண்ணீர் தெளிக்கப் படுகிறது அல்லது ஊற்றப் படுகிறது. 

குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுவார்களானால் பொதுவாக தெளிப்பது அல்லது ஊற்றும் முறையே பின்பற்றப் படுகிறது, பழைய காலங்களில் குழந்தைகளுக்கும் முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டதுண்டு. வயது வந்தோருக்கு இம்மூன்று முறைகளுமே பயன்படுத்தப் படுகின்றன. மிகவும் சுகவீனமாயிருக்கும் மக்களுக்கும், பாலைவனங்கள் அல்லது பனிப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் பொதுவாக முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் படுவதில்லை. எனினும் ஆதித் திருச்சபையின் நாட்கள் தொட்டே இங்கோ, எங்கோ இந்த மூன்று முறைகளுமே பின்பற்றப் பட்டு வந்துள்ளன.

ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப் பட வேண்டும் என்று வேதம் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. புதிய ஏற்பாட்டிலே பொதுவாக ஞானஸ்நானங்கள் எல்லாம் நதிகளிலேயோ (மாற்கு 1:5), அல்லது தண்ணீர் அதிகமாய் இருந்த இடங்களிலேயோ (யோவான் 3:23) தான் நடைபெற்றன. அங்கே மூழ்கி ஞானஸ்நானம் பெறுவதே வசதியாக இருந்திருக்கும், ஒரு வேளை அதுவே வழக்கமான முறையாக இருந்திருக்கலாம். ஆனால் சில சமயங்களில் மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பது வசதிப் பட்டிருக்காது. உதாரணமாக, பிலிப்பிய சிறைக் காவலன் நள்ளிரவில் பவுலின் காயங்களைக் கழுவி, அவனுக்கு உணவு கொடுப்பதன் மத்தியிலே, தன் வீட்டார் அனைவரோடுங் கூட ஞானஸ்நானம் பெற்றான் (அப்போஸ்தலர் 16:33), 

பெந்தெகொஸ்தே நாளன்று, அந்த ஒரே நாளில் மூவாயிரம் பேர் மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்தனர் (அப்போஸ்தலர் 2:41). இவ்விதமான சமயங்களில் தண்ணீர் தெளிக்கப் படவோ, ஊற்றப் படவோ செய்திருக்கலாம் என்றே அநேக வேத பண்டிதர்கள் நம்புகின்றனர்.

ஞானஸ்நானம் என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. பொதுவான அர்த்தம் “மூழ்குதல்” என்பது. கிறிஸ்துவுடன் நமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை (ரோமர் 6:3-4) மூழ்குதல் மிக அற்புதமாகச் சித்தரிக்கிறது. ஆகவே பல சபைகள் முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே கொடுக்கின்றன. 

ஆயினும் “மூழ்குதல்” என்பது ஒன்றே “ஞானஸ்நானம்’ (Baptism) என்ற பதத்தின் பொருளாகாது. மாற்கு 7:3-4இல் குறிப்பிடப் படும் பாரம்பரிய கிரேக்கச் சொல் இதே “Baptism” என்ற பதம் தான், இங்கே இது சுத்திகரிப்பைக் காட்டும் “தெளித்தல்” என்ற பொருளில் வருகிறது (லூக்கா 11:38-39 பார்க்க). புறஜாதிகள் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றது (அப்போஸ்தலர் 1:5), ஆவியின் வரம் “பொழிந்தருளப் பட்டது” எனக் குறிப்பிடப் படுகிறது (அப்போஸ்தலர் 2:17-18; 10:44-46), 

“துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப் பட்ட இருதயம் உள்ளவர்களாவது” பற்றியும் வேதம் பேசுகின்றது (எசேக்கியேல் 36:25; எபிரெயர் 10:22), இது தண்ணீர் ஞானஸ்நானத்தையே குறிப்பதாக அநேகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே, பல சபைகள் தெளிப்பது அல்லது ஊற்றுவது மூலம் ஞானஸ்நானம் கொடுக்கின்றன.

சுருக்கம்

இந்தக் கட்டுரையில் ஞானஸ்நானம் குறித்த மூன்று முக்கிய கேள்விகள் விவாதிக்கப் அர்த்தம் என்ன – அது கிருபையைப் பெறும் வழிவகையா, அல்லது பட்டுள்ளன :

 1) ஞானஸ்நானத்தின் வெறும் அடையாளம் மட்டுமா?

 2) ஞானஸ்நானம் குழந்தைகளுக்கும் உண்டா, அல்லது பெரிய பிள்ளைகளுக்கும் வயது வந்தோருக்கும் மட்டும் தானா?

 3) தண்ணீர் பயன் படுத்தப் படும் மூன்று முறைகளும் சரிதானா அல்லது முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே சரியா? 

தொடர்புடைய வேத வசனங்களைப் படித்து ஆராய்ந்த பின்னரே இக்கேள்விகளுக்கான விடையைத் தீர்மானிக்க வேண்டும். நாம் எதைத் தீர்மானித்தாலும் சரி, வேறு விதமாகத் தீர்மானிக்கும் மக்களை நியாயம் தீர்க்கவோ குறை சொல்லவோ கூடாது. இக்கேள்விகளுக்கு வேதம் திட்டவட்டமான பதில்களை அளிக்கவில்லை. 

ஞானஸ்நானத்தைப் பற்றிய நமது சொந்த நம்பிக்கைகள் மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்து நம்மைப் பிரிக்கக் கூடாது, ஏனெனில் அவர்களுக்காகவும் கிறிஸ்து மரித்தாரே. உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிகைக்கு அழைக்கப் பட்டது போல ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்தானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும், பிதாவும் உண்டு; அவர் எல்லார் மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் (எபேசியர் 4:4-6),

பின்குறிப்புகள்

1 யோர்தான் நதியில் நாகமானுக்கென்று எந்தச் சிறப்பு வல்லமையும் இருக்கவில்லை, ஆனால் தேவன் கட்டளையிட்டதற்குக் கீழ்ப்படிந்த போது நாகமான் சுகமடைந்தான் (2 இராஜாக்கள் 5:9-14).

2 இக்கிறிஸ்தவர்களில் சிலர் ஞானஸ்நானம் “கிருபையின் எத்தனங்களில்” ஒன்று என்கின்றனர், காரணம் ஞானஸ்நானம் என்பது நமது விசுவாசத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த வழி, 

3 புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page