பழைய ஏற்பாட்டின் ஆரம்பப்பிரதிகள்
யூதர்களுடைய வேதநூலான பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில் தட்டச்சுப்பொறிகளோ, அச்சியந்திரங்களோ இருக்க வில்லை. அத்தோடு, காகிதம்கூட அக்கால சமுதாயத்தினர் அறியாத ஒரு பொருளாகவே இருந்தது. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலத் தில் மிருகங்களின் தோல்களே எழுத்தேடுகளாக உபயோகிக்கப் பட்டன. இவை, சுருள்களாகச் சுற்றப்பட்டு ” புத்தகச்சுருள்” என அழைக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் இத்தகைய புத்தகச் சுருள்களிலேயே தேவனுடைய வார்த்தையை எழுதினர். இதனால், பழைய ஏற்பாடு தனி ஒரு புத்தகச்சுருளாக இராமல், பல புத்தகச்சுருள்களின் சேர்க்கையாகவே இருந்தது. அக்காலத்தில், “பபைரஸ்” என அழைக்கப்படும் நாணற் புல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட ஏடுகளும் உபயோகத்தில் இருந்த போதிலும், யூதர்கள் தோலேடு களிலேயே தம் வேதத்தை எழுதினர்.
யூதர்களுடைய வேதநூலானது, நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், எழுத்தாக்கங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் பகுதியான நியாயப்பிரமாணம், அவர்களுடைய எபிரேய மொழியில் “தோரா ” என அழைக்கப்பட்டது. தோரா என்றால் பிரமாணம் அல்லது சட்டம் என பொருள்படும். இதில், பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம். எண்ணாகமம், உபாகமம் என்பவை இருந்தன. பிற்காலத்தில், ஐந்து சுருள்கள் என அர்த்தந்தரும் “பென்ட்டடியூக்” எனும் கிரேக்கப் பெயர் இப்புத்தகங்களுக்குக் கொடுக்கப்பட்டது..
இரண்டாவது பகுதிக்குத் தீர்க்கதரிசிகளினால் எழுதப்பட்டவை எனும் கருத்தோடு, தீர்க்கதரிசிகள் என அர்த்தந்தரும் “நபிம்” எனும் எபிரேயப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் யோசுவா, நியாயாதி பதிகள், சாமுவேல், ராஜாக்கள் எனும் புத்தகங்கள் முன்னைய தீர்க்கதரிசிகள் என்றும், ஏசாயா முதல் மல்கியா வரையிலான புத்தகங்களில் புலம்பல்,தானியேல் தவிர மற்றைய அனைத்துப் புத்தகங்களும் பின்னைய தீர்க்கதரிசிகள் என்றும் அழைக்கப்பட்டன அத்தோடு, ஓசியா முதல் மல்கியா வரையிலான புத்தகங்களுக்கு 12 தீர்க்கதரிசிகள் எனும் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.மேலும், சாமு வேல், ராஜாக்கள் எனும் புத்தகங்கள், நம் வேதாகமத்தில் உள்ளது போல இருபகுதிகளைக் கொண்டிராமல் தனித்தனிப் புத்தகங் களாகவே இருந்தன.
மூன்றாவது பகுதியான எழுத்தாக்கங்கள், எபிரேய மொழியில் “கெத்துபிம்” எனும் பெயரைப் பெற்றிருந்தது. இதில் சங்கீதம் நீதிமொழிகள், யோபு என்பன முதலிலும், அதன் பிறகு “மெகிலோத்” என அழைக்கப்பட்ட சுருள்களில், உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், பிரசங்கி, எஸ்தர் எனும் 5 புத்தகங்களும் இருந்தன. இவற்றுக்குப் பிறகு தானியேல், எஸ்றா – நெகேமியா, நாளாகமம் எனும் புத்தகங்கள் இருந்தன. இவற்றுள், எஸ்றாவும் நெகேமியாவும் தனி ஒரு புத்தகமாகவும், இரு நாளாகமப் புத்தகங்களும் ஒரு புத்தகமாகவும் இருந்தன.
யூதர்களின் வேதாகமமானது, இன்றுவரை நியாயப்பிரமாணம். தீர்க்கதரிசிகள், எழுத்தாக்கங்கள் எனும் மூன்று பிரிவுகளையும் கொண்டதாகவே உள்ளது. இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டில் தன்னைப்பற்றி எழுதியிருப்பதாகக் கூறும்போது, அவர் யூத வேதாகமத்தின் இம் மூன்று பகுதிகளையும் குறிப்பிட்டு, “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும், சங் கீதங்களிலும் (எழுத்தாக்கங்கள் ) என்னைக் குறித்து எழுதியிருக் கிறவைகள்” என்று தெரிவித்தார் (லூக்கா 24:44 ). கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் இத்தகு மூன்று பகுதிகள் எபிரேய வேதத்தில் இருந்துள்ளதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்றாசிரியரான ஜோசீப்பசும். எபிரேய வேதாகமத்தின் இம்மூன்று பகுதிகளையும் பற்றி குறிப் பிட்டுள்ளார். அதே போல, கி. பி. 40 அளவில், அலெக்சாந்திரி யாவைச் சேர்ந்த யூத தத்துவ ஞானியான பைலோ என்பாரும், மூன்று பகுதிகளாக எபிரேய வேதாகமம் பிரிக்கப்பட்டிருந்ததைப் பற்றி அறியத்தந்துள்ளார்.
முதன் முதலில் பழைய ஏற்பாடு எழுதப்பட்ட போது, அது யூதர்களுடைய எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டது. ஒரு சில பகுதிகள் மட்டும், குறிப்பாக, எஸ்றா 4 : 8 – 6 : 18,7 : 12 – 26, எரே. 10: 11, தானி. 2:4 -7:28 எனும் பகுதிகள் அரமிக் எனும் மொழியில் எழுதப்பட்டன. பின்னர், அவற்றைப் பார்த்து எழுதுவதன் மூலமாக மேலதிக வேதச்சுருள் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. பழைய ஏற் பாட்டின் முதல் எழுத்தாளரான மோசேயின் காலம் முதல் கி. பி. 1437 இல் “ஜோஹன் குட்டன் பேர்க்” என்பவரினால் அச் சியந்திரம் கண்டுபிடிக்கப்படும் வரை, வேதாகமமானது கைகளினால் பிரதி பண்ணப்பட்டு வந்துள்ளதோடு, வேறு சில மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கைகளினால் பிரதி பண்ணப்பட்ட பல வேதச்சுருள் பிரதிகள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் பிரதான நூலகங்களிலும் நூதனசாலைகளிலும் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவையே, பழைய ஏற்பாட்டின் மூலப்பிரதி கள் என அழைக்கப்படுகின்றன.
எபிரேய மொழியிலான வேதப்பிரதிகள்
இன்று பல ஆரம்பகால எபிரேய வேதச்சுருள் பிரதிகள் இருக்கின்றபோதிலும், பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் தம் சொந்தக் கைகளினால் எழுதிய எந்த ஒரு வேதப்பிரதியும் நம்வசம் இல்லை. இன்று இருக்கும் வேதச்சுருள் பிரதிகள் அனைத்தும் மூலப்பிரதிகளைப் பார்த்து எழுதப்பட்ட நகல் பிரதிகளேயாகும். ஆரம்பகாலத்தில் இத்தகைய நகல் பிரதிகளைத் தயாரித்தவர்கள் “வேதபாரகர்கள்” என அழைக்கப்படுகின்றனர். எஸ்றாவின் காலத் திலேயே வேதபாரகர்களின் பணி ஆரம்பமானது. அதற்கு முற்பட்ட காலத்தைய யூதர்களிடம் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சுருள்கள் மட்டுமே இருந்தன. யூதர்கள் கி. மு. 586 இல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனதன் பின், எருசலேம் நகர ஆலயத்தில் அவர் களால் வழிபட முடியாதிருந்தது. அத்தோடு பாபிலோனில் ஆலய சட்டங்காச்சாரங்களைக் கைக்கொள்வதும் சாத்தியப்படவில்லை. இதனால், ஆலய வழிபாடுகளுக்குப் பதிலாக,ஜெபாலய வழி பாடுகள் உருவாகின. யூதர்கள் தாம் குடியிருந்த பிரதேசங்களி லெல்லாம் ஜெபாலயங்களைக் கட்டினர். இவற்றின் வழிபாடுகள் நியாயப்பிரமாணத்தின் போதனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
யூதர்கள்பாபிலோனிலிருந்து தம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த பின்பும், ஜெபாலய வழிபாடுகளைத் தொடர்ந்திட்டனர். எருசலேமுக்கு வந்த யூதர்களுக்குத் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை வாசித்து, அதற்கு அர்த்தமும் விளக்கமும் கொடுப்பவராக எஸ்றா பணியாற்றினார் (எஸ். 7 : 6, 10 – 11). உண்மையில், எஸ்றாவினுடைய மார்க்கச் சீர்திருத்தப் பணியே, வேதபாரகர்களது சேவையைத் தோற்றுவித்தது. எஸ்றா, வேதபாரகன் என்றேஅழைக்கப்பட்டுள்ளார் (நெகே. 8:1, 4, 9, 13, 12 : 26, 36). அவர்மோசேயின் நியாயப்பிரமா ணத்தில் தேறின வேதபாரகனாய் இருந்தார் (எஸ். 7 : 6, 11 ). அத்தோடு கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், இஸ்ர வேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும் தன் இதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தார் (எஸ்.7:10). எஸ்றாவின் முயற்சி காரணமாக, நியாயப்பிரமாணத்தைச் சரிவரக் கற்று, அதற்கு விளக்கமளிக்கும் வேதபாரகர்கள் பலர் உருவாகினர். இவர் கள், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு கற்பித்ததோடு, அதை ஜெபா லயங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பவர்களாகவும், தனிப்பட்ட வர்களது தியானத்துக்கும் ஏனைய ஜெபாலய உபயோகத்திற்கும் பழைய ஏற்பாட்டின் நகல் பிரதிகளைத் தயாரிப்பவர்களாகவும் பணியாற்றினர்.
யூதர்களுடைய எபிரேயமொழி வேதச்சுருளின் நகல் பிரதிகளைத் தயாரித்த வேதபாரகர்கள் பயபக்தியுடனும், அதிக கவனத்துடனும் மூலப்பிரதியில் இருந்து நகல் பிரதிகளைத் தயாரித்தனர். அவர்கள் ஒரு தோல் சுருளிலிருப்பதை இன்னுமொரு புதிய தோல்சுருளில் எழுதுவதற்கு முன்பு, மூலப்பிரதியில் இருக்கும் வாக்கியங்கள், வசனங்கள், சொற்கள் என்பவற்றின் எண்ணிக்கையையும், பலதட வைகள் இடம் பெறும் பதங்கள், சொற்றொடர்கள், நடு எழுத்து, நடு வசனம் என்பவற்றையும் குறித்துவைத்துக் கொள்வர். ஒரு தோற் சுருளை பிர திபண்ணியபின், தாம் எதையும் தவறவிடாமல் எவ்வித பிழையுமின்றி பிரதிபண்ணியதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மூலப்பிரதியில் தாம் குறித்துவைத்தவைகள், நகல் பிரதியிலும் இருக்கின்றதா என பரீட்சித்துப் பார்ப்பர். மேலும், பிரதிபண்ணும் போது ஏதாவது ஒரு சிறு தவறு ஏற்பட்டால், அதைத் திருத்தி எழுதாமல், பிழை ஏற்பட்ட சுருளை முழுமையாக நிராகரித்துவிட்டு, புதிய ஒரு சுருளில் மறுபடியுமாக ஆரம்பத்திலிருந்து எழுதத் தொடங்குவர். அத்தோடு, ஒவ்வொரு சொல்லையும் சற்று சத்தத்துடன் உச்சரித்த வண்ணமே எழுதினார்கள். இதனால் நகல் பிரதிகள், மூலப் பிரதியில் இருந்த வண்ணமாகவே,மூலப்பிரதியின் ஒரு காபன் பிரதி போல இருந்தன.
பழைய ஏற்பாட்டு வேதவாக்கிய நகல் பிரதிகளைத் தயாரித்த வர்களில் “ரபி அக்கிபா” என்பவர் முக்கியமானவராகக் கருதப் படுகின்றார். கி. பி. 50 இல் பிறந்த இவர், கி. பி. 132 இல் பாலஸ் தீனாவில் இடம் பெற்ற புரட்சிக்கலவரத்தின் போது மரணமடைந்தார். கி.பி. 70 இல் எருசலேம் நகரமும், ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்டதன் பின்பு, யூத மார்க்கத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர் இவரேயாவார். வேதபாரகர்கள் மூலப்பிரதியிலிருந்து நகல் பிரதி களைத் தயாரிக்கும் போது, மூலப்பிரதிகளில் இருப்பவை அப்படியே பிரதிபண்ணப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவராக இருந்த இவர், அதிகாரபூர்வமான ஒரு வேதப்பிரதி தயாரிக்கப்பட வேண்டும் எனவும், அதிலிருந்தே ஏனையவை பிரதிபண்ணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன்படி இவருடைய காலத்தில் “அங்கீகரிக்கப்பட்ட வேதப்பிரதி” ஒன்று தயாரிக்கப்பட்டது. இவருடைய காலத்தில் எருசலேம் தேவாலயம் முற்றாக அழிக்கப்பட்டிருந்த மையினால், யூத மார்க்கத்தின் முக்கிய அம்சமாக நியாயப்பிரமாணப் போதனை இருந்ததோடு, இவர் பிரதிபண்ணிய வேதச்சுருளே அதி காரபூர்வமான எபிரேய வேதப்பிர தியாகவும் கருதப்பட்டது.
கி.பி.132 இல் ஏற்பட்ட புரட்சிக் கலகத்தில் ரபி அக்கிபா மரணமடைந்தது மட்டுமல்ல, யூத சமூகத்தினரும் கிழக்குப் பக்கமாக பாபிலோனுக்கும், மேற்குப் பக்கமாக பாலஸ்தீனாவுக்கும் சிதறடிக்கப் பட்டனர். இதனால் வேதபாரகர்களுடைய காலமும் முடிவுக்கு வந்தது. எனினும் பாபிலோனுக்கும், பாலஸ்தீனாவுக்கும் சென்ற யூதர்கள், தம்மிடமிருந்த எபிரேய வேதச்சுருள்களின் நகல் பிரதிகளைத் தயாரிக்கும் பணியைத் தொடர்ந்திட்டனர். இவர்கள், எபிரேய வேதா கமத்தின் நகல் பிரதிகளைத் தயாரித்து, அதை பரம்பரை பரம்பரை யாகப் பாதுகாத்து வந்துள்ளமையினால், “மெசோரெட்ஸ்” என அழைக்கப்படுகின்றனர். இவர்களில், பாலஸ்தீனாவிலுள்ள தைபீரியஸ் என்ற இடத்தில் இருந்தவர்களால் பிரதிபண்ணப்பட்ட வேதச் சுருள்களே அக்காலத்தைய யூத சமுதாயத்தினர் மத்தியில் அதிகார பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மெசோரெட்ஸ் என அழைக்கப்படுபவர்கள், வேதபாரகர்களை விட அதிக கவனமாக வேதச்சுருளைப் பிரதிபண்ண வேண்டும் என்பதற்காக, வேதச்சுருளின் ஒவ்வொரு பக்கத்திலும், அரிச் சுவடியின் ஒவ்வொரு எழுத்திலும் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதையும், முழு வேதச்சுருளினதும் நடு எழுத்து, நடு வசனம் என்பவற்றையும் குறித்துக்கொண்ட பின்னரே நகல் பிரதி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடைய பணி காரணமாக, நூற்றுக்கு மதிகமான பழைய ஏற்பாட்டு வேதச்சுருள்கள் உருவாகின. இவர்களது பணி கி. பி. 1000 ஆண்டு வரை தொடர்ந்தது. இவர்கள் தயாரித்த வேதச்சுருள்கள் இன்று ” மெசோரெட்டிக் பிரதிகள்” என அழைக்கப் படுகின்றன. மெசோரெட்ஸ் என அழைக்கப்படுபவர்களில், “பென் ஆஷர்”, மற்றும் “பென் நப்தலி” எனும் இருகுடும்பத்தினரும் முக்கிய மானவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்றிருக்கும் பழைய ஏற் பாட்டு. மெசோரெட்டிக் பிரதிகளில் பெரும்பாலானவை இவர் கள் தயாரித்த வேதச்சுருள்களையே அடிப்படையாய்க் கொண் டுள்ளன. பென் ஆஷர் குடும்பத்தினர், 5 தலைமுறைகளாக எபி ரேய வேதத்தின் நகல் பிரதிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர்.
இன்று பல மெசோரெட்டிக் வேதச்சுருள் பிரதிகள் நம்வச முள்ளன. இவை இன்றைய பிரதான நூலகங்களிலும் நூதனசாலை களிலும் வைக்கப்பட்டுள்ளன. கி. பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிரேய வேதச்சுருளின் முதல் 5 புத்தகங்களினதும் பிரதி ஒன்று, பிரித்தானிய நூதனசாலையில் உள்ளது. இங்குள்ள இன்னுமொரு பிரதியில், ஆதி. 39 : 20 முதல் உபாகமம் 1:33 வரையிலான பகுதி உள்ளது. இது கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் பிரதிபண்ணப்பட்ட தாகும். ரஷ்யாவிலுள்ள லெனின்கிராட் நூலகத்தில், கி. பி. 916 அள வில் தயாரிக்கப்பட்ட, எபிரேய வேதத்தின் இரண்டாவது பகுதியைச் சேர்ந்த பின்னைய தீர்க்கதரிசிகளின் சுருள் ஒன்றும், கி. பி.1008 ஐச் சேர்ந்த எபிரேய வேதத்தின் முழுச்சுருளும் உள்ளது. இந்நூலகத்தில் கி.பி.929 இற்கும் 1121 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிரதிபண்ணப் பட்ட 14 எபிரேய வேதச்சுருள்கள் இருக்கின்றன.
கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “கோடெக்ஸ் பென் ஆஷர்” என அழைக்கப்படும் முழுமையான பழைய ஏற்பாட்டுச் சுருளொன்று ஆரம்பத்தில் எருசலேமில் இருந்தது. பிற்காலத்தில், கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இச்சுருள், அதன்பின் 1948 வரை பாலஸ் தீனாவிலுள்ள அலீப்போ என்ற இடத்திலுள்ள ஜெபாலயத்தில் வைக் கப்பட்டிருந்தது. இஸ்ரேல் நாடு மறுபடியும் உருவாக்கப்பட்ட அவ்வருடம், பாலஸ்தீனாவில் ஏற்பட்ட கலவரங்களின் போது இச்ஜெபாலயம் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டமை யினால், அங்கிருந்த வேதச்சுருளும் காணாமற் போய்விட்டது. ஆனால் அச்சுருள் 1958 ஆம் ஆண்டு ஓரளவு சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இஸ்ரேலில் பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தற்போது ஒக்ஸ்போர்டில் இருக்கும் “கோடெக்ஸ் லவ்தியானொஸ்” என அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டு வேதச்சுருளில் ஆதியாகமம் புத்தகத்தில் மட்டுமே பல பகுதிகள் இல்லாமலிருக்கின்றது. அத்தோடு,கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களினது சுருள் ஒன்றும் இங்குள்ளது. மேலும் கி.பி.895 ஆம் ஆண்டைச்சேர்ந்த “கெய்ரோ கோடெக்ஸ்” என அழைக்கப்படும் தீர்க்கதரிசிகளின் புத்தகச்சுருள் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் வேதபாரகர்களும் மெசோரெட்சுகளும் பிரதி பண்ணிய எல்லா வேதப்பிர திகளும் நம்மிடம் இல்லை. யூதர்கள் வேதச்சுருள்கள் மீது ஒருவித பக்தியுடையவர்களாய் இருந்தமை யினால், பழைமையடையும் சுருள்களை மதசடங்காச்சாரங்களுடன் ஜெபாலயங்களுக்கரு கில் புதைத்துவிடுவது வழமை. இவ்வாறு வேதச் சுருள்கள் புதைக்கப்படுவதற்கு முன், அவை சேகரிக்கப்பட்டு, ஜெபா லயத்து அறையொன்றில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு பழைய வேதச்சுருள்கள் சேகரித்து வைக்கப்பட்டி ருந்த இடமொன்று 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பழைய கெய்ரோ நகர ஜெபாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கி. பி. 8 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட பல எபிரேய வேதச்சுருள்கள் இருந்தன.
இன்று பாலஸ்தீனாவில் இருக்கும் சமாரியர்கள், பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களினதும் சில சுருள்களை வைத் திருக்கின்றனர். கி. மு.722 இல் அசீரியர்கள் இஸ்ரவேலை ஆக்கிர மித்த போது, அங்கிருந்த இஸ்ரவேலர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வேறு நாடுகளுக்குக் கொண்டு போகப்பட்டதோடு, வேறு பிரதேச மக்கள் இஸ்ரவேலின் தலைநகரான சமாரியாவில் குடியமர்த்தப்பட்டனர் ( 2 ராஜா 17:23 – 31). இவர்களும் இஸ்ரவேலில் எஞ்சியிருந்தவர் களும் மூலமாக வந்தவர்களே சமாரியர்கள் என அழைக்கப்படலாயினர். இவர்களும் யூதர்களும் எப்போதும் பகைமையுணர்வுடன் இருந்தமை யினால், இவர்களது மார்க்கம் வித்தியாசமானதாகவே இருந்தது.. இவர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களை மட்டுமே வேத வாக்கியங்களாக ஏற்றுக்கொண்டிருந்ததோடு, அவற்றின் பிரதிகளைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
கி. பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சபைப்பிதாக்கள், சமாரியர்களிடம் இருந்த முதல் 5 புத்தகச் சுருள்களின் பிரதிகளை அறிந்திருந்தனர். கி. பி. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் தமஸ்குவிலிருந்த சமாரிய சமூகத்தினரிடமிருந்து வாங்கப்பட்ட ஒரு வேதச்சுருள் பாரீஸ் நூலகத்தில் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் இங்கிலாந்து தேசத்துக்கு இதன் 6 பிரதிகள் கொண்டுவரப்பட்டன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இவற்றின் சில பிரதிகளும், ரஷ்யாவி லுள்ள லெனின்கிராட் நூலகத்தில் இதன் பல பிரதிகளும் உள்ளன.) இவற்றைத்தவிர பாலஸ்தீனாவில் இருக்கும் சமாரியர்கள் வைத்திருக்கும் முதல் 5 புத்தகங்களினதும் வேதச்சுருள் பிரதி மிகவும் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இப்பிரதி, ஆரோனுடைய வம் சத்தில் வந்த அபிசுவா என்பாரினால் (1 நாளா 6 : 3 – 4 ) தயாரிக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. எனினும், இதில் எண்ணாகமம் 35 ஆம் அதிகாரத்திலிருந்து உபாகமம் இறுதிவரை உள்ள பகுதியே அபிசுவா வினால் தயாரிக்கப்பட்ட பிரதியாகும். ஏனையவை அதற்குப் பிற் பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். இதைத்தவிர, சமாரியர்களிடம் அவர்களது பேச்சு மொழியான அரமிக் மொழி பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களினது சுருள்களும் உள்ளன.
இன்று நம்மிடமிருக்கும் எபிரேய மொழி வேதச் சுருள்களில் பழைமை வாய்ந்தது. 1947 ஆம் ஆண்டும் அதற்குப் பின்பும் சாக்கடலின் வடமேற்குப் பகுதியிலுள்ள கும்ரான் என்ற இடத்தில் இருக்கும் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டப் பிரதிகளாகும். சாக் கடல் சுருள்கள் என அழைக்கப்படும் இவை, 40,000 இற்கும் அதிகமான தோற்சுருள்களைக் கொண்டிருந்தன. இவை 500 இற்கும் அதிகமான பல்வேறுபட்ட புத்தகங்களினதும் பிரதிகளாகும். இவற்றில் 100 புத்தகச்சுருள்கள் எபிரேய வேதாகமத்தின் பிரதிகளாகும். இவற்றில் எஸ்தர் புத்தகத்தைத் தவிர பழைய ஏற்பாட்டின்முற்றைய அனைத்துப் புத்தகச்சுருள்களும் உள்ளன. சில புத்தகங்களில் ஒன்றுக்கும் மேற் பட்ட பிரதிகளும் உள்ளன. இதிலிருந்த ஏசாயா புத்தகத்தின் இருசுருள்களில் ஒன்று. கி. மு. 2ஆம் நூற்றாண்டில் பிரதிபண்ணப் பட்டதாகும். அத்தோடு லேவியராகமப் புத்தகப் பிரதி கி. மு. 450 ஐச் சேர்ந்ததாகக் கரு தப்படுகின்றது. மற்றைய பிரதிகள் கி. மு இரண்டாம், முதலாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரதிபண்ணப்பட்டவை என கணிப்பிடப்பட்டுள்ளது.
சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் நம்மிடம் இருந்த மிகப்பழைய எபிரேய வேதச்சுருள் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் பிரதி பண்ணப்பட்டதாகும். சாக்கடல் சுருள்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எனவே, இரண்டுக்கும் இடையே 10 நூற்றாண்டுகள், அதாவது 1000 வருட கால இடைவெளி இருக் கின்றது. அக்காலகட்டத்தில் பிரதிபண்ணப்பட்ட எபிரேய வேதச் சுருள்கள் எதுவுமே நம்வசமில்லை. அப்படியிருந்தும் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு சுருள்களும், கி. பி. 8 ஆம் நூற்றாண்டு சுருள்களும் எவ்வித முரண்பாடுகளும் வித்தியாசங்களுமின்றி உள்ளன. இதிலிருந்து. வேதபாரகர்களும் மெசோரெட்சுகளும் எந்தளவுக்கு சரியாக எபிரேய வேதாகமத்தின் நகல் பிரதிகளைத் தயாரித்துள்ளனர் என்பதை அறியக்கூடிய தாயுள்ளது. எபிரேய வேதாகமமானது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாககைகளினாலேயே பிரதிபண்ணப்பட்டு வந்தும், அவை எவ்வித மாற்றமும் இன்றி, ஆரம்பத்தில் எழுதப் பட்டுள்ள அதே வார்த்தைகளைக் கொண்டுள்ளதை மறுப்பதற் கில்லை. பல வருடங்களாக வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதி களை ஆராய்ந்து வரும் பண்டிதர்கள், தேவனுடைய வார்த்தை யானது எவ்வித பிழையுமின்றி, மூலப்பிரதிகளில் இருந்து நகல் பிரதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்து கின்றனர். உண்மையில், எபிரேய வேதத்தில், ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகவில்லை” (மத்.5 18, யோசுவா 23 : 14, 1 இராஜா 8 :56, 1 சாமு 3:19)
மூவாயிரம் வருடங்களாக கைகளினால் பிரதிபண்ணப்பட்டு வந்த எபிரேய வேதமானது, 1488 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகமாகியது. இதற்கு முன் 1477 ஆம் ஆண்டில் எபிரேய வேதாகமத்தின் சங்கீதங்களும், 1482 இல் மோசேயின் 5 புத்தகங்களும் அச்சிடப்பட்டிருந்தன. 1516 ஆம் 1517 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட எபிரேய வேதாகமத்தில் அரமிக் மொழிபெயர்ப்பும், வேதப்பகுதியின் விளக்கவுரையும் சேர்க்கப்பட்டிருந்தது. பீலிக்ஸ் பிராத்தீன்சிஸ் என்பவரினால் தொகுக்கப்பட்ட இவ் வேதாகமம், டேனியல் பொம் பேர்க் என்பவரினால் அச்சிடப்பட்டது. இவர்கள் இத்தாலியில் இருந்த யூதர்களாவர். 1525 இல் டேனியல் பொம்பேர்க்கின் இரண்டாவது பதிப்பு வேதாகமம் வெளியிடப்பட்டது. மெசோரெட்ஸ் தயாரித்த பிரதியை அடிப்படையாய்க் கொண்ட இவ்வேதாகமம், ஜேக்கப்ச்சாயிம் என்பாரினால் தொகுக்கப்பட்டிருந்தது. 1937 ஆம் ஆண்டு வரை, இவ்வேதமே அதிகாரபூர்வமான எபிரேய வேதாகமமாக இருந்தது.
1776 முதல் 1780 வரையான காலப்பகுதியில் பென்ஜமின் கென்னிகொட் என்பார், ஒக்ஸ்போர்டில் எபிரேய வேதாகமத்தை வெளியிட்டார். 1869 இல் போயர் என்பார், பழைய ஏற்பாட்டை பகுதி பகுதியாக வெளியிடத் தொடங்கினார். எனினும், இவரது பணி பூர்த்தியடையவில்லை. 1908 முதல் 1926 வரையான காலப்பகுதியில் கிறிஸ்டியன் டி. ஜின்ஸ்பேர்க் என்பாரின் எபிரேய வேதாகமம் வெளியிடப்பட்டது. 1906 இலும் 1912 இலும் 1937 இலும் ருடொல்ப் கிட்டல் என்பாரது வேதாகமம் வெளியிடப்பட்டது. இதன் மூன்றாவது பதிப்பு, லெனின்கிராட்டில் உள்ள வேதச்சுருளை அடிப்படையாய்க கொண்டது. அதுவரை காலமும் எபிரேய வேதாகமமானது 1525 இல் வெளியிடப்பட்ட ஜேக்கப்ச்சாயிம் இனால் தொகுக்கப்பட்ட வேதப் பிரதியையே அடிப்படையாய்க் கொண்டிருந்தது. 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிட்டல்லின் வேதாகமமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட வேதாகமமாயிருந்தது. 1958 இல், பிரித்தானிய வெளிநாட்டு வேதாக்மச் சங்கம், நோர்மன் எச். ஸ்நெய்த் என்பவரினால் தொகுக் கப்பட்ட எபிரேய வேதாகமத்தை வெளியிட்டது.
அரமிக் மொழிபெயர்ப்பு வேதப்பிரதிகள்
எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களுடைய வேதமான பழைய ஏற்பாடு, அவர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின் அரமிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. கி.மு. 586 இல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன யூதர்கள், கொஞ்சம் கொஞ்சமாகத் தமது எபிரேய மொழியை மறந்து, தாம் குடியிருந்த பிரதேசத்து மொழியான அரமிக் மொழியைப் பேசத் தொடங்கினர். அதன்பின், யூதர்கள் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த காலத்தில் இருந்த, பேர்சிய சாம்ராட்சியத்தின் (கி. மு. 539 – 331) உத்தியோக பூர்வமான மொழியாக இருந்த அரமிக் மொழியே அவர்களது பேச்சு மொழியாயிற்று. இதனால், எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த வேதாகமம், அரமிக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யூத மத பண்டிதர்கள் மட்டுமே அக்காலத்தில் எபிரேய மொழியைக் கற்றறிந்திருந்தனர்.
சிறையிருப்பிலிருந்து யூதர்கள் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவந்த பின் ஜெபாலயங்களில் வேதவாக்கியம் வாசிக்கப்படும் போது, அதற்கு அரமிக் மொழியில் அர்த்தமும் சொல்லப்பட்டது. நெகேமியா 8: 8 இல் இத்தகு செயல் முறையை நாம் அவதானிக்கலாம். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப் பண்ணினார்கள். இவ்வாறு வாசிக்கப்பட்ட எபிரேய வேதப்பகுதிக்கு அரமிக் மொழியில் கொடுக்கப்பட்ட விளக்கம் “தாகும்ஸ்” என அழைக்கப்படலாயிற்று. ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாக இருந்த இவ்வரமிக் மொழிபெயர்ப்பு, பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெற்றது. கி.பி. 100ஆம் ஆண்டளவில் இத்தகைய அரமிக் மொழிபெயர்ப்பு வேதப்பிரதிகள் அதிகாரபூர்வமான வேதவாக்கியமாகக் கருதப்பட்டது.
ஆரம்ப காலத்தில் பல அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதிகள் இருந்த போதிலும், இரண்டு தாகும்ஸ்கள் மட்டுமே உத்தியோகபூர்வ மாக அதிகாரமிக்க வேதவாக்கியமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்று, ஒன்கெலொஸ் என்பவரினால் மொழிபெயர்க்கப் பட்டு, “ஒன்கெலொஸ்ஸின் தாகும்ஸ்” என அழைக்கப்படுகின்றது. இது எபிரேய வேதாகமத்தின் முதல் பகுதியான மோசேயின் நியாயப் பிரமாணத்தின் (பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள்) மொழி பெயர்ப்பாய் இருந்தமையினால், ஏனையவற்றை விட மேலான அதிகார முடையதாகக் கருதப்பட்டது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மற்றைய அரமிக் மொழிபெயர்ப்புப்பிரதி, ஜோனத்தான் பென் உஸ்ஸில் தாகும்ஸ்” என அழைக்கப்படுகின்றது. இது ஜோனத்தான் பென் உஸ்ஸில் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டது. இதில், எபிரேய வேதாகமத்தின் இரண்டாவது பகுதியிலுள்ள முன்னைய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களான யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், ராஜாக்கள் எனும் புத்தகங்களின் அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதிகள் உள்ளன. இவை கி. மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மொழிபெயர்ப்புகளாகும்.
உத்தியோகபூர்வமான இவ்விரு தாகும்ஸ் பிரதிகளும் எழுதப் படுவதற்கும் முன்பே, சில சுயாதீன அரமிக் மொழிபெயர்ப்பு வேதப் பிரதிகளும் யூதர்கள் மத்தியில் இருந்தன. கி. மு. முதலாம் நூற்றாண்டளவில், யோபு புத்தகத்தின் அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்று இருந்ததாகக் கூறப்படுகின்றது. 1956 ஆம் ஆண்டளவில் சாக்கடலுக்கருகிலுள்ள கும்ரான் பிரதேசத்தின் 11 ஆவது குகையில் ‘கண்டெடுக்கப்பட்ட புராதன வேதப்பிர திகளில், யோபு புத்தகத்தின் இந்த அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதியும் இருந்தது.அதேபோல், கும்ரான் பிரதேசத்தின் 4 ஆவது குகையில் கண்டெடுக்கப்பட்ட பிரதிகளில், லேவியராகமப் புத்தகத்தினதும் ஆதியாகமத்தின் சில பகுதிகளினதும் அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதிகளும் இருந்தன.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை பாலஸ்தீனப் பகுதி யூதர்கள் உபயோகித்த அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதி ஒன்று, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோசேயின் 5 புத்தகங்களும் உள்ளன. 1957 ஆம் ஆண்டு, இதன் முழுப்பிரதியும் வத்திக்கான் நூலகத்தில் அடையாளங்காணப்பட்டது. இது எபிரேய நியாயப்பிரமாணத்தின் நேரடியான அரமிக் மொழிபெயர்ப்பாயிராமல், அதற்கான வியாக்கி யான ரீதியான மொழிபெயர்ப்பாகவே இருக்கின்றது. பாலஸ்தீனாவில் மட்டுமல்ல, பாபிலோனியாவில் இருந்த யூதர்களும், அரமிக் மொழியில் எபிரேய வேதத்தை மொழிபெயர்த்துள்ளனர். பழைய ஏற்பாட்டில் தானியேல்,எஸ்றா,நெகேமியா எனும் புத்தகங்களைத் தவிர, மற்றைய அனைத்துப் புத்தகங்களினதும் அரமிக் மொழிபெயர்ப்புப் பிரதிகள் எம்வசமுள்ளன. அரமிக் மொழிபெயர்ப்பான தாகும்ஸ் பிரதிகள், அக்கால யூதர்கள் எவ்வாறு பழைய ஏற்பாட்டை வியாக்கியானம் செய்தார்கள் என்பதை அறியத்தருகின்றது. இவை, அக்கால யூதர்களது விளக்க முறைகளை அடிப்படையாய்க் கொண்டு மொழி பெயர்க்கப்பட்டுள்ளமையினால், தற்காலத்தில் அதிகாரபூர்வமான வேதவாக்கியப் பிரதிகளாகக் கருதப்படுவதில்லை.
கிரேக்க மொழிபெயர்ப்பு
வேதப்பிரதிகள் பழைய ஏற்பாட்டின் ஆரம்ப மொழிபெயர்ப்புகளில், கிரேக்க மொழிபெயர்ப்புப் பிரதியே கிறிஸ்தவ உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசுகிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும் இம்மொழிபெயர்ப்பையே அதிகமாக உபயோகித்தனர். இது “செப்துவஜின்ட்” என அழைக்கப்படுகின்றது. இக்கிரேக்கப் பெயர், “எழுபது” என அர்த்தந்தரும் “செப்துவஜின்டா” | எனும் லத்தீன் மொழிப் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். 70 பேரினால் மொழிபெயர்க்கப்பட்டது எனும் கருத்திலேயே இப்பெயர் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா எனும் பட்டணத்திலேயே இம் மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டது. கி. மு. 586 இல் பாபிலோனியர்
எருசலேமைக் கைப்பற்றிய போது, அநேக யூதர்கள் எகிப்துக்கு சென்று அங்கு குடியேறினர் (எரே. 41-43 ). இதனால். கி. மு. 331 இல் மகா அலெக்சாந்தர் எகிப்தில் அலெக்சாந்திரியா எனும் பட்டணத்தைக் கட்டியபோது, அங்கு யூதர்களுடைய குடியிருப்பும் இருந்தது. அங்கிருந்த யூதர்கள் தமது எபிரேய மொழியைக் கைவிட்டு, அப்பிரதேசத்துக் சிரேக்க மொழியையே பேசிவந்தனர். இதனால், அலெக்சாந்திரியாவில் கி. மு. 250 முதல் கி. மு. 150 வரையிலான காலப்பகுதியில், காலத்துக்குக் காலம் எபிரேய வேதாகமப் பகுதி கள் கிரேக்கத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
அரமிக் மொழி பெயர்ப்பைப் போலவே கிரேக்க மொழிபெயர்ப்பும், ஆரம்பத்தில் ஜெபாலயங்களில் வாய்மொழி மூலமான மொழிபெயர்ப்பாக இருந்து பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெற்றது. மகா அலெக்சாந்தருக்குப் பிறகு கிரேக்க சாம்ராட்சியம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதோடு, கி. மு. 284 முதல் கி. மு. 247 வரையிலான காலப்பகுதியில் எகிப்து,தொலமி பிலதெல்பஸ் என்பாருடைய ஆட்சியின் கீழ் வந்தது. இவர் யூதர்கள் அதிகமாகக் குடியிருந்த அலெக்சாந்திரியாவையே தனது தலைநகராகக்கொண்டி ருந்ததோடு, இலக்கிய படைப்புகளுக்கு ஆதரவளிப்பவராகவும் இருந் தார். இவரது முயற்சியினால், 900 வருடங்களாக உலகின் கலாச்சார அதிசயமாக இருந்த அலெக்சாந்திரியாவின் நூலகம் உருவானது. இந்நூலகத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த தேமேத்திரியஸ் என்ப வர், யூதருடைய நியாயப்பிரமாணத்தின் மீது அரசனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, எருசலேமிலிருக்கும் பிரதான ஆசாரியனிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பும்படி செய்தார். இதனால், அச்சமயம் பிரதான ஆசாரியனாக இருந்த எலெயேசர்,கோத்திரத்திற்கு 6 பேர் வீதம், 12 கோத்திரத்திற்கும் மொத்தம் 72 மூப்பர்களையும் ஒரு நியாயப்பிர மாணச் சுருளையும் (பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள்) அரச னிடம் அனுப்பினார். இந்த 72 பேரும்.
அரசனுடைய ஆதரவுடன், பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களை 72 நாட்களில் கிரேக் கத்தில் மொழிபெயர்த்தனர். ஆரம்பத்தில் இம்மொழிபெயர்ப்பே செப்துவஜின்ட் என அழைக்கப்பட்டது. இந்த 72 மூப்பர்களது மொழி பெயர்ப்புக்கு முன்னரும், அதன் பின்னரும் பலர் எபிரேய வேதத்தின் பகுதிகளை கிரேக்கத்தில் மொழிபெயர்த்துள்ளனர். கி.மு. 117 அள வில், பழைய ஏற்பாடு முழுவதும் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப் பட்டதோடு, செப்துவஜின்ட் எனும் பெயரும் அதற்குகொடுக்கப்பட்டது.
செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பு, எபிரேய வேதாகமத்தின் அமைப்பில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. எபிரேய வேதமானது, மோசேயின் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள், எழுத்தாக்கங்கள் என்று மூன்று பகுதிகளாகவே பிரிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பு மோசேயின் நியாயப்பிரமாணம், சரித்திர புத்தகங்கள், கவிதை மற்றும் ஞானப் புத்தகங்கள், தீர்க்கதரிசனப் புத்தகங்கள் எனும் நான்கு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதல் பகுதியில், எபிரேய வேதத்தைப்போலவே மோசேயின் 5 புத்தகங்களும் இருந்தன. இரண்டாவது பகுதி, யோசுவாவிலிருந்து ஆரம்பமாகியது. எபிரேய வேதாகமத்தின் மூன்றாவது பகுதியிலிருந்த ரூத் புத்தகம், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரித்திரத்தின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, நியாயாதிபதிகள் புத்தகத்துக்கும் சாமுவேல் புத்தகத்துக்கும் இடையில் வைக்கப்பட்டது. அத்தோடு சாமுவேல் புத்தகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதலாம் இரண்டாம் ராட்சியங்கள் எனும் பெயரைப் பெற்றது. அதேபோல, இராஜாக்கள் புத்தகமும் இரண்டாக பிரிக்கப் பட்டு மூன்றாம் நான்காம் ராட்சியங்கள் எனும் பெயரைப் பெற்றது. மேலும், எபிரேய வேதாகமத்தின் மூன்றாவது பகுதியில் இருந்த நாளாகமப்புத்தகம், நான்காம் ராட்சியத்திற்கு அடுத்ததாக வைக்கப் பட்டதோடு அதுவும் இரண்டாக பிரிக்கப்பட்டு, விடப்பட்ட விடயங்கள் எனும் பெயர் அவற்றிற்கு கொடுக்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக, நமது வேதாகமத்தின் 2 நாளாகமம் 35:1 முதல் நெகேமியா 8: 13 வரையிலான சரித்திரத்தின் பிரிதொரு வரலாற்றுப் புத்தகம், முதலாம் எஸ்ட்ரஸ் எனும் பெயரில் இருந்தது. அதன் பின் நமது வேதாகமத்தின் எஸ்றா, நெகேமியா எனும் இரு புத்தகங்களும் ஒரு புத்தகமாக, இரண்டாம் எஸ்ட்ரஸ் எனும் பெயரில் இருந்தது.
இதைத் தொடர்ந்து எஸ்தர், ஜூடித், தொபித் எனும் புத்தகங்கள் இருந்தன. இவற்றில், புத்தகங்கள் எபிரேய முதலாம் எஸ்ட்ரஸ், ஜூடித், தொபித் எனும் வேதாகமத்தில் இல்லாத புத்தகங்களாகும். செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பின் மூன்றாவது பகுதியான கவிதை மற்றும் ஞானப் புத்தகங்களில், சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, யோபு, ஞானாகமம், யோசுவா பென்சிரா என்பவரின் ஞானப் போதனை எனும் 7 புத்தகங்கள் இருந்தன. இவற்றில் கடைசி இரண்டு புத்தகங்களும் எபிரேய வேதாகமத்தில் இல்லாத புத்தகங்களாகும். அத்தோடு, சங்கீதத்தில் 151 சங்கீதங்கள் இருந்தன. 151 ஆம் சங்கீதம், சாக்கடலுக்கருகில் கும்ரான் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எபிரேய வேதப்பிரதிகளிலும் உள்ளது. கிரேக்க வேதாகமத்தின் நான்காவது பகுதியான தீர்க்கதரிசனப் புத்தகங்களில், முதலில் ஏசாயா, எரேமியா எனும் இரு புத்தகங்களும் இருந்தன. எரேமியாவுக்கு அடுத்து புலம்பல், பாரூக்கின் புத்தகம், எரேமியாவின் கடிதம் எனும் 3 புத்தகங்கள் இருந்தன. இவற்றில் கடைசி இரண்டும் எபிரேய வேதாகமத்தில் இல்லாதவைகள். இதற்கு அடுத்து, எசேக்கியேல் புத்தகமும் தானியேல் புத்தகமும் இருந்தன. எனினும் தானியேல் புத்தகத்தில் எபிரேய வேதத்தில் இல்லாத இரண்டு கதைகள் சேர்க்கப் பட்டிருந்தன. இவற்றில், சூசன்னாவின் சரிதை புத்தகத்தின் ஆரம்பத் திலும், பெல்லும் வேதாளமும் எனும் கதை புத்தகத்தின் இறுதியிலும் இருந்தன. அத்தோடு, அக்கினிச் சூளையில் இருந்த தானியேலின் நண்பர்களுடைய பாவஅறிக்கையும் ஜெபமும் தேவனுக்கான துதியும் தானியேல் புத்தகத்தின் 3 ஆம் அதிகாரத்தில், 23 ஆம் 24 ஆம் வசனங் களுக்கிடையே 68 வசனங்களில் எழுதப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு, எபிரேய வேதாகமத்தில் இருந்த 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள், அதாவது ஓசியா முதல் மல்கியா வரையிலான புத்தகங்கள் இருந்தன. இவற்றுக்குப் பிறகு, மக்காபியரின் நான்கு புத்தகங்கள் இருந்தன. எபிரேய வேதாகமத்தில் இல்லாத, மேலதிகமாக கிரேக்க வேதாக மத்தில் இருக்கும் புத்தகங்களே தள்ளுபடியாகமங்கள் என தமிழில் அழைக்கப்படுகின்றன. (கிரேக்க மொழிபெயர்ப்பில் மேலதிகமாக சேர்க்கப்பட்ட புத்தகங்கள் நம் வேதாகமத்தில் இடம்பெறாமைக்கான காரணங்களை 3 ஆம் அத்தியாயத்தின் இறுதியில் பார்ப்போம்). செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பைவிட, வேறு சில கிரேக்க மொழிபெயர்ப்பு வேதப்பிரதிகளும் அக்காலத்தில் இருந்தன. செப்து. வஜின்ட் மொழிபெயர்ப்பானது, தேவசெயல் காரணமாக, பிற்கால கிறிஸ்தவர்களது போதனைகளுக்கு ஏற்றவிதமாக அமைந்திருந்த மையினால், யூதர் மத்தியில் அது பிரபல்யம் பெறவில்லை. கிறிஸ்த வர்களே இதை அதிகளவில் உபயோகித்தனர்.
பிற்காலத்தில், கிரேக்க மொழி பேசும் யூதர்களின் உபயோகத்திற்காக, அக்கியுல்லா என்பாரி னால் எபிரேய வேதாகமம் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. ரோமைச் சேர்ந்தவரான இவர், எருசலேமில் இருக்கும்காலத்தில் யூத மார்க்கத்தைத் தழுவினார். இவருடைய மொழி பெயர்ப்பு, கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளி வந்தது. அந்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தியோடோஷன் என்பார் எபிரேய வேதத்தின் இன்னுமொரு கிரேக்க மொழிபெயர்ப்பைத் தயாரித்தார். எபேசுவைச் சேர்ந்த இவர் யூத மார்க்கத்தைத் தழுவிய வராவார். இது நேரடியான ஒரு மொழிபெயர்ப்பாயிராமல், ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டிருந்த கிரேக்க வேதப்பிர திகளின் திருத்தப்பதிப்பாகவே இருந்தது. கிறிஸ்தவ சபை பிற்காலத்தில் செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்த தானி யேல் புத்தகத்துக்குப் பதிலாக, இவருடைய மொழிபெயர்ப்பையே உபயோகித்தது. தியோடோஷனுக்குப் பிறகு, எபியனிசம் என அழைக் கப்படும் யூத கிறிஸ்தவக் குழுவைச் சேர்ந்த சிம்மாக்கஸ் என்பவரும் கிரேக்க மொழியில் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்துள்ளார்.
கிறிஸ்தவ சபையானது, தானியேல் புத்தகத்தைத் தவிர, மற்ற அனைத்து புத்தகங்களையும் செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்தே பெற்றது. தானியேல் புத்தகம், தியோடோஷனுடைய மொழிபெயர்ப் பிலிருந்து எடுக்கப்பட்டதாகும். கி. பி. 185 முதல் 254 வரையான காலப்பகுதியில் வாழ்ந்த அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வேதப் பண்டிதரும், கிறிஸ்தவ சபைத்தலைவருமான ஒரிகன் என்பார், பாலஸ் தீனாவிலுள்ள செசரியாவில் வாழும் காலத்தில், ‘ஹெக்ஸ்ஸப்லா’ என கிரேக்கத்தில் அழைக்கப்படும் ஆறு பரிமாண வேதப்பிரதி ஒன்றைத் தயாரித்தார். இது, ஆறுபகுதிகளைக் கொண்ட பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. முதலாவதில் எபிரேய வாக்கியமும், இரண்டாவதில் எபிரேய உச்சரிப்பு முறை கிரேக்கத்திலும், மூன்றாவதில் அக்கியுல்லா வின் கிரேக்க மொழிபெயர்ப்பும், நான்காவதில் சிம்மாக்கசின் மொழி பெயர்ப்பும், ஐந்தாவதில் செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பின் ஓரிக னுடைய தொகுப்பும், ஆறாவதில் தியோடோஷனின் மொழிபெயர்ப்பும் பிரதி பண்ணப்பட்டிருந்தது. ஆறாவது பகுதியான தியோடோஷனின் மொழிபெயர்ப்புப் பிரதியை, வேறு சில எபிரேய கிரேக்க பிரதிகளுடன் எரிகோவுக்கருகில் ஒரு சாடியில் இருக்க தான் கண்டுபிடித்ததாக ஒரிகன் குறிப்பிட்டுள்ளார். ஒரிகனின் ஆறுபரிமாண வேதப்பிரதியில் சில பகுதிகள் மட்டுமே தற்சமயம் இருக்கின்றன.
இவற்றில் சில ஒக்ஸ்போர்டிலும், மிலான் எனும் இடத்திலும் உள்ளன. தற்சமயம் இருக்கும் செப்துவஜின்ட் மொழிபெயர்ப்புக் கையெழுத்துப் பிரதிகளில் சில பிரதிகளைத்தவிர, மற்றையவை அனைத்தும் கிறிஸ்தவர்களால் பிரதி பண்ணப்பட்டவைகளாகும். ஆதிகிறிஸ்தவர்கள், கிரேக்க உலகுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல இம்மொழிபெயர்ப்பே பெரிதும் உதவியது. 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சாக்கடலுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட கும்ரான் சமூகத்தவரது புத்தகப் பிர திகளில், யூதர்களால் பிரதிபண்ணப்பட்ட செப்துவஜின்ட் மொழிபெயர்ப்புப் பிரதிகள் சிலவும் உள்ளன.
கும்ரான் சமூகத்தினரது நான்காவது குகையில் கண்டெடுக்கப்பட்ட லேவியராகமத்தினது இரு பிரதிகளும், எண்ணாகமத்தினது ஒரு பிரதியும், ஏழாவது குகையில் கிடைத்த யாத்திராகமம், மற்றும் எரேமியாவின் கடிதத்தின் பகுதி| களும், சாக்கடலுக்கு மேற்கே கிடைத்த முழுமை பெறாத சிறிய தீர்க்க தரிசிகள் புத்தகத்தின் பிரதிகளும் யூதர்களால் பிரதிபண்ணப்பட்ட கிரேக்க சுருள்களாகும். எனினும் முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களே செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பை உபயோகித்த மையினால், யூதர்கள் அம்மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், முதலாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட செப்துவஜின்ட் வேதப் பிரதிகள் அனைத்தும், கிறிஸ்தவர்களால் பிரதி பண்ணப்பட்டவை களாகவே உள்ளன. உண்மையில், செப்துவஜின்ட் மொழிபெயர்ப்பே கிறிஸ்தவர்களது பழைய ஏற்பாடாக உள்ளது.