சிறு பிள்ளைகளும் தேவனுடைய இராஜ்யமும்

சிறு பிள்ளைகளும் தேவனுடைய இராஜ்யமும்

முக்கிய வசனங்கள்

ஆதியாகமம் 17:10-14 

உங்களில் ஆண்பிள்ளைகள் எல்லாம் எட்டாம் நாளிலே 

சங்கீதம் 22:9-10 

… என் தாயின் முலைப் பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணினீர்.

சங்கீதம் 51:5 

இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். 

மத்தேயு 18:2-5 

இப்படிப் பட்ட ஒரு பிள்ளையை என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு … 

மத்தேயு 21:15-16… 

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும் படி செய்தீர்

மாற்கு 10:14-16 

இயேசு …. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் .. தேவனுடைய இராஜ்யம் அப்படிப் பட்டவர்களுடையது … என்றார்.

லூக்கா 1:15 

(யோவான்) தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 

அப்போஸ்தலர் 2:38-39 

வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.

கேள்வி

இரட்சிக்கப் படுவதற்கு நாம் விசுவாசம் உள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெற வேண்டியது அவசியம் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது (மாற்கு 16:16). பாவ மன்னிப்பு உண்டாகும்படி, நாம் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டுமென கட்டளை பெறுகிறோம் (அப்போஸ்தலர் 2:38). நாம் இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும், வாயினால் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது (ரோமர் 10:9-10). இயேசுவை விசுவாசிப்பவன் நித்திய ஜீவனை அடைவான் என்று யோவான் 3:16 கூறுகின்றது.

chid1

கேள்வி இதுதான் : பேச அறியாத குழந்தைகள் அல்லது சிறுபிள்ளைகள் என்ன ஆவார்கள்? அவர்களால் மனந்திரும்பவோ விசுவாசிக்சுவோ, அல்லது வாயினால் அறிக்கையிடவோ முடியுமா? அப்படி முடியாத பட்சத்தில், அவர்கள் எப்படி இரட்சிப்பை பெற முடியும்? 

இதோடு இணைந்து வரும் அடுத்த கேள்வி :  ஒரு சிறு குழந்தை மரணம் அடைந்தால் எங்கே போகும்? மோட்சத்துக்கா, நரகத்துக்கா? 

இவை கடினமான கேள்விகள், ஏனெனில் வேதம் இவற்றுக்குத் திட்டவட்டமான பதில்களைத் தருவதில்லை. சிறுபிள்ளைகளும் தேவனுடைய இராஜ்யமும் பற்றி வேத வசனங்கள் அதிகமில்லை, அப்படி இருப்பவையும் நேரடியான பதில்கள் கொடுப்பவையாக இல்லை.

வேதாகமத்தில் சிறுபிள்ளைகள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:23; 5:12). தான் துர்க்குணத்தில் உருவானதாக மட்டுமல்ல, தனது தாய் தன்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்றும் சங்கீதக்காரன் சொல்கிறான் (சங்கீதம் 51:5). யோபுவும் இதே விதமாகப் பேசுகின்றான் (யோபு 25:4). ஆக, நாம் அனைவருமே, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளும் கூட பாவ சுபாவம் உள்ளவர்கள், தேவனுக்கு எதிரிடையானவர்கள் என்று வேதம் கூறுகிறது. பாவத்திலிருந்து இரட்சிக்கப் படவும் நீதிமானாக்கப் படவும் ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் தேவனுடைய கிருபை அவசியம்,

தேவ ஒத்தாசையினாலும் கிருபையினாலும், பிறந்த குழந்தைகளும் கூட தேவனில் நம்பிக்கை வைக்க முடியும் என வேதம் கூறுகின்றது (சங்கீதம் 22:9-10). இயேசு ஒரு சிறுபிள்ளையை அழைத்துத் தமக்கு முன்பாக நிறுத்தி “என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிற இந்தச் சிறியரில் ஒருவன் . பற்றிப் பேசினார் (மத்தேயு 18:6). இயேசு சங்கீதம் 8:2ஐயும் மேற்கோள் காட்டி, “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்றார் (மத்தேயு 21:16). யோவான்ஸ்நானன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப் பட்டிருப்பான் என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டிருந்தது (லூக்கா 15, 41-44). எனவே, சில குழந்தைகளாவது தேவனில் விசுவாசம் வைக்கக் கூடியவர்களாக இருப்பதாகவே தோன்றுகிறது.

chid1

இயேசு சிறுபிள்ளைகள் தம்மிடத்தில் வருவதைத் தடுக்கக் கூடாதென தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார், அவர் சிறுபிள்ளைகளுக்காக ஜெபித்து அவர்களை ஆசீர்வதித்தார். (மாற்கு 10:13-16), இதில் சிறு குழந்தைகளும் அடங்குவர் (லூக்கா 18:15). தேவனுடைய இராஜ்யம் அப்படிப் பட்டவர்களுடையது என்றும் அவர் சொன்னார் (மாற்கு 10:14). தேவன் சிறுபிள்ளைகளைப் பட்சமாய்க் கண்ணோக்குகிறார் அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரம பிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் (மத்தேயு 18:10). ஆனால் தேவதாதர்கள் எல்லாச் சிறுபிள்ளைகளுக்கும் இருக்கிறார்களா அல்லது இயேசுவில் “விசுவாசமாய்” இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இருக்கிறார்களா என்பது இங்கே திட்டமாக எழுதப்படவில்லை (மத்தேயு 18:2-6; மாற்கு 9:42).

பழைய ஏற்பாட்டிலே, தேவனுடைய குடும்பத்திற்குள் சேர்த்துக் கொள்ளப் படும் படியாக யூத ஆண்குழந்தைகள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப் பட வேண்டுமென்று அவர் கட்டளை கொடுத்திருந்தார். இது குழந்தை பிறந்த எட்டாம் நாளிலே செய்யப்பட வேண்டும், இதுவே தேவனுக்கும் யூதர்களுக்கும் நடுவேயுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாகும் (ஆதியாகமம் 17:10-13). ஓர் ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப் படாதிருந்தால் தேவனுடன் உள்ள உடன்படிக்கையை மீறினதால் அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் (ஆதியாகமம் 17:14), இங்கே பெண் குழந்தைகள் பற்றியோ, உடன்படிக்கையைப் பொறுத்த மட்டில் அவர்கள் நிலைமை பற்றியோ எதுவும் குறிப்பிடப் படவில்லை.

நாம் பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறோம் எனப் புதிய ஏற்பாடு தெளிவாகக் கூறுகின்றது. தேவனுடைய குடும்பத்தில் அங்கமாவதற்கு சரீரப் பிரகாரமான விருத்தசேதனம் அவசியமில்லை. நாம் யூதர்களின் சட்ட திட்டங்களால் அல்ல, விசுவாசத்தினாலே தேவனுடைய பிள்ளைகளாக்கப் படுகிறோம். நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராய் இருக்கிறீர்களே (கலாத்தியர் 3:26).

chid3

திருச்சபையில் சிறுபிள்ளைகள்

சிறுபிள்ளைகளும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளும்’ கூட தேவ வல்லமையினாலும் கிருபையினாலும் ஏதோ ஒரு விதமான விசுவாசம் கொள்ளக் கூடியவர்களாகவும், தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர் (சங்கீதம் 22:9-10; லூக்கா 18:15-16). ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா அல்லது ஒரு சிலருக்கு மட்டுமா? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? திருச்சபை வரலாறு நெடுகிலும் வேத பண்டிதர்கள் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட விடைகளை அளித்துள்ளனர்.

அநேகக் கிறிஸ்தவர்கள் பிள்ளைகளை தேவனுடைய குடும்பத்திற்குள் கொண்டு வருவதற்கு விருத்தசேதனத்திற்குப் பதிலாக தண்ணீர் ஞானஸ்நானம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக நம்புகின்றனர். தண்ணீர் ஞானஸ்நானமே “கிறிஸ்துவைப் பற்றும் விருத்தசேதனம்’ (கொலோசெயர் 2:11-13) என்றும், அதன் மூலமாகவே, விசுவாசத்தினாலே நமது மாம்சத்துக்குரிய பாவ சரீரம் களையப் பட்டு, நாம் தேவனுடைய குடும்பத்தின் அங்கங்களாகிறோம் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இயேசு சிறு பிள்ளைகள் தம்மிடத்தில் வருகிறதற்குத் தடை பண்ணக் கூடாது என்று கட்டளையிட்டார் (மாற்கு 10:14), விசுவாசம் உள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான் என்று வாக்கும் அருளினார் (மாற்கு 16:16; பொதுவான தலைப்பு : தண்ணீர் ஞானஸ்நானம் – பார்க்க). இந்தக் கிறிஸ்தவர்களில் சிலர் குழந்தைகள் இயேசுவில் விசுவாசம் வைக்க முடியும் என நம்புகின்றனர். மற்றவர்களோ, குழந்தைக்காக அதன் பெற்றோர் விசுவாசிக்க முடியும், அப்படிப் பட்ட பெற்றோரின் விசுவாசத்தை தேவன் ஏற்றுக் கொள்கிறார் என்று நம்புகின்றனர் (1கொரிந்தியர் 7:14). பின்னர், குழந்தை தக்க வயதை அடையும் போது இயேசுவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதைத் தானாகத் தீர்மானிப்பான்.

வேறுபல கிறிஸ்தவர்கள் இரண்டாவதான ஒரு கண்ணோட்டம் உடையவர்கள். இக்கருத்தின் படி, தேவன் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லாரையும் அல்ல, ஒரு சிலரை மாத்திரமே அழைக்கிறார் (யோவான் 15:16,19; ரோமர் 9:18; பொதுவான தலைப்பு: இரட்சிப்பு – தேவனின் தெரிந்தெடுப்பா, மனிதனின் தெரிந்தெடுப்பா? – பார்க்க). தேவன் சில குழந்தைகளை இரட்சிப்புக்கென்று தெரிந்தெடுக்கிறார், சில குழந்தைகளைத் தெரிந்தெடுப்பதில்லை. அப்படி தேவனால் தெரிந்தெடுக்கப் பட்ட குழந்தைகள் மரணம் அடைந்தால் மோட்சத்திற்குப் போவர்; மற்ற குழந்தைகள் மரித்தால் மோட்சம் போக மாட்டார்கள்.

இன்னும் சில கிறிஸ்தவர்கள் மூன்றாவதான ஒரு கருத்து கொண்டவர்கள். இவர்கள், தேவன் எல்லாருக்கும் (சிறியோர், பெரியோர் அனைவருக்கும்) இரட்சிப்பை வழங்க ஆயத்தமாய் இருக்கிறார். ஆனால் எல்லாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பலர் தேவனுக்கு எதிர்த்து நிற்பார்கள். இது குழந்தைகளுக்கும் பொருந்தும் என்கின்றனர். இந்தக் கிறிஸ்தவர்கள் குழந்தைகளின் மனங்கள் இன்னும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தங்கள் ஆவியினாலோ, இருதயத்தினாலோ விசுவாசிக்க முடியும் என நம்புகின்றனர் (சங்கீதம் 22:9-10; மத்தேயு 18:5-6; லூக்கா 1:15). ஆனாலும் எல்லாக் குழந்தைகளும் விசுவாசிக்க மாட்டார்கள் என்றும் இவர்கள் கருதுகின்றனர். பெரியவர்களைப் போலவே, சில குழந்தைகளும் தேவனை எதிர்த்து நிற்கின்றனர்.

விசுவாசம் உள்ள குழந்தைகள் மட்டுமே, மரணம் அடைந்தால் மோட்சம் செல்வார்கள். இறுதியாக குழந்தைகளுக்குப் பாவசுபாவம் இருந்த போதிலும் அவர்கள் பாவம் செய்வதில்லை எனச் சில கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். குழந்தைகள் “அறியாப் பருவத்தினர்”. ஆகவே எந்தக் குழந்தையும் மரித்தால் மோட்சம் போகும் என இக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

 சுருக்கம்

இந்த விஷயத்தைக் குறித்து நமது கருத்து எதுவாக இருப்பினும், பெற்றோர்களாகிய நமது கடமை மிகத் தெளிவானது. ஞானஸ்நானம் என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான காரியம். நமது குழந்தைகளை நாம் ஞானஸ்நானம் கொடுத்தாலும் பிரதிஷ்டை செய்தாலும் அவர்களை தேவனுடைய கரங்களுக்குள் ஒப்புவித்து அவர்களின் இரட்சிப்புக்காக அவரையே நம்ப வேண்டியது அவசியம். நாம் அவர்களுக்கு தேவனைப் பற்றியும் அவருடைய வசனத்தைப் பற்றியும் போதிக்கவும் (உபாகமம் 4:9-10;6:6-7; சங்கீதம் 78:5-5) அன்புடன் கண்டித்து வழிநடத்தவும் வேண்டும் (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21). வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது (அப்போஸ்தலர் 2:39),

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *