மம்ரே
இங்கே மம்ரேயைப் பற்றி சாட்சி சொல்லியே தீருவோம் என்று ஆழங்கள் ஒரே பிடிவாதம் சார்!
மற்றபடி எரிகோவைப் போல பெயர் சொன்ன மாத்திரத்திலேயே “தெரியுமே!” என்று சொல்லி விடக்கூடிய அளவிற்கு அவ்வளவு பரிச்சயமான இடமல்ல மம்ரே.
ஒரு வேளை வேதத்தை கோடு போட்டு படிக்கிற வேத பிரியர்களுக்கு வேண்டுமானால் சட்டென்று மம்ரே ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் நம்மைப் போல (என்னையும் சேர்த்து) சாமானியர்களுக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு நினைவுக்கு வரலாம். சிலருக்கு ஞாபகத்திற்கு பதிலாக அசட்டுச் சிரிப்பும் வரலாம்.
காரணம், வேதாகமத்தில் வெகு சொற்ப வசனங்களே மம்ரேயைப் பற்றி வருகிறது. ஆபிரகாம் இங்கு தான் குடியிருந்தார் என்பது தவிர வேறெந்த சரித்திரப் புகழ்ச்சியும் இதற்கு கிடையாது.
வேதத்தில் வெகு குறைவாகவே மம்ரே பற்றி குறிப்பிடப் பட்டிருந்தாலும், அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு என்று நிறைய விஷயங்களைத் தந்த வகையில் இந்த ஊருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.
வேதாகமம் இரண்டு மம்ரேக்களைப் பற்றி நமக்கு சொல்லுகிறது.
முதலாவது, ஆபிரகாம் குடியேறிய பூமி. இங்கு ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனைத் தொழுது கொண்டார் எனவும், இங்கு தான் கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமானார் எனவும் வேதம் குறிப்பிடுகிறது. (ஆதி 13: 18, 18 : 1) இதற்கு பூகோள விளக்கம் சொல்ல வேண்டுமானால், இது எபிரோனுக்கு வடக்கே சரியாக 3.2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மைல் கணக்கில் சொல்வதானால் 2 மைல்.
இரண்டாவது மம்ரேக்கு பூகோளம் சொல்ல முடியாது. காரணம் இந்த மம்ரே ஊர் அல்ல; ஆள்!
சோதோம், கொமோராவின் இராஜா திதியில், சிநெயர் ராஜா அம்பராப்பேல்… அட, பொறுங்க சார்! சுருக்கமாகவே சொல்கிறேன்.
சோதோமில் குடியிருந்த லோத், ஏலாமின் கூட்டணி இராஜாக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுப் போன போது, அவர்கள் கையிலிருந்து மீட்க ஆபிரகாமுடன் துணை போன எமோரிய பிரதானி தான் மம்ரே. (ஆதி14 : 13,34)
சும்மாவாச்சும் ஒரு தகவலுக்குத் தான் சொன்னேன் ஒழிய, நாம் பார்க்கப் போவது முதலாவது மம்ரேயைப் பற்றித் தான். தோண்டிப் பார்க்க முடியாது என்பதால் இரண்டாவது மம்ரே வேண்டாம்.
தன் தேசத்தை விட்டு புறப்பட்டு வந்த ஆபிராம் குடி யேறியது மம்ரே என்பதை ஏற்கனவே சொன்னேன். இந்த இடம் மம்ரே என்று அழைக்கப்படுவதற்கு முன்பு ராமோத் – ஏல் – காலில் என்று கஷ்டமான உச்சரிப்புடன் அழைக்கப்பட்டது.
மம்ரேயில் பெரிய மரங்களின் அருகில் ஆபிரகாம் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியதாக வேதம் குறிப்பிடுகின்றது. ஆதி 13:18ல் காணப்படும் இந்தச் சம்பவம் New King James Version என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதத்தில் தான் சற்று விளக்கமாக “By the terebinth trees of Mamre” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
New Inernational Version ufo ‘Near the great trees of Marme’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் வேதாகமத்தில் மரம் பற்றிய வார்த்தை இல்லை. சோதோமுடன் ஒப்பிடும் போது சற்று வளம் குறைந்த பூமியே யாயினும் மம்ரேயில் மரங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. இந்த மம்ரேயில் ஒரு நெடிதுயர்ந்த மரம் இன்றும் இருக்கிறது.
சில்வர் ஒக் வகையைச் சேர்ந்த இந்த மரத்தின் கீழ்தான் ஆபிரகாமின் பலிபீடம் இருந்திருக்க வேண்டுமென்று கண்டுபிடித் திருக்கிறார்கள்.
காரணம், இங்குள்ளவற்றில் மிகவும் உயரமானது இந்த மரம்தான்.
ஒக் வகை மரங்கள் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருப் பீர்கள். இவ்வகை மரங்கள் வானளாவிய வளர்ச்சி படைத்தவை. நாம் தொந்தரவு செய்யாத வரையில் நீண்டநாள் வாழக் கூடியவை. நீண்ட நாள் என்றால் ஆயிரக்கணக்கான வருடங்கள்!
மம்ரேயில் காணப்படும் இந்த நெடிதுயர்ந்த மரத்தை உள்ளடக்கி பெரிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 214அடி நீளமும் 160 அடி அகலமும் கொண்ட இந்த ஆலயம் கான்ஸ்டைன் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
ஒருமுறை ரோம ராஜா கான்ஸ்டன்டைனுடைய மாமியார் யூட்ரோபியா இவ்விடத்தைப் பார்வையிட்ட போது இந்தப் பெரிய மரத்தின் கீழ் ஒரு மேடையும் அதில் நிறைய புறஜாதி தெய்வ வழிபாட்டு விக்கிரங்களும் நிறைந்திருக்கக் கண்டார். ஆபிரகாம் ஜீவனுள்ள தேவனுக்கு கட்டிய பலிபீடம் அந்நியர்களின் பலி மேடையானதை யூட்ரோபியா விரும்பவில்லை.
உடனே தன் மருமகன் கான்ஸ்டன்டைனுக்கு (ரோம ராஜா) ஒரு கடிதம் எழுதி, மரத்தைச் சுற்றிலும் ஆலயம் ஒன்றைக் கட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
மாமியார் சொல்லுக்கு மறுப்பேது?
உடனே ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் அந்த மரத்தைச் சேதப்படுத்தாமல் உள்ளடக்கி ஒரு பேராலயத்தையே கட்டி விட்டார்.
மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் தென்மேற்கு கோடியில் ஆபிரகாம் காலத்தியது என்று கருதப்படும் பெரிய கிணறும் உள்ளது.
மம்ரேயில் ஆபிரகாம் வாழ்ந்தது நமக்குத் தெரியும். ஆனால் இந்த மரத்தின் கீழ்தான் தேவனைத் தொழுது கொண்டாரா? இந்த
சந்தேகம் பல காலமாக இருந்து வந்தது. இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி துவங்கியது 1920ஆம் ஆண்டில் தான். ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்காக இப்பகுதியை ஆராய்ந்தவர் மடேர்! (உண்மையான பெயரே அதுதானாம் A.E. மடேர். தலையிலடித்த மாதிரியில்லை?) அவர் இந்த மரத்தையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சுமார் ஏழாண்டுகள் ஆராய்ந்தார்
மரத்தை கார்பன் டேட்டிங், மற்றும் பேவ்மண்ட் டேட்டிங் முறைகளில் ஆராய்ந்த போது அது கி.மு.2104ஐச் சேர்ந்ததென்று கண்டுபிடித்தார்.
ஆபிரகாமின் காலம் என்ன தெரியுமா?
கி.மு. 1996லிருந்து கி.மு. 1822 வரை.
கி.மு. ஆண்டுகள் இறங்கு முகமாகக் கணக்கிடப்பட வேண்டுமென்பது தான் உங்களுக்கு தெரியுமே!
அப்படிக் கணக்கிட்டால் இந்த மரம் ஆபிரகாம் பிறப்ப தற்கு எட்டு வருடம் முன்பிருந்தே இருக்கிறது. ஆபிரகாம் மம்ரேக்கு குடி வந்தபோது அவருக்கு வயது 75. எனவே, இந்த மரத்தின் கீழே பலிபீடம் கட்டிய போது மரத்திற்கு வயது 83 சரிதானே?
இந்த வானளாவிய மரம் பற்றி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணிகளின் குறிப்புகளிலும் காணப்படுகிறது.
சரித்திர ஆசிரியராகிய யோசபஸின் குறிப்பில் மிகப் பெரிய மரம் எபிரோனிலிருந்து 6 பர்லாங் தொலைவில் இருந்தது என்ற குறிப்பு காணப்படுகிறது. (Josaphus 4: 9,7 Jos Antiq 1 :10)
இன்று நீங்கள் மம்ரேக்கு போனால் எபிரோனுக்கு வடமேற்கில் நிற்கும் மற்றொரு பெரிய மரத்தைக் காட்டி “அதோ ஆபிரகாம் வளர்த்த மரம். ஆபிரகாம் கட்டிய பலிபீடம் அங்குதானிருந்தது” என்று ‘கைடு’கள் கதையளப்பார்கள்.
நம்பிவிடக்கூடாது. எல்லாம் பொய்.
இஸ்ரவேலில் பயணம் மேற்கொண்ட பலர் இந்த மரத்தின் கீழே நின்று மெய்சிலிர்க்க ஆராதனை செய்து விட்டு திரும்பியும் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த மரம் ஆபிரகாம் காலத்திய தல்ல. அது Home Oak வகையைச் சேர்ந்த மரம். பாலஸ்தீனாவைச் சேர்ந்த வகை அல்ல. மரமெல்லாம் சரிதான். பூமியை அகழ்ந்து பார்க்கவில்லையா என்றெண்ணுவீர்கள். ஏன் இல்லாமல்?
1965ல் ஜி ஆம்ஸ்ட்ராங் என்பவர் மேற்கொண்ட பல அகழ் வாராய்ச்சிக் குறிப்புகள் பூமிக்கடியில் மேற்கொள்ளப்பட்டவை தான்.
பூமியை சற்றே இவர் அகழ்ந்து பார்த்தபோது கல்லிலும் இரும்பிலும் செய்த நிறைய ஆயுதங்களைக் கண்டெடுத்துள்ளார். இவை எல்லாம் சிலுவைப் போரில் உபயோகித்த ஆயுதங்கள்.
ஒரு ஆப்பிளை எடுக்கும் போது உங்களை கை எப்படி இருக்குமோ அதே அமைப்பில் ஐந்து உலோக விரல் பதித்த ஈட்டி கள் அக்காலப் பழக்கத்திலிருந்திருக்கின்றன. மேலும் பட்டையான வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆபிரகாம் காலம் ரொம்பப் பழசு. இராணுவ யுத்தமெல்லாம் சரிவர முறைப்படுத்தாத காலம். அந்நாட்களில் ஊர்த் தலைவர்கள் தான் இராஜா என்று சொல்லப்பட்டார்கள்.
ஆயினும் அக்காலத்திலும் யுத்தத்திற்கு போவதற்கென்று தோலினாலும், தோல் வாரினாலும் ஆன உடைகளை வைத்திருந்தார்கள்.
ஆனால் வேதம் சொல்லுகிறது; தன் வீட்டிலே பிறந்த கை படிந்தவர்களாகிய 318 ஆட்களுக்கும் (ஆபிரகாம்) ஆயுதம் தரிப்பித்து… (ஆதி 14 : 14) என்று.
சண்டைக்கு போவதற்கென்று ஆபிரகாம் ஆயுத உடைகளை வைத்திருந்தார் என்பதை வேதம் ஏற்கனவே காட்டி விட்டதல்லவா?
கிடைத்த ஆயுதங்களில் இன்னும் சில உழவிற்கு பயன் படுத்தக் கூடியவை. தலையைச் சொறியும் போது கை எப்படி இருக்குமோ அதே ஷேப்பில் இரும்பாலான கலப்பைகள் கிடைத்துள்ளன. அக்கால மக்களின் பிரதானத் தொழில் விவசாயமும், ஆடு மேய்ப்பதும் தான். ஈசாக்கு விவசாயத்தில் பேர் பெற்று விளங்கியதை நினைவிற் கொள்க.
இதுதவிர, ஆபிரகாம் காலத்தியது என்று டெர்ரோ மேக்னடிக் டேட்டிங் மூலம் நிரூபிக்கப்பட்ட மற்றொரு ஆயுதம் சற்று வித்தியாசமானது. ஆச்சரியமானது. அது அரையடி நீளமான ஒரு கல். தட்டையான இக்கல்லின் மேல்பரப்பு வழுவழுப் பாக்கப்பட்டிருக்கிறது. ஐந்து இஞ்ச் அகலமுள்ள அதன் மேற் பரப்பில் ஒரு கோடு மாதிரி நெடுக்காக செதுக்கியெடுக்கப்பட் டுள்ளது. இதோடு இணைந்து பள்ளத்தில் பொருந்துகிற மாதிரி ஒரு கத்தி இணைக்கப்பட்ட மற்றொரு கல்தட்டை. இந்தக் கருவியை எதற்குப் பயன்படுத்தினார்கள் என்று பல காலம் மண்டையைக் குடைந்து கொண்டார்கள்.
1968ல் கிடைத்த ஒரு மரச் சிற்பத்தில் இதற்கு விளக்கம் கிடைத்தது. சிற்ப ஓவியம் ஒரு பையனுக்கு விருத்தசேதனம் செய்வதைக் காட்டியது. விருத்தசேதனம் செய்விப்பவரின் கையில் இதே ஆயுதம்.
விருத்தசேதனம் செய்விக்கும் முறை ஆபிரகாம் தேவனோடு பேசி உடன்படிக்கை பண்ணிய பின்புதான் அறிமுக மாயிற்று.
தேவன் ஆபிரகாமுக்கு சொன்னபடியே பதின்மூன்று வயதான இஸ்ரவேலும், தொண்ணூற்றொன்பது வயதான ஆபிரகாமும் ஒரே நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். ஆபிரகாமின் வீட்டு மனுஷராகிய திரளான ஆட்களும் விருத்த சேதனம் பண்ணப்பட்டார்கள். (ஆதி 17:23-27)
இவர்களுடைய இக்காரியத்தைக் கேள்விப்பட்ட மற்ற இனத்தில் சிலரும் கூட விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்களாம்.
இப்பழக்கம் மம்ரே பகுதியில் வெகுவாக பரவியிருந்த தினால் தான் இதற்கென்று கூர்மையான ஆயுதம் கல்லில் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விருத்தசேதனத்திற்கென்று கல் ஆயுதம் பரவலாக பயன்படுத்தப்பட்டதினால் தான் அவசரமாக விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிப்போராள் கருக்கான கல்லைப் பயன்படுத்தினாள். (யாத் 4 : 25)
ஆபிரகாம் காலத்திய வெள்ளி நாணய முறைபற்றி ஏற்கனவே “ஊர்” கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். அதேபோல வியாபார வெள்ளியும், பாத்திரம் செய்யும் வெள்ளியும் இங்கே நிறைய அகப்பட்டுள்ளன.
மண்ணுக்கு கீழே மட்டுமல்ல. மண்ணுக்கு மேலே உள்ள மரம் கூட ஆபிரகாமின் காலம் பற்றி சாட்சியிடுவது எத்தனை ஆச்சரியமான விஷயம்.
மம்ரேக்கு போனால் கண்டிப்பாக ஆபிரகாமின் மரத்தைப் பார்த்து விட்டு வாருங்கள்.
மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்