சீதோன் – அகழ்வாராய்ச்சி
தலைப்பை சற்று கவனமாகப் படிக்கவும். நாம் இங்கு ஆராயப்போவது சீதோன் பற்றி. சீயோன் அல்ல!
சீயோன், பரிபூரணமடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் சில சபைப்பிரிவினர், விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் என்று மொத்தமாகப் பட்டா போட்டுக் கொண்ட இடம். நம்மை தோண்டிப் பார்த்து ஆராயவெல்லாம் விடமாட்டார்கள்.
நாம் பார்க்கப் போவது சீதோன். பேர் மங்கிப்போன ஒரு சாதாரண கடற்கரைப் பட்டினம். எனவே, தொந்தரவில்லாமல் தோண்டிப் பார்க்கலாம் வாருங்கள்.
இன்று லெபனானுக்குள் சாமானியத்தனமாய் அமைந் திருந்தாலும் ஒரு காலத்தில் ரொம்பவும் டாம்பீகமாய் வாழ்ந்திருந்த நாடு. எங்கு தொட்டாலும் ஐசுவரியம், புகழ் என்று பெருமை பெற்றிருந்த நகரம். இன்று பல்லெல்லாம் கொட்டிப்போய் பேரனை வலுக்கட்டாயமாய் உட்கார்த்திக் கொண்டு “எங்க காலத்திலேயெல்லாம்..” என்று கதையடிக்கும் தாத்தா ரேஞ்சுக்குப் போய்விட்டது.
சீதோன் உலகின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று என்று பெருமையுடைத்து. பழசு என்றால் சாதாரணமல்ல-அரதப் பழசு. இது கட்டப்பட்டு 5000 வருடங்கள் இருக்கும் என்கிறார்கள் நாடிபிடித்துப் பார்த்த சில நிபுணர்கள்.
ஆனானப்பட்ட பாபிலோனே இன்று செத்து சுண்ணாம் பாகிவிட்ட போதிலும், சீதோன் மட்டும் இன்னும் அழிந்துவிடாமல் கோமா நிலையிலுள்ளது ஆச்சரியம்தான்.
இன்று இதனுடைய மக்கள் தொகை வெறும் 20,000 தான். இந்த சீதோனின் புவியியல் அமைப்பு பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
எருசலேமிலிருந்து சுமார் 210கி.மீ. தொலைவிலும், தீருவிலி ருந்து வடக்கே 21கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சீதோனிலி ருந்து கிழக்கே 85 மைல் நடந்தால் கால்வலியுடன் டமாஸ்கஸை – அதுதான் சார்.. தமஸ்கு – அடையலாம். சீதோனுக்கு மேற்குப் புறம் மத்திய தரைகடல். அதில் தோணியில் ஒரு 150 மைல் போனால் ஒரு தீவு தெரிகிறது பாருங்கள் அதுதான் சீப்புரு.
இந்த சீப்புரு தீவுக்கு அந்தக்காலத்தில் போக வேண்டுமா னால் சீதோனில் தான் ‘கப்பல் டிக்கெட் ரிசர்வ்’ செய்ய வேண்டும்.
இப்போது கொஞ்சம் சீதோன் இருக்கும் இடம்பற்றி தெரிந் திருப்பீர்கள். (எல்லாம் சரிதான். ஆனால் மத்தியதரைக் கடல் எங்கே சார் இருக்கிறது என்று நீங்கள் மேப்பை தூக்கிக் கொண்டு வருவதற்குள் நான் வேறு சப்ஜெட்டுக்கு போய் விடுகிறேன்.)
மேலே புவியியல் பார்த்தோம். இப்போது கொஞ்சம் வரலாறு. துளியூண்டுதான் எனவே, கோபமில்லாமல் படித்து விடவும். இதன் பூர்வ கால வரலாறு பற்றி அறிந்துகொள்ள வேண்டு மானால் நீங்கள் ஆதியாகமம் பத்தாம் அதிகாரத்துக் காலம் வரை பின்னாலேயே நடந்து செல்ல வேண்டும்.
நோவாவின் மகன் கானான். கானானை உங்களுக்கு நன்றாகவே ஞாபகமிருக்கும். துளிர்க்கும் முன்பே சபிக்கப்பட்ட மனிதர். இந்தக் கானானின் தலைச்சன் மகன்தான் சீதோன்.
சீதோன் என்பது ஊர் பெயரில்லையா என்று கேட்பீர்கள்.
ஊர்ப்பெயர்தான். ஆனால் கானானின் மூத்த மகனான சீதோன், தன் பிள்ளைகளுடன் வந்து இங்கு குடியேறியதால் ஒரு நன்றியடிப்படையிலே அவருடைய பெயரையே இந்த நகருக்கும் வைத்துவிட்டார்கள். (ஆதி 10:15)
யாக்கோபின் காலத்திலெல்லாம் சீதோனியர்கள் தங்கள் நகரத்தை ரொம்பவும் பிரபலமாக்கியிருந்தனர். எனவே தான் யாக்கோபு செபுலோன் பற்றிய ஆசீர்வாதத்தை கூறுகையில் சீதோன் பற்றியும் குறிப்பிடுகிறார். (ஆதி 49 : 13)
தீரு வாணிபத்தில் புகழ்பெற்றிருந்த நகரமென்று உங்களுக்குத் தெரியும். ஆனால் சீதோன் தீரு தோன்றுவதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாணிபத்தில் புகழ் பெற்றிருந்த நகரம்.
பல கப்பல்கள் நங்கூரமிடும் அளவிற்கு நல்லதொரு இயற்கைத் துறைமுகம் சீதோனுடையது. எனவே, இங்கு பல வேற்று நாட்டுக் கப்பல்களும் நங்கூரமிடும். இங்கு கரையிறங்கும் வியாபாரிகள் தங்கள் பொருட்களை சீதோனிலேயே விற்பதால் மிகப் பிரபலமான சந்தையும் சீதோனிலே இருந்தது. பல்வேறு நாட்டவரின் வருகையிருந்ததால் சீதோனுக்கு என்று ஒருதனிப் பட்ட கலாச்சாரம் இருக்கவில்லை. எல்லாம் கலந்த ஒரு மசாலா கலாச்சாரமே நிலவியது.
சீதோனின் ஜனங்கள் சீதோனியர் என்றும் பெனிக்கேயர் என்றும் அழைக்கப்பட்டனர்.
இங்கு 1908ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி செய்தவர் டாக்டர் G.A. குக் என்பவர்.
இவருடைய அகழ்வாராய்ச்சியின் போது அசீரியக் கல் வெட்டுத் துண்டுகள் சிலவும், கொஞ்சம் வட்டுருக்களும் கிடைத்துள்ளன.
அசீரியர்கள் பழக்கம் பற்றி உங்களுக்குத் தெரியும். போகிற இடத்திலெல்லாம் தங்கள் பராக்கிரமங்களை கல்வெட்டாய் அடித்து வைத்து விடுகிற ரகம்.
இந்த கல்வெட்டுக்கள், மூன்று மொழிகளில் எழுதப் பட்டுள்ளன. (டில்லியிலுள்ள ஆங்கிலப் பள்ளியில் படித்த தமிழ்க் குழந்தை எழுதுவது மாதிரி)
ரொம்பவும் சிரமப்பட்டுத்தான் இதைப் படித்தார்கள். கல்வெட்டு, அசீரிய மன்னன் அசூர்-பானிப்பாலினுடையது.
கல்வெட்டு இப்படிச் சொல்கிறது. “ஆசூர்பானிப்பாலாகிய நான் சீதோனுக்குள் நுழைந்த போது கண்டது அதில் செழுமை உள்ள அளவிற்கு பலம் இல்லை என்பதைத்தான். இதன் மன்னனும் சரி, மக்களும் சரி, பொருளீட்டும் வியாபாரிகளாகத் தான் இருந்தார்களேயொழிய யுத்தவீரர்களாயிருக்கவில்லை. எனவே வலிமை பொருந்தியவனும் யுத்தத்தில் நிகரற்றவனுமாகிய எனக்கு சீதோனைப் பிடிப்பது கடினமானதாயிருக்கவில்லை. நான் சீதோனை அள்ள அள்ளக் குறையாத ஐசுவரிய பூமியாகக் கண்டேன். அதனிடம் கப்பத் தொகையாக ஏராளம் பெற்றேன். சீதோனின் பொருளாதாரம் குன்றிப் போன நிலையில் சீதோனின் இராஜா தன் ஜனங்களை பிற தேசங்களுக்கு அடிமையாக விற்றான்.”
சீதோன் அசீரியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த காலங் களில் சீதோனிலும், தீருவைப் போலவே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.
ஆயினும் தீருவின் வியாபாரத்திற்கும், சீதோனின் வியாபாரத்திற்கும் பெருத்த வித்தியாசமுண்டு.
தீருவில் வெளிதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகள் விற்கப்பட்டனர். சீதோனிலேயோ பரிதாபம்! சீதோனி யர்களே அடிமைகளாக விற்கப்பட்டனர்.
கி.மு. 875ல் எல்லாம் சீதோனிய அடிமைகளுக்கு நல்ல கிராக்கியிருந்தது. சீதோன் ராஜாவின் முரட்டுப்படையினர் சீதோனின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுப் புறங்களிலெல்லாம் புகுந்து, தங்கள் ஜனங்களையே அடிமைகளாகப் பிடித்து பிற தேசத்து வியாபாரிகளிடம் விற்றனர்.
அசூர் கேட்கும்போது கட்ட பணம் வேண்டுமே!
1949-ம் ஆண்டில் சீதோனின் புறங்களில் ஆராய்ச்சி செய்த M.E.L மெல்லோவான் சீதோனின் அடிமை வாணிபம் பற்றி நிறைய வட்டுருச் செய்திகளை திரட்டியுள்ளார்.
சீதோன் அடிமைகளை நிறைய விலைகொடுத்து வாங்கிய வர்கள் யூதர்கள்தானாம்.
அக்காலத்தில் யூதேயாவில் பல பட்டினங்கள் புதுப்பித்துக் கட்டப்பட்டு வந்தன. இவற்றில் வேலைசெய்வதற்காக நிறைய அடிமைகளை சீதோனிலிருந்து வாங்கினார்கள். அப்படி வாங்கும் அடிமைகளையும் வெகுகாலத்திற்கு தங்கள் தேசத்தில் வைத்துக் கொள்வதில்லை.
காரணம், வெகுகாலம் தங்கினால் அடிமைகள் பலுகி, கடைசியில் உரிமை கொண்டாடவும் கலகம் செய்யவும் துவங்கி விடுவார்கள். நானூறு வருடம் அடிமைகளாய் இருந்த யூதர்களுக்கு இது தெரியாமல் இருக்குமா?
எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவர்களை அரேபியாவிலுள்ள ஆசான், சாபா, குவாட்டாபன், ஹத்ராமட் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்று வந்தனர். என்ன விலைக்கு?
தாங்கள் வாங்கினதைப் போல இருமடங்கு விலைக்கு!
இதன் மூலம் யூதர்கள் ஒரே கல்லில் மூன்று மங்காய் அடித்துக் கொண்டிருந்தனர்.அடிமைகளை வைத்து வேலை வாங்கலாம். அடிமைகள் வம்சம் யூதாவில் தோன்றாதபடி தடுக்க லாம். அடிமைகளை மறுபடியும் விற்று கொள்ளை லாபமடை யலாம். இதுதான் அந்த மூன்று மாங்காய்கள்.
இந்த ‘செகண்ட் ஹேண்ட்’ அடிமைகளுக்கு தென்மேற்கு அரேபியாவில் ஏகக் கிராக்கி!
இங்குள்ளவர்களின் விவசாய வேலைகள் மிகக் கடின மானவை. அதை செய்ய கண்டிப்பாய் அடிமைகள் தேவை என்ற நிலையில், சீதோனிய அடிமைகளை யூதர்களிடமிருந்து தங்கம், விலையேறப்பட்ட கற்கள் போன்றவற்றைக் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.
அடிமை வியாபாரமெல்லாம் அந்தக் காலத்தில் சகஜம். இதில் என்னய்யா விசேஷம் என்று கொட்டாவியுடன் கேட்பீர்கள்.
நிமிர்ந்து உட்காருங்கள்! ஆச்சரியம் காட்டுகிறேன்.
சீதோன் செல்வச்செழிப்பில் இருக்கும் போதே கர்த்தர் சீதோனைப் பற்றி யோவேல் மூலம் கூறியதை படியுங்கள். ஆச்ச ரியம் புரியும்.
யோவேல் 3:8
“உங்கள் குமாரரையும், உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்: இவர்கள் அவர்களை தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்.
மெல்லோவான் குறிப்பிடும் ஆசா, சாபா, குவாட்டாபன் என்ற தென்மேற்கு அரேபியாவில் வசித்து வந்த ஜனங்களின் பெயர் தெரியுமா?
சபேயர்!
அகழ்வாராய்ச்சியிலே மெல்லோவான் எடுத்த சரித்திர குறிப்பும், வேதாகம தீர்க்கதரிசனமும் எப்படி பொருந்துகிறது பார்த்தீர்களா?
R.D. பார்னெட் என்பவர் 1965ம் ஆண்டின் துவக்கத்தில் சீதோனின் இடிபாடுகளையும் புதையுண்ட பகுதிகளையும் ஆராய்ச்சி செய்தது மிகவும் பிரசித்தம்.
சீதோன் என்பதற்கு பலத்த கோட்டை என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே சீதோனின் கோட்டை அக்காலத்தில் மிகவும் பிரசித்தம்.
இந்தக் கோட்டை பாபிலோனியக் கோட்டைச் சுவர் போல அவ்வளவு பிரமாண்டமானது இல்லையென்றாலும், மற்ற கோட்டைகளை விட பலமானது தான்.
பழையகால வழக்கங்களின்படி இரண்டு சுற்று கோட்டைச் சுவர்கள் இருந்தன. மேற்குப் புறச்சுவரில் மேலே பெரிய மாடம் கட்டி அதில் இரவு நேரங்களில் தீ எரிப்பார்களாம். லைட் ஹவுஸ்!
கப்பல்கள் இரவில் சீதோனைக் கண்டுகொண்டு கரை சேர அமைக்கப்பட்ட இந்த லைட்ஹவுஸ்தான், உலகத்தின் லைட் ஹவுஸ்கள் எல்லாவற்றுக்கும் முன்னோடி என்கிறார்கள்.
இடிந்தும், புதைந்தும் போயிருந்த சீதோனின் இடிபாடுகளை ஆராய்ந்த போது பார்னெட் ஒரு விஷயம் கண்டுபிடித்தார். சீதோனில் மிகப்பெரிய தீ விபத்து ஒன்று நடைபெற்றுள் ளது. நகரில் சுவர்களும் கற்களும் தீயைச் சந்தித்துள்ளன என்பது தான் அது.
அகழ்வாராய்வு விஞ்ஞானம் கொண்டு சோதித்த போது ஆழங்கள் சொல்லும் சாட்சி அது கி.மு. 400 அளவில் நடந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. கொஞ்ச நாட்கள் கழித்து பெர்சியர்களின் வட்டுருச் செய்தி களை ஆராய்ந்து கொண்டிருந்த M. பாக்னர் (Falkner) என்பவர் சீதோனின் தீ விபத்துப் பற்றி செய்திக் குறிப்பை கண்டுபிடித்தார்.
பெர்ஸிய மன்னன் வாக்கஸ்-அர்த்தசஷ்டாவுக்கு கப்பம் கட்டி வந்த சீதோன் திடீரென கப்பம் கட்ட மறுத்துவிட்டது. காரணம் வாக்கஸ் மன்னன் கப்பத்தொகையை இரட்டிப்பாக்கி யதும், சீதோனின் பொருளாதாரம் சீர்குலைந்திருந்ததுமே.
சீதோனின் மறுப்பை கண்ட வாக்கஸ் பெரும்படையுடன் சீதோனை முற்றுகையிட்டான். வாக்கஸை எதிர்க்க திராணி யில்லாத சீதோனியர்கள் கோட்டையை மூடிவிட்டனர்.
முற்றுகை 17 நாள்ளவும் நீடித்தது. இனி பொறுப்பதில் பயனில்லை என்று வாக்கஸ், முற்றுகை இயந்திரங்களைக் கொண்டு கோட்டையை உடைத்துவிட தீர்மானம் பண்ணிய போதுதான் அது நிகழ்ந்தது.
பூட்டிய கோட்டைக்குள்ளிருந்து கரும்புகையும், கதறும் சப்தமும், தொடர்ந்து அக்கினி ஜுவாலையும் விண்ணை எட்டியது.
கோட்டையை உடைத்துக் கொண்டு வாக்கஸ் உள்ளே சென்ற போது காரியம் கை மிஞ்சி இருந்தது.
பட்டணத்துக்கும், தங்களுக்கும் தீ வைத்துக்கொண்டு சீதோனியரில் சுமார் 60,000 பேர் மாண்டு போயிருந்தனர்.
வாக்கஸ் வட்டுருவில் குறித்து வைத்துள்ள இந்தச் சம்பவம் கி.மு. 351ல் நடைபெற்றது. சீதோனின் இந்தப் பேரழிவு பற்றி வேதம் முன்னறிவித்துள்ளதையும் பாருங்கள்!
ஏசாயா 23:4
சீதோனே வெட்கப்படு, நான் இனி கர்ப்ப வேதனைப்படுகிறதும் இல்லை, இளைஞரை வளர்க்கிறதும் இல்லை கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை யென்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது.
சீதோனின் தெய்வங்களை பற்றியும் M.E.L. மெல்லோவான் ஆராய்ந்திருக்கிறார்.
பல்வேறு காலக்கட்டங்களில் அசீரியர், பெர்ஸியர், பாபிலோனியர், கிரேக்கர், ரோமர் போன்ற பல்வேறு மன்னர்கள் பிடித்தாண்டதினால் அந்ததந்த தேசங்களின் விக்கிரகங்கள் நிறையக் கண்டெடுக்கப்பட்டாலும் சீதோனின் பிரதான தெய்வம் பாகால் தான்.
சீதோனின் மேற்குப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய் வில் ஒரு பிரமாண்டமான மேடையும் சிலைகளும் கிடைத்துள் ளன. இன்னும் கொஞ்சம் ஆழத்தில் தோண்டினால், 6 அடி உயரச் சிலையாய் பாகால் அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
சொன்னால் ஆச்சரியமடைவீர்கள்.
சிறுதும் பெரிதுமாய் சுமார் 23,000 பாகால் சிலைகள் இதுவரை கிடைத்துள்ளன. இதில் அழிந்தது எத்தனையோ, புதைந்துள்ளது எத்தனையோ யாருக்குத் தெரியும்?
மொத்தத்தில் மக்கள் தொகையை விட சிலைகளின் தொகை தான் அதிகம் இருந்திருக்க வேண்டும். சீதோனியர்கள் பாகாலின் மேல் மிகவும் பற்றும் பக்தியும் உடையவர்கள்.
ஒரு விஷயம் தெரியுமா?
சீதோனின் மன்னானாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைத் தான் ஆகாப் திருமணம் செய்திருந்தான் (1இரா 16:29-33)
ஆகாப்பை கைப்பொம்மையாக்கிக் கொண்டு கொடுங் கோலாட்சி புரிந்தவள் இந்த யேசபேல். இவளுடைய காலகட்டத் தில் தான் சீதோனிய பூசாரிகள் இஸ்ரவேலெங்கும் பரவி ஆட்சி செய்து கொண்டும், இலச்சையான ஆராதனை செய்து கொண்டும் இருந்தனர்.
இப்படி இஸ்ரவேலில் தடைக்கல்லைப் போட்டு பாகாலை உயர்த்தி, தேவனை இகழ்ந்ததினால் தான் சீதோன்மேல் கடுங்கோப மாகி கர்த்தர் சபித்தார் (எசே 28 : 29
இன்னும் சீதோன் இருக்கிறதா?
ஆம்!
கர்த்தரின் கடுங்கோபத்திற்கு ஆளாகி ஓடுங்கிப் போன சீதோன், அவர் வார்த்தைக்கு சாட்சியாக இன்னும் மீதியாய் விடப் பட்டுள்ளது.
ஆனால், இயற்கையான நல்ல துறைமுகமும், வாணிபம் செய்ய வசதியும் வளமான பூமியும் இருந்தும் சீதோன் இன்னும் ஒடுங்கின நிலையில் தான் இருக்கிறது.
அதன் மக்கள் தொகை இன்று வெறும் 20,000 மட்டுமே!
பலநாட்டு கப்பல்கள் நின்றிருந்த இடங்களிலெல்லாம் வெறும் மீன்பிடி படகுகள் நிற்கின்றன.
வாணிபம் நடைபெற்று பணம் புரண்ட இடத்திலெல்லாம் மீன் வலைகள் காய்கின்றன.
தேவனின் வார்த்தை நிறைவேறிற்று!
மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்