திருச்சபையில் பெண்கள்

திருச்சபையில் பெண்கள்

முக்கிய வசனங்கள்

நியாயாதிபதிகள் 4:4 தெபோராள், தீர்க்கதரிசியானவள், இஸ்ரவேலில் தலைமையானவள், நியாயாதிபதி.

அப்போஸ்தலர் 1:14; 2:1-4; 16-18; 21:8-9 பரிசுத்த ஆவியானவரும் தீர்க்கதரிசன வரமும் பெண்களுக்கும் உண்டு. ரோமர் 16:1,7 பெபேயாள், உதவிக்காரி? யூனியா, அப்போஸ்தலப் பெண்?

1கொரிந்தியர் 11:3-16 (குறிப்பாக வசனம் 5) பெண்கள் ஜெபிப்பது, தீர்க்கதரிசனம் சொல்வது. 1 கொரிந்தியர் 14:26-40 (குறிப்பாக வசனங்கள் 26, 34,35) பெண்கள் ஆராதனையில் இடையூறு செய்வது.

கலாத்தியர் 3:26-28 ஆண்களும் பெண்களும் தேவனுக்கு முன் சமம். 1 தீமோத்தேயு 2:11-15 பெண்கள் போதிக்கவோ, ஆண்கள் மீது அதிகாரம் செலுத்தவோ கூடாது.

1 தீமோத்தேயு 3:11-13 பெண்கள் சபையில் ஊழியக்காரிகள்.

திருச்சபையில் பெண்களின் பணி என்ன?

திருச்சபை வரலாறு நெடுகிலுமே பெரும்பாலும் பெண்கள் சபையை நடத்திச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிரசங்கிமார்கள், போதகர்கள், மேய்ப்பர்கள் எல்லாருமே பொதுவாக ஆண்கள் தாம். இருந்தபோதிலும் உலகின் சில பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் பெண்கள் சபையை நடத்தவும், போதிக்கவும் செய்ததுண்டு. கடந்த சில நூறு ஆண்டுகளாக பிரசங்கிப்பதிலும், போதிப்பதிலும், சபைகளை நடத்துவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. இதுவும், உலகின் பல்வேறு சமுதாயங்கள் தங்கள் பெண்களுக்கு அதிக சுதந்தரத்தை அனுமதிப்பதுவும் ஒரே சமயத்தில் நடைபெற்றுள்ளன.

பெண்கள் சபையை நடத்திச் செல்வது பற்றி வேதம் கூறுவது என்ன? அது அவ்வளவு தெளிவாக இல்லை. அநேக சபைகள் பெண்களைப் பிரசங்கிக்கவோ அல்லது போதகராக இருக்கவோ அனுமதிப்பதில்லை, ஆனால் இச்சபைகளில் பெரும்பாலானவை பெண்களை மிஷனெரிகளாக அனுப்பி பிரசங்கிக்கவும் போதிக்கவும் விடுகின்றன. இதற்கு மாறாக, வேறு பல சபைகளோ பெண்களைப் போதிக்கவும் பிரசங்கிக்கவும் அனுமதிப்பதோடு, போதகர்களாகவும் பேராயர்களாகவும் கூட இருக்க விடுகின்றன.

பெண்கள் சபையில் ஜெபிப்பதும், தீர்க்கதரிசனம் சொல்வதும்

கலாத்தியர் 3:28 இல் பவுல் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என எழுதுகின்றார். நாம் அனைவருமே தேவ கிருபை அவசியப் படுகின்ற பாவிகள் தாம். உண்மையில் கலாத்தியர் 3:28 தான், மேற்கத்திய நாடுகளில் அடிமைத் தனத்துக்கு எதிரான கிறிஸ்தவர்களின் போராட்டத்துக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப் பட்ட மிக முக்கியமான வசனமாகும். ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவில் ஒன்றுதான் என்பது அவர்கள் எல்லா விதங்களிலும் ஒத்தவர்கள் எனப் பொருள் படாது. தேவனுக்கு முன்பாக ஆண்களும் பெண்களும் சரிசமமானவர்கள், ஆனால் சபையில் அவர்களுக்கென தனித்தனிப் பங்குகள் உண்டு. அதேபோல கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்றாலும், இல்லற வாழ்வில் அவர்களது பங்குகள் வெவ்வேறானவை (எபேசியர் 5:21-23; பொதுவான தலைப்பு : கிறிஸ்தவத் திருமணம் – பார்க்க).

இயேசுவின் சீஷர்களை வல்லமையால் தரிப்பிக்கும் படி பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கிய போது அங்கே கூடியிருந்தவர்களில் ஆண்களும் பெண்களும் இருந்தனர் என்பதை அப்போஸ்தலர் 1,2 அதிகாரங்கள் தெளிவாக்குகின்றன. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் . . .என்னுடைய ஊழியக்காரர் மேலும் என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் . … என் ஆவியை ஊற்றுவேன் என்ற யோவேலின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி பேதுரு பேசினார் (யோவேல் 2:28-29; அப்போஸ்தலர் 2:16-18), பழைய ஏற்பாட்டில் ஏராளமான பெண் தீர்க்கதரிசிகள் இருந்தனர் (யாத்திராகமம் 15:20; நியாயாதிபதிகள் 4:4: 2 இராஜாக்கள் 22:14; நெகேமியா 6:14; ஏசாயா 8:3). புதிய ஏற்பாட்டில் சுவிசேஷகனாகிய பிலிப்புவுக்கு தீர்க்கதரிசனம் சொல்லக் கூடிய நான்கு குமாரத்திகள் இருந்தனர் (அப்போஸ்தலர் 21:8-9).

1 கொரிந்தியர் 12:11 இல் பவுலும், பரிசுத்த ஆவியானவர் ஆண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தமது வரங்களைத் தந்தருளுவார் என்பதை ஒத்துக் கொள்கிறார். 1 கொரிந்தியர் 11:5 இல் பவுல், கொரிந்து சபையில் ஆராதனை நேரத்தில் ஜெபித்த, தீர்க்கதரிசனம் சொன்ன பெண்கள் பற்றிப் பேசுகின்றார், ஜெபம் பண்ணுகிற போதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது பெண்கள் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்வதால், பெண்கள் ஆராதனையில் ஜெபிப்பது அல்லது தீர்க்கதரிசனம் சொல்வது தகுதியானதே என்பது தெளிவாகிறது. சபை கூடுகையில் எல்லாரும் பங்கெடுக்கலாம் என்று பவுல் சொல்வது பெண்களும் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது (1 கொரிந்தியர் 14:26).

உதவிக்காரிகளாக, உடன் ஊழியக்காரிகளாக பெண்கள் பெண்கள் சபையில் உதவிக்காரிகளாகப் பணி செய்யலாம் என்று அநேகர் நம்புகின்றனர்.

1 தீமோத்தேயு 3:8-13 இல் பவுல் ஆண்கள் மற்றும் கணவர்களைப் பற்றி எழுதுகின்றார். வசனம் 11 பெண்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. அது இருவிதமான பெண்களைக் குறித்ததாக இருக்கலாம். ஆனால் அங்கே ஸ்திரீகள் என்பது “மனைவிகளைக்” குறிக்கிறதா அல்லது “உதவிக்காரிகளைக் குறிக்கிறதா என்பது திட்டமாய்த் தெரியவில்லை. ஆனால் ரோமர் 16:1இல் பவுல் பெபேயாள் என்ற ஊழியக்காரியைப் பெரிதும் பாராட்டிப் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. (இங்கே “ஊழியக்காரி” என்று மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் கிரேக்கப் பதம்” “உதவிக்காரி” என்று பொருள் படுவது.)

ரோமர் 16:3,6,12 மற்றும் பிலிப்பியர் 4:2-3 இல் பவுல் பெண்களான வேறு அநேக “உடன் ஊழியர்களையும்” குறிப்பிடுகிறார். பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கிலா என்ற தம்பதியினர் எப்பொழுதும் ஒன்றாகவே கூறப் படுகின்றனர், இவர்கள் போதனை ஊழியத்தில் இருந்ததாகத் தோன்றுகிறது (அப்போஸ்தலர் 18:18-26). அதோடு, ரோமர் 16:7 இல் பவுல் யூனியா என்று குறிப்பிடுவது ஓர் ஆணல்ல, பெண்ணே என்று பல வேத பண்டிதர்கள் கருதுகின்றனர். (அந்தக் கிரேக்கப் பெயர் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ இருக்கக் கூடியது.) அது பெண்ணைக் குறிக்குமென்றால் பவுல் ஒரு பெண்ணை “அப்போஸ்தலர்” என்று குறிப்பிடுகிறார்.

பெண் தலைவர்கள் பெண்கள் உதவிக்காரிகளாய் இருக்கலாம், எனினும் அவர்கள் போதகர் பதவியிலிருந்து ஒரு சபையை நடத்திச் செல்லலாமா கூடாதா என்ற கேள்வி எழவே செய்கின்றது. இக்கேள்விக்கு வேதம் திட்டவட்டமான பதில் கொடுப்பதில்லை, விளைவாக இன்று பல்வேறு சபைகளும் பல்வேறு வழக்கங்களைக் கைக்கொள்கின்றன. பெண்கள் சபையில் பேசக் கூடாது என்றும், உபதேசம் பண்ணவும், ஆண்கள் மேல் அதிகாரம் செலுத்தவும் கூடாது என்றும் கூறும் 1 கொரிந்தியர் 14:33-35, 1 தீமோத்தேயு 2:11-15 ஆகிய வேத பகுதிகளைப் பல கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த வசனங்கள் தெளிவாய் இருப்பதால் அநேக சபைகள் பெண்கள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மட்டும் கற்பிக்க அனுமதிக்கின்றன, ஆண்களுக்குப் போதிக்க அனுமதிப்பதில்லை. ஏறக்குறைய இச்சபைகள் அனைத்துமே சபைக் கூட்டங்களில் ஜெபிக்கவும், சாட்சி சொல்லவும் பெண்களை அனுமதிக்கின்றன. பெரும்பாலான சபைகள் பெண் மிஷனெரிகள் புதிதாக நாட்டப் பட்ட சபைகளில் பிரசங்கிக்கவும், ஆண்களுக்கும் போதிக்கவும் விடுகின்றனர்.

வேறு சில கிறிஸ்தவர்கள் இதே வசனங்களை வேறு விதமாகப் பொருள் கொள்கின்றனர். இவர்கள், பெண்கள் பேசாமலிருக்க வேண்டும் என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அதே வேளையில் பெண்கள் ஜெபிக்கும் போதும் தீர்க்கதரிசனம் சொல்லும் போதும் தங்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் எழுதியதைச் சுட்டிக் காட்டுகின்றனர் ( 1 கொரிந்தியர் 11:5). எனவே 1 கொரிந்தியர் 14:34-35 “பேசவே கூடாது” என்று கூறவில்லை; “பேசி” அல்லது “உரத்துப் பேசி” பிறருக்கு இடையூறு செய்வதைப் பற்றியே கூறுகிறது என்று இவர்கள் கூறுகின்றனர். பவுலின் காலத்தில் பெண்கள் ஆராதனை நடக்க நடக்கவே கேள்விகள் கேட்டிருப்பதும், தங்கள் கணவர்மாரைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டிருப்பதும் சாத்தியமே.

அதேபோல, 1 தீமோத்தேயு 2:11-15இல் பவுல் தீமோத்தேயுவிடம் சரியானபடி போதிக்கப் படாத பெண்கள் ஆண்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளாமல், அவர்களுக்குக் கீழடங்கி இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றே சொல்லுகிறார் என்பதாக இந்த இரண்டாம் வகை கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். நன்றாகப் போதிக்கப் பட்ட, பிறருக்குப் போதிக்கும் திறன் படைத்த ஒரு பெண்ணுக்கு சபையானது அதிகாரம் கொடுக்கத் தீர்மானிக்கலாம் என்பது இவர்களின் கருத்து. பழைய ஏற்பாட்டின் நியாயாதிபதிகள் நூலில் வரும் தெபோராள், தேவ சித்தத்தின் படி யூதர்களைத் தலைமையேற்று நடத்திச் சென்ற ஒரு தீர்க்கதரிசியானவள், இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆவாள் (நியாயாதிபதிகள் 4:4),

மூன்றாவது வகை கிறிஸ்தவர்களோ பவுல் எழுதியதெல்லாம் தீமோத்தேயுவுக்கும், முதலாம் நூற்றாண்டு கொரிந்திய மற்றும் எபேசிய சபைகளுக்கும் மட்டுமே பொருந்தும் என்கின்றனர். பவுலின் விதிகள் வெகுவாய் மாறிப் போன கலாச்சாரம் கொண்ட இக்காலச் சபைகளுக்குப் பொருந்தா, அது அவரது எண்ணமும் அல்ல என்று இக்கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். பவுல் ஓர் அடிமையை அவன் விட்டு ஓடிவந்த எஜமானிடமே திருப்பி அனுப்பிய போதிலும் அடிமைப் பழக்கத்தை ஆதரிக்கவில்லை, ஆகவே பிலேமோன் தனது அடிமையை விடுதலை செய்து அனுப்பும் படி சொன்னார் (பிலேமோன் 17- 21) என்பதை இவர்கள் உதாரணமாகச் சுட்டிக் காட்டுகின்றனர். 

கிறிஸ்துவின் நிமித்தமாக தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் என்றே பவுல் கட்டளையிட்டாரே ஒழிய பெண்கள் மட்டுமே கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்று கூறவில்லை (எபேசியர் 5:21). இயேசு கலாச்சாரத் தடைச் சுவர்களை எல்லாம் தகர்த்தெறிந்து எல்லாருக்கும் சுயாதீனத்தை அளித்தார் என்பதை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு சமுதாயம் ஏற்கனவே பெண்களுக்கு விடுதலையையும் முழு உரிமையையும் அளித்திருக்கும் பட்சத்தில், பெண்கள் சபையில் போதிப்பதைக் கண்டு அவிசுவாசிகளான ஆண்கள் இடறலடைய மாட்டார்கள். எனவே, சபையானது பெண்களுக்கும் தலைமைப் பதவிகளைக் கொடுக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

ஓரிரு வசனங்களை மட்டும் படித்தவுடன் ஏதோ ஒன்று திட்டவட்டமாகப் புலப்படுவது போல் தோன்றினாலும், விஷயம் அவ்வளவு சுலபமானது அல்ல, நாம் என்ன தீர்மானித்தாலும் அது வேறொரு வழக்கத்தைப் பின்பற்றும் நமது சகோதர சகோதரிகளை விட்டு நம்மைப் பிரிக்க அனுமதிக்கக் கூடாது. யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை, ஆண் என்றும் பெண் என்றும் இல்லை; நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).

பின்குறிப்புகள்

1  புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் தான் எழுதப் பட்டது. 

2 1 கொரிந்தியர் 14:34-35 பற்றிய இன்னொரு வியாக்கியானம் : அது கொரிந்தியர் சொன்ன மேற்கோள். 1 கொரிந்தியரில் பல இடங்களில் பவுல் கொரிந்தியரின் கருத்துக்களை எடுத்துக் கூறிவிட்டு, பின்பு அவற்றுக்கு மறுப்புரை தருகிறார் (1கொரிந்தியர் 1:12; 3:4; 6:12-13; 7:1; 8:1; 10:23). இந்த அர்த்தத்தின் படி, 1 கொரிந்தியர் 14:34-35 யூத ஜெபாலயங்களின் முறைமைகளை கொரிந்தியர் இங்கே குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படியானால் வசனம் 36, பவுல் அதற்குத் தெரிவித்த மறுப்புரையாக இருக்க வேண்டும். உண்மையில் வசனம் 36 ஆண்களை நோக்கிப் பேசுவதாகவே கிரேக்க மொழி வினைச் சொல் அமைந்துள்ளது. ஆக, பவுல் ஆண்களைப் பார்த்துக் கேட்கின்றார் ; தேவ வசனம் உங்களிடத்தில் இருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? கிரேக்க மொழியில் இக்கேள்விகள் அமைந்துள்ள விதம், “இல்லை” என்ற பதிலைத் தருவதாக உள்ளது.

Leave a Reply