தீமைக்கு எதிர்த்து நிற்பது – நாம் செய்ய வேண்டியது எவ்வளவு?

person in black mask holding purple and pink smoke

தீமைக்கு எதிர்த்து நிற்பது – நாம் செய்ய வேண்டியது எவ்வளவு?

முக்கிய வசனங்கள்

யாத்திராகமம் 20:13 கொலை செய்யாதிருப்பாயாக.

யாத்திராகமம் 21:12-17; 22:18-20 சில குறிப்பிட்ட பாவங்களுக்கு மரண தண்டனை வழங்கப் படுதல். யோசுவா 8:1-8 யுத்தத்தினால் அழிப்பதற்கு தேவன் அதிகாரம்

வழங்கினார். 1 சாமுவேல் 15: 2-3 யுத்தத்தினால் தண்டிப்பதற்கு தேவன் அதிகாரம் வழங்கினார். மத்தேயு 5:38-48 தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில்

அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்கள்

லூக்கா 6:30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. ரோமர் 13:1-7 தேவன் தீமையைத் தண்டிப்பதற்காக அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

1 பேதுரு 2:13-14 தேவன் தீமை செய்பவர்களைத் தண்டிப்பதற்காக அதிகாரங்களை நியமித்திருக்கிறார்.

கேள்விகள்

இயேசு கிறிஸ்து தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை நமக்குப் போதித்தார், எடுத்தும் காட்டினார். இயேசு பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தை ஒழிக்கவில்லை (மத்தேயு 5:17). எனினும் நியாயப் பிரமாணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இயேசுவின் போதனைகள் ஆழமானவை, அதிக ஆவிக்குரியவை. நியாயப் பிரமாணமானது மக்களின் வெளிப் படையான நடத்தைக்கு விதிகள் வகுத்தது, இயேசுவோ மக்கள் உள்ளே, தங்கள் இதயங்களில் என்ன எண்ணினர் என்பதைப் பார்த்தார். அவர் நியாயப் பிரமாணத்தின் பல கூறுகளையும் எடுத்து, நீதியோடு கூட அன்பையும் சேர்த்துக் கோரியதன் மூலம் பிரமாணத்தை இன்னும் கடினமாக்கினார்.

உதாரணமாக, நியாயப் பிரமாணம் கொலை செய்வது குற்றம் என்று தீர்த்தது, இயேசுவோ ஒருவனின் உள்ளத்தில் இருக்கும் கோபத்தையும் பகையையும் கூடக் குற்றமே என்று தீர்த்தார் (மத்தேயு 5:21-22). நியாயப் பிரமாணம் விபசாரம் செய்வது பாவம் என்றது, இயேசுவோ உள்ளத்தில் இச்சை கொள்வதே பாவம் என்றார் (மத்தேயு 5:27-28). நியாயப் பிரமாணம் நாம் நமது பிறரை நேசிக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, இயேசுவோ நாம் நமது சத்துருக்களையும் சிநேகிக்க வேண்டும் என்றார் (மத்தேயு 5:43-47). நியாயப் பிரமாணம் தனிப்பட்ட விதத்தில் அளவுக்கு மீறிப் பழிவாங்குவது தவறு என்றது, இயேசுவோ பழியே வாங்கக்கூடாது என்று தடுத்தார். அவர் சொன்னார்: தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டு விடு “(மத்தேயு 5:39-40), இன்னும், “உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே ”என்றும் சொன்னார் (லூக்கா 6:30), மேலும் அவர் சொன்னது : “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் ” (மத்தேயு 7:12; லூக்கா 6:31).

தீமைக்கு எதிர்த்து நிற்பது பற்றி அநேகக் கேள்விகள் எழுகின்றன; நாம் தீமைக்கு எதிர்த்து நிற்கவே கூடாதா? தவறு செய்து கொண்டேயிருப்பவர்களை எதிர்க்க நாம் எந்தச் சக்தியையுமே பிரயோகிக்கக் கூடாதா? அரசாங்க அதிகாரிகள் தீமையைத் தண்டிப்பதற்காகத் தேவனால் நியமிக்கப் பட்டவர்கள், அவர்கள் பட்டயத்தை விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை என்று பவுலும் பேதுருவும் எழுதுகிறார்கள் (ரோமர் 13:1-7; 1 பேதுரு 2:13-14). யாரையும் தண்டிக்கவோ, துன்புறுத்தவோ முழு சமுதாயங்களும் அரசாங்கங்களும் வன்முறையைப் பயன் படுத்தவே கூடாதா? அப்படியானால், ஒரு கிறிஸ்தவன் காவல் துறையில் பணி புரிந்து குற்றவாளிக்கு எதிராகத் துப்பாக்கியையோ, பிரம்பையோ பயன்படுத்துவது சரியாகுமா? ஒரு கிறிஸ்தவன் நீதிபதியாக இருந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்குவது சரியா? ஒரு கிறிஸ்தவன் இராணுவத்தில் சேருவதும், யுத்தத்தில் பங்கு பெறுவதும் சரிதானா?

முதலாவது கண்ணோட்டம் : 

யாருமே எப்பொழுதுமே தீமைக்கு எதிர்த்து நிற்கக் கூடாது அநேகக் கிறிஸ்தவர்கள் யாரும் எந்தச் சூழ்நிலையிலும் தீமை செய்வோருக்குப் பலவந்தமாக எதிர்த்து நிற்கவே கூடாது என்று நம்புகின்றனர். இயேசு, நாம் தம்மையே பின்பற்ற வேண்டும் என்றார் (மாற்கு 8:34-35), தாழ்மையான ஒரு ஊழியக்காரனின் மாதிரியையே நமக்குப் பின் வைத்துப் போனார் (மாற்கு 10:42-45). பாடுபடுவதில் நாம் கிறிஸ்துவையே பின்பற்றக் கட்டளை பெறுகிறோம் (1 பேதுரு 2:19-24). நாம் பழிக்குப் பழி செய்யக் கூடாது என்றும், நன்மையினாலே தீமையை வெல்ல வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார் (ரோமர் 12:17-21; 1 தெசலோனிக்கேயர் 5:15). பேதுருவும் அதையே சொல்கிறார், நம்மைச் சபிப்பவர்களை நாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறார் (1 பேதுரு 3:8-9), இந்தக் கிறிஸ்தவர்கள் நியாயப் பிரமாணம் கிறிஸ்துவில் நிறைவேறியது என்றும் (மத்தேயு 5:17), அவரது அன்பின் அறவழி அதிகக் கடினமானது என்றாலும் மிக உன்னதமானதும் கூட என்றும் நம்புகின்றனர். இயேசு பழைய ஏற்பாட்டின் நியாயப் பிரமாணத்தை “அன்பின் பிரமாணமாக மாற்றிப் போட்டதால் (ரோமர் 13:10), தேவனால் பழைய ஏற்பாட்டில் அனுமதிக்கப் பட்டதெல்லாம் இன்று கிறிஸ்தவர்களுக்கான நெறிமுறைகளாக எடுத்துக் கொள்ளப் பட முடியாது.

ஆகவே, விசுவாசிகள் மற்ற மனிதர்களைக் கொல்லும் படியாக இராணுவத்தில் சேர்ந்து சண்டையிடுவது தகாது என இக்கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். பாவமே யுத்தங்களுக்கு மூலகாரணம் என்றும் (யாக்கோபு 4:1-4), பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து * போவார்கள் என்றும் (மத்தேயு 26:52) இவர்கள் கூறுகின்றனர். பழைய ஏற்பாட்டில் நடைபெற்ற ஆதி யுத்தங்களில் பெரும்பாலும் தேவனே யுத்தம் செய்தார், இஸ்ரவேலரின் உதவி அவருக்குத் தேவைப் படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர் (யாத்திராகமம் 14:13-14; 24-28; யோசுவா 5:13-15; 6:15; நியாயாதிபதிகள் 4:14-15; 7:2-7; 22). பிற்காலத்தில் தேவனால் கட்டளையிடப் படாத யுத்தங்கள் செய்வது பற்றி இஸ்ரவேலரைத் தீர்க்கதரிசிகள் கடிந்து கொண்டனர், சேனைகளை அல்ல தேவனையே சார்ந்து வாழ வேண்டும் என்று எச்சரிக்கவும் செய்தனர் (ஏசாயா 31:1-3; சகரியா 4:5). பழைய ஏற்பாட்டிலும் கூட மனிதன் சமாதானத்தை நாட வேண்டும் என்பதே தேவனின் உன்னத நெறியாக இருந்தது; உதாரணமாக, தாவீதின் கைகளில் யுத்தங்களின் இரத்தக் கறை படிந்திருந்தது என்பதால் தேவனுக்கு ஓர் ஆலயம் கட்டத் தன்னை அவர் அனுமதிக்க வேண்டுமென்ற அவனது வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது (1 நாளாகமம் 28:3).

போர் பற்றி இக்கண்ணோட்டம் உள்ள கிறிஸ்தவர்கள் அதற்கு இசைவாக, மரண தண்டனை கொடுக்கப் படுவது தவறு என்றும் கருதுகின்றனர். தீமையை எதிர்த்து நிற்கக் கூடாது (மத்தேயு 5:39) என்னும் வேத வசனங்களோடு கூட, விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப் பட்ட பெண்ணை இயேசு கல்லெறிந்து கொல்ல விடவில்லை (யோவான் 8:1-11) என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே, இக்கிறிஸ்தவர்களில் பெரும்பகுதியினர், ஒரு கிறிஸ்தவன் நீதிபதியாகவோ, அரசியல் பதவி வகிப்பவனாகவோ இருக்கக் கூடாது என்கின்றனர். காரணம், அப்படிப்பட்ட பதவிகளில் இருந்தால் அவன் தீமை செய்வோரைத் தண்டிப்பதற்காக “பட்டயத்தைப் பிடிக்கவும்”, எப்பொழுது மரண தண்டனை கொடுக்க வேண்டும். எப்பொழுது போருக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கவும் வேண்டியதாகும். ஒரு கிறிஸ்தவன் காவல் துறையிலும் பணிபுரிய முடியாது என்பது இவர்கள் கருத்து. ஏனெனில் ஒரு போலீஸ்காரன் சமுதாயத்தைக் காப்பாற்றும் பொருட்டு குற்றவாளிகளிடம் வன்முறையைப் பயன்படுத்தவோ அல்லது குற்றவாளிகளைக் கொல்லவோ வேண்டியதாகும். இந்த விசுவாசிகள் நாம் இந்தப் பூமிக்கு உரியவர்கள் அல்லர், பரலோகக் குடிமக்கள் என்றும் (பிலிப்பியர் 3:20), நாம் சமாதானமான ஒரு வாழ்வை நாடவே அழைக்கப் பட்டிருக்கிறோம் என்றும் (எபிரெயர் 12:14) சுட்டிக் காட்டுகின்றனர். இவர்கள் ஓர் அரசாங்கத்தில் பங்கு வகிக்க மறுத்த போதிலும், அவரவர் நாட்டு அரசாங்களை மதித்து நடந்து கொள்கின்றனர். உதாரணமாக, வரி கட்டுகின்றனர். தங்கள் அரசு அதிகாரங்களுக்காக ஜெபிக்கின்றனர் (மாற்கு 12:13-17; ரோமர் 13:1-7; 1 தீமோத்தேயு 2:1-2; 1 பேதுரு 2:13-17).

இரண்டாவது கண்ணோட்டம் : 

அதிகாரம் வகிப்பவர்கள் மட்டுமே தீமைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் வேறு பல கிறிஸ்தவர்களோ இயேசுவின் இந்த வார்த்தைகளை வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றனர். இவர்கள், இயேசுவின் வார்த்தைகளை ஒவ்வொரு தனிப்பட்ட விசுவாசியும் தனது தனி வாழ்வில் பின்பற்ற வேண்டும், ஆனால் இயேசு அரசாங்கங்களைப் பற்றியோ, காவல் துறை அதிகாரிகளும் பிற அரசு அதிகாரிகளும் நிறைவேற்ற வேண்டிய பொது வாழ்வின் கடமைகளைப் பற்றியோ பேசவில்லை என்று கருதுகின்றனர். தனிப்பட்ட விசுவாசிகளாக நாம் நமது “சகோதரனாலோ” அல்லது “சத்துருவினாலோ துன்புறுத்தப் படுகையில் நமது கோபத்தை விட்டு விட்டு நமது சகோதரனுடன் “ஒப்புரவாக வேண்டும்” என்றும், நமது எதிராளியுடன் எல்லாவற்றையும் சரிசெய்து கொண்டு “நல்மனம் பொருந்த வேண்டும்” என்றும் இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:22- 26). தனிப்பட்ட விசுவாசிகளாக, நம்மை யாராவது ஒரு கன்னத்தில் அறைந்தால் நாம் பதிலுக்குச் சண்டை போடாமல், பழி வாங்க முயலாமல், நமது “மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுவதன் ” மூலம் நமது அன்பை அவனுக்குக் காண்பிக்க வேண்டும் (மத்தேயு 5:38-41). தனிநபர்களாக, நமது பகைவர்களே ஆயினும் நம்மிடத்தில் கை நீட்டிக் கடன் கேட்கும் எவருக்கும் கொடுக்க ஆயத்தம் உள்ளவர்களாயும் இருக்க வேண்டும் (மத்தேயு 5:42; லூக்கா 6:35). இந்த இரண்டாவது கண்ணோட்டத்தின் படி, இயேசுவின் இந்த வார்த்தைகள் எல்லாம் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இன்னும் இக்கிறிஸ்தவர்கள், இயேசு இந்த வார்த்தைகளை எல்லாம் படைபலமற்ற ஒரு நாட்டின் சாதாரண தனி நபர்களுக்கே பேசினார் என்கின்றனர். அவர் நாட்டுப்புற அனுதின வாழ்க்கையின் காரியங்களை மனதில் கொண்டே பேசியிருப்பார். இயேசு பேசியதைக் கேட்டவர்கள் அவரது வார்த்தைகளைப் படைக்கும் காவல் துறைக்கும் பொருத்திப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்தக் கண்ணோட்டத்தின் படி, இந்த அதிகாரிகள் தீமையை எதிர்த்தாகவே வேண்டும். அதோடு, அதிகாரிகளே தீமை செய்வார்கள் என்றால் நாம் அவர்களையும் எதிர்க்கலாம் என்று இக்கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புதிய ஏற்பாட்டிலே அதிகாரிகளை எதிர்த்து நிற்பது பற்றிய மூன்று உதாரணங்களைக் காண்கிறோம். முதலாவது, இயேசு தாமே கோபங் கொண்டு, தீமையை எதிர்த்து நின்றார். காசுக்காரர்களின் பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, அநியாயக்காரர்களைச் சவுக்கினால் அடித்து விரட்டி, தேவாலயத்தைச் சுத்திகரித்தார் (யோவான் 2:13-16). இரண்டாவதாக, இயேசுவின் நியாய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது யாரோ ஒருவன் அநியாயமாக அவரைக் கன்னத்தில் அறைய, அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் (யோவான் 18:19-23). பவுலும் தனக்குத் தீங்கு இழைக்கப் படக் கூடாது என்பதற்காக இராயனுக்கு அபயமிட்டார் (அப்போஸ்தலர் 25:11). இந்த உதாரணங்களின் காரணமாக, நாமும் இவ்வாறு தீங்குக்கு எதிர்த்து நிற்க வேண்டும் என இக்கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

போர் என்பது பாவமானது என்பதை இவ்வகைக் கிறிஸ்தவர்கள் ஒத்துக் கொள்கின்றனர். எனினும் தீமை செய்பவர்களைத் தண்டிக்கவே அரசாங்கம் பட்டயத்தைப் பிடித்திருக்கிறது என்று பவுல் கூறுவதையும் சுட்டிக் காட்டுகின்றனர் (ரோமர் 13:4). போர் வீரர்கள் தங்கள் மனந்திரும்புதலைக் காட்டும் வண்ணமாகத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோவான்ஸ்நானனிடம் கேட்ட போது அவன் அவர்களைத் தங்கள் சம்பளமே போதுமென்று திருப்தியாக இருக்கச் சொன்னானே ஒழிய, இராணுவத்தை விட்டு வெளியேறச் சொல்லவில்லை (லூக்கா 3:14). இந்தக் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணத்தின்படி தேவன் அனுமதித்த, ஆனால் நாம் இனி செய்யவே கூடாது என்று இயேசு சொன்ன காரியங்கள் தனி – உதாரணமாக விவாகரத்து (மத்தேயு 5:31) மற்றும் ஆணையிடுதல் (மத்தேயு 5:33) போன்றவை; இன்னும் தேவன் பழைய ஏற்பாட்டில் திட்டவட்டமாகக் கட்டளையிட்ட, ஆனால் இயேசு வேண்டாமென்று விலக்காத காரியங்கள் தனி – உதாரணமாக மரண தண்டனை அல்லது நியாயமான காரணத்துக்காகப் போரிடுதல் போன்றவை (எண்ணாகமம் 31:1-7; யோசுவா அதிகாரங்கள் 6-8; நியாயாதிபதிகள் 4:14-16; 7:2-22; 1 சாமுவேல் 15:2-3) என்று நம்புகின்றனர். யோவானின் தரிசனம், இயேசுவை இறுதி காலத்தில் தேவனோடு யுத்தம் பண்ணும் மக்களை அழிக்க வருகின்ற போர்த் தலைவராகக் காட்டுகிறது (வெளிப்படுத்தல் 19:11-19). பெரும்பாலான யுத்தங்கள் நியாயமோ தர்மமோ அற்றவை என்ற போதிலும் சில யுத்தங்கள் அவசியமே, “நியாயமானவையே” என்பது இக்கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இவர்களில் பெரும்பாலானோர் மரண தண்டனையும் அனுமதிக்கப் படக் கூடியதே என்று எண்ணுகின்றனர். புதிய ஏற்பாட்டிலும் கூட தேவனிடம் பொய் சொல்ல முயன்ற இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்க தேவன் பேதுருவைப் பயன்படுத்தினாரே (அப்போஸ்தலர் 5:1-10). இவர்கள் யுத்தமோ, மரண தண்டனையோ தேவனின் பரிபூரண சித்தமல்ல, எனினும் சில குறிப்பிட்ட அநியாயங்களைத் தடுக்கவோ அல்லது சில குறிப்பிட்ட பாவங்களின் அகோரத்தைக் காட்டவோ அவர் இன்னும் மரண தண்டனையை நியமித்திருக்கிறார் என்றும் நம்புகின்றனர்.

அரசாங்கத்தில் பங்கு கொள்வது என்பதைப் பொறுத்த வரை, பவுல் அரசாங்கத்தை மதித்து நடப்பது, அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது மற்றும் வரி கட்டுவது இவை பற்றிக் கூறும் போதனைகளை இக்கிறிஸ்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் (ரோமர் 13:1-7). அந்நாட்களில் இருந்த ரோமப் பேரரசன் கிறிஸ்தவர்களைக் கொடூரமாய்ச் சித்திரவதை செய்பவனாக இருந்த போதிலும், உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப் பட்டிருக்கிறது என்றும் அதிகாரிகள் தேவ ஊழியக்காரர்கள் என்றும்-பவுல் எழுதுகிறார் (ரோமர் 13:1, 4, 5). வரி வசூலிப்பவர்கள் தங்கள் வேலையை விட்டு விட வேண்டியதில்லை, ஆனால் நியாயமாய் வரி வசூலிக்க வேண்டும் (லூக்கா 3:12-13; ரோமர் 13:6-7), விசுவாசிகள் அரசாங்க அல்லது காவல்துறைப் பதவிகளில் இருப்பது நல்லது, அதன் மூலம் தேவனுடைய நீதியின் வழியைப் பின்பற்ற அரசை ஊக்குவிக்கலாம், அவசியமான சமயங்களில் கருணையும் காட்டலாம் என இக்கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் அரசாங்கத்தில் ஓர் “ஒளியாக” இருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர் (மத்தேயு 5:15-14-16). தனி நபர்களாக அவர்கள் பழி தீர்க்கவோ, தங்கள் சுய நாட்டங்களைப் பாதுகாக்கவோ “திருப்பிச் சண்டை போடக்கூடாது எனினும் தீமை செய்வோரைத் தண்டிப்பதிலும் மற்றவர்களின் உடைமைகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதிலும் அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். 

மூன்றாவது கண்ணோட்டம் : 

தனி நபர்களும் தீமைக்கு எதிர்த்து நிற்கலாம் மூன்றாவது ஒரு கூட்டம் கிறிஸ்தவர்கள் யாரும் தீமை செய்யும் ஒருவனை எதிர்த்து நிற்கலாம், தேவைப் பட்டால் வன்முறையையும் கையாளலாம் என்று நம்புகின்றனர். தீமையை எதிர்ப்பது பற்றிய இப்போதனைகளை இயேசு கொடுத்தபோது, அவற்றை எல்லாச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்குமாகக் கொடுக்கவில்லை என்பது இவர்கள் கருத்து. இயேசுவின் போதனைகளுக்கு விதிவிலக்குகள் உண்டு, அவர் கூறியதைக் கேட்டவர்கள் அவர் சொல்லாமலேயே அதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்கின்றனர் இவர்கள். உதாரணமாக, குடிகாரன் ஒருவன் ஓர் அப்பாவியைக் கொல்ல முற்பட்டால் அவனைத் தடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிள்ளைகள் பெற்றோரை அறைவதோ, அவமானப் படுத்துவதோ கூடாது, சாப்பிடுவதற்காக ஓர் இனிப்புப் பண்டத்தை வழங்கும் போது இன்னொன்றும் வேண்டுமென கையிலிருந்து தட்டிப் பறிப்பதை அனுமதிப்பதும் நல்லதல்ல, இப்படியாக, தீமையை நாம் எதிர்க்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கும் அநேகக் காரியங்கள் உண்டு என்பது இவர்கள் நம்பிக்கை.

தனிநபர்கள் தங்கள் சொந்த உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கும் கூட குற்றவாளிகளின் வன்முறையை எதிர்த்து நிற்கலாம் என்று இக்கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இவர்கள். இயேசுவின் சில போதனைகள், கருத்தைத் தெளிவாக்கவும் வலியுறுத்தவும் உயர்வு நவிற்சி அணியில் அமைந்திருந்தன, இவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொள்ளக் கூடாது என்கின்றனர். இதற்கு ஓர் உதாரணம் மத்தேயு 5:29-30. இயேசுவின் நாட்களில் வாழ்ந்த எந்தப் போதகனும் இப்படி உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்திப் போதிப்பது வழக்கமே. யாரும் சவால் விட்டாலும் கூட கிறிஸ்தவர்கள் பிறரோடு சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது என்பதை இவர்கள் ஒத்துக் கொள்கின்றனர் (மத்தேயு 5:39). என்றாலும் யாரோ நமக்குத் தீங்கிழைக்கவோ அல்லது நம்மைக் கொல்லவோ முற்பட்டால் நம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகச் சண்டையிடுவது சரியே என்கின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் பகைவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும், உண்மையிலேயே தேவையில் இருப்பவர்கள் மீது கருணை காட்டவும், அவர்கள் கேட்பதைக் கொடுக்கவும் வேண்டும் என்பதையும் இவர்கள் ஒத்துக் கொள்கின்றனர் (மத்தேயு 5:43-44; லூக்கா 6:30-36). ஆனால் தேவையில் இராத ஒருவர் கேட்கிறார் என்பதற்காகவோ, அல்லது திருட முயன்றதற்காகவோ நாம் நமது பணத்தை அல்லது சொத்துக்களை எல்லாம் அவருக்குக் கொடுத்து விட வேண்டியதில்லை.

இக்கிறிஸ்தவர்கள் காவல்துறை, படை மற்றும் அரசுப் பதவிகளில் சேருவது பற்றிய இரண்டாம் வகை கண்ணோட்டத்தின் அனைத்து வாதங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இப்படிப் பங்கு பெறுவது ஏற்புடையது மட்டுமல்ல, தேவ சித்தமாகவும் இருக்கலாம் என்று நம்புகின்றனர். இந்த மூன்று முக்கியக் கண்ணோட்டங்களிலும் சிலச் சில கருத்துக்கள் சரியானவை என்று சில கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கலாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆழமான வேத ஆராய்ச்சி, தியானம், ஜெபம் இவற்றுக்குப் பிறகும் பரிசுத்த ஆவியானவரின் துணையுடனுமே இவ்விஷயங்களில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். சபை வரலாறு நெடுகிலும் முதிர்ந்த ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் இவ்விஷயங்களில் கருத்து வேறுபட்டுள்ளனர். நாம் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் சரி, வேறு கண்ணோட்டம் உடையவர்களைக் குற்றம் சொல்லவோ, இவ்விஷயங்களைப் பற்றிச் சண்டை போடவோ கூடாது.

உபத்திரவம் – நமது மறுமொழி

தீமையை எதிர்த்து நிற்பதுடன் சம்பந்தப் பட்ட ஒரு கேள்வி விசுவாசிகள் உபத்திரவப்படுத்தப்படுவது குறித்ததாகும். உபத்திரவம் என்பது நமது நற்செயல்கள் நிமித்தமாகவோ அல்லது இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தின் காரணமாகவோ மற்றவர்கள் நம்மை வதைக்கின்ற பாடுகள் ஆகும் (மத்தேயு 5:10-11; லூக்கா 6:22; 1 பேதுரு 2:20). எல்லாக் கிறிஸ்தவர்களுமே ஏதாவது ஒரு வகையில் துன்பப் படுத்தப் படுவார்களென புதிய ஏற்பாடு கற்பிக்கின்றது (மாற்கு 13:9; லூக்கா 21:12; 2 தீமோத்தேயு 3:12). கிறிஸ்தவர்களாக நாம் உபத்திரவத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இயேசு நமக்குப் போதித்தார். நாம் பயப்படக் கூடாது என்றும் (மத்தேயு 10:26), அதற்காகச் சந்தோஷப் பட்டுக் களிகூர வேண்டும் என்றும் (மத்தேயு 5:10-12) சொன்னார். பவுல் தான் பாடுகளில் களி கூருவதாகவும், காரணம் அதன் மூலம் தான் தேவ கிருபையை அனுபவிப்பதாகவும், அந்தக் கிருபை அவர் எதையும் சகிப்பதற்குப் போதுமானது என்றும் கூறினார் (2 கொரிந்தியர் 12:7-10). எனினும் நாம் சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் இயேசு சொன்னார் (மத்தேயு 10:16-17).

உபத்திரவப்படுத்துகிறவனைப் பொறுத்த வரை, நாம் நம்மைத் துன்பப் படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டியதே அன்றி சபியாமல் இருக்கவும் (ரோமர் 12:14) அவர்களிடம் அன்பு கூரவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் (மத்தேயு 5:44) கட்டளை பெறுகின்றோம். நாம் அரசாங்க அதிகாரிகள் முன்பாகவும் நீதிமன்றங்களிலும் நிறுத்தப் படலாம், சிறைகளுக்கு அனுப்பப் படலாம், ஆயினும் அவர்கள் முன்னால் என்ன பேசுவது என்பதை முன்கூட்டியே நினைத்துக் கலங்க வேண்டியதில்லை, ஏனெனில் நாம் பேச வேண்டியது இன்னது என்று அந்தச் வேளையிலே பரிசுத்த ஆவியானவர் மூலமாக இயேசு நமக்குச் சொல்லித் தருவார் (மாற்கு சரியான 13:9-11; லூக்கா 21:12-19).

இயேசுவில் விகவாசம் வைத்தற்காக நாம் தாக்கப் படுவோம் என்றால் நாம் திருப்பிச் சண்டை போடும்படி அவர் கூறவில்லை. தாம் கைது செய்யப் படுவதற்கு முன் தமது சீஷர்களைப் பார்த்து பட்டயங்கள் வாங்கிக் கொள்ளுமாறு சொன்ன போதிலும் (லூக்கா 2:35-38), தம்மைப் பாதுகாப்பதற்கு அந்தப் பட்டயங்களை அவர்கள் பயன்படுத்த அவர் அனுமதிக்கவில்லை (லூக்கா 22:51). மாறாக, பட்டயத்தை எடுப்பவர்கள் பட்டயத்தாலே மடிவார்கள் என அவர்களை எச்சரித்தார் (மத்தேயு 26:52). இயேசுவில் தங்களது விசுவாசத்தை வைத்ததற்காக உபத்திரப் படுத்தப் படும் விசுவாசிகள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களைக் காத்துக் கெள்ளும் பொருட்டு வன்முறையில் ஈடுபடக் கூடாது என்றே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

சுருக்கம்

இயேசுவின் இந்தக் கடினமான போதனைகளைப் பற்றி நாம் என்ன நினைத்தாலும் சரி, நம்மாலான வரை ஒருவரோடொருவர் சமாதானமாக வாழ வேண்டும் என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒத்துக் கொள்கின்றனர் (எபிரெயர் 12:14). ஆண்டவரின் இராஜ்யம் இப்பூமியில் நிலைநாட்டப் படப் போகின்ற, மனிதர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்கின்ற, ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதை நிறுத்துகின்ற, ஜாதிகள் இனி யுத்ததைக் கற்பதை விட்டு விடுகின்ற அந்த நாளுக்காக நாம் அனைவருமே ஆவலாய்க் காத்திருக்கிறோம் (ஏசாயா 2:4; மீகா 4:3). அதுவரை, கூடுமானால் உங்களால் ஆன மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருங்கள் (ரோமர் 12:18).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *