பிதாவாகிய தேவன்
ஏலோஹீம் (Elohim) என்ற சொல்லும் யேகோவா (YWHW) என்ற சொல்லும் ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படுத்தக்கூடியவை. பல இடங்களில் இச்சொற்கள் தேவத்துவமாகிய திரித்துவத்தைக் கூறுகின்றன என்பதையும் சில இடங்களில் திரித்துவத்தில் ஒரு நபரைக் கூறுவதாக அமைகின்றன என்பதையும் திரித்துவம் கட்டுரையில் பார்த்தோம்
பிதாவும் குமாரனும் சமமானவர்கள் என்பதையும் ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர் என்பதையும் கிறிஸ்து, தூய ஆவியானவர் கட்டுரைகளில் தருகிறேன். இவர்கள் சமமாயிருந்த போதிலும் திரித்துவத்தின் தலைமைத்துவம் பிதாவாகிய தேவனிடத்தில் உள்ளது (யோவான் 10:29; 14:28; கொரி . 15-28), இந்நிலையில் பிதா பெரியவராகக் கருதப்படுகிறார் (யோவான்:14:28). பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவுக்குப் பிதாவாகவும் தேவனாகவும் இருக்கின்றார் (யோவா.20:17). ஒரே தேவன் என்று வேதம் குறிப்பிடும் இடங்கள் தேவத்துவமாகிய திரித்துவத்தைக் குறிக்கின்றன என்று நாம் அறிவோம்.
ஏனெனில் பிதாவும் தேவன், கிறிஸ்துவும் தேவன், ஆவியானவரும் தேவன் என்பதைத் திரித்துவம் கட்டுரையில் பார்த்தோம். ஆனால் ஒரு சில இடங்களில் ஒரே தேவன் என்பது பிதாவாகிய தேவனைமட்டும் குறிப்பதாகவும் அமைந்துள்ள து (யோவா.17:3; அப்.10:38; எபே.4:4-6; 1 தீமோ .2:5),
- தேவன் ஆவியாயிருக்கிறார் (God is a spirit boing).
- அவருக்கு ஆவிக்குரிய உருவம் உண்டு என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது. ஆதி.1:26-27 .
- தேவன் அதரிசனமானவர் என்றும் ஒருவரும் ஒருக்காலமும் கண்டதில்லையென்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (கொலோ.1:15; 1 தீமோ.1:17; யோவா.1:18; யாத்.33:20).
தேவனுடைய பிரசன்னத்தில் இரு வகைகள் உண்டு.
- காணக்கூடிய வண்ணம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் (தானி.7:9; எசே.1:26; வெளி.4:2-3).
- காணக்கூடாத வண்ண ம் எங்கும் இருக்கிறார் (1 இரா.8:27; சங்.139:8-12). எனவே அவரை அதரிசனமானவர் என்றும் வேதம் கூறுகிறது.
தேவனை இஸ்ரவேலரின் மூப்பர்களும் மோசேயும் ஏசாயாவும் எசேக்கியேலும் தானியேலும் பலரும் தரிசித்ததை யாத்.24:9 11; 33:18-23; ஏசா.6:1; எசேக்.1:26-28; தானி.7:9-10; வெளி.4:1-2 பகுதிகளில் காண்கிறோம். இதற்கு: தேவனை அவரது மகிமையில் யாரும் காணமுடியாது, கண்டால் உயிருடனிருக்கமுடியாது. ஆனால் அவர் தம்மை மனிதருக்குக் காண்பிக்கும்பொழுது, காண்பவர்கள் மரணமடையாமலிருப்பதற்காக அவர்களால் தாங்கக்கூடிய அளவிற்கு மகிமையுடன் தரிசனமாகும் என்ற விளக்கம் பொருத்தமாயுள்ளது. அவருடைய மகிமையான பிரசன்னத்தைக் கண்டு யாரும் உயிரோடிருக்க முடியாது (யாத் 33:20; 1 தீமோ.6:16). ஆயினும் (அவருடைய முழு மகிமையையும் காணமுடியாத அளவில்) அவர் தரிசனம் அளித்துள்ளார் (ஏசா.6:1-13; தானி,7:9-10,13; எச்.1:26-28), அவர் தமது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் மகத்துவத்தை ஏசா.6:1-5; தானி.7:9-10; எசே.1:3 28; வெளி.4:2-11; 5:1-14; 7:9-12; 22:1-5 பகுதிகளில் கானலாம், கொலோ.1:15
யாவற்றையும் தமது வார்த்தையாகிய கிறிஸ்துவின் மூலம் ஆவியானவரின் செயலினால் பிதா படைத்தார் (ஆதி.1:1-2; யோவான் 1:1-3; கொலோ.1:16), உலகத்தோற்றத்துக்கு முன்பே தம்முடைய வார்த்தையாகிய கிறிஸ்து உலகிற்கு வந்து மனுக்குலத்தின் பாவங்களுக்காக அடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதைக் கிறிஸ்துவிடம் கூறி அவருடைய மனப்பூர்வமான சம்மதத்தைப் பெற்றார் (சங்.40:6-8; எபி.10:5-9; வெளி.13:8).
தம்முடைய வார்த்தையாகிய கிறிஸ்துவை நமக்காக உலகிற்கு அவர் அனுப்பியதை யோவா.5:30,37; 6:39,44; போன்ற பல பகுதிகளில் காண்கிறோம். மேலும் பிதாவானவர் குமாரனுடன் சேர்ந்து ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார் (யோவா.14:16,26; 15:26),
மூன்றாம் வானம் என்று அழைக்கப்படும் பரலோகத்தில் (சங்.19:1; 2 கொரி.12:2-3) அவரது சிங்காசனம் உள்ள து (ஏசா.66:1; வெளி.4:2-1), சங்.75:6; ஏசா.14:13 . தேவன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைத்த பின்னர், புதிய எருசலேம் நகரம் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வரும், பேரண்டத்தையும் ஆளும் பிதாவாகிய தேவனுடைய தலைநகரமாக அது பூமியில் இருந்து செயல்படும். அப்பொழுதிலிருந்து என்றென்றுமாக தேவனுடைய சிங்காசனம் பூமியில் இருக்கும் (வெளி 21:3-5; 22:1-5). அப்பொழுது பிதாவும் பூமியில் இருந்து ஆட்சி செய்வார்.