சரீர சுகமும் விடுதலையும்

சரீர சுகமும் விடுதலையும்

முக்கிய வசனங்கள்

மத்தேயு 8:16-17 இயேசுவின் ஊழியத்தில் சுகமளித்தலும் விடுவித்தலும். மத்தேயு 12:43-45 அசுத்த ஆவிகளைப் பற்றிய போதனை.

மாற்கு 5:1-17 இயேசு அசுத்த ஆவி பிடித்த மனிதனை விடுவிக்கிறார். 

மாற்கு 9:14-29 இயேசு வலிப்பு நோயுள்ள சிறுவனிடமிருந்து அசுத்த ஆவியைத் துரத்துகிறார்.

 மாற்கு 16:16-18 சரிர சுகமளிப்பதும் பிசாசுகளைத் துரத்துவதும் விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்கள்.

1கொரிந்தியர் 12:9-10 குணமாக்கும் வரம், அற்புதங்கள் செய்யும் வரம், ஆவிகளைப் பகுத்தறியும் வரம்.

யாக்கோபு 5:14-16 மூப்பர்கள் பிணியாளிகளுக்கு எண்ணெய் பூசி ஜெபித்தல்.

வியாதிகளில் தெய்வீக சுகம் 

வியாதிகளிலிருந்து சுகமளிப்பது பற்றிய அநேக வாக்குத்தத்தங்கள் வேதத்தில் உண்டு. பழைய ஏற்பாட்டிலே யூதர்களுக்கு வியாதிகளிலிருந்து பாதுகாப்பும் (யாத்திராகமம் 15:26), சரீரசுகமும் (சங்கீதம் 103:1-5) வாக்களிக்கப் பட்டன. வியாதிக்கு மூலகாரணம் சாத்தானே என்கிறது வேதாகமம் (லூக்கா 13:16; அப்போஸ்தலர் 10:38). கர்த்தருடைய ஆவியானவராலும் வல்லமையாலும் தாம் அபிஷேகிக்கப் பட்டதற்கு ஒரு காரணம் குணமாக்குவதே என்றார் இயேசு (லூக்கா 4:17-18; 5:17), இயேசு பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்கினார் என்றும் (மத்தேயு 8:16), அவர் ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார் என்றும் (மத்தேயு 4:23) வேதம் கூறுகிறது. இந்தக் குணமாக்கும் வல்லமை இயேசுவின் சீஷர்களுக்கும் அளிக்கப் பட்டது (மத்தேயு 10:1,8; மாற்கு 6:7,13; லூக்கா 10:9). விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களுள் ஒன்றாக இயேசு, சரீர சுகத்தையும் குறிப்பிட்டார் (மாற்கு 16:18), அப்போஸ்தவர் நடபடிகள் முழுவதிலும் சரீர சுகம் அருளப் படுவதைக் காண்கிறோம். சபையானது வியாதிப் பட்டோருக்காக ஜெபிக்கவும், அதன் மூலம் அவர்கள் குணமடைவதைப் பார்க்கவும் யாக்கோபு எதிர்பார்த்தார் (யாக்கோபு 5:14-16). பரிசுத்த ஆவியானவரின் வரங்களில் குணமாக்குதலும், அற்புதங்கள் செய்வதும் அடங்கும் (1 கொரிந்தியர் 12:9-10, 28). ஆதித் திருச்சபையில் அப்போஸ்தலர்கள் காலத்திலும், அதைத் தொடர்ந்து பலப்பல நூற்றாண்டுகளாகவும் அநேக சரீரசுகங்கள் இடம் பெற்றன.

தேவன் கடந்த காலங்களில் செய்தது போலவே இன்றும் சுகமளிக்கிறார் என அநேகக் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவர்கள் எபிரெயர் 13:8 ஐச் சுட்டிக் காட்டி இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்கின்றனர். மாற்கு 1:40-41 ஐயும் காட்டி, இயேசு எப்பொழுதுமே குணமாக்கச் சித்தமுள்ளவராய் இருந்தார் என்கின்றனர். இன்று உலகெங்கிலும் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் தாங்கள் தெய்விக வல்லமையால் சுகம் பெற்றதாகச் சொல்கின்றனர், வேறு பலர் அப்படிப்பட்ட சரீர சுகங்களைத் தாங்கள் கண்டதாகக் கூறுகின்றனர். இரட்சகர் சிலுவை மீது நமது பாவங்களை மட்டுமல்ல நமது நோய்களையும் சுமந்து தீர்த்தார் எனக் கூறும் பழைய ஈரற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் (எண்ணாகமம் 21:8-9; ஏசாயா 53:4-5). ஏசாயா 53 வேதபகுதி மூலமொழியான எபிரெய’ மொழியில் அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்றே பொருள்படுமாறு வருகிறது, மத்தேயு 8:17 இல் அவ்வாறே மேற்கோள் காட்டவும் படுகிறது. இயேசு நமது பாவங்களையும் நமது வியாதிகளையும் சிலுவை மீது சுமந்து தீர்த்தார் என்றால், இன்று தேவன் பாவங்களை மன்னிப்பது போலவே நோய்களையும் குணமாக்குவார் என்று எதிர்பார்க்கவே வேண்டும். இக்கிறிஸ்தவர்கள் பவுலின் சரீரத்திலிருந்த முள் ஒரு சரீர வியாதி அல்ல, உண்மையாகவே சாத்தானின் தூதன் என்று நம்புகின்றனர் (2 கொரிந்தியர் 12:7). பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் இன்றும் கிறிஸ்தவர்களுக்குக் கிட்டக் கூடியவை, அவற்றுள் குணமாக்கும் வரமும் அற்புதங்கள் செய்யும் வரமும் அடக்கம் என்று அநேகர் நம்புகின்றனர் (1 கொரிந்தியர் 12:9-10). இக்கிறிஸ்தவர்களுள் சிலர் நமது நோய்கள் எல்லாவற்றையும் தேவன் குணமாக்குவார் என்று எதிர்பார்க்க வேண்டும் என்கின்றனர். மற்றவர்களோ, தேவன் பெரும்பாலும் வியாதிகளைக் குணமாக்குவார், ஆயின் எல்லா வியாதிகளையுமே குணமாக்குவார் என எதிர்பார்க்கக் கூடாது என்கின்றனர்.

வேறு சில கிறிஸ்தவர்களோ தேவன் இன்று இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகளில் சுகம் தருவதில்லை. மக்களைக் குணமாக்க மருத்துவர்களையும் மருந்துகளையுமே பயன்படுத்துகிறார் என்று நம்புகின்றனர். திருச்சபை வரலாற்றிலே பெரும்பாலான மக்கள், யாரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் சுகம் பெற்றதைக் கண்ணாரக் கண்டதில்லை. ஆகவே இவர்கள், தெய்வீக சரீர சுகமளிக்கும் வல்லமை சபை ஆரம்பித்த முதல் சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது என்கின்றனர். பவுலும் தமது நண்பனை வியாதிப் பட்டவனாக விட்டு வந்ததையும் (2 தீமோத்தேயு 4:20), சுட்டிக் காட்டுகின்றனர். பவுலின் சரீரத்திலிருந்த முள் ஒரு சரீர வியாதியே (1 கொரிந்தியர் 12:7), அது ஒருவேளை ஒரு கண் நோயாக இருக்கக் கூடும் (கலாத்தியர் 4:15) என்பது இவர்கள் கருத்து. மத்தேயு 8:16-17 ஐ இவர்கள் வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றனர், இயேசு இப்பூவுலகில் இருந்த போது நமது நோய்களைச் சுமந்தார், சிலுவை மீது நமது பாவங்களை மட்டுமே சுமந்தார் என்கின்றனர். இயேசு சிலுவை மீது நமது பாவங்களுக்காகவும், வியாதிகளுக்காகவும் மரிக்கவில்லை, நமது பாவங்களுக்காக மட்டுமே மரித்தார் என்று நம்புகின்றனர்.

மூன்றாவதான கண்ணோட்டம், இந்த இரண்டு கருத்துக்களுமே உண்மையல்ல, உண்மை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று என்கிறது. இரு கருத்துக்களிலுமே ஓரளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இந்தச் சாராரின் எண்ணம். இத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்புக்கு, பொதுவான தலைப்பு : பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – பார்க்க, சரீர சுகத்துக்காக ஜெபித்தல்

வேதாகமத்தில் மக்கள் பல்வேறு விதங்களில் சுகமடைந்தனர். நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் “கேட்க” வேண்டும் என்று சொன்னார் இயேசு (மத்தேயு 7:7; யாக்கோபு 4:2). பலரைப் பார்த்து அவர்களது விசுவாசமே அவர்களைக் குணமாக்கிற்று என்றும் சொன்னார் (மத்தேயு 8:10- 13; மாற்கு 10:52), அப்போஸ்தலர்களும் அதேவிதமாகச் செய்தனர் (அப்போஸ்தலர் 3:16), வேறு சிலர் தங்கள் “கீழ்ப்படிதலின் மூலமாகச் “சுகம் பெற்றனர் (2 இராஜாக்கள் 5:1-14; லூக்கா 17:14; யோவான் 9:7). அநேகத் திமிர்வாதக்காரர்கள் இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களில் ஒருவரோ சொன்ன “அதிகாரமுள்ள ஒரு வார்த்தையின் மூலமாகக் குணம் பெற்றனர் (மாற்கு 2:10-11; யோவான் 5:8; அப்போஸ்தலர் 3:6; 14:10). இயேசு தமது சீஷர்களைப் பார்த்துத் தமது “வாக்குத் தத்தங்களை உரிமை பாராட்டிப்” பெற்றுக் கொள்ளச் சொன்னார் (மாற்கு 11:22-24; யோவான் 14:13-14). “எண்ணெய் பூசி ஜெபித்ததன்” மூலம் ஏராளமான வியாதிகள் சுகமாயின (மாற்கு 6:13), சபை மூப்பர்கள், சுகவினமாய் இருப்பவனுக்கு எண்ணெய் பூசி ஜெபிக்கும் படி யாக்கோபு ஆலோசனை கொடுத்தார் (யாக்கோபு 5:14-16), அநேகர் “தலை மீது கரங்கள் வைத்து” ஜெபிக்கப் பட்டதால் வியாதி நீங்கிச் சுகமாயினர் (மாற்கு 6:5-6; லூக்கா 4:40; அப்போஸ்தலர் 28:8), விசுவாசிகள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால் அவர்கள் சுகம் பெறுவார்கள் என்று இயேசு கூறினார் (மாற்கு 16:15; எபிரெயர் 6:1-2). இயேசுவின் வஸ்திரங்கள் (லூக்கா 6:19, 8:43-46), பேதுருவின் நிழல் (அப்போஸ்தலர் 5:15), பவுலின் கச்சைகள், உறுமால்கள் (அப்போஸ்தலர் 19:12) இவற்றைத் “தொட்டதன் ” மூலம் சுகம் பெற்ற மக்களும் உண்டு. ஒருமுறை இயேசுவும் கூடத் “திரும்பத் திரும்ப” ஜெபித்தார் (மாற்கு 8:22-25).

எனினும், யாரும் நவீன மருந்துகளையோ, சிகிச்சையையோ எடுக்க மறுக்கவும் கூடாது. தேவன் நேரடியாகவே சுகம் கொடுக்க முடியும், எனினும் பல சமயங்களில் அவர் சுகம் கொடுப்பதற்கு ஏதாவது ஒரு “வழி வகையைப்” பயன்படுத்துகிறார். தொடுதல், எண்ணெய், ஏன் சேற்றைக் கூட அவர் பயன்படுத்தியுள்ளார் (யோவான் 9:5-7). அதே போல, மருந்தும் சுகம் தருவதன் ஒரு வழிமுறை என ஏற்றுக் கொள்ள வேண்டும். தீமோத்தேயு தன் வயிற்றிற்காகவும் தனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சைரசத்தை மருந்தாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி பவுல் ஆலோசனை கூறினார் (1 தீமோத்தேயு 5:23). பவுல் தனது மிஷனெரிப் பயணங்களில் தன்னோடு வந்த மருத்துவரான லூக்காவை பிரியமான வைத்தியனாகிய லூக்கா என்று அடிக்கடி அழைக்கிறார் (கொலோசெயர் 4:14). எனவே நாம் தேவனிடமிருந்து நேரடியாக மட்டுமோ அல்லது “வழி வகைகளான மருந்து மற்றும் மருத்துவர்கள் மூலமாக மட்டுமோ சுகம் பெற நாடக் கூடாது; மாறாக தேவனிடமிருந்தும் மருந்துகள் மூலமாகவும் சுகம் பெறப் பார்க்க வேண்டும் (2 இராஜாக்கள் 20:5-7), அவர் எந்த முறையில் நம்மைச் சுகப் படுத்தினாலும் சரி அதற்காக அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

சில மக்கள் ஏன் சுகம் பெறவில்லை என்பதற்குப் பல காரணங்கள் கூறப் படுகின்றன. விடை பெறாத ஜெபத்துக்கு முக்கியக் காரணம் அவிசுவாசம், அது ஒரு வேளை நம்முடைய அவிசுவாசமாகவோ (மாற்கு 9:23-24), அல்லது நம்மைக் குணப் படுத்த முயல்வோரின் அவிசுவாசமாகவோ (மத்தேயு 17:19-20), அல்லது நம்மைச் சூழ்ந்துள்ளோரின் அவிகவாசமாகவோ இருக்கலாம் (மாற்கு 6:5-6). மன்னியாமை (மாற்கு 11:24-25), கீழ்ப்படியாமை (2 இராஜாக்கள் 5:1, 8-14), அல்லது கணவன் / மனைவியுடன் கருத்து வேறுபாடு (1 பேதுரு 3:7) இவை போன்ற அறிக்கையிடப் படாத பாவங்களும் காரணமாகலாம் (யோவான் 5:14; யாக்கோபு 5:16). தகுதியற்ற முறையிலோ அல்லது பாவங்களை அறிக்கையிடாத நிலையிலோ கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதும் வியாதி வருவதற்குக் காரணமாய் அமையலாம் (1 கொரிந்தியர் 11:27-30). சிலர் வியாதி குணமாக வேண்டுமென ஜெபிப்பது கூட இல்லை (யாக்கோபு 4:2) காரணம், ஒன்று அப்படி சுகம் கிடைக்கும் என்பதை அவர்கள் அறியவில்லை அல்லது நம்பவில்லை, நாம் நமது சரீரங்களைத் தகாத விதங்களில் பயன்படுத்தினாலோ அல்லது தேவன் அருளும் மற்ற வழிவகைகளில் சுகம் பெற மறுத்தாலோ ஒரு வேளை நாம் தேவனைப் “பரீட்சை” பார்க்கலாம், இதை வேதம் தடை செய்கிறது (மத்தேயு 4:6-7).

சில வேளைகளில், சுகம் பெறுவதற்கு அது ஏற்ற சமயமாக இராதிருக்கலாம். உதாரணமாக, இயேசு சுகவீனமாயிருந்த தமது நண்பனைப் பார்க்க உடனடியாகப் போகவில்லை, ஆனால் பின்னர் அவனை மரித்தோரிடமிருந்து உயிரோடு எழுப்பினார் (யோவான் 11:6, 43-44), இப்படியாக இயேசு பெரும் அற்புதம் ஒன்றைச் செய்தார். தமது வல்லமையை வெளிப் படுத்துவதற்காக, தேவன் அநேக ஆண்டுகள் கழிந்த பின் ஒரு விசேஷித்த நபரையோ அல்லது விசேஷித்த முறையையோ பயன்படுத்தி சுகம் கொடுக்கலாம் (மாற்கு 9:29; யோவான் 5:5-9 9:3). அல்லது தேவன் ஒருவர் இவ்வளவு காலம் தான் உயிர் வாழ வேண்டும் என்று குறித்திருக்கலாம். பழைய ஏற்பாட்டிலே தேவன் எசேக்கியாவுக்கு பதினைந்து ஆண்டுகள் மட்டும் வாழ்நாளைக் கூட்டிக் கொடுத்தார் (2 இராஜாக்கள் 20:5-7). எல்லாவற்றையும் விட, நோய்க்குறி தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு; ஒரு மனிதன் சரீர வியாதியால் அவதிப் படுவதாக நாம் எண்ண அவனோ பிசாசினால் பீடிக்கப் பட்டிருக்கலாம்.

பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலை

சரீர வியாதியைப் போன்றே, சாத்தான் மற்றும் அவனது பிசாசுகள் அல்லது அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து விடுதலை பற்றியும் வேதாகமத்தில் ஏராளமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. தாம் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப் பட்டதற்கு ஒரு காரணம் நொறுங்குண்டவர்களை விடுதலையாக்குவதே என்று இயேசு சொன்னார் (லூக்கா 4:18). அவர் சென்ற இடமெல்லாம் பிசாசுகளினால் ஒடுக்கப் பட்டோரிடம் இருந்து பிசாசுகளைத் துரத்தினார் (மத்தேயு 4:24; மாற்கு 1:34; 3:11). இந்தப் பிசாசுகளைத் துரத்தும் அதிகாரத்தை முதலில் தமது பன்னிரு சீஷர்களுக்கும் அதன்பின்னர் வேறே எழுபது பேர்களுக்கும் கொடுத்தார் (லூக்கா 9:11; 10:1,17-19). விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களில் பிசாசுகளைத் துரத்துவதையும் சேர்த்துச் சொன்னார் (மாற்கு 16:17), இதை அப்போஸ்தலர் நடபடிகள் நெடுகிலும் காண்கிறோம் (அப்போஸ்தலர் 5:16; 8:7; 16:18; 19:11-12). பரிசுத்த ஆவியானவரின் வரங்களுள் ஆவிகளைப் பகுத்தறியும் வரமும் ஒன்று (1 கொரிந்தியர் 12:10).

பிசாசுகள் என்பவை பூமியில் வாழும் மக்களை அலைக்கழிப்பதற்காக வந்துள்ள மரித்துப் போனோரின் ஆவிகளல்ல. மரித்தோரின் ஆவிகள் கிறிஸ்துவோடு இருக்கும்படியாகப் பரலோகத்திற்கோ (பிலிப்பியர் 1:23) அல்லது இறுதி நியாயத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் படியாக நரகத்திற்கோ (எபிரெயர் 9:27; வெளிப்படுத்தல் 20:5,13) செல்கின்றன என்று வேதம் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது, பிசாசுகள் என்பவை சாத்தானின் பணிவிடைக் காரர்களான (மத்தேயு 12:26-27; மாற்கு 3:22-26), தீய அல்லது அசுத்த ஆவிகள் (மத்தேயு 10:1; 12:43). சாத்தானும் அவனுடைய ஆவிகளும் தேவனால் சிருஷ்டிக்கப் பட்டு, பின்னர் அவருக்கு எதிராகக் கலகம் செய்தவை (ஏசாயா 14:12-15; எசேக்கியேல் 28:13-17). பிசாசுகள் எண்ணற்றவை, உலகம் முழுவதிலும் பரவியுள்ளவை (மாற்கு 5:9; எபேசியர் 6:12). அவை மனிதர்களுக்குள்ளும் மிருகங்களுக்குள்ளும் புகவும், அவர்களை அடக்கியாளவும் முடியும்; உண்மையில், அவை ஒரு சரீரம் இன்றி வெளியே அலைய விரும்புவதில்லை (மத்தேயு 12:43-45; மாற்கு 5:2,12-13). அவைகள் இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்று அடையாளம் காண, அறியக் கூடியவை (மாற்கு 1:23-24,34; அப்போஸ்தலர் 19:15), அந்த விதத்தில் அவை இயேசுவை “விசுவாசிக்கின்றன” (யாக்கோபு 2:19); ஆனால் தாங்கள் பாதாளத்தின் நாக வேதனைக்கே போய்ச் சேருவோம் என்பதையும் அறிந்திருப்பவை (மத்தேயு 8:29; லூக்கா 8:31). விக்கிரங்களுக்குப் படைக்கப் பட்ட பலிகள் உண்மையில் பேய்களுக்கே பலியிடப் பட்டவை எனப் பவுல் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 10:19-21).

சில நேரங்களில் ஒரு மனிதன் பிசாசினால் “பீடிக்கப் படுகிறான்”, அதாவது அவனது ஆளுமையை அடக்கிப் போடுமளவிற்கு ஒரு அசுத்த ஆவியின் ஆளுமை அவனது சரீரத்தையும் மனதையும் அடக்கி “ஆண்டு” கொள்கிறது (மாற்கு 5:15-16). ஆனால் பொதுவாக, ஒரு மனிதன் முழுமையாக “ஆளப் படுவதை” விட மனதிலும் சரீரத்திலும் அசுத்த ஆவியினால் “தாக்கவோ” பீடிக்கவோ” படுகிறான் எனலாம் (மத்தேயு 9:32; 12:22; மாற்கு 9:17-29; லூக்கா 6:8),

விசுவாசிகள் ஒரு அசுத்த ஆவியினால் முழுமையாகப் பீடிக்கப் பட முடியாது என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களுமே அறிவர், காரணம் விசுவாசிகள் தேவனால் ஆளவும் உரிமை கொண்டாடவும் படுபவர்கள் (1 கொரிந்தியர் 6:19-20). என்றாலும் விசுவாசிகள் அசுத்த ஆவிகளால் உள்ளிருந்து “தாக்கப் படவோ”, “ஒடுக்கப் படவோ” முடியும் எனக் கிறிஸ்தவர்களில் அநேகர் நம்புகின்றனர். இவர்கள் சாத்தானின் தூதன் தன்னைக் குட்டுவதாக பவுல் சொன்னதையும் (2 கொரிந்தியர் 12:7), விக்கிரகங்களுக்குப் பலியிட்டவைகளைப் புசிப்பதன் மூலம் விசுவாசிகள் பேய்களோடே ஐக்கியமாயிருக்கக் கூடாது என்று அவர் எச்சரிப்பதையும் (1 கொரிந்தியர் 10:20-22) சுட்டிக் காட்டுகின்றனர். சரீர வியாதிகளுக்காக இயேசுவிடம் கொண்டு வரப் பட்டவர்கள் பல சமயங்களில் பிசாசுகளினாலேயே அவ்வியாதிகளுக்கு ஆளாகியிருந்ததையும் இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர் (மாற்கு 3:10-11; லூக்கா 6:18-19). அவர்களில் பெரும்பாலானோர் அசுத்த ஆவியினால் உள்ளிருந்து முழுவதும் ஆளப் படவில்லை, ஓரளவுக்கு ஒடுக்கவே பட்டனர் என்று இவர்கள் நம்புகின்றனர். கிறிஸ்தவர்களும் பிசாசுகளின் பொய்களையும் போதனைகளையும் நம்புமளவிற்கு அவற்றால் தாக்கப் படலாம் (1 தீமோத்தேயு 4:1-3); நமது ஓய்வற்ற போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, இந்தப் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு தான் எனப் பவுலும் நம்மை எச்சரிக்கிறார் (எபேசியர் 6:12). ஆவிகள் தேவனிடமிருந்து வந்தவையா என நாம் சோதித்தறிய வேண்டும் (1 யோவான் 4:1-3).

எனினும் வேறு சில கிறிஸ்தவர்களோ, விசுவாசிகளுக்குள் எந்த அசுத்த ஆவியும் எந்நிலையிலும் இருக்க முடியாது என நம்புகின்றனர். பரிசுத்த ஆவியானவரும் அசுத்த ஆவியும் ஒரு விசுவாசிக்குள் ஒரே சமயத்தில் வசிப்பது சாத்தியமே அல்ல என்கின்றனர் (1 கொரிந்தியர் 6:19). இவர்களில் சிலர் உண்மையான ஒரு விசுவாசி எந்தச் சமயத்திலும் எவ்வகையிலும் ஒரு அசுத்த ஆவியினால் தாக்கப் படவே முடியாது என்று நம்புகின்றனர். வேறு சிலர் அசுத்த ஆல் விகள் ஒரு விசுவாசியை வெளியிலிருந்து தாக்கலாம், ஆனால் விசுவாசியின் சரீரத்துக்குள் புகவே முடியாது என்கின்றனர்.

இந்த விஷயம் முக்கியத்துவம் உள்ளது, காரணம், இதுவே நாம் மற்றவர்களுக்காக எப்படி ஜெபிக்கிறோம் என்பதை நிர்ணயிப்பது. ஒரு விசுவாசிக்குள் பிசாசு இருக்கக் கூடுமானால் சில வியாதிகளிலிருந்தும் உணர்வுப் பிரச்சனைகளிலிருந்தும் முழு விடுதலை பெறவோ அல்லது சில பாவங்கள் மீது வெற்றி பெறவோ அவனுக்குள்ளிருக்கும் பிசாசு துரத்தப் பட்டாக வேண்டும். எனினும் பெரும்பாலான பாவங்கள் நமது பாவத் தன்மையின் விளைவே அன்றி, பிசாசு அல்லது சாத்தானால் வருபவை அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். (கலாத்தியர் 5:19-21).

விடுதலைக்காக ஜெபித்தல்

ஒரு கிறிஸ்தவனுக்குள் பிசாசு இருக்க முடியுமோ, முடியாதோ கிறிஸ்தவர்கள் அல்லாதோரை சாத்தானிடமிருந்தும் அவனுடைய அசுத்த ஆவிகளிடமிருந்தும் எப்படி விடுவிப்பது என்பதையாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தேவனுடைய சர்வாயுத வர்க்கம் எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமே வேண்டும், அதன் பாகங்கள் எபேசியர் 6:10-17 இல் குறிப்பிடப் பட்டுள்ளன : சத்தியம், நீதி, சமாதானம், விகவாசம், இரட்சணியம் மற்றும் வேத வசனம். விடுதலை செய்யுமுன் ஜெபத்தில் தரித்திருந்து ஆயத்தப் பட வேண்டியது அதி முக்கியம் (மாற்கு 9:28-29; எபேசியர் 6:18). மாற்கு 9:29 “ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்” என்று கூறுகிறது, பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஊழியம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு விசேஷித்த ஜெப நேரம் இன்றியமையாதது என சில கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். முடிந்தால், விடுவிக்கும் ஊழியத்திற்கான விதத்தில் அன்றி ஒரு குழுவாக ஏறெடுக்கப் படுவது நல்லது. விடுவிக்கும் ஜெபம் தனிப்பட்ட ஊழியத்தில் பங்கு பெறும் அனைவரும் முதிர்ந்த, ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாகவே இருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 19:13- 16 பார்க்க).

பிசாசின் பிடியிலிருந்து விடுதலைக்காக ஜெபிப்பதற்கு முன், பீடிக்கப் பட்ட நபரோடு நேரம் செலவிட வேண்டும். அந்நபர் கிறிஸ்தவர் அல்லாதவராகவோ, கிறிஸ்தவராக விருப்பம் அற்றவராகவோ இருக்கும் பட்சத்தில் (விளைவாக, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அற்றவராக இருப்பார்), அல்லது அவருக்குப் பின் தொடர் பணி செய்ய முடியாத பட்சத்தில், அப்படிப் பட்டவருக்காக ஜெபிக்கையில் நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஒரு சுருக்க ஜெபம் அந்நபரின் முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை அதிகக் கேடாக்கக் கூடும் (மத்தேயு 12:43-45). ஒருவரது வீட்டிலிருந்து விக்கிரங்கள் வெளியே அகற்றப் படாத பட்சத்தில் அவருக்காக பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுமாறு ஜெபிக்கவே கூடாது என்று சிலர் கருதுகின்றனர் (அப்போஸ்தலர் 19:19). இல்லையென்றால், அசுத்த ஆவிகள் எளிதில் திரும்பி வந்து விடும்.

அநேக சரீர நோய்களுக்கு, பிசாசினால் பீடிக்கப் படுதல் ஒரு காரணமாய் இருக்கலாம். அதே வேளையில் பல சரீர அல்லது மன நோய்கள், பிசாசினால் பீடிக்கப் பட்டதன் அறிகுறிகள் போலத் தோன்றலாம், ஆனால் உண்மையில் வெறும் சரீர, மன நோய்களாகவும் இருக்கலாம். உதாரணமாக, வலிப்பு நோய் பிசாசின் தாக்குதல் போல் காணப்படலாம், ஆனால் அது பொதுவாக மூளையுடன் தொடர்புடைய ஒரு நோய் மட்டுமே. இங்கே பெருத்த உதவியாக அமைவது, பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வரும் ஆவிகளைப் பகுத்தறியும் வரம் ஆகும். இது ஒரு நபரைப் பீடித்துள்ள அல்லது அவதிப் படுத்துகிற அசுத்த ஆவியை அடையாளம் கண்டு கொள்ள உதவும் (1 கொரிந்தியர் 12:10),

உண்மையில், இந்த ஜெபமானது பிசாசின் பிடியிலிருந்து விடுவிப்பதில் பங்கு பெறும் அத்தனை பேருடைய பாதுகாப்புக்காகவும் ஜெபிப்பதிலேயே தொடங்க வேண்டும், இவர்கள் எல்லாருமே விசுவாசிகளாக இருக்க வேண்டியது மிக அவசியம் (அப்போஸ்தலர் 19:13-16). பிறகு சாத்தானும் அவனது சேனைகளும் கட்டப் பட வேண்டும் (மத்தேயு 16:19, 18:18), பீடிக்கப் பட்ட நபர் தனது பாவத்தை எல்லாம் அறிக்கையிட்டு வெறுத்து விட வேண்டும். சரீரசுகத்துக்காக ஜெபிப்பது பொதுவாக சுகத்துக்காக தேவனை நோக்கி வேண்டுதல்” செய்வது (இது மனதிலே செய்யப் படும் அமைதியான ஜெபமாகவும் இருக்கலாம்); ஆனால் பிசாசிடமிருந்து விடுதலைக்காக ஜெபிப்பதோ இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும், அதிகாரத்தின் பேரிலும் பிசாசுக்கு இடப்படும் “கட்டளை” (லூக்கா 10:17 அப்போஸ்தலர் 16:18; 19:13-15). எனினும் உரத்த சத்தமாகக் கத்த வேண்டும் என்பதில்லை; பிசாசையெல்லாம் பயம் காட்டி ஒருவரிடமிருந்து வெளியேற்ற முடியாது. பிசாசு தான் பீடித்திருக்கும் நபருக்கோ, மற்ற யாருக்குமோ எந்தத் தீங்கும் விளைவிக்காமல் புறப்பட்டு, நியாயத் தீர்ப்பு அடையும் படியாக இயேசு கிறிஸ்துவிடம் போக வேண்டும் என்று கட்டளை கொடுக்கப் பட வேண்டும் (யூதா 9). இயேசுவின் நாமம் வல்லமை மிக்கது, பொதுவாக உடனடியாக விடுதலை உண்டாகும். பீடிக்கப் பட்ட நபர் தான் விடுதலையாகி விட்டதை அறிந்து கொள்வார்.

இந்த ஜெபத்தைத் தொடர்ந்து அந்நபர் தேவ அன்பினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நிரப்பப் பட வேண்டுமென்ற ஜெபமும் உடனடியாக ஏறெடுக்கப் பட வேண்டும் (மத்தேயு 12:43-45). விடுவிக்கப் பட்ட நபர் முதலிலேயே தேவனுடைய பிள்ளையாக இராத பட்சத்தில், இப்பொழுது உடனடியாக இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். சாத்தானை எதிர்த்து நிற்பது பற்றியும், அவன் வாழ்வில் பிசாசு நுழைய இடங்கொடுத்த அந்தக் குறிப்பிட்ட பாவத்தைத் தவிர்ப்பது பற்றியும் போதனை கொடுக்கப் பட வேண்டும் (யாக்கோபு 4:7; யோவான் 1:9). முழுமையான விடுதலைக்குத் தடையாக இருக்கக் கூடிய சில காரியங்கள் : அவிசுவாசம் (மத்தேயு 17:16-20), கிறிஸ்துவை ஏற்க மறுத்தல், பாவங்களை வெறுத்து விட்டு விடாதிருத்தல், மன்னியாமை, அசுத்த ஆவியை அடையாளம் காணத்தவறுதல் (அதாவது, பிசாசு பிடிக்காத ஒரு மனிதனிடம் இருந்து பிசாசை விரட்ட முயலுதல்). 

சுருக்கம்

சரீர சுகம், பிசாசின் பிடியிலிருந்து விடுதலை ஆகிய இரண்டுமே தேவனின் அன்பை நமக்கு விளக்கிக் காட்டுவதுடன், அவர் நமது ஆவிகளைக் குறித்து மட்டுமல்ல சரீரங்களையும் மனங்களையும் குறித்தும் அக்கறையுடையவராய் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன. தேவன் நமது சுகவீனங்களையும் பெலவினங்களையும் சுகமாக்கவும், அடிமைத் தளையிலிருந்து நம்பை விடுதலையாக்கவும் ஆயத்தமாய் இருக்கிறார். நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்க வேண்டுமென்பதே தேவனின் விருப்பம் (3 யோவான் 2).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *