கிறிஸ்தவத் திருமணம்
முக்கிய வசனங்கள்
- ஆதியாகமம் 1:26-28; 2:23-24 வீழ்ச்சிக்கு முன் ஆணும் பெண்ணும். உன்னதப் பாட்டு
- அதிகாரங்கள் 1-8 இலட்சிய மண வாழ்வில் காதல்.
- மத்தேயு 5:31-32; 19:3-9 திருமணம், மணமுறிவு பற்றி இயேசுவின் போதனை.
- 1 கொரிந்தியர் 7:1-17 திருமணம், மணமுறிவு பற்றி பவுலின் போதனை.
- எபேசியர் 5:21-33 திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருத்தல்,
- 1 பேதுரு 3:1-7 திருமண வாழ்வில் ஒருவரையொருவர் கனம் பண்ணுதலும் மதித்தலும்.
திருமணத்திற்கான தேவதிட்டம்
தேவன் நம்மை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்; ஆண், பெண் இருவருமே தேவ சாயலில் உருவாக்கப் பட்டனர் (ஆதியாகமம் 1:26). தேவன் தாமே மூன்று காரணங்களுக்காகத் திருமணத்தை ஏற்படுத்தினார். முதலாவது காரணம், துணையாயிருக்க. மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன் அவனுக்கு ஏற்ற துணை ஒன்றை உருவாக்கினார் (ஆதியாகமம் 2:18). தேவன் திருமணத்தை ஏற்படுத்த இரண்டாவது காரணம், பிள்ளைகள் பெறுவதன் மூலம் குடும்பங்கள் தழைத்தோங்க. தேவன் ஆணையும் பெண்ணையும் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகுங்கள் என்றார் (ஆதியாகமம் 1:28). திருமணத்திற்கான மூன்றாவது காரணம் பாலுறவு இன்பம், இதின் நிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாய் இருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாய் இருந்தும் வெட்கப் படாதிருந்தார்கள் (ஆதியாகமம் 2:24-25; நீதிமொழிகள் 5:5-21; உன்னதப் பாட்டு அதிகாரங்கள் 1-8). ஆதாமும் (முதல் மனிதன்) ஏவாளும் (முதல் மனுஷி) இணையாக முழு உலகையும் ஆண்டனர்.
ஆனால் பாவத்தின் காரணமாக ஆதாமும் ஏவாளும் தேவனுடைய அனாதி திட்டத்திலிருந்து விழுந்து போயினர். அவர்களது பாவத்தின் விளைவாக அவர்களுக்கிடையே வெட்கமும் பேதங்களும் (ஆதியாகமம் 3:7), குற்றச் சாட்டும் (ஆதியாகமம் 3:12), மனைவி மீது கணவனுக்கு ஆளுகையும் (ஆதியாகமம் 3:16) ஏற்பட்டன. அதோடு கூட, அவர்களது ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருந்த இயற்கையானது இப்பொழுது அவர்களுக்குச் சத்துருவாக மாறிப் போனது (ஆதியாகமம் 3:17-19). மற்ற தீமைகள் தோன்ற வெகு நாட்களாகவில்லை, அவற்றுள் சில: கொலை (ஆதியாகமம் 4:8), பலதார மணம் (ஆதியாகமம் 4:19) மற்றும் பழிக்குப் பழி (ஆதியாகமம் 4:23). மணமுறிவினால் விளையும் தீமைகளைக் கட்டுப் படுத்தும் நோக்குடனே மோசேயின் நியாயப் பிரமாணத்தில் கட்டளைகள் கொடுக்கப் பட்டன (யாத்திராகமம் 21:10; உபாகமம் 21:15-17; 24:1-4), எனினும் பலதார மணமோ மணமுறிவோ தேவனுக்குப் பிரியமில்லை. ஆதிமுதல் மனுக்குலத்துக்கான அவரது இலட்சியத் திட்டம் ஓர் ஆண் ஒரு பெண்ணை மணந்து, தன் ஆயுள் பரியந்தம் அவளோடு மட்டுமே வாழ்வது தான் (மத்தேயு 19:4-9).
கிறிஸ்தவத் திருமணம்
கிறிஸ்தவர்களுக்கு, திருமணம் என்பது சிறப்பான முக்கியத்துவம் கொண்டது, காரணம் அது கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் இடையிலுள்ள ஆவிக்குரிய உறவோடு சம்பந்தப் பட்டது (எபேசியர் 5:32). இயேசு இப்பூவுலகில் சுற்றித் திரிந்த நாட்களில் தமது முதலாவது அற்புதத்தை ஒரு திருமண வீட்டிலே செய்து, அத்திருமணத்தை ஆசீர்வதித்தார் (யோவான் 2:1-11). தேவனுடைய இராஜ்யத்தின் வருகையையும் அறிவித்தார். ஆகவே கணவன் மனைவி இடையே நாம் ஒரு புதிய உறவை எதிர்பார்க்க வேண்டும். யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை, அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை, ஆண் என்றும் பெண் என்றும் இல்லை; நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28) என்கிறார் பவுல்.
கணவனும் மனைவியும் தங்கள் திருமண உறவில் சமமானவர்கள் என்பது இதன் பொருளா? பாலுறவு என்று வரும் போது கணவர்களும் மனைவிகளும் சரிசமமே என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இருவருமே ஒருவருக்கொருவர் பாலுறவுக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பவுல் திட்ட வட்டமாகச் சொல்லி விட்டார் (1கொரிந்தியர் 7:3). மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி என்று எழுதுகிறார் (1கொரிந்தியர் 7:4). பவுலின் காலத்திய மக்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல; ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து பவுலின் காலம் வரை, மனைவியானவள் தனது புருஷனின் உடைமை அல்லது சொத்து என்றே உலகம் கருதி வந்தது. ஆனால் பவுல் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதே வசனத்தில் தொடர்ந்து வேறொன்றையும் சொல்கிறார் : அப்படியே, புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதன் அதிகாரி. பவுலின் முதல்-நூற்றாண்டு வாசகர்களுக்கு இப்போதனை முற்றிலும் புதியது. மேலும், உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் நேரம் ஒதுக்கும் படியாக இருவரும் சில காலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பாலுறவில் திருப்திப் படுத்த மறுக்கக் கூடாது என்றும் பவுல் கற்பித்தார் (1கொரிந்தியர் 7:5). மனைவி ஒரு “தோட்டம்”. கணவன் அந்தத் தோட்டத்தில் தனது வித்தை விதைப்பவன் என்பதாகச் சில மதங்கள் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவத் திருமணத்திலோ மனைவி ஏதோ ஒரு சொத்தோ, உடைமையோ அல்ல, அந்த உறவில் சமமாகப் பங்குபெறும் ஒரு பங்காளி, கிறிஸ்தவத் திருமணம் ஒரு பங்காளித்துவம் ஆகும்.
கணவனும் மனைவியும் தங்கள் உறவின் பிற அம்சங்களிலும் இணையானவர்களா?
இந்தக் கேள்விகளுக்குக் கிறிஸ்தவர்கள் வேறுபட்ட பதில்களைத் தருகின்றனர். ஒரு கிறிஸ்தவத் திருமணத்தில் கணவன் மற்றும் மனைவியின் பங்குகள் பற்றி இரண்டு முக்கியக் கருத்துக்கள் நிலவுகின்றன. முதலாவது கருத்து பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கொண்டிருப்பது, மனைவியானவள் கணவனின் தலைமைக்குக் கீழ்ப்பட்டவள், அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டியவள் என்பதாகும். இவர்கள் ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாய் இருக்கிறார் என்றும், ஸ்திர்க்குப் புருஷன் தலையாய் இருக்கிறான் என்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாய் இருக்கிறார் என்றும் பவுல் எழுதுவதைச் சுட்டிக் காட்டுகின்றனர் (1 கொரிந்தியர் 11:3). தொடர்ந்து, ஸ்திரீ புருவனிலிருந்து தோன்றியவள், புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப் பட்டவன் என்றும் கூறிவிட்டு (1 கொரிந்தியர் 11:8- 9), ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீ இல்லாமல் புருஷனும் இல்லை, புருஷன் இல்லாமல் ஸ்திரீயும் இல்லை என்று சொல்லி முடிக்கிறார் (1 கொரிந்தியர் 1:11-12). இந்தக் கிறிஸ்தவர்கள் “தலை” என்ற சொல் கணவன் மனைவியை “ஆள அல்லது “வழி நடத்த” வேண்டும், பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் எனவும் (எபேசியர் 5:25), போஷிக்கவும் காப்பாற்றவும் வேண்டும் எனவும் (எபேசியர் 5:29), மொத்தத்தில் மனைவிக்கு அவன் பொறுப்பாளி எனவும் பொருள்படுவதாக நம்புகின்றனர். பிள்ளைகளைக் குறித்த பொறுப்பு தகப்பன்மாருக்கே கொடுக்கப் பட்டிருப்பதை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் (எபேசியர் 6:4; 1 தீமோத்தேயு 3:4-5). மனைவிகள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல தங்கள் சொந்தப் புருஷருக்கும் எந்தக் காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும், ஏனெனில் கிறிஸ்து சபைக்குத் தலையாய் இருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான் (எபேசியர் 5:22-24) என்ற பவுலின் கட்டளைகளையும் இக்கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதே நேரத்தில், கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்து தம்மைத் தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தது போல கணவர்களும் மனைவிகளில் அன்பு கூர வேண்டும் என்று கட்டளையிடப் படுகிறது (எபேசியர் 5:25); அவர்கள் தங்கள் சொந்த சரீரங்களைப் போல தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும் (எபேசியர் 5:28). அப்போஸ்தலனாகிய பேதுருவும் மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டளை இட்டதுடன், அதற்கு உதாரணமாக சாராள் ஆபிராமுக்குக் கீழ்ப்படிந்திருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார் (1 பேதுரு 3:1-5).
ஆனால் திருமணத்தைப் பொறுத்தவரை கீழ்ப்படிதல் என்பது ஒருவழிப் பாதையல்ல. எபேசியர் வேதபகுதி எல்லா விசுவாசிகளுக்கும் உரிய கட்டளையுடன் ஆரம்பிக்கிறது : தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:21). கிறிஸ்து தேவனுக்குச் சமமாய் இருந்த போதிலும், பிதாவுக்குக் கீழ்ப்படிந்தவரானார் (பிலிப்பியர் 2:6-8). அதேபோல, கணவனுடைய “தலைமை” என்பது சமமானவர்களுக்குள் தலைமை என இக்கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். மனிதர்கள் என்ற முறையில் கணவர்களும் மனைவிகளும் சமமானவர்களே எனினும் இருவரும் ஆற்ற வேண்டிய பங்குகள் வெவ்வேறானவை, எனவே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவதும் வேறுபடுகின்றது. நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலவே, மனைவியும் கணவனை இல்லத் தலைவனாக, இல்லத்தரசனாக ஏற்று அவனுக்குக் கீழ்ப்படிகிறாள்; கிறிஸ்து சபைக்காகச் செய்தது போலவே கணவனும் தன்னை வெறுத்து, தன் மனைவிக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவளுக்குக் கீழ்ப்படிகிறான்.
கிறிஸ்தவத் திருமணத்தில் கணவன் மனைவியின் பங்குகள் குறித்த இரண்டாவது கருத்து, கணவன் மனைவியின் பங்குகளில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது என்பதாகும். இந்தக் கிறிஸ்தவர்கள், பிள்ளைகளும் வேலைக்காரர்களும் “கீழ்ப்படிய” (obey) வேண்டுமென்று கட்டளை பெற்றாலும் (எபேசியர் 6:1,5) மனைவிகள் புருஷர்களுக்கு “அடங்கியிருக்க” (submit வேண்டும் என்றே கட்டளையிடப் பட்டிருப்பதாகக் (எபேசியர் 5:21) கூறுகின்றனர். [தமிழ் வேதாகமம் இரண்டு பதங்களையும் ஒன்றுபோல் “கீழ்ப்படிந்திருங்கள்” என்றே மொழி பெயர்த்துள்ளது.] எனவே கணவர்களும் மனைவிகளுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. பேதுரு, தனது காலத்திய முறையையே மாற்றி மனைவிகள் கணவர்களைக் கனம் பண்ண வேண்டியதற்குப் பதிலாகக் கணவர்கள் மனைவிகளைக் கனம் பண்ண வேண்டுமெனக் கட்டளையிடுகிறார் (1 பேதுரு 3:7); “தலை” என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ள கிரேக்கப் பதம் “ஆளுகிறவன்” அல்லது “தலைமை’ என்பதைக் குறிக்கவில்லை, புதிய ஏற்பாட்டில் அச்சொல் தலைமை என்ற பொருளில் வருவதேயில்லை, அது “ஜீவனின் ஆதாரம்” அல்லது “ஆதிமூலம்” என்பதையே குறிக்கும் என்பதாகக் கிறிஸ்தவப் பண்டிதர்கள் பலர் கூறுகின்றனர் (எபேசியர் 1:22; 4:15; கொலோசெயர் 1:18; 2:10,19). எனவே, இக்கிறிஸ்தவர்களின் கருத்துப் படி, 1 கொரிந்தியர் 11:3 இல் பவுல் கூறுவதன் பொருள், ஒவ்வொரு மனிதனின் “ஜீவாதாரமும் கிறிஸ்துவே, மனிதனிலிருந்து மனுஷி வந்தாள். தேவனிலிருந்து கிறிஸ்து வந்தார் என்பதாகும். இந்தக் கருத்து 1 கொரிந்தியர் 11:8 11:12 உடன் மிக நன்றாகப் பொருந்திப் போகிறது. இந்தக் கிறிஸ்தவர்கள், ஆதியிலே தேவன் கணவனையும் மனைவியையும் சரிசமமாக இருக்க வேண்டுமென்றே படைத்தார் என நம்புகின்றனர். ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் செய்த பாவம், பெண்ணின் மேல் சாபத்தை வருவித்த போதிலும் (ஆதியாகமம் 3:1-6, 16), கிறிஸ்து அந்தச் சாபத்தை முறித்துப் போட்டார். எனவே கிறிஸ்தவத் திருமணம் அந்த உண்மையைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என்றால் (ஆதியாகமம் 2:24), அவர்கள் “ஆளுபவன்”, “கீழ்ப்படிபவள் ” என்று இருவராகப் பிரிக்கப்படக் கூடாது.
இந்த இரண்டில் எந்தக் கருத்தை நம்புபவர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவி இருவருமே ஒருவர் மற்றவருக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகின்றது. உண்மையில், இயேசுவும் “புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்” (மாற்கு 10:7) என்ற பழைய ஏற்பாட்டுக் கூற்றை மேற்கோள் காட்டி, அதை ஆதரித்துப் பேசினார். “விட்டு” என்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பொருளல்ல, ஆனால் கணவன் மனோரீதியில் தன் பெற்றோரை “விட்டு விட” வேண்டும். ஒரு மனிதன் தன் பெற்றோரை விட, தனது பிள்ளைகளை விட அதிகமாக தன் மனைவிக்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும்! திருமணத்தில் கணவனும் மனைவியும் இருவராயிராமல் ஒரே மாம்சமாகி விடுகிறார்கள் (மாற்கு 10:8), சில கலாச்சாரங்களில், வாழ்க்கைத் துணை என்பவர் “மறுபாதி” எனவும் அழைக்கப் படுவதுண்டு.
ஆனால் வேறெந்த மனுஷனையும், மனுஷியையும் விட தேவனே முதன்மையாக வைக்கப் பட வேண்டும். கணவனும் மனைவியும் எந்த அளவிற்கு தேவனண்டை நெருங்கிச் சேர்கிறார்களோ அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் அதிக நெருக்கமாவார்கள். பிரசங்கி 4:9-12, ஒருவராய் இருப்பதை விட இருவராய் இருப்பது நலம், அதிலும் முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது என்று கூறுகிறது, ஒரு கிறிஸ்தவக் கணவனும், மனைவியும், மூன்றாவது இழையாக தேவனும் சேர்ந்த சேர்க்கை வலிமை மிக்கது.
மணமுறிவும் மறுமணமும்
திருமண வைபவத்தின் போது கிறிஸ்தவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் தேவனுக்கு முன்பாகவும், சபைக்கு முன்பாகவும் கொடுக்கப் படுகின்றன. திருமணம் என்பது ஆயுள் பரியந்த அர்ப்பணம். தேவன் விவாகரத்தை வெறுக்கிறார் என வேதம் கூறுகின்றது (மல்கியா 2:14-16). பழைய ஏற்பாட்டுக் காலங்களில் விவாகரத்து மலிந்திருந்தது. தகுந்த காரணமின்றி “சுலபமாக விவாகரத்து செய்வதற்கு ஒரு தடை கொண்டுவர தேவன் விரும்பினார். கணவனால் தள்ளி விடப் பட்ட மனைவிக்குச் சட்டப் பூர்வமான பாதுகாப்பு ஏற்படுத்தவும் எண்ணினார். மோசேயின் நியாயப் பிரமாணமானது ஒரு கணவன் தன் மனைவியை விவகாரத்து செய்யத் தகுந்த காரணம், அதாவது விபசாரம் என்ற காரணம் இருக்க வேண்டும், அப்படித் தள்ளி விடுகையில் அவன் தள்ளுதலின் சீட்டு என்ற ஒன்றை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கோரியது (உபாகமம் 24:1-4). இயேசுவின் காலம் வருவதற்குள், ஒருவன் தன் மனைவியை எந்தக் காரணத்திற்காக வேண்டுமானாலும் தள்ளி விடலாம் என்று சில பரிசேயர்கள் போதித்து வந்தனர் (மத்தேயு 19:3). தேவன் ஏற்படுத்தி வைத்த திருமண உறவை யார் முறித்தாலும் அது பாவமாகும் என்றார் இயேசு. “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன் (மத்தேயு 19:6). தேவன் ஒருபோதுமே விவாகரத்தை விரும்பவில்லை, ஆனால் யூதர்களின் இருதய கடினத்தின் நிமித்தம் மோசே அதை அனுமதித்தார் என்று இயேசு சொன்னார் (மத்தேயு 19:8). திருமணத்தை முறிப்பது தவறு என்பதை அனைத்துக் கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர்.
ஆனால் இயேசு வேறொன்றும் சொன்னார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனம் செய்ததின் நிமித்தமே அன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் செய்கிறவனாய் இருப்பான் ” (மத்தேயு 19:9).வேறொரு இடத்தில், “வேசித்தன முகாந்தரத்தினால் ஒழிய தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன், அவளை விபசாரம் செய்யப் பண்ணுகிறவனாய் இருப்பான்; அப்படித் தள்ளி விடப் பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரம் செய்கிறவனாய் இருப்பான்” (மத்தேயு 5:32) என்றும் சொன்னார். இவற்றில் இயேசு கூறுவதன் பொருள் என்ன? இதைப் பற்றிக் கிறிஸ்தவர்களிடையே மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
முதலாவது, விவாகரத்து ஒருபோதும் அனுமதிக்கப் பட முடியாது, ஆகையால் முதல் கணவன் அல்லது மனைவி உயிரோடிருக்கும் போது மறுமணம் செய்வது தவறு என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர் (ரோமர் 7:2-3). மாற்கு 10:11-12 இல் இயேசுவின் வார்த்தைகளில் வேசித்தனம் செய்ததின் நிமித்தமே அன்றி என்ற சொற்றொடர் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இக்கிறிஸ்தவர்கள், அப்படி முதல் மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே மறுமணம் செய்பவர்கள் விபசாரம் செய்கிறார்கள், காரணம் தேவனுடைய பார்வையில் அவர்களது முதல் மனைவி / கணவனுடனேயே மணவாழ்வு நடத்துகிறார்கள் என்கின்றனர். ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வதன் மூலம் அவளை விபசாரம் செய்யப் பண்ணுகிறான் அல்லது மறுமணம் செய்யத் தூண்டுகிறான், அதுவும் விபசாரத்துக்குச் சமமே என்று நம்புகின்றனர் (மத்தேயு 5:32). இக்கிறிஸ்தவர்கள், புருஷன் உயிரோடிருக்கையில் வேறொரு புருஷனை விவாகம் பண்ணுகிற ஸ்திரீ விபசாரி என்னப் படுவாள் என்று ரோமர் 7:3 இல் பவுல் எழுதுவதையும் கட்டிக் காட்டுகின்றனர். தங்கள் கணவன் அல்லது மனைவியை விவாகரத்து செய்பவர்கள் ஒன்று மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும், அல்லது தங்கள் கணவன் / மனைவியுடன் ஒப்புரவாக வேண்டும் என்றும் பவுல் கூறுகின்றார் (1கொரிந்தியர் 7:1). எனவே இந்த வியாக்கியானத்தின் படி, விவாகரத்தான ஒரு நபர், தனது முதல் துணை உயிரோடிருக்கும் பரியந்தம் மறுமணம் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. வேறு பல கிறிஸ்தவர்கள் இரண்டாவதான ஒரு கண்ணோட்டம் உடையவர்கள் : அதாவது,
திருமண உறவு ஏற்கனவே முறிந்து விட்ட பட்சத்தில் சில சூழ்நிலைகளில் மணமுறிவை அனுமதிக்கலாம். உதாரணமாக, ஒருவரின் வாழ்க்கைத் துணை ஏற்கனவே விபசாரம் செய்து விட்ட பிறகு, விவாகரத்து அவரை விபசாரம் செய்யப் பண்ணுவதில்லை. சில கிறிஸ்தவர்கள் கணவனால் கைவிடப் படுதல் (முறையான விவாகரத்து இன்றி மனைவியைக் கைவிட்டு ஓடிப் போகும் கணவன்), அல்லது வழக்கத்திற்கு மாறான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் (மனைவியை அடித்துக் கொடுமைப் படுத்துதல்) இவையும் விபசாரத்திற்குச் சமமே என்று கருதுகின்றனர். இவர்களில் சிலர், அவிசுவாசியான வாழ்க்கைத் துணை விசுவாசியான துணையை விட்டு பிரிந்து போக விரும்பினால், பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி அவரைப் பிரிந்து செல்ல அனுமதிப்பது சரியே என்று நம்புகின்றனர் (1 கொரிந்தியர் 7:15). மறுமணம் என்று வரும்போது, இக்கிறிஸ்தவர்களில் சிலர் தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்யும் ஒருவர், அதற்குக் காரணம் எதுவாயிருந்தாலும் சரியே, முதல் துணை உயிரோடு இருக்கும் வரை மறுமணம் செய்யவே கூடாது என்று எண்ணுகின்றனர் (1 கொரிந்தியர் 7:11). வேறு சிலரோ விவாகரத்து செய்யப் பட்டவர் (அதாவது, பாதிக்கப் பட்ட அப்பாவியான துணை) உடனடியாக மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இவர்கள், இப்படிப் பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப் பட்டவர்களல்ல என்ற பவுலின் வார்த்தைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர் (1 கொரிந்தியர் 7:15).
இன்னும் சில கிறிஸ்தவர்கள் மூன்றாவதாக ஒரு கருத்தைக் கொண்டுள்ளனர்: அதாவது, எந்தக் காரணம் கொண்டும் திருமண உறவு முறிக்கப் படுவது தவறு, ஆனால் முதல் மணமுறிவுக்குக் காரணம் எதுவாக இருப்பினும் மறுமணம் அனுமதிக்கப் படலாம். மோசேயின் நியாயப் பிரமாணத்தின் படி சரியோ, தவறோ ஒருவன் வேறொருத்தியைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, நியாயமான காரணமின்றி முதல் மனைவியை விவாகரத்து செய்தால் அவன் விபசாரம் செய்கிறவனாய் இருப்பான் என்றே இயேசு சொன்னதாக இவர்கள் நம்புகின்றனர் (மத்தேயு 19:9) ஆனால் மத்தேயு 5:32 இல் இயேசு, “தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன் அவளை விபசாரம் செய்யப் பண்ணுகிறவனாய் இருப்பான் ” என்று சொன்ன போது விவாகரத்து செய்யப் பட்டதாலேயே ஒரு மனைவி விபசாரியாகி விடுகிறாள் என்று சொல்லியிருக்க முடியாது என்று இக்கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். விவாகரத்து செய்யப் படும் ஒவ்வொரு அப்பாவிப் பெண்ணும் (அதாவது, அவள் விபசாரம் செய்யாத போதிலும் தள்ளிவிடப் படுபவள்) பின்னர் மறுமணம் செய்து கொள்வாள் என்றோ அல்லது மறுமணம் செய்யாமல் உண்மையாகவே விபசாரி ஆகிவிடுவாள் என்றோ இயேசு சொல்லியிருக்க முடியாது. சில பெண்கள் மீண்டும் மணம் செய்யாமலே போகலாம், விபசாரமும் செய்ய மாட்டார்கள். இயேசு சொன்னது என்னவென்றால், விபசாரம் செய்யாத தன் மனைவியை ஒருவன் விவாகரத்து செய்வானானால் பார்ப்பவர்கள் கண்ணில் அவள் ஒரு விபசாரி “போலவே தென்படுவாள்; மற்றவர்கள் அவள் தன் கணவனுக்குத் “துரோகம்” செய்ததாலேயே விவாகரத்து செய்யப் பட்டாள் என்று யோசிப்பார்கள். அவள் மறுமணம் செய்தால் அவளது இரண்டாவது கணவனும் விபசாரக்காரன் “போலவே தென்படுவான்”. இந்த வியாக்கியானம் ரோமர் 7:3இல் பவுல் கூறும் வார்த்தைகளுக்கு மிகப் பொருத்தமானது. அங்கே பவுல், தனது முதல் கணவன் உயிரோடிருக்கையில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் பெண் விபசாரி என்று சொல்லாமல் விபசாரி என்னப்படுவாள் என்றே சொல்கிறார்.
இந்த மூன்றாம் வகையான கருத்து படைத்த கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் தங்கள் அவிசுவாசிகளான வாழ்க்கைத் துணைகளை விவாகரத்து செய்யக் கூடாது. அவிசுவாசிகளான துணைகள் பிரிந்து போக விரும்பினால் மட்டுமே அவர்கள் போகும்படி அனுமதிக்கலாம் என்று கருதுகின்றனர் (1 கொரிந்தியர் 7:10-16). 1 கொரிந்தியர் 7:8-9 இல் வரும் விவாகம் இல்லாதவர்கள், கைம்பெண்கள் என்ற பதங்களும் 1 கொரிந்தியர் 7:25 இல் வரும் கன்னிகைகள் என்ற பதமும் வெவ்வேறாளவை என்பதால், பவுல் வசனங்கள் 8-9 இல் ” ஏற்கனவே மணமாகி”. விவாகரத்து பெற்ற அல்லது துணைகளை இழந்த மக்களைப் பற்றி பேசுகிறார் என்று நம்புகின்றனர். அது உண்மையாய் இருப்பின், தங்கள் பாலுறவு இச்சைகளைக் கட்டுப் படுத்த இயலாதோர் மறுமணம் செய்ய அனுமதி கொடுக்கிறார். ஆகவே, இந்த விளக்கத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் முந்திய (தவறான) விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதையெல்லாம் ஆராய்வதில்லை. முந்திய திருமணத்தின் முறிவுக்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதற்காக அவர்கள் மனஸ்தாபப் பட்டு, மனந்திரும்பும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் மணம் செய்து கொள்ளலாம் என்கின்றனர்.
மணமுறிவு மற்றும் மறுமணம் என்ற விஷயம் மிகச் சிக்கலானது. இப்பொருள் பற்றி ஒரு முடிவுக்கு வரும்முன் சம்பந்தப் பட்ட வசனங்களை ஜெயத்துடனும் கருத்துடனும் படித்தறிய வேண்டியது அவசியம். விவாகரத்தோ மறுமணமோ செய்வதற்கு முன் தனது போதகர் அல்லது சபை மூப்பர்களோடு பேசி ஆலோசனை பெற வேண்டியது அதிக அவசியம். இந்த விஷயத்தில் வெவ்வேறு சபைகள் வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றும்.
பலதார மணம்
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்திருந்த போதிலும், இது ஏதேன் தோட்டத்தில் ஏற்பட்ட ஆதாம் ஏவாளின் பாவத்துடைய விளைவாகவே இருந்திருக்க வேண்டும். திருமணத்தில் இருவர் “ஒரே மாம்சமாகின்றனர் . இதில் மூன்றாவது ஒருவருக்கு இடமேதும் கிடையாது, அதுதான் தேவனின் ஆதி ஏற்பாடு. முற்காலத்தில் எது அனுமதிக்கப் பட்டது என்பது நமது கவலை அல்ல, கிறிஸ்தவர்களுக்கு ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கக் கூடாது என்பதைப் புதிய ஏற்பாடு தெளிவு படுத்துகின்றது ( 1 கொரிந்தியர் 7:2), எல்லாக் கிறிஸ்தவர்களும் இதை ஒத்துக் கொள்கின்றனர். எனினும் ஒருவன் விசுவாசி ஆவதற்கு முன்பே இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மனைவிகள் உடையவனாய் இருப்பான் என்றால், அவர்களைக் கைவிடாமல் அவர்கள் அனைவரையும் ஆதரிக்க வேண்டும் (யாத்திராகமம் 21:10). எனினும் இப்படி இரண்டு, மூன்று மனைவிகள் உள்ள ஒருவனை சபையின் தலைமைப் பதவிகளில் இருத்தக் கூடாது’ என்று பவுல் கூறினார் (1 தீமோத்தேயு 3:2,12; தீத்து 1:6),
மணமானவரோ, ஆகாதவரோ, வேசியோ யாருடனும் சரி கிறிஸ்தவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவி தவிர வேறு யாருடனும் பாலுறவு கொள்ளக் கூடாது என்பது தெளிவு (1 கொரிந்தியர் 6:15). விவாகம் யாவருக்குள்ளும் கனம் உள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப் படாததாயும் இருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக் காரரையும் தேவன் நியாயம் தீர்ப்பார் (எபிரெயர் 13:4).
பின்குறிப்புகள்
தனது துணையை இழந்தபின் மறுமணம் செய்த யாரும் சபையில் தலைமைப் பொறுப்பு வகிக்கத் தகுதி உள்ளவர்களே. வேதத்தின் படி, ஆணோ, பெண்ணோ தங்கள் துணைகளை இழந்தால் மறுமணம் செய்ய உரிமை பெற்றவர்கள்.