இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

shallow focus photography of hand and people

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

முக்கிய வசனங்கள்

எசேக்கியேல் அதிகாரங்கள் 37-47 இஸ்ரேலின் சீரமைப்பு, படையெடுப்பு மற்றும் புதிய தேவாலயம். தானியேல் அதிகாரங்கள் 7-12 எதிர்காலம் பற்றிய தானியேலின் தரிசனங்கள்.’ மத்தேயு அதிகாரம் 24 கடைசி காலத்தின் அடையாளங்கள். மாற்கு அதிகாரம் 13 கடைசி காலத்தின் அடையாளங்கள்.

லூக்கா 17:20-37; 21:5-36 தேவனுடைய இராஜ்யத்தின் வருகை.

1 கொரிந்தியர் 15:12-58 சரீர உயிர்த்தெழுதல்.

1 தெசலோனிக்கேயர் 4:13-18 கர்த்தருடைய வருகை. 2 தெசலோனிக்கேயர் 2:1-10 கர்த்தருடைய வருகைக்கு முன் அக்கிரமக்காரனுடைய வருகை.

2 பேதுரு 3:3-13 கர்த்தருடைய நாளில் அக்கினியால் எரிந்து அழிந்து போதல். 

1 யோவான் 2:18; 4:1-3 அந்திக் கிறிஸ்துவும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியும். 

வெளிப்படுத்தல் அதிகாரங்கள் 6-22 தேவ கோபாக்கினை, மனிதரின் பாடுகள், அந்திக் கிறிஸ்துவின் கிரியை, கிறிஸ்துவின் ஜெய கம்பீர ஆளுகை பற்றிய தரிசனங்கள். 

வேத வசனங்களில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

இயேசு கிறிஸ்து “ஜீவனுள்ளோரையும் மரித்தோரையும் நியாயம் தீர்க்கத் திரும்பவும் வருவார்” என எல்லாக் கிறிஸ்தவர்களுமே விசுவாசிக்கின்றனர் (மத்தேயு 25:31-46; வெளிப்படுத்தல் 20:11-15; 

இயேசு தமது சொந்த மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மட்டுமல்ல (மத்தேயு 16:21; மாற்கு 8:31-32; 9:9-10; 10:33-34), தமது இரண்டாம் வருகையையும் முன்னறிவித்தார் (மத்தேயு 16:27; 25:31; மாற்கு 8:38; 13:26). 

அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின்னர், இவ்வுலகிலே நாற்பது நாட்கள் தங்கியிருந்து தமது சீஷர்களை உற்சாகப் படுத்தினார் (அப்போஸ்தலர் 1:3). 

அவருடைய பரமேறுதலைப் பார்த்துக் கொண்டு நின்ற சீஷர்களுக்கு அவர் எப்படி ஏறிப் போனாரோ அப்படியே திரும்பவும் வருவார் என்ற ஒரு வாக்கு அருளப்பட்டது (லூக்கா 24:51; அப்போஸ்தலர் 1:9-11 பார்க்க). 

ஆதியிலிருந்தே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கவும் எதிர்பார்த்திருக்கவும் வேண்டுமென அப்போஸ்தலர்கள் விசுவாசிகளுக்குக் கற்பித்து வந்தனர் (அப்போஸ்தலர் 3:19-21; தீத்து 2:13; எபிரெயர் 9:28).

இயேசு பரலோகத்தில் நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போவதாகவும், ஆயத்தம் பண்ணின பின்பு அவர் இருக்கிற இடத்திலே நாமும் இருக்கும்படி மறுபடியும் வந்து நம்மைத் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளப்போவதாகவும் வாக்களித்துச் சென்றார் (யோவான் 14:2-3). 

இயேசு தம்மைப் பின்பற்றுவோரைக் கடைசி நாளில் எழுப்புவதாகவும் வாக்குத்தத்தம் செய்தார் (யோவான் 6:39-40,54). 

கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப் படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அதன் பின்பு முடிவு உண்டாகும் என்று பவுல் எழுதுகின்றார் (1 கொரிந்தியர் 15:22-24)

பவுல் நமது சரீர உயிர்த்தெழுதலை நமது புத்திர சுவிகாரத்தின் நிறைவு என்றும், அப்பொழுது நமது இரட்சிப்பு முழுமை பெற நாம் மகிமையடைவோம் என்றும் விவரிக்கிறார் (ரோமர் 8:18-25, 30; பிலிப்பியர் 3:20-21;  இரட்சிப்பின் வழி – பார்க்க).

இந்த உயிர்த்தெழுதல் சடுதியாய் நடைபெறும் ஒரு சம்பவம். 1 தெசலோனிக்கேயர் 4:13- 17இல், இயேசுவுக்குள் நித்திரை அடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார் என்று பவுல் எழுதுகின்றார். ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். மரித்தவர்களுக்கு சாவாமை உள்ள புதிய சரீரங்கள் கொடுக்கப் படும், உயிரோடிருப்பவர்களுக்கு அவர்களது பழைய சரீரங்கள் புதிதாய் மாறும்; இதெல்லாம் கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நடைபெறும் (1கொரிந்தியர் 15:51-53). வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே தமது தூதர்களை அனுப்புவது பற்றியும், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களை உலகெங்கிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பது பற்றியும் இயேசுவும் குறிப்பிட்டார் (மத்தேயு 24:30-31; மாற்கு 13:26-27). அப்பொழுது ஒரே படுக்கையில் படுத்திருக்கும் (அல்லது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் அல்லது எந்திரம் அரைத்துக் கொண்டிருக்கும்) இருவரில் ஒருவர் ஏற்றுக் கொள்ளப் படுவார், அடுத்தவர் கைவிடப் படுவார் என்றும் அவர் எச்சரித்தார் (மத்தேயு 24:40-41; லூக்கா 17:34-35). அநேகர் இச்சம்பவங்களை திருச்சபை “எடுத்துக் கொள்ளப் படுதல்” என்று குறிப்பிடுகின்றனர்.

இரண்டாம் வருகை மற்றொரு விதத்திலும் முக்கியமானது. அது தேவன் பூமிக்கு நீதியையும் சமாதானத்தையும் கொண்டுவரும் வேளையாகும். பழைய ஏற்பாடானது இயேசு கிறிஸ்துவை மேசியாவாகக் காட்டும் அநேக தீர்க்கதரிசனங்களைக் கொண்டது. சில தீர்க்கதரிசனங்கள் மக்களின் பாவங்களுக்காகவும் துக்கங்களுக்காகவும் அவர் மரிப்பார் என முன்னறிவித்தன (சங்கீதம் 22:1-31; ஏசாயா 53:1-12; தானியேல் 9:25,26); இவையெல்லாம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்து, உயிரோடு எழுந்தபோது நிறைவேறின. வேறு சில தீர்க்கதரிசனங்கள் மேசியா, தம்மால் தெரிந்து கொள்ளப் பட்ட யூத ஜனங்களுக்காக ஒரு நீதியின் இராஜ்யத்தை நிலைப்படுத்துவார் என முன்னறிவித்தன (ஏசாயா 2:1-4; 11:1-16; எரேமியா 23:3-8; எசேக்கியேல் 37:15-28); இவை இயேசு இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் நிறைவேறவில்லை.

சில வேத பகுதிகள் இரண்டாம் வருகை சமீபம் (எபிரெயர் 10:25; யாக்கோபு 5:9;1 யோவான் 2:18; வெளிப்படுத்தல் 22:7,12,20), ஆனால் அந்தக் குறிப்பிட்ட நாளையோ, வேளையையோ யாரும் அறிய மாட்டார்கள் என்கின்றன (மத்தேயு 24:36,44; மாற்கு 13:32-35). மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும், அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும், மனுஷகுமாரன் . வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (மத்தேயு 24:27,30; லூக்கா 17:24; வெளிப்படுத்தல் 1:7). இயேசு தமது வருகையை திருடன் ஒரு வீட்டைக் கன்னமிட்டுத் திருடுகிறதற்கும், எந்த முன்னறிவிப்பும் இன்றி எஜமான் தன் வீட்டுக்குத் திரும்ப வருகிறதற்கும் ஒப்பிட்டுப் பேசினார் (மத்தேயு 24:42-51; மாற்கு 13:34-37; வெளிப்படுத்தல் 3:3; 16:15). பவுலும் பேதுருவும் இதே போன்றே எச்சரிப்புகளைக் கொடுத்தனர் (1 தெசலோனிக்கேயர் 5:1-4; 2 பேதுரு 3:10).

ஆயினும், இயேசுவின் வருகை சமீபம் என்பதைக் காட்டக் கூடிய சில அடையாளங்கள் உண்டு என்றும் வேதம் போதிக்கிறது (மாற்கு 13:28-29), “இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகம் எங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப் படும், அப்போது முடிவு வரும் என்றார் இயேசு (மத்தேயு 24:14; மாற்கு 13:10). கடைசி நாட்களில் அக்கிரமக்காரர் இன்னும் கேடாவார்கள், அநேகர் விசுவாசத்தை விட்டு வழுவிப் போவார்கள், இரண்டாம் வருகையைக் குறித்து மனிதர்கள் பரிகாசம் செய்வார்கள் (மத்தேயு 24:9-14; 2 தீமோத்தேயு 3:1-7,13; 2 பேதுரு 3:3-10; யூதா 17-19). யுத்தங்களும், பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் பூமியிலே உண்டாகும் என்றும், கூடவே சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும் என்றும் இயேசு முன்னறிவித்தார் (மாற்கு 13:24-28; லூக்கா 21:10-11, 25-26; வெளிப்படுத்தல் 6,8,9,16 அதிகாரங்கள்) இந்தத் துன்ப காலம் மகா உபத்திரவ காலம் (அல்லது) கொடுத்துன்ப காலம் என அழைக்கப் படுகிறது(தானியேல் 12:1; மாற்கு 13:19-20; வெளிப்படுத்தல் 7:14).

மக்களை வஞ்சிக்கும் படியாக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யக் கூடிய கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என இயேசு எச்சரித்தார் (மாற்கு 13:6, 21-23). அநேக அந்திக்கிறிஸ்துக்கள் வந்திருக்கிறார்கள் என்று மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அந்திக் கிறிஸ்துவும் வருவான் என்பதாக யோவான் எழுதினார் (1யோவான் 2:18-22; 4:1-3). தெசலோனிக்கேயருக்கு, கர்த்தருடைய நாள் இன்னும் வரவில்லை என்பதை உறுதிப் படுத்தும் வண்ணமாக கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப் பட்டால் ஒழிய அந்த நாள் வராது என்று பவுல் எழுதினார்; அந்தப் பாவ மனுஷன் சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் வருவான், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத் தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் (2 தெசலோனிக்கேயர் 2:1-10; வெளிப்படுத்தல் 13:14-15). தேவாலயத்தில் காணப்படும் இந்த விக்கிரகமே, இயேசு முன்னுரைத்த’ பாழாக்குகிற அருவருப்பாய் இருக்க வேண்டும் (தானியேல் 9:26-27; 12:11; மத்தேயு 24:15; மாற்கு 13:14)

வெளிப்படுத்தல் 6-15 அதிகாரங்கள் மகா உபத்திரவங்களையும் கொடுந்துன்பங்களையும் பற்றிய தரிசனங்களால் நிறைந்து காணப் படுகின்றன. அவற்றின் முடிவில் இயேசு கிறிஸ்து நீதியின் இராஜ்யத்தை நிலை நாட்ட பூமிக்குத் திரும்பி வருகிறார், அதிகாரங்கள் 13-19, ஓர் அரசியல் ஆட்சியாளனையும் (கடலிலிருந்து எழும்பி வரும் மிருகமாகச் சித்தரிக்கப்படுபவன்) அந்திக் கிறிஸ்துவுக்காகப் பொல்லாத கிரியைகளை நடப்பிக்கின்ற ஒரு கள்ளத் தீர்க்கதரிசியையும் குறித்துப் பேசுகின்றன (தானியேல் 7:24-25; 9:26-27; 11:36-45; 12:1-13; மாற்கு 13:14,22: 2 தெசலோனிக்கேயர் 2:1-10; 1 யோவான் 2:18). இந்த அதிபதி பூமியின் திரளான சேனைகளை அர்மகெதோன் என்ற இடத்தில் கூட்டிச் சேர்ப்பான், அங்கே அவர்கள், மறுபடியும் பூமிக்கு வரும் கிறிஸ்துவால் முறியடிக்கப் படுவார்கள் (வெளிப்படுத்தல் 16:16; 17:14; 19:11-21). எசேக்கியேல் 38-39 அதிகாரங்களும், 2 தெசலோனிக்கேயர் 2:8 உம் கூட இந்த யுத்தத்தையே வருணிப்பதாகத் தோன்றுகிறது.

ஜனங்களை மோசம் போக்க முடியாதபடிக்குப் பிசாசானவன் ஆயிரம் ஆண்டுகள் பாதாளத்தில் தள்ளி அடைத்து வைக்கப் படுவது பற்றி வெளிப்படுத்தல் 20:1-7 கூறுகிறது. இதுவே ஆயிரமாண்டு அரசாட்சி என்று குறிப்பிடப் படுகிறது. (மிலெனியம் – இலத்தீன் மொழி – ஆயிரம் ஆண்டுகள்). கொடுந்துன்ப காலத்தில் மிருகத்தின் சிலையை வணங்க மறுத்ததற்காகக் கொல்லப் பட்டோரின் ஆத்துமாக்கள் மீண்டும் உயிரோடு எழுப்பப்படும். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. உயிர்த்து எழுந்தவர்கள் கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். இந்த ஆயிரமாண்டு காலத்துக்குப் பிறகு சாத்தான் கொஞ்சக் காலம் விடுதலையாகிறான். சுற்றித் திரிந்து நாடுகளை மோசம் போக்கி, ஜனங்களை தேவனோடும் அவருடைய மக்களோடும் யுத்தம் பண்ணுவதற்காகக் கூட்டிச் சேர்க்கிறான். வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போடுகிறது. சாத்தான் நாகத்தில் தள்ளப் படுகிறான், மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் இறுதி நியாயத் தீர்ப்பு அடைகின்றனர். ஜீவ புஸ்தகத்திலே எழுதப் பட்டவனாகக் காணப் படாதவன் எவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப் பட்டான் (வெளிப்படுத்தல் 20:7-15).

இரண்டாம் வருகை பற்றிய மூன்று முக்கியக் கண்ணோட்டங்கள் 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய வேத பகுதிகள் அநேகம் இருந்த போதிலும், பல விஷயங்கள் மறைவாகவே உள்ளன. கடைசி நாட்களின் சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்துக் கூறும் முழுமையான வேதபகுதி என்று எதுவுமேயில்லை. இதன் காரணமாக, இரண்டாம் வருகை பற்றி மூன்று முக்கியக் கருத்துக்கள் நிலவுகின்றன. வெளிப்படுத்தல் 20ஆம் அதிகாரத்தில் காணப்படும் ஆயிரமாண்டு அரசாட்சி எப்போது இடம்பெறும் என்ற விஷயத்தில் இந்த மூன்று கண்ணோட்டங்களும் வேறுபடுகின்றன. முதலாவது கண்ணோட்டம், “ஆயிரமாண்டு அரசாட்சி என்று பூமியில் எதுவும் கிடையாது”; பதிலாக, ஏற்கனவே மரித்துப் போன விசுவாசிகளுடன் சேர்ந்து தற்போது கிறிஸ்து பரலோகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் ஆளுகையையே இத்தரிசனம் குறிக்கிறது என்று சொல்கிறது. இந்தக் கண்ணோட்டம் உடைய கிறிஸ்தவர்கள் “ஆயிரம்” என்பது முழுமையைக் குறிக்கும் எண் எனவும், இது இயேசுவின் முதலாம் மற்றும் இரண்டாம் வருகைகளுக்கு இடைப்பட்ட காலத்தையே குறிக்கும் எனவும் நம்புகின்றனர். சாத்தான் என்று சொல்லப் பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தைக் கட்டி வைப்பது என்பது (வெளிப்படுத்தல் 20:2), கிறிஸ்துவின் முதலாம் வருகையில் ஆவிக்குரிய விதத்தில் சாத்தான் முறியடிக்கப் பட்டதற்கும் பரிசுத்த ஆவியானவரின் தடை செய்கிற வல்லமைக்கும் ஒரு அடையாளமாகக் கூறப் படுகிறது என்பது இவர்கள் கருத்து (லூக்கா 10:18; 2 தெசலோனிக்கேயர் 2:7; 1யோவான் 3:8). இந்தக் கிறிஸ்தவர்கள், மரித்துப் போன விசுவாசிகளின் ஆத்துமாக்கள் (வெளிப்படுத்தல் 20:4) இப்பொழுதே கிறிஸ்துவுடன் தான் உள்ளன என்பதையும் (2 கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 1:23-24; 1 தெசலோனிக்கேயர் 4:14; 2 பேதுரு 1:13-14), தேவனுடைய இராஜ்யம் ஏற்கனவே வந்தாயிற்று (மத்தேயு 11:12; 12:28; கொலோசெயர் 1:13), ஆனால் அது கண்ணுக்குப் புலப்படுகின்ற, இவ்வுலகத்திற்குரிய இராஜ்யமல்ல என்பதையும் (லூக்கா 17:20-21; 18:36-37 ரோமர் 14:17) வலியுறுத்துகின்றனர். தானியேலின் எழுபது வாரங்கள் யோவான் தீர்க்கதரிசனம் (தானியேல் 9:24-27) இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து வந்த திருச்சபையின் தோற்றம், யூதர்களின் தேவாலயத்தில் தனது உருவச் சிலையை ஸ்தாபிக்க முயன்ற ரோமப் பேரரசனின் முயற்சி, எருசலேம் மற்றும் அதன் தேவாலயத்தின் அழிவு, அதன் விளைவாக முடிவுக்கு வந்த பலிகள் என்னும் சம்பவங்களிலேயே நிறைவேறி விட்டது என இவர்கள் நம்புகின்றனர். இந்தக் கண்ணோட்டம் உள்ளவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் (வெளிப்படுத்தல் 20:5), ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் மட்டுமே எனவும், காரணம் விசுவாசிகளாகிய நம்மை தேவன் ஏற்கனவே கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்து …. நம்மை அவரோடே கூட எழுப்பி .. உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்து விட்டார் எனவும் சுட்டிக் காட்டுகின்றனர் (எபேசியர் 2:4-6; 5:14; கொலோசெயர் 3:1).

இந்த முதலாவது கண்ணோட்டத்தின் படி, “இரண்டாம் உயிர்த்தெழுதல்” என்பது சரீர உயிர்த்தெழுதல் ஆகும், இது கிறிஸ்து பூமிக்குத் திரும்ப வருகையில் நடைபெறும். இந்தக் கிறிஸ்தவர்கள் ஒரேயொரு சரீர உயிர்த்தெழுதல் மட்டுமே உண்டு என்றும் அதாவது, ஒரே சமயத்தில் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் உயிர்த்தெழுவர் – ஒரேயொரு கடைசி நியாயத்தீர்ப்பு மட்டுமே உண்டு என்று நம்புகின்றனர் (தானியேல் 12:2; மத்தேயு 25:31-46; யோவான் 5:28-29; வெளிப்படுத்தல் 20:11- 15). விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போய் நடுவானில் அவரைச் சந்திப்பார்கள் (1 தெசலோனிக்கேயர் 4:17), பிறகு உடனடியாகவே பூமிக்கு வந்து கடைசி யுத்தத்தில் பங்கு பெற்று சாத்தானையும் அவன் சேனைகளையும் என்றென்றைக்குமாய் முறியடிப்பார்கள் (வெளிப்படுத்தல் 19:11-21; 20:7-10). இவர்கள் பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு ஒரு இராஜ்யம் இப்பூவுலகில் ஏற்படுத்தப் படுவது பற்றிய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் முழுமையாகக் கிறிஸ்தவ திருச்சபைக்கே கொடுக்கப் பட்டவை என நம்புகின்றனர் (யோவேல் 2:28-32 ஐ அப்போஸ்தலர் 2:14-21 உடனும், சகரியா 9:9-13 ஐ மத்தேயு 21:1-9 உடனும், மல்கியா 4:1-6ஐ மத்தேயு 11:11-14; 17:10-13; ரோமர் 4:16; கலாத்தியர் 4:22- 31 உடனும் ஒப்பிட்டுப் பார்க்க.) ஆகவே, இவர்கள் இத்தரிசனங்கள் எல்லாம் ஒன்று, தற்காலத் திருச்சபை யுகத்திலேயே நிறைவேறி விட்டன என்றோ, அல்லது வெளிப்படுத்தல் 21-22 கூறும் புதிய வானம் புதிய பூமியில் மட்டுமே நிறைவேறும் என்றோ விசுவாசிக்கின்றனர்.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய இரண்டாவது கண்ணோட்டம், “பூமியில் வெகு நீண்ட சமாதானமும் செழிப்பும் நிறைந்த ஒரு கால கட்டத்திற்குப் பிறகே” இயேசுவின் வருகை சம்பவிக்கும், அக்காலத்தில் உலகின் பெரும்பகுதி தேவனிடமாகத் திரும்பி கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் என்கிறது. இந்த நீண்ட காலம் ஒருவேளை துல்லியமாக ஓராயிரம் ஆண்டுகளாக இல்லாதிருக்கலாம். இந்த இரண்டாவது கண்ணோட்டம் உடையவர்கள் கிறிஸ்துவின் முதல் வருகையுடன் தேவனுடைய இராஜ்யம் ஆரம்பித்து விட்டது என்ற முதல் கண்ணோட்டத்தின் கருத்தை ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் உலகமானது கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவின் ஆளுகை சபை மூலமாகப் பெருகிக் கொண்டே போவதைக் காணும் என்று நம்புகின்றனர் (மத்தேயு 28:18; எபேசியர் 1:19-23), இராஜ்யத்தின் சுவிசேஷம் (மத்தேயு 24:14) பெரும்பாலான மக்களை ஆதாயம் செய்து கிறிஸ்துவண்டை கொண்டு வரும், திருச்சபை மூலமாக சமாதானமும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் நிறைந்த ஓராயிரம் ஆண்டுகள் (அல்லது மிக நீண்ட காலம் வரும் (யோவேல் 2:28-32; அப்போஸ்தலர் 2:17-21). கடைசி நாட்களில் ஜாதிகள் யுத்தம் செய்வதை நிறுத்தி தேவனுடைய அறிவைத் தேடும் என்பது போன்ற ஏராளமான தீர்க்கதரிசனங்களை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் (ஏசாயா 2:1-4; மீகா 4:1-5; சகரியா 8:20-23). வேறு அநேகத் தீர்க்கதரிசனங்களும் இந்த நீண்ட கால கட்டத்தைக் குறிப்பால் காட்டுகின்றன. இயேசு பூமிக்கு மீண்டும் வருவதற்கு முன் தமது திருச்சபை மூலமாகத் தமது ஆட்சியை நிறுவுவார் என்று இவர்கள் நம்புகின்றனர் (சங்கீதம் 2:72; ஏசாயா 11:6-10; எசேக்கியேல் 37:15-28; சகரியா 9:9-10). இந்த இரண்டாம் கண்ணோட்டம் முதலாம் கண்ணோட்டத்தைப் போலவே கிறிஸ்துவின் வருகை, சரீர உயிர்த்தெழுதல், இறுதி நியாயத் தீர்ப்பு ஆகிய அனைத்தும், வெளிப்படுத்தல் 21-22 ஆம் அதிகாரங்களில் விவரிக்கப் பட்டுள்ள புதிய வானமும் புதிய பூமியும் ஏற்படுவதற்குச் சற்றே முன்னர், ஒரு நொடிப் பொழுதிலே ஒன்றாக நடைபெறும் என்று கருதுகிறது,

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய மூன்றாவது கண்ணோட்டம் “பூமியில் ஆயிரமாண்டு அரசாட்சி ஏற்படுவதற்கு முன்பே” இயேசு பூமிக்குத் திரும்ப வருவார் எனவும், இந்தக் காலகட்டத்தில் அவரோடு சேர்ந்து ஆளும்படியாக அத்தனை விசுவாசிகளும் உயிரோடு எழுப்பப் படுவர் எனவும் நம்புகிறது. இந்த மூன்றாவது கருத்தையுடைய கிறிஸ்தவர்கள், தீர்க்கதரிசிகள் குறிப்புகளாக, அடையாளங்களாகப் பேசியது உண்மைதான் என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அடையாளங்களாகப் பேசிய அனைத்தும் ஒரு நாளிலே உண்மையாகவே நடைபெறும் என்பதையும் வலியுறுத்துகின்றனர். ஆகவே, இவர்களில் பெரும்பாலானோர் யூதர்களுக்கு அருளப் பட்ட பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்கள் எல்லாம் வரப் போகின்ற அந்த ஆயிரமாண்டு அரசாட்சியில் நிறைவேறியே தீரும் என்று நம்புகின்றனர் (ஏசாயா 11:1-16; 65:18-25; எரேமியா 23:5- 8; எசேக்கியேல் 37:15-28; சகரியா 14:9-21),

ரோமர் 11:25-29 இல் பவுல். ஒரு நாளிலே யூதர்கள் சுவிசேஷத்துக்குச் செவி கொடுப்பார்கள் என்று காட்டுவதற்குப் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களைச் சுட்டிக் காண்பிக்கிறார். மேலும், கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப் பட்டுள்ள கால கட்டங்கள் உவமானமோ அடையாளமோ அல்ல, உண்மையான கால அளவுகளைக் குறிப்பவை என்றும் நம்புகின்றனர். வெளிப்படுத்தல் 6-19 அதிகாரங்கள் உண்மையாகவே வரப் போகின்ற ஒரு கொடுந்துன்ப காலத்தை விவரிக்கின்றன. அது மிகச் சரியாக கிறிஸ்து தமது ஆயிரமாண்டு அரசாட்சிக்காக பூமிக்கு வருவதற்கு முன்பு இடம்பெறும் என்று இவர்கள் நம்புகின்றனர் (தானியேல் 12:1; மாற்கு 13:24-27; லூக்கா 21:10-11, 25-27). இவர்கள் தானியேல் கூறும் “எழுபது வாரங்கள்’ வரலாற்றில் உண்மையாகவே 490 ஆண்டுகளைக் குறிக்கும் என்று நம்புகின்றனர் (தானியேல் 9:24- ” 27). முதல் அறுபத்தொன்பது “வாரங்கள்” (அல்லது 483 வருடங்கள்), எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல் ஆரம்பிக்கின்றன. அது கி.மு. 445 இல் நடைபெற்றது (நெகேமியா 2:1-9), அது பிரபுவாகிய மேசியா’ வரும் வரை தொடரும். மேசியா சங்கரிக்கப் படுவார் (இயேசுவின் சிலுவை மரணத்தில் நிறைவேறியது), எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப் படும் (ரோமப் படையினரால் கி.பி. 70 இல் நிறைவேறியது). இக்கிறிஸ்தவர்கள், தானியேலின் கடைசி வாரம், அதாவது எழுபதாவது வாரமான கடைசி ஏழு ஆண்டுகள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் நிறைவேறவில்லை, அது கிறிஸ்து இப்பூமியில் தமது இராஜ்யத்தை நிலை நாட்டத் திரும்பி வருவதற்கு முன்னான அந்தக் கடைசி ஏழாண்டுகள் எனும் கால கட்டத்திலேயே நிறைவேறும் என்று

L நம்புகின்றனர். இந்த மூன்றாவது கண்ணோட்டம் தானியேல் கூறும் ராஜா அல்லது வரப்போகிற பிரபு என்பவனும் (தானியேல் 7:24,25; 9:26,27; 11:36), பவுல் கூறும் கேட்டின் மகன் அல்லது அக்கிரமக்காரன் என்பவனும் (2 தெசலோனிக்கேயர் 2:1-10) ஒருவனே, வெளிப்படுத்தல் 13-19 அதிகாரங்கள் கூறும் மிருகம் அல்லது கள்ளத் தீர்க்கதரிசி என்பதும் இவனையே குறிக்கும் என்று கருதுகின்றது. இந்த அதிபதி கொடுந்துன்ப காலத்தின் ஏழாண்டுகளின் மத்தியில் இஸ்ரேலுடனான தனது உடன்படிக்கையை முறித்து தனது சிலைக்கு ஆராதனை செய்யுமாறு அதை யூதர்களின் புதிய பரிசுத்த ஆலயத்தில் வைப்பான் (தானியேல் 9:27; 12:11; மாற்கு 13:14; 2 தெசலோனிக்கேயர் 2:4; வெளிப்படுத்தல் 13:14-15; எசேக்கியேல் 40-47 அதிகாரங்கள்). உபத்திரவ காலத்தில் கணக்கற்ற யூதர்களும், பிற நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற புறஜாதி மக்களும் இயேசுவில் விசுவாசம் வைப்பர் (ரோமர் 11:25-31; வெளிப்படுத்தல் 7:4, 9, 14). ஆனால் மிருகத்தின் சிலையை வணங்க மறுத்ததற்காக சித்திரவதைக்கும் மரணத்துக்கும் ஆளாக்கப் படுவர் (வெளிப்படுத்தல் 6:9- 11; 14:3; 15:2-4; 20:4). கொடுந்துன்ப காலத்தின் முடிவில் மிருகத்தின் சேனைகள், வெற்றி வேந்தராம் இயேசு கிறிஸ்துவின் வருகையால் அர்மகெதோன் என்ற இடத்தில் முறியடிக்கப் படும் (சகரியா 14:1-9; வெளிப்படுத்தல் 19:11-21). இந்தக் கிறிஸ்தவர்கள், மத்தேயு 25:31-46 ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிப்பதற்கு முன், அச்சமயம் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்போரின் நியாயத் தீர்ப்பைப் பற்றி விவரிக்கிறது என்றும், வெளிப்படுத்தல் 20:1-12 இல் குறிக்கப் படும் இரண்டு உயிர்த்தெழுதல்களுமே சரீர உயிர்த்தெழுதலே என்றும், அவற்றுள் முதலாவது, ஆயிரமாண்டு அரசாட்சிக்கு முன் மரித்திருந்த விசுவாசிகளின் உயிர்த்தெழுதல், இரண்டாவது அந்த அரசாட்சிக்குப் பின் நடைபெறும் இறுதி நியாயத் தீர்ப்புக்காக எழுப்பப் படும் அவிசுவாசிகளின் உயிர்த்தெழுதல் என்றும் நம்புகின்றனர். அப்பொழுது பழைய வானமும் பூமியும் அக்கினியினால் அழிக்கப் படும், புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும் (2 பேதுரு 3:10-13; வெளிப்படுத்தல் 21:1),

இந்த மூன்றாவது கண்ணோட்டம் உடையவர்கள், ஆண்டவரை நடுவானில் சந்திக்கும் படியாக விசுவாசிகள் எப்பொழுது உயிரடைவர் (அல்லது அவர்களது சரீரங்கள் மாறும்) என்ற விஷயத்தில் கருத்து உடன்படுவதில்லை. இவர்களில் அநேகர் தமது இரண்டாம் வருகையில், இயேசு இருமுறை பூமிக்கு வருவார் என நம்புகின்றனர். முதல் முறை வருவது, சடுதியான, வந்த வேகத்தில் திரும்புகின்ற வருகை – இதில் கொடுந்துன்ப நாட்கள் ஆரம்பிப்பதற்குச் சற்றுமுன், அதுவரை இயேசுவில் விசுவாசம் வைத்த அனைவரையும் உயிரோடு எழுப்பிக் கொண்டு செல்லும் படியாக மேகங்கள் மீதில் வருவார் (1 தெசலோனிக்கேயர் 4:17), வந்த வேகத்தில் பரலோகம் திரும்பி, அங்கே ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்து நடைபெறும் (மத்தேயு 25:1-13; வெளிப்படுத்தல் 19:9). இந்த முதல் வருகை இரவிலே திருடன் வருகிற விதமாய், எதிர்பாராத வேளையில் நடைபெறும் (மத்தேயு 24:42-51; 1 தெசலோனிக்கேயர் 5:1-4; வெளிப்படுத்தல் 3:3). இரண்டாம் முறை வருவது, இயேசு உயிர்த்தெழுந்த தமது விசுவாசிகளுடன் பூமிக்குத் திரும்பி, மிருகத்தைத் தோற்கடித்து, தமது அரசாட்சியை நிலை நாட்டுவதாகும். யோவான் 14:2-3 இல் இயேசு நம்மைத் தம்மோடு கூட்டிச் செல்வதற்காக மீண்டும் வருவேன் என வாக்களித்துச் சென்றார். எடுத்துக் கொள்ளப் பட்டவர்கள் மற்றும் கைவிடப் பட்டவர்கள் எனத் திடீரென ஒரு பாகுபாடு ஏற்படுவதை இவ்விசுவாசிகள் சுட்டிக் காட்டுகின்றனர் (மத்தேயு 24:40-41). தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்கவில்லை என்று பவுல் எழுதுகிறார் (1 தெசலோனிக்கேயர் 5:9). ஆகையால் இனி சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நாம் தப்பும் படியாக எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டுமென்று இயேசு சொன்னார் (லூக்கா 21:36). இந்தக் கிறிஸ்தவர்கள், வெளிப்படுத்தல் 20:4-6 மிருகத்தை வணங்க மறுத்ததால் சிரச்சேதம் செய்யப் பட்டவர்களின் உயிர்த்தெழுதல் பற்றியே பேசுகிறது என்று கருதுகின்றனர். உண்மையான விசுவாசிகள் அனைவரும் உயிருடன் எழுப்பப்பட்டு உபத்திரவ காலம் தொடங்கு முன்னதாகவே பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவர் என்றும், வெளிப்படுத்தல் 20:4- 6 கூறும் உயிர்த்தெழுதல், ஏழாண்டு கால கொடுந்துன்ப நாட்களில் விசுவாசிகளாகி, மரித்தவர்கள் மீண்டும் உயிரோடு எழுவது பற்றியது என்றும் இவர்கள் நம்புகின்றனர். மரித்த அவிகவாசிகளோ கடைசி நியாயத் தீர்ப்பு வேளையில் தான் எழுப்பப் படுவர்.

எனினும், மூன்றாவது கண்ணோட்டம் கொண்ட மற்றவர்கள் (அதாவது, ஆயிர வருட ஆளுகைக்கு முன் இயேசு திரும்பி வருவார் என்போர்), ஏழாண்டு உபத்திரவ காலத்தில் திருச்சபையானது பூமியில் கொடிய பாடுகளை அனுபவிக்கும் என நம்புகின்றனர். இரண்டாம் வருகையின் போது உயிரோடிருக்கும் விசுவாசிகள், மரித்து உயிரோடு எழுந்த விசுவாசிகளுடன் வரும் கிறிஸ்துவை நடுவானில் கண்டு சந்திப்பர் என்பதை இவர்கள் ஒத்துக் கொள்கின்றனர்; ஆனால் இது ஏழாண்டு உபத்திரவ காலத்தின் முடிவில் தான் நடைபெறும் என்று இவர்கள் நம்புவதால், இயேசு அப்படியே பூமிக்கு வந்து அர்மகெதோனில் மிருகத்தை முறியடித்து தமது இராஜ்யத்தை நிறுவுவார் என்கின்றனர். மத்தேயு 24:15-31 இல் சடுதியாய் தொனிக்கும் எக்காள சத்தமும், மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்ட விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்படுவதும், கொடுந்துன்பங்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தின் முடிவில் கிறிஸ்து எல்லாரும் காணும் விதமாக மகிமையோடும் வல்லமையோடும் திரும்ப வருவதோடு இணைத்தே கூறப் படுவதை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். லூக்கா 17:26-37இல் ஒருவன் ஏற்றுக் கொள்ளப் படுவதும் அடுத்தவன் கைவிடப் படுவதும் கூடத் திடீரென வரும் அழிவையே காட்டுகிறது என்கின்றனர். இயேசு உண்மையில் தாம் இருமுறை வரப் போவதாக ஒருபோதும் கூறவில்லை. எனவே கிறிஸ்துவின் வருகை, முதலாம், இரண்டாம் கண்ணோட்டங்கள் கூறுவது போல ஒரே சம்பவம் என்பதை இவர்களும் நம்புகின்றனர்; ஆனால் அவர்களைப் போலன்றி இவர்கள், இரண்டாம் வருகையானது கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்னரே நடைபெற்று விடும் என்கின்றனர். இக்கிறிஸ்தவர்கள் இரண்டே உயிர்த்தெழுதல்கள் தாம் உண்டு என நம்புகின்றனர் : முதலாவது, உபத்திரவ காலத்திற்குப் பின்பு ஆனால் ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு நடைபெறும் கிறிஸ்துவின் வருகையின் போது அனைத்து விசுவாசிகளும் உயிர்த்தெழுவது; இரண்டாவது, இறுதி நியாயத் தீர்ப்புக்கு முன் மரித்துப் போன அவிசுவாசிகள் உயிர்த்தெழுவது. 

சுருக்கம்

நமது கண்ணோட்டம் எதுவாயினும் இவ்விஷயத்தைக் குறித்து வாக்குவாதம் செய்யவோ, சண்டை போடவோ கூடாது. இயேசு கிறிஸ்து அவரோடு நித்தியமாய் நாம் வாழும் படியாக நம்மை உயிரோடு எழுப்பத் திரும்பி வருவார் என்பதை நாம் எல்லாருமே விசுவாசிக்கிறோம். இரண்டாம் வருகையானது நமது தனிப்பட்ட வாழ்விலும், பொது ஊழியத்திலும் நம்மை ஊக்குவிக்க வேண்டும். நமது விசுவாசம் மற்றும் சாட்சியின் விளக்குகள் அணைந்து விடாதபடி காத்துக் கொண்டு அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருக்கும் படி எச்சரிக்கப் படுகிறோம் (மத்தேயு 25:1-13). நாம் பரிசுத்த நடக்கையும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் தூங்காமல் விழித்துக் கொண்டு தெளிந்த புத்தி உள்ளவர்களாய், நமது இருதயங்கள்.. லவுகீக கவலைகளினால் பாரம் அடையாத படிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென கட்டளை பெறுகிறோம் (லூக்கா 21:34-36; 1 தெசலோனிக்கேயர் 5:4-11; 2 பேதுரு 3:11-14). நாம் தூங்குகிறவர்களாகவோ, மற்றவர்களைக் கொடூரமாய் நடப்பிக்கிறவர்களாகவோ காணப் படாமல், நமது எஜமான் நமக்குக் கொடுத்த வேலையை உண்மையாய்ச் செய்கிறவர்களாகக் காணப் படும் படிக்கு, உறுதியாய் நிற்கவும் விழித்திருக்கவும் வேண்டியவர்கள் (மத்தேயு 24:45-51; 25:14-30; மாற்கு 13:35-37; 1 கொரிந்தியர் 3:11-15; 15:58; 2 கொரிந்தியர் 5:10). அது சுவிசேஷ ஊழியமாகவோ (மத்தேயு 24:14; மாற்கு 13:10) உதவி செய்யும் ஊழியமாகவோ (மத்தேயு 25:31-46) இருக்கலாம். நமது தனிப்பட்ட மனந்திரும்புதல், தனிப்பட்ட நடத்தை, தனிப்பட்ட சாட்சி இவை உண்மையில் அவரது வருகையைத் துரிதப் படுத்தக் கூடும் (மாற்கு 13:10; அப்போஸ்தவர் 3:19-21; 2 பேதுரு 3:11-12). ஏனெனில்… தேவ கிருபையானது பிரசன்னமாகி, நாம் தெளிந்த புத்தியும் நீதியும் தேவ பக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகர தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படி நமக்குப் போதிக்கிறது (தீத்து 2:11-13). ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும் (வெளிப்படுத்தல் 22:20).

பின்குறிப்புகள்

1 தேவாலயம் இடிக்கப் பட்டுத் தரை மட்டமாகும் என்றும் நகரம் படைகளால் முற்றுகையிடப் படும் என்றும் கூட இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார் (லூக்கா 21:6,20-24); கி.பி. 70 இல் எருசலேமும் அதன் தேவாலயமும் ரோமப் படையினால் அழிக்கப் பட்டன. இயேசு முன்னுரைத்த பாழாக்கும் அருவருப்பு, ரோமப் பேரரசன் கலிகுலா (கி.பி. 37-41), யூதர்களின் தேவாலயத்தில் மக்கள் தன்னை ஆராதிக்கும் படியாக அங்கே நிலைநாட்ட முயன்ற, ஆனால் தோல்வி கண்ட அவனது உருவச் சிலையையே குறிக்கிறது என்று சில அறிஞர்கள் நம்புகின்றனர். ஆனால் மற்றவர்களோ, இயேசு உரைத்த தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியானது கடைசி நாட்களில் நிறைவேறும் என்று நம்புகின்றனர்.

2 அநேக அறிஞர்கள் இந்த 483 ஆண்டுகள் ஒவ்வொன்றும் 360 நாட்களை மட்டுமே கொண்டது (மாதத்துக்கு 30 நாட்கள்) என்று நம்புகின்றனர்; காரணம், இதற்கு இணையாக தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் நூல்களில் காணப்படும் மூன்றரை ஆண்டு காலம் (அல்லது 42 மாதங்கள்) என்பது 1260 நாட்கள் கொண்டதாகவே கூறப்படுகிறது (தானியேல் 7:25; 12:7-11; வெளிப்படுத்தல் 11:2-3; 12:6,14). ஆக, தானியேலின் 69 வாரங்கள் உண்மையாகவே வரலாற்றுப் பூர்வமான இயேசுவின் ஊழியமும் மரணமும் இடம்பெற்ற சுமார் கி.பி. 30 ஆம் ஆண்டில் நிறைவு பெறவே செய்கின்றன

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page