பொற்சிலை

பொற்சிலை

பொற்சிலை தானி 3:1-7

இந்த பொற்சிலை சம்பவத்திற்கு முன் என்ன நடந்தது என்றால் தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னபோது, ராஜா தானியேல்மீதும், அவருடைய மூன்று சிநேகிதர்மீதும் அன்பாயிருந்தார்.

அவர்களுக்கு மாகாணத்திலே முக்கியமான பதவிகளைக் கொடுத்து அவர்களை உயர்த்தினார். இப்போது இந்த மூன்று எபிரெய வாலிபர்களும் ராஜாவின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

ராஜா இம்மூன்று வாலிபர்மீது கோபப்பட்டாலும், கர்த்தர் இவர்களை இன்னும் அதிகமாய்க் கனம்பண்ணுகிறார். ராஜா கனம்பண்ணியதைவிட, கர்த்தர் கனம்பண்ணுவது மிகவும் பெரியதாயிருக்கிறது.

கர்த்தருடைய ஆசீர்வாதமே நமக்கு மெய்யான நன்மைகளைக் கொடுக்கும். பாவத்தில் விழுவதைவிட, கர்த்தருக்கு உண்மையாய் ஜீவிப்பதே நமக்கு மெய்யான ஆசீர்வாதம். உலகப்பிரகாரமான நன்மைகளை பெற்றுக்கொள்வதைவிட, கர்த்தருடைய கிருபைகளைப் பெற்றுக்கொள்வதே நமக்கு மேன்மை.

கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே சோதனைகள் வருகிறது. இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிற சம்பவம் மிகவும் முக்கியமானது. நாம் சோதிக்கப்படும்போது, கர்த்தர் நமக்கு எப்படி உதவிபுரிகிறார் என்பதை இந்த சம்பவம் விவரிக்கிறது.

“”அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள்” (எபி 11:34) என்று எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசிரியரும், இந்த மூன்று எபிரெயரைப்பற்றி சாட்சியாய்ச் சொல்லுகிறார்.

நேபுகாத்நேச்சார் ஒரு பெரிய பொற்சிலையைப் பண்ணுவித்து, அதை சமபூமியிலே நிறுத்துகிறான்.

தான் நிறுத்தின பொற்சிலையை எல்லோரும் பணிந்துகொள்ளவேண்டுமென்று ராஜா கட்டளை கொடுக்கிறான் (தானி 3:1-7).

ராஜா நிறுத்தின பொற்சிலையை மூன்று எபிரெய வாலிபர்களும் பணிந்துகொள்ளவில்லை (தானி 3:8-12).

நேபுகாத்நேச்சார் இதுபற்றி மூன்று எபிரெய வாலிபரிடம் விசாரிக்கும்போது, அவர்கள் ராஜா நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்வதில்லை என்று உறுதியாய்ச் சொல்லுகிறார்கள் (தானி 3:13-18).

நேபுகாத்நேச்சாருக்கு கடுங்கோபமுண்டாயிற்று. மூன்று எபிரெய வாலிபர்களையும் எரிகிற அக்கினி சூளையிலே போடுமாறு ராஜா கட்டளையிடுகிறான் (தானி 3:19-23).

எரிகிற அக்கினி சூளையிலே மூன்று எபிரெய வாலிபர்களுக்கும் ஒரு சேதமும் உண்டாகவில்லை.

கர்த்தர் தம்முடைய தாசரை எரிகிற அக்கினியிலிருந்து விடுவிக்கிறார். எபிரெயரின் தேவனே மெய்யான தேவன் என்று ராஜா தீர்மானம்பண்ணுகிறான் (தானி 3:24-26).

ராஜா இம்மூன்று எபிரெய வாலிபர்களையும் பாபிலோன் தேசத்திலே உயர்த்துகிறான் (தானி 3:28-30).

பொற்சிலை தானி 3:1-7 

தானி 3:1.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்தி-ருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

தானி 3:2.

பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புகாரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நோபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

தானி 3:3.

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

தானி 3:4.

கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:

தானி 3:5.

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள்.

தானி 3:6.

எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

தானி 3:7.

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

பாபிலோன் தேசத்திலே ஏராளமான விக்கிரகங்கள் இருக்கிறது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மாத்திரமே மெய்யான தேவன். அவர் மாத்திரமே ஜீவனுள்ள தேவன். ஆனால் பாபிலோன் தேசத்தாரோ ஜீவனுள்ள தேவனை ஆராதியாமல், ஜீவனில்லாத விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்கிறார்கள்.

பாபிலோன் தேசத்தில் ஏராளமான விக்கிரகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு அந்த விக்கிரகங்களில் திருப்தியில்லை. தங்களுக்கு இன்னும் புதிய விக்கிரகங்களை உண்டுபண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஏராளமான விக்கிரகங்கள் இருந்தால், தங்களுக்கு ஏராளமான தெய்வங்கள் இருக்கும் என்று நினைக்கிறார்கள். “”தேவன் ஒருவரே” என்னும் சத்தியம் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய ராஜாவுக்கும் தெரியவில்லை.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்தி-ருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்துகிறான் (தானி 3:1).

ராஜா பொற்சிலையைச் செய்கிறான். இதன் உயரம் அறுபது முழம். அகலம் ஆறுமுழம். இது பார்ப்பதற்கு பிரமாண்டமாயிருக்கிறது. இது எவ்வளவு பெரியதாகயிருந்தாலும், இது முழுவதும் பொன்னால் செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு ஜீவனில்லை.

ராஜா ஒருவேளை தன்னுடைய உருவத்தையே பொற்சிலையாகப் பண்ணுவித்திருக்கலாம். பாபிலோன் தேசத்திலுள்ளவர்களெல்லோரும் தன்னை தெய்வமாக ஆராதிக்கவேண்டுமென்று ராஜா ஆசைப்பட்டிருக்கலாம்.

இதற்கு முந்திய அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் கர்த்தரை துதித்தான். இஸ்ரவேலின் தேவனே தேவர்களுக்கு தேவன் என்றும், ராஜாக்களுக்கு ஆண்டவர் என்றும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவர் என்றும் நேபுகாத்நேச்சார் சொன்னான் (தானி 2:47).

ஆனால் இப்போதோ தனக்கு ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, தன்னை தேவனுக்கு சமமாக பாவிக்கிறான்.

ராஜாவுக்கு தேவனுடைய பிரமாணம் தெரியவில்லை. சொப்பனத்தின் அர்த்தம் அவனுக்கு சொல்லப்பட்டாலும், அவனுடைய செயல்பாடுகள் கர்த்தருடைய திட்டத்திற்கு விரோதமாயிருக்கிறது. இப்போது ராஜா தேவனுக்கு போட்டியாக தன்னையே உயர்த்துகிறான்.

ராஜா ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, அந்த சிலையின் பிரதிஷ்டையை மிகவும் ஆடம்பரமாக செய்யவேண்டுமென்று தீர்மானிக்கிறான்.

அந்த பிரதிஷ்டைக்கு தன் தேசத்திலுள்ள எல்லோரையும் வந்து சேரும்படி அழைக்கிறான். ராஜாவின் அழைப்பை ஏற்று, பாபிலோன் தேசத்தார் எல்லோரும் சிலைக்கு எதிராக வந்து நிற்கிறார்கள். தானி 3:2-3.

பாபிலோன் தேசத்தார் நீண்ட தூரம் பிரயாணம் செய்து தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். ராஜா நிறுவின பொற்சிலைக்கு ஜீவனில்லை. ஆனால் ராஜா அந்த சிலையை தெய்வமாக பிரதிஷ்டைபண்ணுகிறான்.

ஜனங்களும் வேறு வழியில்லாமல், ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து சிலைக்கு முன்பாக வருகிறார்கள். விக்கிரகங்களுக்கு உணர்வில்லை. விக்கிரகாராதனைக்காரருக்கும் உணர்வு இருக்காது.

தான் நிறுத்தின சிலைக்கு எதிராக தன் தேசத்து ஜனங்கள் எல்லோரும் வந்து நின்றபோது, ராஜா மேலும் ஒரு கட்டளை கொடுக்கிறான். ராஜாவின் கட்டளையை கட்டியக்காரன் உரத்த சத்தமாய் எல்லா ஜனங்களுக்கும் கேட்கும் வண்ணமாய்ச் சொல்லுகிறான்.

“”சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது,

நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள்.

எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான்” (தானி 3:4-6) என்று கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ச் சொல்லுகிறான்.

இது கட்டியக்காரனின் கட்டளையல்ல. இது நேபுகாத்நேச்சார் ராஜாவின் கட்டளை. ராஜா தனக்கு சொன்னதை கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ச் சொல்லுகிறான்.

பாபிலோன் தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும். இது ராஜாவின் கட்டளை.

அந்த சிலைக்கு முன்பாக தாழவிழுந்து, அதை எவனாகிலும் பணிந்து கொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினி சூளையின் நடுவிலே போடப்படுவான்.

தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் இருக்காது. அவன் அந்நேரமே அக்கினி சூளையில் போடப்படுவான். இதுவும் ராஜாவின் கட்டளை.

நேபுகாத்நேச்சாரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து,

சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்கிறார்கள் (தானி 3:7).

பொற் சிலையின் அளவு அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமாகும். இந்தச் சிலையின் உயரம் 90 அடி. அகலம் 9 அடி.

“”தூரா” என்னும் இந்த இடம் எங்குள்ளது என்று தெரியவில்லை. இது பாபிலோனுக்குள் இருக்க வேண்டும்.

சிலையின் பிரதிஷ்டைக்கு வந்தவர்கள்

  • 1. தேசாதிபதிகள் (தானி 3:2-3,27; தானி 6:1-7)
  • 2. அதிகாரிகள் (தானி 2:48; தானி 3:2-3,27; தானி 6:7)
  • 3. தலைவர் (தானி 3:2-3,27; தானி 6:7, 1இராஜா 20:24; எரே 51:23,28,57; எசே 23:6,12,23)
  • 4. நியாயாதிபதிகள் (தானி 3:2)
  • 5. பொக்கிஷக்காரர் (தானி 3:2-3)
  • 6. நீதிசாஸ்திரிகள் (தானி 3:2-3)
  • 7. விசாரிப்புக்காரர் (தானி 3:2-3)
  • 8. நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் (தானி 3:2-3)

கட்டியக்காரன் உரத்த சத்தமாய்ப் பேசுகிறான் (தானி 3:4). ராஜாவின் ஆணைகளையும், ராஜா வருவதையும், போவதையும் அறிவிப்பதற்காகக் கட்டியக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள் (மல் 3:1; ஏசா 40:3).

விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது இவர்கள் போட்டிகளின் விவரங்களையும், அதற்குரிய சட்ட திட்டங்களையும் அறிவிப்பார்கள்.

யூதருடைய பாரம்பரிய வரலாற்றின் பிரகாரம் விக்கிரகாராதனைக்காரர்கள் ஆபிரகாமை எரிகிற அக்கினிச்சூளையின் நடுவில் போட்டு, கொன்றுபோட்டார்கள். ஆபிரகாம் அவர்களுடைய விக்கிரகங்களை ஆராதிக்க மறுத்ததற்காக அக்கினிச்சூளையில் எறியப்பட்டார்.

Leave a Reply