You are currently viewing சமாரியா அகழ்வாராய்ச்சி 

சமாரியா அகழ்வாராய்ச்சி 

சமாரியா

சமாரியா அகழ்வாராய்ச்சி 

சமாரியா!

வேதத்தில் அடிக்கடி வாசித்து நமக்கு நன்கு பரிச்சயமான நகரம் தான். ஆயினும் இப்போது கொஞ்சம் அகழ்வாராய்ச்சிக் கண் கொண்டு இந்த ஊரைப் பார்க்கப் போகிறோம்.

சமாரியாவைப் பற்றி அறிந்து கொள்ளப் போகும் நாம், யாராவது மேப்பைக் கையில் தந்து சமாரியாவைக் குறிக்கவும் என்று கறாராகக் கேட்டால் தலையைச் சொறியக் கூடாது பாருங்கள். எனவே சமாரியாவின் இருப்பிடம் பற்றி சற்றே பார்த்து விட்டு பின்னர் மண்ணைக் கிளறலாம்.

சமாரியா ஒரு மலை வாசஸ்தலம். அதற்காக ஊட்டி, கொடைக்கானல், மாதிரி கற்பனை பண்ணிக் கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ஸ்வெட்டர் சகிதம் போய் இறங்கி விடக்கூடாது. இது மலை நகரமாயினும் உயரம் ரொம்பக் குறைவு. வெறும் 91 மீட்டர் ஏறத்தாழ 300 அடி (தரையிலிருந்து)

சமாரியா எருசலேமிற்கு வடக்கே கிட்டத்தட்ட 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

எஸ்டிரலோனுக்கு வடக்கிலும், சீகேம் சமவெளியின் தென் கிழக்கிலும், சாரோனிற்கு மேற்கிலும் குறிவைத்து புள்ளி வைத்தீர் களேயானால் அதுதான் சமாரியா.

இந்த சமாரியா ஒரு முக்கியமான நகரம். காரணம், இஸ் ரவேலின் முக்கியமான வணிகப் பாதையில் சமாரியா அமைந்துள் ளது. இதனால் இது செல்வம் செழிக்கும் ஒரு நகரமாயிருந்தது. அதே சமயம் அதன் செழிப்பே அதற்கு கண்ணியுமாயிற்று. எதிரி கள் அடிக்கடி குறிவைத்து படையெடுத்தது சமாரியாவைத் தான்.

சமாரியா பற்றி கொஞ்சம் வரலாறும் சொல்ல வேண்டுமல்லவா?

இஸ்ரவேல் தேசம் சாலொமோனுக்கு பிறகு இரண்டாப் பிரிந்தது நாம் அறிந்ததே. இஸ்ரவேல் வட ம் என்றும், யூதா தென்தேசமென்றும் அழைக்கப்பட்டது. இந்த தேசங்களுக்குள் இஸ்ரவேலுக்கு தலைநகரமாக இருந்ததுதான் சமாரியா .

சமாரியாவை தலைநகரத்திற்கு என்று தேர்ந்தெடுத்தவர் ஒம்ரி என்ற ராஜா. சிலர் உம்ரி என்று உச்சரிப்பதுண்டு.

சீரியர்கள் இரண்டுமுறை இதை முற்றுகையிட்டனர். ஆனால் அதை பிடிக்கவில்லை. (II இராஜா 6,7 அதிகாரங்கள்) பின்னர் கி.மு. 720 பிற்பகுதியில் அசீரியர் ஒருமுறை சமாரியாவை மூன்று வருஷம் முற்றுகையிட்டனர். பிற்பாடு சார்கோன் சமாரியா வைப் பிடித்து இஸ்ரவேலரை சிறையாக்கி அசீரியாவுக்கு கொண்டு போய் விட்டு, அசீரியர்களை சமாரியாவில் குடியேற்றினான். (II இராஜா 17: 5,17: 24)

சமாரியாவில் ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டது 1908ல் தான். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் இங்கு அகழ்வாராய்வை மேற்கொண்டவர்கள் D.G. லியான்ஸ், C.A. ரெய்ஸ்னர், C.S. பிஷர். என்னும் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களுடைய ஆராய்ச்சியில் முதலில் குறி வைத்தது, ஆகாபின் அரண்மனையைத் தான். இதை தந்த அரண்மனை என்று வேதம் கூறுகிறது. (இராஜா 22: 39)

இந்த அரண்மனையின் அளவு 27க்கு 24மீட்டர் என்ற கணக்கிலுள்ளது. அதாவது 89க்கு 79 அடி.

இது இரண்டு மாடி அமைப்பும் உடையது. மேல் மாடி உப்பரிகையில் கைப்பிடிச் சுவருக்குப் பதிலாக இரும்புக் கிராதி களைக் கொண்டு வேலைப்பாடு செய்து வைத்துள்ளனர். அழகுடன் அமைக்கப்பட்ட இந்த கம்பி வேலைப்பாடுகளில் உள்ள டிசைன்கள் சில இடங்களில் நெருக்கமாயும், சில இடங் களில் ‘ஆர்ச்’ அமைப்பில் சற்று விசாலமாயும் உள்ளது.

எனவேதான் அகசியா இந்தக் கிராதி (Grill) களின் வழியாக இடறிவிழ முடிந்தது. II இராஜா 1 : 2ல் இந்த சம்பவம் சொல்லப் பட்டிருப்பதை பாருங்கள்.

அரண்மனையின் உள்புறம் புகுந்த அகழ்வாராய்ச்சியாளர் களுக்கு பெரிய வியப்பு காத்திருந்தது. சுவரெல்லாம் தந்தத்தில் வேலைப்பாடு செய்து பதிக்கப்பட்டிருந்தது.

ஆகாபிற்கு தந்தத்தின்மேல் அப்படி ஒரு மோகம் ஏனென்று தெரியவில்லை. நிறைய தட்டுமுட்டு சாமான்களெல் லாம் தந்தத்தாலேயே செய்து அடுக்கி விட்டார். கைகழுவும் பேசின் கூட தந்தமாம். சமாரியாவில் பெரும்பாலும் பல்லில்லாத பொக்கை வாய் யானைகள் தான் திரிந்திருக்க வேண்டும். பாவம்.

சமாரியாவில் கிடைத்த இந்த பொருட்களெல்லாம் இன்று பிரிட்டிஷ் தொல்பொருள் கண்காட்சியகத்தில் இருக்கிறது.

சமாரியாவின் கிழக்கு பகுதியில் ஆராய்ந்த போது ஒரு கோவில் கிடைத்துள்ளது. அது ஆகாப் ராஜா கட்டிய பாகால் மெல்கார்டின் கோவில். கோவிலின் வெளியே ஆறு பலிபீடங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பலிபீடத்திலும் மூன்று ஆசாரியர் கள் நின்று பலியிட வசதியுள்ளது. பலிபீடத்தின் நடுவில் மூன்ற டிக்கு மூன்றடி அளவுள்ள சதுர குழிகள் உள்ளன. இந்த சதுர குழிப் பகுதியில் பலியிடும் காலங்களில் நெருப்பு எரியுமாம். பலியிடப் பட்ட மாம்சத்தை சந்து சந்தாக துண்டித்து இந்த நெருப்பில் போடுவது வழக்கம்.

பலியிடுவது எதை?

வழக்கம் போல நரபலி தான். நரபலியின் இலக்கு தலைச்சன் குழந்தைகள்தான். அதிலும் ஆண் குழந்தைகளை மட்டுமே நரபலியிட அனுமதித்திருக்கிறார்கள். அப்பப்பா… அந்தக் காலத்தில் தலைச்சன் ஆண்பிள்ளையாய் பிறக்கிற மாதிரி ரிஸ்க்’ வேறெதுவும் இல்லை போலிருக்கிறது! ( நான் வீட்டில் 2 வது பையன்)

பலிபீடத்திலும் ஒரு ஒழுங்கு உண்டு. முதல் மூன்று நரபலிக்கு. மற்றவை காளை, பன்றி போன்றவற்றிக்கு, பலிமுறை பற்றி சொன்னால் உத்திரவாதமாக தூக்கத்தில் உளறுவீர்கள் வேண்டாம்.

கோயிலுக்கு அருகேயுள்ள பெரிய பள்ளத்தாக்கில் நிறைய எலும்புகளைக் குவியலாகக் கண்டுள்ளனர். எல்லாம் ஆறிலிருந்து எட்டு வயது வரையுள்ள குழந்தைகளின் எலும்புகள்.

கோயிலின் ஓரத்து மதிலையொட்டி சுற்றிலுமாக 50 சிறிய வீடுகள் உள்ளன. இவைகள் வேறொன்றுமில்லை. பாகால் தீர்க்க தரிசிகளின் குவார்ட்ஸ்.

தேசத்தில் ஆகாபின் காலத்திய பாகாலின் கோயில்களாக கண்டுபிடிக்கப்பட்டவை ஒன்பது.

இப்போது வசனத்தில் ஒரு ஆச்சரியம் காட்டவா?

ஒரு கோயிலைச் சுற்றி ஐம்பது பாகால் தீர்க்கர் வீடுகள்.

ஒன்பது கோயிலுக்கு 9 × 50 = 450

1 இராஜா 18 : 19ஐ பாருங்கள்.

“கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேல் அனைத்தையும், பாகால் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பது பேரையும்…” என்கிறது வேதம்.

என்ன, கணக்கு சரிதானே?

இது தவிர சமாரியாவிற்கு வெளியே கிழக்கில் 200 மீட்டர் தொலைவில் கற்களால் படிகள் பொருத்திய குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளம் குளிப்பதற்காக கட்டப்பட்ட ஒன்று. வலதுபுறம் கீழிறங்கி பூமி மட்டத்திற்கு 15 அடியில் உடைமாற்ற அறைகள் மூன்று உண்டு. குளத்துடன் இணைந்து மற்றொரு உபகுளம் உண்டு. இதன் ஒரு புறத்தில் கற்கள் படியாயிராமல் சறுக்கலாய் செல்கின்றது. இது குதிரைகளையும் இராணுவ தளவாடங் களையும், இரதங்களையும் கழுவும் குளமாம்.

இதையொட்டியுள்ள சிறு மைதானம் தான் அரசாங்க கொலைக்களம். இங்கே கழுத்தை சீவ, கல்லெறிந்து கொல்ல, இரதம் ஏற்றிக் கொல்ல என்று தனித்தனி வசதிகள் உண்டு.

சமாரியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு (1868லேயே கிடைத்து விட்டது)ஓம்ரியின் ஆட்சி பற்றி சொல்கையில் சாதாரண குற்றவாளிகளுக்கு கழுத்தை சீவும் தண்டனையும், தெய்வகாரியங் கள் பற்றிய குற்றவாளிகளுக்கு கல்லெறியும் தண்டனையும், இராணுவ மற்றும் ராஜ குற்றவாளிகளுக்கு இரதம் ஏற்றி (கழுத்தில்) கொல்லும் தண்டனையும் வழக்கப்பட்டதாம்.

கல்லெறி தண்டனையிலும் பலவிதம் உண்டாம். மிதமான குற்றங்களுக்கு, குற்றவாளியை நிற்க வைத்து ஐம்பது கற்களை மட்டும் வீசி எறிவார்களாம். பயல் அல்பாயுசாயில்லாவிட்டால் தப்பித்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் கனமான குற்றத்திற்கு குற்றவாளியைப் படுக்க வைத்து நாலே நாலு கல்லைப் பொறுக்கி முழங்காலில் மட்டும் போடுவது. சுலபமாயிருக்கிறதே என்கிறீர்களா? இந்தக் கல் ஒவ்வொன்றிலும் ஒரு ஆட்டுரலும் குளவியும் செய்து விடலாம். அந்தளவு பெரிசு (முழங்கால் ஜெபம் பண்ண சோம்பல்படுகிறவர்களுக்கு இந்த தண்டனையை சிபாரிசு செய்யலாமே என்கிறார் ஒரு முரட்டு விசுவாசி

மூன்றாவது கொஞ்சம் கடின ரக தண்டனை. குற்ற வாளியை நிற்க வைத்து முன்னூறு கல் வீசப்படும். குற்றவாளி உயிருக்கு மன்றாடி தரையில் ஊர்கையில் காலில் போடும் கல்லை தலையில் போட்டு கொல்வார்கள்.

நாபோத்திற்கு வழங்கப்பட்டது இந்த வகை தண்டனை தான்.

1 இராஜா 21 : 13ல் சாகும்படி கல்லெறிந்து என்ற பதத்தை கவனியுங்கள். அப்படியானால் “காயப்படும்படி கல்லெறியும்” தண்டனையும் இருந்ததென்று தானே பொருள். 1868ல் கிடைத்த கல்வெட்டும், வேதமும் பொருந்துகிறதா?

சரி. தெய்வ குற்றங்களுக்கு கல்லெறியும் தண்டனை என்று கல்வெட்டில் கண்டோம். நாபோத்தை கல்லெறிய சுமத்தப்பட்ட குற்றத்தைப் பாருங்கள்.

‘நாபோத் தேவனையும், இராஜாவையும் தூஷித்தான் என்று சாட்சி சொன்னார்கள். (1 இராஜா 21 : 13) இதுவும் பொருந் துகிறது!

மற்றொன்று கவனீத்தீர்களா?

இந்த கொலைக் களத்திலேயே தான் இரதங்களை கழுவும் குளமும் இருந்தது.

இதிலென்ன விசேஷம் என்பீர்கள். நாபோத் கல்லெறியுண்டு கொலையுண்டது இந்தக் கொலைக்களத்தில் தான். ‘நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’. 1 இராஜா 2 : 19 என்று ஆகாபுக்கு சொல்லப்பட்டது.

போர்க்களத்தில் ஆகாப் இறந்து விட, இரத்தம் தோய்ந்த ஆகாபின் இரதத்தை இந்த குளத்திலே கழுவும் போது நாய்கள் அவன் இரத்தத்தை நக்கிற்று. 1 இராஜா 22:38

கொலைக்களமும், குளமும் ஒரே இடத்தில் இருந்ததாக வேதம் சொல்வதை அகழ்வாராய்வு இன்று நிரூபித்துள்ளது.

 

மூலம் : ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்

ஆசிரியர் : சகோ.வின்சென்ட் செல்வகுமார்

This Post Has One Comment

  1. Edward

    அருமையான தகவல்கள் ஐயா தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். நன்றி

Leave a Reply