நினிவே அகழ்வாராய்ச்சி
நினிவே தெரியும் தானே!
நினிவே நகரத்தை நான் அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு யாரும் இருக்க மாட்டீர்கள் காரணம் யோனா நினிவே யை ரொம்பவும் பாப்புலர் ஆக்கிவிட்டார். இல்லையா?
இவ்வளவு பரிச்சயமான இந்த நகரத்திற்கு வெகு காலமாக வழங்கப்பட்டு வந்த பட்டப் பெயர் தெரியுமா? கற்பனை நகரம்.
காரணம் நினிவே என்று ஒரு பட்டணமே இருத்ததில்லை என்று பழைய வேத பண்டிதர் பலர் கருதியதே.
யோனாவுக்குப் பெயர் கூட கற்பனை தீர்க்கதரிசி தான். இதுவும் பழைய வேத பண்டிதர்கள் சூட்டியதுதான். யோனா என்பது உவமைக்காக சொல்லப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றே பல காலம் கூறினார்கள்.
இன்றும் இதை சிலர் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மீன் சாப்பிடும் போது, “மீனைப் பார்த்தவுடன் யோனா ஞாபகம் தான் வருகிறது. மனிதன் மீனை விழுங்கலாம்.
மீன் மனிதனை விழுங்குமா அய்யா” என்பார்கள் விழுங்கத் தயாராக மீனில் முள் நீக்கியபடியே.
இன்னும் சிலர், “மீன் வயிற்றில் மனிதன் புகுந்து மூன்று நாள் அஜீரணம் உண்டாக்கி பின்னர் உயிரோடு கரையேறுவ தெல்லாம் நடக்கக் கூடிய சம்பவமா?” என்பார்கள்.
வேதத்தை விசுவாசிக்கும் விசுவாசிகள் முகம் சிவக்க இவர் களிடம் யோனா கற்பனைக் கதையல்ல என்று வாதிட்டால், சாத் வீகமாகச் சிரித்து விட்டு, கடைசி அஸ்திரமாக “கூல்டவுன் தம்பி, நினிவேயைக் காட்ட முடியுமா உன்னால்?” என்பார்கள்.
ஆனால் இப்போது நிலைமையே வேறு. நினிவேயை அகழ் வாராய்ச்சியில் வெளியில் கொண்டு வந்து, சந்தேகவாதிகளின் முகத்தில் கரியை பூசியிருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
நினிவேயின் பூர்வீகத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், நினிவேயை நிர்மாணித்தது நிம்ரோத் என்று தெரிகிறது. (ஆதி 10:8-11)
இந்த நிம்ரோத் தான் அசீரிய ராஜ்யத்தை ஸ்தாபித்தவன். எனவே நிம்ரோத்தின் காலம் துவங்கி அசீரியர்களின் தலைநகரமாக இருந்தது நினிவே. சார்கோன், சனகெரிப், எசர்ஷெடன் போன்ற அசீரியாவின் புகழ்பெற்ற ராஜாக்களெல்லாம் ஆண்டது நினிவேயி லிருந்து தான்.
பிறகு, நினிவே காணாமல் போனது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்?
கி.மு. 612ல் பாபிலோனியப் படைகளும், மேதியப் படை களும் கூட்டணி அமைத்துக் கொண்டு நினிவேயை மேப்பிலிருந்து சுரண்டியெடுத்து விட்டார்கள்.
அசீரியாவுக்கு 612ல் நேர்ந்தது படுபயங்கரமான சங்காரம். சுவடு கூட தெரியாத அளவிற்கு அழிவைச் சந்தித்தார்கள். அந்த நேரம் அசீரியாவை ஆண்ட ராஜா அசூர் பானிப்பால்… கொஞ்சம் பொறுங்கள். முதலாவது நினிவேயின் புவியியல் அமைப்பையும் கொஞ்சம் பார்த்து விடுவோம். சரிதானே?
நினிவே, டைகிரிஸ் ஆற்றங்கரையை ஒட்டியிருந்த ஒரு பெரியப் பட்டினம். எருசலேமிலிருந்து தோராயமாக 650 மைல் வடகிழக்கேயும், பாபிலோனுக்கு நேர் வடக்கே 300 வது மைலிலும் அமைந்துள்ளது. கி.மீ கணக்கில் எருசலேமிலிருந்து 1100 கி.மீ தூரம்.
நினிவே ஒரு பெரிய நகரம். வேதத்தில் அது மூன்று நாள் பிரயாண விஸ்தீரணமான நகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருநாள் பயணம் என்பது 32.187கி.மீ. தூரம். அதாவது இருபது மைல் என்றால் மூன்று நாள் பயண விஸ்தீரணத்திற்கு கணக்குப் பாருங்களேன். ஏயப்பா, 60 கி.மீ. விஸ்தீரணம். நினிவே ரொம்பப் பெரிய நகரம் தான் இல்லையா?
இது ஒரே ஊர் அல்ல. பல ஊர்களின் கூட்டமைப்பு. எல்லாம் சேர்ந்து நினிவே என்று பெயர் பெற்றிருந்தது என்கின் றனர் சிலர். பல சின்ன சின்ன ஊர்களை எல்லாம் வளைத்துப் போட்டு சென்னை என்று சொல்வது போல.
இந்த பிரமாண்ட நகரத்தில் முதல் கட்டமாக டைக்ரிஸ் நதியின் கிழக்குப் பகுதியில் 12.8கி.மீ. பரப்பில் அகழ்வாராய்ச்சி மேற் கொண்டனர். இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட பகுதி டைக்ரிஸின் கிழக்கேயுள்ள இரட்டைக் குன்றுகளான க்யூன்ஜிக், நேபியூனஸ் என்பவற்றுக்கும், ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதி.
பிரிட்டன் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் முதன்முதலாக 1845ல் டாக்டர் ஹென்றி லேயார்ட் என்பவரின் தலைமையில் நினிவேயை அகழ்ந்து ஆராய்ந்தனர்.
அதற்குப் பிறகு விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சி 1927 முதல் 1932 வரை இதே பகுதியில் கேம்ப்பெல் தாம்ஸன், ஹட்சின்ஸன், ஹாமில்டன், மாலோவான் என்பவர்களால் செய்யப்பட்டது.
டாக்டர் ஹென்றி லேயார்ட் செய்த ஆராய்வில் பெரும் பகுதி அரண்மனைகளிலேயே செய்யப்பட்டது. இதில் நிறைய அசீரிய ஆயுதங்களும் குவி ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டன.
அசீரியர்களில் சற்று வித்தியாசமான அரசர் அசூர்பானி பால் தான். இவர் கி.மு. 650ல் ஒரு பெரிய படிப்பகத்தை ஏற்படுத்தி யிருந்தார். அதில் ஆயிரக்கணக்கான களிமண் எழுத்து படிவங்கள் கிடைத்துள்ளன. இவை இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன.
பூமிக்குக் கீழே 35லிருந்து 40 அடிக்குள் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இடிந்து போன கோட்டைச் சுவரை சர். E. வாலிஸ் என்பவர் ஆராய்ந்தார்.
60 மைல் அளவு விஸ்தீரணமும் நினிவே என்று அழைக்கப் பட்டாலும், முக்கியமான பகுதி 7 மைல் சுற்றளவிலான பகுதி தானாம். இதைச் சுற்றிலும் எரிகோ பாணியில் இரட்டைச் சுவர்கள் கோட்டையாக கட்டப்பட்டிருந்தன. உள்கோட்டைச் சுவரின் உயரம் 100 அடி. அகலம் 46 அடியாம். நாலு பஸ்சை நிறுத்தி வைத்துத் தான் மறியல் பண்ணலாம்.
இந்த 100 அடி கோட்டையின் மீது பயமில்லாமல் ரதம் ஓட்டியிருக்கிறார்கள் அசீரிய ராஜாக்கள். கோட்டைச் சுவரின் உட் புறத்தில் சுற்றி சுற்றி ஏறி உச்சிக்குப் போகிற மாதிரி ராஜபாதை செல்கிறது. கோட்டையின் 4 முனைகளிலும் காவல் கோபுரங்கள் இருந்திருக்கின்றன.
பல புறங்களிலும் இடிந்து கிடக்கும் இந்த கோட்டையின் கற்களையும், கட்டிடத்தின் சுவர்களையும் ஸ்ட்ராட்டிகிராபிக் முறையில் ஆராய்ந்த டாக்டர். வாலிஸ் சொல்கிறார்.
“இந்தக் கோட்டை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்திருக்கிறது.”
வேதாகமத்தில் நினிவேயைக் குறித்துச் சொல்லப்பட்டிருப் பதைப் பாருங்கள்.
நாகூம் 1: 8 “நினிவேயின் ஸ்தானத்தைப் புரண்டு வரும் வெள்ளத் தினால் சர்வ சங்காரம் பண்ணுவார்”.
கி.மு. 612ல் பெரும் வெள்ளப் பெருக்கினால் தான் நினிவே பட்டினம் அழிந்து போயிருக்கிறது.
மத்திய நினிவேயை ஆராய்ந்த R.V ஹட்சின்ஸன் நகரின் நடுவில் பெரிய நீர் நிரப்பும் குளத்தையும், வடபுறத்திலும், தெற்கிலும் வேறு இரு குளங்களையும் கண்டுபிடித்தார். மத்தியப் பகுதியிலிருந்த குளம் 350 அடி நீளமும் 200 அடி அகலமுமானது. இந்தக் குளங்களுக்குத் தண்ணீர் டைகிரிஸ் ஆற்றின் கிளை ஆறாகிய கோசேர் என்ற ஆற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்த மூன்று பெரிய குளங்களுக்கும் இடையில் கால்வாய் இணைப்புகளும் இருந்தன. கோசேர் ஆற்றின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி, அதைத் திறந்து விட மதகுகளையும் அமைத்திருந்தனர்.
அதாவது, குளத்திற்கு தண்ணீர் தேவையான சமயங்களில் மதகைத் திறந்து விட்டால் போதும். நினிவேயின் பெரிய குளங்க ளெல்லாம் நிரம்பிவிடும். நினிவேயின் இந்தக் குளங்களின் அமைப்பும், பிரமாண்டமும் அக்காலத்தில் வெகு புகழ்பெற்றவை.
நினிவே பூர்வகாலம் முதல் தண்ணீர் தடாகம் போலிருந்தது என்கிறது நாகூம் 2 : 8.
வேதம் சொல்வது எத்தனை ஆச்சரியமான உண்மை பாருங்கள். இந்த குளம் எவ்வளவு காலம் முன்பாகக் கட்டப் பட்டது என்பதைக் கேள்விப்பட்டால் இன்னும் ஆச்சரியப் படுவீர்கள். இது இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
‘பிற்கால ராஜாக்களால் புதுப்பிக்கப்பட்டு சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இந்த தடாகங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை’ என்கிறார் ஹட்சின் ஹன் என்ற ஆராய்ச்சியாளர்.
இப்படி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை பார்த்தால் அது நிம்ரோத்தின் காலம் என்று தெரிகிறது.
நிம்ரோத் இந்த பட்டினத்தைக் கட்டினான் என்று ஆதி 10: 8-12, 1நாளா 1 : 10 சொல்வதையும், ‘பூர்வகாலம் முதல் தண்ணீர் தடாகம்’ என்று நாகூம் 2 : 8 சொல்வதையும் அகழ்வாராய்ச்சி துல்லியமாக நிரூபித்து விட்டது.
இந்தப் புகழ் பெற்ற தண்ணீர் அமைப்பே நினிவேக்கு கண்ணியுமாயிற்று.
எப்படி தெரியுமா?
நினிவேயை குறிவைத்து படையெடுத்த மேதிய, பாபிலோ நினிவே கோட்டையை முற்றுகை னியப் கூட்டணிப்படையினர் யிட்டனர். கோட்டையின் பலமான கதவுகள் அடைத்துக் கொண் டன. அசீரியர்களின் பலமறிந்த கூட்டணிப் படையினர் கோட்டை யைத் தாக்கி தங்கள் சக்தியைச் செலவிட விரும்பவில்லை.
என்ன செய்தார்கள்?
கோசேர் மதகுகளைத் திறந்து விட்டனர். தண்ணீர் மளமளவென்று தடாகங்களை நிரப்பி, வழிந்து இன்னும் இன்னும் பெருகி நினிவே நகரம் முழுவதையும் மூழ்கடித்தது. ஜனங்கள் கோட்டையைத் திறந்து தப்பவும் வழியில்லை.
இது நடந்தது கி.மு. 612ல். அசூர் பானிப்பாலின் அரண் மனையை வெள்ளம் புகுந்து தரைமட்டமாக்கி விட்டது.
நினிவே ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும். அரண்மனை கரைந்துபோம். (நாகூம் 1:6) என்ற வசனத்தையும் வாசித்து ஆச்சரிய மடையுங்கள். ஏனெனில் நினிவே அழிவதற்கு 101 ஆண்டுகளுக்கு முன்பே கி.மு.713ல் நாகூம் இதை முன்னறிவித்து விட்டார்.
1842ல் இந்நகரத்தை ஆராய்ந்த P.E. Botta என்ற பிரஞ்ச் ஆய்வாளர் நினிவே அரண்மனையின் சுவர்களில் வரலாற்றுச் செய்திகள் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். இன்னும் களிமண் தட்டைகள் போன்றவற்றில் காணப்படும் செய்திகளும் அசீரிய மன்னர்களின் கொடூர தன்மையை விவரிக்கின்றன.
ஒருவருக்கொருவர் மிஞ்சின சாடிஸ்ட்களாகத்தான் இருந் திருக்கிறார்கள்.
இராஜாக்களுக்கு பிடித்த பொழுது போக்கே மனிதர்களை சித்ரவதை செய்வது தான்.
தாங்கள் ஜெயம் கொள்ளும் தேசத்து ஜனங்களை விலங் கிட்டு கைதிகளாகக் கொண்டு வந்து கையை வெட்டி, கண்ணை குருடாக்கி, நாக்கை அறுத்து இப்படி தவணை முறையில் கொலை செய்து ரசிப்பதே அசீரிய மன்னர்களின் பொழுது போக்கு.
கேம்ப்பெல் தாம்ஸன் குழுவினர் நினிவேயின் ஏழு இடங்களில் பெரிய சித்திரவதைக் கூடங்களைக் கண்டுபிடித்துள் ளனர். சித்திரவதை ஆயுதங்களைக் கண்டு குலைநடுங்கி விட்டனர்.
அசூர்பானிப்பாலின் குறிப்புகளில்,”இன்று நானூறு பேரை தலையறுத்தேன். அந்தத் தலைகளை சிறு குவியலாக்கி மகிழ்ச்சி யடைந்தேன்”போன்ற குறிப்பை படித்து விட்டு தூக்கம் மறந்த ஆரய்ச்சியாளர்கள் பலர்.
இன்னொரு குறிப்பில்: இன்று எழுநூறு பேர்களின் கண்களைத் தோண்டினோம். மண்டியிட்டு அவர்கள் கதறியது எங்கள் யாவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவை யாவும் எனக்கு மகிமையைச் சேர்க்கும் இனிய பாடலாக இருந்தது” என்கிறார்.
இன்னும் கொடூரக் குறிப்புகள் பத்து இருக்கிறது. உங்களிடம் எல்லாவற்றையும் விவரித்தால் நிச்சயமாக ஒரு வாரத் திற்கு அசூர்பானிப்பாலை கனவில் கண்டு அலறுவீர்கள். எனவே, வேண்டாம்!
அவர்களுடைய கொலைக் கருவிகளும், கொலைக் குறிப்பு களும் இன்றும் பிரிட்டன் மியூசியத்தில் இருக்கிறது.
இன்று அகழ்வாராய்ச்சி கண்டெடுத்துள்ள அசீரியர்களின் கொடூரங்கள் பற்றி வேதம் சொல்கிறதை கவனியுங்கள்.
“இரத்தப் பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத் தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது. வெட்டுண்டவர் களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாகி யிருக்கும். பிணங்களுக்குத் தொகையில்லை. அவர்கள் பிணங் களில் இடறி விழுகிறார்கள்.” (நாகூம் 3 :1)
நினிவேயைப் பற்றி இதுவரை என்ன பார்த்தோம்? காலம் காலமாக கருதப்பட்டு வந்தது போல நினிவே ஒரு கற்பனை நகரம் அல்ல என்று தானே?
நினிவே மட்டுமல்ல யோனாவும் கூட கற்பனை அல்ல நிஜம். யோனாவும் நினிவேயும் மட்டுமல்ல. வேதாகம சம்பவங்கள் ஒவ்வொன்றுமே நிஜம் தான். இருநூறு சதவீதம் நிஜம்!
நினிவேயின் அரண்மனை சுவர்களை ஆராய்ந்தவர் P.E. Botta (போட்டோ) இவர் ஒரு பிரெஞ்சு ஆராய்வாளர். 1842 வாக்கில் பிரான்ஸை விட்டு வெளியேறி நினிவேயின் சுவர்களில் சரித்திரம் படித்துக் கொண்டிருந்தார்.
இவர் சிதலமடைந்து போன அரண்மனைச் சுவர்களில் ஒரு பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்தார்.
வெள்ளத்தினால் தானே சுவர்கள் அழிந்தன. அப்படியி ருக்க இது எப்படி சாத்தியம் என்று மேலும் ஆராய, மேதியர்கள் பற்றிய சரித்திர ஆராய்ச்சியில் இதற்கு விடை கிடைத்தது.
க்யூனிபார்ம் வடிவில் கிடைத்த மேதிய சரித்திரப் பதிவு களில் கி.மு. 612ல் அசீரிய மன்னன் அசூர்பானிப்பால் மீது நடைபெற்ற படையெடுப்பு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. அந்தக் குறிப்புகள் கூறுகின்றன.
“அசீரியாவின் மன்னன் எசெர்ஷெடன் காலத்திலிருந்து மேதிய ராஜாக்களுடன் அசீரியா பல உடன்படிக்கைகளை செய்து ள்ளது. ஆயினும் இவையெல்லாம் அசூர்பானிப்பாலின் காலத்தில் கடைப்பிடிக்கப்படாமல் மறுக்கப்பட்டன. இந்நிலையில் நாங்கள் (மேதியர்) அசீரியாவைக் கைப்பற்றி மேதிய ராஜ்ஜியத்தை விரிவு படுத்தத் திட்டமிட்டோம். நினிவேக் கோட்டையை நாங்கள் முற்றுகையிட்டு கோசே ஆற்றின் மதகுகளைத் திறந்தோம். நினிவே கோட்டைக்குள் வெள்ளம் புகுந்தது. இனி தான் தப்ப வழி யில்லை என்று கண்ட அசூர் தன் மனைவி மற்றும் வீட்டார், பணிப் பெண்கள் உட்படச் சுமார் நூற்றைம்பது பேரை அரண்மனையின் ஒரு பகுதியிலடைத்து, அப்பகுதிக்கு தீ வைத்து சாம்பலாக்கினான். தானும் தீ வைத்துக் கொண்டான். ஆயினும் அதற்குள் அப்பகுதி யில் நுழைந்து விட்ட எங்கள் வீரர்கள் எரிந்து கொண்டிருந்த அவனை வெட்டிக் கொலை செய்தனர்.”
மேற்கூறப்பட்ட மேதிய சரித்திரப் பதிவுக் கல்வெட்டு T. க்யூலர் யங் (Jr.) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேதியக் கல் வெட்டை வாசிப்பது மிகவும் சிரமமான காரியம். காரணம் மொழி யமைப்பு அப்படி. எனினும் மேற்கூறிய நிகழ்ச்சி க்யூனிபார்ம் என்ற சித்திர எழுத்துகளிலேயே இருந்ததால் சுலபமாகவும், துல்லியமாக வும் கண்டறியப்பட்டுள்ளது.
அரண்மனையின் ஒரு பகுதி தீயில் பாதிக்கப்பட்டிருந்ததின் பின்னணியும் விளங்கி விட்டது.
ஆனால் ஆச்சரியம் இதுவல்ல.
நினிவே அழிவதற்கு 101 வருடத்திற்கு முன்பே தீர்க்க தரிசனம் உரைத்த நாகூம் “அங்கே அக்கினி உன்னை பட்சிக்கும்; பட்டயம் உன்னைச் சங்கரிக்கும் என்று கூறியுள்ளது தான் புருவம் உயர்த்த வைக்கும் ஆச்சரியம். (வாசிக்கவும் நாகூம் 3: 15)
நாகூம் 3: 15 அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும். பட்டயம் உன்னை சங்கரிக்கும். அது பச்சைக் கிளிகளைப் போல உன்னைப் பட்சித்துப்போடும். உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையா க்கிக்கொள். உன்னை வெட்டுக்கிளிகளைத்தனையாக்கிக் கொள்.
– அசூரை அக்கினி பட்சித்தது
– பட்டயம் சங்கரித்தது
– வசனம் நிறைவேறியது!
கல்வெட்டுக்களும், அசூர்பானிப்பாலின் வட்டுருக்களும் கூட இன்றைக்கு வேதத்துக்கு ஆதாரமாக சாட்சியிட வாய் திறந்தி ருக்கின்றன.
அடுத்து ஒரு சிறிய செய்தி யோனாவின் கல்லறைபற்றியது.
நினிவேக்கு கிழக்கே டைகிரிஸ் சமவெளியில் இரட்டைக் குன்றுகளான க்யூன்ஜிக் மற்றும் நேபியூனஸ் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதில் நேபியூனஸ் என்பதற்கு யோனாவின் கல்லறை என்பது பொருள். நேபி என்றால் கல்லறை. யூனஸ் என்றால் யோனா.
யோனா இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டார் என பாரம் பரியமாக சொல்கிறார்கள். இந்த நேபியூனஸில், யோனா அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் ஒரு மசூதியும் சுற்றிலும் நிறையக் கல்லறைகளும் காணப்படுகின்றன.
கல்லறைகள் மட்டுமல்ல; ஒரு சிறிய கிராமமும் அங்கிருந்த தற்கான அடையாளங்கள் உள்ளன.
மேற்கொண்டு இந்த இடத்தை ரொம்பவும் ஆழமாக அகழ்ந்தால் அசீரிய சான்றுகளும், இன்னும் பல சுவையான தகவல் களும் கிடைக்க வாய்ப்பு என்கிறார் P.E. போட்டோ.
“ஏன் தொடர்ந்து இதை ஆராயலாமே, என்ன தடை?’ என்று நாம் கேட்டால்.
‘முதலாவது மலையில் 14,500,000 டன் கல் மண்ணையும், இரண்டாவது மலையில் 6,500,000 டன்னையும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு எங்கள் காலத்து விஞ்ஞானம் போதாது. விஞ் ஞானம் வளரும் போது உங்களில் யாராவது அதை செய்து பாருங் கள்” என்கிறார் போட்டோ தடாலடியாக.
இருக்கட்டும். நேபியூனஸை நாம் நெம்பிப் பார்க்காமலா போய் விடப் போகிறோம்.?
சரி, வாங்க சார், அடுத்த விஷயத்துக்குப் போகலாம்.
ஸ்டிராட்டிகிராபிக் ஆராய்வுகள் மூலம் நினிவேயின் வரலாற்றில் கி.மு.21ம் நூற்றாண்டு வரையுள்ள செய்திகளெல்லாம் கூட வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கி.மு. 2100 வது ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் நினிவே என்பதற்கு மீன் சூழ்ந்த நகரம் என்று பொருள் தரப் பட்டுள்ளது.
கி.மு. 1750ஐச் சேர்ந்த ஹம்முராபியின் குறிப்பில் நினிவே என்பதற்கு ‘இஷ்டாரின் மகிமை’ என்று பொருள் தரப்பட்டுள் ளது.
அசீரியர்களின் பிரதான தெய்வம் இஷ்டார். இது ஒரு பெண் தெய்வமாக கருப்பட்டது. ஆபாசப் பத்திரிகைகளில் மட்டுமே வெளியிடக் கூடிய பல கதைகள் இந்த இஷ்டார் பற்றி உண்டு.
இது தவிர அஸ்ட்ராட், அஷாரேட், அஸ்தரோத் என்ற பெயர்களும் இஷ்டாருக்கு உண்டு.
நிப்பர் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்ப்பதிவில், மரண தேவதை இஷ்டாரை ஒருமுறை பாதாளம் வரை கொண்டு போய்விட, இயா என்ற மற்றொரு தேவதையின் யோசனைப்படி அஷீஸ்னாமிர் என்ற இஷ்டாரின் துணையான ஆண் தெய்வம் மீன் உருக்கொண்டு இஷ்டாரை கரை கொண்டு வந்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன் தலையும் மனித உடலுடனும் கூடிய அஷீஸ்மினாரின் சிலைகள் நினிவேயின் பல இடங்களில் கிடைத்திருக்கிறது. இந்த தெய்வங்களின் மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள் இந்த அசீரியர்கள்.
ஒருவேளை யோனாவை மீன் கரையிலே கக்கினதை நினிவேயின் ஜனங்களில் சிலர் கண்டிருக்கலாம். மீன் கொண்டு வந்து துப்பியதால் யோனா கடவுளிடமிருந்து வந்தவர் என்று எண்ணி யோனாவின் வார்த்தைக்கு செவிகொடுக்கவும், யோனா சுட்டிக் காட்டிய தேவனுக்கு கீழ்ப்படியவும் ஜனங்கள் முன் வந்தி ருக்கலாம் என்று எண்ண நிறையவே இடமிருக்கிறது.
மற்றபடி திடீரென்று ஒரு மனிதன் தோன்றி ‘பாவ வழிகளை விட்டு கடவுளுக்கு கீழ்ப்படி’ என்று சொன்னால் கேட் கும் டைப் அல்ல அசீரியர்கள்.
எனவே, யோனாவை மீன் விழுங்கியது கூட ஒரு ப்ளஸ் பாயிண்டாகி விட்டதில்லையா?
இப்படி எதிர்மறையைக் கூட நேர்மறையாய் மாற்ற கர்த்தரால் தான் கூடும். (அப் 28:1-7 வரையுள்ள சம்பவமும் இதைப் போன்றதுதான். இல்லையா?) யோனா தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில் மூன்றாம் சல்மனாசார் நினிவேயை ஆட்சி பண்ணியிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
காரணம், யோனா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரோ பெயாமின் நாட்களில் வாழ்ந்தவர் (II இராஜா 14 : 25) இந்த யெரோபெயாமின் காலத்தில் அசீரியாவை ஆண்டது இந்த சல்மனாசார் III தான் (கி.மு. 858 – 824)
யெகூவின் காலத்திய கறுப்புநிறக் கல்வெட்டில் மூன்றாம் சல்மனாசார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக் கல்வெட்டு யெகூவினால் உண்டாக்கப்பட்டது. காலா என்ற இடத்தில் இது கிடைத்தது.
இது கூறும் செய்தியின்படி சல்மனாசார் ஒரு கொடிய சர் வாதிகாரியாயும் மனிதாபிமானம் கொஞ்சமுமற்றவனுமாயிருந் தான்.
அவன் மட்டுமல்ல. அவன் காலத்து ஜனங்களும் மிகவும் கொடியவர்களாயிருந்தனர். அரண்மனையில் சுமார் 14,000 கைதிகள் கண்கள் குருடாக்கப்பட்டு, விரல்கள் தரிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ராஜாவுக்குப் பொழுது போவதற்காக இவர்களை இம்சித்து மகிழ்வானாம்.
இஷ்டாரின் ஆலயம் பற்றியும், அதன் வழிபாடுகள் பற்றியும் எழுதவே முடியாத அளவிற்கு மிகவும் அசுத்தமானவை.
பெண்களை இலச்சையாய் நடத்தி நரபலி செலுத்து வதையும் இஷ்டாரின் ஆராதனையில் பிரதான அம்சமாக கொண்டிருந்தனர்.
இவையாவும் தேவனுடைய பார்வையில் அறுவெறுப்பான தாக காணப்பட்டபடியினால் தான் யோனாவை எச்சரிக்கும்படி தேவன் அனுப்பினார்.
அசீரியாவின் தலைநகரமாக நினிவே மட்டுமில்லை அசூர் என்ற பட்டணமும், காலாக் என்ற நகரமும் கோசபாத் என்ற நகரமும் கூட காலா காலங்களில் அசீரியாவின் ஆட்சி நகரங்களாக இருந்துள்ளன.
நினிவேயைப் பற்றியும், யோனாவைப் பற்றியும் இதுவரை கற்பனை என்று அடித்து பேசினவர்களை இன்று வாயடைக்கச் செய்யும்படி நினிவேயின் அரண்மனைச் சுவர்களும், காலாவின் கல்வெட்டுக்களும், அசூர்பானிப்பாலின் வட்டுருக்களுடன் சேர்ந் துகொண்டு கர்த்தரின் வேதத்திற்கு சாட்சியிட வாய் திறந்திருப்பது ஆச்சரியம்தான் இல்லையா?
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்