பழைய ஏற்பாட்டின் ஆசிரியர்கள்

பழைய ஏற்பாட்டின் ஆசிரியர்கள்

புனித வேதாகமம் இருபகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகமாகும்.. இவற்றுள் முதலாவது பகுதி பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகின்றது. ஏற்பாடு எனும் பதமானது “உடன்படிக்கை ” அல்லது “ஒப்பந்தம்” என அர்த்தந்தரும் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிப் பதங்களில் இருந்து பெறப்பட்டதாகும். பழைய ஏற்பாடானது.தேவன் யூத மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் சரிதையாகும். ஆரம்பத்தில் இது யூதர்களுடைய வேதநூலாக, அக்காலத்தைய அவர்களுடைய மொழியான எபிரேய மொழியில் எழுதப்பட்டது. யூதர்கள், தமது வேதாகமத்தைத் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்ட அதிகார பூர்வமான வார்த்தையாக ஏற்றுக்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் அதன் கிரேக்க மொழிபெயர்ப்பு, கிறிஸ்தவர்களது வேதாகமத்தின் முதல் பகுதியாகியதோடு, “பழைய ஏற்பாடு” எனும் பெயரையும் பெற்றது.

 

பழைய ஏற்பாடானது 39 தனிப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு நூலாகும். இப்புத்தகங்கள் கிட்டத்தட்ட கி.மு.1450 இற்கும் கி. மு. 400 இற்கும் இடைப்பட்ட 1050 வருடகாலப் பகுதியில், யூதமார்க்கத்தைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளினால் எழுதப்பட்டவைகளாகும். தீர்க்கதரிசி என்பதற்கு எபிரேய மொழியில் உபயோகிக்கப்பட்ட பதமான “நபி” என்பது, இன்னுமொருவருக்காகப் பேசுபவன் அல்லது, இன்னுமொரு வருடைய வாயாகச் செயல்படுபவன் என பொருள்படும். பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் “தேவனுடைய தீர்க்கதரிசிகள்” என அழைக் கப்படுகின்றனர். எனவே, இவர்கள் தேவனுடைய வாயாகச் செயல் பட்டு, அவருடைய வார்த்தையை எழுதியுள்ளனர்.

 

பழைய ஏற்பாட்டில், உலக ஆரம்பத்திலிருந்து கி. மு. 2000 வரையிலான உலக சரித்திரமும், கி. மு. 2000 முதல் கி. மு. 400 வரையிலான யூத மக்களின் சரித்திரமும் எழுதப்பட்டுள்ளது. யூத சரித்திரமானது, தேவன் அவர்களது வாழ்வில் தலையிட்டு செய்த வற்றையும் உள்ளடக்கியுள்ள சரித்திரமாகும். பழைய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களை சரித்திர நூல்கள், கவிதை நூல்கள், தீர்க்கதரிசன நூல்கள் என பிரிப்பது வழமை. ஆதியாகமம் முதல் எஸ்தர் வரை யிலான 17 புத்தகங்களும் சரித்திர நூல்களாகும். யோபு முதல் உன்னதப்பாட்டு வரையிலான 5 புத்தகங்களும் கவிதை நூல்கள். ஏசாயா முதல் மல்கியா வரையிலான மிகுதி 17 புத்தகங்களும் தீர்க்க தரிசன நூல்களாகும். சரித்திரப் புத்தகங்களுள், முதல் 5 புத்தகங்களும் பஞ்சாகமங்கள் என அழைக்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டிலுள்ள 39 புத்தகங்களும் யாரால் எக்காலத்தில் எழுதப்பட்டன என்பதை முதலில் பார்ப்போம்.

 

  • பஞ்சாகமங்கள்

 

பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களான ஆதியாகமம், பழைய ஏற்பாட்டின் முதல் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் எனும் பஞ்சாகமப் புத்தகங்கள், இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வாக்குத்தத்த பூமியான கானான் தேசத்தின் எல்லை வரை வழிநடத்திச் சென்றமோசன்பவரினால் எழுதப்பட்டவைகளாகும். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள், 40 வருட வனாந்திரப்பிரயாணத்தின் பின் வாக்குத்தத்த பூமிக்குள் சென்றனர். இந்த நாற்பது வருட வனாந்திரப்பிரயாணத்தின் காலத்திலேயே மோசே இவ்வைந்து புத்தகங்களையும் எழுதியதாக நம்பப்படுகின்றது. எனினும், இவ் வனாந்திரப் பிரயாணம் எக்காலகட்டத்தில் நடைபெற்றது என்பது பற்றி வேதவியாக்கியானிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. பாரம்பரியமாக கி. மு. 1446 இலேயே இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியதாக நம்பப்பட்டு வந்தது. இது, 1 இராஜாக்கள் 6 : 1 ஐ அடிப்படையாகக் கொண்ட கணிப்பீடாகும். இதில், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட 480 ஆம் வருடத்தில் சாலொமோன் ஆலயத்தைக் கட்டத் தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அது சாலொமோனுடைய ஆட்சியின் 4 ஆவது வருடம் என்றும் அறியத்தருகின்றது. சாலொமோன் கி. மு. 970 இலேயே இஸ்ரவேலின் அரசனாகினான். அவன் தனது ஆட்சியின் நான்காவது வருடத்தில், அதாவது கி. மு. 966 இல், ஆலயத்தைக் கட்டத் தொடங்கியுள்ளான். இதற்கும் 480 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறினார்கள் என்றால், அது, கி. மு. 1446 இல் நடைபெற்ற சம்பவமாகவே இருக்க வேண்டும். (சிலர், நவீன புதைபொருள் மற்றும் சரித்திர ஆராய்ச்சிகளை ஆதாரம் காட்டி, கி.மு. 1280 ஆம் ஆண்டே இச்சம்பவம் நடை பெற்றதாகக் கூறுகின்றனர்). பாரம்பரியக் கருத்தின்படி, கி.மு. 1446 இற்கும் கி. மு. 1406 இற்கும் இடைப்பட்ட 40 வருட காலத்திலேயே மோசேயின் 5 புத்தகங்களும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களையும் மோசே எழுதவில்லை எனும் கருத்து இன்று பிரபல்யம் பெற்று விளங்குகிறது. ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பல ஆவணங்களைக் கொண்டு எஸ்றாவே இப்புத்தகங்களை எழுதினார் என, கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் சிலர் கருத முற்பட்டனர் . 18 ஆம் நூற்றாண்டில், இவை இரு வேறுபட்ட ஆவணங்களில் இருந்து தொகுக்கப்பட்டவை எனும் கருத்து உருவானது. 19 ஆம் நூற்றாண்டில், இவை நான்கு ஆவணங்களில் இருந்து தொகுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்று பிரபல்யம் பெற்றுள்ள இக்கருத்து, யூதர்கள் பாபிலோனிய சிறை யிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்னர், மோசேயின் காலத்துக்கும் பின்பான நான்கு ஆவணங்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப் பட்டவையே பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களும் என கூறுகின்றது. எனினும், மோசேயே இவற்றை எழுதினார் என்பதே யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. மோசே எழுதியவைகள் பிற்காலத்தில் ஒன்றாக தொகுக்கப்பட்டே முதல் 5 புத்தகங்களும் இன்றிருக்கும் நிலையைப் பெற்றுள்ளன என்பது உண்மையாயினும், இவை ஆரம்பத்தில் மோசேயினாலேயே எழுதப்பட்டன என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

 

பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களில் யாத்.24 : 42 34 : 28, எண்.33: 2, உபா. 31: 9, 24 எனும் வசனங்கள், மோசேயே இவற்றை எழுதினார் என்பதை அறியத்தருகின்றன. தானியேல் 9:11,13, யோசுவா 8:32; 23: 6, 2 நாளாகமம் 25: 4 எனும் வசனங்களில், பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களும், ”மோசேயின் நியாயப் பிரமாணப் புத்தகம்” என்றும், எஸ்றா 6:18. நெகேமியா 13:1) 2 நாளாகமம் 35 : 12 எனும் வசனங்களில், இவை “மோசேயின் புத்தகம்” என்றும், புதிய ஏற்பாட்டில் மாற்கு 12 : 26 இல் இவை “மோசேயின் ஆகமம்” என்றும், லூக்கா 2 : 22 இலும் 24 : 44 இலும் யோவான் 7 : 19 இலும் இவை “மோசேயின் நியாயப்பிரமாணம் ” என்றும் குறிப்பிடப் பட்டுள்ளமை, இவை மோசேயினால் எழுதப்பட்டவை என்பதை உறு திப்படுத்துகின்றன. மேலும், பிற்கால யூதர்கள் மோசே எழுதியவற்றை உபயோகித்துள்ளதை பின்வரும் வேதப்பகுதிகள் அறியத்தருவதும் இதற்கான ஆதாரமாயுள்ளது. ( யோசுவா 1: 7 – 8; 1 இராஜா 2:4 8 : 9; 2 இராஜா 14 :6, 21 : 8, 23 : 25; 2 நாளா 23:18. 34 : 14; எஸ் 3:2, 7:6; நெகே 8:1; அப். 3:22, 28 : 23, 15:21, 1 கொரி 9 :9; 2கொரி 3:15; யோவா 1:45, 5:46; எபி. 7 : 14; மத். 22:24; மாற். 7:10, 12 : 19, 12 : 26; லூக். 20 : 28; ரோ. 10 : 5, 19) புதிய ஏற்பாட்டுக் காலத்தில், மோசேயின் புத்தகம் எனும் போது அது, பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களையும் குறிக்கும் பெயராகவே இருந்தது.

 

இன்றைக்குச் சிலர், பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களையும் மோசே எழுதியிருக்க முடியாது என்பதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் ஒரு காரணம், மோசேயின் காலத்தில் எழுதும் முறை இருக்கவில்லை என்பதாகும். ஆனால் மோசேயின் காலத்துக்குப் பல நூறு வருடங் களுக்கும் முன்பே, எகிப்து, பாபிலோனியா போன்ற இடங்களில் பாடசாலைகளும் நூலகங்களும் இருந்துள்ளதை அண்மைக்கால புதைபொருள் ஆராய்ச்சிகள் அறியத்தருகின்றன. சிரியாவிலுள்ள தெல்மார்டிக் எனும் பிரதேசத்தில் “எப்லா” எனும் பெயருடைய புராதன நகரத்தைச் சேர்ந்த பல களிமண் எழுத்துப் பலகைகள் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஆபிரகாமினுடைய காலத்துக்கும் முற்பட்டவைகளாகும். அதே போல எகிப்திலுள்ள “தெல்-எல்-அமர்னா” எனுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் எழுத்துப் பலகைகள், மோசேயின் காலத்தைய எகிப்திய மன்னருக்கும் கானானிய அரசர்களுக்குமிடையே பரிமாற்றம் செய்யப்பட்ட கடிதங்களாகும். இவற்றிலிருந்து மோசேயின் காலத்தில் எழுத்து வழக்கு இருந்துள்ளதை அறியக்கூடியதாயுள்ளது. அதே சமயம், மோசே எகிப்திய அரசமாளிகையில் வளர்க்கப்பட்டமையினால், அவர், அக்காலத்தைய எகிப்திய கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்ற வராகவே இருந்தார் (அப். 7 : 20 – 22). இதிலிருந்து, பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களையும் எழுதக்கூடியவராக மோசே இருந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுகிறிஸ்துவே, மோசே தன்னைப் பற்றி எழுதியுள்ளதாக கூறியுள்ளார் (யோவா. 5 : 46). மேலும்,மோசேயின் ஆகமத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா என்றும் அவர் கேட்டுள்ளார் (மாற். 12: 26). எனவே, மோசேயே. முதல் 5 புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.

 

மோசே எழுதிய 5 புத்தகங்களில், அவருடைய காலத்துக்கும் முற்பட்ட விடயங்களும் உள்ளன. குறிப்பாக, முதல் புத்தகமான ஆதியாகமத்தில் உள்ள சம்பவங்கள், அவர் பிறப்பதற்கு முன்பே நடைபெற்றவை. எனவே, இவற்றை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என நாம் கேட்கலாம். இதற்கு இரு விளக்கங்கள் உள்ளன. ஒன்று, ஏற்கனவே எழுதப்பட்டிருந்த குறிப்புகளை மோசே உப யோகித்து தனக்கு முற்பட்ட சரித்திரத்தை எழுதினார். மற்றது, தேவன் அவற்றை மோசேக்கு நேரடியாக வெளிப்படுத்தியமையினால் மோசேயினால் அவற்றை எழுதக்கூடியதாயிருந்தது. உண்மையில் இவ்விரு கருத்துக்களுமே சரியான விளக்கங்களாகும். ஏனென்றால் சில பகுதிகளை மோசே, ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புகளை உபயோகித்தே எழுதியுள்ளார். அவ்வாறு அவரால் எழுத முடியாத பகுதிகளைத் தேவன் நேரடியாக மோசேக்கு வெளிப்படுத்தியுள்ளார். ஆதியாகமப் புத்தகத்தில் பலருடைய வம்சவரலாற்றுப் புத்தகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். ஆதியாகமம் 5 : 1, 6 : 9, 10:1, 11 : 10, 11 : 27, 25 :13, 25 : 19, 36 : 1 போன்ற வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வம்சவரலாறுகள், அக்கால வம்சவரலாற்றுப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும். அதேபோல, எழுதப்பட்ட முற்பிதாக்களின் சரிதைகளையும், மோசே உபயோகித்து ஆதியாகமத்தை எழுதியிருக்க வேண்டும்.

 

மோசே ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புகளை உபயோகித்தே ஆதியாகமத்தை எழுதினார் எனக் கூறும்போது, முழுப்புத்தகமும் அவ்வாறே எழுதப்பட்டது என நாம் எண்ணலாகாது. ஏனென்றால், மனிதனால் குறிப்பெடுக்க முடியாத சில சம்பவங்களையும் மோசே ஆதியாகமப் புத்தகத்தில் எழுதியுள்ளார். உதாரணமாக, முதலாம் அதிகாரத்தில் உள்ள சிருஷ்டிப்பின் விவரணத்தை எழுத அச்சமயம் மனிதர்கள் இருக்கவில்லை. அதேபோல, ஜலப்பிரளயத்தின் போது மலைகளுக்கு மேல் தண்ணீர் எவ்வளவு உயரத்துக்கு இருந்தது எனும் விபரத்தை மனிதனால் அளவிட்டிருக்க முடியாது. இத்தகு விடயங்கள் நிச்சயமாக தேவனாலேயே மோசேக்கு நேரடியாக வெளிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். தேவன் மோசேயோடு பல தடவைகள் நேரடியாக பேசியுள்ளார். ஆரம்பத்தில் எரியும் முட்செடியின் நடுவில் இருந்து மோசேயோடு பேசிய தேவன், (யாத்.3:1 – 22), அவரோடு முகமுகமாய்ப் பேசியுள்ளார் (யாத். 33:11). தேவன் சொன்னதையே மோசே, ஜனங்களுக்குச் சொன்னார் (யாத். 19 : 7). பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களில் லேவியராகமப் புத்த கத்தில் மட்டும், 65 தடவைகள் “கர்த்தர் மோசேயை நோக்கி ” எனும் சொற்பிரயோகத்தை நாம் அவதானிக்கலாம். மோசே எழுதிய மற்றைய புத்தகங்களிலும் இதைப்போன்ற பல குறிப்புகள் உள்ளன. முதல் 5 புத்தகங்களிலும் எழுத வேண்டிய தகவல்களை தேவன் மோசேக்கு கொடுத்திருப்பார் என்பதற்கான ஆதாரமாக இது உள்ளது. மோசே எழுதிய புத்தகங்களில் அவருடைய மரணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள உபாகமப் புத்தகத்தின் கடைசி சில வசனங்கள், அவருக்குப்பின் இஸ்ரவேல் மக்களுக்குத் தலைவராகிய யோசுவா வினால் எழுதப்பட்டதாக யூதர்களுடைய பாரம்பரியம் கூறுகிறது.

 

மோசேஎழுதியவற்றுள், முதலாவது புத்தகமான ஆதியாகமம், பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்புடன் ஆரம்பமாகின்றது. தேவனே அனைத் தையும் சிருஷ்டித்துள்ளார் என்பது முதலிரண்டு அதிகாரங்களிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன்பாவத்தில் விழுந்தமையால் (3 ஆம் அதிகாரம்), அவனிலிருந்து வந்த மனுக்குலம் முழுவதுமே பாவிகளான மனிதரைக் கொண்டுள்ளது. 4 ஆம் அதிகாரம் முதல் 11 ஆம் அதிகாரம் வரை, பாவத்தின் விளைவுகளைப்பற்றி நாம் வாசிக்கலாம். பாவத்தில் வீழ்ந்த மானிட சமுதாயத்தை மீட்க சித்தம் கொண்ட தேவன் “ஆபிரகாம்” எனும் மனிதனைத் தெரிந்தெடுத்து, அவன் மூலமாக தமக்கென ஒரு ஜாதியை ஏற்படுத்தினார். ஆபிரகாமினுடைய அழைப்பு கிட்டத்தட்ட கி. மு. 2000 அளவில் நடைபெற்றதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆதி யாகமம் 12 ஆம் அதிகாரத்தில் இருந்து கடைசி அதிகாரம் வரை ஆபிரகாமின் சந்ததியான ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்போ ருடைய வாழ்வுச் சரிதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் எனும் மறுநாமமுள்ள யாக்கோபினுடைய 12 பிள்ளைகளுமே தேவன் தெரிந் தெடுத்த இஸ்ரவேல் ஜனங்களின் பிதாக்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் பஞ்சம் காரணமாக எகிப்து தேசத்துக்குச் சென்றனர். அச்சமயம் யோசேப்பு எகிப்திய அரசில், முக்கிய மனிதனாக இருந் தான். ஆதியாகமம் யோசேப்பின் மரணத்தோடு முற்றுப்பெறுகிறது.

 

யோசேப்பினதும் அவனது சகோதரர்களினதும் வம்சம் எகிப்தில் கிட்டத்தட்ட 400 வருடங்களாக வளர்ந்து பெருகிற்று. யோசேப்பை அறியாத ஒருவன் எகிப்தின் அரசனாகியபோது,இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அரசினால் துன்புறுத்தப்பட்டனர். இதனால் தேவன் அவர்களை “மோசே ” என்பவருடைய தலைமையின் கீழ், எகிப்தி லிருந்து, தான் ஏற்கனவே வாக்குத்தத்தம் பண்ணிய “கானான் ” எனும் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போனார் . மோசேமின் இரண்டாவது புத்தகமான யாத்திராகமம், எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு தேவனால் மீட்கப்பட்டார்கள் என்பதை அறியத் தருகின்றது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளி யேறியது. கி. மு.1446 இல் ஆகும். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ர வேலர்,3மாதம் கழித்து சீனாய் எனும் மலையடிவாரத்தைச் சென்ற டைந்தனர். அங்கு அவர்கள் கிட்டத்தட்ட ஒருவருட காலம் தங்கி யிருந்தனர். அவர்கள் அங்கிருக்கும்போது, தேவன் பிராக மாடு செய்து கொண்ட உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டு, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதோடு,ஆசரிப்பு கூடாரமும் கட்டப்பட்டது .

 

மோசேயின் மூன்றாவது புத்தகமான லேவியராகமம், இஸ்ர வேல் மக்கள் சீனாய் மலையடிவாரத்தில் இருந்த காலத்தில் தேவன், மோசேயின் மூலமாக அவர்களுக்கு கொடுத்த பலதரப்பட்ட சட்ட திட்டங்களைக் கொண்டுள்ளது. நான்காவதான எண்ணாகமப் புத்தகத்தில், சீனாய் மலையில் இருந்து, வாக்குத்தத்த நாடான கானான் வரையிலான இஸ்ரவேல் மக்களது வனாந்திரப் பிரயாணம் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குத்தத்த நாட்டின் எல்லை வரை வந்த இஸ்ரவேல் மக்கள், மோசேக்கும் தேவனுக்கும் எதிராக கலகம் செய்தமையால் தேவ தண்டனை அவர்கள் மீது வந்தது.மேலும், வாக்குத்தத்த நாட்டை வேவுபார்க்கச் சென்றவர்களுள், யோசுவா, காலேப் எனும் இருவரைத் தவிர மற்றவர்கள் துர்ச்செய்தி கொண்டு வந்தமையால், மக்கள் பழையபடி எகிப்துக்குப்போக விரும்பினர். இதனால் தேவன் அவர்களில் (யோசுவா,காலேப் என்போர் தவிர) ஒருவர் கூட வாக்குத்தத்த நாட்டிற்குள் செல்லாதபடி, அவர்கள் மரிக்கும் வரை வனாந்திரத்திலே சஞ்சரிக்கும்படி செய்தார். எகிப்தி லிருந்து வந்தவர்களுடைய பிள்ளைகளே வாக்குத்தத்த பூமிக்குள் சென்றனர். ஐந்தாவது புத்தகமான உபாகமம், இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து வழிநடத்தி வந்த மோசே, தேவ கட்டளைகளுக்கு கொடுத்த விளக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும், இப்புத்தகம் மோசேயின் மரணத்தோடு முற்றுப்பெறுகின்றது.

 

(2) சரித்திர நூல்கள்

 

பஞ்சாகமங்களைத் தொடர்ந்து மேலும் 12 சரித்திரப் புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன. இவற்றுள் முதலில் இருப்பது, யோசுவா என்பவரினால் எழுதப்பட்டதாகும். மோசேக்குப் பிறகு யோசுவாவே தேவனுடைய வார்த்தைகளை எழுதியுள்ளார் (யோசு 24 : 26-27).மோசேயின் மரணத்தின் பின், அதாவது கி. மு. 1406 இல் இஸ்ரவேல் மக்களுக்குத் தலைவராகிய இவர், இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்த பூமிக்குள் வழி நடத்திச் சென்றவராவார். இவருடைய தலைமையின் கீழேயே இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்த நாட்டைக் கைப்பற்றி அதைத் தமது 12 கோத்திரங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர். இதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கொண்டுள்ள யோசுவாவின் புத்தகம், யோசுவாவினாலேயே எழுதப்பட்டதாக தல்மூட் என அழைக்கப்படும் யூதமதநூல் கூறுகின்றது.

 

பாரம்பரியக் கருத்தின்படி யோசுவா கி. மு. 1390 இல் மரண மடைந்துள்ளார். எனவே, இதற்கு முன்பே யோசுவாவின் புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்று குறுகிய காலத்திற்குள்ளாகவே எழுதப்பட்டுள்ளது என்பதை அறியத்தரு கின்றது. குறிப்பாக, இந்நாள் வரைக்கும் ” எனும் சொற்பிரயோகம் 12 தடவைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதிலிருந்து (4 :9, 5 :9, 6. 25, 7:26, 8: 28, 29, 10 : 27, 13 : 13, 14 : 14, 15 : 63, 16 : 10) இவ்வாறு சொல்லப்பட்டவைகள், இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இருந்துள்ளதை அறியக் கூடியதாய் உள்ளது. 8:32, 24 : 26 போன்ற வசனங்கள், யோசுவாவே இப்புத்தகத்தை எழுதினார் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது. யோசுவாவின் மரணத்துக்குப் பின்பான விடயங்கள் எலெயேசரினாலும், பினெகாசினாலும் எழுதப்பட்டதாக யூதர்களுடைய பாரம்பரியம் கூறுகின்றது.

 

யோசுவாவிற்கு அடுத்துள்ள நியாயாதிபதிகளின் புத்தகம் தீர்க்க தரிசியாகிய சாமுவேலினால் எழுதப்பட்டதாக தல்மூட் எனப்படும் யூதமதநூல் கூறுகின்றது. நியாயாதிபதிகளின் புத்தகத்தில் அடிக்கடி இடம் பெறும், “அந்த நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை”எனும் சொற்பிரயோகம் (நியா. 17 : 6, 18 : 1, 19 : 1, 21 : 25), இஸ்ரவேலில் அரச ஆட்சிமுறை ஏற்பட்டதன் பின்னர், அதற்கு முற்பட்ட ராஜாக்கள் இல்லாதகாலத்தைப் பற்றிய விவரணமாக இருப்பதனால், இப்புத்தகம், கி. மு. 1050 இல் சவுல் இஸ்ரவேலின் ராஜாவாகியதன் பின்பே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதேசமயம் நியாயாதிபதிகள் 1 : 21 இல் எபூசியர் இன்னும் எருசலேமில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதி லிருந்து கி. மு. 1004 இல் தாவீது இவர்களை எருசலேமிலிருந்து துரத்திவிடுவதற்கும் முன்பே இப்புத்தகம் எழுதப்பட்டுவிட்டதை அறியத்தருகின்றது. எனவே, இப்புத்தகம் கி. மு. 1050 இற்கும் 1004 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சாமுவேலினால் எழுதப்பட்டிருக்க வேண்டும். நியாயாதிபதிகள் 11:26 இல், இஸ்ரவேலர் வாக்குத்தத்த பூமியைக் கைப்பற்றி 300 வருடங்களாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னுள்ள விடயங்களையும் கருத்திற் கொள்ளும்போது, யோசுவாவின் மரணத்திற்குப்பின்பான ( நியா 1:1) கிட்டத்தட்ட 350 வருடகால (அதாவது கி. மு. 1390 முதல் 1050 வரையிலான) இஸ்ர வேல் மக்களது சரித்திரம் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை அறியக்கூடியதாய் உள்ளது. இக்கால கட்டத்தில் மக்கள் தேவனை விட்டு வழிவிலகிச் செல்லும் போது அவர்கள், அருகிலுள்ள ஜாதியின ரால் ஒடுக்கப்படுவதையும், அவர்கள் மனந்திரும்பித் தேவனிடமாய் வரும் போது, தேவன் நியாயாதிபதிகள் மூலம் அவர்களை விடுவிப்ப தையும் பற்றி இப்புத்தகத்தில் வாசிக்கலாம். இக்காலகட்டத்தில் 12 நியாயாதிபதிகள் காலத்துக்கு காலம் இஸ்ரவேலை நியாயம் விசாரித் துள்ளனர்.

 

இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வந்த காலத்தின் ஒரு சரிதையையே அடுத்த புத்தகமான ரூத்தின் சரித்திரம் அறியத்தருகின்றது (ரூத் 1:1). ரூத் எனும் பெயர் கொண்ட ஒரு மோவாபியப் பெண்எவ்வாறு இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து அவருடைய ஜனங்களின் அரச பரம்பரையில் இடம் பெற்றாள் என்ப தைப் பற்றி கூறும் இப்புத்தகம், யூதர்களுடைய பாரம்பரியத்தின்படி தீர்க்கதரிசியாகிய சாமுவேலினாலேயே எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் நடைபெற்று சிறிது காலத்திற்குப் பின்பே அவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ரூத் 4:8 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலுக்கு 4:7 இல் விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதில் இருந்து, இப்புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் அப்படியொரு வழக்கம் இஸ்ரவேலில் இருக்கவில்லை என்பதை

 

அறிந்து கொள்கின்றோம். எனினும் இப்புத்தகம்,சம்பவங்கள் நடை பெற்று நீண்ட காலத்திற்குப் பின்பே எழுதப்பட்டது என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், புத்தகத்தின் இறுதியில் உள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் ( 4 : 18 – 22 )தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலை அரசாண்ட சாலொமோனின் பெயர் இடம் பெறாமல், அது, தாவீ தோடு முற்றுப் பெறுவதினால்,இப்புத்தகம் தாவீதின் ஆட்சிக் காலத்திலேயே சாமுவேலினால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

ரூத்தின் புத்தகத்துக்கு அடுத்துள்ள சாமுவேலின் புத்தகங்கள், நியாயாதிபதிகளின் இறுதிக் காலத்தில் இருந்து, இஸ்ரவேல் மக்களுடைய சரித்திரத்தை ஆரம்பிக்கின்றது. இஸ்ரவேலின் கடைசி நியாயாதி பதியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்த சாமுவேலுடைய பேச்சுக்கு செவி கொடாத இஸ்ரவேல் மக்கள், மற்றைய நாட்டினரைப் போல் தங்களுக்கும் ஒரு இராஜா வேண்டும் என கேட்டமையினால், தேவன் சவுல் என்பவனை அவர்களுக்கு இராஜாவாக கொடுத்தார். இவனே இஸ்ரவேலின் முதலாவது இராஜா. இவன் கி. மு. 1050 இல் இஸ்ரவேலின் அரசனாகி, 40வருடங்கள் ஆட்சி செய்தபோதிலும், இவனது ஆட்சி தோல்வியில் முடிவடைந்தமையினால், தேவன், இவனுக்குப் பதிலாக தாவீது என்பவனை கி.மு.1010 இல் இஸ்ர வேலின் அரசனாக்கினார். இவனும் இஸ்ரவேலை 40 வருடங்கள் அரசாண்டான். சாமுவேல், சவுல், தாவீது என்பவர்களோடு சம்பந் தப்பட்ட சரித்திரமே சாமுவேலின் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகங்கள் சாமுவேலினால் எழுதப்பட்டவை எனக் கூறுவதற் கில்லை. இப் புத்தகங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களுள், சாமுவேல் முதலில் வருவதாலும், மற்ற இருவரையும் அவரே அரசராக அபிஷேகித்துள்ளமையினாலுமே அவருடைய பெயர் இப்புத்தகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

சாமுவேல் இப்புத்தகங்களை எழுதவில்லை என்பதை புத்தக விடயங்களே அறியத்தருகின்றன.சாமுவேலின் மரணத்துக்குப் பின்பு நடைபெற்ற பல சம்பவங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. டேலும் இப்புத்தகத்தில், இஸ்ரவேல் மனுஷரும், யூதா புத்திரரும் என இஸ்ரவேல் மக்கள் பிரித்துக் கூறப்பட்டிருப்பதிலிருந்து (1சாமு 11 : 8, 17 :52, 18 :16; 2 சாமு 5:5, 11 : 11, 12:8, 19:42,43) இப்புத்தகங்கள்,கி.மு. 930 இல் இஸ்ரவேல், யூதா என ராட்சியம் இரண்டாக பிரிவடைந்ததற்குப் பின்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திடலாம். இதற்கு முன்பே சாமுவேல் மரித்து விட்டமையினால் அவர் இப்புத்தகங்களை எழுதியிருக்க முடியாது. மேலும், கி. மு. 722 இல் இஸ்ரவேலர் அசீரியாவிற்குச் சிறைப்பட்டுப் போனதைப் பற்றிய எவ்வித குறிப்புகளும் இப்புத்தகங்களில் இல்லா திருப்பதினால், இவை அதற்கும் முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே, கி. மு. 930 இற்கும் 722 இற்கும் இடைப்பட்ட காலத்திலேயே இப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

 

சாமுவேலின் புத்தகங்கள், பல வரலாற்று நூல்களின் தொகுப்பு நூலாகவே உள்ளது. இப்புத்தகங்களில் சாமுவேலின் பிறப்பிலிருந்து தாவீதின் மரணம் வரையிலான இஸ்ரவேல் மக்களது சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. தாவீதின் சரிதை, ஆரம்பத்தில் ஞானதிருஷ்டிக் காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதப்பட்டிருந்தது (1 நாளா 29:29-30). சாமுவேலும், ராஜாங்க முறைகளைப் பற்றி எழுதியுள்ளார் (1 சாமு 10:25). இதைப் போன்ற சில சரித்திர நூல்களை ஆதாரமாய்க் கொண்டு, இஸ்ரவேல் ராட்சியம் இரண்டாக பிரிவடைந்ததற்குப் பின், அதாவது கி. மு. 930 இற்குப் பின், யூதேயாவில் வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி இப்புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும்.

 

தாவீதினுடைய மரணத்துக்குப் பின்பு இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோனுடைய ஆட்சிக்காலத்திலிருந்து, யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனது வரையிலான சரித்திரத்தை இராஜாக்களின் புத்தகங்கள் கொண்டுள்ளன. கி. மு. 970 இல் இஸ்ரவேலின் அரச னாகிய சாலோமோனின் ஆட்சி, கி. மு 930 வரை தொடர்ந்ததோடு, இஸ்ரவேல் ராட்சியமும் இரண்டாக பிரிவடைந்தது, இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் வடபகுதியிலிருந்த 10 கோத்திரங்கள் ஜெரோ பெயாமினுடைய தலைமையில் இஸ்ரவேல் என்றும், தென் பகுதியில் இருந்த மிகுதி 2 கோத்திரங்களும் சாலொமோனுடைய மகனான ரெகொபெயாமின் தலைமையின் கீழ் யூதேயா என்றும் இருநாடுகளாக பிரிவடைந்தன. இவற்றுள், வடராட்சியமான இஸ்ரவேல் கி. மு. 72 இல் அசீரியாவுக்குச் சிறைப்பட்டுப் போனது. தென்ராட்சியமான யூதேயா கி. மு. 586 இல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனது. இவற்றோடு சம்பந்தப்பட்ட சரித்திரமே இராஜாக்கள் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன.

 

இராஜாக்களின் புத்தகங்களும், சாமுவேலின் புத்தகங்களைப் போலவே பல வரலாற்று நூல்களை உபயோகித்தே எழுதப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள், சாலொமோனின் நடபடிப்புத்தகம், சாலொமோனின் ஞானப் புத்தகம் (1இராஜா 11 : 41 ) இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1 ராஜா 14 :19). யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1 இராஜா 14: 29). என்பவற்றை உபயோகித்து எழுதப் பட்டுள்ளன. பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டு போகப்பட்ட யூதேய அரசனான யோயாக்கம், சி. மு. 560 இல் விடுவிக்கப்பட்டதே இப்புத்தகங்களின் இறுதிச் சம்பவமாக இருப்பதனால், அதற்கு முன் இவை எழுதப்பட்டிருக்காது. அதேசமயம், பாபிலோனுக்குச் சிறைப் பட்டுப் போன யூதர்கள், மறுபடியும் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படாதிருப்பதினால்,இப்புத்தகம் இதற்கும் முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும், சிறைப்பட்டுப் போன யோயாக்கீம் பாபிலோனிலேயே விடுவிக்கப்பட்டமை, யூதர்கள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்த காலத்தில் அதாவது,கி.மு. 586 இற்கும் 538 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கிருந்த ஒரு யூத தீர்க்கதரிசியே இப்புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. இதனால் பாபிலோனில் இருந்த எசேக்கியேல் தீர்க்கதரிசியே இதை எழுதியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

 

இராஜாக்களுக்கு அடுத்துள்ள நாளாகமப் புத்தகங்கள் யூதர் களுடைய பாரம்பரியத்தின்படி வேதபாரகனான எஸ்றாவினால் எழுதப்பட்டவையாகும். எஸ்றாவின் புத்தகத்துக்கும் நாளாகமப் புத்த கங்களுக்குமிடையே மொழி நடையில் காணப்படும் ஒற்றுமை இதை உறுதிப்படுத்துகின்றது. மேலும், நாளாகமப் புத்தகங்களின் இறுதிப் பகுதி (2நாளா 36 : 22 – 23), எஸ்றா புத்தகத்தின் ஆரம்ப வசனமாக இருப்பதையும் நம்மால் அவதானிக்கக்கூடியதாயுள்ளது (எஸ் 1 : 1 – 3). இதிலிருந்து இவை இரண்டும் ஆரம்பத்தில் ஒரு தொடர்ச்சியான சரித்திரப் புத்தகமாக இருந்துள்ளதை அறிகின்றோம். எஸ்றா, சி.மு.458 இல் பாபிலோனிலிருந்து யூதேயாவிற்குத் திரும்பி வந்த பின்பே இப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும். எனவே, இது கி. மு. 458 இற்கும் 430 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பப் படுகின்றது. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களுக்குத் தமது, முற்கால சரித்திரத்தை அறியத்தருவதற்காக எஸ்றா. தாவீதின் ஆட்சியிலிருந்து, யூதர்கள் கி.மு. 586 இல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போனது வரையிலான யூதராட்சியத்தின் சரித்திரத்தை இப்புத்தகங்களில் எழுதியுள்ளார்.

 

எஸ்றா பல சரித்திர நூல்களை உபயோகித்தே நாளாகமப் புத்தகத்தை எழுதியுள்ளார். நாளாகமப் புத்தகத்தில், தான் உபயோகித்த 15 புத்தகங்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். அவையாவன : இஸ்ர வேல் மற்றும் யூதாவின் இராஜாக்களின் புத்தகம் (1 நாளா 9 :1; 2 நாளா 16 : 11, 20 : 34. 25 : 26, 27 :7, 28 : 26, 32:32, 35 : 27, 36:8), இராஜாக்களின் சரித்திரப் புத்தகம் (2 நாளா 24 : 27), ஞான திருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தம் (1 நாளா29:30) தீர்க்க தரிசியாகிய நாத்தானின் பிரபந்தம் (1 நாளா 29:30) ஞானதிருஷ்டிக் காரனாகிய காத்தின் பிரபந்தம் ( 1 நாளா 29: 30) சீலோனியனாகிய அகியாவின் தீர்க்கதரிசனப் புத்தகம் (2 நாளா 9 : 29), ஞானதிருஷ்டிக் காரனாகிய இத்தோ எழுதின தரிசனம் (2 நாளா 9 : 29), செமாயாவின் புத்தகம் (2 நாளா 12:15), ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணை (2 நாளா 12 : 15), தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரம் (2 நாளா 13:22) ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்கள் (2 நாளா 20:34), ஏசாயா தீர்க்கதரிசியின் நூல் (2 நாளா 26:22) ஓசாயின் பிரபந்தம் (2 நாளா 33:19), தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கு (1 நாளா 27 : 24) இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீதும், அவன் குமாரனாகிய சாலொமோனும் எழுதிய கட்டளைகள் (2 நாளா 35 : 4) என்பவைகளாகும். இவைகளைத் தவிர, எஸ்றா வேறு சரித்திர குறிப்புகளையும், வம்சவரலாற்று அட்டவணைகளையும் உபயோகித்து நாளாகமப் புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

 

நாளாகமப் புத்தகங்களுக்கு அடுத்துள்ள எஸ்றாவின் புத்தகம், பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதர்கள் .தம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்ததன் பின்பான சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சிறைப் பட்டுப்போன யூதர்களில் ஒரு பகுதியினர், கி. மு. 538 இல் செரு பாபேல் என்பவருடைய தலைமையின் கீழ் யூதேயாவுக்குத் திரும்பி வந்து, உடைந்துபோயிருந்த தமது ஆலயத்தைக் கட்டினர். கி. மு. 515 வரையிலான இச்சரித்திரம், எஸ்றா புத்தகத்தின் முதல் ஆறு அதி காரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி. மு. 458 இல் இன்னுமொரு பகுதி யூதர்கள், எஸ்றாவின் தலைமையில் தம் சொந்த நாட்டுக்கு வந்தனர். இவர்களது, கி.மு. 450 வரையிலான சரித்திரத்தை எஸ்றா 7 முதல் 10 வரையிலான அதிகாரங்களில் நாம் வாசிக்கலாம். நாளாகமப் புத்தகத்தை எழுதிய வேதபாரகனான எஸ்றாவே இப் புத்தகத்தையும் எழுதியுள்ளார். எனவே எஸ்றா கி. மு. 458 இல் யூதேயாவுக்கு வந்த பின்பே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடுத்துள்ள புத்தகமான நெகேமியாவில், கி.மு.445இல் நெகேமியாவின் தலைமையில் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்த மூன்றாவது பகுதியினரோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன. எருசலேம் வந்த நெகேமியா, எருசலேம் நகரத்தின் மதில்களைக் கட்டியதோடு, மக்களது சமூக பொருளாதார வாழ் வைச் சீர்திருத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இச்சரித்திரத்தைக் கொண்ட நெகேமியாவின் புத்தகம் நெகேமியாவினாலேயே எழுதப் பட்டதாக நம்பப்படுகின்றது. நெகேமியா எருசலேமில் இருக்கும் காலத்தில் குறிப்பாக கி.மு.445 இற்கும் 430 இற்கும் இடைப்பட்ட காலத்திலேயே இப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும்.

 

சரித்திரப்புத்தகங்களின் இறுதியிலுள்ள எஸ்தர் புத்தகம், பாபி லோன் ராட்சியத்தைக் கைப்பற்றிய பேர்சிய ராட்சியத்தில் இருந்த ஒரு யூதப் பெண்ணான எஸ்தரைப்பற்றிய சரிதையாகும். பேர்சிய

 

ராணியாக இருந்த எஸ்தர், யூதர்களுக்கு ஏற்படவிருந்த பெரும் அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றியுள்ளாள். அகாஸ்வேரு எனும் பேர்சிய அரசனுடைய ஆட்சியின் மூன்றாவது வருடம் முதல் (எஸ்தர் 1:3), அதாவது கி. மு. 483 முதல், அவனுடைய ஆட்சியின் 12 ஆவது வருடத்தின் இறுதி வரையிலான (எஸ்தர் 3:7) 10 வருட காலத்தைய சரித்திரத்தை இப்புத்தகம் கொண்டுள்ளது. எஸ்றாவின் புத்தகம் 6 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களுக்கும் (அவை கி.மு.515 இல் நடைபெற்றவை) 7 ஆம் அதிகாரச் சம்பவங் களுக்கும் (அவை கி.மு. 458 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை) இடைப்பட்ட காலத்திலேயே, எஸ்தர் புத்தகத்தின் பத்துவருடகால சம்பவங்களும் (483-473) நடைபெற்றுள்ளன. இப்புத்தகம், பேர்சியாவில் எஸ்தரோடு இருந்த அவளுடைய உறவினனான மொர்தெகாயினால் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது.

 

(3) கவிதை நூல்கள்

 

யோபு முதல் உன்னதப்பாட்டு வரையிலான ஐந்து புத்தகங்களும் கவிதை நூல்களாகும். இவை. மூலமொழியில் கவிதை நடையில் எழுதப்பட்டமையினாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஊத்ஸ் எனும் தேசத்தில் வாழ்ந்த யோபு எனும் பெயருடைய, தெய்வ பக்திமிகுந்த ஒருவரைப் பற்றி யோபின் சரிதை அறியத்தரு கின்றது. யோர்தானுக்கு கிழக்கே, ஏதோமின் வடபகுதியிலேயே யோபு வாழ்ந்த ஊத்ஸ் எனும் தேசம் இருந்தது. யோபின் புத்தக விடயங்கள், அவர் முற்பிதாக்களின் காலத்தில் அநேகமாக, கி. மு 2100 இற்கும் 1900 இற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்பதை அறியத் தருகிறது. புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சபேயர், (1: 15 ) கல்தேயர் (1:17 ) என்போர். ஆபிரகாமினுடைய நாட்களிலேயே நாடோடிகளாக இருந்தனர். யோபின் புத்தகம் இவர்களை நாடோடிகளாக சித்தரிப்ப தனால், யோபு அக்காலத்தைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும். மேலும், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடந்தபின், 140 வருடங்கள் யோபு வாழ்ந்துள்ளார் (42:16) அவருடைய மொத்த ஆயுட் காலம் 210 வருடங்களாகும். இத்தகைய நீண்ட ஆயுட் காலம் யோபுவை முற்பிதாக்களுடைய காலத்தைச் சேர்ந்தவராகவே காட்டு கின்றது. மேலும், யோபு 42:11 இல் பணத்துக்கு உபயோகிக்கப் பட்டுள்ள எபிரேய பதம், வேதத்தில் முற்பிதாக்களின் கால சரித்திரத்தில் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளமையும் யோபு அக்கால மனிதர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

 

யோபின் புத்தகத்தில் எந்த ஒரு இடத்திலும் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட ஆசாரிய முறைமை, பலிகள், சட்டங்கள், பண்டிகைகள் மற்றும்மார்க்க சடங்காச்சாரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமையும், இது மோசேக்கும் முற்பட்ட காலத்தைய சரித்திரம் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. மேலும் 42:15 இல் யோபின் பெண் பிள்ளைளைகளும் தம் சகோதரரோடே அவருடைய செர்த்தைச் சுதந்தரித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, மோசேயின் காலத்துக்குப் பின்பு சாத்தியப்பட முடியாத செயல் முறையாகும். ஆண் பிள்ளைகள் உயிரோடிருக்கும் போது, பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனுடைய சொத்தை சுதந்தரிக்கக்கூடிய உரிமை,மோசேயின் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இருந்தது. யோபு, யாக்கோபினுடைய காலத்தைச் சேர்ந்தவர் என்பது அநேக வேத ஆராய்ச்சியாளர்களின் முடிவாயுள்ளது. யோபினுடைய புத்தக த்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெயர்கள், அக்காலத்தைய பெயர்க ளாகவே உள்ளன. மேலும் முற்பிதாக்களின் காலத்திலேயே யோபின் புத்தகத்தின் தன்மையுடைய இலக்கியங்கள் எகிப்து, மொசப்பத்தேமியா போன்ற பிரதேசங்களில் உருவாகியுள்ளன.

 

முற்பிதாக்களின் காலத்தைச் சேர்ந்த யோபின் சரித்திரம் யாரால் எழுதப்பட்டது என்பதை நிச்சயமாக கூறமுடியாதுள்ளது. இப்புத்தகம் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளமையினால், சாலொ மோன் அல்லது எஸ்றா, அல்லது எசேக்கியா எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும், இதன்படி சம்பவம் நடைபெற்றதற்கும் எழுதப்பட்டதற்கும் இடையே நீண்ட கால இடைவெளி இருப்பதனால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அத்தோடு, முற்பிதாக் களின் காலத்திலும் யோபின் புத்தகத்தைப் போன்ற கவிதை இலக்கி யங்கள் இருந்துள்ளமையும் இக்கருத்தை ஆதாரமற்றதாக்குகின்றது. யூதமத பாரம்பரியக் குறிப்பு ஒன்று, மோசே இப்புத்தகத்தை எழுதி னார் எனக் கூறுகிறது. மோசே நாற்பது வருடம் வாழ்ந்த மீதியான் தேசம் யோபு வாழ்ந்த ஊத்ஸ் தேசத்துக்கு அருகிலிருப்பதனால், யோபு அல்லது எலிகூ, ஏற்கனவே எழுதிய குறிப்புகள் மோசேக்கு கிடைத்திருக்கும் என்றும், அவற்றை அடிப்படையாய்க் கொண்டு மோசே இப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என்றும் நம்பப் படுகின்றது. இது, கடுமையான துன்பங்களுக்குட்பட்டு அதனது காரணத்தைக் கண்டறிய முடியாது தவித்த ஒரு தெய்வபக்தியுள்ள மனிதனது சரிதையாகும்.

 

யோபுக்கு அடுத்துள்ள சங்கீதப்புத்தகம் இஸ்ரவேல் மக்களது பாடல் புத்தகமாகும். இதில், 1000 வருட கால இடைவெளியில், பல் வேறுபட்ட மனிதர்கள், பல்வகையான சூழ்நிலைகளில் எழுதிய பல்வேறுவகையான 150 பாடல்கள் உள்ளன. இவற்றில் 73 சங்கீதங்கள் இஸ்ரவேலை ஆண்ட தாவீதினால் எழுதப்பட்டவை. எனக் குறிப்பிடப் பட்டுள்ளது (3 – 9, 11 – 32, 34 – 42, 51 – 65, 68 – 70, 86, 101, 103, 108 – 110, 122, 124, 131, 133, 13.8-145). எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத சங்கீதங்களில் 2 ஆம் 95 ஆம் சங்கீதங்கள் தாவீ தினால் இயற்றப்பட்டவை என, அப்போஸ்தலர் 4: 26 உம் எபிரேயர் 4:7 உம் அறியத்தருகின்றன. தாவீதினுடைய சங்கீதக்காரரில் பிரதானமானவனாயிருந்த ஆசாப், (1 நாளா 6 : 39,15:17, 16:56, 2நாளா 5:12) 12 சங்கீதங்களை இயற்றியுள்ளான் (50,73-83). இவனே ஆலயப் பாடகர்களின் முற்பிதாவாகக் கருதப் படுகின்றான். 10 சங்கீதங்கள், பாடல்களை இயற்றிப் பாடக்கூடிய கோராகின் குடும்பத்தினரால் எழுதப்பட்டவையாகும். (42, 44-49, 84- 85,87) இவற்றோடு சங்கீதம் 43 ஐயும் கோராகின் புத்திரருடைய சங்கீதமாகவே கருத வேண்டும். ஏனென்றால், எபிரேய வேதாகமத்தில் 42 ஆம்43 ஆம் சங்கீதங்கள் ஒரே சங்கீத மாகவே உள்ளன. ஆயிரத்து ஒரு பாடல்களை இயற்றிய சாலொமோன் எழுதிய இரு சங்கீதங் களும் இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன (72, 127). அதேபோல், மோசே எழுதிய ஒரு சங்கீதமும் இப்புத்தகத்தில் உள்ளது (90). மேலும், தாவீதின் காலத்தில் இருந்த ஆலயப் பாடகர்களில் ஒரு வனான (1நாளா 15: 17, 19) எஸ்ராகியனாகிய ஏமான் எழுதிய ஒரு சங்கீதமும் (88) அக்காலத்தைய இன்னுமொரு ஆலயப்பாடகனாகிய ஏத்தான் எழுதிய (1நாளா 15 : 17,19) ஒரு சங்கீதமும் இப்புத்தகத்தில் உள்ளது (89)

 

சங்கீதப்புத்தகத்தில் 50 சங்கீதங்களில் எழுதியவர்களின் பெயர் கள் குறிப்பிடப்படவில்லை. 43 ஆம் சங்கீதமும், கோராகின் புத்திரரினால் எழுதப்பட்டிருப்பின் 49 சங்கீதங்கள் யாரால் எழுதப்பட்டவை என்பதை நாமறியோம் (1, 2, 10, 33, 43, 66-67, 71, 91–100, 102, 104-107, 111-121, 123, 125-126, 128-130, 132, 134-137, 146-150). இவற்றுள் சில வேதபாரகனாகிய எஸ்றாவினால் எழுதப்பட்டதாக பாரம்பரியமாக நம்பப்பட்டு வந்துள்ளது. சங்கீதங்கள் வித்தியாசமான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. உதாரணமாக, மோசேயின் சங்கீதம் கி. மு. 1410 அளவில் எழுதப்பட்டது. அதேசமயம் யூதர்களுடைய பாபிலோனிய சிறையிருப்புக்கு முன்பும், அதன் பின்பும் எழுதப்பட்ட பாடல்களும் இப்புத்தகத்தில் உள்ளன. காலத்துக்கு காலம் சங்கீதங்கள் பல, ஒன்றாக தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில், இவை 5 புத்தகங் களாக்கப்பட்டன. பின்னர் 5 புத்தகங்களும் ஒன்றாக்கப்பட்டு ஒரு புத்தகமாகியது. இத்தகைய 5 பிரிவுகளை இப்போதும் சங்கீதப்புத்த கத்தில் நாம் அவதானிக்கலாம். 41 ஆம், 72ஆம்,89 ஆம், 106 ஆம் சங்கீதங்களின் கடைசிவரிகள் இதை அறியத்தருகின்றன. 1947 இல், சாக்கடலுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட வேதப்பிர திகளிலும் சங்கீதப் புத்தகம் இவ்வாறு 5 பகுதிகளாகவே பிரிக்கப்பட்டுள்ளன. தாவீது (1 நாளா 15:16)எசேக்கியா (2 நாளா 29:30, நீதி 25 : 1) எஸ்றா (நெகே 8) என்போர்,சங்கீதங்களை ஒன்றாக தொகுக்கும் பணியில் ஈடுட்டிருந்தவர்களாவர். எஸ்றாவின் காலத்திலேயே சங்கீதப் புத்தகம் இன்றிருக்கும் நிலையைப் பெற்றதாக நம்பப்படுகின்றது.

 

சங்கீதப்புத்தகத்தைப் போலவே, அதற்கடுத்துள்ள நீதிமொழிகள் புத்தகமும் பலரது ஞானப்போதனைகளின் தொகுப்பு நூலாக உள்ளது. இதில் பெரும்பாலானவை தாவீதின் குமாரனும் இஸ்ர வேலின் அரசனுமான சாலோமோனினால் சொல்லப்பட்டவை களாகும். இப்புத்தகம் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி 9 ஆம் அதிகாரம் வரையிலானது. இவை சாலொமோனின் நீதி மொழிகள் என 1:1 அறியத்தருகின்றது. இரண்டாம் பகுதி 10: 1 – 22:16 வரையிலானதாகும். இதுவும் சாலொமோனின் நீதிமொழிகள் எனும் தலைப்புடன் ஆரம்பமாகின்றது. சாலோமோன் கி. மு. 970 முதல் 930 வரை இஸ்ரவேலை அரசாண்டமையினால் இக்கால கட்டத்திலேயே இவ்விரு பகுதிகளும் எழுத்துரு பெற்றிருக்க வேண்டும். மூன்றாவது பகுதி 22:17 முதல் 24:34 வரையுள்ளது. இவை ஞானி களுடைய வார்த்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன (நீதி. 22 : 17). இவர்கள் சாலொமோனின் ஆட்சிக்காலத்தில், அல்லது அதற்கு முற்பட்ட காலத்தில் இஸ்ரவேலில் இருந்த ஞானவான்களாவர்.

 

நீதிமொழிகள் புத்தகத்தின் நான்காவது பகுதி 25 முதல் 29 வரையிலான அதிகாரங்களை உள்ளடக்கியுள்ளது. இவை சாலொமோன் சொன்ன 3000 நீதிமொழிகளில் இருந்து (1இராஜா 4 :32) எசேக்கி யாவின் மனுஷர் பேர்த்தெழுதியவைகளாகும் (நீதி 25:1). எசேக்கியா கி.மு. 729 முதல் 686 வரை யூதாவை அரசாண்டான். சாலொமோன் ஏற்கனவே எழுதிய வேறு புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட இவை, எசேக்கியாவின் ஆட்சிக்காலத்தில் அவனுடைய மனிதர்களினால் தொகுத்து எழுதப்பட்டன. நீதிமொழிகள் 30 ஆம் அதிகாரம், புத்த கத்தின் 5 ஆவது பகுதியாகும். இது, ஆகூர் என்பவரினால் எழுதப் பட்டது. இவரும் சாலொமோனுடைய காலத்தைச் சேர்ந்த ஒரு ஞானவானாக இருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. நீதி மொழிகள் புத்தகத்தின் ஆறாவது பகுதி 31:1-9 ஆகும். இது லேமு வேல் என்பவரால் எழுதப்பட்டவையாகும். இவை அவருடைய தாய் அவருக்குப் போதித்தவைகளாகும். லேமுவேல் ஒரு அரசன் என்பதைத் தவிர அவரைப்பற்றி வேறு எதையும் நம்மால் அறிய முடியா துள்ளது. நீதிமொழிகளின் கடைசிப்பகுதி குணசாலியான – பெண் ணைப்பற்றியது (31 : 10 – 31). இதுவும் யாரால் எழுதப்பட்டது என்பதை நாமறியோம். பலரால் சொல்லப்பட்ட ஞானப்போதனைகள், எசேக்கி யாவினுடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டு இன்றிருக்கும் நீதிமொழிகள் புத்தகம் உருவானது. எசேக்கியாவின் மனிதர்களே (25:1) முழுப் புத்தகத்தையும் தொகுத்து எழுதியதாக நம்பப்படு கின்றது. எனவே, சி. மு. 700 அளவில், இப்புத்தகம் இன்றிருக்கும் நிலையைப் பெற்றிருக்க வேண்டும். இப்புத்தகத்தில் நடைமுறை வாழ்வுக்கு அவசியமான பல நீதிமொழிகள் உள்ளன.

 

நீதிமொழிகள் புத்தகத்துக்கு அடுத்துள்ள பிரசங்கியின் புத்தகம், தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள் என ஆரம்பமாவதிலிருந்து (1 : 1 ) இது சாலொ மோனினால் எழுதப்பட்டதாகவே கருதப்பட்டாலும், சாலொமோன் எனும் பெயர் இப்புத்தகத்தில் இடம் பெறாதமையினால், இது சாலொமோனின் ஆக்கமல்ல என்றும், புத்தகத்துக்கு பிரபல்யத்தை ஏற்படுத்துவதற்காகவே முதலாம் வசனம் சேர்க்கப்பட்டுள்ளது எனும் கருத்தும் அண்மைக் காலத்தில் உருவாகியுள்ளது. எனினும், இப்புத்தகத்தை வாசிக்கும் போது, இதனை எழுதியவர் ஒரு வயோ திபராகவும், அதேசமயம் வாழ்வில் அனைத்தையும் அனுபவித்துப் பார்த்துவிட்டு, அது அர்த்தமற்றது என்பதனைக்கண்டு கொண்ட வராகவும் இருப்பதை அறிந்திடலாம். இது சாலொமோனைப் பொறுத்தவரை உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், புத்த கத்திலுள்ள அநேக விடயங்கள் குறிப்பாக, ஆசிரியர் தன்னைப்பற்றி கூறும் விடயங்கள் (1:12-2:26) சாலொமோனுக்கேபொருத்தமான வைகளாக உள்ளன. அனைத்தையும் அனுபவித்து பார்த்துவிட்டு அவை மாயை என்பதைக் கண்டு கொண்ட சாலொமோன், மனித னுடைய இவ்வுலக வாழ்வில் தேவன் இருந்தால் மட்டுமே அது அர்த்தமுடையதாக இருக்கும் என்பதை இப்புத்தகத்தின் மூலம் அறியத்தந்துள்ளார்.

 

பிரசங்கியின் புத்தகத்தைப் போலவே அதற்கடுத்துள்ள உன்னதப் ‘பாட்டும் சாலொமோனினாலேயே எழுதப்பட்டுள்ளது. இப்பாடலின் முதல் வசனம், சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு என்றே உள்ளது. சாலொமோன், மொத்தம் ஆயிரத்து ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார் (1 இராஜா 4:32). இவற்றில் இதுவே உன்னதமான பாடலாகும். சாலோமோன் 700 மனைவிகளையும், 300 மறுமனையாட்டி களையும் வைத்திருந்தமையினால், அன்பின் தூய்மையைப் பற்றிய இப்பாடலை சாலொமோன் எழுதியிருக்க முடியாது என சிலர் கருது கின்றனர். எனினும், இப்பாடலில் வரும் “சூலமித்தி” எனும் பெண், சாலொமோனின் முதல் மனைவி என்றும், இப்பாடலானது அவர் பிறபெண்களை நாடிச் செல்வதற்கு முன் எழுதப்பட்டதாகவும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும், பாடலில் 6:8 ஆம் வசனம் இதற்கு முரணானதாக இருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் இவர்கள், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த தாவீதின் மறுமனையாட்டிகளும், மற்றைய பெண்களுமாவர். 6 : 8 ஐ, அடுத்த வசனத்துடன் சேர்த்துப் பார்க்கும் போது, சாலொமோன் தன் அரண் மனையின் அந்தப்புரத்தில் இருந்தவர்களிடத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், சூலமித்தியை மட்டுமே உயர்வானவளாகவும் ஒப்பற்றவளாகவும் கருதியதை அறிந்திடலாம் சாலோமோனே இப் பாடலை எழுதினார் என்பதற்கு பாடலில் பல ஆதாரக்குறிப்புகள் உள்ளன. புத்தகத்தில் ஏழு இடங்களில் சாலொமோனுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது (1:1, 5, 8 :11, 12, 3 : 7, 9,11) அத்தோடு சாலொ மோன், ராஜா என்றும் அழைக்கப்பட்டுள்ளார் (1 : 4, 12, 3 : 9, 11, 7: 5). இந்த சாலொமோன் ராஜாவே பாடலின் நாயகன் என்பதை 3:7-10 மற்றும் 6:12 வசனங்கள் அறியத்தருகின்றன. யூதமத பாரம்பரியங்களின் மூலம், சாலொமோன் தன்னுடைய இளவயதில் இப்பாடலை எழுதியுள்ளதை அறிகின்றோம். இது, சாலொமோனி| னதும் அவரது முதல் மனைவியான சூலமித்தியினதும் வாழ்வோடு சம்பந்தப்பட்ட பாடலாகும்.

 

(4) தீர்க்கதரிசன நூல்கள்

 

ஏசாயா முதல் மல்கியா வரையிலான 17 புத்தகங்களில், புலம்பல் புத்தகம் தவிர மற்றைய 16 புத்தகங்களும் தீர்க்கதரிசன நூல்களாகும். இவை கி.மு.9 ஆம் நூற்றாண்டிலிருந்து கி. மு. 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் இஸ்ரவேலிலும் யூதாவிலும் தீர்க்கதரிசன ஊழியம் செய்தவர்கள் எழுதிய புத்தகங்களாகும். இப்புத்தகங்கள் பெரும்பாலும் தீர்க்கதரிசிகளுடைய செய்திகளையே கொண்டுள்ளன. வேதாகமத்தில் இப்புத்தகங்கள் அவற்றின் நீளத்தை அடிப்படையாய்க் கொண்டு, முதலில் அதிக அதிகாரங்கள் உள்ள புத்தகங்களும், அதனைத் தொடர்ந்து அதிகாரங்கள் குறைவாக உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவை எழுதப் பட்ட காலத்தை அடிப்படையாய்க் கொண்டு, அவற்றை நாம் பின் வருமாறு மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். (ஒபதியா, யோவேல், யோனா, ஓசியா, ஆமோஸ், ஏசாயா, மீகா, நாகூம், செப்பனியா, எரேமியா, ஆபகூக் என்போர் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபட்டுப் போவதற்கு முன்பும் தானியேல், ) எசேக்கியேல் என்போர் சிறை யிருப்பின் காலத்திலும், ஆகாய், சகரியா, மல்கியா என்போர் யூதர் கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த பின்பும், தீர்க்கதரிசன ஊழியம் செய்துள்ளனர். இக்கால ஒழுங்குமுறையின்படிவேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன புத்த கங்களை பார்ப்போம்.

 

சிறையிருப்புக்கு முற்பட்ட தீர்க்கதரிசிகளுள் ஒபதியாவும் யோ வேலும் கி. மு. 9 ஆம் நூற்றாண்டில் தீர்க்கதரிசன ஊழியம் செய்த வர்களாவர். இவர்களுள் ஒபதியா, சாக்கடலுக்குத் தெற்கேயுள்ள  சேயீர் மலையில் குடியிருந்த ஏதோம் எனும் ஜாதியாருக்கு எதிராக கர்த்தருடைய வார்த்தையை அறிவித்துள்ளார். ஏதோமியர் இஸ்ர வேலரது முற்பிதாக்களில் ஒருவரான ஈசாக்கின் மூத்த மகனான ஏசாவின் சந்ததியினராவர் (ஆதி 25:21-26). இவர்கள், ஆரம்பத் திலிருந்தே ஈசாக்கினுடைய இளைய மகனான யாக்கோபினுடைய சந்ததியினரான இஸ்ரவேலருக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளனர். (ஆதி 27, எண் 20 : 14 – 21,1 சாமு 14 :47, 2 சாமு 8:13 – 14, 1 இராஜா 11 : 14 – 22) கி.மு.845 இல் அரபியரும், பெலிஸ்தியரும் எருசலேமை ஆக்கிரமித்த சமயம் (2 நாளா 21:16-17) அருகிலிருந்த ஏதோமியர், எருசலேமிலிருந்த தம் இனத்தவரான யூதர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல், அவர்களது அழிவில் ஆனந்தப்பட்டனர் (ஒப 11 – 14). இவர்கள், யுத்தகாலத்தில் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு யூதர் களுக்கு எதிராக செயற்பட்டமையினால்,அவர்கள் மீது தேவனுடைய தண்டனை வந்தது. இதைப்பற்றி ஒபதியா அறிவித்தவைகளே அவருடைய தீர்க்கதரிசன நூலில் உள்ளன.

 

யோவேல் எக்காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார் என்பது பற்றி அவரது புத்தகத்தில் எவ்விதக் குறிப்பும் இல்லாத போதிலும், அவர் மற்றைய தீர்க்கதரிசிகளைப் போலல்லாது, ஆசாரியர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனமுரைத்துள்ளமை (யோவேல் 1:9, 13, 2: 17) யூதேயாவின் ஆட்சிப்பொறுப்பு ஆசாரியர்களின் கையில் இருந்த, யோவாசின் ஆட்சிக்காலத்திலேயே அவர் தீர்க்கதரிசன ஊழியம் செய்ததாக நம்பப்படுகின்றது. யோவாஸ் ராஜாவாகிய போது ஏழு வயதுடையவனாய் இருந்தமையினால் (கி. மு.835 இல்) அக்காலத்தில், ஆசாரியனாகிய யோய்தாவே நாட்டின் ஆட்சிப்பொறுப்பைக் கவனித்து வந்தான் (2 இராஜா 11 : 1 – 4 ). அக்காலத்தில் வெட்டுக்கிளியினால் நாட்டில் ஏற்பட்ட பாரிய அழிவானது, வரவிருக்கும்தேவ தண்டனைக்கு முன்னடையாளமான செயல் என்பதைக் கண்டு கொண்ட யோவேல், வரவிருக்கும் கொடிய தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் படி மக்களுக்கு அழைப்பு விடுப்பவராக தீர்க்கதரிசனம் உரைத் துள்ளார். மக்கள் தேவ வார்த்தைகளைக் கேட்டு மனந்திரும்பினால், வரவிருக்கும் தேவ தண்டனையிலிருந்து தப்புவிக்கப்படுவார்கள் என்பதை அறிவித்த யோவேல், யூதேயாவின் எதிரிகள் மீதான தேவ தண்டனை பற்றியும் முன்னறிவித்துள்ளார். யோவேலுடைய ஊழிய காலம்கி.மு. 840 முதல் 830 வரை என கணிப்பிடப்பட்டுள்ளது. இக் காலத்திலேயே அவருடைய தீர்க்கதரிசன புத்தகமும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

கி. மு.8 ஆம் நூற்றாண்டில் யோனா, ஓசியா, ஆமோஸ், ஏசாயா, மீகா என்போர் தீர்க்கதரிசிகளாகப் பணியாற்றியுள்ளனர். இவர்களுள் யோனாவின் புத்தகம் அவருடைய வாழ்வோடு சம்பந்தப்பட்ட  சரிதையைக் கொண்டுள்ளது. 2 ஆம் யெரோபெயாமினுடைய ஆட்சிக் காலத்தில் ( . மு. 793-753) இஸ்ரவேலில் தீர்க்கதரிசன ஊழியம் செய்த யோனா (2 இராஜா 14 2325), நினிவே எனும் நகருக்குச் சென்று, அதற்கெதிராக வரவிருக்கும் தேவ தண்டனையை அறி விக்கும்படி அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் தேவனுடைய கட்டளையை மீறி அவர் தர்ஷீஸ் எனும் நகருக்குச் செல்ல முற்பட்டாலும், தேவன் அவருடைய வாழ்வில் தலையிட்டு மறுபடியுமாக அவரை நினிவேக்கு அனுப்புகிறார். இதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களே யோனாவின் புத்தகத்தில் உள்ளன. 2ம் யெரோபெயாமினுடைய ஆட்சிக் காலத்திலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல,2 ஆம் யெரோபெயாமின் ஆட்சிக்காலத்திலிருந்து இஸ்ரவேலர்கள் கி. மு.722 இல் அசீரியாவுக்குச் சிறைப்பட்டுப்போகும் வரை தீர்க்கதரிசனமுரைத்த ஓசியா, தன்னுடைய ஊழிய காலத்திலேயே தனது நூலையும் எழுதியுள்ளார். இவர் இஸ்ரவேல் ராட்சியத்தின் பின்மாற்ற நிலை பற்றித் தன் வாழ்வின் மூலம் அறிவிப்பதோடு (1-3) அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் பற்றியும் (4-7) அவர்கள் மீது வரவிருக்கும் தண்டனை பற்றியும் (8- 10), இறுதியில் இஸ்ரவேலர் மீட்கப்படுவது பற்றியும் (11-14) தீர்க்க தரிசனமுரைத்துள்ளார்.

 

இஸ்ரவேலை 2 ஆம் யெரோபெயாம் ஆண்ட காலத்தில் குறிப்பாக பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆமோஸ் தீர்க்கதரிசனமுரைத்துள்ளார் (ஆமோ 1:1). கி.மு. 760 இலேயே இஸ்ரவேலில் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆமோசின் தீர்க்கதரிசன ஊழியம் ஒருவருட காலம் மட்டுமே நீடித்தது. எனவே. கி.மு. 762 இலேயே ஆமோசின் புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆமோஸ் இஸ்ரவேலுக்கு எதிராக மட்டுமல்ல (2 : 6 – 9 :10) அண்டை நாடுகளான தமஸ்கு (1 : 3-5), காசா (1 : 6 – 8), தீரு (1: 9-10) ஏதோம் (1 : 11 – 12), அம்மோன் (1:13-15), மோவாப் (2 : 1 – 3), யூதா (2:4-5) எனும் நாடுகளின் அக்கிரமங்களுக்கு எதிராகவும், மேசிய ராட்சியத்தைப் பற்றியும் (9 : 11 – 15) தீர்க்கதரிசனமுரைத்துள்ளார்.

 

ஏசாயா சிட்டத்தட்ட 58 வருடங்கள் தீர்க்கதரிசியாக பணி புரிந்துள்ளார். யூதேயாவின் ராஜாவாகிய உசியாவின் ஆட்சியின் (கி.மு.790 – 739) இறுதிப்பகுதியில் தனது தீர்க்கதரிசன ஊழியத்தை ஆரம்பித்த ஏசாயா (6 :1), எசேக்கியாவின் ஆட்சிக் காலம் வரை ( . மு.715- 685) தீர்க்கதரிசனமுரைத்துள்ளார் (11). எசேக்கியாவுக்குப் பின் யூதேயாவை ஆட்சி செய்த மனாசேயினுடைய காலத்திலேயே (சி.மு. 686 – 642), ஏசாயா இரத்தசாட்சியாக மரித்ததாக பாரம்பரிய குறிப்புகள் கூறுகின்றன. ஏசாயா தன்னுடைய ஊழிய காலத்திலேயே தன் தீர்க்கதரிசனப் புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஏசாயா புத்தகத்தில் 1 முதல் 39 வரையிலான அதிகாரங்கள் ஒருவரினாலும், 40 முதல் 60 வரையிலான அதிகாரங்கள் இன்னுமொருவரினாலும் எழுதப் பட்டதாக சிலர் கருதுகின்றனர்.

 

1947 ஆம் ஆண்டு சாக்கடலுக்கருகில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கும்ரான் எனும் சமூகத்தவரது ஏசாயா புத்தகச்சுருளில் 388 முதல் 40:2 வரையிலான பகுதி ஒரே பக்கத்திலேயே உள்ளது. 39 ஆம் அதிகாரம் வரை ஒருவர் எழுதியது என்றால், அது ஒரு பக்கத்தில் முடிவடைய 40 ஆம் அதிகாரம் இன்னுமொரு பக்கத்தில் ஆரம்பமாகியிருக்க வேண்டும். அத்தோடு, பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு, ஏசாயாவின் தீர்க்க தரிசனம் முழுவதும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவினால் எழுதப்பட்டதாகவே கூறுகின்றது. பழைய, புதிய ஏற்பாடுகளுக் கிடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூல்களும் இக்கருத்தையே கொண்டுள்ளன. மேலும், புதிய ஏற்பாட்டாசிரியர்கள் ஏசாயாவின் புத்தகத்திலிருந்து எடுத்த மேற்கோள்களில் 22 இல் ஏசாயாவின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தின் இரு பகுதிகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அனைத்தும் ஒரு ஏசாயாவினுடையதாகவே குறிப்பிடப் பட்டுள்ளன. மேலும், இயேசுகிறிஸ்துவிடம் ஏசாயாவின் புத்தகச் சுருள் கொடுக்கப்பட்டபோது (லூக்4:17-20) அவர் ஏசாயா 61:1-2 பகுதியை வாசித்தது, அப்பகுதியும் முதற்பகுதியை எழுதிய ஏசாயா வினுடையதே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

 

ஏசாயா யூதேயாவுக்கு எதிராக மட்டுமல்ல (1 : 1–12 : 6, 22 :1-25) பாபிலோன் (13 : 1 – 14: 23, 21 : 1 – 10 ), அசீரியா (14 : 24 – 27 ) பெலிஸ்தியா (14:28-32), மோவாப் (15 : 1 – 16 : 14), தமஸ்கு (17 : 1 – 14), குஷ் (18:1-7) எகிப்து (19 : 1-20:6), ஏதோம் (21: 11 – 12, 34 : 1 – 17), அரபியா (21:13-17), தீரு (23:1-18) எனும் நாடுகளுக்கு எதி ராகவும் தேவனுடைய வார்த்தையை அறிவித்துள்ளார். இவற்றைத் தவிர, ஏசாயாவின் புத்தகத்தில் முழு உலகத்திற்கும் (24 : 1 – 26 : 21 ), குறிப்பாக தேவனுடைய ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு (28 :1-32:20), அவர்களுடைய மீட்பு, (27 : 1-13), அவர்களுக்கான ஆசீர்வாதம், (35: 1 – 10 ) ஆசீரியர் களிடமிருந்து யூதர்கள் பாதுகாக்கப்படுதல் (36:1-37:38) அவர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுதல் (39 : 1-8 ) என்பவற்றோடு, அவர்களுக்கான வாக்குத்தத்தங்கள் ( 40 : 1 – 48 : 22,58 : 1 – 66 24 )மேசியாவின் பணிகள் (49:1-57 : 21) என்பன பற்றியும் ஏசாயா அறிவித்துள்ளார். ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களுள் பெரும்பாலானவை கி. மு. 734 இல் சீரிய – இஸ்ரவேலிய எதிர்ப்பு யூதேயாவுக்கு ஏற்பட்டபோதும், கி. மு. 701 இல் அசீரியாவைச் சேர்ந்த சனகெரிப் என்பவன் யூதேயாவைத் தாக்க வந்த போதும் உரைக்கப்பட்டவைகளாகும். ஏசாயா புத்தகத்தின் முதல் 6 அதிகாரங்களும் யூதேய அரசனான உசியாவின் (கி. மு. 790 – 739 ) இறுதிக் காலத்தைச் சேர்ந்தவை. 7 முதல் 12 வரையிலான அதிகாரங்கள், ஆகாஸ் அரசனாயிருந்த போது நடைபெற்றவை (கி. மு. 735-715). 13 முதல் 39 வரையிலான அதிகாரங்கள் எசேக்கியாவினுடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 700 ஆம் ஆண்டுக்கும் முற்பட்டவை.இதில், 14:28 – 32 மட்டும். ஆகாஸ் மரித்தகி. மு.715 ஐச் சேர்ந்தது. மிகுதிப் பகுதிகள், எசேக்கியாவினுடைய ஆட்சிக் காலத்தில் கி. மு. 700 இற்குப் பிறகு நடைபெற்றவையாகும்.

 

யூதேயாவை யோதாம் (கி. மு. 739- 735), ஆகாஸ் (கி.மு. 735- 715 ) எசேக்கியா (கி. மு. 715 – 686 ) என்போர் ஆண்ட காலத்தில் மீகா தீர்க்கதரிசனமுரைத்துள்ளார் (மீகா 1:1). இவர் தன்னுடைய தீர்க்கதரிசன புத்தகத்தை, கி. மு. 735 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியுள்ளார். மூன்று தீர்க்கதரிசன உரை களைக் கொண்டுள்ள மீகாவின் புத்தகத்தின் முதலாவது உரை, யூதா மற்றும் இஸ்ரவேலின் பாவம் காரணமாக அவர்கள் மீது வரும் தேவ தண்டனை பற்றி அறிவிக்கிறது (1-2). இரண்டாவது” உரையில், நாட்டின் தலைவர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள் மீதான தேவ தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளது (3-5) மூன்றாவது உரையில், மனந்திரும்பு வதற்கான எச்சரிப்பும், எதிர்கால விடுதலை என்பன பற்றிய எதிர் பார்ப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது ( 6 -7) மீகா, சமாரியாவின் வீழ்ச்சி (1:6-7), சனகெரிப்யூதாவை ஆக்கிரமித்தல் (1:9-16),எருசலேமின் வீழ்ச்சியும் ஆலயத்தின் அழிவும் (3:12, 7:13), யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்பு, சிறையிருப்பிலிருந்து திரும்பி வருதல், எதிர்கால சமா தானம், இஸ்ரவேலின் மேன்மையான நிலை 4:1-8,13, 7 : 11, 14-17), மேசியாவின் பிறப்பிடம் (5: 2), என்பன பற்றியும் தன் தீர்க்கதரிசன உரைகளில் முன்னுரைத்துள்ளார்.

 

சிறையிருப்புக்கு முற்பட்ட தீர்க்கதரிசிகளுள்நாகூம், செப்பனியா, எரேமியா, ஆபகூக் என்போர் கி. மு. 7ஆம் நூற்றாண்டில் தீர்க்க தரிசன ஊழியம் செய்தவர்களாவர். இவர்களுள், நினிவே நகருக்கு எதிராக தீர்க்கதரிசனமுரைத்த நாகூம், அதன் அழிவையும்,அழிவுக் கான காரணத்தையும் அறிவித்துள்ளார். நாகூமின் தீர்க்கதரிசனத் தில் அம்மோனின் அழிவு அண்மையில் நடைபெற்றதாக சித்தரிக் கப்பட்டுள்ளது (3:8 – 10). இது கி. மு. 663 இல் நடைபெற்றதாகும். எனவே, நாகூமின் தீர்க்கதரிசனப் பணி இதற்குப் பின்பே ஆரம்ப மாகியிருக்க வேண்டும். அதேசமயம்,நினிவேயும் வெகுவிரைவில் அழியப்போவதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது (2:1.3:5,19 ). இது  612 இல் நடைபெற்றதாகும். இவற்றிலிருந்து கி. மு. 663 இற்கும் 612 இற்கும் இடைப்பட்டகாலத்திலேயே நாகூம் தனது தீர்க்கதரிசனத்தை எழுதியிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

 

யூதேயாவில் யோசியா ஆட்சி செய்த காலத்தில் (கி.மு.640- 609 ) செப்பனியா தீர்க்தரிசனம் உரைத்துள்ளார். (செப் 1: 1) எனினும், கி.மு. 622 இல் யோசியாவினால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்க ளுக்கு முன்பே (2 இராஜா22 – 23, 2 நாளா 34-35) இத்தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் செப்பனியா 1: 3 – 6, 8 – 9,12, 3:1-7 இல் சித்தரிக்கப்பட்டிருக்கும் நிலை கி. மு. 622 இல் யோசியாவின் மார்க்க சீர்திருத்தத்திற்கு முற்பட்ட நிலைமையே யாகும். செப்பனியா 1 : 3 – 6 இல் விமர்சிக்கப்பட்டுள்ள வழிபாட்டு முறைகள், கி. மு. 622 இல் யூதாவிலிருந்து அகற்றப்பட்டன. எனவே, இதிலிருந்து யோசியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே செப்பனியாவின் புத்தகம் எழுதப்பட்டுள்ளதை அறிகிறோம். யூதா (1 : 1-2 : 3), பெலிஸ்தியா ( 2 : 4 – 7 ), மோவாப் அம்மோன் ( 2 : 8 – 11 ), எத்தியோப்பியா (2:12). அசீரியா (2:13-15) எனும் நாடுகளுக் கெதிராகவும் செப்பனியா தீர்க்கதரிசனம் உரைத்துள்ளதோடு, வரவிருக்கும் கர்த்தருடைய நாளைப் பற்றியும் முன்னறிவித்துள்ளார்.

 

பாபிலோனியர் மூலம் யூதேயாவுக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றி முன்னறிவிக்கும் ஆபகூக்கின் தீர்க்கதரிசனம் (1 : 6 ), யோயாக்கீமின் ஆட்சிக்காலத்தில் (கி.மு.609 -597) உரைக்கப்பட்டதாகும். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், கி. மு. 612 இல் நினிவே வீழ்ச்சியடைந்து, பாபிலோன் ராட்சியம் எழுச்சியடைந்து கொண்டிருந்த காலத்தையே சித்தரிக்கின்றன. எனினும், கல்தேயராகிய பாபிலோனியர் முதல் தடவையாக கி.மு. 605 இல் யூதேயாவை ஆக்கிரமிப்பதற்கும் முன்பே (2 இராஜா 24 ) இப்புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புத்தக விடயங்கள் அறியத்தருகின்றன. பாபிலோனியரது ஆக்கிரமிப்பைப் பற்றித் தேவனோடு தர்க்கிக்கும் ஆபகூக் (1: 1 – 2 : 5 ), பாபிலோனுக்கு எதிராகவும் தீர்க்கதரிசனமுரைத்துள்ளார் ( 2 : 6 – 20). ஆபகூக் புத்தகத்தின் கடைசி அதிகாரம், தீர்க்கதரிசியினுடைய ஜெபத்தைக் கொண்டுள்ளது.

 

எரேமியா தீர்க்கதரிசி, யூதேயாவை ஆண்ட யோசியாவினுடைய ஆட்சிக் காலத்தின் 13 ஆம் வருடம் (கி. மு. 627) தனது ஊழிய அழைப்பை பெற்றவராவார் (எரே 1: 2, 25 : 3). இவருடைய ஊழியம், கி. மு.586 இல் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகும் வரை தொடர்ந்தது. அதற்குப் பிறகு, எகிப்துக்கு ஓடிப்போன யூதர் மத்தியிலும் எரேமியா தீர்க்கதரிசனமுரைத்துள்ளார் (எரே 43, 44). எரேமிய கிட்டத்தட்ட 50 வருடங்கள் தீர்க்கதரிசியாக பணியாற்றியுள்ளார். இவர்  தனது தீர்க்கதரிசன உரைகளை எழுதிவைத்திருந்தார் என்பதை 29 : 2, 30 : 2, 51:59 எனும் வசனங்கள் மூலமாக அறிகின்றோம். யோயாக்னுடைய ஆட்சியின் நான்காவது வருடத்தில் (கி. மு. 605 ) அவற்றை ஒரு புத்தகமாக எழுதும்படி தேவன் எரேமியாவுக்கு கட்டளையிட்டார் (எரே 36 : 1- 2). இதனால் அவர்பாரூக் என்பவரின் உதவியுடன், ஆரம்ப முதல், தேவன் தன்னோடு சொல்லி வந்த வார்த்தைகளையெல்லாம் எழுதினார் ( எரே 36:4) எனினும் இந்த புத்தகச்சுருள் அரசனால் எரிக்கப்பட்டது (எரே 36:23). எனவே, மறுபடியுமாக அவற்றை எழுதும்படி தேவன் எரேமியாவுக்கு கட்டளையிட்டார் (எரே 36 : 27 – 28). இதனால் எரேமியா சொல்லச் சொல்லபாரூக் மறுபடியுமாக அவற்றை எழுதினார் (எரே 36: 32). இவ்விதமாக கி.மு. 586 அளவில், எரேமியாவின் புத்தகம் தற்போ திருக்கும் நிலையை அடைந்தது.

 

எரேமியா, யூதேயாவுக்கு எதிராக மட்டுமல்ல, எகிப்து (46: 2-28) பெலிஸ்தியா (47 : 1-7), மோவாப் (48:1- 47), அம்மோன் (49:1-6), ஏதோம் (49:7-22), தமஸ்கு (49 : 23-27), கேதார், காத்சோ (49 : 28-33) ஏலாம் (49 : 34-39), பாபிலோன் (50:1-51: 64), எனும் நாடுகளுக் கெதிராகவும் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். இதற்கடுத்துள்ள புலம்பல் புத்தகத்தில், எழுதியவரின் பெயர் இடம் பெறாத போதிலும் கூட, இதுவும் தீர்க்கதரிசியாகிய எரேமியாவினாலேயே எழுதப்பட்டதாக யூதர்களுடைய பாரம்பரியம் கூறுகிறது. பிற்கால யூத மற்றும் கிறிஸ்தவ எழுத்தாக்கங்களும் இதையே அறியத்தருகின்றன. எரேமியாவின் தீர்க்கதரிசனப் புத்தகத்திற்கும் இதற்கும் இடையே சொற்பிரயோகங் களில் இருக்கும் ஒற்றுமையும் இதை உறுதிப்படுத்துகின்றது. கி. மு.586 ) இல்எருசலேம் நகரம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்ட பின், நகரின் அழிவைப் பற்றி எரேமியா பாடிய புலம்பல்களே இப்புத்தகத்தில் உள்ளன. இது எரேமியா எகிப்துக்கு கொண்டு போகப்படுவதற்கும் முன்பே (எரே 43 :1 -7) எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 

தீர்க்கதரிசிகளுள் தானியேலும் எசேக்கியேலும் சிறை யிருப்பின் தீர்க்கதரிசிகளாவர். இவர்களுள் தானியேல், பாபிலோனியர் முதல் தடவை கி. மு. 605 இல் எருசலேமைத் தாக்கிய போது அதா வது,யூதேயாவை யோயாக்கீம் அரசாண்ட மூன்றாவது வருடம் பாபிலோனுக்குச் சிறைப்பட்டு போனார் (தானி 1:1). அவர் கி. மு. 530 அளவில் தனது புத்தகத்தை எழுதியதாக நம்பப்படுகிறது. இப்புத்தகம், தானியலையும் அவருடைய நண்பர்களையும் பற்றி அறியத்தருவதோடு, பாபிலோனிய ராட்சியத்தின் நேபுகாத்நேச்சா ருடைய ஆட்சிக்காலம் முதல், இயேசுகிறிஸ்துவினுடைய இரண்டாவது வருகை வரையிலான காலப்பகுதியில், யூதமக்களோடு சம்பந்தப்  பட்ட விடயங்கள், 5 தரிசனங்கள் மூலமாக முன்னறிவிக்கப்பட் டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை யூதர்களுடைய பிற்கால சரித்திரத்தில் நிறைவேறியுள்ளன.

 

பாபிலோனியர்கள் கி. மு. 597 இல் இரண்டாவது தடவையாக யூதேயாவை ஆக்கிரமித்த போது பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனவர்களில் எசேக்கியேலும் ஒருவர். இவர் பாபிலோனில் இருக்கும் போது, கி. மு. 593 இல் (யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் 5 ஆவது வருடத்தில்) தீர்க்கதரிசன ஊழியத்துக்கான அழைப்பைப் பெற்றார். யூதேயாவில் இருந்த எரேமியா, கி. மு. 586 இல் நடை பெறவிருக்கும் பாபிலோனியரது மூன்றாவது ஆக்கிரமிப்பைப் பற்றி தீர்க்கதரிசனமுரைக்கையில், எசேக்கியேல், பாபிலோனிலிருந்த யூதர்கள் மத்தியில் அது பற்றி அறிவித்துள்ளார். இவருடைய தீர்க்கதரிசன ஊழியம்,கி. மு. 572 வரை (22 வருடம்) தொடர்ந்தது. இக்கால கட்டத்திலேயே இவருடைய தீர்க்கதரிசனங்கள் எழுத்துரு பெற்றன. எசேக்கியேல், யூதேயாவுக்கு ஏற்படவிருக்கும் அழிவைப் பற்றி அறிவித்ததோடு (1-24), அம்மோன் (25 : 1-7), மோவாப் (25 : 8–11), ஏதோம் (25 :12-14), பெலிஸ்தியா (25:15-17), தீரு (26 : 1-28 : 19), சீதோன் (28: 20-24), எகிப்து (29:1-32:32) எனும் நாடுகளுக்கு எதிராகவும் தேவனுடைய வார்த்தையை அறிவித்துள்ளார். அத்தோடு, யூதர்களுடைய எதிர்கால மீட்பு பற்றியும் எசேக்கியேல் முன்னறி வித்துள்ளார் (33-48).

 

கி. மு. 586 இல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதர் களுள் ஒரு பகுதியினர். கி. மு. 538 இல்செருபாபேல் என்பவருடைய தலைமையில் எருசலேமுக்கு வந்து தமது ஆலயத்தைக் கட்டத் தொடங்கினர். எனினும், சமாரியர்களுடைய எதிர்ப்பு காரணமாக யூதர்களுடைய ஆலயக்கட்டடப்பணிகள் 16 வருடங்களாக நிறுத்தப் பட்டிருந்தது. அக்காலத்தில், (கி. மு. 520 இல்) ஆகாய் என்பவர், ஆலயத்தைக் கட்டும்படி யூதர்களைத் தூண்டும் வண்ணம் தேவ னுடைய வார்த்தையை அவர்களுக்கு அறிவித்தார். ஆகாயின் புத்தக த்தில் 4 தீர்க்கதரிசன உரைகள் உள்ளன. முதல் உரையில் ஆலயத்தை மறுபடியும் கட்டும்படியான எச்சரிப்பும் (1 :1-15). இரண்டாவது உரையில் எதிர்கால ஆலயத்தின் மகிமை நிலையும் (2 : 1-9), மூன்றாவது உரையில், தேவனுக்கு கீழ்ப்படிதலே ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் என்றும் (2 : 10–19), நான்காவது உரையில்,தாவீதின் ராட்சியம் மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டு உலக ராட்சியங்கள் அகற்றப்படும் என்றும் (2:20-23) ஆகாய் அறிவித்துள்ளார்.

 

ஆலயத்தைக் கட்டும்படி ஆகாய் மக்களை தைரியப்படுத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, சகரியாவுக்குத் தேவதரிசனங்களும், செய்திகளும் கொடுக்கப்பட்டன. ஆகாயின் தீர்க்கதரிசனம், மக்களை ஆலயம் கட்டும் பணியில் ஈடுபட உற்சாகப்படுத்திய வேளையில், சகரியா, மக்களில் உள்ளான ஆவிக்குரிய மாற்றத்தை ஏற்படுத்து வதற்காக தேவவார்த்தையை அவர்களுக்கு அறிவித்ததோடு, எதிர் காலத்தைப் பற்றிய பல விடயங்களையும் முன்னறிவித்துள்ளார். மக்களை மனந்திரும்பும்படியாக அழைக்கும் சகரியா (1 : 1-6) இஸ்ரவேலின் எதிர்கால விடுதலை, உலக ராட்சியங்களின் வீழ்ச்சி, தேவராட்சியம் ஸ்தாபிக்கப்படுதல் என்பன பற்றிய 8 தரிசனங்களைக் கண்டதோடு (1 : 7-6 : 15), தன் காலத்தில் மக்கள் மத்தியில் பிரச்சனைக் குரியதாய் இருந்த சடங்காச்சார ரீதியான உபவாசம் பற்றியும், (7-8), எதிர்காலத்தைப் பற்றி தான் கண்ட தரிசனங்களின் செய்திகளையும் (9-14) அறிவித்துள்ளார்.

 

யூதர்கள் கி. மு. 515 இல் தமது ஆலயத்தைக் கட்டி முடித்த போதிலும், அவர்கள் மறுபடியுமாக கொஞ்சம் கொஞ்சமாக தேவனை விட்டு வழிவிலகிச் சென்றனர். அவர்கள் தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கு எதிராக பல காரியங்களைச் செய்து வந்தனர். கி.மு.445 இல் நெகேமியா எருசலேமுக்கு வந்து மக்களது பொருளா தார சமூக வாழ்வை சீர்திருத்திய காலத்தில், குறிப்பாக கி. மு.433. இற்குப் பிறகு, இஸ்ரவேல் மக்கள் தம் மீது தேவன் வைத்திருக்கும் அன்பை கருத்திற் கொள்ளாது, அவருக்கு விரோதமாகச் செய்த பாவங்களைச் சுட்டிக்காட்டி அவர்களை மனந்திரும்பும்படி அழைக்கும் மல்கியா (1-2, 3 : 7-15), வரவிருக்கும் சுர்ததருடைய நாளைப்பற்றியும், அந்நாளில் இஸ்ரவேல் மக்கள் சுத்திகரிக்கப்படுவது பற்றியும் அறிவித்துள்ளார் (3:1-6,16-18,4:1-6). இவரே பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாவார். இவர் எழுதிய புத்தகமே பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமாக உள்ளது. இவருடைய தீர்க்கதரிசன புத்தகம் கி. மு. 400 அளவில் எழுத்துரு பெற்றது.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory