ஊர் – அகழ்வாராய்ச்சி
வேதத்தில் காணப்படும் ஊர் என்ற பட்டணத்தை நான் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. காரணம், இஸ்ரவே லரின் வரலாறு இங்கிருந்து தான் துவங்குகிறது.
இஸ்ரவேலின் முற்பிதாவாகிய ஆபிரகாம், கானான் வருவதற்கு முன் வாழ்ந்தது இங்குதான். இதுபற்றி நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஊர் என்பது ஆரானிலிருந்த ஒரு பட்டணம். பட்டணம் என்றவுடன் நட்சத்திர ஹோட்டல், ரயில்வே ஜங்ஷன் வரிசையாய் நிற்கும் டாக்ஸிகள், மீட்டரை துருத்திக் கொண்டு ஓடும் ஆட்டோக் கள், கழுகாய் சுற்றும் பிக்பாக்கெட்காரர்கள் என்று நகரத்தனமாய்க் கற்பனை பண்ணிக்கொள்ளக் கூடாது.
அந்தக்கால பட்டணம் என்பது கொஞ்சம் அதிகப்படி மக்கள் குடியிருந்த பகுதி என்றுதான் பொருள் கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வசதிகளைப் பொருத்தவரை இப்போ இருக்கிற எருமைப்பட்டியே மேல். இந்த ஊர் (UR) வேதாகமத்தில் நாலே இடங்களில் தான் குறிக்கப்பட்டுள்ளது.
ஊர் என்ற இடம் பற்றி பிற்காலத்தில் சிலர் சந்தேகப்பட வேதம் குறிப்பிட்டுள்ள இட அமைப்பை வைத்துக் கொண்டு இந்த ஊரைக் கண்டுபிடிக்க சிலர் போனால்.. அங்கே ஒன்றையும் காணோம். சற்றே அப்பகுதியில் மண்ணைக் கொத்தி ஆபிரகாம் விட்டுப் போன ஏதாவது காசு கிடைக்கிறதா என்று இவர்கள் தேட,
காசு மட்டுமல்ல ஊரே கிடைத்தது மண்ணுக்குள்ளிருந்து.
இந்த பட்டணத்தை அகழ்வாராய்ச்சி செய்தவர் J.E. டெய்லர் – தையற்காரர் அல்ல. பெயரே அதுதான். இவர் பிரிட்டிஷ் மியூஸியத்திற்காக 1854ல் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவரைத் தொடர்ந்து R.C. தாம்ஸன் என்பவர் 1918ல் இங்கு ஆராய்ந்தார். பிறகு H.R. ஹால் என்பவர் 1919ல் ஆராய்ந்தார். இவர்களுக்குப் பின் 1922லிருந்து 1934 வரை பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்திற்காகவும், பிரிட்டிஷ் மியூஸியத்திற்காகவும் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டவர் சார்லஸ் உல்லி (Charles Wooley) என்பவர். ஆய்வுக் குறிப்புகளில் நமக்கு அதிகம் தகவல்களைத் தந்தது உல்லியின் குறிப்புகள் தான்.
சார்லஸ் உல்லியின் கண்டு பிடிப்புகளிலிருந்து ஊர் பட்டணத்தில் கி.மு. 4000லிருந்து கி.மு.300 வரை மக்கள் குடியிருந்தனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. துவக்க காலத்தில் இங்கு காணப்பட்ட நாகரீகத்தின் காலத்திற்கு உபேத்தின் காலம் என்று பெயர். இதுவே சற்று முன்னேறிய பின் சுமேரிய நாகரிகம் என்று பெயர் பெற்றது.
உல்லி தனது ஆய்வின் ஆரம்பத்தில் நிறைய சங்குகளையும், சிப்பிகளையும் தான் சேகரித்தார். கடலிலிருந்து வெகு தொலை வில் உள்ளடங்கியுள்ள ஊர் பட்டணத்தில் சங்குகளும், சிப்பிக ளும் கிடைத்தது எப்படி? என்று சற்று குழம்பி பின்னர் விடை சொன்னார்.
“நோவா காலத்து வெள்ளமே காரணம். இல்லாவிட்டால் சிப்பிக்கு சம்பந்தமில்லாத ஊரில் சிப்பியும், சங்கும் மண்ணில் புதைந்து கிடப்பானேன்?”
வழக்கம் போல சிலர் இதை ஒத்துக் கொள்ளவில்லை ஆரானுக்கு கொஞ்சம் தள்ளி யூப்ரடீஸ் என்ற மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இது உப்பு தவிர மற்றெந்த விதத்திலும் கடலுக்குச் சளைத்ததல்ல. இவ்வாற்றுப் படுகையில் அமைந்துள்ள ஆரானில் சங்கு கிடைப்பதில் வியப்பேதும் இல்லை. சங்கு கிடைத்தது என்பதற்காக நோவாவை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று வாதிடு கிறார்கள். (C.S.Gadd, The History and Monuments of Ur 1929)
இதற்கு அடுத்த காலத்திற்கு ‘வார்கா காலம்’ என்று பெயர். வார்கா என்ற பட்டணத்து நாகரீகம் இங்கு பரவியதால் இப்பெயர். இக்காலத்தில் தான் சுட்ட கற்கள், சுட்ட மண்பாண்டங்கள் மிகுதியாக பயன்படுத்தப்பட்டன. குயவர் பயன்படுத்தும் சக்கரங் களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்னும் வியப்பு அக்கால மக்கள் நமக்கு சரித்திரம் சொல்ல முற்பட்டுள்ளது தான். க்யூனிபார்ம் (யூனிபார்ம் இல்லை. க்யூனிபார்ம்! சித்திர எழுத்துக்கள்) எழுத்துகளில் பல குறிப்புகளை எழுதி வைத்து நெருப்பில் சுட்டு பதப்படுத்தியுள்ளனர்.
இவற்றுள் திரளானவை உல்லியால் கண்டுபிடிக்கப்பட, அவை லண்டன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. (லண்டன் போனால் மறக்காமல் பாருங்கள்) இக்கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள பெரிதும் உதவுவது ‘நெக்ரோ போலிஸ்’. இது அக்கால போலீஸ் அல்ல. கல்லறை! Necropolis என்றால் மரித்தவர்களின் நகரம் என்று அர்த்தம் சொல்கிறார்கள்.
இதை அகழ்ந்து பார்த்த போது கிடைத்த தலையணி (Helmet) இன்று வரை ஒரு பிரமிப்புடனே பார்க்கப்படுகிறது. காரணம் தங்கம்! இது 15 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்! இப்போது நாம் பயன்படுத்துவது 22 காரட் (காரட் கணக்கு பற்றி பொற்கொல்லர்களிடம் கேட்டறிந்து கொள்க)
ஊர் பட்டிண அரச பரம்பரையினரின் வரலாறுகளும் அகழ்வாராய்வுகளில் வெளியாகியுள்ளன. அரச பரம்பரை ஆசாமி ஒருவன் மரித்தால் மிகப் பிரம்மாண்டமான கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவான். எப்படி? அவன் பயன்படுத்திய ஸ்பூன், தட்டு, செருப்பு, சீப்பு, மனைவி(கள்) வேலைக்காரன் யாவருடனும்.
வேலைக்காரரும், மனைவியும் விஷம் கொடுக்கப்பட்டு அல்லது உயிருடன் கல்லறை புக வேண்டும்.
கல்லறை ஒன்றை திறந்த போது ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.காரணம், உள்ளே ஒரு ராஜா பரிவாரங் களுடன் அடக்கம் பண்ணப்பட்டிருந்தார்.
இன்னும் ஊர் பட்டணத்தை அகழ்ந்தபோது அங்கே க்யூனிபார்ம் கல்வெட்டுகள், உருளைகள், தலை அலங்கார பொருட்கள், இன்னும் சுபாத் என்ற ஒரு ராணியின் ஆபரணங்கள், மரத்துக்குக் கீழே நிற்பது மாதிரி ஆடு, மாடு இவற்றின் சிலைகள்- தங்கம் மற்றும் வெள்ளியில். மேலும், தங்கத்தில் பாடும் பறவை, எருதுத் தலை போன்றவை சுமேரியாவின் முன்னேறிய நாகரீ கத்திற்கு சான்றாக எடுக்கப்பட்டுள்ளன.
இது தவிர ஊர் பட்டிணத்தில், மக்களின் வழிபாட்டுத் தலமாயிருந்த ‘சிக்குராத்’ என்ற கோபுர உல்லியால் தோண்டி யெடுக்கப்பட்டுள்ளது. இது நிலவு தெய்வத்தின் ஆலயம் என்று அழைக்கப்பட்டது.
இந்த ஆராதனை ஸ்தலத்துக்குப் போக வேண்டுமானால் நூற்றுக்கணக்கான படிகளைக் கடந்து மேலே போக வேண்டும். பிளட்பிரஷர் ஆசாமிகளுக்கு நிலவு வணக்கம் ஆகாது.
இங்கு மாதந்தோறும் மக்கள் கூடி ஆராதிப்பார்கள். ஆராதனை ஒழுங்கை விவரித்துச் சொன்னால் இராத்திரி தூக்கத் தில் உளறுவீர்கள். அவ்வளவு சாத்வீகம்!
அம்மாதத்தில் பிறந்துள்ள தலைச்சன் ஆண் குழந்தை களை நிலவு மேடையில் படுக்க வைத்து தாயும், தகப்பனும் பிடித்துக் கொள்ளபூசாரி கழுத்தை அறுப்பதுதான் ஆராதனையில் ஹைலைட்.
இது தவிர இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பல பொருட்கள், கோவில்கள், கடை வீதிகள் இருந்த இடங்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஆழங்கள் சொல்லும் சாட்சி இன்று சிலர் வேதாகம சம்பவங்களை நம்புவதில்லை. அவை வெறும் கதைகள் என்று வேதத்தை புரட்டாமலே சொல்வ துண்டு. (20 வருடம் முன்பு நானும் (வின்சென்ட் செல்வக்குமார்) அந்த வகை)
ஆனால் வேதம் எந்தவொரு சம்பவத்தையும் “ஒரேயொரு ஊரில்”, என்கிற மாதிரி சொல்லாமல் புள்ளி விவரமாய், வம்சாவளி சுத்தமாய் சொல்கிறது.
வேதம் குறிப்பிடும் இடங்கள், மக்களின் நிலை இவை யாவும் இன்று அகழ்வாராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளன.
வேதம் கதைப் புத்தகமல்ல. ஆவிக்குரியது. பலமான சரித்திர சான்றுகளை உடையது. எள்ளளவும் குற்றப்படுத்த முடியாதபடி மெய்யாலானது. – ஆம்.
– வேதம் வேதம் தான். இல்லையா?
மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்