கல்லறைக்குள்ளே பிரவேசித்து
சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.(யோவா 20:6,7)
பேதுருவும் யோவானும் கல்லறையினிடத்திற்கு ஒருமித்து ஓடிவருகிறார்கள். பேதுருவைப் பார்க்கிலும் யோவான் துரிதமாய் ஓடி முந்திக் கல்லறையினிடத்திற்கு வருகிறான். கல்லறைக்குள் குனித்து பார்க்கிறான். ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன் பேதுருவோ அவனுக்குப் பின்னே வந்தாலும், கல்லறைக்குள்ளே பிரவேசிக்கிறான். யோவானைவிட அதிக தைரியமாகச் செயல்படுகிறான். யோவான் கல்லறைக்குள் எட்டிப்பார்க்கும்போது மிகுந்த எச்சரிப்போடு பார்க்கிறான். பேதுருவோ ஒன்றுக்கும் கவலைப்படாமல், வந்த வேகத்தில் கல்லறைக்குள்ளே பிரவேசித்து விடுகிறான்.
யோவான் பேதுருவைவிட வேகமாக ஓடிவந்தாலும், பேதுரு யோவானைவிட தைரியமாகச் செயல்படுகிறான். தேவன் தம்முடைய வரத்தைத் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவின் பிரகாரமாகத் தருகிறார். யோவானுக்குத் துரிதமாய் ஓடும் வரத்தையும், பேதுருவுக்கு கல்லறைக்குள் தைரியமாய்ப் பிரவேசிக்கும் வரத்தையும் கொடுக்கிறார். யோவானால் பேதுருவைவிட வேகமாக ஓடமுடிகிறது. பேதுருவால் யோவானைவிட தைரியமாகக் கல்லறைக்குள் பிரவேசிக்க முடிகிறது.
விசுவாசிகளில் சிலர் துரிதமாகச் செயல்படுவார்கள். இவர்கள் மெதுவாகச் செயல்படும் மற்ற விசுவாசிகளை உற்சாகப்படுத்தி, அவர்களும் துரிதமாகச் செயல்படுவதற்கு அவர்களுக்கு உதவிபுரியவேண்டும். ஒரு சில விசுவாசிகள் கர்த்தருக்காகத் தைரியமாக ஊழியம் செய்வார்கள். இப்படிப்பட்ட வரத்தை உடையவர்கள் ஊழியத்தின் பிரச்சனையான பகுதிகளில் முன்னின்று மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். திறப்பின் வாசலில் நிற்கிறவர்களுக்கு அதிக தைரியம் தேவை. இவர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை வாஞ்சையாய்த் தேடுகிறவர்கள். தேவையில்லாத காரியங்களுக்காகத் தங்களுக்குள்ளே பயப்படக்கூடாது. வீண்கட்டுக்கதைகளையும் கற்பனைப்பிரச்சனைகளையும் எண்ணிப்பார்த்து, விசுவாசத்தில்சோர்ந்துபோய் மனபயத்தில் மூழ்கிவிடக்கூடாது. பேதுரு வேறு யாருடைய கல்லறைக்குள்ளும் பிரவேசிக்கவில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கல்லறைக்குள்ளேதான் பிரவேசித்தான். அங்கே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரம்தான் வைக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக நாம் வரும்போது நமக்குள் பயபக்தி இருக்கவேண்டும். ஆனால் தேவையில்லாத பயம் இருக்கக்கூடாது.
நம்முடைய ஆவிக்குரிய யுத்தத்தில் நாம் தோற்றுப்போவதில்லை. வெற்றி பெறுவதற்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மரித்துப்போன ஒரு சரீரத்தைப்பார்த்து நாம் பயப்படக்கூடாது. கல்லறையில் தனியாக இருப்பதற்கும் நாம் பயப்படக்கூடாது. கல்லறை வழியாகத்தான் இயேசுகிறிஸ்துவிடம் சொல்லவேண்டுமென்றாலும், நாம் அந்த வழியாகவும் செல்ல ஆயத்தமாகயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து எந்த வழியாகச் சென்று தம்முடைய மகிமைக்குள் பிரவேசித்தாரோ, நாமும் அந்த வழியாகவே சென்று நம்முடைய மகிமைக்குள் பிரவேசிக்கவேண்டும்.
பேதுரு கல்லறைக்குள்ளே பிரவேசித்தபோது அங்கு இயேசுகிறிஸ்துவின் சரீரத்தைக் காணவில்லை. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். இயேசுகிறிஸ்து கல்லறையைவிட்டுப் புறப்படும்போது தம்முடைய தலையில் சுற்றியிருந்த சீலையைத் தம்மோடு எடுத்துச்செல்லவில்லை. அவருடைய சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டபோது, அது கல்லறையின் வஸ்திரத்தினால் சுற்றி அடக்கம்பண்ணப்பட்டது. ஆனால் அவர் உயிர்த்தெழுந்தபோதோ அவருக்கு கல்லறையின் வஸ்திரம் தேவைப்படவில்லை. உயிரோடிருக்கிறவருக்கு மரித்தோரின் வஸ்திரம் தேவையில்லை. இயேசுகிறிஸ்து மறுபடியும் மரிக்கப்போவதில்லை. ஆகையினால் அவருக்கு மரணவஸ்திரம் தேவையில்லை. தம்முடைய தலையிலே சுற்றியிருந்த சீலையை தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்துவிட்டு, இயேசுகிறிஸ்து கல்லறையைவிட்டு உயிரோடு போய்விட்டார்.
மரித்துப்போன லாசருவை இயேசுகிறிஸ்து உயிரோடு எழுப்பினார். அவன் கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பியபோது, தன்னைச் சுற்றியிருந்த சேலைகளோடு தான் எழும்பி வந்தான். கல்லறையின் வஸ்திரத்தோடு வெளியே வந்தான். உயிரோடு எழும்பி வந்த லாசரு மறுபடியும் தன் சரீரத்தில் மரிப்பான். ஆகையினால் அவனுக்கு கல்லறையின் வஸ்திரம் மறுபடியும் தேவைப்படும்.
நாம் பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்கும்போது, நம்முடைய பாவமான வஸ்திரங்களையெல்லாம் தனியே சுருட்டி வைத்துவிடவேண்டும். நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளவேண்டும். நீதிக்குப் பிழைத்திருக்கிற நாம் மறுபடியும் பாவத்திற்கு மரிக்கமாட்டோம். ஆகையினால் பாவமரண வஸ்திரம் நமக்குத் தேவைப்படாது என்னும் நிச்சயம் நமக்குள் காணப்படவேண்டும். பாவவஸ்திரங்களோடு நம்முடைய பழைய பாவசுபாவங்களையும் களைந்து வைத்துவிடவேண்டும்.
இயேசுகிறிஸ்து தம்முடைய தலையில் சுற்றியிருந்த சீலையை தனியே ஒரு இடத்தில் வைத்திருப்பதற்கு, வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். பரிசுத்தவான்களுக்கு அவர்களுடைய கல்லறை இளைப்பாறும் படுக்கையைப்போன்றது. இயேசுகிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களுக்காகத் தம்முடைய தலையில் சுற்றியிருந்த சீலையையே படுக்கையாக விரித்துவிட்டுப்போயிருக்கிறார். பரிசுத்தவான்களாகிய நமக்கு நம்முடைய கல்லறையில் படுக்கை ஆயத்தமாக விரிக்கப்பட்டிருக்கிறது. நாம் மறுபடியும் உயிர்த்தெழும் வரையிலும் அந்தப் படுக்கையில் படுத்திருந்துவிட்டு, உயிர்த்தெழுதலின்போது உயிரோடு எழும்புவோம்.
கல்லறையின் சீலைகள் ஒழுங்கும் கிரமமுமாக வைக்கப்பட்டிருக்கிறது. காவல் காக்கிறவர்கள் தூங்கும்போது, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை யாராவது திருடிச்சென்றிருந்தால், கல்லறை அலங்கோலமாக இருந்திருக்கும். சீலைகள் ஒழுங்கும் கிரமமுமாகச் சுருட்டி வைக்கப்பட்டிருக்காது. இயேசுகிறிஸ்து மெய்யாகவே உயிர்த்தெழுந்ததினால், தாம் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையில்கூட, தாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்கும் கிரமமுமாகச் செய்து முடித்துவிட்டு வெளியேறிப்போகிறார்.
பேதுரு கல்லறைக்குள் தைரியமாகப் பிரவேசிக்கிறான். அவனுடைய தைரியத்தைப் பார்த்து யோவானுக்கும் தைரியம் வருகிறது. யோவானும் கல்லறைக்குள் பிரவேசித்து, கண்டு விசுவாசிக்கிறான். இயேசுகிறிஸ்து மறுபடியும் உயிரோடு எழுந்திருக்கிறாரென்பதை விசுவாசிக்க ஆரம்பிக்கிறான். கண்டு கலங்குவதைவிட கண்டு விசுவாசிப்பது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
இந்தச் சீலைகள் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை அடக்கம் பண்ணிய போது, எப்படி இருந்ததோ அப்படியே அந்த இடத்திலேயே இருந்தது. யோவான் இந்தச் சீலைகளைத் தாண்டி, கடந்து போனான். சுருட்டி வைத்திருந்த சீலையை உலைக்காமல், தாண்டிச் செல்கிறான். லாசருவைக் கட்டியிருந்த சீலையை அவிழ்த்ததுபோன்று, இயேசுவிற்கு யாரும் செய்ய வேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவின் சரீரம் உயிர்த்தெழுந்தது. அவரைச் சுற்றியிருந்த சீலைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவைச் சுற்றப்பட்டப்படியே அதே இடத்தில் இருந்தது. கல்லறையின் கதவு திறந்திருந்தது. இயேசு கிறிஸ்துவின் சரீரம் வெளியேறிச் செல்வதற்காக கல்லறை திறக்கப்படவில்லை. அவர் இப்பொழுது உயிர்த்தெழுந்த சரீரத்தில் இருக்கிறார். கல்லறை பூட்டப்பட்டிருந்தாலும், அவரால் வெளியே போகமுடியும். ஆனால் பூட்டப்பட்டிருக்கும் கல்லறைக்குள் சீஷர்களால் உள்ளே வரமுடியாது. சீஷர்கள் கல்லறைக்குள் வரவேண்டுமென்பதற்காகவும், தாம் உயிர்த்தெழுந்திருப்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் கல்லறையை மூடப்பட்டிருந்த கல் திறந்திருந்தது. இயேசு கிறிஸ்து பூட்டப்பட்டிருந்த கதவுகள் வழியாகவும், போகக்
கூடியவர்.