திருச்சபை ஆட்சிமுறை
முக்கிய வசனங்கள்
அப்போஸ்தலர் 6:1-6 அப்போஸ்தலர்கள் மற்றும் முதலாவது உதவிக்காரர்கள் 1 கொரிந்தியர் 12:28 சபையில் ஊழியங்கள் : தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு . ஊழியங்களையும், ஆளுகைகளையும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 2:20 சபையானது அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் (கட்டப் பட்டிருக்கிறது;) அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாய் இருக்கிறார்.
எபேசியர் 4:11-13 கிறிஸ்து சபையில் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். 1 தீமோத்தேயு 3:1-13 கண்காணியானவர்கள் (பேராயர்கள்) மற்றும் உதவிக்காரர்களின் தகுதிகள். 1 தீமோத்தேயு 5:17-20 மூப்பர்களின் பணி, ஊதியம் மற்றும் ஒழுங்கு. தீத்து 1:5-9 மூப்பர்கள் மற்றும் கண்காணியானவர்களின் தகுதிகள்.
திருச்சபை கிரேக்க மொழியில் “சர்ச்” என்பது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக “அழைக்கப் பட்ட’ மக்களின் “கூடுகை” அல்லது “சபை” என்று பொருள்படும். கிறிஸ்தவத் திருச்சபையானது தேவனுடைய மக்களாய் இருக்கும்படி அவரால் “அழைக்கப் பட்ட தாகும் (1பேதுரு 2:9-10). “சபை என்ற பதம் உள்ளூர் விசுவாசிகளின் கூடுகையையும் குறிக்கலாம், உலகனைத்திலும் உள்ள மொத்த விசுவாசிகளின் கூட்டத்தையும் குறிக்கலாம். எங்கெல்லாம் மூன்றோ நான்கோ விசுவாசிகள் கூடி வருகிறார்களோ அங்கெல்லாம் அது உள்ளூர்ச் சபையாகும். உலகெங்கிலும் உள்ள அனைத்து விசுவாசிகளும் சேர்ந்தது உலகளாவிய, ஆவிக்குரிய திருச்சபையாகும். இயேசுவில் தங்கள் விகவாசத்தை அறிக்கையிட்டு அவரது நாமத்தில் ஞானஸ்நானம் பெறுபவர்கள் ஒரு சபையின் அங்கங்களாவர் (1கொரிந்தியர் 12:13), ஆனால் யாரெல்லாம் உண்மை விசுவாசிகள் என்பதை தேவள் மட்டுமே அறிவார் (மத்தேயு 13:24-30, 36-43).
திருச்சபையானது அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் போட்ட அஸ்திபாரத்தின் மேல் கட்டப் பட்டுள்ளது, அதற்கு இயேசு கிறிஸ்து தாமே பிரதான மூலைக்கல்லாய் இருக்கிறார் (மத்தேயு 16:18; 1 கொரிந்தியர் 3:11; எபேசியர் 2:19-22; 1 பேதுரு 2:4-8). அது பரிசுத்த ஆவியானவரால் தோற்றுவிக்கப் பட்டது (அப்போஸ்தலர் 2:1-4, 36-41). பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் வாசம் பண்ணுகிறார்; சபையானது தேவனுடைய ஆலயமாய் இருக்கிறது (1கொரிந்தியர் 3:16; எபேசியர் 2:22). வேறொரு இடத்தில், சபை “கிறிஸ்துவின் மணவாட்டி” என்றும் அழைக்கப் படுகிறது (2 கொரிந்தியர் 11:2; எபேசியர் 5:22-32; வெளிப்படுத்தல் 19:7). சபையானது “கிறிஸ்துவின் சரீரம்” எனவும் பெயர் பெறுகின்றது (ரோமர் 12:4-5; 1 கொரிந்தியர் 12:27), அதற்கு இயேசு கிறிஸ்து தாமே சிரசாய் இருக்கின்றார் (எபேசியர் 4:15-16; 5:23; கொலோசெயர் 1:18).
இயேசுவே சபைக்குத் தலைவர்களையும் தந்தார் : அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள் (எபேசியர் 4:11). தேவனே சபையில் பற்பல ஊழியங்களை ஏற்படுத்தினார் (1கொரிந்தியர் 12:28), அந்த ஊழியங்களை நிறைவேற்றுவதற்கான தமது விசேஷித்த வரங்களையும், வல்லமையையும் அருளுபவர் பரிசுத்த ஆவியானவரே (1கொரிந்தியர் 12:7-11).
எனினும், வேதத்தில் உதவிக்காரர்கள், மூப்பர்கள், கண்காணியானவர்கள், சங்கங்கள் இவை பற்றியும் வாசிக்கிறோம். இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து உழைப்பது எப்படி?
திருச்சபையானது எவ்வாறு ஆளுகை செய்யப் படுகிறது?
வேதாகமத்தில் திருச்சபை தலைமைத்துவம்
எபேசியர் 4:11இல் பவுல் பல தரப்பட்ட தலைவர்களைப் பற்றி எழுதுகின்றார், அவர்களில் முதன்மையானவர்கள் அப்போஸ்தலர்கள், கிரேக்க மொழியில் “அபாஸ்ட்ல்” என்றால் “அனுப்பப் பட்டவன்” என்று பொருள். முதல் பன்னிரு அப்போஸ்தலர்களையும் இயேசுவே தெரிந்தெடுத்தார் (மாற்கு 3:13-19). அவர்கள் விசேஷமானவர்கள், இயேசுவின் ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் இவற்றைத் தங்கள் கண்ணாரக் கண்டவர்கள் (அப்போஸ்தலர் 1:21-22). பவுலும் தாம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டார் என்பதன் அடிப்படையிலேயே தாமும் ஒரு அப்போஸ்தலனே என வாதிட்டார் ( 1 கொரிந்தியர் 9:1-2; 15:5-11). இந்த அப்போஸ்தலர்கள் ஊரூராகச் சென்று பல புதிய சபைகளை நாட்டினர். சபைக்குப் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியை வழங்கியவர்கள் இவர்களே, சபையில் அறுதியான அதிகாரம் பெற்றிருந்தவர்களும் இவர்களே. எனினும், வேதமானது வேறு சில மக்களையும் “அப்போஸ்தலர்கள்” என அழைக்கின்றது, அவர்கள் பர்னபா (1 கொரிந்தியர் 9:5-6), கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு (கலாத்தியர் 1:19), சீலா மற்றும் தீமோத்தேயு (1தெசலோனிக்கேயர் 11; 2:6-7) மற்றும் சிலர் (ரோமர் 16:7; வெளிப்படுத்தல் 2:2).
எபேசியர் 4:11 இல் பவுல் தரும் தலைவர்கள் பட்டியலில் இரண்டாவது வருவோர் தீர்க்கதரிசிகள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களைப் போலவே இவர்கள் தாங்கள் தேவனிடமிருந்து நேரடியாகப் பெற்ற வார்த்தைகளை மக்களுக்கு அளித்தனர் (1கொரிந்தியர் 14:30). இதில் புத்தி சொல்லி ஊக்குவிப்பது, விசுவாசத்தில் உறுதிப் படுத்துவது. ஆறுதல் சொல்வது (அப்போஸ்தலர் 15:32; 1 கொரிந்தியர் 14:3,31), கூடவே வருங்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பது ஆகிய அனைத்தும் அடங்கும் (அப்போஸ்தலர் 11:28; 21:10-11). தீர்க்கதரிசனமானது 1 கொரிந்தியர் 12:8-10 இல் விசுவாசிகளுக்கு அருளப்படும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப் படுகிறது. அவர்கள் “பேசுவதை சபையில் உள்ள மற்றவர்கள் நிதானித்து அறிய வேண்டும் என்று பவுல் கற்பித்தார் (1கொரிந்தியர் 14:29-33). ஆதித் திருச்சபையில், ஆண்களும் பெண்களுமாக இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் அநேகர் இருந்தனர் (அப்போஸ்தலர் 11:27-28; 13:1; 15:32; 21:9-10; 1 கொரிந்தியர் 11:4-5; 1 தீமோத்தேயு 4:14).
எபேசியர் 4:11இல் பவுலின் பட்டியலில் இடம் பெறும் மூன்றாவது தலைவர்கள் சுவிசேஷகர்கள். இப்பதத்தின் பொருள் “நற்செய்தியை, சுவிசேஷத்தைச் சொல்பவன்’. முதல் ஏழு உதவிக் காரர்களில் ஒருவனான பிலிப்பு ஒரு சுவிசேஷகன் என்றும் அழைக்கப் பட்டான் (அப்போஸ்தலர் 21:8). அவன் நற்செய்தியை, அதாவது சுவிசேஷத்தை புதிய புதிய பகுதிகளுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சென்றான் (அப்போஸ்தலர் 8:5-8; 8:26-40). தீமோத்தேயு “அப்போஸ்தலன்” என அழைக்கப் பட்ட போதிலும், ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய்யும் படி கட்டளை பெற்றாள் (2 தீமோத்தேயு 4:5).
“மேய்ப்பர்கள்” மற்றும் “போதகர்கள்” என்போர் இறுதியாகக் குறிப்பிடப் படுகின்றனர். இது சபையாகிய மந்தையை மேய்க்கும், ஆலோசனை அளிக்கும், போதித்துக் கற்பிக்கும் தலைவர்களைக் குறிக்கும்.
சபையானது ஆதி முதலே மிஷனெரிகளை அனுப்பி வந்துள்ளது (அப்போஸ்தலர் 13:1-3; 15:22,32; 18:27), “அப்போஸ்தலன்” என்ற பதமே “அனுப்பப் பட்டவன்” என்று தான் பொருள்படும் ஆதலால் மிஷனெரிகள், அதிலும் குறிப்பாக, புதிய சபைகளை நாட்டும் மிஷனெரிகள் அப்போஸ்தலர்களே என்று சில கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். ஆனால் மற்ற மிஷனெரிகள் கவிசேஷகர்களையோ அல்லது போதகர்களையோ போன்றவர்கள்; அல்லது ஒரு வேளை மிஷனெரிகள் என்பது முற்றிலும் வேறான ஒரு அலுவலைக் குறிக்கலாம் (பொதுவான தலைப்பு : திருச்சபையின் நோக்கம் – பார்க்க).
“மூப்பர்” என்ற பதம் முதன்முதலில் எருசலேம் திருச்சபையில் இருந்த தலைவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டது (அப்போஸ்தலர் 11:30). அவர்களது பொறுப்பு ஒரு குறிப்பிட்ட உள்ளூர்ச் சபையை ஆளுகை செய்வதும் வழிநடத்திச் செல்வதுமாகும். தங்களது முதலாவது மிஷனெரிப் பயணத்தின் முடிவில் பவுலும் பர்னபாவும், தாங்கள் நாட்டிய ஒவ்வொரு சபைகளிலும் மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து விட்டுச் சென்றனர் (அப்போஸ்தலர் 14:23). எருசலேமின் சபை மூப்பர்களில் இந்த அப்போஸ்தலர்களும் அடங்குவர், பேதுரு (1பேதுரு 5:1), யோவான் (2,3 யோவான்) இருவருமே தங்களை மூப்பர்கள் என அழைத்துக் கொள்கின்றனர். எனவே “மூப்பர்” என்ற பதம் பல்வேறு அலுவல்களை உள்ளடக்கியதாகும். மூப்பர்கள் சபையின் காரியங்களை விசாரித்து நடத்த வேண்டும் (1தீமோத்தேயு 5:17), சபையை மேய்க்கவும் கண்காணிக்கவும் வேண்டும் (அப்போஸ்தலர் 20:28-31; 1 பேதுரு 5:1-4), பிணியாளிகளுக்கு எண்ணெய் பூசி ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 5:14), அதோடு சில மூப்பர்கள் போதிக்கவும் பிரசங்கிக்கவும் வேண்டும் (1தீமோத்தேயு 5:17),
பவுல் தமது பிந்தைய நிருபங்களில் “கண்காணி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதாவது “மேற்பார்ப்பவன்”. பிலிப்பியத் திருச்சபையின் கண்காணிகள் பற்றி அவர் குறிப்பிடுகிறார் (பிலிப்பியர் 1:1), கண்காணியானவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து 1 தீமோத்தேயு 3ஆம் அதிகாரத்திலும் தீத்து 1ஆம் அதிகாரத்திலும் எழுதுகிறார். அநேகக் கிறிஸ்தவ பண்டிதர்கள் “கண்காணி” மற்றும் “மூப்பர்’ என்ற பதங்கள் ஒரே
பதவியைக் குறிப்பவை எனக் கருதுகின்றனர். இவர்கள் “மூப்பர்” என்பது பதவியையும், ”கண்காணி என்பது மூப்பர் பதவியிலுள்ளவர்கள் செய்யும் பணி அல்லது ஊழியத்தையும் குறிப்பதாக நம்புகின்றனர். அப்போஸ்தலர் 20:17,28இல் பவுல் ஒரு கூட்டம் மூப்பர்களை ‘கண்காணிகள்” என்று அழைத்துப் பேசுவதையும், 1 பேதுரு 5:1-2இல் பேதுரு மூப்பர்களைக் கண்காணிப்பு செய்யும்படி கூறுவதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
வேறு பல கிறிஸ்தவ அறிஞர்களோ ஆதித் திருச்சபையிலேயே கண்காணிகளுக்கும் மூப்பர்களுக்கும் தனித்தனி அலுவல்கள் இருந்ததாக நம்புகின்றனர். இவர்கள் தீத்து 1ஆம் அதிகாரத்தில் குற்றம் சாட்டப்படாதவன் என்று ஆரம்பித்து மூப்பர்களுக்கும் கண்காணிகளுக்கும் இருக்க வேண்டிய தகுதிகள் பற்றி இரண்டு வெவ்வேறு பட்டியல்கள் கொடுக்கப் பட்டிருப்பதைக் காட்டுகின்றனர் (தீத்து 1:5-9 பார்க்க). இவர்கள் 1 தீமோத்தேயு 3:1-7 மற்றும் 5:17-20இல் கண்காணிகள் மற்றும் மூப்பர்கள் குறித்துத் தனித் தனியாக விவாதிக்கப் படுவதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு சில மூப்பர்கள் மட்டுமே போதிக்கக் கூடியவர்களாய் இருந்தனர் (1தீமோத்தேயு 5:17), ஆனால் எல்லாக் கண்காணிகளும் போதக சமர்த்தர்களாக இருக்க வேண்டியதிருந்தது (1 தீமோத்தேயு 3:2). இந்தக் கிறிஸ்தவர்கள், எல்லாக் கண்காணிகளுமே மூப்பர்களாக இருந்தனர், ஆனால் எல்லா மூப்பர்களும் கண்காணிகள் அல்லர் என்று கருதுகின்றனர். வேறு விதமாகச் சொன்னால் சில மூப்பர்களுக்குக் கண்காணி பதவி கொடுக்கப் பட்டது, மற்ற மூப்பர்களோ அந்தக் கண்காணிகளுக்கு உதவியாளர்களாக இருந்தனர்.
சபையில் “உதவிக்காரர்களும்” இருந்தனர் (1 தீமோத்தேயு 3:8), முதலாவது உதவிக்காரர்கள் பற்றி அப்போஸ்தலர் 6:1-இல் பார்க்கிறோம். “உதவிக்காரன்” என்றால் “ஊழியம் செய்கிறவன்”. சபையில் நடைபெறும் உலகப் பிரகாரமான காரியங்களை நிர்வகிக்கவும், ஏழைகளையும் பிணியாளிகளையும் பராமரிக்கவும் உதவிக்காரர்கள் நியமிக்கப் பட்டனர். உதவிக்காரர்களுக்குரிய தகுதிகளை பவுல் 1 தீமோத்தேயு 3:8-13இல் பட்டியலிடுகிறார். அவர்கள் சபையில் நடைபெறும் வழக்கமான அன்றாட அலுவல்களையும் ஊழியங்களையும் மட்டுமே கவனித்த போதிலும் அவர்களது ஞானம் மற்றும் ஆவியானவரின் நிரப்புதல் இவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் பட்டனர் (அப்போஸ்தலர் 6:3), உதாரணமாக ஸ்தேவானும் (அப்போஸ்தலர் 6:5, 8-10), பிலிப்புவும் (அப்போஸ்தலர் 6:5; 8:4-8) மிகச் சிறந்த ஆவிக்குரிய ஊழியம் செய்த இரு உதவிக்காரர்கள் ஆவர்.
சபையின் தலைவர்களுக்கு விசேஷித்த அதிகாரமும் பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்தாலும் சபையார் அனைவருமே பிறருக்குக் கிறிஸ்துவைக் குறித்துச் சொல்ல வேண்டும், தேவைப் படும் சமயங்களில் தேவப் பணிக்குக் கரம் கொடுத்து உதவ வேண்டும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
திருச்சபை ஆளுகை
திருச்சபை வரலாற்றிலே நான்கு முக்கிய வகையான ஆளுகைகள் அல்லது ஆட்சிமுறைகள் இருந்துள்ளன. அவற்றை உண்மையில் யார் பொறுப்பில் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் விவரிக்கலாம். முடிவான அதிகாரம் 1) ஒரு பேராயரிடம் (கண்காணி), இவர் பல உள்ளூர்த் திருச்சபைகளை மேற்பார்ப்பார், அல்லது 2) ஒரு மூப்பர் குழுவிடம், இவர்கள் ஒரு சபையையோ, பல உள்ளூர்ச் சபைகளையோ மேற்பார்ப்பர், அல்லது 3) ஒரு போதகரிடம், இவர் தானே தனது சபையை நடத்துவார் அல்லது 4) முழுச் சபையாரும் ஒரு குழுவாகச் செயல்படுவர். இந்த நான்கு ஆட்சி வகைகளுமே புதிய ஏற்பாட்டின் பல்வேறு வசனங்களை அடிப்படையாகக் கொண்டவை, இவை நான்குமே வேதத்தின் முன்மாதிரியைப் பின்பற்றுபவை எனலாம்.
ஒரு பேராயரின் கையில் அதிகாரம் உள்ள சபைகளில் கிறிஸ்தவர்கள், தாங்கள் அப்போஸ்தலர்களால் ஏற்படுத்தப் பட்ட சபை ஆட்சி முறையைத் தொடர்வதாகக் கூறுகின்றனர். அப்போஸ்தலர்கள் அநேக சபைகளையும், அச்சபைகளின் மூப்பர்களையும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர் (அப்போஸ்தலர் 8:14-17; 14:23), “தீர்ப்புச் செய்கின்ற”, “கட்டளையிடுகின்ற”, “அதிகாரத்தைப்” பயன்படுத்துகின்ற அளவுக்கு இதைச் செய்தனர் (1கொரிந்தியர் 5:3; 9:1-2; 2 கொரிந்தியர் 10:1-11; 2 தெசலோனிக்கேயர் 3:14; தீத்து 15). இவர்கள் தீமோத்தேயு மற்றும் தீத்து பேராயர்கள் போல் செயல்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இவர்கள் எபேசு மற்றும் கிரேத்தா தீவின் சபைகளை ஆளுகை செய்யும் படியாக பவுலினால் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (1தீமோத்தேயு 1:3; 5:19-22; தீத்து 1:5; 3:10). எருசலேமின் சபை கமிட்டி கூட்டங்களில் (அப்போஸ்தவர் 11,15 அதிகாரங்கள்) பேதுருவும் யாக்கோபும் தலைமை வகித்ததையும், தீர்மானங்கள் செய்ததையும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பேராயரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டு, உள்ளூர்ச் சபைகளில் போதகர்கள், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் செயல்படுவர். ஆனால் முடிவான முக்கியமான அதிகாரமோ பேராயரின் கையிலே இருக்கும்.
சபை மூப்பர்களின் கையில் எல்லா அதிகாரமும் இருக்கின்ற சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், அப்போஸ்தலர்கள் முதல் நூற்றாண்டு திருச்சபைக்கு மட்டுமே கொடுக்கப் பட்டனர் என்றும், மூப்பர்களால் ஆளப்படுவதே நிரந்தரமான சபை ஆட்சி முறை என்றும் நம்புகின்றனர் (அப்போஸ்தலர் 14:23; தீத்து 1:5). இவர்கள் “மூப்பர்” என்பதும் “கண்காணி” என்பதும் ஒரே பதவியைக் குறிக்கும் வெவ்வேறு பதங்கள் எனக் கருதுகின்றனர். இவ்வகை சபைகளில் சிலர் “ஆளுகின்ற மூப்பர்கள்”, வேறு சிலர் “போதிக்கின்ற மூப்பர்கள்” (1தீமோத்தேயு 5:17). இவர்களுக்கு உதவியாக உதவிக்காரர்கள் குழுவும் இருக்கலாம். இச்சபைகளில் பல, ஒரு பெரிய கூட்டம் மூப்பர்கள் பல சபைகளைக் கண்காணிக்கின்ற அல்லது பல சபைகளின் மூப்பர்களும ஒன்றாகக் கூடி தங்கள் சபைகளுக்குப் பொதுவான பிரச்சனைகளைப் பற்றிப் பேசி முடிவெடுக்கின்ற ஓர் அமைப்புக்கு உட்பட்டவை.
மூன்றாம் வகையான சபை ஆட்சிமுறையில் முழு அதிகாரமும் ஒரேயொரு மூப்பர் அல்லது போதகரின் கையில் உள்ளது. இவ்வகை சபைகள் உள்ளூர்ச் சபைகள் தன்னாட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துபவை. உள்ளூர்ச் சபைக்கு வெளியே உள்ள யாரும் சபை மீது அதிகாரம் செலுத்த முடியாது என்பது இவர்களது கருத்து. இச்சபைகளின் போதகர் சபையை நடத்திச் செல்வதில் உதவியாக இருக்கக் கூடிய மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் குழு ஒன்று இருப்பினும், இறுதியான அதிகாரம் போதகருடையதே. பவுல் தமது மிஷனெரிப் பயணங்களை ஆங்காங்கே நிறுத்தி, வருடக் கணக்கில் ஒரு சபையில் போதித்த போது, உள்ளூர்ச் சபைகளில் அவருக்கு இருந்த அதிகாரத்தை இவ்வகை சபைகள் சுட்டிக் காட்டுகின்றன. பவுல் இப்படிப் பலமுறை செய்தார் (அப்போஸ்தலர் 18:11; 19:10; 20:31). தீமோத்தேயுவும் எபேசு சபையில் இவ்வகையான போதகராகவே செயல்பட்டிருக்க வேண்டும் ( 1தீமோத்தேயு 1:3; 4:11-14),
சபை ஆட்சி முறையின் நான்காவது வகை, உள்ளூர்ச் சபையின் அதிகாரம் அனைத்தையும் அச்சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்குகிறது. உள்ளூர்ச் சபை சுயேச்சையாகச் செயல் பட வேண்டும் என்ற மூன்றாவது வகை மக்களுடன் அக்கருத்தில் ஒன்றுபடும் இச்சபை மக்கள் விசுவாசிகள் மீது ஒரே நபர் ஆளுகை செய்வதை ஒத்துக் கொள்வதில்லை. இக்கருத்துடைய கிறிஸ்தவர்கள் சபைக்குக் கிறிஸ்து மட்டுமே தலையாய் இருக்கிறார் (கொலோசெயர் 1:18) என்றும், நாம் யாரையும் ரபீ என்றோ, பிதா என்றோ, குரு என்றோ அழைக்கக் கூடாது என கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்டதையும் (மத்தேயு 23:8-10) சுட்டிக் காட்டுகின்றனர். எல்லா விசுவாசிகளுமே “ஆசாரியர்கள் தாம் (1 பேதுரு 2:9; வெளிப்படுத்தல் 5:10).
தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் (அப்போஸ்தலர் 6:3), போதிப்பதிலும் (1 கொரிந்தியர் 14:25), ஒழுங்கு நடவடிக்கையிலும் முழுச் சபையுமே பங்கு பெற்றதைக் காட்டும் வேத வசனங்களை இக்கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் (மத்தேயு 18:17; 1 கொரிந்தியர் 5:4-5; 2 கொரிந்தியர் 2:6). ஆகவே, இச்சபைகள் முழுச் சபையையும் கூட்டி முக்கியமான எந்த விஷயத்தையும் தீர்மானிப்பதற்கு ஓட்டெடுப்பு நடத்துகின்றனர். இவ்வகை சபைகளில் பிரசங்கம் செய்யவும், போதிக்கவும் ஒரு தனிப் போதகர் இருக்கலாம், ஆனால் அவருக்குச் சபை மக்கள் மீது அதிகாரம் கிடையாது. இச்சபைகளுள் சிலவற்றுக்குத் தலைவர்கள் என்று யாரும் இருப்பதில்லை. பிரசங்கித்தல், வேதபாட வகுப்பு நடத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற அந்தந்தத் துறைகளில் வரம் உள்ள சபை மக்களே பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்
கண்காணிகள், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களுக்கான தகுதிகள் 1 தீமோத்தேயு 3:1- 13; தீத்து 1:5-9; அப்போஸ்தலர் 6:1-6 இவற்றில் பட்டியலிடப் பட்டுள்ளன; ஆகவே அவற்றை நாம் இங்கே விவாதிக்கப் போவதில்லை. அவை பற்றிய கருத்துக்களை அறிய மேற்குறிப்பிட்ட வேத பகுதிகளின் குறிப்புரைகளைக் காணவும். ஆனால் இங்கே தலைவர்களை நியமிப்பது எப்படி என்ற கருத்துப் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லியே ஆக வேண்டும்.
அப்போஸ்தலர்களின் காலத்தில், புதிய சபைகளின் மூப்பர்கள் அப்போஸ்தலர்களாலேயோ (அப்போஸ்தலர் 14:23) அல்லது தீமோத்தேயு, தீத்து போன்ற அவர்களது உடன் ஊழியர்களாலேயோ நியமிக்கப் பட்டனர். அப்போஸ்தலர் 6:1-6 இல் குறிப்பிடப் படும் உதவிக்காரர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டனர், பவுலும் பர்னபாவும் பரிசுத்த ஆவியானவரால் அவரது தீர்க்கதரிசிகள் மூலமாகத் தெரிந்தெடுக்கப் பட்டனர் (அப்போஸ்தலர் 13:1-3). ஒரு சந்தர்ப்பத்தில், துரோகியான யூதாஸின் இடம் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அறிய சபையானது சீட்டுக் குலுக்கிப் போட்டது (அப்போஸ்தலர் 1:23-26).
ஆதி சபையானது வெவ்வேறு பதவிகள் அல்லது பணிகளுக்காக மக்களை நியமிப்பது பற்றி உபவாசித்து ஜெபித்தது, அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது கரங்களை வைத்து ஜெபித்தது (அப்போஸ்தலர் 6:6; 13:1-3; 14:23; 1 தீமோத்தேயு 4:14; 5:22). பல சந்தர்ப்பங்களில் இப்படி குறிப்பிட்ட ஊழியத்திற்கென்று மக்களின் தலைகளில் கரம் வைத்து ஜெபித்த போது, தீர்க்கதரிசனங்களும் வெளிப் பட்டன (அப்போஸ்தலர் 13:1-3; 1 தீமோத்தேயு 1:18; 4:14),
அப்போஸ்தலர்களின் காலம் முடிந்த பிறகு, வெவ்வேறு சபைகள் வெவ்வேறு முறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தன. பேராயர்களால் (கண்காணி) ஆளப்படும் சபைகளில், ஒரு குறிப்பிட்ட நபர் சபைத் தலைவராக வேண்டுமெனில் அவர் அதற்கென்று விசேஷமாகப் படித்திருக்க வேண்டும். இவ்வகை சபையில் பேராயரே மற்ற புதிய தலைவர்களை, அவர்கள் தலைமீது கரங்களை வைத்து ஜெபிப்பதன் மூலம் பிரதிஷ்டை செய்வார்.
மூப்பர்கள் குழுவினால் ஆட்சி செய்யப் படும் சபைகள் பொதுவாக தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் சபை மக்களுக்கு ஓரளவு பங்கு கொடுக்கின்றன. ஆனால் தலைவர்களைப் பிரதிஷ்டை செய்வது மூப்பர்களே, இவர்களும் தலைகளில் கை வைத்து ஜெபிப்பதன் மூலமே பிரதிஷ்டை செய்கின்றனர். இவர்களும் இதற்கென்று விசேஷப் படிப்பு அவசியமெனக் கருதுகின்றனர்.
ஒரு தனிப் போதகரால் ஆளப்படும் சபைகள் பொதுவாக அவராலேயே நிறுவப் பட்டவையாக இருக்கும். பொதுவாக இவர் ஏற்கனவே அதற்கென்று விசேஷமாகப் படித்திருப்பார், வேறு எங்காவது பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருப்பார். இவ்வகைப் போதகர்கள் தாங்களாகவே தங்களது உதவிப் போதகர்களை, அல்லது சபையை விட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டால் தங்களுக்கு அடுத்துத் தலைவர்களாக வரவிருப்போரைத் தேர்ந்தெடுக்கின்றனர், ஆனால் பொதுவாக இவ்விஷயங்களில் சபையின் ஆலோசனையும் ஏற்கப் படுகிறது. முழு சபை மக்களும் ஆட்சி புரியும் சபைகளில் பிரசங்கிப்பதற்கும், போதிப்பதற்கும் என்று ஒரு தனிப் போதகர் இருப்பார்.
இவரை சபைப் பொதுக் கூட்டமானது வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும்; அவர் சரிவர ஊழியம் செய்யவில்லை என்றால் அதேவிதமான வாக்கெடுப்பின் மூலமாக அவர் அகற்றவும் படலாம். இவ்வகை சபைகளில் தலைவர்கள் என யாருமே இல்லாமலும் போகலாம், சபை மக்களால் தெரிந்தெடுக்கப் படும் சாதாரண சபை மக்களே சபையின் காரியங்களை விசாரித்து நடத்துவர்.
சுருக்கம்
எந்த வகையான சபை ஆட்சிமுறை மிகச் சிறந்தது என்பது பற்றி வேதம் திட்டவட்டமாக எதுவும் கூறுவதில்லை. அப்படி திட்டவட்டமாகக் கூறியிருந்தால் ஒரு வேளை இந்த நான்கு வகையான ஆட்சி முறைகள் தோன்றவே வாய்ப்பு இருந்திருக்காது.
ஒருவேளை மேற்கூறப்பட்ட நான்கு முறைகளுமே ஏற்புடையவை எனலாம், கிறிஸ்தவர்கள் தத்தம் சூழ்நிலைகளுக்கு எது மிகச் சிறந்ததாகப் படுகின்றதோ அவ்வகை ஆட்சிமுறையைப் பின்பற்றலாம். சபை ஆட்சிமுறை பற்றி நாம் என்ன நினைத்தாலும் சரி, வேறு விதமாக நினைக்கும் நமது சகோதர, சகோதரிகளை நியாயம் தீர்க்கவோ குறை சொல்லவோ கூடாது. சபைகள் தத்தமக்கே உரிய முறைகளில் ஆட்சி செய்யட்டும், அது எந்த முறையானாலும் அவற்றுக்கு இடையே ஐக்கியமும் நல்லுறவும் நீடித்து நிற்கட்டும்.
நாம் எந்த வகை தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் சில விஷயங்களை வேதம் திட்ட வட்டமாய்ப் போதிக்கிறது; சபை உறுப்பினர்கள் சபைத் தலைவர்களை மதிக்க வேண்டும் (1தெசலோனிக்கேயர் 5:12), அவர்களுக்குக் கீழடங்கவும் (1பேதுரு 5:5) அவர்களுக்குக் கீழ்ப்படியவும் (எபிரெயர் 13:17) வேண்டும். தலைவர்களின் உபதேசங்களைப் பரிசோதித்துப் பார்க்கலாம், நிதானித்து அறியலாம் (அப்போஸ்தலர் 17:11; 1 கொரிந்தியர் 14:29; 1 யோவான் 4:1; வெளிப்படுத்தல் 2:2), ஆனால் தலைவர்கள் பேரில் கொண்டு வரப் படும் குற்றச் சாட்டுகளை இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இல்லாத பட்சத்தில் ஏற்றுக் கொள்ளவே கூடாது (1தீமோத்தேயு 5:19). இறுதியாக, தேவைப் பட்டால் நமது தலைவர்களை நமது பணத்தினால் தாங்க வேண்டும் (மத்தேயு 10:9-13; 1 கொரிந்தியர் 9:3-11; 1 தீமோத்தேயு 5:17-18).